Search This Blog

2.3.09

வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி



வாழ்க்கையின் கசப்பான உண்மைகளில் ஒன்று, எல்லா நாள்களும் மகிழத்தக்கன அல்ல; சில அல்லது பல நாள்கள் துன்பப்படும், அல்லது துயரப்படும் நாள்களாகவும் இருக்கும். எனவே நல்ல நாள், கெட்ட நாள் அதிர்ஷ்டம் என்ற (குருட்டுத்தனம்) உள்ள நாள்கள் என்று கலங்கி, எல்லையற்று மகிழ்ந்து கூத்தாடுவதையும், அதேபோன்று உலகமே இருண்டு விட்டது, தனக்கு இனி எதிர்காலமே இல்லை என்று அங்கலாய்த்து ஒதுங்குவதையும் செய்யாதீர்கள்! இது இயல்பு.

கழனியில் விதை நட்டு, உரம் போட்டு, களை எடுத்து, நன்றாக விளைந்த பயிர்களுக்குக் கூட அடை மழையினாலோ அல்லது சற்றும் எதிர்பாராத புயல் வெள்ளம் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால் விவசாயியின் வீட்டுக் குதிருக்குள் விளைச்சல் வர இயலாத நிலை ஏற்படுவதில்லையா? அதுபோலத்தான்!

தோல்விகள் இருப்பதால்தான் வெற்றியின் பெருமை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. துன்பம் வந்த பிறகு அடையும் இன்பந்தான் உணர்ந்து சுவைக்கத் தக்கது - அனுபவித்து மகிழத் தக்கது! அழுத்தங்கள் (Pressure) அதிகமாக்கி நம்மை வேதனைப் பட வைக்கிறதே என்போர் கரடு முரடான கற்களுக்கு ஏற்பட்ட அழுத்தத்தினால் வைரங்கள் (Diamonds) உருவாகின்றன என்பதை மறவாதீர்!

"எப்போதும் நான் வீழ்ந்ததில்லை என்று மார்தட்டி மமதை கொள் வதைவிட, நான் ஒவ்வொரு முறை வீழ்ந்ததற்குப் பின் உடனடியாக எழுந்துவிட்ட அனுபவசாலி, தன்னம்பிக்கையாளன்" என்று கூறி மகிழுங்கள்! அதன் மூலம் மற்றவர்க்கும் நம்பிக்கை ஊட்டுங்கள்!

நீங்கள் எங்கே போனாலும், எந்தப் பணி செய்தாலும் உங்கள் இதயத்தையும் முக்கிய கருவியாக்கி - அதற்கு முன்னுரிமை கொடுத்து உன்னத வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ளுங்கள்! நீங்கள் உங்கள் வாழ்க்கையை காதலித்தால்தான், வாழ்க்கை உங்களைக் காதலிக்கும் - மறந்துவிடாதீர்!

கடந்த காலப் புண்ணைஆற்றுங்கள்!

நிகழ்காலத்தில் வாழ்ந்து மகிழுங்கள்!

வருங்காலத்தைப் பற்றி கனவு காணுங்கள்!

நாளை நாம் எண்ணுவதற்குப் பதிலாக - நாள் (நிகழ்வு), நம்மை எண்ணும்படி செய்யுங்கள்!

குற்றங்கள், நம் வாழ்வின் மகிழ்ச்சியை உணவாக்கிக் கொள்ள ஒரு போதும் அனுமதியாதீர்! தவறுகளை ஒப்புக் கொள்ளும் பெருந்தன்மைக் குணத்திற்குச் சொந்தக்காரர்களாகவே என்றும் வாழுங்கள்! அது நமக்கே மிகப் பெரிய நிம்மதியையும், மனத் திருப்தியையும் தரும் என்பது உறுதி!

மகிழ்ச்சியான திறவு கோல் இன்பக்கனவுகளைக் காண்பதாகும்; நம் வாழ்க்கை வெற்றியின் திறவுகோல் அந்த இன்பக் கனவுகளைச் செயல்படுத்தி மகிழ்வதில்தான் உள்ளது!

உலகம் என்பது ஓர் அழகிய நிலைக்கண்ணாடி; நீங்கள் சிரித்த முகத்தோடு அதைப் பார்த்தால்தான், அதில் உங்கள் சிரித்த முகம் தெரியும்; மற்றபடி அது உங்கள் உருவத்தை மாற்றிக் காட்டாது - மறந்து விடாதீர்!

