Search This Blog

2.9.11

சித்திரைதான் தமிழ் ஆண்டுப் பிறப்பு -பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பு


தமிழ்த் தேசியவாதிகளின் பரிதாப நிலை!

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று கலைஞர் முதல் அமைச்சராக இருந்து நிறைவேற்றிய சட்டம் யார் எந்தக் கண்ணோட்டத்தில் விமர்சித்தாலும் - தமிழ் தமிழர் பண்பாட்டுச் சிகரத்தில் ஏற்றப்பட்ட வெற்றிக் கொடி என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

இந்தச் சட்டம் இயற்றப்பட்ட காலத்திலிருந்து எதிர்த்துக் குரல் கொடுப்பவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்கள் தான் - பெரும்பாலும் பார்ப்பன ஊடகங்கள் தான்.

வரலாற்றின் போக்கை உணர்ந்தவர்களுக்கு இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

தினமணி முதல் நாள் கருத்தரங்கம் என்ற தலைப்பில், சித்திரைதான் தமிழ் ஆண்டுப் பிறப்பு என்று அடித்து எழுதியது - மறுநாளே அ.தி.மு.க. அரசு அவ்வாறு சட்டம் இயற்றுகிறது.

தொடக்க முதல் துக்ளக் தை முதல் நாளை ஏற்கவில்லை என்ற முறையில், இப்பொழுது இயற்றப்பட்டுள்ள சட்டம் அவர் உச்சியைக் குளிர வைப்பதிலும் ஆச்சரியம் இல்லை.

இந்த வார துக்ளக்கூட (7.9.2011) யாரோ திராவிடர் சான்றோர் பேரவையின் தலைவராம்; அவரை இழுத்து வந்து குளிர் காய்ந்திருக்கிறது.

திராவிடர் என்ற வரலாற்றுச் சொல்லை தந்தை பெரியார் தேர்ந்தெடுப்பதற்கே காரணம் பார்ப்பனர்களுக்குச் சம்பந்தம் இல்லாதது என்பதைக் காட்டத்தான்! அந்தப் பேரில் உள்ளவர்கள்கூட சுலபமாகப் பார்ப்பனர்களுக்கு விலைபோகக் கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

காலம் காலமாகப் பார்ப்பனர்களுக்கு இத்தகையவர்கள் கிடைக்கப் பெற்று ஆழ்வார் பட்டமும் பெற்றுக் கொள்வார்கள்.

இப்பொழுது ஏன் இந்தச் சட்டத்தை இயற்ற வேண்டும்? முன் ஏன் இயற்றவில்லை என்று எளிதில் கேள்வி கேட்டு விடலாம். ஏற்கெனவே சட்டத்தை இயற்றாததால் இப்பொழுது இயற்றக் கூடாது என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை.


1942 ஆகஸ்டில் ஏன் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்க வேண்டும்? அதை ஏன் 1930இல் தொடங்கவில்லை என்று கேட்கலாம்தான்.

1921இல் நீதிக் கட்சிதானே ஆட்சியில் இருந்தது? அப்பொழுதுதே ஏன் தை முதல் நாளை புத்தாண்டாக அறிவிக்கவில்லை என்று புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்டு விட்டார்களாம்.

சென்னை மாநிலம், ஆந்திரா, மலையாளம் உள்ளிட்ட பகுதிகள் அப்பொழுது சென்னை மாநிலம். அந்த நிலையில் இதனை நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. மேலும் இரட்டை ஆட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அரசுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் மிகச் சிறிய அளவில்தான்.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற அறிவிப்பும் - சட்டமும் நீண்ட காலப் பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பு எதிர்ப்பு என்ற தொடர்ச்சியின் ஒரு கட்டமாகும்.

தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்கள் எல்லாம் சமஸ்கிருத மயமாக்கப்படவில்லையா? அதற்கு முன்பு இருந்த தமிழ்ப் பெயர்களை ஏன் சமஸ்கிருத மயமாக்கினார்கள்?

மயிலாடுதுறை எப்படி மயூரம் ஆயிற்று? திருமரைக்காடு எப்படி வேதாரண்யமாயிற்று! திருமுதுகுன்றம் எப்படி விருத்தாசலம் ஆயிற்று? திட்டமிட்ட பார்ப்பனீய சமஸ்கிருத ஆதிக்கத்தின் மேய்ச்சல்தானே!

