Search This Blog

1.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - தென்கொரியா-சிறீலங்கா


தென்கொரியா

பொது ஆண்டுக்கு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் சோசோன் வமிச ஆட்சியில் இருந்த கொரியாவை சீனா பொது ஆண்டுக்கு 108 ஆண்டுகளுக்கு முன் தன்னுடன் இணைத்துக் கொண்டது. பிறகு 1392 முதல் 1910 வரை யி வமிசம் ஆட்சி செய்தது. 1910இல் ஜப்பான் கைப்பற்றிக்கொண்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நேசநாடுகள் கொரியாவை ஜப்பானின் பிடியிலிருந்து விடுவித்தன. கொரியாவின் வடபகுதியை சோவியத்தும் தென் பகுதியை அமெரிக்காவும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

1948இல் (வட) கொரியக் குடியரசு பிரகடனப் படுத்தப்பட்டது. 1950இல் தென்கொரியா தனது சுதந்திரத்தை அறிவித்தது. இருநாடுகளும் மோதிக் கொண்ட நிலையில் 1953இல் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் இந்த முன்றாண்டுச் சண்டையில் மாண்டவர்கள் 40 லட்சம்.

1961இல் ராணுவப் புரட்சி ஏற்பட்டது. ராணுவச் சட்டம் அமல் செய்யப்பட்டது. 1972இல் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு ராணுவத்திற்குக் கூடுதல் அதிகாரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இருப்பினும் கலவரங்களும் எதிர்க்கலவரங்களும் ஏற்பட்டன.

2000ஆம் ஆண்டில் வடகொரியத் தலைநகரில் நடந்த பேச்சு வார்த்தைகளின்படி தென் கொரியாவுக்கு எதிர்ப்பாக வடகொரியா பரப்புரை செய்வதில்லை என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. நாடுகளின் எல்லையில் இணக்கநிலை ஏற்படுத்த அலுவலகங்கள் திறக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்த முயற்சிக்காகத் தென் கொரிய அதிபர் கிம் டே ஜங்குக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

ஜப்பான் கடலுக்கும் மஞ்சள் கடலுக்கும் இடைப்பட்ட கொரியத் தீவுக் குறையின் தென்பகுதி நாடான இதன் பரப்பு 98 ஆயிரத்து 480 சதுர கி.மீ. மக்கள் தொகை 4 கோடி 89 லட்சம். கிறித்துவர்கள் 26 விழுக்காட்டினர். பவுத்தர்கள் 26 விழுக்காடு உள்ளனர். மதம் அற்றவர்கள் 46 விழுக்காடு இருக்கின்றனர்.

கொரிய மொழியும் இங்கிலீஷும் பேசப் படுகிறது. 99 விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்கள். தலைநகர் சியோல். 15-.8.-1945இல் விடுதலை நாளைக் கொண்டாடும் குடியரசு நாடு. அதிபரும் பிரதமரும் உள்ளனர். 15 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 4 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.

சிறீலங்கா

இந்நாட்டின் ஆதிக்குடியினர் தென்னிந்தியத் திராவிட இனத்தவரான புரோடோ ஆஸ்ட்ரலாயிடு இன மக்கள் என வரலாறு கூறுகிறது. பொது ஆண்டுக்கு 500 ஆண்டுக்கு முன்பு இந்திய ஆரியர்கள் இங்கு நுழைந்தனர். 19ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டிலிருந்து தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்வதற்காகத் தொழிலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

13ஆம் நூற்றாண்டிலிருந்து 15ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாடு, மலாயா, சீனா போன்ற நாடுகள் இலங்கையின் மீது படையெடுத்தன. 1505இல் போர்த்துகீசியர் வந்திறங்கி 1619ஆம் ஆண்டில் ஏறத்ழ நாடு முழுவதையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர். அவர்கள் டச்சு நாட்டு உதவியுடன் வெளியேற்றப்பட்டனர். 1796இல் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி தனது அதிகாரத்தைப் பிரிட்டனிடம் ஒப்படைத்தது. 1808இல் பிரிட்டனின் குடியேற்ற நாடாக இலங்கை ஆகியது.

1948 பிப்ரவரி 4 இல் இலங்கைக்கு விடுதலை அளிக்கப்பட்டது. 1972இல் நாட்டின் பெயரை சிறீலங்கா என்று மாற்றிக் கொண்டனர்.

இந்தியாவுக்குத் தெற்கே இந்திய மாக்கடலில் அமைந்துள்ள தீவு நாடான இதன் பரப்பு 65 ஆயிரத்து 610 சதுர கி.மீ. மக்கள் தொகை 2 கோடியே 3 லட்சம். பவுத்தர்கள் 70 விழுக்காடு. இந்து மதத்தினர் 15 விழுக்காடு. கிறித்துவர்கள் 8 விழுக்காடு. முசுலிம்கள்7 விழுக்காடு உள்ளனர்.

ஆரிய இனத்தவரான சிங்களர்களின் சிங்கள மொழி மட்டுமே ஆட்சி மொழி. தமிழ் நாட்டு மொழி மட்டுமே. சிங்களம் 74 விழுக்காடு மக்களால் பேசப் படுகிறது. மக்களில் 92 விழுக்காடு பேர் படிப்பறிவு பெற்றவர்கள். குடியரசு ஆட்சி முறை. நாட்டின் தலைவரான அதிபரே ஆட்சியின் தலைவரும் கூட.

வறுமைக்கோட்டுக்குக் கீழே 22 விழுக்காடு மக்கள் உள்ளனர். 9 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.

---------------------"விடுதலை" 31-7-2009

பெரியாருக்கு முன் -பெரியாருக்குப் பின்




ஒரு காலத்தில் அக்கிரகாரத்திற்குள் தபால்காரரை அனுமதிக்காத நிலை இருந்தது
பழங்கால நிலையை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் உரை


ஒரு காலத்தில் அக்கிரகாரத்திற்குச் சென்று தபால் கொடுக்கின்ற உரிமை தபால்காரர்களுக்கு இல்லையே. அந்த சமூக அவலத்தை மாற்றியவர் தந்தை பெரியார் என்று கூறி விளக்கவுரையாற்றினார் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள். உரத்தநாடு வட்டம் கண்ணுகுடி மேற்கில் 18.7.2009அன்று நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இந்தப் பகுதியிலே இருக்கக் கூடியவர்களுக்குக் கூட வரலாறு தெரியாது. ஓர் ஆணைக்காகத் திட்டமிட்டு, இரண்டு பார்ப்பன நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்திலே இவரைப் பற்றித் தாறுமாறாகத் தீர்ப்பு எழுதினார்கள்.

கலெக்டரின் எதிர்காலமே பாழ்!