எப்போதும் பிறரது குரலைக் கேட்கப் பழகுங்கள். நீங்கள் பேசுவதை விட அப்படி கேட்கப் பழகிக் கொள்வதே மிகவும் நல்லது; ஏனெனில் வாய்ப்புகள் சில வேலைகளில் மெல்லிய குரலில் ஒலிக்கும். அவ்வாய்ப்புகள் அப்போது நம்மை விட்டு நழுவிப் போகும் வாய்ப்பு ஏற்படக்கூடும்!

நல்ல நினைவுகள் என்பவை நல்ல வாய்ப்புகளை நினைவூட்டு பவைகளே!

கெட்ட நினைவுகள் என்பது கெட்ட பாடங்களை மீண்டும் படிப்பதே!

பயணிக்கும்போது அதி வேகமாகச் செல்வோமானால், அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழும் அரிய வாய்ப்பை நாம் இழந்துவிடக் கூடுமல்லவா? அது போலத்தான் எதிலும் அதிவேகம், மிதமிஞ்சிய தன்மை கூடாது என்பதாகும்!

வாழ்க்கை என்பது நாடகத்தின் ஒத்திகை போன்றதல்ல; முழுமையாக வாழ்வதே வாழ்க்கை.

--------------"விடுதலை" 2-3-2009

அச்சத்தையே அறியாதவர் பெரியார்







மாணவர்களாகிய நீங்கள் எல்லாம் இன்பமயாமாக இருக்கும் இந்த மாலைநேரத்தில், நான் யாரைத் தலைவராக்க் கருதி இருக்கிறேனோ, யாரை மனிதருக்கெல்லாம் மனிதராகப் போற்றுகின்றேனோ, மகான் என்று செல்லமாட்டேன் காரணம் அவர் ஒரு பகுத்தறிவுவாதி-அந்தத்தலைவரின் படத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பினை பெற்றிருக்கிறேன். என்னைச் சந்திக்க வந்த மாணவர்களும் அழைப்பிதழினிலே, நீங்கள் தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைக்க இருப்பதைப் போடலாமா? என்று கேட்டார்கள். தாராளமாகப் போடுங்கள் என்று நான் சொன்னேன். இப்படி அவர்கள் ஒரு கேள்வியை ஏன் கேட்டார்கள் என்று கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். ஒன்று நான் வகிக்கும் பதவி காரணமாக இருந்திருக்கும். அல்லது இப்படிப் பட்ட தலைவரின் படத்தைத் திற்ந்து வைத்தால் அது ஒரு பிரச்னையாக ஆகிவிடும் என்று கருதக்கூடும் என்று அவர்கள் நினைத்திருப்பார்கள்.

பெரியாரால் அச்சமின்றி வாழ்கிறோம்!

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி இப்படி ஒரு நிகழ்ச்சிகு வருகிறார் என்றால் சலசலப்புகள் வரும்; சஞ்சலங்கள் ஏற்படும்; படபடப்புகள் ஆயிரம் இருக்கும்; ஏளனக்காரர்கள் இருப்பார்கள். இன்றைய சூழ்நிலையில் இழந்த பேச்சுரிமைகள், எழுத்துரிமைகள் மீண்டும் கிடைத்திருக்கின்றன. அச்சமின்றி அனைவரும் வாழும் சூழ்நிலையில் இழந்த பேச்சுரிமைகள், எழுத்துரிமைகள் மீண்டும் கிடைத்திருக்கின்றன. அச்சமின்றி அனைவரும் வாழும் சூழ்நிலையை ஏற்பட்டிருக்கிறது. அச்சத்தையே அறியாத தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்தை திறந்து வைக்க நான் திறந்த மனத்தோடு இங்கே வந்திருக்கின்றேன். என்னுடைய அருமைத் தலைவருகு எனது காணிக்கையைச செலுத்த வந்திருக்கிறேன்.

சட்டக் கல்லூரி மாணவர்களால்தான் அவர் பெருமையை அறிய முடியும். டாக்டர்களாக இருப்பவர்களுக்குக் கூட அவர் பெருமை தெரியாததற்குக்காரணம், ஆப்பரேஷன் தியேட்டரில் கூட தம்மேல் நம்பிக்கையில்லாமல் வெங்கடேசப்பெருமாள் படத்தை மாட்டி வைத்திருக்கும் டாக்டர்களை நாம் பார்த்திருக்கிறோம். தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைவிடக் கடவுள் நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். ஆனால், சட்டக்கல்லூரி மாணவர்களாகிய நீங்கள் வழிபடும் தெய்வம் சட்டப் புத்தகமகத்தான் இருக்கமுடியும். அது ஆண்டவன் கணபதியாக இருக்குமானால் அதனால் ஒரு பயனும் இல்லை.

