Search This Blog

15.12.13

சங்கராச்சாரியார் ஜெட் விமானத்தில் பறக்கலாமா?

எப்படி பறந்தார் மடாதிபதி?
27.11.2013 புதன்கிழமை 11 மணிக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்புக்கு அடுத்து லோககுரு ஜெயேந்திரர் திருச்செந்தூருக்குச் செல்கிறார், சென்று 28.11.2013 அன்று சாமிக்கு ஆராதனை செய்து அருள் பெற்றார். இது செய்தி.

28.11.2013 அன்று வெளிவந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் 5ஆம் பக்கத்தில் விரிவான செய்தி (தீர்ப்புப்பற்றி) வெளி வந்துள்ளது. அதில் கீழ்க்கண்ட செய்தி:

“Mean while, a report  from Thuthukudi - said Jayandra Saraswathi reached Sri Kanchee Kamakodi Mutt in Tiruch endur hours after the verdict - was pronounced. The sankarachariya took a Private Jet and landed at Thoothukudi in the afternoon. At the mutt, he was welcomed with Purna Kumbam”.

புதுச்சேரி நீதிமன்றத்தில் அளித்த தீர்ப்புக்கு  அடுத்த விநாடியே தனி விமானத்தை பிடித்து தூத்துக்குடி வந்தார் என்பது செய்தி.

தேசிய நெடுஞ்சாலையில் எந்த விதமான முன்னேற்பாடுகள் இல் லாமல் உடன் பிரயாணத்தை தொடங் கலாம்; வானத்தில் பிரயாணம் செய்ய வேண்டுமானால், அதுவும் தனக்கு மட்டும் தனி விமானத்தில் பயணம் செய்வதாக இருந்தால் யார், யாரிடமோ முன்கூட்டியே அனுமதி வாங்க  வேண்டுமே!

எப்படி அந்த அனுமதி பெறப் பட்டது? தீர்ப்பு என்ன வரப் போகிறது என்பது முன் கூட்டியே தெரியுமா? எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொண்டிருந்தால் மட்டுமே, தனி விமானத்தின் மூலம் தூத்துக் குடிக்குப் பறந்திருக்க முடியும்!

பார்ப்பான் பண்ணையம் கேட் பாரில்லையோ!

கொலைக் குற்றத்தில் சிக்கி 60 நாட்கள் சிறையிலிருந்து, சட்டத்தின் சந்து பொந்துகளில் தப்பிய ஒருவ ருக்குத் திருச்செந்தூர் கோயிலில் பூர்ண கும்பம் கொடுத்து வரவேற்பு கிடைக்கிறது.

மடாதிபதிக்கு மட்டுமல்ல - திருச்செந்தூர் முருகனுக்கும் (?) அர்ச் சகப் பார்ப்பனர்களுக்கும், அறங் காவலர்களுக்கும் வெட்கம் இல்லை- _ கொஞ்சமும்கூட வெட்கமில்லை.

கோயில்களும், பூஜைகளும் பக்தியும் எந்தத் தரத்தில் ஒழுக்கம் கேட்டுச் சீரழிந்து போய்க் கிடக் கின்றன என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!
கடவுளுக்கு மேல் பிராமணன் என்று சொன்னவர் தானே இந்த ஜெகத்குரு? இது என்ன இதற்கு மேலும் நடக்குமே!

அது சரி.. ஊர் உலகத்துக்கெல்லாம் ஆன்மீகத்தையும், சடங்குகளையும், வழக்க முறைகளையும் கட்டுக்கட் டாகப் போதிக்கும் ஜெயேந்திரருக்கு ஒரு கேள்வி.

சங்கராச்சாரியார் ஜெட் விமானத்தில் பறக்கலாமா? எந்த சாஸ்திரத்தில் இதற்கு ஆதாரம்?

கால் நடையாகத் தானே சஞ்சாரம் செய்ய வேண்டும் முனிபுங்கவர்? ஊருக்குத்தான் உபதேசமா? இதைப்பற்றி எல்லாம் எந்தப் பார்ப்பன ஏடும் எழுதாது. கடல் தாண்டிப் போகலாமா சங்கராச்சாரியார்? (சீனா செல்லத் திட்டமிட்டிருந்தார் ஜெயேந் திரர்) என்று கடிதம் எழுதிய சங்கர் ராமன் மேலோகத்துக்கு அனுப்பப் பட்டு விட்டாரே!)

####

அட எச்சக்கலையே!

பக்தி வந்தால் புத்தி போகும் என்று தந்தை பெரியார் சொன்னது ஏதோ விளையாட்டு வார்த்தைகள் அல்ல.

கருநாடக மாநிலத்தில் அத்தே குக்கே எனும் ஊரில் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலைமீது அங்கப் பிரதட்சணம் செய்து நேர்த்திக் கடனைக் கழிக்கும் கேவலத்தை என்ன சொல்வது! இதனை அனு மதிக்கும் கயவாளித்தனத்தை எதைக் கொண்டு சாற்றுவது?

ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கோயிலில் டிசம்பர் 3ஆம் தேதி இது நடந்து வருகிறது; இதற்குப் பெயரோ ஸ்நானா பிரார்த்தனையாம்.

சரி... பக்தி தானே? பார்ப்பனர் களுக்கு இல்லாத பக்தியா? ஆனால் அவர்கள் அந்த எச்சில் இலையில் விழுந்து புரள மாட்டார்களாம்!

வேறு யார்? தாழ்த்தப்பட்டவர்கள் தான் _ கீழ்த்தட்டு மக்கள்தான்இந்த வேலையைச் செய்கிறார்கள். அப்படி செய்தால் நினைத்தது நடக்குமாம்.
இந்தக் கேவலமான நேர்த்திக் கடனுக்கு ஏற்பாடு செய்யும் அர்ச்சகப் பார்ப்பானை வெளுக்க வேண்டும் என்று நினைத்து அங்கப் பிரதட் சணம் செய்யலாமா? அதன்படி அர்ச்சகர்ப் பார்ப்பானைக் கவனித்தால் அது குற்றமில்லை என்று கருதப் படுமா?

இந்தக் கேவலத்தை எதிர்த்து வழக்கு உயர்நீதிமன்றம் சென்றது. உயர்நீதிமன்றம் இந்தக் கேவலத்தை நிறுத்துமாறு ஆணை பிறப்பித்தது.
விடுவார்களா? உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். உலகத்திலேயே மிகப் பெரிய அறிவாளர்கள் கூடும் மன்றமாயிற்றே! அது என்ன செய்தது தெரியுமா?
கோயிலில் நடைபெறும் நடை முறையை மாற்றக் கூடாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. (வெட்கம்! வெட்கம்!! மகாவெட்கம்!!! என்று ஒரு முறை கூவுங்கள்!)

