Search This Blog

2.1.15

திருமண ஆடம்பரம் தேவையா?-கி.வீரமணி

திருமண ஆடம்பரம் தேவையா?
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன - என்பது விவிலியத்தின் (பைபிளில்) பழமொழி, ஆனால், நடைமுறை உண்மை என்ன வெனில் திருமணங்கள் ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன!


அது மட்டுமா?


நகர்ப்புறங்களில் நடைபெறும் திருமணங்களின் அருவருக்கத்தக்க ஆடம்பரங்கள்; கருப்புப் பணத்தைத் தேடிக் கண்டுபிடிக்க சுவிஸ் வங்கி களைத் தேடி நமது மத்திய அரசு ஓடிக் கொண்டிருக்கிறதே - இந்த ஆடம்பரத் திருமணங்களை நடத்துவோர் பட்டியலைத் தேடினால் கறுப்புப் பணம் எங்கே புதைந்துள்ளது என்பது புரியுமே! (திருப்பதி உண்டியல் முதல் பல இடங்களிலும் ரொக்கத்திற்குப் பதிலாக காசோலையாக (செக்)  மட்டுமே போட வேண்டும் என்ற ஒரு சிறு திருத்த அறிவிப்பை வெளியிட்டுப் பார்க்கலாமே - உடனே ஏழுமலை யானின் உண்டியல் வசூல் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு குறைந்து விடுமே!)


திருமண அழைப்பிதழ்களே பற்பல திருமணங்களில் 100, 200 ரூபாய் (ஒரு அழைப்பிதழ்) ஆகும் அளவுக்கு புதுப்புது முறையில்...! சற்று நிதானமாக எண்ணிப் பாருங்கள். அந்த திருமண அழைப்பை - அந்த வீட்டாரைத் தவிர - வேறு யாராவது பாதுகாத்து வைக்கப் போகிறார்களா? இல்லையே! - குப்பைக் கூடைக்குத்தானே போகிறது? - இதன் பயன் என்ன? காதொடிந்த ஊசியளவுகூடக் கிடையாதே!


சில மண்டபங்களின் வாடகை மட்டும் 8 லட்ச ரூபாய் ஒரு நாள்  - இரு நாளுக்கு.


ஒவ்வொரு மண்டபத்திலும் ஒவ் வொரு வகையான நிபந்தனைகள் வேறு!


அந்த மண்டபத்தை வாடகைக்கு எடுக்கும் திருமணம் நடத்துவோர் - உணவு தயாரித்தல், புரோகிதரை அமர்த்தல், மண்டப அலங்காரக்காரர், நாதசுர (நாயனம்) வாசிப்போர் அனைத்துமே மண்டபக்காரர் மூலமே ஏற்பாடு செய்யப் பட வேண்டுமாம்!

என்னே நெருங்கிய பாச உறவு பார்த்தீர்களா? அதன் ரகசியம் விளக்க வேண்டியதே இல்லை.


விருந்துகளின் ஆடம்பரங்களில் காலைச் சிற்றுண்டி - எத்தனை இனிப்பு வகைகள்! எவ்வளவு உணவு வகையறாக்கள்!  சிற்றுண்டிக்கென அவ்வளவும் அணி வகுத்து இலையில் வந்து குந்திக் கொள்ளுகின்றன!


பாதி பாதியாக இலைகளில் மிச்சம்! அப்படியே எடுத்து குப்பையில் கொட்டும் அழகுதான் என்னே!


உடனே ஒரு சில மணித்துளிகளில் மதிய தடபுடல் விருந்து - சுமார் 29 காய்கறி வகையறா!


இதற்கிடையில் சில்லறைக் கடைகள் போல் தனித்தனி வகைகள் பீடா வரையில்.

மாலையில் வரவேற்பு என்ற பெய ரால் மற்றொரு ஆடம்பர வெளிச்சம்! பிரபல பாடகர் பாடிடுவார்;  ஒரு சிலர் உட்கார்ந்து கேட்பவர்கள் தவிர, மற்றவர் வருவார் - போவார்! பாட்டு பாடுபவர் இயந்திரம்போல் பாடி, கடைசியில் பேசிய தொகையை வாங்குவதற்குப் பதிலாக முன்கூட்டியே மொத்த தொகையை வாங்கிய பின்னரே குழுவினரோடு வருவார்!

பழைய பஜனை மடங்களில் பாடுவோர் தேங்காய் மூடிக் கச்சேரிக் காரர்கள் என்று கேலி செய்வோர் உண்டு, இப்போது பணம் அதிகம்  - வருவாய் பெருகிடும். ஆனால், சுவைத்தோர் வெகு குறைவு - இதிலும் சலிக்காமல் பாடும் அவரது சகிப்புத் தன்மைக்காகத்தான் அவ்வளவு பணம் - பொறுமையின் சின்னமாயிற்றே! மாலை 6 மணி முதல் வரவேற்பு மண்டபத்தில் என்று அழைப்பிதழில் போட்டதை வைத்து உடனடியாக மணமக்கள் வரவேற்பில் கலந்து வாழ்த்தி விட்டு விடை பெறலாம் என்று திட்ட மிட்டு வந்த வருகையாளர்களுக்கு,  மிஞ்சுவது ஏமாற்றமே!


காரணம் பெண் பியூட்டி பார்லரி லிருந்து (Beauty Parlour) அழகு நிலையம் என்று நம்ம மொழியில் சொன்னால் அவ்வளவு அழகாக இருக்காது என்பதால் அப்படி  அழைக் கின்றனர் போலும்! மணமக்கள் சிங்காரித்து அலங்கார பொம்மையாக வருவதற்கு ஒரு மணி நேர கால தாமதம் ஆகும்! (இயற்கை அழகைக் கெடுத்து ஒப்பனை அலங்காரம்  என்ற அலங்கோலம்)


அழைப்பாளர்களில் அவசர கதியில் விடை பெறுவோர்- பெற்றோர் களையே வாழ்த்தி விட்டு திரும்பும் சந்தர்ப்பங்களும் பற்பல நேரங்களில் தவிர்க்க முடியாதவையே!


பசியேப்பக்காரர்களைக் காணாது; புளியேப்பக்காரர்கள் கூட்டத்தையே பார்க்கும் வண்ணம் அந்நாள் முழு வதும் அமையும்!