படித்தவர்களிடம் மூடநம்பிக்கை!

நான் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவம் இங்கே என் நினைவுக்கு வருகிறது. தேர்வு எழுதுவதற்காக நான் “ஹால் டிக்கெட்” வாங்கச் சென்றிருந்தேன். வழியில் ஒரு நண்பர், என்ன ராகுகாலத்தில் போகிறீர்களே, அதுவும் 13-ஆம் எண் ராசி இல்லாத எண் ; இன்று 13-ஆம் தேதியாயிற்றே, இன்று வாங்கினால் நீங்கள் பரீட்சையில் தேற முடியுமா? என்று கேட்டார்; இருக்கட்டும். பரவாயில்லை என்று சொல்லி ஹால் டிக்கெட் வாங்கினேன். அந்த ஆண்டுத் தேர்வில் நான் எல்லோருக்கும் முதன் மாணவனாகத் தேறினேன். அதற்காகத் தங்கப் பதக்கம் பெற்றேன்.

நான் எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் “நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை” என்று பழமொழியாகக் கூறுவார்கள். அதே கருத்தைத் தந்தை பெரியார் சொன்னால் இவர் பகுத்தறிவுவாதி; கடவுளை எதிர்க்கிறார் என்று எதிர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அண்ணா சமாதியில் சூடம் கொளுத்துவதா?

நான் தந்தை பெரியார் அவர்களைத் தெய்வம் என்று சொல்ல மாட்டேன். காரணம், இன்று அண்ணா சதுக்கத்திலே சூடம் சாம்பிராணி கொளுத்துவதைப்பார்க்கின்றோம். அண்ணாவை 64-வது நாயன்மார் என்றுகூட ஆகிகவிடுவார்கள் போலிக்கிறது. அண்ணா தன் எழுத்தாற்றலால், பேச்சாற்றலால், ஆட்சியை சாமான்ய மக்களின் கைக்குக் கொண்டு வந்தார்; அகற்ற முடியாது என்ற ஆட்சியை அகற்றிக் காட்டினார்.

நாம் எவ்வளவோ உலக விஷயங்களைப் பேசுகிறோம். விஞ்ஞானங்களைப் படிக்கிறோம். ஆனாலும், ஸ்ரீராம ஜெயம் எழுதிக்கொண்டிருக்கிறோம்; பிள்ளையார் சுழி போடாமல் எழுத ஆரம்பிப்பதில்லை! இந்த அவலநிலை ஏன்? தன்னம்பிக்கை இல்லாததுதான் இதற்குக்காரணம். அவ்வளவு பயபக்தியோடு தேர்வை எழுதிவிட்டுச் சும்மா இருந்து விடுகிறார்களா? விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியரிடம் படை எடுக்கிறார்கள். அந்த ஆசிரியரின் அண்ணன் யார், தம்பி யார்? அவருக்கு மாம்பழம் பிடிக்குமா? மல்கோவா பிடிக்குமா? என்றெல்லாம் அறிந்து, எப்படியாவது மார்க்கை வாங்கும் அவல நிலை இருக்கிறது. இன்றையக் கல்வி அப்படி இருக்கிறது.

சமுதாயச் சுரண்டல்கள்!

“தொட்டனைந்தூறும் மணற்கேணி”
என்றார் வள்ளுவர். கல்வி என்பது வேறு; அறிவு வேறு, எனவே கல்வியைக் கறபதோடு நில்லாமல் அறிவைப் பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். கல்லூரிப் பருவத்தில் குறும்புத்தனமாக இருப்பது எல்லோருக்கும் இயற்கையான ஒன்றுதான். நான் கூடக் கல்லூரி மாணனாக இருந்தபோது அப்படித்தான் இருந்தேன். கல்லூரியை முடித்து விட்டு வெளியே வரும்போது தான் உலகம் புரிகிறது.

இன்றைக்குச் சமுதாயத்தின்பெயரால் பல்வேறு சுரண்டலகள்; சாதியின் பெயரால் சமுதாயத்தில் நிகழும் சுரண்டல்களைப் பெரியார் கடுமையாக எதிர்த்தார்."ஜாதி இரண்டொழிய வேறில்லை” என்று அவ்வையாரும் கூறியிருக்கிறார். அதே கருத்தைத் தந்தை பெரியார் கூறும்போது, இவர்பகுத்தறிவுவாதி என்று எதிர்க்கிறார்கள். அந்தப் பகுத்தறிவு மேதை, பகலவன் போல் கதிரொளி வீசிய தலைவர், பெரியார் இல்லை என்று சொன்னால் இன்று உயர்நீதி மன்றத்திலே இத்தனைபேர் நம்மவர்களாக வந்திருக்க முடியாது! அறிவுக கண்களைத் திறந்துவிட்ட ஒரே தலைவர் பெரியார். அவர் எந்த லட்சியங்களுக்காகப் போராடினாரோ அதற்காக நாமும் பாடுபடுவோம்! போராடுவோம்!

