Search This Blog

24.9.12

காந்தி ஜயந்தி பற்றி பெரியார்



கிருஷ்ண ஜயந்தி ஒழிந்து 8 நாள்கூட ஆகவில்லை. அதற்குள் காந்தி ஜயந்தி தோன்றிவிட்டது. “தட்டிப்பேச ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்” என்பது போல் ஜனங்களின் மூடத்தனத்தை ஆயுதமாக வைத்துக் கொண்டு அநேக அக்கிரமங்கள் நாட்டில் நடைபெறுகின்றன.

தோழர் காந்தியவர்கள் இந்திய அரசியலில் தலையிட்டு இன்றைக்கு ஏறக்குறைய 15 வருஷங்கள் ஆகின்றன. இந்தப் பதினைந்து வருஷ காலங்களில் அவர் கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்து செலவு செய்யச் செய்தார். பதினாயிரக்கணக்கான நபர்களை அடி, உதை, வசவு முதலியவைகள் படச்செய்தார். 40 ஆயிரம் 50 ஆயிரக்கணக்கான பேர்களை சிறை செல்லச் செய்தார். இந்திய அரசியல் உலகில் மிதவாதிகள், அமித வாதிகள், ஜஸ்டிஸ்காரர்கள், இந்து, முஸ்லீம்கள், சீக்கியர்கள் முதலிய எல்லாக் கூட்டத்தாரிடமும் சர்வாதிகாரப் பட்டமும் பெற்றார். மேல்ஜாதிக்காரர்கள், ஏழைகள், பணக்காரர்கள் முதலிய எல்லோருக்கும் தாமே தர்ம கர்த்தாவாக கருதப்பட்டார். காங்கிரஸ் ஸ்தாபனம் என்பதைத் தனது கால் சுண்டுவிரலால் மிதித்து அடக்கித் தனது இஷ்டம் போல் ஆட்டிவைத்தார் என்கின்றதான பெருமைகளை எல்லாம் பெற்றவர் என்பவராவார்.

அன்றியும் (ஆத்மா என்பதாக ஒன்று உண்டா? இல்லையா? என் கின்ற வாதம் தலை நிமிர்ந்து நிற்கின்ற காலத்தில்கூட) பெரும்பான்மை மக்களால் மகாத்மா என்று கொண்டாடப் படும்படியாகவும் செய்துகொண்டார்.

இன்னும் அநேக காரியம் செய்தார் என்றும் வைத்துக்கொள்ளலாம். இவையயெல்லாம் சாதாரண (அதாவது சராசரி) மனிதனால் செய்துகொள்ள முடியாத காரியம் என்றும் ஒப்புக்கொள்ளுவோம். ஆனால் இவ்வளவு செய்தும் இவ்வளவு சக்திஉடையவராய் இருந்தும், இவ்வளவு பெருமை பெற்றும் இவரால் மனித சமூகத்துக்கு நடந்த காரியம் என்ன? இதனால் எல்லாம் ஏற்பட்ட பலன் என்ன? என்பதே அறிவியக்கக்காரர்கள் கவனிக்க வேண்டிய விஷயம். இதுஒருபுறமிருக்க,

இப்போது அப்படிப்பட்ட காந்தியாரின் ஆட்ட பாட்டமெல்லாம் அடங்கி கடைசியில் “எல்லாம் கடவுள் செயலில்” வந்து நின்று “எனக்கு ஒன்றும் புரியவில்லையே” “என்னை இருள் சூழ்ந்து கொண்டதே” “மேலால் என்ன செய்வது என்பது எனக்கு விளங்கவில்லையே” “கடவுள் ஒரு வழிகாட்ட வேண்டியிருக்கிறதே” என்கின்ற பல்லவியில் வந்து விட்டார்.

இவ்வளவோடு மாத்திரமல்லாமல் அவரிடம் உள்ள கடைசி ஆயுதத்தையும் காட்ட ஆரம்பித்துவிட்டார். அதாவது பொதுவுடமைப் பூச்சாண்டியைக் காட்டுவது. எப்படியெனில் தன் வாயால் ஒன்றும் சொல்லாமல் தன்மீது எவ்வித பொறுப்பும் போட்டுக்கொள்ளாமல் தோழர் ஜவகர்லால் அவர்கள் வாயினால் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசுவதன் மூலம் பொதுவுட மையை ஜாடைகாட்டச் செய்து ஓரளவுக்கு அதை ஒத்துக்கொள்ளுவது போல் (பின்னால் எப்படி வேண்டுமானாலும் பேசுவதற்கு இடம் வைத்துக் கொண்டு) பேசி சர்க்காரை மிரட்டுகிறார்.

அதாவது தன்னுடன் சர்க்கார் ராஜிக்கு வரவில்லையானால் “பொது வுடமைக் கிளர்ச்சிக்கு இடம் கொடுத்து விடுவேன்” என்கின்ற ஜாடை. இதைப் பற்றி மற்றொரு சமயம் விவரிப்போம்.

இதை ஏன் அடிக்கடி சொல்லுகிறோம் என்றால் தோழர் காந்தியார் முன்பு பட்டினியினிமித்தம் வெளி வந்து பூனா மகாநாடு நடத்தி விட்டு மறு படியும் தனிப்பட்ட சத்தியாக்கிரகம் செய்து சிறை செல்லும் போது சர்க்கா ருக்குக் கொடுத்த ஒரு ஸ்டேட்மெண்டில் இதே மாதிரி சர்க்காரை மிரட்டு வதற்குப் பொதுவுடமை ஜாடையை உபயோகித்துக் கொண்டார்.

அதாவது “ஜனங்களிடம் நான் கலந்து பார்த்ததில் மேல் ஜாதிக் காரருக்கும், கீழ்ஜாதிக்காரருக்கும், பணக்காரருக்கும், ஏழைகளுக்கும், பெண் களுக்கும், ஆண்களுக்கும் இடையில் சீர்கெட்டு இருக்கிறதாக அறிந்தேன். இதனால் சொத்துக்கும், உயிருக்கும் ஆபத்து வந்து விடுமோ என்று அவர வர்கள் பயப்படுகிறார்கள். இந்த சமயத்தில் அஹிம்சாவாதியான நான் ஜெயிலில் இருப்பதே முறை” என்று சொல்லியிருக்கிறார். இதற்கு ராஜ கோபாலாச்சாரியாரும் ஒத்துப்பாடி இருக்கிறார்.

இப்பொழுது ஜெயிலில் இருந்து வந்த பிறகும் முன்காட்டியபடி தோழர் ஜவகர்லாலின் பொருளாதாரத் திட்டத்தை ஒப்புக்கொள்ளுவ தாகவும் ஆனால் அவ்வளவு தூரம் போக முடியாதென்றும் சொல்லுகிறார். எவ்வளவோ முக்கியமானதும் அவசியமானதும், கட்டாயம் நடந்து தீர வேண்டியதுமான ஒரு கொள்கையைக் காரியத்தில் நடத்துவிக்கின்றதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யாமல் அல்லது அதுசெய்ய முடியாவிட்டால் பேசாமல் வாயை மூடிக்கொண்டாவது இருக்காமல் அதை வீண்மிரட்டலுக் கும் தனது சுயநலத்துக்கும் உபயோகப்படுத்தி “அதில் பலாத்காரம் வந்து விடும் ரத்தக்” களரி ஏற்பட்டுவிடும் என்றெல்லாம் பேசி கெடுக்கச் செய்வது என்றால் யார் தான் இச்செய்கையை பொருக்கமுடியும்?

அன்றியும் மனித சமூகத்திய இயற்கை சக்திகளையெல்லாம் பாழாக்கி இயற்கையான வழிகளையெல்லாம் அடைத்துச் செல்வவான் களையும், சூட்சிக்காரர்களையும் (பார்ப்பனர்களையும்) சுவாதீனப்படுத்திக் கொண்டு காரியத்துக்கு உதவாத வழிகளில் மக்களைத் திருப்பி மனித சமூகத்தைப் பாழாக்கி வைத்த பெருமையை என்றென்றும் கொண்டாடு வதற்கு அறிகுறியாய் காந்தி ஜயந்தி வருஷா வருஷம் கொண்டாடுவ தென்றால் இதன் அக் கிரமத்திற்கு எப்படித்தான் பரிகாரம் செய்வது என்பது நமக்கு விளங்க வில்லை. தோழர் காந்தியாருக்கு இன்று ஜயந்தி கொண்டாடு வதற்கு வேண்டிய யோக்கியதை வந்ததற்குக் காரணம் (இவரால் இதுவரை மக்களுக்கு யாதொரு பயனும் ஏற்படவில்லை என்றாலும்) பார்ப்பனர் களுக்கு அனுகூலமாய் இருந்து வந்த காரணமே ஜயந்தி கொண்டாடும் யோக்கியதையை சம்பாதித்து கொடுத்து விட்டது. நமது நாட்டுப் பார்ப்பனர் களுக்கு இருக்கும் அபார சூழ்ச்சித் தன்மைக்கும் அற்புத புரட்டுத் தன்மைக்கும் இந்த காந்தி ஜயந்தி ஒரு பெரும் உதாரணமாகும். இன்று ஜயந்தி கொண்டாடத்தக்க “பெரியார்கள்” எல்லாம் இந்த யோக்கியதை அடைந்தவர்கள் தான் என்பதும் விளக்க இது ஒரு உதாரணமாகும்.