அதே நிலைதான் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதும், அறுபது தமிழ் வருடங்களின் பெயர்கள் அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்களைக் கொண்டதும் ஆகும்.

அதற்காக எழுதி வைக்கப்பட்ட ஆபாசமான - அருவருப்பான கதையை நாம் சுட்டிக் காட்டினால், அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்காது நழுவுகிறதே, துக்ளக் உள்ளிட்ட கூட்டம்! ஏன்? ஏன்?

திரு என்ற சொல்லுக்குப் பதில் ஸ்ரீ என்று போட வேண்டும் என்று ராஜாஜி முதல் அமைச்சராக இருந்த போது 1938இல் ஆணை பிறப்பித்தது ஏன்?

பார்ப்பனர் அல்லாதவர்கள் ஆச்சாரி என்று போடக் கூடாது; ஆசாரி என்றுதான் போட வேண்டும் என்று பதிவுத் துறைக்கு உத்தரவு போட்டாரே அதே ஆச்சாரியார் - ஏன்?

இருப்பதை மாற்றி இவர்கள் உத்தரவு போடலாம். ஆனால் இருந்ததை இழந்தவர்கள் மீண்டும் மீட்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்தால் சட்டம் இயற்றினால் அதற்கு நான்கு கால் பாய்ச்சலா?

தமிழன் தோல் தடித்துக் கிடக்கிறது - பக்தி நோயால் அவன் அறிவு பாழ்பட்டுப் போய் விட்டது என்ற துணிச்சலால் தானே இவையெல்லாம் நடக்கின்றன - எதிரிகள் ரொம்பவே துள்ளுகிறார்கள்.

பெரியாரின் மாணவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் சிலர் சட்டமன்றத்தில் வாலைச் சுருட்டிக் கிடந்தார்களே, வெட்கப்பட வேண்டியதுதான். இவர்கள் இதற்குப் பின்பும் பெரியார் பெயரை உச்சரித்தால் அதைவிட வெட்கக்கேடு வேறு ஒன்றும் இல்லை. ஆமாம் இந்தத் தமிழ்த் தேசியவாதிகள் எங்கே போனார்கள்? அவர்களுக்கு ஓர் அனுதாபக் கண்ணீர்!

--------------------”விடுதலை” தலையங்கம் 2-9-2011

பிள்ளையாரை வணங்க தோப்புக்கரணம் - தலையில் குட்டிக் கொள்வது -புளுகடா புளுகு போக்கிலியே!


தீபாவளி கொண் டாடப்படுவதற்கான கதையைக் கேலி செய்து தந்தை பெரியார் ஒரு கதை சொன்னார்:

ஒரு புளுகனைப் பார்த்து இன்னொரு புளுகன் எங்கேடா உன் பையன்? என்று கேட்ட தற்கு அவன், வானம் ஓட்டையாகப் போய் விட் டது. அதை அடைக்க எறும்பைப் பிடித்து, அதன் தோலை உரித்து வானத்தில் போய் தையல், போட்டுத் தைப்பதற்குச் சென்றிருக்கின்றான் என்றானாம்.

இதற்கும், இந்தத் தீபாவளி பண்டிகைக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது என்பதைச் சிந்திக்க வேண்டுமென்கின்றேன். சிந்தனையுள்ள - பகுத்தறிவுள்ள மனிதன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடலாமா என்று சிந்திக்க வேண்டுகிறேன் (விடுதலை 29.12.1970) என்றார் அறிவாசான் தந்தை பெரியார்.

தீபாவளிக்கே இந்தக் கதையென்றால் இந்தப் பிள்ளையாராகிய விநாயகனுக்காக கொட்டிவாரி இறைத்திருக்கும் கதைகள் இருக்கின்றனவே - அப் பப்பா! சொல்லுந்தரமன்று.

பிள்ளையாரை வணங்குவதில்கூட - ஒரு வித்தியாசம்தான்; தோப்புக்கரணம் போடுவார்கள்.