இது தேவையா?

வரதட்சணை என்ற பெயரால் மணமகனை விலைக்கு வாங்கும் விலை உயர்ந்த நிலை வேறு! - அந்த கணக்கு இதில் வராது.


ஒரு நாள் சில மணி நேரத்திற்கு இப்படியா? இந்த ஆடம்பரத் திருமணங்களைத் தடை செய்தால் அது ஒரு வகையான சமூக நீதிதான்!

இதற்காகவே மற்றொரு முறை இந்திரா காந்தியின் நெருக்கடி கால நிலை திரும்பவேண்டும் போலிருக்கிறது! எங்கள் நாட்டுக்கெந்தநாடு ஈடு?  - பாடுவோம்.

---------------- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி -”விடுதலை” 02-01-2015

குறளைப் படியுங்கள்!இராமாயணத்தைக் கொளுத்துங்கள்!!புராணப் பண்டிகைகளைக் கொண்டாடாதீர்கள்!!!

கம்பராமாயணம் இல்லாவிட்டால் கலையும் ஒழுக்கமும் கெட்டிருக்காது!

வாசகசாலை நம் நாட்டில் அதிகமாயில்லை, காரணம் நூற்றுக்குப் பத்து பேர்தான் படித்துள்ளோம். அந்தப் படித்த கூட்டமோ எனின் பார்ப்பானுக்கு அடிமைப்பட்டுள்ளது. 

எனவேதான், பார்ப்பானைவிட நம் இனத்திலுள்ள சில படித்த மேதாவிகள் என்பவர்களின் தொல்லை நமக்கு அதிகமாயிருந்து வருகிறது. இதற்குக் காரணம் பார்ப்பானுக்கு `ஆமாம் சாமி' போட்டால்தான் அவர்கள் வாழ முடிகிறது. அவ்வித வேலை நிலைக்கு நம் சமுதாயம் அடிமைப்-படுத்தப்பட்டிருக்கிறது.
வெள்ளையன் ஆட்சியில் நமக்குப் படிப்பில்லாமல் செய்யப்-பட்டதென்றால் அது அவர்கள் தப்பிதமல்ல. பார்ப்பனர்கள் நடராஜர் கோவிலில் மாடு படுத்து மறைத்திருப்பதைப் போல, நமக்கும் வெள்ளையருக்குமிடையே புகுந்து கல்வி நம் மக்களுக்குத் தாராளமாக வழங்க விடாமல் தடுத்துவிட்டனர். அதனாலேயேதான் வெள்ளையன் வெளியேறியபோது கணக்குப் பார்த்தால் பார்ப்பனர்களே 100-க்கு 100 படித்திருக்கின்றனர்.

இவ்வித நிலையில் இப்பேர்ப்-பட்ட வாசகசாலைகளிலாவது நம் மக்கள் உலக ஞானத்தை ஓரளவாவது பெற முடியும். பள்ளிக்கூடங்களைவிட இவ்வித வாசகசாலைகளினாலேயே மக்கள் பொது அறிவு பெறமுடியும்.
எனவே வாசகசாலைகள் தெருக்கள்தோறும் நம் நாட்டில் பெருக வேண்டுமென்பதே எனது பேராசை.

வாசகசாலைகளில் எவ்வித புத்தகங்களிருக்க வேண்டுமென்று அருமைத் தளபதி அண்ணாதுரை அவர்கள் எடுத்துக் கூறினார்.

நான் புராணப் புத்தகத்தைப் படிக்கவேண்டாமென்று கூறவில்லை. ஆனால், அத்துடன் அதற்கு நேர்மாறாயிருக்கும் நூல்களையும் படிக்க வேண்டும். இராமாயணம் என்று எடுத்துக் கொண்டால் வால்மீகி இராமா-யணமும், கம்பராமாயணமும் படிக்கட்டும். அத்துடன் எங்களது ரூ.1-12-0 விலையிலுள்ள ஏழு புத்தகங்களைக் கொண்ட இராமாயணத்தையும் படித்து இவைகளை எல்லாம் நன்றாகச் சிந்தித்து உண்மையும், உணர்வும் கொள்ளவேண்டும். அதுவே எங்களது கொள்கையுமாகும்.

ஒன்றைத்தான் படிக்க வேண்டும், ஒருவர் சொன்னதுதான் சரி. அதை எதிர்த்துக் கேட்டால் மாபாதகமாகும். நரகம் கிட்டும் என்று கூறி அந்தப் பழக்கத்திலிருந்து வருவதாலேதான் வீரமும், அறிவும் அறமும் பெற்றிருந்த,  நம் நாடும் மக்களும் இன்றைய ஈன நிலைக்கு _ -அடிமை வாழ்வுக்கு ஆளாக நேர்ந்தது.

அண்ணாதுரை அவர்கள் கூறியதுபோல் பஞ்சாங்கத்தை நம்பாதவர்கள் நூற்றுக்கு மூன்று பேர்களாவது இருப்பார்களா என்பது சந்தேகமேயாகும்.
நாங்கள் நேற்று ஒரு பொதுக் காரியத்துக்காக கோச்சுவண்டி வாங்கினோம். விலை பேசி வாங்கிய பிறகு அந்த வண்டி ஓட்டும் தோழரை ஆபீசில் கொண்டுபோய் வண்டியை விட்டுவிட்டுப் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினால், இன்றைக்குப் பணம் வேண்டாம், ஒன்பது மணி முதல் பத்தரை மணிவரை ராகு காலம் என்று, அதுவும் பட்டணத்திலுள்ள கோச்மான் கூறுகிறான் என்றால், இவன் பிள்ளை குட்டியும், கோச்மான் வேலை செய்யாமல் வேறு எப்படியிருக்க முடியும்.


அருமை நண்பர்களே! வண்டியோட்டுபவர் மட்டுமென்ன? ராஜாக்கள் முதல் வீராதிவீரர்கள் கூட இந்தப் பாழாய்ப்போன ராகுகாலம், தலைவிதி, முற்பிறப்பு, கருமம், கடாட்சம் என்ற ஏமாற்றுதலில் சிக்குண்டதனால் அல்லவோ நாட்டை ஆண்ட நம் சமுதாயம் பஞ்சை-களாகவும், பனாதிகளாகவும், பறையர்களாகவும், சூத்திரர்களாகவும் இருக்கிறோம்.