கம்ப ராமாயணத்தில் ஆரம்பத்தில் கம்பன் பார்ப்பனர்களுக்குச் சொன்ன காப்பு விருத்தத்தின்படியே தோழர் காந்தியாரும் பார்ப்பனர்களை உயர்த்தி அவர்களுக்கு அடி பணிந்து வந்ததாலேயே இன்று காந்தி ஜயந்தி நடந்து வருகிறது. அதாவது,

“உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்,

நிலை பெறுத்தலும் நீங்கலு நீங்கிலா,

அலகிலா விளையாட்டுடையா ரவர்,

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”

என்ற பாட்டுப்பாடியே தூணைத் துரும்பாக்கவும், துரும்பைத் தூணாக் கவும் உள்ள பார்ப்பன சக்தியில் இன்று எவ்வளவோ காரியங்கள் அஸ்தி வாரம் சிறிதுகூட இல்லாமல் நடந்துவருகிறது. அதில் ஒன்றுதான் இந்த காந்திஜயந்தி. இதுபோலவே மற்றொரு விஷயம் என்னவென்றால்,

தோழர் அன்னிபெசண்டம்மையார் செத்து பத்து நாள்கூட ஆக வில்லை. ஆனாலும் அந்தம்மையாரின் சூக்ஷம சரீரம் அதற்குள் பூலோக ஜனங்களோடு பேச ஆரம்பித்து விட்டது. இந்த அம்மையாருக்கும் இவ்வளவு யோக்கியதை ஏற்பட்டதின் காரணம் அந்தம்மாளும் பார்ப்பனீய தாசராய் இருந்து பார்ப்பனப் பிரசாரம் செய்து வந்து செத்ததேயொழிய வேறு ஒன்றுமில்லை.

தவிர, தோழர் காந்தியாருக்கு ஜெயந்தி கொண்டாடும் விஷயத்தில் பார்ப்பனரல்லாத மக்களுக்கு கடுகளவு புத்தியோ சுயமரியாதை உணர்ச்சியோ இருந்திருக்குமானால் பார்ப்பனரல்லாதார் இதில் கலந்து கொள்ளமுடியுமா? என்பதை வாசகர்கள் தான் யோசித்துப் பார்க்க வேண்டும். ஜாதி பாகுபாடு (வருணாச்சிரமம்) விஷயத்தில் தோழர் காந்திய வர்கள் பார்ப்பனரல்லா தாருக்கு நிரந்தர இழிவை உண்டாக்கி இருக்கும் விஷயமும், ஹரிஜன இயக்கம் என்னும் பேரால் செய்துவரும் சூட்சியும் பார்ப்பனரல்லாத மக்கள் தெரியாது என்று சொல்லிவிடமுடியாது. வருணாச் சிரம தர்மத்தை ஆதரிப்ப தினாலும் உறுதிப்படுத்துவதினாலும் பார்ப்பன ரல்லாதார் நிலை என்னவா கின்றது?

அன்றியும் “ஹரிஜன முன்னேற்ற” விஷயத்தில் காந்தியார் தனது வாக்கு மூலத்தில் குறித்தது என்னவென்றால்,

“கோவில், குளம், கிணறு, பள்ளிக்கூடம் முதலியவைகளில் பிராமணரல்லாதவர்களுக்கு ஏற்பட்டுள்ள சலுகைகள் அனைத்தும் தீண்டப் படாத வர்களுக்கு ஏற்படவேண்டும்”.

“இதுவரை தீண்டப்படாதவர்களாகக் கருதப்படுபவர்கள் இனி சூத்திரராகக் கருதப்படுவார்கள்”

“தீண்டாமை ஒழிந்தபின் பிராமணர்களுக்கும் தீண்டாதவர்களுக்கும் எப்படிப்பட்ட சம்மந்தம் எப்படிஇருக்குமென்றால் பிராமணர்களுக்கும், பிராமணரல்லாதார்களுக்கும் இருந்துவரும் சம்மந்தம் போலிருப்பார்கள்”.

“வருணாச்சிரமதர்மத்தை மதத்தின் தத்துவக் கொள்கைகளுக்கு ஏற்றபடி சீர்திருத்தம் செய்யப்படவேண்டும்”

என்று சொல்லியிருக்கிறார்.

இது “ஜெயபாரதி” என்னும் பத்திரிகையின் காந்தி ஜெயந்தி மலர் 9ம் பக்கத்தில் காந்தியாரின் வாழ்க்கைச் சம்பவ நிகழ்ச்சி என்ற தலைப்பின் கீழ் எடுத்துக் காட்டப்பட்டிருக்கிறது.

இதைப்பற்றி முன்பு ஒருதடவை எழுதியும் இருக்கிறோம். பார்ப்பன ரல்லாத தேசீயவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இரண்டொருவர்கள் இடமும் இதைப்பற்றிப் பிரஸ்தாபித்தும் இருக்கிறோம். ஆனால் அவர்கள் தேசம் பெரியதேயொழிய தேசத்தில் தன்னுடைய நிலைமை எப்படி இருந்தாலும் கவலை இல்லை என்ற உணர்ச்சி உள்ளவர்கள் போலவே காட்டிக்கொண்டார்கள்.

மானத்தை விற்று மனிதத்தன்மையை இழந்து வாழ்ந்து தீரவேண்டிய அளவு சோம்பேறிகளும், கோழைகளுமானவர்களுக்குத் “தேசம் பெரிது” என்கின்ற சாக்கு ஒரு உற்ற தோழனாய் இருந்து வருகின்றது, வந்தும் இருக்கிறது என்று கருதிக்கொண்டு அந்த சம்பாஷணையை நிறுத்திக் கொண்டோம்.

ஆகவே இப்படிப்பட்ட நிலையில் பார்ப்பனரல்லாதவர்களை நிரந்தரமாய் வைக்கப் பாடுபட்ட ஒரு “மகானின்” ஜெயந்திக்குப் பார்ப்பன ரல்லாதார் கூடியிருந்து கொண்டாடுவதென்றால் இதற்கு என்னபேர் வைப்பது என்பது நமக்கு விளங்கவில்லை. விஷயம் இவ்வளவோடு முடியவில்லை. ஏனென்றால் காந்தி ஜயந்தியை விட மானமற்றதும், இழிவானதும் மடமை யானதுமான ஒரு காரியமாகிய தீபாவளி என்னும் ஒரு பண்டிகையையும் நாளை கொண்டாடப்போகும் சுயமரியாதை அற்ற தன்மை, காந்தி ஜயந்திக்கு ஒரு உதாரணமாகும்.


 ----------- தந்தைபெரியார் --”குடி அரசு” - தலையங்கம் - 15.10.1933

23.9.12

மக்களே! பார்ப்பனீயம் ஜாக்கிரதை!! BEWARE OF BRAHMINISM


தென் இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் மறுபடியும் கதர், காங்கிரஸ், மறியல் என்னும் பெயர்களைச் சொல்லி மூடமக்களிடம் உண்டியல் பிச்சை, தட்டப்பிச்சை முதல் பல தந்திரங்களால் பணம் வசூலிக்க வழிகளுண் டாக்கி, பார்ப்பனரால்லாதாரையே கூலிகளாகப் பிடித்து அவர்கள் வசம் அம் மார்க்கத்தை ஒப்புவித்து கூப்பாடு போடச்செய்து, பிரசாரம் செய்ததின் பயனாய் அடங்கிக்கிடந்த பார்ப்பனீயம் இப்போது மறுபடியும் தலை விரித்து ஆடத் தொடங்கி இருக்கிறதென்பது யாவரும் அறிந்ததேயாகும்.

பார்ப்பனீயத்தின் கருத்தெல்லாம், தேசம் பார்ப்பனர்கள் ஆதிக்கத்திற்கு வரவேண்டுமென்பதைத் தவிர வேறு ஒரு காரியமும் இல்லை என்பதும் வெகு காலத்திற்கு முன்பே விளங்கிய விஷயமாகும். அதற்காக என்று செய்யப்படும் கதர்-காங்கிரஸ்-மறியல் முதலிய பிரசாரத்தின் கருத் தெல்லாம் சட்டசபை தாலூகா, ஜில்லாபோர்டுகள் முனிசிபாலிட்டி முதலிய வைகளை பார்ப்பனரல்லாதாரிடமிருந்து பிடுங்கி பார்ப்பன ஆதிக்க வசம் ஒப்புவிக்கும் தரகர் வேலை என்பதைத் தவிர மற்றபடி இவற்றால் எல்லாம் மதுபானமோ, ஏழ்மைத்தன்மையோ, அடிமைத்தன்மையோ ஒழியப்போவ தில்லை என்பதும் நிச்சயமான உண்மையாகும்.