தலையில் குட்டிக் கொள்வார்கள். ஏன் தலையில் குட்டிக் கொள்வார்களாம்? அதற்கும் ஒரு கதை.

அகத்திய முனிவர் சிவனிடம் இருந்த காவிரி நதியைக் கமண்டலத்தில் அடக்கிக் கொண்டு தென் திசை நோக்கி வரும்போது குடகுமலையில் சிவபூஜை செய்து கொண்டு இருந்தார். அப்போது இந்திரன் சீர்காழியில் பூஜை செய்து கொண்டிருந்தான். மழையின்றி நந்தவனம் வாடியது. நாரத முனிவர் இந்திரனைப் பார்த்து, அகத்தியருடைய கமண்ட லத்தில் உள்ள காவிரி பெருகுமானால் உன் பூங்கா பொலிவு பெறும் என்று கூறினார்.

இந்திரன் விநாயகரை வழிபட்டு வேண்டிக் கொண்டான். விநாயகர் காக்கை வடிவம் எடுத்து சென்று காவிரி அடங்கிய கமண்டலத்தின்மீது அமர்ந்தார். (சூழ்ச்சி செய்பவன் கடவுளா?) அகத்தியர் காகத்தைக் கரத்தால் ஓட்டினார். காகம் காலால் உந்திப் பறந்தது. கமண்டலம் கவிழ்ந்து காவிரி பெருக்கெடுத்து ஓடியது.

அகத்தியர் காகத்தின் மீது சீறிப் பாய்ந்தார். அது சிறுவனாகி நின்றது. அச் சிறுவனை இரு கரங்களாலும் குட்டும் பொருட்டுக் குறுமுனி ஓடினார். பிள்ளையார் அவருக்கு அகப்படாமல் அங்கும் இங்குமாக ஓடினார்.

அகத்தியர் அச்சிறுவனை அணுகிக் குட்டுவதற்கு இரு கரங்களையும் ஓங்கினார். அய்ந்து கரங்களுடன் விநாயகர் காட்சி தந்தருளினார்.

அகத்தியர் திகைத்துப் போனார். விநாயகப் பெருமானே உம்மைக் குட்டுவதற்கா கையை ஓங்கினேனே? என்று தன் தலையிலேயே குட்டிக் கொண் டார். விநாயகர் அவருடைய கரங்களைப் பற்றி இன்று முதல் என் முன் பயபக்தியுடன் தலையில் குட்டிக் கொண்டோர் கூரிய மதியும் சீரிய நிதியும் பெறுவார்கள் என்று அருளினார்.

இதனால் விநாயகர் முன் பக்தர்கள் தலையில் குட்டிக் கொள்ளும் மரபு உண்டாயிற்று.

இவ்வாறு புராணம் புளுகுகிறது.


ஏதாவது புரிகிறதா? ஊகூம்! புரியபடாது. அப்படியிருந்தால்தான் அதற்குப் பெயர் மகா தத்துவார்த்தம்.

அவனோ ஏற்கனவே பயித்தியக்காரன் - அவன் சாராயம் குடித்த நேரத்தில் தேளும் கொட்டினால் என்னவெலாம் உளறுவான் என்று தந்தை பெரியார் கேட்பார்.

இந்தப் பிள்ளையார் சங்கதிபற்றி உளறி வைத்தவனுக்கும், அந்த சாராயம் குடித்த பயித் தியக்காரனுக்கும்தான் என்ன வித்தியாசம்?


தலையில் குட்டிக் கொள்வதற்கு வேறு மாதிரியாக வேண்டுமானாலும் அர்த்தம் செய்து கொள்ளலாம்.

இந்தக் கேவலமான - அறிவுக்கு சிறிதும் சம்பந்தமற்ற நம்பிக்கைகளில் அறிவைத் தொலைத்து விட்டோமே என்ற முட்டாள்தனத்தை எண்ணி, எண்ணி அதன் அறிகுறியாக தலையில் குட்டிக் கொள்வதாக எடுத்துக் கொள்வோமே!

--------------------"விடுதலை” 2-9-2011

செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்தநாள்


பெரியார் பெரு விழா நடக்கட்டும்! நடக்கட்டும்!!