படித்த பாமரன், படிக்காத பாமரன் என்று தந்தை பெரியார் சொல்லுவது இவர்களை வைத்துத்தானோ!

உச்சநீதிமன்றம் என்றாலே அவாள் மன்றம்தானே! அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தமிழ்நாடு அரசின் சட்டத்தை அமுக்கி வைத்திருப்பதும் இதே உச்சநீதிமன்றம்தானே!

சுகாதாரம் என்று எடுத்துக் கொண்டாலும் எச்சில் இலையில் உருண்டு புரள்வது ஏற்கத்தக்கது தானா? சாதாரண மனிதனுக்குத் தெரிவது உச்சநீதிமன்ற நீதிபதிக்குத் தெரியாமல் போனது ஏன்?

விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51கி(லீ) கூறு கிறதே -_ அதனைக் கடைப்பிடிக்கும் இலட்சணம் இதுதானா?

முதலில் நம் நாட்டு நீதிபதிகளுக்கு விஞ்ஞான மனப்பான்மையைப் புகட்ட வேண்டும்.

நீதிபதிகளும் மூடநம்பிக்கை யாளராக இருக்க வேண்டும் என்பதுதான் அர்த்தமுள்ள இந்து மதத்தின் முதல் நிபந்தனை போலும்!

1925ஆம் ஆண்டு குடிஅரசில் வெளிவந்த ஒரு தகவல் இதோ:

1925ஆம் ஆண்டு குடிஅரசு ஏட்டில் வைக்கம் எச்சிலை என்னும் தலைப்பில் வெளிவந்த செய்தி இது:

வைக்கம் கோவிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலை ஒன்று, சில சமயங்களில் 0.06 வீதம் விற்கப்படு கிறது. இதை வாங்கிச் சாப்பிடுவதால் வியாதியஸ்தர்களுக்கு, வியாதி சவுகரியமாய் விடும் என்றும், சந்தானமில்லாதவர்களுக்குச் சந்தான விருத்தியாகுமென்றும், (குழந்தைப்பேறு) அங்குள்ள பிராமணரல்லாத ஜனங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வைக்கப்பட்டி ருக்கிறது. ஆனால், இது தமிழ்நாட்டில் ஒரு பிராமணனுக்கு ரூ.1000, 5000 என்று விகிதம் பேசி, நம்ம வீட்டுக்கு அழைத்து வந்து, அவர்களுக்குப் பணத்தைக் கொட்டிப் பூசை செய்து, அந்தக் காலைக் கழுவிய தண்ணீரைச் சாப்பிட்டால், தனது பாவம் போய்விடும் என்று நம்பும் படியாகச் செய்கிறதைவிடப் பெரிய மோசடியல்ல.

இதன் பிறகும் மீண்டும் குடிஅரசு வைக்கம் எச்சிலை என்னும் தலைப்பில் லோகோபகாரி பத்திரி கையிலிருந்து வந்த சென்ற வாரத்து லோகோபகாரி மூன்றாம் பக்கத்தில் வைக்கத் தெச்சிலையைப் பற்றி நமது குடிஅரசு பத்திரிகையில் வெளியான குறிப்பை வெளியிட்டு அந்த எச் சிலையை உண்பதால் நோய் நீக்கு மென்று நம்பிக்கையிருப்பது உண்மை யாயினும், எச்சிலை விற்கப்படுவதாகச் சொல்வது உண்மையல்ல வென்று மலையாளத்துப் பிராமணர் ஒருவர் கூறுகிறார் என்ற நமது குறிப்பும் வெளியாயிருந்தது.

வைக்கத்திலே பிறந்து வளர்ந்து வாழ்பவரும் வைக்கத்திலுள்ள சத்தியாக்கிரக ஆசிரமத்தின் தற்காலக் காரியதரிசியுமான ஸ்ரீமான் கே. நாராயணன் இதுபற்றி நமக்கு எழுதியிருக்கிறார்.

அவர் சொல்லுவதின் சுருக்கம்: - வைக்கம் எச்சிலை சகல நோய்களை யும், முக்கியமாக வயிற்று நோய் களையும், மலட்டுத் தன்மையையும் நீக்கவல்லதென்ற நம்பிக்கை பாமர ஜனங்களுக்குள் உண்டு; வைக்கத் தப்பன் கோயில் எச்சிலைகள் பரம் பரையாக வாரியர் குடும்பத்தாருக்கு உரியன.
அவர்களே கோயிலில் தாழ்ந்த வேலைகளைச் செய்கிறார்கள்; அவர் களே பிராமணர்கள் சாப்பிட்டபின் இலைகளை எடுத்து அப்புறப்படுத்து கிறார்கள். அவர்கள் இலைகளை வெளியே கொண்டு போய் மொத்த மாக நாயர்களுக்கு விற்று விடுகி றார்கள்.

நாயர்கள் எச்சிலைகளில் உள்ள வற்றையெல்லாம் -_ அவற்றின் சீர் கேட்டைச் சொல்ல வேண்டியதில்லை; ஒன்றாகக் கலந்து கடைத்தெருவுக்குக் கொண்டு போய்ப் பகிரங்கமாக விற்கிறார்கள்.

நகரபரிபாலன சபைக்கும் இந்த எச்சிலை லாபத்தில் பங்கு உண்டு. ஒரு பிராமண போஜனத்தில் வரும் எச்சிலையால் வாரியருக்குச் சுமார் 10 ரூபாய் லாபம் கிடைக்கும்; வாரியர் களிடம் இலைகளை வாங்கி விற்கும் நாயர்களுக்கு இன்னும் லாபம் அதிகம் கிடைக்கும்.