சுதந்திரம் வந்த பின்னும் அதுவும் மதப் பற்றற்ற ஆட்சி என்று கூறிக் கொண்டிருக்கும் 1948- இல் கூடவா ராகுகாலமும், சகுனத் தடைகளுமிருக்க வேண்டும். இதைப்பற்றி எங்களைத் தவிர வேறு யார் சிந்தித்தார்கள், அல்லது தைரியமாகக் கூப்பாடு போட்டார்கள் என்று கேட்கிறேன். இப்படி உயிருக்கு ஊசலாடி அரசியலார் அடக்குமுறைக்கு ஆளாகி நாட்டைப் பிடித்தாட்டும் மூடப்பழக்க வழக்க பார்ப்பனியப் பீடையை ஒழிக்க முன்வரும் எங்கள் தலைமீதா கல் எறிவது? பார்ப்பன அடிமைகளை, குண்டர்களை ஏவிவிட்டுக் கலகம் செய்ய முயற்சிப்பது? இந்த மானங்கெட்ட செய்கைகளுக்கு இனியுமா நாட்டில் இடமிருக்க வேண்டும்?

எனவேதான்,  மனிதன் தான் காணும் விஷயங்களில் உண்மையை அறிய வேண்டு-மானால் வாசகசாலைகள் பெருக வேண்டும். அவ்வித அரிய சேவையை இக்கழகத்தார் வெற்றிகரமாகச் செய்து வர வேண்டும் என்று ஆசைப்பட்டு வ.உ.சி. அவர்கள் பேரால் உள்ள இவ் வாசக சாலையைத் திறந்து வைக்க மனமுவந்து ஒப்புக்கொண்டேன்.
* * *
கம்பராமாயணத்தைப் பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. கம்பராமாயணம் தோன்றி இல்லாவிட்டால் நம் நாட்டின் கலை, ஒழுக்கம் கெட்டிருக்காது.

வால்மீகி இராமாயணத்தில் ஆரியர்களின் இழிவு நன்றாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. கம்பன் அவைகளை மறைத்து அவர்களைக் கடவுளாக்கிவிட்டான். கம்பராமாயணத்தைப் போற்றுகிறவர்கள் ஆரிய அடிமைகளாய்த்தானிருக்க முடியும் என்பதே எனது உறுதியான எண்ணமாகும்.

இராமன் ஒரு சகோதரத் துரோகி, அயோக்கியன் என்றும் கூறுவேன். தம்பியைத் துரோகம் செய்தவன் நாடு பரதனுக்கே உரித்தானதாக ஆக்கப்பட்டுவிட்டது என்பதை முன்னமே அறிந்திருந்தும், தசரதன் பட்டாபிஷேகம் செய்கிறேன் என்று கூறியபோது, இராமன் ஒப்புக்கொள்ளலாமா? அப்போதாவது தம்பி எங்கே என்று ஒரு வார்த்தையாவது கேட்டானா? சாதாரணக் குடும்பங்களில்கூட திருமணம் என்றால் அண்ணன் தம்பி எங்கே? பாட்டன் பூட்டன் எங்கே? தங்கை தமக்கை, உற்றார், உறவினரைக் கேட்கிறோமே. பரதனின் பாட்டனுக்குக்கூட கடிதம் எழுதவில்லை. இவைகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகின்றன.
பரதன் வருவதற்கு முன்னதாகவே பட்டாபிஷேகம் செய்துவிட வேண்டும் என்று தசரதன் அவசர அவசரமாக நாள் பார்த்தபோதுகூட, இராமன் ஏன் என்று தடுத்திருப்பானா? இந்தச் சூழ்ச்சியை வேலைக்காரி அறிந்து கொண்ட பிறகல்லவோ பரதனுடைய தாய்க்கு உண்மை தெரியவந்தது. இது எவ்வளவு படுமோசம்.

மகளைத் துரோகம் செய்வதும், தம்பியைத் துரோகம் செய்வதும் மட்டுமல்ல இராமாயணத்திலிருப்பது. ஒருவனுக்கு 60 ஆயிரம் பெண்டாட்டிகள். சென்னை நகர கார்ப்பொரேஷன் கூட போதாது இக்குடும்பத்துக்கு? இந்த அக்கிரமத்தை மகாயோக்கியன் என்று கூறப்படும் இராமனாவது கேட்டானா? அவன் எப்படிக் கேட்க முடியும்?

ஒரு பெண்ணின் மார்பையும், மூக்கையும் மானமின்றி அறுக்கத் துணிந்தவனுக்குப் பெண்ணின் பெருமையைப் பற்றி என்ன தெரிந்திருக்க முடியும்?

இப்பேர்ப்பட்ட காட்டுமிராண்டிகளைக் கடவுள் என்று கூறும் கம்பன் பித்தலாட்டக்-காரன் இல்லாமல், வேறு எவனாக இருக்க முடியும். அதேபோன்று அவன் எழுதி வைத்த இராமாயணத்தைப் போற்றித் திரிந்தவர்கள் கம்பனின் பித்தலாட்டத்துக்குத் துணை புரிபவர்கள் என்பதல்லாமல், எந்த வகையில் அவர்களை மக்கள் யோக்கியர்களாய்க் கருத முடியும் என்று கேட்கிறேன்.

எனவே, ந்த இராமாயணங்களையும், புராணங்களையும் நம்பினால் நம் நாட்டின் உயர்வும் மக்களின் ஒழுக்கமும் கெட்டுவிடும்.


நம் நாட்டுக்கும் மக்களுக்கும் இரு கண்கள் போன்றிருப்பது குறள். அரசியலார் முதல் மக்கள் வரை அதன்படி நடந்தால்,  நாடு விரைவில் முன்னேறும். அக்கிரமங்களும் அநீதிகளும் இன்றிருக்கும் சீர்கேடான ஆட்சி அலங்கோலங்களும் ஒழியும். அதிலும் சில குறைகள் இருக்கலாம்; அவைகளை நீக்கி நாம் நமது திருக்குறளைப் படித்து அதன்படி நடைமுறையிலும் இருப்போமானால் மீண்டும் நாம் உலகத்துக்கேகூட வழிகாட்டிகளாகவும், நாகரிகத்தை _ ஒழுக்கத்தைக் கற்பிக்கும் கர்த்தர்களாகவும் கூட விளங்கலாம்.