வரும் செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியார் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்தநாள். தந்தை பெரியார் மறைவுற்று 38 ஆண்டுகள் ஓடிய நிலையிலும் தந்தை பெரியார் அவர்களை நினைக்காத நிமிடம் இல்லை. அவர்களின் கொள்கைகள் மனித குலத்துக்கே தேவையானவை என்று உணரப்படுகின்றன.

கடவுள், மதத்தின் பெயரால் சுரண்டல்கள் நடந்த வண்ணமாகவே உள்ளன.

கோயில்கள் புரோகிதக் கூட்டத்தின் சொர்க்க புரிகளாக இருந்து வருகின்றன. இந்த வசதியை விட்டுக் கொடுக்க விரும்பாததற்கு இதுவும் ஒரு காரணம் தான் உயர் ஜாதி ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொள்வது ஒருபுறம்; சுரண்டலுக்கு வசதியாக இருக்கிறது என்பது இன்னொருபுறம்.

தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டு தானிருக்கிறோம்.

உச்சநீதிமன்றம் தேவையில்லாமல் முட்டுக்கட்டையைப் போட்டுக் கொண்டு வருகிறது. அங்கு நிலுவையில் இருக்கும் வழக்கு விசாரணையை விரைவுபடுத்திட அழுத்தங்களைக் கொடுப்போம்.

இந்த 2011ஆம் ஆண்டில் ஜாதியைப் பார்த்து அர்ச்சகர்கள் நியமனம் என்பது எவ்வளவுக்கேடு கெட்டதனம்?

சமூக நீதிக்காக ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்கிற அளவுகோலைப் பயன்படுத்தினால் அய்யயோ - ஜாதியை வளர்க்கிறார்களே என்று காட்டுக் கூச்சல் போடும் பார்ப்பன - புரோகிதக் கூட்டம் கோயிலுக்குள் அர்ச்சகராக மட்டும் ஜாதியின் அடிப்படையில் இருந்தே தீர வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறார்கள். இந்த இரட்டை வேடத்தைக் கவனிக்க வேண்டும்.

மதச் சம்பிரதாயங்களில்கூட எத்தனை எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தானிருக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்ற சம்பிரதாயம் இருக்கவில்லையா? அது இப்பொழுது மாற்றம் பெற்றிருக்கிறதே - எப்படி?

கோயில் உள்ளே சென்றிட உரிமை பெற்றபின் கர்ப்பக்கிரகத்துக்குள் செல்ல தேவையானவற்றைக் கற்ற நிலையில்கூட நுழையக் கூடாது என்றால், இனியும் அனுமதிக்க முடியாது - மனித உரிமை என்ற தந்தை பெரியார் அவர்களின் கோட்பாட்டின் கீழ் இது வரும்.

சமூக நீதிக் களத்தில் இன்னும் எட்டப்பட வேண்டிய இலக்குகள் ஏராளம் உள்ளன. வட மாநிலங்களில் இத்திசையில் போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில், தந்தை பெரியார் தத்துவங்களை அங்குக் கொண்டு போவதற்கான முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் கூட வாரணாசிக்கு கழகத் தலைவர் சென்று அதற்கான அடித்தளத்தை அமைத்து விட்டு வந்துள்ளார். அய்யாவின் வகுப்புரிமை பற்றிய கருத்துகள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டு, நூல்கள் அச்சிடப்பட்டு அங்கு விநியோகிக் கப்பட்டுள்ளன.

மூன்றாவதாக மதவாதம் சமூகத்திலும், அரசியலிலும் அத்துமீறி நுழைந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும்கூட இந்த வகையில் அச்சுறுத்தல் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.

அதற்கு மாற்றாக தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைக் கதிர் அனைத்துத் திசைகளிலும் கொண்டு செலுத்தப்பட வேண்டிய கால கட்டம் இது.

டில்லி பெரியார் மய்யமும் பெரியார் பன்னாட்டு மய்யமும் இணைந்து இதில் செய்யக் கூடியவை திட்டமிடப்பட்டு வருகின்றன. பெரியார் பன்னாட்டு மய்யம் வேறு சில நாடுகளிலும் கிளைகளை உருவாக்கி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பகுத்தறிவுப் பகலவனின் சிந்தனை வெளிச்சம் தேவைப்படுகிறது. நமது வெளியீடுகளும் வேகமாக பல மொழிகளில் கொண்டு வரப்பட உள்ளன.