‘தேன் அழித்தவன் புறங்கை நக்கமாட்டானா’ என்பது போல் ‘பார்ப் பனர்களுக்கு போகமுடியாத சமயத்தில் ஒன்று அரை உத்தியோகமோ, ஸ்தானமோ நமது கைக்கு வராதா’ என்று எண்ணுகின்ற தொண்டர்களும் சிலர் இருக்கலாம் என்றாலும் பார்ப்பனரல்லாத மக்கள் இது சமயம் ஏமாந்தால் கடைசியில் ஆபத்தாய் முடியும்.

உதாரணம் வேண்டுமானாலும் நிதானமாய் யோசித்துப் பார்த்தால் விளங்கும். இப்போது, முனிசிபல் எலக்ஷனும், தாலூகா ஜில்லாபோர்ட் எலக்ஷனும் சமீபித்த உடனே எத்தனை ‘வரி செலுத்துவோர்’சங்கம், ‘நகர நல உரிமை’சங்கம், ‘குடியானவர்கள்’சங்கம், ‘ரோட்டில் நடப்பவர் கள்’சங்கம், ‘ரயிலில் பிரயாணம் செய்கின்றவர்கள்’சங்கம், ‘மதுவிலக்கு’ சங்கம், ‘சுகாதார’சங்கம், ‘தொழிலாளிகள்’சங்கம், ‘உழுது பயிர் செய்வோர்’ சங்கம், ‘வேலையற்றவர்கள்’சங்கம் என்பவைகளாகிய அநேக சங்கங்கள் புறப்பட்டு வருகின்றதை கவனித்துப் பார்த்தாலே உண்மை விளங்கிவிடும். 1920- வூ த்திய சீர்த்திருத்தத்தின்போதும் சட்டசபை தேர்தலை உத்தேசித்து கிளப்பப்பட்ட காங்கிரஸ் கிளர்ச்சியானது ஒத்துழையாமையில் ஆரம்பித்து, தேர்தல்கள் வந்தவுடன் சட்டசபைப் பிரவேசமாக மாறி எலக்ஷன் முடிந்த உடன் எல்லாமுமே அடங்கிப்போய்விட்ட சங்கதி யாவரும் அறிந்ததே. இப்போதும் அதுபோலவே 1931ம் வருஷத்திய சீர்திருத்தத்தை எதிர்பார்த்து, சட்டசபை தேர்தல்களை உத்தேசித்து, ஒரு வருஷத்திற்கு முன்னால் இருந்தே போடுகின்ற கூச்சல் இது என்பதைத் தவிர மத்தியில் இந்த 5, 6 வருஷங்களாய் ஏதாவது நடவடிக்கைகள் நடந்ததா என்பதை யோசித்துப் பாருங்கள். அன்றியும் இவற்றிற்கு மத்தியில் ஏற்பட்ட ஒரு தேர்தலின் போதும், சட்டசபை காலாவதி முடிவதற்கு ‘மூன்று நாள்’ இருக்கையில் காலம் சென்ற ‘தேசபக்த சிகாமணி’ மோதிலால் நேரு உள்பட, பல ‘தேசபக்த சீஷர்கள்’ பின்பற்றுபவர்கள் உள்பட அநேகர் சட்டசபையின் மீது ‘கோபித்து’ ராஜினாமா கொடுத்து விட்டுவந்து , மறுபடியும் மூன்று நாளில் அடுத்த காலாவதி தேர்தலுக்கு நின்றது முதலிய காரியங்களையும் யோசித்துப்பாருங்கள்.

இன்று தென் இந்தியாவிலுள்ள காங்கிரஸ் ஸ்தாபனங்களின் தலைவர் கள் எல்லோருமே 100க்கு 90 பேர்களுக்கு மேலாகவே அந்த கூட்டத் தினரும், அதில் நேரில் கலந்து இருந்தவர்களும் பார்ப்பனர்களுமாகவே இருக்கின்றார்களா இல்லையா என்பதையும், மற்ற பொது ‘தேசீய’ ஸ்தாபனங்கள், கூட்டங்கள் ஆகியவைகளின் தலைவர்கள் காரியதரிசிகள் ஆகியவர்களும் அனேகமாய் பார்ப்பனர்களா? அல்லவா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

மற்றும் காங்கிரசின் பெயரைச் சொல்லிக் கொண்டு, காங்கிரஸ் காரர்கள் என்கின்ற முறையில் வட்டமேஜை மகாநாட்டுக்குப் போயிருக்கும் பிரதிநிதிகளும் பார்ப்பனர்களா? அல்லவா?என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

கடைசியாக சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர்களும் காங்கிரஸ் மகாநாட்டுத் தலைவர்களும் பார்ப்பனர்களா? அல்லவா? என்பதையும் யோசித்துப்பாருங்கள். இவைகளை எடுத்துக்காட்டுவது வாசகர்களுக்கு ஒரு சமயம் பார்ப்பனத் துவேஷமாய் காணப்பட்டாலும் படலாம். என்றாலும் தொண்டர்கள் என்பவர்கள் மாத்திரம் 100க்கு 90 பேர்கள் பார்ப்பனரல் லாதார்களா? அல்லவா? என்பதையும், அத்தொண்டர்களின் ஜீவனம் பெரிதும் அக்காங்கிரஸ் சம்மந்தத்தின் பேரினாலேயே இருக்கின்றதா? இல்லையா? என்பதையும், இத்தொண்டர்களுக்கு காங்கிரசினால் ஜீவனம் இல்லாவிட்டால் இவர்கள் அங்கு இருப்பார்களா? என்பதையும், இவர்கள் காங்கிரசின் மூலம் ஜீவிப்பதைத் தவிர வேறு வழியில் பாடுபட்டுப் பிழைக்க 100க்கு 10 பேராலாவது முடியுமா? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

மற்றும் ஒரு விஷயத்தையும் யோசித்துப்பார்க்க விரும்புகின்றோம். அதென்னவென்றால்:-

பார்ப்பனர்களின் வக்கீல்கள், டாக்டர்கள், மிராசுதாரர்கள், வியாபாரிகள் முதலியவர்களே காங்கிரசில் தலைவர்களாயிருக்கவும், பார்ப்பனரல்லாதார்களில் வக்கீல்கள், டாக்டர்கள், மிராசுதாரர்கள், வியாபாரி கள் முதலியவர்கள் அதுபோல் காங்கிரசில் சேராமலிருக்கவும் காரணம் என்ன? பார்ப்பனரல்லாத வகுப்போ, ஜாதியோ, அதாவது வயிற்றுப் பிழைப்பை காங்கிரசின் மூலம் நடத்துகின்றவர்கள் தவிர மற்ற பார்ப்பன ரல்லாதார் சமூகமே ‘தேசத்துரோகிகளா’? அல்லது ‘குலாம்களா’? அல்லது ‘நக்கிப்பொறுக்கிகளா?’ என்பதை யோசித்துப் பாருங்கள்.

திருவாளர்கள் ஏ.ரங்கசாமி அய்யங்கார், சத்தியமூர்த்தி, சி.வி.வெங்கட் ரமணய்யங்கார், பாஷ்யம்அய்யங்கார், ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன், மகாலிங்கய்யர் ஆகியவர்களுக்கு இருக்கும் ‘சுயராஜ்ய தாகம்’ ‘சமதர்ம உணர்ச்சி’ முதலியவைகள் திருவாளர்கள் வெரிவாட செட்டியார், இரத்தின சபாபதி முதலியார், டாக்டர் நடேச முதலியார், தம்மண்ண செட்டியார், குமார சாமி செட்டியார், காயாரோகணம் பிள்ளை முதலியவர்களுக்கு ஏன் இல்லை. முற்கூறியவர்களெல்லாம் மாத்திரம் தான் யோக்கியர்கள், நாணையக்காரர்கள், தேசபக்தர்கள், தியாகமூர்த்திகள் ஆகியவர்களா? பிற்கூறியவர்களெல்லாம் மாத்திரம் அந்தப்படி அல்லாதவர்களா? அல்லது தேசத்தின் பேரால் பணம் சம்பாதித்து அதனால் சாப்பிட்டுக் கொண்டிருப் பவர்களா?

இவைகள் ஒருபுறம் இருந்தாலும், இன்று தமிழ் நாட்டு காங்கிரஸ் மகாநாட்டுத் தலைவரிடமாவது, காங்கிரஸ் கமிட்டித் தலைவரிடமாவது இன்று காங்கிரசில் வேலை செய்யும் காங்கிரஸ் தொண்டர்கள் அல்லது பக்தர்கள் என்பவர்களில் 100க்கு 5 பேருக்காவது நம்பிக்கையோ, அல்லது மரியாதையோ இருக்கின்றதா? என்று காங்கிரஸ் பக்தர்களையும் தொண்டர் களையும் கேட்டுப்பாருங்கள். பார்ப்பனரல்லாத தொண்டர்கள் ஒவ்வொரு வரும் அவர்களிடம் அடியோடு நம்பிக்கை இல்லை என்று தான் சொல்லு வார்கள், சொல்லுகிறார்கள்.