--------------1-4-78 அன்று சென்னை எம்.யூ. எஸ். சி. மாணவர் விடுதியின் ஆண்டு விழாவில் தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு மோகன் அவர்கள் ஆற்றிய உரை. -நூல்:- "நீதிபதிகள் கண்ணோட்டத்தில் பெரியார்"- பக்கம்:- 42-45

பெரியார் மீது செருப்பு வீசிய இடம் இதுதான்




கடலூரில் தந்தை பெரியார் மீது செருப்பு வீசிய அதே இடத்தில் தந்தை பெரியார் சிலை நிறுவப்பட்டது. அந்த வரலாற்று கல்வெட்டினை அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டி பழைய நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறினார். (கடலூர், 28.2.2009)

ஈழத் தமிழர் பிரச்சினையிலும் பா.ஜ.க.வின் இரட்டை வேடம்!

டில்லியில் ம.தி.மு.க. சார்பில், ஈழத் தமிழர்களுக்காக நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் பா.ஜ.க.வின் முன்னணித் தலைவரும், அக்கட்சியின் பிரதமர் பதவிக் கான வேட்பாளருமான எல்.கே. அத்வானி கலந்து கொண்டு பேசியிருக்கிறார். ஈழத் தமிழர்களுக்காகக் கசிந்துருகியும் பேசியிருக்கிறார். அதேபோல, பா.ஜ.க. முன்னணிப் பிரமுகரும், வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சருமான யஷ்வந்த் சின்காவும் டில்லி உண்ணாவிரதக் கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார்.

இலங்கை அதிபர் போரினால்தான் சாதிக்க முடியும் என்று நினைக்கிறார் என்றும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்தப் பிரச்சினையை சரியாகக் கையாளவில்லை என்றும் இந்திய அரசு தலையிட்டால் அது இன்னொரு நாடு தலையிட்டதாக இலங்கை அரசு கூறினாலும், அதுபற்றி கவலைப்படத் தேவையில்லை என்றும் தாராளமாகவே தலையிடலாம் என்றும் உச்ச ஸ்தாயியில் பேசியிருக்கிறார் யஷ்வந்த் சின்கா.

ஒரு சின்ன கேள்வி. இவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இதனை ஏன் செய்யவில்லை? என்ற ஒரு சிறிய கேள்விக்கு முதலில் பதிலைச் சொல்லிவிட்டு அடுத்த அடியை எடுத்து வைக்கட்டும்.

பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் இலங்கை இராணுவத்துக்கு டாங்கிகளையும், பீரங்கிகளையும் தாராளமாக அனுப்பி வைத்தவர்கள்தானே! இலங்கை அரசுக்கு வட்டியில்லாக் கடனையெல்லாம் வாரி வழங்கியவர்கள்தானே?


இந்தப் பா.ஜ.க. முன்னணித் தலைவர்கள் இப்படி பேசிக் கொண்டு இருக்கும்போதே அவர்கள் முகாமிலிருந்தே முக்கியப் பிரமுகரிடமிருந்து அதிகாரப்பூர்வமான கருத்து வெளியாகியிருக்கிறதே!

இந்திய இலங்கை பிரகதி சன்சதியா என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. காங்கிரஸ், பி.ஜே.பி.யைச் சேர்ந்தவர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் இலங்கையில் நடந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வெளிவிவகாரப் பிரிவைச் சேர்ந்த ரவனிதாகூரும், பி.ஜே.பி.யின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரான சேஷாத்திரி சாரியும் சென்று வந்துள்ளனர்.

இலங்கை சென்று வந்த பின்னர் அந்த சேஷாத்திரி என்ன கூறியிருக்கிறார்?