தமிழர்களுக்கென ஒரு உன்னதமானது - தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - தன்மான உணர்வுக்கும், சமூக நீதிக்கும் பட்டை தீட்டக் கூடிய விழா.

தமிழர் பண்பாட்டு அடிப்படையில் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு. இரண்டையும் வீட்டுக்கு வீடு கொண்டாடுவோம்.
தமிழ்நாட்டில் உள்ள ஆட்சி அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு, திராவிட என்ற இனச் சுட்டையும் பயன்படுத்திக் கொண்டு அடிப்படைக் கொள்கை களுக்குக் குழியை வெட்டிக் கொண்டு இருக்கிறது. பிரச்சாரப் பலத்தால் இதிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது முதல், கலாச்சார சீரழிவுகளிலிருந்து காப்பாற்றப்படுவது வரை பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

தந்தை பெரியார் சிந்தனை முழுமையான அளவுக்குப் பரவி பலம் பெறும் நிலையில்தான் சமதர்ம சமத்துவ சமுதாயமும் சீரழிவுக்கு இடமில்லாத போக்கும் உறுதிப்படுத்தப்பட முடியும்.

வீடெல்லாம் விழாக் கோலம் பூணட்டும் - வீதியெல் லாம் கொள்கை முழக்கம் கேட்கட்டும்! கேட்கட்டும்!!

--------------------" விடுதலை” தலையங்கம் 1-9-2011

1.9.11

விநாயகர் சதுர்த்தியில் பிறந்தார் என்கிறார்களே! எந்த ஆண்டு பிறந்தார் ?

கேள்வி: சேமிப்பு உணவு தானியங்களை எலிகள் பாழடித்து விடுகின்றன. சிலர் பட்டினியால் சாகக் கூடிய நிலை இருந்தும், பம்பாய் தானாபந்தர் பகுதியில் பெரும் வியாபாரிகள், அந்த நகர சபையின் எலி ஒழிப்புத் திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பிரதமர்: பம்பாயிலா அப்படி நடக்கிறது?

கேள்வியாளர்: ஆம். பம்பாயில்தான்.

பிரதமர்: எனக்குத் தெரியாது அதுபற்றி நான் கவனிக்கிறேன். அவர்கள் ஏன் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?

கேள்வியாளர்: மத உணர்ச்சி அடிப்படையில் எதிர்க்கிறார்கள்.

பிரதமர்: எலி ஒழிப்பிலுமா மத உணர்ச்சி?

கேள்வியாளர்: ஆமாம், எலி ஒழிப்பில்தான் மத உணர்ச்சி இது அங்கு நிறைய இருக்கிறது. இதை நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும்.

பிரதமர்: இது மிகவும் வருத்தத்திற்குரியது. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கின்றன இவர்கள் இப்படி எல்லாம் எதிர்ப்பு தெரிவிப்பதினால் தான் அந்தப் பிரச்சனைகளை வெல்ல முடியவில்லை.
- பிளிட்ஸ் ஏட்டுக்கு பிரதமர் இந்திரா காந்தி அளித்த பேட்டி

(26.2.1977ஆம் தேதி இதழிலிருந்து)

மும்பையில் பாலகங்காதா திலகர் ஊட்டிவிட்ட தப்பான மத உணர்ச்சி - வெறி (எலி விநாயகர் வாகனமாம்! நூற்றாண்டு கடந்தும் அம்மக்களைத் துரத்தி யடித்து நாள்தோறும் வீழ்த்திக் கொண்டு இருக்கிறது!

இன்றும்கூட விநாயகர் ஊர்வலம் என்று கூறி சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறி முழக்கங்கள் வேட்டுச் சத்தமாக இருப்பதை அறிய முடியும்.