அப்படி யிருக்க அவர்களை தலைவர்களாக்கியதும், தலைவர்க ளாகக் கொண்டாடுவதும், அவர்களது தலைமையில் தொண்டாற்றுவதுமான காரியம், வெறும் - பரிசுத்தமான வயிற்றுப் பிழைப்பு நாடகமாக இராமல், கடுகளவாவது நாணையமோ, சுயமரியாதையோ உடைய தேசியமாகவோ, தேசபக்தியாகவோ இருக்க முடியுமா என்று நன்றாய் யோசித்துப் பாருங்கள்.

சைவ மடங்களில் வெட்டிச் சோறு இல்லாவிட்டால் அங்கு எப்படி நூற்றுக்கணக்கான மொட்டைப்பண்டாரங்கள் இருக்கமுடியாதோ அது போலவே, காங்கிரஸ் பெயரைச் சொல்லி வயிறுவளர்க்க இடம் இல்லா விட்டால் இன்று இத்தனை தேச பக்தர்கள் ,தேசிய வீரர்கள் , தொண்டர்கள், காங்கிரசில் இருந்து ‘தொண்டாற்ற’ முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள். அன்றியும் இன்று காங்கிரசில் வயிறு வளர்ப்பவர்களில் 100க்கு 90 பேர் இதில் வந்து சேர்வதற்கு முன் எங்காவது நாணையமான, கௌரவ மான தொழிலில் ஈடுபட்டு தாராள முறையில் சுதாவில் வயிறு வளர்த்தார்களா என்றாவது யோசித்துப் பாருங்கள்.

எங்கோ இரண்டு ஒன்று மூளையிலுள்ள கோளாறாலோ வேறு காரியங்களை எதிர்பார்த்தோ இந்த கூட்டத்தில் சேர்ந்திருப்பதாலேயே அவர்களை உதாரணமாகக் கொண்டு வராதீர்கள். அதிகம் பெயர்களின் யோக்கியதைகளையே கவனித்துப் பார்க்க விரும்புகிறோம்.

இவற்றையெல்லாம் ‘குடி அரசு’ ஆரம்பித்த காலத்திலேயே பக்கம் பக்கமாய் எழுதியிருந்தாலும் மேடை மேடையாய் கூப்பாடு போட்டிருந் தாலும் இப்போதும் அதை ஏன் திருப்புகிறோம் என்றால், உண்டியல் காசில் வயிறு வளர்த்துக் கொண்டு மேடையேறி கள்ளு, சாராயக்கடைகளில் குடி காரர்களும், கீழ்மக்களும், வெறிகாரர்களும் பேசுவதுபோல் வாயில் வந்த படி மற்றவர்களைப் பேசும் இழிதன்மையின் யோக்கியதையையும் காரணங்களையும் மக்களுக்கு எடுத்துக்காட்டவே நாம் எழுத நேரிடு கின்றது.

காங்கிரஸ் தொண்டர்கள் என்பவர்கள், காந்தி பக்தர்கள் என்பவர்கள், அஹிம்சா தர்மத்தைக் கடைப்பிடித்தவர்கள் என்பவர்கள் வெளிப்படை யாய் தேர்தல் கூலிகளான பிறகும், கூலிக்கு மற்றவர்களை வையத் தொடங் கிய பிறகு அவர்களது யோக்கியதையை பொது ஜனங்களுக்கு வெளிப் படுத்தாமல் இருக்க முடியவில்லை.

காந்தியைக் கும்பிடுவதிலோ, அவர்மீது புகழ் மாலை பாடி ஜீவனம் செய்வதிலோ நமக்கு பொறாமையில்லை. கல்லைக் கும்பிட்டு அதன்மீது புகழ்மாலை பாடி அதன் பெயரை சொல்லிக் கொண்டு வயிறுவளர்க்கும், முட்டாள்தனத்தை விட, இதை நாம் அதிகமாக குற்றம் சொல்லவரவில்லை. ஆனால், அதற்காக தேர்தலில் ஏன் பிரவேசிக்க வேண்டும் என்று தான் யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.

ஏற்கனவே இருக்கின்றவர்களை விட இவர்கள் தரகர்களாயிருந்து வேலை செய்வதன் மூலம் கொண்டு வந்து நிறுத்தப்படுபவர்கள் எந்த விதத்தில் யோக்கியர்கள், நாணையமானவர்கள் என்று சொல்லக்கூடும் என்று கேட்கின்றோம். தொண்டர்களுக்கு கூலி கொடுத்து, அல்லது கூலி கிடைக்கச் செய்து மற்றவர்களை வாய்கொண்டமட்டும் வையச் சொல்லு கின்றார்கள் என்பதைத்தவிர வேறு என்ன அதிகமான யோக்கியதை இருக்கின்றவர்களுக்கு இவர்கள் கங்காணிகளாக இருக்கின்றார்கள்?

எந்த காங்கிரஸ்-கதர்-மறியல் தொண்டருக்கும் தேர்தலைப்பற்றி பேசவும், பார்ப்பனரல்லாத பிரமுகர்களைப்பற்றி வசைபாடவும் என்ன அவசியம் இருக்கின்றது? சர்க்காராரை வைதுவிட்டு வயிறு வளர்ப்பதில் அக்கரை இல்லை. மற்றபடி தேர்தல் ஸ்தாபனங்களில் இருக்கும் நபர்களைப் பற்றி பேசவேண்டிய காரியம் எதற்கு? அதுவும் பார்ப்பனர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு எதிர் அபேக்ஷகர்களிடம் கூலி வாங்கிக் கொண்டு பேசுவது என்றால் யார் சகிப்பார்கள்? அந்தப்படி எதற்காக சகித்துக் கொண்டு இந்த இழிவான வேலையில் ஒரு கூட்டம் பிழைப்பதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பதும் நமக்குத் தெரியவில்லை.

மனிதர்களுடைய சொந்த குணங்களின் உண்மையை இருபுறமும் சொல்லுவதைப் பற்றி நமக்கு சங்கடம் இல்லை. ஆனால் அவர்கள் அந்தக் கக்ஷிக்காரர் இந்தக் கக்ஷிக்காரர் என்றும் காங்கிரஸ் கக்ஷிக்காரர் அல்ல என்றும் சொல்லுவதனால் அதில் நாணையம் உண்டா என்றும் பாருங்கள்.

காங்கிரஸ் கக்ஷிக்காரர் என்றால் என்ன அருத்தம்? ‘தொண்டர் களுக்கு சோற்றுக்கு கொடுக்கின்றவர்’ என்பதைத் தவிர வேறு என்ன வித மான நல்ல அபூர்வ- பொது நன்மைக்கு ஏற்ற நாணையமான குணம் இருந் தது - இருக்கின்றது-இருக்கும் என்று சொல்ல முடியும்? அளவுக்கு மிஞ்சி னால் எதுவும் கெடுதி என்பதை உணராமல் மக்கள் எல்லோரையும் மூடர்கள் என்று எண்ணிக்கொண்டு வேலை செய்வது என்பது என்றைக்கானாலும் ஒரு நாளைக்கு வெளியாக்கப்படவேண்டியதாய் தான் முடிகிறது.

ஆதலால் பொது ஜனங்கள் பார்ப்பன தந்திரத்தைக் கண்டும், பார்ப்பனக் கூலிகளின் நாடகத்தைக் கண்டும் ஏமாந்துபோக கூடாது என்று எச்சரிக்கை செய்கின்றோம்.

நிற்க பல ‘தேசபக்தர்கள்’ தாங்கள் ஜெயிலுக்குப் போய் விட்டு வந்ததை பிரமாதமாகப் பேசி மக்களை ஏய்க்கின்றார்களாம். அனேகருக்கு வீட்டுச்சாப்பாட்டை விட இப்போதைய ஜெயில் சாப்பாடு நல்ல சாப்பாடு என்பதையும்,வீட்டிலிருப்பதை விட அங்கு சௌக்கியம் அதிகம் என்ப தையும் யாவரும் அறியாமல் இல்லை. இதற்கு மற்றொரு உதாரணமாக 5.11.31ந் தேதியின் ‘இந்தியா’ வாரப்பத்திரிக்கையில் உண்மையில் நடந்ததாக எடுத்துக்காட்டியிருக்கும் ஒரு விஷயத்தை குறிப்பிடுகின்றோம். அதாவது, ‘வேலையில்லா திண்டாட்டத்துக்கு பரிகாரம்’ என்ற தலைப்பின் கீழ்.