இலங்கை விவகாரத்தில் பி.ஜே.பி.,யும், காங்கிரசும் ஒரே கொள்கையோடுதான் செயல்படுகின்றன. இப்போது இலங்கையில் புலிகளுக்கு எதிராக நடக்கும் போரில் இந்தியா நிச்சயம் தலையிடாது. இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் நமக்குத் தொந்தரவு இல்லாத நாடுகள் என்றால் இலங்கையும், பூடானும்தான். பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளால் நமக்கு எப்போதும் தொந்தரவுதான். பொதுவாக இந்தியாவுக்குப் பொருளாதார ரீதியில் இலங்கையால் நல்ல பயன்பாடு உண்டு. பொருளாதார ஒப்பந்தங்களைப்போட நல்ல சூழ்நிலை வர வேண்டும். இலங்கையில் பதற்றம் நிலவும் சூழ்நிலையில் செய்துகொள்ளும் உடன்படிக்கைகளால் பலனில்லை. இலங்கையுடனான வெளியுறவுக் கொள்கை இதை மனதில் வைத்துதான் முடிவு செய்யப்பட்டது. நாங்கள் இலங்கையில் பேசும்போதும் இந்திய அரசின் நிலையை எடுத்துச் சொன்னோம். நான் இலங்கை விவகாரத்தில் பி.ஜே.பி.யின் கொள்கை என்ன என்பதையும் விளக்கினேன். அதிபர் ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசினோம். விடுதலைப்புலிகளை எதிர்த்து இலங்கை இராணுவம் போராடிக் கொண்டிருக்கிறது. இதில் கிட்டத்தட்ட வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இலங்கை அரசு என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் அவர்களிடம் எடுத்துச் சொன்னோம்.

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட அங்கு ஒரு பலம் வாய்ந்த அரசு தேவை. இதற்கு இரண்டு விஷயங்கள் முக்கியம். விடுதலைப்புலிகள் இயக்கம் மறுபடியும் பலம் பெற்றுவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் (ஜூனியர் விகடன், 4.2.2009, பக்கம் 38).

பா.ஜ.க. தலைவர்கள் அத்வானி, யஷ்வந்த் சின்கா ஆகியோர் கூறும் பசப்புமொழிகளுக்கும், இலங்கைக்கு அதிகாரப்பூர்வமாகச் சென்று வந்த தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரின் கூற்றுக்கும் உள்ள முரண்பாடு சாதாரண மானதல்ல.

அத்வானி, சின்கா ம.தி.மு.க. உண்ணாவிரதப் போராட்டத்தில் பேசிய ஒவ்வொரு சொல்லுக்கும் இதில் மறுப்பு காணப்படுகிறதா இல்லையா?


தேர்தல் நேரத்தில் இரட்டை வேடம் போட்டு, நீலிக் கண்ணீர் வடிக்கும் இவர்களைத் தமிழர்கள் புரிந்து கொள்ளத் தவறவே மாட்டார்கள்.

------------------"விடுதலை" தலையங்கம் 2-3-2009

1.3.09

"அய்யோ! கடவுளை குறை கூறுகிறானே," "மதத்தை இழிவுபடுத்துகிறானே" என்று கூக்குரலிடுவது நியாயமா?


கடவுள்களை முட்டாளாக்குபவர் யார்?

"சிவபெருமானின்" முட்டாள்தனம்

நம் கடவுள்களைப் போல முட்டாள்களையும், அயோக்கியர்களையும் மனித ஜென்மங்களில் கூட காண்பது அதிசயமாக இருக்கின்றது.

ஆனால் கடவுள் என்பவர் அப்படி முட்டாளாகவும், அயோக்கியனாகவும் இருக்க முடியாது என்பது உண்மையான யோக்கியமான கடவுள் நம்பிக்கைக்காரர்களின் கருத்தாகவே இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன்.

மற்றபடி கடவுள்களை சிருஷ்டித்து, அவர்களை அயோக்கியர்களாக, மடையர்களாகக் கற்பித்து, சாஸ்திரபுராணம், இதிகாசங்கள் ஏற்படுத்தியவர்கள் தான் முட்டாள்களாக அயோக்கியர்களாக இருந்திருக்க வேண்டுமென்று கருதுகிறேன்.

மக்களில் இந்த முட்டாள்தனமும், அயோக்கியத்தனமும் சில மதவாதிகள் இடத்தில் தான் இருக்கிறதாகக் காணப்படுகிறதே ஒழிய எல்லா மக்களிடமும் இருந்ததாகக் காண முடியவில்லை.