நான் புராணத்தை நம்புகிறவனல்ல என்றாலும், யாரையாகிலும் குறிப்பிடும்போது `எமன்' போல இருக்கிறான் `பிசாசு' போல இருக்கிறது `ஜம்'மென்று இருக்கிறது என்றெல்லாம் பேசுகிறோம். எமனைப் பார்த்தேனா அல்லது பிசாசோடு பழகினேனா இந்திர லோகத்தில் `ஜம்'மென்று வாழ்ந்தேனா, பழக்கத்தில் வரப்பட்ட சொற்களை நாம் வழங்குகிறோம். அதேபோன்று அக்காலத்துக்கு வள்ளுவர் சிலவற்றை உவமையாகக் காட்டியிருக்கக்கூடும். அவைகளை விட்டுவிட்டு இனிக் குறள்களையே படிப்போம், போற்றுவோம், அதன்படி நடப்போம் என்ற உறுதி உங்களுக்கு வேண்டும். ஆடு மாடு மேய்ப்பவனுக்குக்கூட இராமாயணம் பாரதம் தெரியும். இராசா சர்களுக்குக்கூட `குறள்' தெரியாது.

நமது பண்டைய பெருமையான ஏடுகள் அழிக்கப்பட்டன. ஆற்றில் எறியப்பட்டன. மிஞ்சியிருப்பவைகளுக்கு பார்ப்பானே அர்த்தமும், விளக்கமும் எழுதி வந்து-விடுகின்றான். அவன் நீதி சொன்னால், பகவான் சொன்னார், அசரீரி சொல்லிற்று. பார்வதிக்கு பரமசிவன் சொல்ல அதை நந்தி கேட்டிருந்து நாரதரிடம் கூற,  நாரதர் ரிஷியிடம் சொல்ல அதை தேசியப் பாஷையில் பிராமணோத்தமர்-களுக்குக் காதில் கூற அதற்கு நான் அர்த்தம் கூறுகிறேன். இதை நம்பு இல்லாவிடில் நரகம் என்று எழுதிவிடுகிறான்.

ஏன், வள்ளுவரையே பார்ப்பானுக்குப் பிறந்தவர் என்று எழுதியிருக்கிறதே! இன்னும் என்ன அக்கிரமத்திற்கு இவர்கள் துணியமாட்டார்கள்.

எனவே, இனியாவது நம்நாட்டின் அரசியல் முதல் மக்களின் ஒழுக்கம் வரை சீர்பட வேண்டுமானால் குறளைப் படியுங்கள். இராமாயணத்தைக் கொளுத்துங்கள். புராணப் பண்டிகைகளைக் கொண்டாடாதீர்கள்.


எனக்கு யார்மீதும் எந்தக் குறிப்பிட்ட வகுப்பார் மீதும் தனிப்பட்ட வெறுப்போ விருப்போ கிடையாது. இனிமேல், நான் ஒன்றும் பட்டத்துக்கோ ஆசைப்பட்டு வாழ வேண்டிய அவசியமுமில்லை, எண்ணமுமில்லை. எங்கள் இயக்கத்துக்கும் அத்தகைய கொள்கை கிடையாது.

எனவே, நம் திராவிட மந்திரிகள் மீதா எனக்குக் கெட்ட எண்ணம் உண்டாகப் போகிறது. அப்படி வேணுமென்றே யாராகிலும் துவேஷப் பிரச்சாரம் செய்தாலும்,  அதை நீங்கள் தான் நம்பலாமா? நமது மக்களும், நாடும் மந்திரிகளும் உள்ளபடியே தன்மானம் பெற்று எவருக்கும் அடிமைப்பட்டிருத்தல் கூடாதென்-பதற்காகவே இவைகளை எடுத்துக் கூறி வருகிறோம்.

ஒன்று மட்டும் உறுதி. நாங்கள் ஒழிந்தாலும் அடக்குமுறைக்கு இரையானாலும், தங்கள் கொள்கை மட்டும் வெற்றி பெற்றே தீரும் நீங்கள் உங்கள் வாழ்நாளில் இதைக் காணப்போகிறீர்கள்.

-------------------------- 7.11.1948 அன்று சென்னை சேத்துப்பட்டு வ.உ.சி. இளைஞர் கழகம் சார்பில் நடைபெற்ற நூல் நிலைய வாசக சாலையினைத் திறந்து வைத்து தந்தை பெரியார் ஆற்றிய உரை.- (விடுதலை 10.11.1948)

1.1.15

அறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் பொருந்தாத பித்தலாட்டம் வைகுந்த ஏகாதசி!



இன்று வைகுந்த ஏகாதசியாம்; இது வைணவர்களுக்கு உகந்த நாளாம். இன்று வைணவக் கோயில்களில் சொர்க்கவாசல் கதவைத் திறப்பார்கள்; விடியற்காலையில் பக்தர்கள் இந்த வாசல் வழியாகச் சென்று வந்தால் வைகுந்ததத்திற்கு  - அதாவது சொர்க்கத் துக்குப் போவதாக  அய்திகமாம்.
வைணவர்கள் இப்படி என்றால், சைவர்கள் போட் டிக் கடை வைக்க வேண் டாமா?


சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து விரதமிருந்து, சிவன் கோயிலுக்குச் சென்று வழி படுவார்கள்; அப்படி செல்லுபவர்கள் சிவலோகம் - அதாவது மோட்சத்திற்குச் செல்லுவார்களாம்.

வைகுந்த ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறந்து செல்பவர்களும், சிவராத்திரி யன்று விரதமிருந்து சிவன் கோயில்களுக்குச் செல்லும் பக்தர்களும் அப்படியே சொர்க்கத்திற்குப் போக வேண்டியதுதானே!  ஏன் வீட்டுக்குத் திரும்பி வருகி றார்கள்?


அப்படி செல்லு பவர்கள் திரும்பி வரக் கூடாது அப்படியே சொர்க் கத்திற்குச் செல்லுவார்கள் என்று கற்பனையாக ஒரு கதை கட்டி விட்டால் போதும்; ஒரு பக்தனாவது கோயிலுக்குச் செல்லுவானா?

சரி, கதைக்கு வருவோம்! என்ன அந்த வைகுந்த ஏகாதசி?