‘ஒரு அதிகாரி ஒருவனுக்கு 12 மாதம் தண்டனை விதித்தார். அதற்கு எதிரி பிரபுவே உமக்கு வந்தனம். எனது கஷ்டத்தை கொஞ்ச காலத்திற்குத் தீர்த்து வைத்தீர்கள். என்னைப்போல் வேலையில்லா மல் திண்டாடும் ஒவ்வொருவரும் இதை அடைவது நலம் என்று சொல்லி அதாவது (ஒரு வருஷத்திற்காவது தனக்கு சாப்பாட்டிற்கு வழியேற்றப்பட்டதே என்று) சந்தோஷப்பட்டான்

என்பதாகும்.

இந்தப்படி விஷயங்களைப் பச்சையாய் எடுத்துச் சொல்லுவதில் சிலருக்கு சங்கடம் இருக்கலாம். உண்மையாய், யோக்கியமாய் வேலை செய்கின்ற தொண்டர்களைப்பற்றி நாம் யாதொன்றும் கற்பிக்க வரவில்லை. அப்படிக்கில்லாமல் மேல் கண்டபடியெல்லாம் பேசுவதும், உண்மைக்கு விரோதமாக துவேஷபுத்தியுடன் சுயநலத்துக்கு விஷமப் பிரசாரம் செய்வதும், மற்றும் ஒருவருக்கொருவர் உள்ள சொந்த மனஸ்தாபங்களில் புகுந்து ஒருவரிடம் கூலி வாங்கி மற்றவர்களை வைய உபயோகித்துக் கொள்வதுமான ‘தேச சேவை’யைக் கண்டிக்காமல் இருப்பது பயங்காளித் தனமாகும் என்பதோடு, ஒழுங்குக்கும் சமாதானத்திற்கும் பங்கமேற்படுத்து வதுமாகும் என்றே வெளிப்படுத்துகிறோம்.

கடைசியாக ஒரு வார்த்தை சொல்லி இதை முடிக்கின்றோம். அதா வது:- இந்தமாதிரி ‘தேசீயத்தொண்டர்’களைச் சுவாதீனம் செய்து, அவர் களை ஏவி விட்டு, தங்கள் பகைமைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் காரியம் செய்கின்றவர்களுக்கு இன்று சற்று சந்தோஷமா யிருப்பதாகக் காணப்படலாமே ஒழிய, நாளைக்கு இதே தொண்டர்களை சற்று அதிகக்கூலி கொடுத்து வாங்கி, இவர்கள் மீதே உசுப்படுத்திவிடுவது என்பது பிரமாதமான காரியம் அல்லவென்பதை நினைவிலிருத்தும்படி தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

             -------------தந்தைபெரியார் -”குடி அரசு” - தலையங்கம் - 15.11.1931

22.9.12

ஜனனி அய்யர்! ராணி முகர்ஜியா? சர்ச்சைப் புயல்கள் வெடித்துக் கிளம்பும் ஜாதிப் பெயர்கள்

ஜனனி அய்யர்! ராணி முகர்ஜியா? (1)
ஜனனி அய்யர்! ராணி முகர்ஜியா? (1)

1. ஜனனி அய்யர் (கதாநாயகி) நடித்த திரைப்படம்: அவன் இவன்

2. அனுஜா அய்யர் (துணை நடிகை) நடித்த திரைப்படம் உன்னைப் போல் ஒருவன்

3. கவுதம வாசுதேவமேனன் (இயக்குநர்) காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, போன்ற திரைப்படங்களை எழுதி இயக்கியவர்.

4. சமீராரெட்டி (கதாநாயகி) நடித்த திரைப்படம்; வாரணம் ஆயிரம்.

5. பூமிகா சாவ்லா (கதாநாயகி) நடித்த திரைப்படம்; ரோஜாக் கூட்டம்.

6. ராணி முகர்ஜி (கதாநாயகி) நடித்த திரைப்பட  (ஹேராம்).

7. நவ்யா நாயர் (கதாநாயகி) நடித்த திரைப்படம்: சிதம்பரத்தில் அப்பாசாமி.

8. கீர்த்திசாவ்லா (கதாநாயகி) நடித்த திரைப்படம்: நான் அவன் இல்லை.

இவை எல்லாம் சினிமாவில் தலை காட்டும் கதாநாயகி கதாநாயகர்களின் பெயர்கள்.

ஒரு கட்டத்தில் ஜாதி பெயர்களில் சினிமாக்களை எடுக்க ஆரம்பித்தனர். கடை விரித்தேன் கொள்வாரில்லை என்பதோடு அவற்றின் கதை முடிந்து போயிற்று.

இப்பொழுது சினிமா நடிகைகள், நடிகர்கள் வெளி மாநிலக்காரர்கள் ஜாதிப்பட்டங்களோடு அரங்கேறிக் கொண்டு இருக்கின்றனர்.

இதில் ஒரு கடைந்தெடுத்த வெட் கக்கேடு பெண்களாக இருக்கக் கூடிய நடிகைகள்கூட தங்கள் பெயர்களுக்குப் பிறகு அய்யர் என்றும் ரெட்டி என்றும், முகர்ஜி என்றும்  ஜாதி வாலை ஒட்ட வைத்துக் கொண்டு இருப்பதுதான்.

பெயர்களுக்குப்பின் பெண்கள் ஜாதிப் பெயர்களை வைத்து கொள்வது கிடையாது. பெண்களைப் பொறுத்த வரை இந்து மதத்தில் அவர்ணஸ் தர்கள்; அதனால் ஜாதி என்ற பேச்சுக்கே இட மில்லை.

பெண்களுக்குப் பூணூல் தரித்துக் கொள்ளும் உரிமையும் கிடையாது. எனவே பார்ப்பனப் பெண்கள்கூட சாஸ்திரப்படி  பிராமணர் ஆகமுடியாது என்றாலும் அவ்வாறு சொல்லிக் கொள்வதில் மட்டும் குறைச்சல் இல்லை.

சினிமாவில் குதிக்கும் பெண்கள் தங்கள் பெயர்களோடு அய்யர் பட்டத்தை, ஜாதிப் பட்டத்தைப் போட்டே தீர வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்களாம். சினிமா வட்டாரத்தில் அவ்வாறு சொல்லப்படுகிறது.

இது உண்மை என்றால், இதுபற்றி தமிழ்நாட்டு வீதிகளில் மேடைகளில் சர்ச்சைப் புயல்கள் வெடித்துக் கிளம்பும் என்பதில் அய்யமில்லை.


தமிழ் மண்ணுக்கென்று சில குணம், மணம் உண்டு. சினிமா தயாரிப்பாளர்க ளும், இயக்குநர்களும் இதனை அறிவார்கள். வீண் பிரச்சினையைத் தமிழ்நாட்டில் திணிக்க வேண்டாம். ஜாதிப் பெயர்களை ஒட்டிக் கொண்டு, சினிமா மோகத்தில் மயங்கிக் கிடக்கும் தமிழர்களின் அப்பாவி ரசிகர்களின் தொடைகளில் கயிறு திரிக்கலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம்.

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

ஜாதியைக் காப்பாற்ற நிலை நாட்ட பார்ப்பனீயம் இப்படி ஒரு யுக்தியை மேற்கொள்கிறதோ என்று சந்தேகிக்கவும் இடம் உண்டு.

ஜாதி ஒழிக்கப்பட்டால் தங்களின் உயர் ஜாதித்தனம் ஒழிந்து போய் விடும் என்பது அவர்களுக்குத் தெரியுமே!\
 ********************************************************************

தமிழ்ச் சங்கம் - ஓர் எச்சரிக்கை! (2)

தமிழ்ச் சங்கங்கள் நாட்டிற்குத் தேவையானவை. இதன் மூலம் தமிழ் மொழியின் மீது ஓர் ஈர்ப்பு -அயல் ஆதிக்கத் தகர்ப்பு என்பது போன்ற தாக்கங்கள் ஏற்பட வேண்டும். அதை விட்டு விட்டு அயல் ஆதிக்கங்கள் புழக்கடை வழியாகப் புகுந்திட இடம் கொடுத்துவிடக்கூடாது.

குறிப்பாக தினமணியின் ஆசிரியராக திரு. வைத்தியநாதய்யர் என்பவர் வந்திருக்கிறார். இவருக்கு முன்  ஆசிரியராக இருந்தவர் தினமணியை உண்மையான தமிழ் ஏடாக நடத்தி சாதனை படைத்தார்; தினமணியில் தமிழர்களும் கணிசமான அளவுக்கு நுழையவும் வழி வகுத்தார்.

இப்பொழுது வந்துள்ளவர் ஆர்.எஸ்.எஸ். பின்னணியைக் கொண்டவர். துக்ளக் குழுமத்தில் சுத்தமான நெய்யில் பொரிக்கப்பட்ட பண்டம் இவர்.

தமிழ் ஆர்வம் உள்ளவர் போல காட்டிக் கொள்வார். செம்மொழி மாநாட்டுக் குழுவில் இடம் பெறுவதற்குக் கூட அன்றைய முதல் அமைச்சர் கலைஞர், அய்யர்வாளுக்கு மிகவும் அழுத்தம் கொடுக்க நேர்ந்தது. அவ்வளவுக் கிராக்கிப் பண்ணினார்.