சில காலத்துக்கு முன் வரை தெய்வ பக்தியுள்ள உயர்ந்த வகுப்பார் பலர் இதனை வாங்கித் தங்கள் நோய் நீங்குமென்று உட்கொண்டு வந் தார்கள். ஆனால் இப்பொழுது பக்தியை விடப் பசி காரணமாகவே தாழ்ந்த வகுப்பு ஜனங்கள் இந்த எச்சிலை களை வாங்கி உண்கிறார்கள். மலை யாளத்துப் பிராமணர் கூற்றைத் தயவு செய்து திருத்த வேண்டும் (லோகோபகாரி)
கருநாடக மாநிலத்திலாவது எச்சில் இலையில் அங்கப் பிரதட்சணம் செய்தனர். கேரளாவிலோ பார்ப் பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையைக் காசு கொடுத்து வாங்கி அதில் சாப்பிட்டார்கள் என்றால்.. அதன் பொருள் என்ன?
எச்சில் இலையில் சாப்பிட்டால் நோய்ப் போகுமா? நோய் வருமா?
கடவுளை வணங்குபவன் காட்டு மிராண்டி என்பது ஒருபுறம் இருக் கட்டும்; இந்த ஏற்பாட்டைச் செய்து வைத்திருக்கும் பார்ப்பனீயத்தின் ஆலகால நஞ்சை என்னவென்று கூறுவது!

-------------------------------- மின்சாரம்அவர்கள் 14-12-2013 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

14.12.13

மதக் கலவரத் தடுப்புச் சட்டம் வரவேற்கத்தக்கதே!


  • மதக் கலவரத் தடுப்புச் சட்டம் வரவேற்கத்தக்கதே!
  • தமிழக மீனவர்களைப் பாதுகாக்க நிரந்தர தீர்வு தேவை
பெரியார்உலகிற்கானமாவட்டஒதுக்கீட்டுநிதியை
உடனேமுடித்திடமுனைப்புக்காட்டுக!
2014ஆம் ஆண்டுக்கான வேலைத் திட்டங்கள்
தஞ்சை வல்லம் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவின் தீர்மானங்கள்
வல்லம் டிச.14- பெரியார் உலகிற்காக ஒவ் வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்ட இலக்கீட் டுக்கான நிதியை நிலுவை வைத்துள்ள மாவட் டங்கள் உடனடியாக முடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு கொண்டுவரும் மதவாதத் தடுப்புச் சட்டத்தை வரவேற்று செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தஞ்சை வல்லத்தில் இன்று (14.12.2013) முற்பகல்  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

தீர்மானம் எண்: 1

இரங்கல் தீர்மானம்
நிறவெறியை எதிர்த்துப் போராட்டங்கள் பல நடத்தி 27 ஆண்டு சிறைத் தண்டனை ஏற்று, மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய மனித உரிமைப் போராளி என்னும் பெருமைக்குரிய நெல்சன் மண்டேலாவின் (வயது 95) மறைவிற்கு இச்செயற்குழு தனது இரங்கலைத் தெரி வித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 2

தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்புத் தேவை!

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது என்பது தொடர்கதையாக - அன்றாட நிகழ்வாக இருந்து வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட மீனவர் களும், இயக்கங்களும், கட்சிகளும் கண்டனக் குரல் கொடுத்து வந்திருந்தாலும், மத்திய அரசு கண்துடைப்பு வழிகளைப் பின்பற்றுகின்றது; தமிழக அரசு சார்பில் கடிதங்கள் எழுதப்படுவதும் - மத்திய அரசோ கவலை கொள்கிறோம் என்று கூறுவது என்பவையும் அன்றாட சடங்குகளாகி விட்டன.

இவற்றினால் பாதிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு எந்தவிதப் பரிகாரமும், நிரந்தரத் தீர்வும் கிட்டவில்லை. அவர்களின் அடிப்படை வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு அன்றாடம் கண்ணீரும், கம்பலையுமாகத் துக்கப்படும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

கடுமையான முறையில் இலங்கைக்கு எச்சரிக்கை விடப்பட்டு, நிரந்தரமான முறையில் தமிழக மீனவர் களுக்கு எவ்வித சங்கடமும் இல்லாமல் மீன்பிடிக்கும் உரிமைக்கு உத்தரவாதம் செய்து தருமாறு  மத்திய - மாநில அரசுகளை இச்செயற்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் எண்: 3

மதக் கலவரத் தடுப்புச் சட்டம் வரவேற்கத்தக்கதே!

மத்திய அரசு கொண்டுவரும் மதக் கலவரம் மற்றும் குறி வைத்து மேற்கொள்ளப்படும் வன் முறைத் தடுப்பு (நீதி மற்றும் மறுவாழ்வு பெறுதல்) சட்ட வரைவு (Prevention of Communal Violence (Access to Justice and Repatriation) Bill) எனும் சட்டம் விரிவான பொருள்கொண்ட நியாயமான, தேவையான வரவேற்கப் படவேண்டிய சட்டம் ஆகும். 

அவசியம் கருதி இந்தச் சட்டத்தினைச் செயல்படுத்தும் போது மாநில அரசுகளின் உரிமைகளுக்குப் பங்கம் இல்லாமல், மாநில அரசுகளின் ஒப்புதலுடன் செயல்படுத் தும் வகையில் சட்டத்தில் சரத்துகளை இணைத்துக் கொள் ளுமாறு மத்திய அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 4 (அ)

பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டித் தந்த தோழர்களுக்குப் பாராட்டு
திருச்சி சிறுகனூரில் உருவாக இருக்கும் 95 அடி பெரியார் பேருருவச் சிலை மற்றும் பெரியார் உலகிற்கு திட்டமிட்டபடி 1005 சவரன் தங்கத்திற்கான நிதியைத் திரட்டிக் கொடுத்த கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்களின் செயற்கரும் முயற்சிக்கும், பணிக்கும் இச்செயற்குழு பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள் கிறது. இந்தப் பெரும் பணிக்கு நன்கொடைகளைத் தாராளமாக வழங்கி உதவிய பெருமக்களுக்கு இச்செயற் குழு தனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 4 (ஆ)

அடுத்த கட்டமாக நன்கொடை திரட்டும் பணியைத் தொடங்குவதற்குமுன் மாவட்டத்திற்கு 15 சவரன் தங்கம் என்னும் தங்கள் இலக்கினை நிறைவு செய்யாத மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் அதனை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மண்டலக் கழகப் பொறுப்பாளர்கள், சம்பந்தப்பட்ட பகுதிகளின் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், இதற்கு முன்னுரிமை கொடுத்து அப்பணியை வெற்றியாக்கித் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 

தீர்மானம் எண்: 5

(அ)  2014 ஆம் ஆண்டுக்கான வேலைத் திட்டம்

ஜாதி, தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்குகள் மாவட்டந்தோறும் (அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான விளக்கக் கூட்டங்கள்).