ஆர்.எஸ்.மலையப்பனுடைய எதிர்காலமே பாழாகும் என்பதை மனதிலே கொண்டு அந்த உள்நோக்கத்தோடு இவரைப் பற்றித் தாறுமாறாகத் தீர்ப்பு எழுதிய நேரத்திலே, கலெக்டர் மலையப்பன் அவர்களைப் பார்த்திராத தந்தை பெரியார் ஒரு பிற்படுத்தப்பட்ட சமுதா-யத்தைச் சார்ந்தவர், பார்ப்பனர் அல்லாதவர்; இவ்வளவுதான் தெரியும் தந்தை பெரியார் அவர்களுக்கு. வேறெதுவும் தெரியாது.

நம்மவர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்ட ஒரு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். அப்படிப்பட்ட ஒருவர் உத்தியோ-கத்திற்குத் தட்டுத் தடுமாறி இவ்வளவு பெரிய நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

அவரையும் கீழே தள்ள வேண்டும் என்று பார்ப்பனர்கள் திட்டமிட்டு நடக்கிறார்களே என்பதை பெரியார் அறிந்தார்கள்.

உயர்நீதிமன்றத்தைக் கண்டித்துப் பேசினார்

உயர்நீதிமன்றத்தைக் கண்டித்து யாரும் பேச முடியாது. அப்படி கண்டித்தால்அது நீதிமன்ற அவமதிப்பாகிவிடும் என்று சொல்லி நடவடிக்கை எடுப்பார்கள். யாருக்கும் துணிச்சல் வராது. தந்தை பெரியார் திருச்சியிலே டவுன்ஹால் மைதானத்திலே கூட்டம் போட்டு கண்டித்து, துணிவாகப் பேசினார்கள்.அதற்காக அவர் மீது வழக்கு வந்தது. உடனடியாக அந்த வழக்கிலே வக்கீலை வைத்து வாதாடவில்லை.

ஆம்! நாம் பேசியது உண்மைதான் என்று சொல்லிவிட்டுச் சொன்னார்: பார்ப்பான் நீதிபதியாக இருக்கிற நாடு கடும் புலிவாழும் காட்டை விடக் கொடுமையானது என்று பார்ப்பன நீதிபதிகள் முன்னாலேயே படித்த பெருமை சொன்ன பெருமை தந்தை பெரியார் அவர்களைத் தவிர வேறு யாருக்கும் அல்ல!

யார் யார், எந்தெந்தப் பார்ப்பான் லஞ்சம் வாங்கி உத்தியோகத்திலே இருந்தான் என்ற ஒரு பட்டியலையே சென்னை உயர்நீதிமன்றத்திலே நீதிபதி முன்பே படித்தார்.

எங்கோ ஒரு கூட்டத்திலே பேசியதற்காக நீதிமன்ற அவமதிப்பு என்று அய்யா அவர்களை அழைத்து, அய்யா அவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தவுடனே அதையே பொதுக்கூட்ட மேடையாக அய்யா அவர்கள் மாற்றிக்கொண்டு ஆதார பூர்வமாகச் சொன்னார்.

கடைசிவரை மலையப்பனை அய்யா பார்த்ததில்லை

அதை முக மலர்ச்சியோடு ஏற்றார். சிறைக்குச் செல்லும்அன்றும் கூட இவர் மலையப்பனைப் பார்த்ததில்லை. மலையப்பன் பெரியார் அவர்களைச் சந்தித்ததில்லை.

எதற்காக இதைச் சொல்லுகிறோம் என்று சொன்னால், உங்கள் வட்டாரத்திலே தெரிந்த ஒரு பகுதி சில பேர் வயதானவர்களுக்குத் தெரியும். அந்த ஒரு நிலை எதைக் காட்டுகிறது?

ஆத்திகர்களே பெரியார் பற்றிச் சொல்லுவது

இன்னமும் உத்தியோகத்திலே தமிழர்கள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அத்தனைபேரும் கடவுளைக் கும்பிடக் கூடியவர்களாக இருக்கலாம். கோவிலுக்குப் போகக் கூடியவர்களாக இருக்கலாம். பட்டை போடக்கூடியவர்களாக, கொட்டை கட்டக் கூடியவர்களாக, நாமம் போடக் கூடியவர்களாகக் கூட இருப்பார்கள்.

ஆனாலும்அவர்களைக் கேட்டீர்களேயானால் தந்தை பெரியார் இல்லை என்றால் தன்னுடைய பையன் படித்திருக்க மாட்டான். பெரியார் இல்லாவிட்டால் வகுப்பு வாரி உரிமை வந்திருக்காது; இந்த சமூகநீதி கிடைத்திருக்காது என்றெல்லாம் சொல்வார்கள். உலகளாவிய நிலையில் பாராட்டு

எனவே சமுதாய மாற்றத்திற்குத் தந்தை பெரியார் அவர்கள் உழைத்தார்கள். அவருடைய பிள்ளைகளுக்காகவா? அல்லது அவர்களுடைய உறவினர்களுக்காகவா? பாடுபட்டார். தந்தை பெரியார் அவர்களுடைய உழைப்பு அதற்கு நன்றி காட்டுவதற்குத்-தான் இப்படிப்பட்ட ஒரு பகுத்தறிவு பகலவன் தோன்றியிருக்காவிட்டால் இருள், அறியாமை நம்மை என்றைக்குமே கவ்விக்கொண்டிருக்கும் என்ற காரணத்திற்காகத் தான் அவருக்கு எல்லா இடங்களிலும் இன்றைக்கு நன்றி காட்டுகின்ற மக்கள் உலகளாவிய நிலையிலே பாராட்டுகிறார்கள்.

மனித நேயத்தை மனித உரிமைகளுக்காகப் போராடியதை அவர்கள் சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றார்கள். அதே போல இங்கே பார்க்கின்றோம், நம்முடைய சகோதரிகள் ஊராட்சி மன்றத் தலைவர்களாக வந்திருக்கின்றார்கள்.

ஒரு காலத்திலே ஆண்களுக்கிருந்தது பதவி

ஒரு காலத்திலே ஆண்கள் மட்டுமே இருந்த பதவி பெண்கள் உள்ளே போக முடியாது என்று கருதிய பதவி இன்றைக்கு நாற்காலியிலே பெண்கள் துணிச்சலாக வந்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஊராட்சி மன்றத்திலே, மாநகராட்சி வரையிலே இருக்கிறார்கள்; சட்டமன்றத்திலே இருக்கிறார்கள்.

பெரியார் அவர்களுடைய தொண்டிற்கு என்ன கனிந்த பலன் என்று சொன்னால் இவைகள் எல்லாம் எடுத்துக்காட்டுகள். பெண்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள் என்று சொன்னால் பெரியாருடைய பெருவெற்றி!