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலங்கள் உள்ள பாதையில் ஊர்வலத்தை நடத்திட அனுமதி கேட்பது - காவல்துறை அனுமதி மறுப்பது - ஒப்புக் கொள்வது - அதே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட பிள்ளையார் ஊர்வலப் பாதையை மீறி, சிறு பான்மையினர் பகுதிக்குள் நுழைவது - காவல் துறை தடுப்பது - மறியல் செய்வது - கைதாவது (திருவாளர் ராமகோ பாலன் என்ற விளம்பரப் பிரியரின் ஸ்டன்டுதான் இது! என்ற நாட கங்கள் ஆண்டுதோறும் தமிழ் நாட்டின் தலைநகரிலே நடந்து கொண்டு தானே இருக்கிறது. சமீப காலமாக இதனை மாற்றி 50 அடி, 60 அடி, 100 அடி உயரத்தில் விநாயகர் கட் அவுட்டு களைச் செய்து ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பது என்றாகி விட்டதே.

பிள்ளையாரிலும் எத்தனை எத்தனை வகை. இவர்கள் சூட்டும் பிள்ளையார் பெயர்கள் எந்தப் புராணத்திலும் கிடையவே கிடையாது.

இவர்களே கார்கில் பிள்ளையார் என்பார்கள், (கையில் துப்பாக்கியுடன்) ஹசாரே பிள்ளையார் என்கிறார்கள் இப்பொழுது. மனதுக்கு என்ன வெல்லாம் தோன்றுகிறதோ அந்தப் பெயர்களையெல்லாம் சூட்டுவார்கள். இதுபற்றி எந்த ஆன்மிக வியாதிகளும் வாய் திறப்பதில்லை. அந்த ஊர்வலத்தில் பார்த்தால் பெரும்பாலும் பெருங்குடி மக்கள்தான்! ஆட்டபாட்டம் அப்பொழுதுதானே கன ஜோராக இருக்கும்!

கடவுள் உருவமற்றவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு இத்தனை இத்தனை உருவங்களில் கடவுள்கள் - அவற்றிற்குத் தலப் புராணங்கள்!

அது சரி விநாயகர் சதுர்த்தியில் பிறந்தார் என்கிறார்களே! எந்த ஆண்டு பிறந்தார் என்ற பிறந்த தேதியை ஏன் இதுவரை சொல்லவில்லை?

அவர் பிறப்பதற்குமுன் நாட்டில் கடவுளே கிடையாதா?

இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் விதாண்டாவாதமாம்.

ஒரு சேதி தெரியுமா? விநாயகர் ஒரு நாள் சமுத்திரஸ் நாணம் செய்யப் போன போது கடல் நீரை அப்படியே துதிக்கையால் உறிஞ்சி பின் சிறுநீராகக் கழித்து விட்டாராம். அன்று முதல்தான் கடல் நீர் உப்புக் கரிக்க ஆரம் பித்து விட்ட தாம். சிரியுங்கள்! நன்றாகச் சிரியுங்கள்!!

---- -------------- மயிலாடன் அவர்கள் 1-9-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

பிள்ளையார் கடவுள்தானா?


ஒரு கடவுளுக்குப் பல பிறப்பா? விநாயகன் கதைகளைக் கேளீர்!

1. முரண்பட்ட வரலாறு

பிள்ளையார்பற்றிய கதையை விளக்க வேண்டியது அவசியம். இந்த உண்மையை உணர்ந்தபின் பிள்ளையார் கடவுள்தானா? பிள்ளையார் பொம்மையை உடைத்ததனால் பெரியார் அவர்கள் என்ன அடாத செயலைச் செய்து விட்டார் என்பதைத் தெளிவாக உணர முடியும்.

புராணக் கதைகளில் கணபதியின் பிறப்பே பல்வேறு விதமாகக் கூறப்பட் டுள்ளது. எது உண்மை என்பதை யாரும் கூற முடியாது. ஆனால், ஒன்று தெளிவு. கற்பனையின் விளைவே கணபதி. கீழ்க்கண்ட பல்வேறு கதைகள் இதைத் தெளிவாக நிரூபிக்கின்றன.