திரேதாயுகத்தில் முரன் என்ற பெயரில் ஒரு கொடிய அசுரன் இருந்தானாம். (எந்தப் புராணக் கதை, இதிகாசக் கதையை எடுத்துக் கொண்டாலும் ஓர் அசுரனோ, ஓர் அரக்கனோ வந்து விடு வான்; கதாநாயகன் பார்ப் பான் என்றால் வில்லன் அசுரனாக இருக்க வேண் டும் அல்லவா!)

முரன் என்ற அந்த அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமை கள் செய்தானாம் (தேவர்கள் என்றால் வேறு யார்? பார்ப்பனர்கள்தான்!) வழக்க மான கதை போலவே தேவர்களும், முனிவர்களும் திருமாலிடம் (அதாவது விஷ்ணுவிடம்) முறையிட் டனராம். (தீபாவளி கதையை எடுத்துக் கொண்டால் நரகா சுரன் என்னும் அரக்கன் தேவர்களுக்குக் கொடுமை கள் இழைத்தான் - தேவர் கள் விஷ்ணுவிடம் முறை யிட்டார்கள் என்று கதை வரும் - அதனையும் நினைவில் கொள்க!)

முரனுடன் போர் புரிய மகாவிஷ்ணு சங்கு சக்கரத் துடன் புறப்பட்டானாம். பல நாள் போர் நடந்ததாம் (ஓர் அரக்கனைக் கொலை செய்ய கடவுளே பல நாள் போரிட்டாராம் - அப்படி யென்றால் கடவுள் சக்தி எம்மாத்திரம் என்பதைத் தெரிந்து கொள்க!) நாள் தோறும் போர் முடிந்ததும் ஓய்வெடுக்க ஒரு குகைக்குச் சென்று விடுவாராம். அப்படி விஷ்ணு படுத்திருந்தபோது முரன் திடீரென்று அந்தக் குகைக்குள்ளேயே நுழைந்து விஷ்ணுவைத் தாக்கத் தொடங்கினானாம்.

அப்போது விஷ்ணுவின் உடலிலிருந்து ஒரு மகத்தான சக்தி பெண் வடிவத்தில் வெளிப்பட்டு அந்த அரக் கன் முன் வந்து நின்றாளாம். அவ்வளவுதான் அந்த அரக்கன் அந்தப் பெண் ணின் அழகில் மயங்கி வந்த காரியத்தை மறந்தானாம். (பெண்ணைக் கூட்டிக் கொடுத்துதான் ஒரு கடவுள் ஜெயிக்க வேண்டுமோ! இதுதான் பார்ப்பனர்களின் அணுகுமுறை தெரிந்து கொள்க!)

அரக்கன் மயங்கிய போது படைக் கலத்துடன் விசுவ ரூபத்துடன் தோற்ற மளித்த அந்தப் பெண் அரக்கனை அழித்தாளாம்!

அரக்கனைக்கொன்ற சக்தியே! ஏகாதசியன்று உனக்கு உனக்குத் திருநாமம் சூட்டுகிறேன்.

இந்த மார்கழி மாதத்தில் உன்னை நினைத்து வழிபடுபவர்களுக்கு வைகுண்ட பதவி அளிப்பேன் என்றானாம் கையாலாகாத விஷ்ணு.

அறிவுக்கும், ஒழுக்கத் துக்கும் பொருந்தாத இந்தப் பித்தலாட்டம்தான் வைகுந்த ஏகாதசியாம்! அய்யய்யோ எழுதவே கை கூசுகிறதே!

----------------------- மயிலாடன் அவர்கள் 01-01-2015 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

31.12.14

பார்ப்பான் அவற்றைத் துதிக்கிறான் என்றால் நாம் எரிக்க வேண்டாமா?

மூலபலத்தோடு மோதுக!



பி.ஜே.பி.யினராக இருக்கட்டும், அவர்களில் அப்பனும் அம்மையுமான ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார்களாக இருக்கட்டும் - இவர்கள் வாய் திறந்தாலே நாராசம்தான் - நறநற என்று பற்களைக் கடித்துக் குதறும் குருரப் போக்குதான்.பிஜேபியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிரஞ்ஜன்ஜோதி பேசியதும் இந்த அடிப்படையில்தான்.

டில்லி - சட்டப் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது - டில்லியை ஆளப் போவது ராமன் மகனா? முறைகேடாகப் பிறந்தவனா? என்ற வினாவை எழுப்பி யிருக்கிறார்.

இந்த அம்மையாருக்கு ஓர் உண்மை தெரியாது. இவர் குறிப்பிட்ட ராமனே முறையாக தசரதனுக்குப் பிறந்தவனில்லை என்ற சேதி தெரியுமா?

சி.ஆர். சீனிவாசய்யங்காரால் வால்மீகி இராமாயணத்திலிருந்து மொழி பெயர்க் கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்களைப் புரட்டிப் பார்க்கட்டும்.
ராமன் பிறப்பின் வண்டவாளம் என்ன என்பது வண்ண வண்ணமாகப் புரியும்.
வெட்டுண்ட குதிரைகளுடன் ஓர் இரவு முழுவதும் தசரதனின் பத்தினிமார்கள் கழித்தனர் என்கிற ஆபாசத்தை எல்லாம் எடுத்து விட்டால் குமட்டிக் கொண்டுதான் வரும்.

இந்த ராமப் பக்தர்களா  - முறைகேடாகப் பிறப்பதைப்பற்றிப் பேசுவது?

இந்த லட்சணத்தில் ராமன் என்பவன் ஏதோ உத்தமப்புத்திரன் போலவும், மற்றவர்கள் எல்லாம் முறையற்ற முறையில் பிறந்தது போலவும் கதைப்பது புரியாத்தனமே!

ஆர்.எஸ்.எஸில் பெண் பேச்சாளர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் சாத்வி ரிதம்பரா;  என்ன பேசினார் தெரியுமா?

இந்து ஆண்களே, முஸ்லிம் பெண் களைக் கர்ப்பிணி ஆக்குங்கள்; அவர்கள் வயிற்றில் இந்துக் கரு ஜெனிக்கட்டும் - என்று பேசவில்லையா? மத்திய பிரதேசத்தில் ஜாபுலா கிராமத்தில் கிறித்தவர் நடத்தி வந்த மருத்துவமனையில் நள்ளிரவில் புகுந்த பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள், (பஜ்ரங் என்றால் அதன் பொருள் குரங்கு - பொருத்தமானதுதான்) அம்மருத்துவ மனையில் பணியாற்றிய கன்னிகாஸ்திரி களை கதறக் கதற பாலியல் வேட்டை நடத்தினரே! 