ஒரு காலத்திலே ஆண்களுக்கு முன்னாலே பெண்கள் அமரமாட்டார்கள்; நாற்காலியிலே அமரமாட்டார்கள். செருப்புப் போட்டுக்கொண்டு கிராமத்திலே நடக்க முடியாது. எவ்வளவு திமிர் பாத்தாயா? என்றெல்லாம் சொல்வார்கள்.

1924இல் நடைபெற்ற ஒரு சம்பவம் ஆனால் இந்த மாதிரி இன்றைக்கு உச்சரித்தால் யாராவது சும்மா இருப்பார்களா? அவ்வளவு துணிச்சலோடு சந்திக்கக் கூடிய அளவுக்கு வந்தி-ருக்கிறார்கள். ஓர் உதாரணம் சொல்கிறேன். சமுதாய மாற்றத்திற்கு.

1924லே ஓர் ஆராய்ச்சியாளர் எழுதிய நூலைப் படித்தேன். தென்னார்க்காடு மாவட்டம் எங்களுடைய மாவட்டம். இப்பொழுது கடலூர் மாவட்டம் என்று அழைக்கப்-படக் கூடிய அந்தப்பகுதியிலே ஒரு கிராமம். அக்கிரகாரத்தைச் சார்ந்தது. 1924இலே ஒரு தபால்காரர் தபால் கொண்டு போய் கொடுப்பதற்காக உள்ளே நுழைய முயன்றார். அவர்கள் யாரும் அனுமதிக்கவில்லை.

இது நீதிக்கட்சிக்கு முன்னாலே இருந்த நிலை. ஏனென்றால், தபால்காரர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர். இவருடைய கை தபாலில் பட்டுவிட்டதால் தீட்டுப் பட்டுவிட்டது. எனவே அதை ஒரு கயிறிலே கட்டி இவர் கொண்டு போய்த் தூக்கிப் போடுவார்.

அக்கிரகாரத்திற்குள் தபால்காரர் நுழைய முடியுமா?

தபால்காரரை அக்கிரகாரத்திற்குள் உள்ளே விடுவதில்லை. யாராவது இந்த அளவுக்கு அழுத்திச் சொல்ல முடியுமா? ஆனால் நண்பர்களே, இன்றைக்கு எவ்வளவு மாற்றம் தந்தை பெரியார் அவர்களாலே, வந்திருக்கிறது என்று சொன்னால், இந்தியா முழுவதற்கும் தபால் துறை அதிகாரிகளையும் நியமித்து தபால் துறையையும் கண்காணிக்கிற பொறுப்பு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு ஆ.இராசா அவர்களைக் கொண்டு போய் அமர வைக்கக் கூடிய அளவிற்குக் கலைஞர் அவர்களுடைய தொண்டனாக, தோழனாக இருந்து அவர்கள் செய்திருக்கிறார்கள் என்று சொன்னால் அதனுடைய அடிப்படை என்ன?

இன்றைக்கு ஆ.இராசா உத்தரவு போடுகிறார்

ஒரு காலத்திலே அக்கிரகாரத்திற்குள் ஒரு தாழ்த்தப்பட்டவர் தபால்காரராகப் போக முடிய-வில்லை.






ஆனால், இன்றைக்கு எல்லோருக்கும் உத்தரவு போடக் கூடிய வகையிலே அதே சமு-தாயத்தைச் சார்ந்த ஆ.இராசா அவர்கள் அமர்ந்திருக்கின்றார்கள். அதே மாதிரி இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் ஒரு சிலையைத் திறக்க முடியவில்லை. இந்தியாவினுடைய இராணுவ அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்களாலே காசியிலே. அங்கே ஒரு சிலை.

ஜாதியைச் சொல்லி எதிர்ப்பு

உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் சம்பூர்ணானந்த் சிலை. பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் இராணுவ அமைச்சர். முப்படைகளுக்கும் அவர்தான் தலைவர். அவர் சம்பூர்-ணானந்த் அவர்களுடைய சிலையைத் திறக்கச் சென்றார்.

அப்பொழுது வாரணாசி பல்கலைக் கழகத்தைச் சார்ந்த மாணவர்கள் ஜெகஜீவன்ராம் அவர்களுடைய ஜாதியைச் சொல்லி கோஷம் போட்டார்கள். நீங்கள் எல்லாம் அமைச்சராகி-விட்டால் எங்களுடைய செருப்புகளைத் தைப்பதற்கு யார் ஆள் கிடைப்பார்கள்? என்று இப்படியே சொல்லி ஒலி முழக்கமிட்டார்கள்.

ஜெகஜீவன்ராமை அவமானப்படுத்தினர்

யார்? படிக்காதவர் அல்ல. பட்டமேற்படிப்பு படித்த மாணவர்கள் தான் இப்படி ஜெகஜீவன்ராம் அவர்களை அவமானப்படுத்தினார்கள். ஜெகஜீவன்ராமினாலே ஒன்றும் செய்யமுடிய-வில்லை. பொத்தானை அழுத்தி அவர் சிலையைத் திறந்தார். சிலை அருகில் நின்று ஒன்றும் அவர் திறக்கவில்லை.

சிலை தீட்டுப்பட்டுவிட்டது என்று சொல்லி, கங்கைத் தண்ணீர் ஒரு பத்து குடங்களில் நிரப்பிக் கொண்டு வந்து சம்பூர்ணானந்த் சிலை தீட்டுப் பட்டுவிட்டது. அதைப் போக்கத் தண்ணீரை ஊற்றுகிறோம் என்று ஆணவமாகச் சொல்லி ஊற்றினார்கள்.

தீட்டு மின்சாரம் வழியாக

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஜெகஜீவன்ராம். அதுவும் ஜாதித் தீட்டு எதன் வழியாகப் போயிருக்கிறதென்று சொன்னால் மின்சாரத்தில் கைவைத்தாலே அது ஷாக் அடிக்கும். ஆனால் ஜாதியைக் கண்டவுடனே மின்சாரமே பயந்து கொண்டது.

ஆகவே இவர் பொத்தானைத் தான் அழுத்தினார். ஆனால், உயர் ஜாதிக்காரருடைய சிலையைத் திறக்க உரிமை இல்லை. நேராகப் போய் அந்தச் சிலை மீது தண்ணீரை ஊற்றினார்கள். ஜெகஜீவன்ராம் அவர்கள் ரொம்ப வேதனையோடு திரும்பி வந்துவிட்டார்.

விடுதலையில் தான் எழுதினோம்

நாங்கள் தான் விடுதலையில் அந்தக் காலத்தில் எழுதினோம். அட மண்டுகளே! அந்த கங்கா ஜலத்திற்குத் தீட்டைப் போக்கக் கூடிய அளவிற்கு சக்தி இருக்கிறது என்று சொன்னால் அந்த பத்துகுடம் தண்ணீரை ஜெகஜீவன்ராம் தலையில் ஊற்றி அவரை உயர்ஜாதியினராக ஆக்கியிருக்கலாமே என்று எடுத்துக் கேட்டோம்.