(ஆ) திராவிடர் மகளிர் பாசறை மற்றும் திராவிடர் கழக மகளிரணி ஆகிய இரு அணிகளின் சார்பில் திராவிடர் மகளிர் பயிற்சிப் பட்டறை (Work Shops) முதற்கட்டமாக சென்னை பெரியார் திடலில் டிசம்பர் 24, 25, 26 நாட்களில் அடுத்தகட்டமாக ஏலகிரி, நீலகிரி, குற்றாலம், காரைக்குடி ஆகிய இடங்களில் நடத்துவது; இதற்கான தேதிகளை ஒழுங்கு செய்யுமாறு மகளிர் பாசறை மற்றும் மகளிரணி மாநிலப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

(இ) திராவிடர் கழகப் பொருளாளராக இருந்த பழைய கோட்டை அர்ச்சுனன் நூற்றாண்டு விழாவை ஈரோட்டில் 8.2.2014 சனியன்றும், நீதிக்கட்சியின் முன்னணித் தலைவர் திராவிடர் செல்வம் ஏ.டி.பன்னீர்செல்வம் நூற்றாண்டு விழாவை சென்னையில் 17.1.2014 அன்றும் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

(ஈ) தமிழர் திருவிழாவாம் பொங்கலையொட்டி பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் 2014 ஜனவரி 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களிலும் சென்னை பெரியார் திடலில் சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

பெரியார் பகுத்தறிவு கலை, இலக்கிய அணி பொறுப்பாளர்கள் சிறப்பாகக் கலை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

(உ) பெரியாரியல் பயிற்சி முகாம்களை மாவட்டந் தோறும் சனி, ஞாயிறுகளில் நடத்துவது என்று தீர்மானிக் கப்படுகிறது. (அதற்கான திட்டத்தைத் தயாரிக்குமாறு பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்).

(ஊ) பெரியாரியல் சமூகக் காப்பு அணி பயிற்சி முகாம் களை மண்டலம் தோறும் நடத்துவது என்று தீர்மானிக்கப் படுகிறது.

தீர்மானம் எண்: 6

இளைஞரணி - மாணவரணி பொறுப்பாளர்களின் பணிகள்
திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி தோழர் கள் பெரியாரியல் பயிற்சி முகாம்களுக்குப் பயிற்சியா ளர்களைச் சேர்த்தல், மாணவரணி, இளைஞரணி அமைப் புகளை உருவாக்குதல், ஏடுகளுக்கு, இதழ்களுக்குச் சந்தா சேர்த்தல், புத்தகச் சந்தைகள் நடத்துதல் உள்ளிட்ட பணிகளைத் தொடர்ச்சியாகச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தீர்மானம் எண்: 7

அமைப்புகளில் மாற்றங்கள்
(அ) சேலம் மண்டல திராவிடர் கழகத் தலைவராக சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன், செயலாளராக சேலம் பூபதி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.

மேட்டூர் மாவட்டக் கழகத் தலைவராக க.கிருட்டிண மூர்த்தி, மாவட்டச் செயலாளராக எடப்பாடி கே.என்.பாலு ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
கிருட்டிணகிரி மாவட்டத்திற்கு கழகத் தலைவராக காவேரிப் பட்டினம் மு.தியாகராசன், மாவட்ட செயலாள ராக ஓசூர் வனவேந்தன் ஆகியோர் நியமிக்கப்படு கின்றனர். பெரியார் பெருந்தொண்டர் தா.திருப்பதி தலைமைச் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார்.

ஈரோடு மண்டலம்
ஈரோடு மண்டலச் செயலாளராக குருவாரெட்டியூர் ப.பிரபாகரன், ஈரோடு மாவட்ட கழகத் தலைவராக இரா.நற்குணம், மாவட்டச் செயலாளராக கு.சிற்றரசு ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். ஈரோடு நகர திராவிடர் கழகத் தலைவராக ந.சிவராமன், செயலாள ராக வி.தேவராசு ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
                            ----------------------"விடுதலை” 14-12-2013

பெண்ணை அடிமைப்படுத்துவது இல்லற அமைப்பே! - பெரியார்


இந்நிகழ்ச்சி நமது மனித சமுதாயத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் உரிமையானாலும், இந்த நிகழ்ச்சியானது நம்மிடையே இதுவரை நடைபெற்று வந்த நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் மாறாக, சீர்திருத்த முறையில் இதனை நடத்தி வருகின்றோம்.

செல்வர்கள் வாசுதேவன் - பானுமதி வாழ்க்கை ஒப்பந்த விழாவானது இம்முறையில் நடத்தப்படுவது இவர்களுக்கு மட்டுமல்ல; மனித சமுதாய மாற்றத்திற்காக, சீர்திருத்தத்திற்காகச் செய்து வருகின்றோம்.

மனித ஜீவனானது குரங்கிலிருந்து காட்டாளாக இருந்து, இன்று மனிதர்களாக வாழுகின்றார்கள் என்பது விஞ்ஞான ஆராய்ச்சி என்றாலும் இன்றும் மனிதர்கள் நம் நாட்டில் காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து கொண்டிருக்கின்றனர். காட்டுமிராண்டித் தன்மையென்றால் அறிவு பெறாத தன்மையிலிருக்கின்றார்கள். மிருக பிராயத் தன்மையிலிருக்கின்றார்கள் என்று பொருள்.

மற்ற உலக மக்கள் காட்டுமிராண்டித் தன்மை மாறி அறிவுபிராயத்திற்கு வந்து, தங்கள் அறிவின் மூலம் விஞ்ஞானத்தின் மூலம் பல அரிய காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் போது, நம் நாட்டு மக்கள் மேலும் மேலும் காட்டு மிராண்டித் தன்மைக்குப் போய்க் கொண்டிருக்கின்றார்கள்.

இதனைத் திருத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பல வழிகளில் இல்வாழ்க்கை ஒப்பந்த விழா என்பதும் ஒன்றாகும். மனிதன் திருமணம் என்பதை ஏற்பாடு செய்ததே பெண்களை ஆண்களுக்கு நிரந்தர அடிமையாக்குவதற்கும், அவர்களை உரிமையற்ற ஜீவனாக்குவதற்காகவுமே ஆகும்.
இந்தியாவில் எத்தனையோ மகான்கள், மகாத்மாக்கள், தெய்வ சக்தி பொருந்தியவர்கள், ரிஷிகள் என்பதாகப் பலர் தோன்றியிருந்தாலும் ஒருவர் கூடப் பெண்ணடிமை நீங்க வேண்டுமென்று பாடுபட்டது கிடையாது.