கணபதி, பெண் இல்லாமல் ஆணுக்குப் பிறந்தவர் என்றும், இதற்கு நேர் மாறாக ஆண் இல்லாமல் பெண்ணுக்குப் பிறந்தவர் என்றும் கூறப்படுகின்றன. புராணக் கதையில் கணபதியின் பிறப்பு அசிங்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. பார்வதி, தன் உடல் அழுக்கை உருண்டையாக்கி விளையாடிக் கொண்டிருந்தாளாம். அந்த உருண்டையின் மீது அவள் அன்பு சொரிய அதற்கு உயிர் கொடுத்து அதைத் தன் மகன் என்று அழைத்தாளாம்.

மற்றொரு கதை: கணபதியின் பிறப்பை வேறு விதமாகச் சித்தரிக்கிறது. பார்வதி, தன் உடல் அழுக்கைக் கழுவி அதைக் கங்கா நதியின் முகத்துவாரத்தில் உள்ள யானைத் தலை இராட்சசி மாலினியைக் குடிக்க வைத்தாளாம். இதன் விளைவாக மாலினி கர்ப்பம் தரித்த பிறகு ஒரு குழந்தையைப் பெற்றாளாம். அக்குழந்தையைப் பார்வதி எடுத்துச் சென்றுவிட்டாளாம்.

மேற்கூறிய கதைகள் அனைத்தும் கணபதிக்கு யானைத் தலை ஏன் வந்தது என்பதைத் தெளிவுபடுத்தவில்லை.

பிரம்ம வர்த்த புராணத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது. கணபதி பிறந்த நேரத்தில் சனிப் பார்வை தோஷத்தால் தலை இல்லாமல் பிறந்தானாம். கணபதியின் தாய் தன் குழந்தைக்குத் தலை இல்லையே என்று தேம்பித் தேம்பி அழ, விஷ்ணு பகவான் ஒரு யானைத் தலையை ஒட்ட வைத்தானாம். ஆனால், ஸ்கந்த புராணம் இதை மறுக்கிறது. கணபதி தன் தாயின் வயிற்றில் இருந்தபோது சிந்தூரா என்ற இராட்சசி வயிற்றினுள் புகுந்து குழந்தையின் தலையைக் கடித்து தின்று விட்டா ளாம். பிறந்த குழந்தைக்குத் தலை இல்லாமல் போகவே, அக்குழந்தை யானைத் தலை கொண்ட கஜாசுரன் என்ற இராட்சசன் தலையை வெட்டி தன் கழுத்தில் ஒட்ட வைத்துக் கொண்டதாம். தலையும், கண்ணும் இல்லாத இக் குழந்தை தனக்குத் தலை இல்லையென்பதை எங்ஙனம் உணர்ந்தது? கஜாசுரனின் தலையை எப்படி வெட்டித் தன் கழுத்தில் ஒட்ட வைத்துக்கொண்டது என்பதை ஸ்கந்த புராணம் தெளிவுபடுத்தவில்லை.

சுப்ரபேத ஆகமம் என்ற நூல் கூறுவதாவது:

சிவனும், பார்வதியும் யானைகளைப் போல் சம்போகம் செய்தார்களாம். இதன் விளைவாகப் பிறந்தது யானைத் தலைக்குழந்தையாம்.

(ஏ.எஸ்.கே. அய்யங்கார் எழுதிய பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா. என்ற நூலில் பக்கம், 365, 40, 41, 42)

2. விநாயகன் இடைக்கால வரவே!

அறிஞர்கள் சிலர் சங்க இலக்கியத்தில் விநாயகனைப்பற்றிய குறிப்பு காணப் படாததால் இடைக்காலத்தில் வந்த வழிபாடே விநாயகன் வணக்கம் என்பர். முதலாம் நரசிம்மவர்மனின், தானைத் தலைவனாகிய பரஞ்சோதியார் என்னும் சிவத்தொண்டன் இரண்டாம் புலிகேசியை வென்று அவன் தலைநகராகிய வாதாபியி லிருந்து எடுத்து வந்த கணபதியின் திருவுருவச் சிலையைத் திருச்செங்காட் டாங்குடியில் எழுந்தருளச் செய்தார் என்பர். இது உண்மைதான்.

ஞானசம்பந்தரும், பொடி நுகரும் சிறுத் தொண்டர்க் கருள் செய்யும் பொருட்டாகக் கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச் சுரத்தானே என்று பாடுகிறார்.