அந்த ஜெகஜீவன்ராம் தமிழ்நாட்டிற்கு அடுத்த நாள் வந்தார். இங்கு பேசினார். பெரியார் பிறந்-தமண்தான் சுயமரியாதை தந்த மண். இந்த மண்ணிலே இருக்கிறவர்கள்தான் பாக்கியம் பெற்றவர்கள். நாங்கள் வடபுலத்திலே மிகப் பெரிய வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம் என்று அவர்கள் சொன்னார்கள்.

சபாநாயகர் மீராகுமார்

இன்றைக்கு உயர்ஜாதிக்காரர்கள் உட்கார்ந்த இடத்தில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பாபு ஜெகஜீவன்ராம் மகள் மீராகுமார் அவர்கள் அய்.எஃப்.எஸ் படித்து, பிறகு நாடாளுமன்ற உறுப்பினராகி, இன்றைக்கு நாடாளுமன்ற சபாநாயகராக ஆகியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் தான் அனுமதி கேட்க வேண்டும். யாராக இருந்தாலும் பேச அனுமதியில்லை, உட்காருங்கள்! என்று சொல்லக் கூடிய அளவிற்கு இன்றைக்கு அதிகாரம் படைத்தவராகத் திகழ்கின்றார் மீராகுமார் அவர்கள். ஒரு பக்கம் பெண். இன்னொரு பக்கம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்.

பெரியார்-அண்ணா-கலைஞர் உழைப்பல்லவா?

இந்த மாறுதல் எல்லாம் எப்படி வந்தது? சத்தியசாயிபாபா கையைத் தூக்கியவுடன் பொத்தென்று கீழே விழுந்ததா? அல்லது முப்பத்து முக்கோடி தேவர்களாலே ஏற்பட்டதா? நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளால் வந்ததா? அல்ல. முழுக்க திராவிடர் இயக்கம் தந்தை பெரியார், பேரறிஞர்அண்ணா இன்றைக்கு அவருடைய வழியிலே நடந்துகொண்டிருக்கக் கூடிய தலைவர் கலைஞர் போன்றவர்களுடைய அயராத பல்வேறு உழைப்புகளும், வியூகங்களும்தான் இந்த சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். சாதாரணமல்ல சாதனைகள்.

நம்முடைய பிள்ளைகளுக்கு முதலில் தன்னம்பிக்கை வேண்டும். ஆனால், இன்னமும் இந்த இயக்கம் தேவைப்படுகிறது. இன்னமும் பெரியார் தேவைப்படுகிறார். இவ்வளவு பெரிய அறிவியல் காலம் இருக்கிறது. இங்கே உட்கார்ந்திருக்கின்றவர்கள் பாதிப் பேர் கையிலாவது செல்ஃபோன் இருக்கும். இதற்கு முன்பு யாராவது தனித் தனியாகப் பேசினால் சந்தேகப்படுவோம். அவ்வளவு செல்ஃபோன் வந்தாகிவிட்டது.

செல்ஃபோனால் எத்தனை பலன்?

ஒரு ஃபோனில் பாட்டு வருகிறது. வசனம் வருகிறது. ஃபோட்டோ எடுக்கிறார்கள். ஒளிப்பதிவு செய்கிறார்கள். இன்னும் குறுஞ்செய்தி, நெடுஞ்செய்தி எல்லாவற்றையும் சேர்த்துக் கொடுக்கிறார்கள். இவ்வளவு வசதி வந்துவிட்ட பிற்பாடு செல்ஃபோனில் உருவமும் வந்துவிட்டது.

முன்பெல்லாம் யாராவது ஃபோன் பண்ணினால் நாம் ஃபோனை எடுத்து பேசும்பொழுது இல்லிங்க, அவர் வெளியே போயிருக்கிறார் என்று சொல்வோம். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லாத அளவுக்கு உருவமே வந்துவிடும். பொய் சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு உருவம் ஃபோனில் வந்தாகிவிட்டது. செல்ஃபோனிலேயே செய்தியைப் பதிவு பண்ணக் கூடிய அளவுக்கு வந்தாகிவிட்டது.

இவ்வளவு அறிவியல் வந்திருக்கிறது. முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? சரசுவதிக்கும், நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? ஆனால், நம்மாள் என்ன பண்ணுகிறான்? இன்னமும் சரசுவதி பூஜை கொண்டாடிக் கொண்டிருக்கின்றான்.

அவ்வளவு அறிவியல் வளர்ந்த காலம். இங்கே ஒலிபெருக்கி இருக்கிறது. வீடியோ எல்லாம் எடுக்கிறார்கள். இது அவ்வளவும் பதிவாகிறது. இந்த ஃபேன் சுற்றுகிறது.

------------------------"விடுதலை" 31-7-2009

பாவேந்தரின் நகைச்சுவை உணர்வும் - வைணவ உணவும்




வைணவ உணவு

பாவேந்தர் ஒரு சமயம் கடலூரில் ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார்.

அதே கூட்டத்தில் டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனமும் கலந்து கொண்டார்.

அன்று இரவு சுமார் 8 மணி அளவில் கடலூரில் இருந்து பாண்டிக்கு வந்த பேருந்து நடத்துநர் ஒருவர், பாவேந்தரின் பழனியம்மா அச்சகத்திற்கு வந்து, இதைக் கவிஞர் சாமி பழனியப்பனிடம் கொடுக்கச் சொன்னார்கள், என்று கூறி, என்னிடம் ஒரு கடிதத்தைத் தந்தார்.

நான் கடிதத்தைப் பிரித்துப் படித்தேன்.

அன்புள்ள பழனியப்பனுக்கு, இரவு கூட்டம் முடிந்ததும், தோழர் டார்பிடோவும் நானும் கடைசி வண்டியில் வருகிறோம்;

எங்களுடன் இன்னும் இருவரும் வருவார்கள். எனவே, நான்கு அல்லது அய்ந்து பேருக்கு வைணவ உணவு தயாரித்து வைக்கச் சொல்லவும்.

கடிதத்தைப் படித்து முடித்ததும், பாவேந்தரின் நகைச்சுவையை எண்ணிச் சிரித்தேன்.

ஆம். அசைவ உணவைத்தான், அவர் வைணவ உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.

பாவேந்தர் வீட்டிற்குச் சென்று விஷயத்தைச் சொல்லி நான்கு பேருக்கு அசைவச் சாப்பாடு சமைத்து வைக்கும்படி அம்மா அவர்களிடம் சொல்லி ஏற்பாடு செய்தேன்.

பிறகு, பாவேந்தரும், டார்பிடோவும், இன்னும் இருவரும் வந்தனர்.