மனித ஜீவன் சுயமரியாதையோடு வாழ வேண்டுமென்கின்ற குறிக்கோளோடு துவக்கப்பட்டது சுயமரியாதை இயக்கமானதால், மனித ஜீவன் சுயமரியாதையைப் பெறுவது பற்றிச் சிந்திக்கும்போது மனித ஜீவனில் ஒரு பகுதியான பெண்களின் அடிமையை விலக்க வேண்டுவது மிக அவசியம் என்று தோன்றியதாலும், பெண்ணடிமைக்கு அடிப்படையான திருமணம் - இல்லற அமைப்பு ஆகியவற்றை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாயிற்று.

இந்திய சரித்திரம் தோன்றிய காலம் முதல் சுயமரியாதை இயக்கம் துவக்கப்படும் வரை இதற்காக எவரும் பாடுபட்டார்கள் என்பதைச் சொல்ல முடியாது.


சுமார் 40, 45   ஆண்டுகாலமாகச் சுயமரியாதை இயக்கம் தான் பார்ப்பனர்களின் எதிர்ப்பிற்கும், மூட நம்பிக்கை மக்கள் காட்டுமிராண்டி மக்களின் எதிர்ப்புக்கு மிடையிலே இம்முறையினை மக்களிடையே பரப்பிக் கொண்டு வருகின்றது. இம்முறையானது இதுவரை சட்டப்படிச் செல்லுபடியற்றதாக இருந்தது. இப்போது வந்துள்ள அரசாங்கம் இம்முறைத் திருமணங்கள் சட்டப்படிச் செல்லுபடியாகுமென்று சட்டமியற்றியுள்ளது.

இதுவரை சட்டம் எப்படி இருந்தது என்றால், இந்து மத சாஸ்திர சம்பிரதாயப்படி நடக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்து மக்களிடையே பழக்க வழக்கத்திலிருந்த பழைய முறைப்படி நடத்தும் திருமணம் தான் சட்டப்படிச் செல்லுமென்றிருந்தது. இதன் காரணமாக பழைமையைப் பாதுகாத்ததன் காரணமாகவே இதற்கு முன்னிருந்த அரசாங்கமானது பதவியை இழக்கும்படியாயிற்று. இப்போது புதியதாக வந்திருக்கும் ஆட்சியானது பகுத்தறிவாளர்கள், பழைமை வெறுப்பாளர்கள், கடவுள் - மத - சாஸ்திரங்களில் நம்பிக்கையற்றவர்கள் ஆட்சியானதால் இப்புதிய முறை முறை திருமணமானது சட்டப்படிச் செல்லுபடியாகும் என்று சட்டம் இயற்றியுள்ளது.

பழைய முறையில் பெண்ணடிமையானது வலியுறுத்தப்படுவதோடு, மனிதனின் மடமை, முட்டாள்தனம், மூட நம்பிக்கை ஆகியவை பாதுகாக்கப்படவும், ஜாதி இழிவானது நிலை நிறுத்தப்படவுமான தன்மையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

நமது பிரசாரம் புரட்சிகரமான பிரசாரம். மனித ஜீவனின் வாழ்வையே மாற்றக் கூடியதாகும். மனிதன் பகுத்தறிவுவாதி. மற்ற ஜீவன்களை விடச் சிந்தித்து ஆராய்ந்து காரியம் செய்யக் கூடியவன் அதைப் பயன்படுத்துவதில் ஒவ்வொரு வினாடியும் மாறுதலுக் குரியவன்.

அந்த முறையில் நான் சொல்கிற விஷயங்கள் புதுமையாகவுமிருக்கலாம், புரட்சிகரமானவையாகவும் இருக்கலாம். இவற்றை நீங்கள் சிந்தித்து ஏற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

உலகத்தில் மற்றவர்கள் மூட நம்பிக்கைக்காரர்கள், கடவுள் நம்பிக்கைக்காரர்கள் என்பவர்கள் யாவரும் தாங்கள் சொல்வதை நம்பச் சொல்பவர்களேயாவார்கள்.

இதனால் 3000, 4000- வருடங்களாக நம் நிலை என்னவாயிற்று என்றால், இன்னமும் காட்டுமிராண்டித் தன்மையில் தான் இருக்கிறோம். 3000, 4000- வருடங்களுக்கு முன் புகுத்தப்பட்ட கடவுளைத்தான், மதத்தைத்தான், சாஸ்திரத்தைத்தான் இன்னும் நம்பிக் கொண்டிருக்கின்றோம். சாஸ்திரம் சொன்னது பழமையானது என்று அதனையே நம்பிக் கொண்டிருக்கின்றோம். மனிதனைப் போல மற்ற ஜீவன்கள் வேஷ்டி கட்டிக் கொள்வதில்லை; உணவைச் சமைத்துச் சாப்பிடுவது இல்லை; இதற்கெல்லாம் அறிவைப் பயன்படுத்துகின்ற மனிதன் மற்றவற்றில் அறிவைப் பயன்படுத்துவது கிடையாது.

நான் மண்ணைக் கொடுத்து சர்க்கரை தின்னு என்று சொல்கின்றேன். நீ அதை வாயில் போட்டால் மண்ணாகத்தான் இருக்கும். அதை வாங்கி இது சர்க்கரையா, மண்ணா என்று உன் அறிவைக் கொண்டு சிந்தித்தால் தானே அது என்ன என்பது தெரியும். அப்படியில்லாமல் நான் சொல்கிறேன் என்று நம்பி அது என்ன என்று பார்க்காமல் நான் கொடுத்த மண்ணை வாயில் போட்டால், மண்ணாகத்தானே இருக்கும்.

அதுபோல் தான் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்றெல்லாம் நம்பாமல் உன் அறிவைக் கொண்டு சிந்தித்துப் பார். உன் அறிவிற்குச் சரி என்று தோன்றினால் ஏற்று கொள் என்கிறோம். எப்படி மண்ணைச் சர்க்கரையென்று நம்பினானோ, அதுபோல கடவுள் என்பதும் ஒரு முட்டாள்தனமான நம்பிக்கையே தவிர, அறிவோடு சிந்தித்தால் அப்படியொன்றும் இல்லை என்பது தானாகவே விளங்கும்.

மனிதனுக்குக் கடவுள் எண்ணம் தானாகத் தோன்றியதா? பிறரால் புகுத்தப்பட்டதா? என்பதைச் சிந்திக்க வேண்டும். கடவுள் எண்ணம் தானாகத் தோன்றியது என்றால், உலகில் உள்ள 350-கோடி மக்களுக்கும் தோன்றியிருக்க வேண்டுமே! மற்ற ஜீவன்களான ஆடு, மாடு, கோழி, கழுதைகளுக்குத் தோன்றியிருக்க வேண்டுமே! உலகில் கடவுள் உண்டு என்பதை நம்பிக் கொண்டிருக்கிற மக்களை விட, கடவுள் நம்பிக்கை அற்ற மக்களின் தொகையே அதிகமாகும். எனவே கடவுள் எண்ணமானது மற்றவனால் புகுத்தப்பட்டதே யாகும்.