உண்மையாகவே நம் நாட்டு முன்னேற்றம் இந்த மடையர்களாலும், அயோக்கியர்களாலுமே மிக மிக தடைப்பட்டு விட்டது என்று சொல்லலாம்! உலகத்தில் இன்று எவ்வளவோ அதிசயங்கள், அற்புதங்கள் விஞ்ஞான அறிவால் கண்டுபிடிக்கப்பட்டு, அவைகளை நாம் நம் பஞ்சேந்திரியங்களாலும் அனுபவிக்கிறோம்.அப்படிப்பட்ட அதிசயங்கள், கண்டுபிடிப்புகள் நம் நாட்டவர்களால் அல்லது நம் நாட்டில் ஏதும் நடைப்பெற்றதாகக் காணமுடியவில்லை. காரணம் நம் மதம், நம் கடவுள்கள், நம் மதஆதாரங்கள், நம் கடவுள் செயல்கள் நம் தத்துவ ஆராய்ச்சிகள் முதலானவைகளேயாகும்.

நம் நாட்டில் நல்ல வைத்திய முறை இல்லை. 1000 –க்கணக்கான ஆண்டுகளுக்கு முன் போகர், அகஸ்தியர், சித்தர்கள், தன்வந்திரி முதலான பல அதுவும் புராண இதிகாச காலத்திற்கு முந்திய சில அதிசய மனிதர்கள் பேரால் ஏடுகளில் கர்ண பரம்பரையில் இருந்து வரும் சில முறைகள் தவிர, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட முறை எதுவும் எளிதில் காண முடியவில்லை.

ஏனெனில் "மக்களுக்கு வரும் நோய்கள் கடவுள்களால் ஏற்பட்டவைகளாகும்" என்பதும், அவர்களுக்கு அந்நோய் வரக் காரணங்கள் மக்களின் முற்பிறப்பு வினைப்பயனால் உண்டானவை" என்பதும் நம் அறிஞர்களின் முடிவு.

உதாரணமாக ஜோசியத்தில் இந்த மனிதனுக்கு இன்ன வயதில் இன்ன நோய் வரும், அதற்கு இன்ன பிராயச்சித்தம், இன்ன சாந்தி, இன்ன அருச்சனை, இன்ன ஸ்தல யாத்திரை, இன்ன தீர்த்தஸ்நானம் செய்தால் நோய் தீரும் என்பதாக நந்திதேவர் நாரதமுனிக்குச் சொன்னார் என்று சோதிடன் சொல்லிவிடுகிறான்.

உடனே நோயாளியை மந்திரவாதி, அர்ச்சகன், ஸ்தல யாத்திரை, தரகர், சாமியாடிகள் சூழ்ந்து கொள்கிறார்கள்.

இதனால் மருந்து சிகிச்சை முறைகள் கண்டுபிடிக்கவோ, செய்யவோ வைத்தியம் செய்யவோ தூண்டுதல் ஏற்படுவதில்லை.அதனாலேயே "ஜோசியன், மந்திரவாதி, சாமியாடி (சாமி பிடித்தவன்) அர்ச்சகன் வைத்தியன், ஆகிய அய்வரும் பித்தலாட்டம் வாழ்வு என்றும்,ஒரு மரத்தின் வெவ்வேறு கிளையில் காய்த்த காய்கள்" என்றும் பெரியவர்கள் சொல்லுவது வழக்கம்.

இப்படியாக ஏற்பட்ட கற்பனைகளுக்கு ஏற்பத்தான் கோயில், குளம், மூர்த்திதீர்த்தம், ஸ்தலம் முதலியவைகள் உண்டாக்கப்பட்டும் இருக்கின்றன.

இந்தக் காலத்தில் நோய்களுக்கு சாந்தி செய்வதும், தீர்த்தமாடுவதும், ஸ்தல யாத்திரை செய்வதும், அரசர், ஜமீன், மிராசு, வியாபாரி முதலிய செல்வர்களும் பி.ஏ., எம்.ஏ., சையன்ஸ், மெடிக்கல் துறை நிபுணர்கள் உள்பட கற்ற அறிஞர்கள் என்பவர்களும் இவைகளுக்கு அடிப்பட்டு நடந்து வருகிறார்கள்.

இந்தப் புரட்டும், முட்டாள்தனமும் ஆன காரியங்கள் உடல் நோய்களுக்கு மாத்திரமில்லாமல், மக்களின் ஒழுக்கத்திற்கும், நடத்தைக்கும்கூட சம்பந்தப்படுத்தி ஒழுக்கம் கெட்ட யோக்ககியமும், நாணயமும் அற்ற, தீய வஞ்சகக் காரியங்களுக்கும் பரிகாரமாக மூர்த்தி தீர்த்த ஸ்தலங்ககளை கற்பித்து மக்கள் ஒழுக்கத்தை பாழாக்கி இருக்கிறார்கள்.