டார்பிடோ என்னைப் பார்த்துப் புன்னகைத்தவாறே, என்ன சாப்பாடு? என்றார்.

நான் சிரிப்பை அடக்கிக் கொண்டு வைணவம்தான் என்றேன்.

அப்புறமென்ன? இந்த நகைச்சுவை விருந்தில் அனைவருமே கலந்து கொண்டோம்.


--------------------- கவிஞர் சாமி பழனியப்பன் எழுதிய நினைவு மலர்கள் நூலிலிருந்து

ஆடிப் பதினெட்டாம் நோன்பினால் மக்கள் அடையும் பலன் என்ன?




ஆடி பதினெட்டாம்!

(பாரதப் போர் நடந்தது ஆடி மாதத்தில்தானாம். ஆடி பதினெட்டு அதற்காக நடைபெறுகிறாம். பாரதப் போர் நடந்தது பஞ்சாபில். ஆனால் அங்கு ஆடி பதினெட்டு கொண்டாடப்படு வதில்லை. பாரதப் போருக்கு சம்பந்தமே இல்லாத தமிழ் நாட்டில் விழா ஏன்?)

ஆடிபதினெட்டாம் நாளன்று காவிரியாறு பாயும் ஜில்லாக்களிலுள்ள மக்கள் பலர் நோன்பு நாளெனக் கொண்டாடுகின்றனர். அன்று கொண்டாடப்படும் நோன்பின் கருத்தென்ன? இந்நோன்பால் திராவிட நாட்டு மக்கள்அடையும் பலன் என்ன? இந்நோன்பு திராவிட நாட்டவருக்கு உரியதுதானா? என்பவைகளைப் பற்றி மக்கள் சிறிதேனும் சிந்திப்பது கிடையாது.

எதனையும் ஆராய்ந்து உண்மையா பொய்யா? வேண்டப்படுவதா அல்லவா? நமக்குரியதா இல்லையா? என்பவற்றை எண்ணிப் பாராமல், பகுத்தறிவை இழந்து, எவர் சொன்னாலும், எதில் எழுதி வைத்திருந்தாலும் அவற்றை அப்படியே அனுஷ்டித்தல் என்னும் மூடக் கொள்கைக்குத் திராவிட மக்கள் ஆட்பட்டுவிடும் கொடிய வழக்கம் இந்நாட்டில் வேரூன்றி விட்டபடியால்தான், திராவிட மக்கள் மீளா அடிமைத்தனத்திலும் வறுமையிலும் சிக்கித் தப்ப வழி காணாது தவித்து, மேலும் மேலும் அவ்வடிமைத் தனந்தான் சிறந்ததெனக் கூறி, அதிலேயே திளைத்துக் கிடக்கும் நிலைமையை அடைந்து விட்டனர்.

ஆடிபதினெட்டாம் நோன்புக்கு உட்கருத்து இருவகையாக வருணிக்கப்படுகிறது.

1. பாரதப் போர் நடந்தது இந்த ஆடி மாதத்தில் தானாம். ஆடி முதல் தொடங்கி 18 ஆம்தேதி வரை போர் நடந்து 18 ஆம் நாள் பாண்டவர் வெற்றி கொள்ளப் போர் முடிவுற்றதாம். இப்போரில் பாண்டவர் தரப்பில் தமிழ்நாட்டு மன்னன் ஒருவனும் சேர்ந்து, பாண்டவர் படைக்கு உணவுப் பஞ்சம் வராதிருக்கவும், உணவுப் பிரச்சினையால் பாண்டவர் படை பீதியுற்றுத் தோல்வியடைந்து விடாதிருக்கவும் வேண்டிப் பெருஞ் சோறிட்டான் என வில்லிபாரதம் சான்று கூறுகிறது. எனவே, தமிழ் மன்னன் சம்பந்தம் கொண்ட அந்த பாரதப் போர் பாஞ்சாலத்தில் 18 நாள் நடந்து முடிவில் பாண்டவருக்கு வெற்றியுடன் முடிந்த இந்நாள், இங்கே, காவிரியாற்றங்கரையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறோம்.

பாரதப் போர் நடந்தது பஞ்சாபில். ஆனால் கொண்டாட்டம் காவிரியில். பஞ்சாபில் பாயும் பாஞ்சால நதியிலும் இக் கொண்டாட்டமில்லை; அதற்கருகே பாயும் கங்கையாற்றங்கரைகளிலும் இக் கொண்டாட்டமில்லை. காவிரியில் மட்டும் வந்து முளைத்துக் கொண்டிருப்பதன் கருத்தென்ன?

2. இரண்டாவதாக, இதற்குப் புலவர்கள் ஒரு கதை கூறுகின்றனர். தமிழ் நாட்டில் மும்முறை கடல் கோள் ஏற்பட்டதென்று ஆராய்ச்சியாளர்கள் மொழிகின்றனர். இறுதிக் கோள் ஏற்படு முன் குமரியாறு, பஃறுளியாறு என்பவைகள் இந்நாட்டில் இருந்ததாகவும் அவை கடற்கோளால் மறைந்துபோன பின்னர்த் தமிழ்நாட்டின் நில முனைக்குக் குமரியாற்றின் ஞாபகார்த்தமாகக் குமரி முனை என்னும் பெயர் இடப்பட்டதாகவும், அக்கடல் கோள்களில் ஞாபகார்த்தமாகவே ஆடிப் பதினெட்டாம் பெருக்கில் நோன்பு அனுஷ்டிக்கப் படுகிறதென்றும் கூறப்படுகிறது.


இந்தக் கருத்தேனும் பொருத்தமாகவோ, பகுத்தறிவிற்கேற்றதாகவோ, மக்களுக்குப் பயன் படுவதாகவோ இருக்கிறதா என்று பார்த்தால் அதுதான் குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஏதேனும் ஒரு பகுத்தறிவுக் கொவ்வாத காரியம் நாட்டில் நடைபெறுவதாயிருந்தால், அதனை ஏற்க மறுத்து, அது முட்டாள்தனமாகத் திராவிடத்தில் நுழைந்துவிட்ட செயல் என வெளிப்படையாக எடுத்துரைத்து, அதனைக் கண்டித்து ஒழிக்கும் ஆண்மை நம் புலவர்களுள் பலருக்கு ஏற்படுவதில்லை. இத்தகைய செயல்களைப் பகுத்தறிவாளர்கள் கண்டித்து ஒழிக்க முற்படுங்கால், உடனே இப்புலவர்கள் விழுந்தடித்துக் கொண்டு எழுந்தோடி வந்து, அதற்குப் புத்துரைகள், தெளிவுரைகள், விரிவுரைகள், விளக்கவுரைகள் ஆகியவை கூறி, சங்க இலக்கியச் சான்றுகளை எடுத்து வீசி, அச்செயல் திராவிட மக்களுடையதென நிலை நாட்டத் தாங்கள் இந்த பிரிட்டிஷ் ஆட்சியில் கற்ற விஞ்ஞான வித்தைகளையெல்லாம் புகுத்தி, தங்கள் அறிவையும் காலத்தையும் பாழ்ப்படுத்திக் கொண்டு பிற மக்கள் முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாக அமைந்துவிடுகின்றனர். பகுத்தறிவாளர்களான புலவர்கள் சிலர் ஆண்மையுடன் வெளிவந்து, இப்புலவர்களின் அறியாமையை வெளிப்படுத்தினால், அப்புலவர்களுக்குத் தங்களாலான இடுக்கண்களை யெல்லாம் செய்யவும் இவர்கள் தயங்குவதில்லை.