கடவுள் என்றால் என்ன? அதன் சக்தி என்ன? அதன் பயன் என்ன? என்று எவனுமே சிந்திப்பது கிடையாது. ஒருவன் கடவுள் மனிதன் மாதிரி இருப்பான் என்கின்றான்; இன்னொருவன் பெண் உரு என்கின்றான்; மற்றொருவன் உருவமே கிடையாது என்கின்றான்; இப்படி ஒவ்வொருவனும் அவனவனுக்குத் தோன்றியபடி ஆளுக்கு ஒரு மாதிரியாகச் சொல்கின்றானே தவிர, இன்னதுதான் கடவுள் என்று எவனுமே சொன்னது கிடையாது. கேட்டால் உன் அறிவால் அதைப் புரிந்து கொள்ள முடியாது என்கின்றான்.

இப்படி மனித சமுதாயம் கடவுளால் குந்தகமாகி விட்டது. மனித சமுதாய வாழ்வு பாழாகிப் பேதமாகி விட்டது. கவலையற்று வாழ வேண்டிய மனித சமுதாயம் கவலைகளுக்கு ஆட்பட்டு, வாழ்நாள் பூராவும் துன்பத்திற்கு ஆளாகி விட்டது.

கடவுள் நம்பிக்கையுடைய முஸ்லிம்கள் அத்தனை பேருக்கும் உருவமற்ற ஒரே கடவுள் தான். கிறிஸ்தவர்களுக்கும் அப்படித் தான். ஆனால் நமக்குத்தான் 1,000-கடவுள்கள். அதற்குப் பதினாயிரக்கணக்கான உருவங்கள் இருக்கின்றன என்பதோடு, கடவுள்களிலேயே மேல் ஜாதி மக்களுக்குச் சில கடவுள்கள், இழி ஜாதி மக்களுக்குச் சில கடவுள்கள் என்றிருக்கின்றனர்!

நமக்கு இன்று "கடவுள்களாக" இருப்பவை இராமாயணத்தில் வரும் பாத்திரங்களும், பாரதத்தில் வரும் பாத்திரங்களும் கந்தபுராணத்தில் வினாயக புராணத்தில் வரும் பாத்திரங்களும் தான்.

இந்தப் பாத்திரங்கள் யார்? இவற்றின் தன்மை என்ன? இவற்றின் பிறப்பு என்ன என்பவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டாமா? இராமன், கிருஷ்ணன், கந்தன், விநாகன் ஆகியோர் பிறப்பகளைப் பார்த்தாலே அவை ஆபாசமானவை என்பது புரியும்.


தமிழ்நாட்டில் அறிவாளி என்று சொல்லக்கூடிய ஒருவன் இல்லையே! பகுத்தறிவுவாதி என்று சொல்லக் கூடிய ஒருவன் தோன்றியதாக இல்லையே!

தமிழ்நாட்டில் ஒரு வீரன் யார் என்றால் கட்டபொம்மன் என்கின்றான். அவன் கதையைப் பார்த்தால் அவன் ஒரு பெரிய கொள்ளைக்காரனாக இருந்திருக்கின்றான். அந்தக் கொள்ளைக்காரனைத் தான் வீரன் என்று சொல்ல முடிகிறதே தவிர, உண்மையான வீரன் ஒருவனைச் சொல்ல முடியவில்லையே.

உயர்ந்த இலக்கியம் எது என்றால் திருக்குறள் என்கின்றான். திருவள்ளுவர் தான் உலகிலேயே சிறந்த அறிவாளி என்கின்றான். அந்த வள்ளுவன் என்ன சொல்கின்றான் என்றால், "பெண்கள் கணவனைத் தொழ வேண்டும்" என்கின்றான். எதற்காக ஒரு பெண் கணவனைத் தொழ வேண்டும்? மனு தர்மத்தில், எப்படி சூத்திரன் பார்ப்பானைத் தொழ வேண்டும் என்று சூத்திரனை இழிவுபடுத்துகின்றானோ அதுபோலத் தானே இதுவும் பெண்ணைக் கீழ்மைப்படுத்துவதாக இருக்கிறது? பெண்ணை விட ஆண் எதில் உயர்ந்தவன்? இன்னும் எத்தனையோ முட்டாள்தன - மூட நம்பிக்கைகள் நிறைந்திருக்கின்றன.

இன்றைய அறிவிற்கு அது ஏற்றதில்லை. இருக்கின்ற பழைய குப்பைகளில் அது ஓரளவுக்குத் தேவலாம் என்று தான் சொல்லலாமே தவிர, அதுதான் உயர்ந்தது என்று சொல்ல அதில் எதுவும் கிடையாது.

இந்தியாவிலிருக்கிற 50-கோடி மக்களில் 25-கோடி பெண்கள். அவர்கள் எதற்குப் பயன்படுகின்றார்கள் என்றால் ஆணுக்கு அடிமையாக இருக்கவும், குழந்தை பெறவும் தான் பயன்படுகின்றார்களே தவிர, மனித சமுதாயத்திற்கு அவர்களால் எந்தப் பயனும் கிடையாது. எதற்காக மனித ஜீவனில் ஒரு பகுதி சமுதாயத்திற்குப் பயன்படாமல் இருக்க வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.


நம் இதிகாசம், நீதி இலக்கியம், புராணம் எல்லாம் பெண்களை இழிவுபடுத்துவதாகவே இருக்கின்றன. அவற்றையெல்லாம் போட்டுக் கொளுத்த வேண்டும். எதற்காகப் பெண்கள் அறிவற்ற மடையர்களாக, நாணமுடையவர்களாக, பயமுடையவர்களாக, அசிங்கமாகக் காட்சியளிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்? நமது முறை அயோக்கியர்களால், காட்டுமிராண்டிகளால் ஏற்பாடு செய்யப்பட்டவையாகும்.

நாம் வளர்ச்சியடைய வேண்டும். மற்ற மக்களைப் போல இழிவற்று, மானத்தோடு, உரிமையோடு, அறிவோடு வாழ வேண்டும். நம் மடமைக்கும், அறிவற்ற தன்மைக்கும், முட்டாள்தனத்திற்கும் ஆதாரமான, அடிப்படையானவற்றையெல்லாம் அழித்தொழிக்க வேண்டும். நம் அறிவைத் தாராளமாக இயக்க விட்டுச் சிந்திக்க முன்வர வேண்டும்.