தினமணிக்கு எத்தனையோ பேர் ஆசிரியர்களாக வந்து இருக்கிறார்கள். அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள் என்றோ, அப்படியே கலந்து கொண்டாலும் அவர்களின் நிழற் படங்கள், பேச்சுகள் எவையும் தினமணியில் இடம் பெற்றது என்றோ கூற முடியாது.

இவர் ஆசிரியராக வந்த நாள் முதல் இவர் நிழற்படம் பெரும்பாலும் இடம் பெறும். இவர் சொற்பொழிவும் இடத்தை அடைத்துக் கொள்ளும்.

தினமணி வைத்தியநாதய்யரை நிகழ்ச்சிக்கு அழைத்தால், அந்தச் செய்தி நிழற்படங்களுடன் பிரமாதமாக தினமணியில் வரும் என்று நினைக்கிற தமிழ் அமைப்புகள், சங்கங்கள் தினமணி ஆசிரியரை அத்தகைய விழாக்களுக்கு அழைக்க ஆரம்பித்து ள்ளனர். இது டில்லிவரை நீளுகிறது.

இந்த விளம்பர வெளிச்சத்தில் விட்டில் பூச்சிகளாகத் தமிழ் அன்பர்கள் விழுந்து விட வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம்.

சென்னை மாநகரில் வணிக விளம்பரப் பலகைகளில் தமிழ் முதல் இடத்தைப் பெற வேண்டும் என்று ஓர் இயக்கத்தையே நடத்தினார்- _ அன்றைய மாநகராட்சித் தந்தை மானமிகு மா. சுப்பிரமணியம் அவர்கள்; அதற்கெல்லாம் இந்தத் தினமணிகள் எந்த அளவு கை கொடுக்க முன் வந்தன என்பதை ஒரே ஒரு நிமிடம் நினைத்துப் பார்க் கட்டும்!

அதனை மொழி நக்சலிசம் என்று வருணித்தவர் தினமணி ஆசிரியரின் குருநாதரான திருவாளர் சோ.

பார்ப்பனர்கள் எதைச் செய்ய முன் வந்தாலும் அதில் தமிழர்கள் எச்சரிக் கையாகவும், விழிப்பாகவும் இருக்க வேண்டும்!  எச்சரிக்கை! எச்சரிக்கை!!

   - -------------------- மின்சாரம் அவர்கள் 22-9-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

பார்ப்பனீய ஒழிப்புத் திருநாள்




சுயமரியாதை இயக்கத்தின் சுமார் 10 வருஷகால வேலையின் பயனாய் பார்ப்பனீயம் ஒரு அளவுக்காவது ஆட்டம் கொடுத்துவிட்ட விஷயம் நாம் எடுத்துக் காட்ட வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறோம்.

ஆன போதிலும், சமுதாய விஷயங்களில் பார்ப்பனீயம் எவ்வளவு பகிஷ்கரிக்கப்பட்டிருக்கின்றதோ, அதில் 8ல் ஒரு பங்கு கூட அரசியல் விஷயத்தில் பகிஷ்கரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது.

அரசியலில் ஜஸ்டிஸ் கட்சி பார்ப்பனர்களுக்கு விரோதமாய் வேலை செய்வது என்று பெயர் வைத்துக் கொண்டிருந்தாலும் அதன் தலைவர்கள் என்பவர்கள் பலர், தனிப்பட்ட முறையில் தங்கள் சுயநலத்திற்காக எதையும் விற்றுக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

தோழர் முத்தையா முதலியார் அவர்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத் திட்டம் அரசாங்க உத்திரவு மூலம் போட்ட காரணத்திற்காகவே பார்ப்பனர்கள் அவரை ஒழிக்கச் செய்த சதியில் சில ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களும் உள் உளவாய் இருந்ததோடு, பார்ப்பனரல்லாதார் கட்சியின் பயனாய் முதல் மந்திரி ஸ்தானம் பெற்ற தோழர் முனிசாமி நாயுடு அவர்கள் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய் இருந்து வந்ததுடன் தனது ஸ்தானத்தைக் காப்பாற்ற பார்ப்பனர்களுக்கு அடிமையாக வேண்டிய நிலையையும் அடைந்தார். அதன் பயனையும் அடைந்தார் என்றாலும், இப்போது ஜஸ்டிஸ் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளவும் ஏற்பாடாகி வருகிறது.

இது எப்படியோ இருக்கட்டும். தோழர் முத்தையா முதலியார் அவர்கள் ஏற்படுத்திய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்திரவை ஜஸ்டிஸ் கக்ஷி அரசாங்கம் இப்போது மறுபடியும் பிரசுரித்திருப்பது போற்றத்தக்கதேயாகும்.

இன்றைய தினம் எந்த ஊரில், டவுனில் எடுத்துக் கொண்டாலும் வாசல் கூட்டி, பியூன் ஆகியவர்கள் போன்ற உத்தியோகம் போக பாக்கி உத்தியோகங்களில் பார்ப்பனர்கள்தான் 100க்கு 80 பேர், 90 பேர்கள் இருந்து வருகிறார்கள். அதிலும் நீதி இலாக்காவாகிய முனிசீப்பு, சப் ஜட்ஜ், ஜில்லா ஜட்ஜ் முதலியவைகளும், நிர்வாக இலாக்காவாகிய போலீஸ் டிப்டி சூப்பிரண்டெண்ட், சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ஆகியவைகளிலும் பார்ப்பன ஆதிக்கமே தலைசிறந்து நிற்பதுடன் பார்ப்பனரல்லாதார் முயற்சியையும், முன்னேற்றத்தையும் ஒழிக்கவும், தடுக்கவும் அவைகளின் மூலம் எவ்வளவு காரியம் செய்ய வேண்டுமோ அவ்வளவு காரியங்கள் நெஞ்சில் ஈரமில்லாமல் வன்னெஞ்சத்துடன் ஆங்காங்கு செய்யப்பட்டு வருகின்றதானது எவரும் அறியாததல்ல.

அரசாங்கத்தார் ஒவ்வொரு இடத்திலும் உத்தியோகங்களில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் நிலைமை சரிவரக் காக்கப்படுகிறதா என்று பார்க்க வேண்டும். அதிகாரிகளைக் குறைந்த அளவாவது பார்ப்பனரல்லாதார் பிரதிநிதித்துவம் கவனிக்கப்பட இடமிருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு ஊரில் டிப்டி கலெக்டர் பார்ப்பனராயிருந்தால் தாசில்தார் பார்ப்பனரல்லாதாராய் இருக்கும்படியும், சப்இன்ஸ்பெக்டர் பார்ப்பனராயிருந்தால் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பார்ப்பனரல்லாதாராயும், ஜில்லா ஜட்ஜ் பார்ப்பனராயிருந்தால் சப் ஜட்ஜ் பார்ப்பனரல்லாதாராயும் மற்றும் இதுபோல் அதிகாரங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அப்படி யில்லாதவரை, அரசியலிலானாலும், தேசியத்திலானாலும், வகுப்பு உணர்ச்சி தாண்டவமாடும் இக்காலத்தில் பல வகுப்பு மக்களுக்கு பந்தோபஸ்து இருக்குமென்று கருதமுடியாது.

அரசாங்கம் சம்மந்தமில்லாத வேறு பல விஷயங்களில் கூடியவரை பார்ப்பனரல்லாதார்கள் விழித்துக் கொண்டார்கள் என்றே சொல்லலாம்.

உதாரணமாக இப்போது நடைபெற்று வரும் முனிசிபல் எலக்ஷன்களில் பார்ப்பனக் கோட்டைகளாயிருந்த சேலம், திருப்பூர் முதலிய இடங்களில் ஒரு பார்ப்பனர் கூட வரமுடியாமல் போனதைப் பார்த்தால் அங்குள்ள காங்கிரஸ் ஆதிக்கமும், பார்ப்பன ஆதிக்கமும் எவ்வளவு என்பது விளங்கும்.

பெண்களும், ஆதிதிராவிடர்களும் ஒவ்வொரு முனிசிபாலிட்டியிலும் ஸ்தானம் பெற்றார்கள் என்றால், அது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் பெருமையாலேயே அல்லாமல் ஜனங்களுக்கு சமரச உணர்ச்சி ஏற்பட்டல்ல என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஈரோடு அர்பன் பாங்கி சமீபகாலம் வரை பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்தது என்றாலும் இந்த வருஷம் ஃ பாங்கு தேர்தலில் ஒரு பார்ப்பனருக்குக் கூட இடம் இல்லாமல் போய் விட்டது என்பதோடு ஒரு பெண் டைரக்டரும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறதானது மகிழ்ச்சிக்குரியதாகும். இவ்வளவு இருந்தாலும் சில இடங்களில் ஸ்தானங்கள் பெறப் பார்ப்பனர்கள் கையில் ஆகவில்லை என்றாலும் சிலர் சில பார்ப்பனரல்லாதாரைப் பல வழிகளில் தங்கள் வழிப்படுத்திக் கொண்டு கட்சிகள் தகரார்கள் உற்பத்தி செய்து தாங்கள் ஸ்தானத்தில் இருந்தால் என்ன நடக்குமோ அதுபோல் செய்து வருவது இன்னும் குறைந்தபாடில்லை.