போகட்டும்; ஆடிப் பதினெட்டாம் நோன்பு கொண்டாடப்படுவது பாரதப் போர் முடிவை ஒட்டியதாக இருந்தாலும் சரி; அல்லது தமிழ் நாட்டில் ஏற்பட்ட கடல்கோள்களின் ஞாபகார்த்தமாக இருந்தாலும் சரி, இதனால் மக்கள் அடையும் பலன் என்னவென்றுதான் நாம் கேட்கிறோம்.

இந்த ஆடிப்பதினெட்டாம் நாளன்று காவிரி ஆற்றங்கரை நெடு மக்கள் குழுமி, பகுத்தறிவுக்கு ஏற்கத்தகாத செயல்களைச் செய்து, மேலும் மூட நம்பிக்கையில் ஆழ்ந்து போவதைத் தவிர, புலவர்கள் கூறும் கருத்தோ அன்றிப் பிறவோ அம்மக்களுக்குத் தெரியுமா? ஆடி நோன்பு வந்தால் ஏழு கன்னி கும்பிட்டு, மஞ்சள் நூல் கட்டிக் கொள்வதும், முளைகளை ஆற்றில் விடுவதும், ஆற்று மணற் பிள்ளையாருக்கு அரிசிப் படையலிடுவதும் அழுக்கேறி மூலை முடுக்குகளில் அடைந்து கிடக்கும் உதவாச் சாமான்களை எரித்து ஆற்றில் தள்ளுவதுமான செயல்களைத் தவிர்த்து வேறென்னதான் நடைபெறுகிறது? வருமானத்தைக் கருதிப் பார்த்தால் புது மாப்பிள்ளைகள் பாடு கொண்டாட்டமாயிருக்கலாம். அதைத் தவிர, அறிவுக்குப் பயன் தரும் செயலோ, மக்களை உயர்த்தும் முறையோ, நாட்டுக்கு நலன் உண்டாக்கும் நாட்டமோ இதிலே அறவே கிடையாதென்பது நன்கு புலனாகிறது.

இதற்குப் பதிலாக, மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று குழுமி நெருக்கத்தில் இடிபட்டும், உதைபட்டும், காதறுந்தும், மூக்கறுந்தும், நகைகளை இழந்தும் தவிக்கும் காட்சிகளும், புது வெள்ளத்தில் குளிப்பதால் உடல் நிலை கெட்டுப் பின்னர்ப் பலநாள் வரை மருந்தும் கையுமாகத் திரிவதும்தான் ஆண்டு தோறும் இதனால் ஏற்படும் கண்கண்ட பலனாக இருக்கிறது.

எனவே, இனியேனும் தமிழறிஞர்களும், மக்கள் நலனில் ஆர்வ மிக்காரும் முன் வந்து, வெற்றுரைகளை வீம்புக்கேனும் கூறிக்கொண்டிருத்தலை விட்டு, பகுத்தறிவு வாதிகளுடன் ஒன்றுபட்டு நின்று, இம் மூடத்தனமாக செயல்களை அறவே நிறுத்திவிடுமாறு மக்களைத் தூண்டித் திருத்தும் நற்றொண்டு புரியத் துணிவு கொள்வார்களாக என்று கேட்கிறோம்.

திராவிட நாடு பெருமையுற்று,-உன்னத நாகரிகமும், கலைச் சிறப்பும் கொண்டது என்ற தனிப் பெரும் பண்டைப்பண்பைப் பெற்று, உலக நாகரிக நாடுகளுள் இதுவும் ஒன்றென நிமிர்ந்து நிற்கவேண்டு மானால், இத்தகைய அறிவுக் கொவ்வாத மூடச் செயல்களுடைய விழாக்கள் அனைத்தும் தமிழ் நாட்டினின்று அறவே அகற்றப்படவேண்டும். இதற்குச் சான்றுகள் காட்ட சங்க இலக்கியங்கள் தேவையில்லை.

--------------------------"விடுதலை"- தலையங்கம் 3.8.1943,

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உடைமைகள்



கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிவதா?


தந்தை பெரியார் அவர்களின் நூல்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உடைமைகள் என்பதை தந்தை பெரியார் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள்.

ஸ்தாபனத்திற்கு உள்ள சொத்துகள் ஒரு லட்ச ரூபாய்தான். அதாவது சில கட்டடங்கள் 2 அச்சு நிலையங்கள், 2 பத்திரிகைகள், புத்தகங்கள், உரிமைகள், ரொக்க நிதிகள் (விடுதலை, 2.10.1952).

இதன்மூலம் பெரியார் அறக்கட்டளையின் சொத்துகள் என்பதில் பத்திரிகைகளும், புத்தகங்களும் வந்துவிட்டனவே!

பெரியார் எழுதி வைத்துள்ளாரா என்று கேட்கும் கோணல் புத்திக்காரர்களுக்குப் புத்தி கற்பிக்க இந்தப் பகுதி போதுமானதே!

தோழர் வே. ஆனைமுத்து அவர்களை பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்ட பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் (மூன்று தொகுதி) கூட தந்தை பெரியார் அனுமதி பெற்று தொகுக்கப்பட்டவைதான்.

இதுகுறித்து அந்நூலின் முதல் தொகுதியில் பதிப்பாசிரியர் முன்னுரையில் பதிப்பாசிரியர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

பெரியார் அவர்களின் சொற்பொழிவுகளையும், எழுத்துகளையும் தொகுக்கும் பணியினை சிந்தனையாளர் கழகத்தார் அன்புடன் என்பால் ஒப்புவித்தனர். இந்த ஏற்பாடுகள் அனைத்துக்கும் பெரியார் அவர்கள் மனமுவந்து 9.1.1972 இல் முழு ஒப்புதல் அளித்தார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே!

இதிலிருந்து தெரியும் உண்மை பெரியார் எழுத்துகளை வெளியிடுவதாக இருந்தால், சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் தேவை என்பது பாலபாடம்.