மணமக்கள் தங்கள் வாழ்க்கையில் இருவரும் சம அந்தஸ்துடைய நண்பர்களைப் போல் பழக வேண்டும். வரவுக்குள் செலவிட வேண்டும். ஆடம்பரமாக வாழக் கூடாது.

இந்தக் காலத்திற்கு வேண்டியது ஒழுக்கமும், நாணயமும் ஆகும். அதை உணர்ந்து நாணயத்தோடு, ஒழுக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும்.

மனிதனுக்குக் கவலையற்ற தன்மையும், மானமும் வேண்டும். இவை இருக்க வேண்டுமானால் பிள்ளை பெறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். முடியவில்லை, ஒன்று இரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மற்றவர்களுக்கு உதவி செய்வது தான் மனிதன் வாழ்வு என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.


----------------------------------- 07.05.1969 அன்று காவாலக்குடியில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை"13.05.1969

13.12.13

தந்தை பெரியாரும் நெல்சன் மண்டேலாவும்





நெல்சன் மண்டேலா தந்தைபெரியார் போலவே 95 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்துள்ளார்.

இந்தஇரு பெரும் தலைவர்களுக்கும் அடிப் படையில் ஒற்றுமைகள் உண்டு. இருவரும் பிறப்பின் அடிப்படை யிலான பேதத்தை எதிர்த்துப் போராடி யவர்கள்.

நிறவெறி என்பதும் ஜாதி வெறி என்பதும் பிறப்பின் அடிப்படையில் நிச்சயிக்கப்பட்டவை.

ஒரு கட்டத்தில் மண்டேலா ஆயுதப் போராட் டத்தைத் தொடங்கி இருந்தாலும் அதனை ஒரு தற்காலிக அணுகு முறையாகத்தான் கைக் கொண்டார். அது ஒரு கவன ஈர்ப்பு என்கிற வகையில் பயன்படுத்தினார். பிறகு அமைதி வழியே நிரந் தரமான தீர்வு என்ற நோக்கில் செயல்பட்டார். மண்டேலாவின் இந்த அணுகுமுறையோடு முரண் பாட்டுள்ள பல அமைப்புகள் அங்கு தோன்றியதும் உண்டு.

தந்தை பெரியார் அவர்களைப் பொறுத்தவரை வன்முறையில் நம்பிக்கை கொண்டவரல்ல; எந்த ஒரு போராட்டத்தை நடத்துவதாக இருந்தாலும் அது குறித்து விரிவான பிரச்சாரத்தை நடத்தி, மக்களை அதன் அவசியத்தை உணரும்படிச் செய்து, அதிர்ச்சி யூட்டும் போராட்டங்களை நடத்தினார் - எதிலும் துரும்பளவு வன்முறைகூட தலை தூக்கியதில்லை.

இவ்வளவுக்கும் சட்ட எரிப்புப் போராட்டம் வரை சென்றவர்; தேசியக் கொடி  எரிப்புப் போராட்டத்தை அறிவித்தவர்; விநாயகர் பொம்மைகளை சாலையில் போட்டு உடைத்தவர்.

மக்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று முதல் அமைச்சராகயிருந்த ராஜாஜி மறைமுகமாகத் தூண்டியபோதும்கூட தந்தை பெரியார் உணர்ச்சி வயப்பட்டு, எதிர் தாக்குதலுக்குத் தோழர்களைத் தயாரிக்கவில்லை.

குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து, தீப்பெட்டியும், பெட்ரோலும் தயாராக இருக்கட்டும் என்று சொன்னதுகூட, ஒரு எச்சரிக்கைதான். அவசரப் படாதீர்கள் - நாள் குறிப்பிடுவேன் என்றுதான் கூறினார். அதற்குப் பலன் கிடைத்தது; ஆச்சாரியார் பதவியை விட்டே விலகும்படிச் செய்தார்.

இந்த இரு தலைவர்களும் சமூகநீதிக்காகக் குரல் கொடுத்தவர்கள். வி.பி. சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது தென்னாப்பிரிக்கா அதிபராக நெல்சன் மண்டேலா இந்தியாவுக்கு வருகை தந்தவர். அவருக்கு பாரத ரத்னா விருது அளித்து பெருமை சேர்க்கப்பட்டது.
 
செய்தியாளர்கள் மண்டல் குழுப் பரிந்துரைபற்றி மண்டேலாவிடம் கேள்வி கேட்ட போது அதனை நான் வரவேற்கிறேன்! என்றார். பார்ப்பன ஊடகத்தார் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன.

தென்னாப்பிரிக்காவில் இன்றைய தினம் கிரிக்கெட்டில் கூட இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யப் பட்டுள்ளது. ஆனாலும் வெள்ளைக்காரர்களில் மிச்ச சொச்சம் என்ற முறையில் அவர்களின் ஆதிக்கம் இன்னும் இருந்து கொண்டே தான்  உள்ளது. இந்திய முதலாளிகள் தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு கூடாது என்று இந்தியாவில் சொல்கிறார்கள் - இடஒதுக்கீட்டால் தகுதி திறமை பாதிக்கப்படும், உற்பத்தித் திறன் பாதிக்கப்படும் என்று எதிர்க்கிறார்கள் அல்லவா!

தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு அளித்தால் 12 சதவீத வளர்ச்சியை அடைய முடியாது என்று இந்தியாவில் தொழில் கூட்டமைப்பினர் கூறுகின் றனர் அல்லவா! (தினமலர் 20.4.2006).

இதே முதலாளிகள் தென்னாப்பிரிக்காவில் தொழில் தொடங்கும்போது அங்கு என்ன நிலைமை தெரியுமா?

தென்னாப்பிரிக்க உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்க ஒப்புதல் அளித்தாக வேண்டும்.

ஒரு தொழில் நிறுவனத்தில் கறுப்பர் ஒருவர் தலைமைச் செயல் அலுவலராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட அளவு விழுக்காட்டினராக கறுப்பர்கள் மேலாண்மையினராக இருக்கவேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு தான் இந்தியப் பெரு முத லாளிகள் டாட்டா போன்ற  நிறுவனங்கள் தென்னாப் பிரிக்காவில் தொழில்களைத் தொடங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியாரும், நெல்சன் மண்டேலாவும் உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு எப்படித் தேவைப் படுகின்றனர் என்பது இதன் மூலம் எளிதில் விளங்கும்.