பிஜேபியின் மக்களவை உறுப்பினரான பைகுந்தலால் சர்மா என்ன சொன்னார்? தேச விரோத சக்திகளுக்கு எதிரான தேசப் பற்று மிக்க இந்து இளை ஞர்களின் கோபம் என்றாரே!

இவற்றையெல்லாம் விட்டுத் தள் ளுங்கள். இன்றைய பிரதமரும் அன்றைய குஜராத் முதல் அமைச்சருமான நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ன பேசினார் என்று நினைவிருக்கிறதா?


குஜராத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக அரசப் பயங்கரவாதமாக வன் முறை ஏவப்பட்ட நிலையில் ஆயிரக்கணக் கான இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப் பட்டனர். கர்ப்பிணிப் பெண்களின் குடல்களும் கிழிக்கப்பட்டன; தந்தை முன் மகளும், சகோதரன் முன் தங்கைகளும் பதறப் பதற வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். அதைப்பற்றி எல்லாம் எழுத ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது - போதவே போதாது.

வாழ்க்கையே கேள்விக்குறியாகி அகதி முகாம்களில் முஸ்லிம்கள் குவிந்தனர்.

அந்த நேரத்தில்கூட தாம் ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சர் என்பதைக்கூட மறந்து, நாலாந்தர நிலையில் நாப்பறை கொட்டினாரே மோடி?

முசுலிம்கள் முகாம்களில் இனப் பெருக்கம் செய்து கொண்டுள்ளனர்! என்று கூறவில்லையா? அவர் மறுப்பதற்கு முன்பே அவர் பேச்சு ஒலி நாடாவாக வெளியிலே வந்து விட்டதே!

இந்த இந்துத்துவாவாதிகளுக்கு மூலாதாரம் கீதையும், மனுதர்ம சாஸ்திரம் தானே?

பிராமணர்கள் பிர்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் என்றும் சூத்திரர்கள்  பிர்மாவின் பாதங்களில் பிறந்தவர்கள் என்றும், இந்தச் சூத்திரன் யார் என்றால் விபசாரி மக்கள் என்றும் இவர்களின் மனுதர்ம சாஸ்திரம் கூறவில்லையா? (அத்தியாயம் 8 - சுலோகம் 415).

இந்தியப் பிரதமர் சீனா சென்றாலும் அங்குள்ள அதிபரிடம் இந்திய மக்களின் பரிசாக எதனைக் கொடுக்கிறார்? கீதையைத்தானே கொடுக்கிறார்.

அந்தக் கீதையில் கிருஷ்ண பரமாத்மா என்ன சொல்லி வைத்துள்ளார்?

பெண்களும், வைசியர்களும், சூத்திரர் களும் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று கீதையிலே கூறப்பட்டுள்ளதே!!  (கீதை அத்தியாயம் 9 - சுலோகம் 32).

இப்படி சொன்னவர்களை எல்லாம் கடவுள்களாக ஏற்றுக் கொண்டு, பூமாலை சூட்டி பூஜை புனஷ்காரங்கள் செய்ய வில்லையா?

நிரஞ்ஜன் ஜோதி போன்றவர்கள் இப்படித்  தரம் தாழ்ந்து பேசுவதற்கு மூலகாரணமே அவர்கள் மதிக்கும் மூலவர்களான கடவுள்களின் இத்தகைய அ(ம)ருள் வாக்குகள்தான்.

கீதையை முட்டாளின் உளறல் என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னார். மனுதர்மத்தை தந்தை பெரியாரும் எரிக்கச் சொன்னார் - அம்பேத்கரும் அவ்வாறே சொன்னார்.

கயமையாகப் பேசியவர்கள் கடவுள்கள் என்றும் ஆபாசமாகப் பேசியவர்கள் ஆண்டவன் என்றும் நம்பிக் கொண்டு இருக்கும்வரை  இன்னும் என்னென்ன இழிவு மூட்டைகளைச் சுமந்து திரிய வேண்டுமோ?

மூலபலத்துடன் போர் புரிவதுதான் தந்தை பெரியார் அவர்களின் போர் முறை என்றார் அறிஞர் அண்ணா.

அந்த மூலம் என்பது இந்து மதத்தின் வேதங்களும், இதிகாசங்களும் (சுருதிகளும், ஸ்மிருதிகளும்) தான்.

இவற்றில் கை வைத்தாலொழிய நம்மீது திணிக்கப்பட்டுள்ள இழிவு ஒழியப் போவதில்லை; உண்மையைச் சொல்ல வேண்டுமானால் இந்துத்துவாவை எதிர்ப் பதில் ராமராஜ்யம் அறிவிப்பை ஆக்ரோசமாக எதிர்ப்பதில் முண்டா தட்டி முன்வரிசையில் நிற்க வேண்டியவர்கள் முஸ்லிம்கள்,  கிறித்தவர்களான சிறுபான்மை யினரை விட, இந்து மதத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிற தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும்தான். ஏன் உயர் ஜாதியினரான பார்ப்பனர் அல்லாதவர்கள் கூட இந்துத்துவாவை எதிர்ப்பதில் ஓரணி யில் நிற்க வேண்டியவர்களே!

இந்துத்துவாவில் இவர்கள் அத்தனைப் பேரும் சூத்திரர்கள்தானே! இவர்கள் இத்தனைப் பேரும் இந்துக் கோயில் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்ய அருகதையற்றவர்கள் தானே? இவர்கள் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகி விடுமாம் - தோஷம் ஏற்பட்டு விடுமாம்.

இதனை உச்சநீதிமன்றம் சென்று இன்று வரை சொல்பவர்கள் பார்ப்பனர்கள்தானே!