தந்தை பெரியார் மறைந்த நிலையில், தமது சொத்துகள் பெரியார் நூல்கள், பத்திரிகைகள் என்று குறிப்பிடப்பட்ட நிலையில் (விடுதலை, 2.10.1952) அந்தச் சொத்துகளுக்கு உரிமை உடையதான பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் அனுமதியைப் பெறுவது என்பது கட்டாயமாகிவிட்டதே!

பெரியார் எழுத்துகளை வெளியிட விரும்புவோர், தந்தை பெரியார் அவர்களின் இந்த ஏற்பாட்டை மதிக்கவேண்டாமா?

தந்தை பெரியார் அவர்களின் எழுத்துகள் மட்டுமல்ல, உலகில் பல தலைவர்களின் எழுத்துகள் எல்லாம்கூட இந்த வகையில்தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்க நாட்டின் மசாசூசெட்டில் உள்ள டெக்கான் பதிப்பகம், காந்தியாரின் சத்திய சோதனை (My Experiments with Truth) என்ற தன்வரலாற்று நூலை நவஜீவன் அறக்கட்டளையுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளது. அது ஒன்றுதான் அமெரிக்காவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட பதிப்பாகும். இந்த வெளியீட்டுக்கான அனுமதி நவஜீவன் அறக்கட்டளைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி நூல்கள் வர்த்தமானன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

அந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் பகுதி மிகவும் முக்கியமானதாகும்.

நவஜீவன் அறக்கட்டளை அனுமதியுடன் அருட்செல்வர் டாக்டர் நா. மகாலிங்கம் அவர்களின் ஆணைப்படி வெளியிடப் பெறுகிறது

என்று குறிப்பிடப்பட்டுள்ளதே!

இதன் பொருள் என்ன? பொருளோடு சிந்திப்பவர்களுக்கு விளங்காமற் போகாதே!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நூல் வெளியீட்டுப் பதிப்பகம் பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் The Discovery of India என்ற ஆங்கில நூலை வெளியிட்டுள்ளது. இப்பதிப்பின் அனைத்து உரிமைகளும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நூல் வெளியீட்டுப் பதிப்பகத்திற்கே உரியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் எழுத்து மூலமான அனுமதியின்றி எவரும் நூலாக வெளியிடவோ, மின்னணு தொழில்நுட்பம் மூலமாகவோ அல்லது பிரதி எடுக்கும் இயந்திர வழியிலோ, பதிவு செய்யவோ தேவைப்படும்போது எடுத்துக்கொள்ளும் வகையில் தகவல் பதிவு செய்யவோ கூடாது என்று அந்த நூலிலேயே அச்சிடப்பட்டுள்ளதே.

ஒரு நூலை மட்டுமல்ல; அதன் ஒரு சிறு பகுதியை வெளியிடக்கூட முன் அனுமதி பெறவேண்டும் என்று கூறப்பட்டு இருப்பதை ஒரு முறைக்கு இருமுறை படிக்கட்டும்!

இதன் காரணத்தைக் கொஞ்சம் அறிவைச் செலுத்திச் சிந்திக்கவேண்டாமா?

உலகின் மிகப்பெரிய பகுத்தறிவுச் சிந்தனையாளரான பெட்ரஸ்டு ரஸல் அவர்களின் புகழ்பெற்ற நூல்The Ethical Philosophy of Bertrand Russell by Ramendra Nath ீ

இந்த நூலின் பதிப்புரிமைபற்றி அந்த நூலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதே!

All Rights Reserved including Right of Reproduction in whole or in part in any Form.

Copy right c 1993 by Ramendranath

உலகச் சிந்தனையாளர்கள், தலைவர்களின் எழுத்துகள் பதிப்புரிமை பெற்று சம்பந்தப்பட்டவர் அல்லது அமைப்பின் உரிமைக்குப் பாத்திரமாக உள்ளது.

இந்த வரிசையிலே உலகத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் எழுத்துகள், அவர் ஏற்பாடு செய்து வைத்திருந்த அமைப்பின்கீழ் தந்தை பெரியார் அவர்களின் காலத்திலிருந்தே வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்த நடப்புகள் எல்லாம் தெரியாமல் தந்தை பெரியார் எழுத்துகளை யாரும், எப்படி வேண்டுமானாலும் மானாவாரியாக வெளியிடலாம் என்பது பொறுப்பற்ற செயலாகும்.

மாபெரும் புரட்சியாளரின் ஒரு அரைப் புள்ளியை மாற்றினால்கூட கருத்துகள் மாறுபட்டுவிடும். புத்தருக்குப் பின் தோன்றிய ஜாதகக் கதைகள் என்கிற அனுபவம் ஏற்கெனவே வரலாற்றில் எச்சரித்துக் கொண்டு இருக்கிறது. வரலாற்றின் இந்தப் பாடத்தைப் புரிந்து கொள்ளத் தவறுபவர்கள் பகுத்தறிவுவாதிகளாக இருக்க முடியாது.

தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளில் உண்மையான அக்கறையும், மதிப்பும் உள்ளவர்களாக இருக்கும் யாரும், தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்குத் திரிபுவாதம் வந்துவிடக்கூடாது, இடைச்செருகல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலே கவனமாக, கவலையாக இருப்பார்கள்.

பாரதியார் கவிதைகளுக்கு அதுபோன்ற ஆபத்து வந்துவிட்டது என்பதை அவரின் கொள்ளுப்பேத்தி விஜயபாரதி வெளியிட்ட அறிக்கையையும் (சண்டே எக்ஸ்பிரஸ், 18.1.2009) படித்த பிறகாவது புத்தி கொள்முதல் பெறவேண்டாமா?

பெரியார் நூல்களை அரசுடைமை ஆக்கவேண்டும், யாரும் வெளியிடலாம் என்று திறந்துவிடவேண்டும் என்று சொல்கிறவர்கள் யார்? யார்? அவர்கள் தந்தை பெரியார்பற்றி வெளியிட்ட நூல்களை எல்லாம் அவ்வாறு பொதுவுக்கு விட்டவர்கள்தானா?

பெரியார் நூல்களை யாரும் வெளியிடலாம் என்று கட்டுரை தீட்டுவதிலும், கருத்துத் தானம் செய்வதிலும் துள்ளிக் குதிக்கும் திருவாளர் எஸ்.வி. ராஜதுரை பெரியார் சுயமரியாதை சமதர்மம் என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டுள்ளாரே! அந்த நூலில் உரிமை நூலாசிரியர் என்று போட்டு இருப்பது ஏன்?

தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் அடங்கிய நூல்தானே யாரும் வெளியிடலாம் என்று ஏன் நினைக்கவில்லை? பதிப்புரிமை நூலாசிரியர் என்று போட்டு தன் சொத்தாக ஆக்கிக் கொண்டதேன்?