நாட்டில் வகுப்பு உணர்ச்சி ஏற்பட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதிலும் தங்களைப் பிறவியிலேயே உயர்ந்த ஜாதி என்று கருதிக் கொண்டு மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியாக கருதிக் கொண்டிருக்கிறவர்களிடத்தில், தாழ்ந்த ஜாதிக்காரர்களாய் கருதப்படுகிறவர்கள் துவேஷமும் வெறுப்பும் இல்லாமல் இருக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பது மனித இயற்கைக்கு விரோதமானது.

உதாரணமாக ஒரு பிராமணன் என்பவனிடம் ஒரு சூத்திரன் என்பவன் துவேஷமாயிருக்கிறான் என்பது ஒரு நாளும் ஆச்சரியமான காரியம் ஆகாது. மற்றெது ஆச்சரியமான காரியம் ஆகுமென்றால் ஒரு பிராமணன் என்பவனிடம் கூட ஒரு சூத்திரன் என்று அழைக்கப்படுகின்றவன், தீண்டப்படாதவன் என்று அழைக்கப்படுகிறவன் துவேஷமில்லாமல், வெறுப்பு இல்லாமல் இருந்து வருவதுதான் ஆச்சரியப்படத்தக்கதாகும்.

ஆதலால் ஜாதிப்பிரிவு சம்பந்தமான உயர்வு, தாழ்வு இருக்கும் வரை நாட்டில் துவேஷம், வெறுப்பு, வகுப்பு உணர்ச்சி ஆகிய காரியங்களும் ஒரு வகுப்பாரால் ஒரு வகுப்பு கஷ்டமடையும் காரியங்களும் எதிர்பார்த்துத்தான் இருக்க வேண்டும்.

உதாரணம்

இதற்கும் ஒரு உதாரணம் கூறிவிட்டு இதை முடிக்கின்றோம்.

தோழர் எஸ். குஞ்சிதம் குருசாமி அம்மாளை யாவருக்கும் தெரியும். அந்தம்மாள் பி.ஏ., எல்.டி., பாஸ் செய்தவர்கள். அதிலும் யோக்கியதாபக்ஷத்தோடு உயர்ந்த வகுப்பில் பாஸ் செய்தவர்கள். அவர்களின் கல்வித் திறமை, போதிக்கும் திறமை, பிள்ளைகளிடம் அன்பாயிருக்கும் திறமை, சரீராப்பியாச விளையாட்டுகளில் உள்ள திறமை முதலியவைகள் அந்தம்மாள் வேலை செய்த பள்ளிக்கூட தலைமை உபாத்தியாயரின் நற்சாக்ஷிப் பத்திரத்தில் காணலாம். இப்படிப்பட்ட அம்மாள் மைலாப்பூரில் ஒரு பார்ப்பன ஆதிக்கமுள்ள பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயராக மாதம் 70 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு வந்தார்.

அந்தம்மாள் யாதொரு தப்பிதமும் செய்துவிடவில்லை. இரண்டொரு இடங்களில் பகுத்தறிவு பிரசங்கங்கள் செய்தது தவிர யாதொரு பாவத்தையும் அறியார். அப்படிப்பட்டவர்களைத் தோழர்கள் பி.எஸ். சிவசாமி அய்யர், டி.ஆர்.வெங்கிட்ட ராமசாஸ்திரி, சி.பி.ராமசாமி அய்யர், அல்லாடிக் கிருஷ்ணசாமி அய்யர் ஆகியவர்கள் போன்றவர்கள் நிர்வாக கமிட்டியாய் இருக்கும் பள்ளிக்கூடத்தில், அந்தம்மாளுக்கு இனி வேலை இல்லை என்று நோட்டீஸ் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் என்றால், வகுப்பு உணர்ச்சியில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

இந்தப்படி ஒரு பார்ப்பனரல்லாதார் ஆதிக்கமுள்ள ஸ்தாபனங்களில் இருந்து, தகுந்த ஒழுக்கக் குறைவுள்பட ஒரு குற்றத்துக்காக ஒரு பார்ப்பனரை நீக்கிவிட்டால் அக்கிரகாரம் முதல் கொண்டு சர்க்கார் அதிகாரிகள் ஹைகோர்ட்டு வரை அந்த ஸ்தாபனத்தின் மீது பழி வாங்க நினைக்கிறார்கள். "பிராமணத் துவேஷம்" பிராமணத் துவேஷமென்று கூப்பாடு போடுகிறார்கள்.

பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தில் இருக்கிற எந்த ஸ்தாபனங் களிலாவது 100க்கு 10 வீதமாவது பார்ப்பனரல்லா தார்களுக்கு வேலை கொடுக்கிறார்களா? எனப் பார்த்தால் வகுப்பு துவேஷம் யாரிடத்தில் இருக்கிறது என்பது விளங்கும்.

ஆதலால் பார்ப்பனரல்லாத மக்கள் இனியாகிலும் இவ்விஷயங்களை உணர்ந்து அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ள முயற்சிப்பதுடன் காந்தி ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, ஹரிஜன நாள், ஏகாதிபத்திய ஒழிப்பு நாள், மே டே என்பது போன்ற நாள்களை வருஷத்துக்கு ஒரு நாள் கொண்டாடுவது போல் "பார்ப்பன ஆதிக்கம் ஒழிப்பு நாள்" என்பதாக வருஷத்தில் ஒரு நாள் கொண்டாட ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும், அதை அடுத்து வரும் தீபாவளிக்கு அடுத்த நாளோ, அல்லது முந்திய நாளோ வைத்துக் கொள்வது நல்லது என்றும் அபிப்பிராயப்படுகின்றோம்.

இத்தினங்களில் ஆங்காங்கு கூட்டம் போட்டு பார்ப்பன ஆதிக்கக் கொடுமை, சமுதாயத்திலும், அரசியலிலும் இருப்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டி தீர்மானங்களை நிறைவேற்றி, அரசாங்கத்துக்கும் பத்திரிக்கைகளுக்கும் அனுப்ப வேண்டிய வேலையை அத்திருநாள் கொண்டாட்ட வேலையாக வைத்துக் கொள்ளலாம் என்றும் அபிப்பிராயப்படு கின்றோம். இன்ன நாள் என்பதைப் பின்னால் உறுதிப்படுத்துகிறோம்.

        -----------------தந்தைபெரியார் -”பகுத்தறிவு” துணைத் தலையங்கம் 30.09.1934

பார்ப்பனர்களைச் சேர்த்துக்கொள்ளலாமா? -பெரியார்



தோழர்களே! பார்ப்பனர்களைச் சேர்த்துக்கொள்ளலாமா? -என்கின்ற பிரச்சினையானது ஜஸ்டிஸ் கட்சியில் 1926ம் வருஷம் முதல் பேசப்பட்டு வருகிறது.

உதாரணமாக மதுரை மகாநாட்டில் பனகால் அரசர் பார்ப்பனர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்பட்டு, அதற்கு ஒரு கமிட்டியை நியமித்துப் பார்ப்பனர்கள் விண்ணப்பங்களை கமிட்டி பரிசோதிக்கலாமா என்றும், பூணூல் இல்லாதவர்களைச் சேர்த்துக் கொள்வது என்கின்ற நிபந்தனை வைக்கலாமா என்றும், மற்றும் பலவித நிபந்தனைகளின் மீதாவது சேர்க்கலாம் என்றும் சொன்னார். பிறகு கோயம்புத்தூர் மகாநாட்டிலும், கடைசியாக நெல்லூர் மகாநாட்டிலும் பேசப்பட்டது. என்னைப் பொறுத்தவரை நான் ஆட்ஷேபித்தே வந்திருக்கிறேன். பொது ஜனங்களுக்கும் பிரியமில்லை என்பது எனது அபிப்பிராயம்.

ஆனால் தலைவர்களுக்கு ஏதோ அவசியமிருப்பதாகத் தெரிகின்றது. அதை உத்தேசித்தே சென்ற மாதம் கூடின ஒரு சாதாரண தனிப்பட்ட கூட்டத்தில் நான் ஆட்ஷேபிக்கப் போவதில்லை என்று கூறி இருக்கின்றேன். ஏனெனில் தலைவர்கள் என்பவர்கள் அதன் பயனை அடைந்து பார்க்கட்டும் என்று கருதித்தான்.