(டாக்டர் சோ. ந. கந்தசாமி, தமிழ்த் துணைப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஞான விநாயகர் என்னும் கட்டுரையில், பக்கம் 20)

3. பண்டை இலக்கியத்தில் விநாயகன் இல்லை

நம் தமிழ்நாட்டில் பண்டைத் தமிழ் நூல்களில் இவ்விநாயகன் வழிபாடு சொல் லப்படவில்லை. திருஞானசம்பந்தர் தன் தேவாரத்தில் விநாயகன் வழிபாட்டைப் பற்றிக் கூறியுள்ளார். உமையம்மை பெண் யானையின் வடிவு கொள்ளச் சிவபிரான் ஆண் யானை வடிவு கொண்டு யானை முகத்தை உடைய கணபதியைத் தோற்று வித்தான் என்கிறார். சிறுத்தொண்டர் பரஞ்சோதி என்ற பெயரோடு வட பகுதி யில் வாதாபி என்ற நகர்மேல் படை எடுத்துச் சென்று அந்நகரை அழித்து வெற்றி கொண்டு வந்தபோது, அங்கு சிறப்பாகக் காணப்பட்ட கணபதியின் படிமத்தையும் கொண்டுவந்து தம்மூரில் கணபதீச்சுரம் செய்து வழிபட்டார் என் பதும், வாதாபியிலிருந்து கொணர்ந்த மையால் வாதாபி கணபதி எனப் பெயர் பெற்றார் என்பதும் இங்கு நினைவு கூர்தல் வேண்டும்.

(தமிழாகரர் வித்துவான் செ. வெங் கடராமச் செட்டியார், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தன்னை நினையத் தருகிறான் என்ற கட்டுரையில், பக்கம் 17)

(மேல் இரு கருத்துகட்கும் ஆதார நூல்: சிதம்பரம் முக்குறுணி விநாயகர் திருக்குட முழுக்கு விழா மலர், 8.9.1978)

4. சிவனுக்குப் புதிய உறவு

பாடல் பெற்ற கோயில்களில், நாயன் மார் காலத்தில் விநாயகனை வைத்து வழிபட்டதாகத் தெரியவில்லை. விநாயகன் தமிழகத்துத் தெய்வம் அல்லர். முருகன் சங்க நூல்களில் இடம்பெற்றிருப்பதுபோல, விநாயகன் இடம்பெறவில்லை. விநாய கன் வழிபாடு பம்பாய் மாகாணத் தில்தான் மிகுதியாகக் காணப் படுகிறது. அம் மாகாணம் பல்லவர் காலத்தில் பண் டைச் சாளுக்கியரால் ஆளப்பட்டு வந் தது. சிறுத்தொண்ட நாயனார் சாளுக்கிய நாட்டுத் தலை நகரான வாதாபியைக் கைபற்றியபோது இப்புதிய கடவுளை அங்குக் கண்டார். தாம் முன்னர் கண்டறியாத அத் திருவுருவத் தைக் கண்டதும் வியப்புற்று அதனை எடுத்துவந்து தம் ஊரில் சீராளதேவன் கோயிலில் வைத்து வழிபடலானார். அதுமுதல் சீராளன் கோயில் கணபதீச் சுரம் எனப் பெயர் பெற்றது என்பது தெரிகிறது. இக் கணபதீச்சுரமே சம்பந்தர் பாடல்களிலும் இடம்பெற்றது. பின்னர் நாளடைவில் இப்புதிய கடவுளுக்கும், சிவபெரு மானுக்கும் உறவு முறை கற்பிக்கப் பட்டது. அதன் பயனாக விநாயகன் சிவபெருமானுக்கு முதல் திருமகனாகக் கருதப்பட்டான். இவ் விநாயகன், வாதாபியிலிருந்து குடி யேறிய தெய்வம் என்பதை வாதாபி கணபதி பஜேம் பஜேம் என்னும் ஸ்தோத்திரத்தாலும் நன்குணரலாம்.

(சைவப் பெரும்புலவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் எழுதிய சைவ சமயம் என்ற நூலில், பக்கம் 62)

-----------------தொகுப்பு: குடந்தய் வய்.மு. கும்பலிங்கன் -- “விடுதலை” 31-8-2011