ஊருக்குத்தான் உபதேசமா? சொந்தக் காரியம் என்று வந்த பிறகு மணிப்பர்சைத் தடவிப் பார்ப்பது ஏன்?

அதுபோலவே, பெரியார் ஆகஸ்ட் 15 என்று திருவாளர் எஸ்.வி. ராஜதுரையால் எழுதப்பட்ட நூலிலும்Copy Right By the Authour Ï.300 என்று மிக விழிப்பாகப் பொறிக்கப்பட்டுள்ளதே!

இவர்கள்தான் தந்தை பெரியாரின் எழுத்துகளை, பெரியாரால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பின் சார்பில் வெளியிடுவோரைப் பார்த்து பழிப்புக் காட்டுகிறார்கள்.

என்னே, சிறுபிள்ளை விளையாட்டு!

இதில் மார்க்சிஸ்ட்டுகள் வேறு தொடை தட்டுகிறார்கள். தந்தை பெரியாரைப்பற்றி எப்படி எப்படியெல்லாம் கொச்சைப்படுத்தியவர்கள் இவர்கள்; இன்று காலத்தின் நெருக்கடி கருதி ஒரு மாற்றம் தெரிகிறது வரவேற்கிறோம்.

அதேநேரத்தில், அவர்கள் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துகொள்ளவேண்டாமா? அவர்களுடைய கட்சி நூல்களில் எல்லாம் பதிப்புரிமை என்று போடுவதேயில்லையா? சாமானிய மக்களுக்காக சரித்திரம் படைக்கப் போவதாகக் கூறும் அவர்கள், அத்தகைய நூல்களை யார் வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம் என்று கதவைத் திறந்துவிட வேண்டியதுதானே.


Documents of the History of the Communist Party of India (1948-1950) copy right 1976 The people’s Publishing House Private Limited, New Delhi என்றுதானே வெளியிட்டுள்ளார்கள்.

என்.சி.பி.எச். என்ற நிறுவனம் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அமைப்புதானே அவர்கள் வெளியிடும் நூல்களை யார் வேண்டுமானாலும் வெளியிடலாமா? அதற்கு அனுமதி உண்டா?

ஊருக்கு இளைத்தவர் தந்தை பெரியார்தானா? வீரமணிதானா? பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்தானா?

இது ஒரு உருக்குமலை, மோதிப் பார்க்க யாரும் விபரீத ஆசை கொள்ளவேண்டாம்!

தந்தை பெரியார் அவர்கள் காலத்தில் வெளிவந்த நூல்களின் எண்ணிக்கையைவிட, இந்தக் காலகட்டத்தில் இருமடங்கு முந்நூறுக்குமேல் நூல்கள் வெளியிடப்பட்டு, மக்கள் மத்தியில் பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தைகள் மூலமாகவும், புத்தகக் கண்காட்சிமூலமாகவும் மக்களிடம் கொண்டு செல்லப்படுகின்றன என்பது உண்மையை மதிப்பவர்களுக்கு மிக நன்றாக தெரியும்.

சவால்விட்டே கேட்கிறோம், சுயமரியாதை இயக்க 80 ஆம் ஆண்டு விழாவில் (செங்கற்பட்டு) பங்கேற்ற தமிழக முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களே இலட்சோப லட்ச மக்கள் கூடிய அந்த மாபெரும் விழாவில் கூறினாரே! (18.2.2008).

உலகத்திலேயே உள்ள எல்லா கட்சி அமைப்புகளைப்பற்றியும் சொல்லவேண்டுமானாலும், எந்த ஒரு அமைப்பிலும் இவ்வளவு விஷயங்கள் சேகரித்து வைத்து, அதை எதிர்காலத்திற்கு தரக்கூடிய இந்த ஆற்றல் நம்முடைய வீரமணியாருக்கு இருப்பதைப்போல வேறு யாருக்கும் இருப்பதாக நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அவரிடத்திலே எங்களைப் போன்ற கட்சிகளெல்லாம் இதற்காகப் பாடம் படிக்கவேண்டும் என்றாரே! நூல் எழுதுவது, வெளியிடுவது என்பதில் கடல் போன்ற அனுபவம் வாய்ந்த திராவிட இயக்கத்தின் இன்றைய மூத்த தலைவரான கலைஞரே இப்படி கூறுகிறார் என்றால், சாதாரணமா?

சந்திரசேகரப் பாவலர் எழுதிய இராமாயண ஆராய்ச்சி தனித்தனிக் காண்டமாக வெளியிடப்பட்டு இருந்தது. அந்த ஏழு நூல்களையும் ஒரே தொகுதியாக்கி வெளியிட்டது யார்? 718 பக்கங்களைக் கொண்ட அந்த நூலின் விலை என்ன தெரியுமா? வெறும் 200 ரூபாய்தான்.

ஆனால், ராஜதுரையாரின் 814 பக்கங்களைக் கொண்ட நூலின் விலை ரூ.600.

இவர்கள்தான் பெரியார் கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்களாம்.

கடவுள், மதம், பெண்ணுரிமை, ஜாதி தீண்டாமை என்ற தலைப்புகளில் பெரியார் களஞ்சியம் என்ற தலைப்பின்கீழ் இதுவரை 31 தொகுதிகளை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ளது. 300 பக்கங்களுக்குமேல் உள்ள அந்த நூலின் நன்கொடை என்ன தெரியுமா?

நூலகப் பதிப்பு ரூ.80. மக்கள் மதிப்பு ரூ.50. மக்களிடத்தில் உண்மையிலே தந்தை பெரியார் கருத்துகள் செல்லவேண்டும் என்ற எண்ணத்தோடு நூல்களை வெளியிடுவது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனமே!


பெரியார் பெயரைச் சொல்லி அதிக விலைக்கு நூல்களைப் போட்டு வியாபாரம் செய்து சட்டைப் பையை நிரப்புபவர்கள் எல்லாம் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தையோ, அதன் செயலாளர் மானமிகு வீரமணி அவர்களையோ குறைகூறத் தகுதி உடையவர்கள்தானா?

எந்த நூலை வாங்கினாலும், அதன் தொகை இந்த அமைப்புக்குத்தான் வந்து சேரும்.

மானமிகு வீரமணிக்குப் போய்ச்

சேராது. ஆனால், அங்கு நிலை என்ன?

பணம் அனுப்பவேண்டிய முகவரி: தா.செ. மணி, பெரியார் படிப்பகம், மேட்டூர் அணை என்றுதானே இருக்கிறது.

இங்கு வருவது நிறுவனத்துக்கு; அங்குப் போய்ச் சேருவதோ தனியாருக்கு.

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய ஆசைப்படக் கூடாது, எச்சரிக்கை!

----------------வளரும்

-----------------கலி. பூங்குன்றன் பொதுச்செயலாளர்,திராவிடர் கழகம் -"விடுதலை" 31-7-2009