உதாரணம் பாருங்கள்:

சைவ சமயிகளுக்கு அருணாசலபுராணம் என்பது மிகவும் உவப்பானது. அந்தப் புராணத்தை ஆதாரமாகக் கொண்டதுதான் திருவண்ணாமலை நாதர், கார்த்திகை தீபம் முதலியவைகளாகும். இந்த கோயில் முதலியவைகளுக்கும் ஒரு கோடிக்கு மேற்பட்ட ரூபாய் பெறுமானமுள்ள சொத்துக்கள் உண்டு. கோடிக்கணக்கான பக்தர்கள் உண்டு. பூஜை, திருவிழா, நாள், நட்சத்திரம் ஆகியவை ஏராளமாக உண்டு. அவைகளுக்கு ஆக ஆண்டுக்கு லட்சக்கணக்கில் மக்கள் வந்து குவிந்து லட்சக்கணக்காகப் பணம் செலவிடுவதுண்டு.

அந்த ஸ்தல விசேஷத்தைப் பார்த்தால் அது எவ்வளவு மோசமாக அமைக்கப்பட்டிருக்கிறது என்பது விளங்கும். அருணாசல புராணம் தீர்த்தச் சுருக்கம் - 13 –ம் பாட்டு:

"தென்திசை தரும தீர்த்தக்
குளத்திற் செரிந்து மூழ்கில்
பொன்திகழ் வடிவமாகும்
உடற்பிணி பொடி பட்டோடும்".

அதாவது "திருவண்ணாமலைக்கு தெற்கே "யமதீர்த்தம்" என்று ஒரு தீர்த்தம் இருக்கிறது. அதில் முழுகினால் உடல் பொன்னிறமான வடிவினதாகும். உடலில் உள்ள நோய்கள் எல்லாம் பொடிப் பொடியாகி பறந்து போகும்"
என்பது இதன் பொருளாகும்.


ஒரு குளத்தில் நீராடினால் சொறி பிடித்த உடல் பொன்னிறமாகி நோய் கொண்ட உடல் நலமாகி விடுகிறது என்று, கடவுள் பேரால் - ஸ்தலத்தின் பேரில் - குளத்தின் பேரில் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது எவ்வளவு முட்டாள்தனமும், அயோக்கியத்தனமுமான காரியம் என்பதை ஆஸ்திகர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு அழுக்குப் பிடித்த, அதுவும் புழுவும், கொசுவும் நிறைந்த நாற்றமுள்ள ஆபாசக் குளத்திற்கு இந்த மாதிரியான சக்திகளைக் கற்பித்து விட்டால், இதை நம்பும் மூடர்கள் அதில் குளித்தும், அருந்தியும், அதிகமான நோயை உண்டாக்கிக் கொள்வார்களே ஒழிய, இதனால் குணமடைய முடியுமா?

இதுதான் போகட்டும் என்றால் மனிதர் தாம் செய்த பாவங்களை போக்கிக் கொள்வதற்கு ஆக மதவாதிகள் கற்பித்து இருக்கும் மார்க்கமானது எவ்வளவு அயோக்கியத்தனமாக கற்பிக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனித்துப் பாருங்கள்.

தீர்த்தச் சுருக்கம் 36-ம் பாட்டு:

"காகமுன் பலி பீடத்தில்
பலிதனைக் கவரும் போதில்
ஆகமார் சிறகைக் கீழே
புடைத் தாலை யத்தினூடே
ஓகையால் நமது கோயில்
விளங்கிய தெனஉட் கொண்டு
பாகசா தனனார் வாழும்
பதியினைப் பரமன் ஈந்தான்".

இதன் பொருள் :-

ஒரு காக்கையானது திருவண்ணாமலைக் கோயிலில் உள்ள பலி பீடத்தில் வைத்திருந்த சோற்றை தின்னும் போது தன் சிறகை விரித்து அசைத்தது. அதனைக் கண்ட பரமசிவன் இந்தக் காக்கை நட்முடைய கோயிலை சுத்தம் செய்தது என மகிழ்ந்து அதற்கு உடனே தேவேந்திரன் வாழும் உலகத்தைக் கொடுத்தார் - என்பதாகும்.

மேற்படி 37 –ம் பாட்டு:

"மூடிக மொன்று கோயில்
முளையினைக் கிளறும்போது
தேடரு மணி யொன்றங்கே
சிதறியோர் விளக்கிற் காட்ட
ஆடிய பெருமாள் தீபம்
அளித்ததென் றதற்கு நல்ல
வீடுயர் நெறியுங் காட்டி
விரைந்துசா லோக மீந்தார்".