பார்ப்பான் இந்து மதத்தைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறான் என்றால் இந்து மதத் தத்துவப்படி அவன் பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் - பிர்மா இந்தப் பூமியைப் படைத்ததே பிராமணர்களுக்காகத் தான் என்று கூறுவதுதான் மனுதர்மம். அந்த மனுதர்மம் நம்மைச் சூத்திரன் என்று சொல்லும் பொழுது வேசி மக்கள் என்று கூறும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
பார்ப்பான் அவற்றைத் துதிக்கிறான் என்றால் நாம் எரிக்க வேண்டாமா? அதற்குள்ளிருக்கும் நியாயம் இதுதானே? சிந்திப்பீர்.

------------------ மின்சாரம் 6-12-2014 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை
Read more: http://viduthalai.in/page-1/92414.html#ixzz3L89CrIlD

30.12.14

பிஜேபி - சங்பரிவார் கும்பலின் ஆபத்தான பாசிசப் பயணம்!


  • முற்போக்குத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு 
  • நாவல் எரிப்பு
  • கோட்சேக்குக் கோயில்
  • கல்வியாளர்களுக்கு அச்சுறுத்தல் நாளும்!

பிஜேபி - சங்பரிவார் கும்பலின் ஆபத்தான பாசிசப் பயணம்!

காந்தியார் நினைவு நாளை மதவெறி எதிர்ப்பு நாளாக நடத்துவோம்!

அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளே தயாராவீர்!
தமிழர் தலைவர் ஆசிரியர் விடுக்கும் அழைப்பு அறிக்கை


 தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் கருநாடகத்திலும், கேரளாவிலும் நதிகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவதா?  - கண்டன ஆர்ப்பாட்டம்!
மத்தியில் பாசிச பார்ப்பனீய ஹிந்துத்துவ ஆட்சி வந்து விட்டது என்ற தைரியத்தில் சங்பரிவார்க் கும்பல் ஹிந்துத்துவப் பாசிச நெருப்பைக் கையில் எடுத்துக் கொண்டு வெறியாட்டம் போடும் நிலையில், காந்தியாரின் நினைவு நாளை (ஜனவரி 30) மதவெறி எதிர்ப்பு நாளாக நடத்து வோம் என்று முற்போக்கு - ஜனநாயக சக்தி களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் 7 மாத கால ஆர்.எஸ்.எஸ். ஆட்சி, ஜனநாயகத்திற்கு - மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக  விடை கொடுக்கும் யதேச்சாதிகார - பாசிச ஆட்சியாக மாறி வருகிறதோ என்ற அய்யம் நாட்டில் உள்ள நடுநிலையாளர்களுக்கு கட்சிகளுக்கு அப்பாற் பட்டவர்களுக்கும் புரியத் தொடங்கி விட்டது!

பாசிச நடவடிக்கைகள்

இந்திய அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் செய்த இவர்கள், அதன் முக்கிய அடித்தளத்தையே அகற்றிடும் வகையில் ஓர் இந்து இராஜ்ய பாசிச நடவடிக்கைகள் - முழு வீச்சில் துவங்கி, பல்வேறு முனைகளில் நாட்டின் பல பகுதிகளில் பரவ - குஜராத் முன்னிலையில் உள்ளது.

”பி.கே.” என்ற இந்தித் திரைப்படத்துக்கு எதிர்ப்பாம்

இன்று ஏடுகளில் வந்துள்ள மூன்று, நான்கு முக்கிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.

1.  P.K.  என்ற ஒரு ஹிந்தி திரைப்படம் மிகவும் பிரபல மாக ஓடிக் கொண்டுள்ளது.

விண்வெளியில் (Alien)  இருந்து வரும் ஒருவன் நம் கடவுள்களைப் பார்த்து வியப்பது, கடவுள் பெயரால் நடக்கும் புரட்டு - மோசடி வித்தைகள் - இவைகளைக் கண்டு தொடுக்கும் கேள்விகளால் நகைச் சுவை உணர்வுடன் இப்படம் அமைந்துள்ளது என்று அத்தனை திரைப்பட விமர்சகர்களும் எழுதியுள்ளனர்.

அத்வானியும் பாராட்டுகிறார்

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும்,ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்பால் ஒதுக்கி ஓரங்கட்டப்பட்டவருமான எல்.கே. அத்வானி அவர்கள் இப்படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து மிக நேர்த்தியான, துணிச்சலுடன் எடுக்கப்பட்ட திரைப்படம் என்று வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

(BJP’s Seniormost Politician L.K. Advani had praised ‘PK’ as a wonderful Courageous film” Last Week - Times of India 30.12.2014)

முறைப்படி தணிக்கைக் குழுவின் சான்றிதழ் பெற்று சென்னை உட்பட பல நகரங்களில் ஓடிக் கொண்டிருக்கும் இத்திரைப்படம் பல கோடிக்கணக்கில் வசூலை அள்ளும் - அதாவது மக்கள் ஆதரவு பெற்று ஓடும் இத்திரைப் படத்துக்கெதிராக பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரமான ஆகமதாபாத்திலும் மத்தியப் பிரதேச  (அங்கும் பா.ஜ.க. ஆட்சி) தலைநகர் போபாலிலும் தலைநகர் டில்லியிலும் இத்திரைப்படம் ஓடும் பல திரையரங்குகள்மீது தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.


என்றாலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத் ஆகிய அமைப்புகள் 24 மணி நேரத்திற்குள், இந்து மத விரோத கருத்துக் காட்சிகளை உடனடியாக அகற்றிவிட்டு படத்தை ஓட்ட வேண்டும் என்று காலக் கெடு கொடுத்து மிரட்டியுள்ளனர்.


இவர்கள்மீது காவி ஆட்சிகள் கடும் நடவடிக்கை எடுத்து, சட்டம் ஒழுங்கை பராமரிக்கத் தவறியுள்ளார்கள்!


ஜனநாயகத்திற்கே உரித்தான கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளை நெறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்து அராஜக செயல்களுக்குக் கண் ஜாடை காட்டுவது! போல் நடந்து கொள்வது மகாவெட்கக் கேடு அல்லவா!


இஸ்லாமிய பேராசிரியர்களுக்கு அச்சுறுத்தல்


2. அகில இந்திய ஒரியண்டல் மாநாடு (AIOC) என்பது 1919 முதல் கல்வி அறிஞர்கள் பல்வேறு கீழ்த் திசைப் பகுதிகள் பற்றிய ஆய்வுக்காக கூடி விவாதிக்கும் மாநாடு.