இது போலவே முன்னமும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் காங்கிரசில் சேர வேண்டும் என்கின்ற ஒரு பிரச்சினை கோயம்புத்தூர் மகாநாட்டில் 1927 ல் எழுந்தது. நான் ஆட்ஷேபித்தேன். தோழர்கள் பனகால் அரசர், சர். பாத்ரோ முதலியவர்கள் மிகவும் கேட்டுக் கொண்டார்கள். பொது ஆறக்ஷபனை கூட பலமாய் இருந்தது. கடைசியாக நான் இவர்கள் அதன் பயனை அடைந்து பார்க்கட்டும் பின்பு விஷயம் தெரிந்து கொள்ளட்டும் என்கின்ற எண்ணத்தின் மீதுதான் தடுப்பதில்லை என்று சொல்லி விட்டேன். தீர்மானம் எவ்வித எதிர்ப்புமின்றி பாசாகிற்று என்றாலும் ஒரு அம்மன் காசு அளவு பயன்கூட ஏற்படவில்லை. இதன் பயனாய் முன்னையை விட அதிகமாய் காங்கிரசை ஜஸ்டிஸ் கக்ஷியார் எதிர்க்க நேர்ந்தது. அது போலவே இப்போதும் பொது ஜனங்களுக்கு இஷ்டமில்லாத காரியத்தை ஏதோ ஒரு உள் கருத்துக்கொண்டு சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறார்கள். இதன் பயனைக் கண்டிப்பாய் அனுபவிக்கப் போகிறார்கள். அந்த தைரியத்தின் மீதே இப்போது நான் தடுக்கப் போவதில்லையென்று சொல்லுகிறேன். இப்படிச் சொன்னதால் சில தோழர்கள் நான் சம்மதம் கொடுத்ததாகச் சொல்லு கிறார்கள். அவர்களை எனக்கு நன்றாய்த் தெரியும். பார்ப்பனர்களிடம் நான் துவேஷமாய் இருந்தாலும் சினேகமாய் இருந்தாலும் அந்தப் பலன்களையெல்லாம் இவர்கள் தான் அடைவார்களே ஒழிய, எனக்கு ஒரு லாபமும் இல்லை. வேண்டுமானால் பார்ப்பனர்களால் ஏற்படும் விஷமமும், தொல்லையும் எனக்குச் சொந்தமாகும்.

நான் சென்ற வாரப் பத்திரிகையில் "பார்ப்பனீய ஒழிப்புக் கொண்டாட்ட நாள்" என்பதாக வருஷத்தில் ஒரு நாள் கொண்டாட வேண்டும் என்று எழுதி இருக்கின்றேன்.

இவை நிற்க, பொதுவாக விஷயத்தை உங்கள் ஞாபகத்துக்குக் கொண்டு வர ஆசைப்படுகிறேன்.

பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்று ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விதியும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்கின்ற ஒரு விதியும் நமக்குள் இருந்து வருகின்றது என்றாலும் இது எப்போதும் இருக்க வேண்டியதா? அல்லது எவ்வளவு காலத்துக்கு இருக்க வேண்டியது? என்று யோசித்துப் பாருங்கள். எல்லா இந்திய மக்கள் மாத்திரம் அல்லாமல் உலக மக்கள் எல்லோருமே சகோதரர்களாக தோழமையுடன் வாழ வேண்டுமென்றும் வகுப்பு வித்தியாசங்கள் என்பது எங்கும், எந்த ரூபத்திலும் காணக் கூடாதென்றும் கூப்பாடு போடுகின்ற நாம் எப்போதும் பார்ப்பனர்களை சேர்க்கக் கூடாது என்று சொல்ல முடியுமா? என்று யோசித்துப் பாருங்கள். சர்வ ஜன சகோதரத்துவத்துக்கும் வகுப்புப் பிரிவு மறைவுக்கும் தான் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்றும் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்றும் சொல்லுகின்றோம். இது சாதாரண அறிவுடையவர்களுக்கு விளங்காது. சிறிது கூர்மையான பகுத்தறிவைப் பயன்படுத்திப் பார்ப்பவர்களுக்கு விளங்கிவிடும்.

எப்படியெனில் ஒரு வியாதியை சௌக்கியப்படுத்த அந்த வியாதியின் சத்தை இன்ஜக்ஷன் செய்வது போல் உதாரணமாக பீனிச மூக்கு வியாதிக்காரனுக்கு அந்தப் பீனிச மூக்குச் சீயையும், கெட்ட நீரையும் எடுத்துச் சேர்த்து பக்குவம் செய்து இன்ஜக்ஷன் செய்தால் அந்த மூக்கு வியாதி சௌக்கியமாய் விடுகின்றது.

அதுபோல் பார்ப்பனர்களை விலக்கி வைப்பது என்பதில் பார்ப்பனீயம் ஒழிந்து விடுகின்றது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதில் வகுப்புகளின் உயர்வு தாழ்வு வித்தியாசம் ஒழிந்து சமநிலைக்கு வர நேருகின்றது. இவற்றின் பலனாய் ஒற்றுமையும், சமத்துவமும் வந்து பிரிவும் பேதமும் தானாய் மறைய நேரிடுகின்றது.

இந்த நிலை ஏற்படும் வரையில்தான் நாம் பார்ப்பனர்களைச் சேர்க்கக் கூடாதென்றும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோமே ஒழிய, உலகம் உள்ள வரையில், மனித சமூகம் உள்ள வரையில் கூடாது என்றும் வேண்டும் என்றும் நாம் கருதி ஏற்படுத்தவில்லை.

இப்போது உள்ள கேள்வியெல்லாம் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ளவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எடுத்து விடவும் தகுதி ஆனதும் அவசியமானதுமான காலம் வந்து விட்டதா என்பதேயாகும். என்னுடைய அபிப்பிராயத்தில் இல்லை என்றே கருதுகிறேன். சிலர் வந்து விட்டது என்கிறார்கள். சிலருக்கு இரண்டும் புரியாமல், சொல்லிக் கொடுத்ததைச் சொல்லும் கிளிப் பிள்ளைகள் மாதிரி ஒரே மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய இந்த அபிப்பிராய பேதங்களுக்குக் காரணமே ஒழிய வேறில்லை.

"பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்ள காலம் வந்து விட்டது" என்று இன்று சொல்லுகின்றவர்கள் தலைவர்கள் என்கின்றவர்களே யாவார்கள். தோழர்கள் சர். ஷண்முகம், பொப்பிலி ராஜா, சர். உஸ்மான், ராஜன் போன்றவர்களே ஆசைப்படுகின்றார்கள் என்றால் அதன் பலாபலனை அடைந்து பார்க்க அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கும் வரையில் இந்தப் பிரச்சினை விஷயத்தில் ஒரு சாந்தியும் ஏற்படாது. ஆதலால் நான் குறுக்கே நிற்பதில்லை என்று சொல்லிவிட்டேன். எனது தோழர்கள் பலரும் இதை ஒப்புக்கொண்டது எனக்கு சந்தோஷமே.

இப்போது எனக்கும் மற்றும் பல எனது கூட்டு வேலைத் தோழர்களுக்கும் இருக்கும் முக்கிய பிரச்சினை இந்தப் பார்ப்பனர்களைப் பொருத்ததல்ல.

பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொண்டு பிறகு ஜஸ்டிஸ் கட்சி செய்யப்போகும் வேலை என்ன? அதற்கு வேலைத்திட்டம் என்ன? என்பது தான் முக்கிய பிரச்சினை. இந்தப் பிரச்சினையால் தான் நாங்கள் ஜஸ்டிஸ் கட்சியில் இருப்பதா அல்லது விலகுவதா என்கின்ற தத்துவம் இருந்து வருகின்றது.

அதைத்தான் நாங்கள் முக்கியமாய்க் கருதுகிறோம். அந்த விஷயத்துக்கு ஒரு வேலைத் திட்டம் அனுப்பியிருக்கிறேன். அது யோசனைக்கு வரும். அதைப் பொறுத்தே எங்கள் முடிவும் இருக்கும். பார்ப்பனர்களைச் சேர்க்கும் விஷயம் முடிவடைந்தால் ஏதோ ஒரு சில கூட்டத்துக்குத்தான் பயன் உண்டாகலாம்.

நமது வேலைத்திட்ட விஷயம் முடிவடைவதில்தான், இந்த தேசப் பொது மக்களின் "தலையெழுத்து" நிர்ணயிக்கப்படப் போகின்றது.

ஆதலால் பார்ப்பனர்களை ஜஸ்டிஸ் கட்சியில் சேர்க்கும் விஷயத்தில் எனது அபிப்பிராயத்தைச் சொல்லிவிட்டேன். பிறகு நீங்கள் எல்லோரும் யோசித்துத் தக்கது செய்யுங்கள்.

--------------------- 29, 30.09.1934 இரு நாள்கள் சென்னையில் நடைபெற்ற ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தில் பார்ப்பனர்களைச் சேர்த்துக் கொள்வது என்ற தீர்மானத்தை யொட்டி தந்தைபெரியார் ஆற்றிய உரை.”பகுத்தறிவு ”சொற்பொழிவு 07.10.1934