                 --------------------------------"விடுதலை” தலையங்கம் 13-12-2013

பிராமணாள் ஒழியவில்லையா? - பெரியார்

”ஜாதி ஒழிய வேண்டுமென்று நாங்கள் சொல்லி வருகிறோம். அதற்குப் பார்ப்பனர்கள் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது! எல்லா பத்திரிகைகளும் எதிர்த்து நிற்கின்றன!

இந்தியாவின் படத்தின் தலைப்பில் என்னுடைய பொம்மை போட்ட தீப்பெட்டியை வைத்து, எதிரில் ஆச்சாரியாரைப் பிச்சை எடுப்பது போன்ற வேஷம் போட்டு

'ஜனநாயகமே! அது பொய்யடா! வெறும் காற்றடைந்த பையடா! ஜாதியும் ஒரு பேயடா; நான் சொல்லிவிட்டேன் இது மெய்யடா!" என்று அவர் பாடிக்கொண்டே பிச்சை எடுக்கிறதாக 'ஆனந்த விகடனே' படம் போட்டுக் காட்டுகிறது என்றால் நாம் நினைப்பது எப்படித் தவறாக முடியும்? அரசமைப்புச் சட்டம் ஒழியாதவரை ஜாதி ஒழியாது என்பதை நாம் உணர்ந்து விட்டோம்.

அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? இந்த அரசமைப்புச் சட்டத்தை வைத்துக் கொண்டு ஆள்கிற வட நாட்டான் சம்பந்தம் நமக்கு வேண்டாம் எங்களுடைய ஆட்சி எங்களுக்கு வேண்டும் என்பதற்கு அறிகுறியாக இந்தியாவின் படத்தை எரிப்போம் என்ற தீர்மானத்திற்கு வந்துவிட்டோம். அதற்காக ஒரு மாநாடு நடத்தப் போகிறோம்.

சட்டத்தை எரித்து சிறைசென்றது நாலாயிரம் என்றால் இதில் நாற்பதினாயிரம் பேர் என்று கணக்கு வரவேண்டும்! விடுதலை கணக்கு வர வேண்டும்! விடுதலை நாளிதழில் ஒவ்வொருவர் பெயரும் வந்து கொண்டே இருக்க வேண்டும். போலீஸ்காரன் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்து நம்மைப் பிடிக்க வேண்டும்.

மக்களுக்கு இந்த ஆட்சி பிடிக்கவில்லை. ஜாதி பிடிக்காமல், மதம் பிடிக்காமல் செய்கிற கிளர்ச்சியில் பார்ப்பனர்கள் டில்லியை நோக்கி வருகிறார்கள் என்ற நிலைமை வரட்டுமே! அப்படிச் செய்தால் சட்டத்தை மீறியதாகக் குற்றம் சாட்டப்படலாம்! அவ்வளவுதானே? நீ என்ன யோக்கியமான முறையில் ஆட்சியில் இருக்கிறாய்? சட்டத்தை மீறி நெருப்பு வைத்து, வெடிகுண்டு வீசி, வெள்ளைக்காரனுடைய சாமான்களை எல்லாம் நாசப்படுத்தி மந்திரியாக வந்த சதிக்காரக் கும்பல்தானே? அல்லது 'எனக்குத் தனித்த யோக்கியதை இருக்கிறது திறமை இருக்கிறது இந்த நாட்டை ஆள' என்று சொல்ல முடியுமா?


நான் கேட்கிறேன்: ராஜேந்திர பிரசாத்துக்கும் இந்த நேருவுக்கும் என்ன தகுதி இருக்கிறது? அல்லது காமராசர் சுப்ரமணியம் பக்தவத்சலம் கக்கன் போன்றவர்கள் எங்கிருக்க வேண்டியவர்கள்? இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? எல்லோரும் காலித்தனம் செய்து குழப்பம் உண்டாக்கித்தானே போனார்கள்? அதைத்தான் நாங்களும் செய்கிறோம்.

காங்கிரஸ்காரர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்றால், போஸ்டாஃபிசுக்கு (அஞ்சல் நிலையம்) நெருப்பு வைக்கிறது, தந்திக் கம்பியை அறுப்பது, இரயிலுக்கு வெடி வைப்பது என்பதில் நமக்கு நம்பிக்கையில்லை. போலீசுக்காரனுக்குக்கூட ஒரு அடி விழாமல் நாங்கள் உஷாராக இருந்து காரியம் செய்து கொண்டு வருகிறோம். எங்களைவிட இந்த நாட்டில் பொறுப்பை உணர்ந்து எந்தக் கட்சிக்காரர்கள் கிளர்ச்சி செய்கிறார்கள்?

நேரு தமிழ்நாடு வந்தபோது செருப்பை வீசினான். அவர்களை ஒன்றும் செய்யவில்லை! எவனோ ஒருவன் திராவகத்தை வீசினான். வீசினான் என்பதற்காகத் திராவிடர் கழகத்தார்களை இல்லாத பாடெல்லாம் படுத்தினார்கள். யாரோ சிலர் மீது பொய்க் கேஸ் (வழக்கு) கொண்டு வந்தார்கள். ருசு (நிரூபணம்) ஆகவில்லை ஏன்று கேசைத்தான் விட்டார்கள்! அதுபோலவே பூணூல் அறுப்பு கேசும் (வழக்கு) ஆகும்.

நாங்கள் செய்கிற காரியத்தினால் ஒன்றும் ஆகாது என்று நினைக்கிறவர்களும் இருக்கிறார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது; நாம் சொல்கிற, செய்கிற காரியம் வெற்றி தரும் என்று உறுதியான எண்ணமும் அதன்மேல் எழும், அதைவிட உறுதியும் இருக்கிறது.

பார்ப்பான் ஓட்டல் முன்பு மறியல் செய்த போது இது உன்னால் முடியாது என்று சொன்னார்கள். நான் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும்போது ஒருவர் வந்து சொன்னார். இரவோடு இரவாக எடுத்து விட்டுச் சங்கராச்சாரியார் சொன்னதாகச் சொல்கிறார் என்றார்கள். கேட்டுச் சிரித்தேன் நான் சொல்லாமல் சங்கராச்சாரியார் மேல் சொல்கிறாரே இவரைவிட அவர் வீரர் என்பதனால்.

---------------------------------------- 15.08.1958-அன்று சென்னையில்பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு: -”விடுதலை” 22.08.1958