பல நாடுகளிலிருந்தும் வந்து இந்த ஆய்வரங்க மாநாட்டில் கலந்து  ஆய்வுரைகளை நடத்துபவர்கள் - அறிஞர்கள், கல்வியாளர்கள்!
மகாராஷ்டிர - பூனேயில் - பிரபல வரலாற்று ஆய்வு மன்றம், பண்டர்கர் ஆய்வுக் கல்வியகம் (Bhandarkar Institute) அதைத் தாக்கி, அங்கு சில ஆண்டுகளாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பார்ப்பன - ஹிந்துத்துவ முக்கிய ஆவணங்களைப் பறித்தும், எரித்தும் மதவெறியை நடனமாட விட்டு வேடிக்கை பார்த்துள்ளனர்.


அந்த மாநாடு 2015 ஜனவரி 2 முதல் 4ஆம் தேதி வரை  (அடுத்த வாரம்) அசாம் கவுஹாத்தியில் நடைபெற விருக்கிறது.

அதில், அலிகார் முஸ்லீம் பல்லைக் கழகத்தி லிருந்து வரும் ஏழு பேராசிரியர்கள் - ஆய்வாளர்கள் வந்து கலந்து கொண்டால் அவர்கள் உயிருடன் திரும்பிப் போக மாட்டார்கள். இது உறுதி என்று  மாநாடு நடத்துவோருக்கு மிரட்டல் கடிதம் ராஷ்டிரிய ஹிந்து சேனா என்ற அமைப்பு, பாரத் விச்சார் சாதனா பப்ளிகேஷன்ஸ், ஆர்.எஸ்.எஸ். சங் காரியாலயா நாக்பூர் என்ற முகவரியிட்டு அனுப்பப்பட்டுள்ளது.


அந்த அறிஞர்கள் அங்கு செல்லத் தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது!
‘Muslim scholars drop out of oriental meet threats were allegedly sent by Rastriya Hindu Sena’
(- ‘The Hindu’ (30.12.2014) 13ம் பக்கம்)

கோட்சேக்குக் கோயிலாம்!


3. அதே பக்கத்தில் அதே ஹிந்து நாளேட்டில் (ஆங்கிலம்) இன்று (30.12.2014) கோட்சேக்குக் கோயில் கட்ட லக்னோவில் இடம் தேர்வு செயயப்பட்டு விட்டது என்ற தலைப்பில் இரண்டு காலச் செய்தி!

‘Our plan is to install Godse’s bust at the site before January 30, which we will celebrate as ‘Shaurya Diwas’ to honour the ‘martyr’ (Godse)...

மிகப் பெரிய தியாகியான கோட்சேவுக்கு 2015 ஜனவரி 30க்குள் மார்பளவு சிலை வைக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம். காரணம் அந்த ஜனவரி 30  - காந்தியை கோட்சே (மராத்திப் பார்ப்பனர்) சுட்டுக் கொன்ற நாள் -சௌர்ய திவரஸ் நாளாம்!

மீரட் மற்றும் சித்தாபூரையடுத்து லக்னோவிலும் இதற்கான ஏற்பாடு நடப்பதாகக் கூறுகிறது. (இந்து மகாசபையை 1914இல் நிறுவியர்களில் முக்கியமான ஒருவர்தான் அண்மையில் மோடி அரசால் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட வர்ணாசிரமவாதி  பண்டித மதன்மோகன் மாளவியா என்ற பார்ப்பனர்)

நாவலை எரிக்கும் நாச காலிகள்


4. திருச்செங்கோடு கோயில் பக்தி - நடப்புகளை பின்னணியாகக் கொண்ட மாதொருபாகன் அர்த்த நாரீஸ்வரர் என்ற ஹிந்து கடவுள் ஆண் பாதி பெண் பாதி என்ற புராண வரலாறு கொண்ட திருவிழாவை மய்யப்படுத்தி நூல் ஒன்றை எழுதியுள்ளார் பெருமாள் முருகன் என்ற தமிழ் எழுத்தாளர்.

இந்தப் புதினம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், இப்போது அங்குள்ள சில காவியினர் (ஆர்.எஸ்.எஸ். காலிகள்) அப்பாவிப் பக்தர்களையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டு  அப்புத்தகத்தை எரித்தும், கண்டன ஊர்வலம் நடத்தியும் இப்புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசை மிரட்டி யுள்ளனர்!


நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வராத கோபம் - ஆத்திரம் - மனம் புண்படுகிறது என்று திடுக்கென்று இப்போது குதிப்பது ஏன்?

புரியவில்லையா? - மத்தியில் தங்கள் ஆட்சி - பிரதமர் மோடி ஆட்சி இருக்கிறது என்ற துணிச்சல்தானே?


இப்படி பார்ப்பன மதவெறி ஹிந்துமத அமைப்புகள் மீண்டும் சனாதனத்திற்குச் சடகோபம் சாத்திடவே, காலிகளையும், கூலிகளையும் பிடித்து இப்படிப்பட்ட அராஜக வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்!


இவர்கள்மீது உரிய நடவடிக்கை தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக எடுக்க முன் வர வேண்டும்.

விரைவில் அந்தப் புதின எழுத்தாளர் திரு. பெருமாள் முருகனுக்கு- கருத்துரிமை எழுத்துரிமையைப் பாதுகாக்கும் வகையில் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்திடவும் பரப்புரை செய்யவும் திராவிடர் கழகம் தயங்காது!

பாசிசத்தை நோக்கிப் பயணம்

இப்போது பாசிசத்தை, யதேச்சாதிகாரத்தை நோக்கி மோடிஆட்சி காரணமாக நாடு செல்வதைத் தடுக்க அனைத்து முற்போக்கு - ஜனநாயக சிந்தனையாளர்களும், கட்சிகளும், இயக்கங்களும், அமைப்புகளும் ஓர் அணியில் திரள வேணடும்.

காந்தியார் நினைவு நாளை மதவெறி எதிர்ப்பு நாளாக நடத்துவோம்!

ஜனவரி 30 காந்தியாரின் நினைவு நாளை - மதவெறி ஒழிப்பு நாளாக நடத்துவோம் நாடு முழுவதும் - ஆயத்தமாவீர்!

-------------------கி.வீரமணி   தலைவர்,   திராவிடர் கழகம் சென்னை 30-12-2014