இதன் பொருள்:-

ஒரு பெருச்சாலியானது (மூஷிகம்) கோயிலில் வளை தோண்டும் போது அது பறித்துத் தள்ளிய மண்ணில் இருந்து ஒரு ரத்தினமானது சன்னதியில் விளக்கு போல் ஒளி மின்னியது. அதனைக் கண்ட சிவபெருமான் அந்தப் பெருச்சாளி தன் சன்னதிக்கு தீபம் போட்டது என்று கருதி மோட்ச வழியைக் காட்டி சாலோகப் பதவியைக் கொடுத்தார் - என்பதாகும்.

மேற்படிச் சுருக்கம் 38 –ம் பாட்டு:-

"சிலந்தி யொன்றொரு நாள் அந்தத்
திருமலை யிடத்து நூலைக்
கலந்துடன் இழைக்க, ஈது
கலைநமக் களித்த தென்று
நலத்திக ழரச னாக்கி
அதற்கு நல்லறிவு நல்கி
உலர்ந்தபின் நெடிய மாயன்
உலகினை உதவினானே".

இதன் பொருள் :-

திருவண்ணாமலையில் ஒருநாள் ஒரு சிலந்திப் பூச்சியானது தன் வாய் நூலால் ஒரு கூடு கட்டியது. அதனை சிவபெருமான் அச்சிலந்தியானது தனக்கு நல்ல வஸ்திரத்தை செய்து கொடுத்ததாகக் கருதி அதை ராஜாவாக்கி – நல்ல ஞானம் உண்டாக்கி – அது இறந்த பிறகு வைகுந்த லோகத்தைக் கொடுத்தார் - என்பதாகும்.

வாசகர்கள் இம்மூன்று பாட்டினையும் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். காக்கை சிறகை ஆட்டினதினால் அது குப்பையைக் கூட்டி சுத்தம் செய்ததாக எவனாவது கருதுவானா? பெருச்சாளி தோண்டிய மண்ணில் ஒரு ஒளி மின்னும் கல்லு காணப்பட்டால் அதை அந்தப் பெருச்சாளி விளக்கேற்றியது என்று கருதுபவனைவிட மூடன் இருக்க முடியுமா? சிலந்திப் பூச்சி கூடு கட்டியதைக் கண்டு அது தனக்கு வேட்டி நெய்து கொடுத்ததாகக் கருதுவது கடுகளவு புத்தியுள்ளவனுக்காவது பொருந்துமா?

எனவே இப்பாட்டுக்களிலிருந்து பரமசிவனை எவ்வளவு முட்டாளாக்கி இருக்கிறார்கள் இந்தப் புலவர்களும், மதவாதிகளும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!


இவ்வளவு முட்டாள்தனமான புலவர்களும், மதவாதிகளும் எழுதும் கருத்து என்ன என்று பார்ப்போமானால், எந்த முட்டாளாவது இதை நம்பி காசு கேட்காமல் குப்பைக் கூட்டவும், விளக்கு போடவும், துணி வாங்கித் தரவும் முன்வரமாட்டானா என்பது தானே. அதற்கு ஏற்றாற் போலவே இப்படிப்பட்ட முட்டாள்தனமான கூற்றுக்களை நம்பித்தானே அநேக மூடர்களும் அங்கு விளக்குப் போடவும், குப்பைக் கூட்டவும், சாமிக்கென்று துணி வாங்கிக் கொடுக்கவும் முன் வருகிறார்கள்.

இதைப் பார்க்கும் போது இதுபோன்ற புராணங்கள் எல்லாம் எவ்வளவு பித்தலாட்டமாக மூடத்தனமாக எழுதப்பட்டு இருக்க வேண்டுமென்பது விளங்கவில்லையா?சுயநலக்காரர்களும், பித்தலாட்டக்காரர்களும் செய்யும் இப்படிப்பட்ட காரியங்களால் மக்கள் ஏமாறுவது ஒருபுறம் இருந்தாலும் இதனாலெல்லாம் தங்கள் பாவம் தீர்ந்துவிடும். தாங்கள் எவ்வளவு அயோக்கியத்தனம் செய்தாலும் மோட்சம் கிடைத்துவிடும் என்று கருதி, தீய காரியங்களுக்குப் பயப்படாமல் மேலும் மேலும் அயோக்கியத்தனம் செய்வது ஒருபுறம் இருந்தாலும் இதனால் கடவுள்கள் எவ்வளவு மடையர்களாகவும் ஒழுக்கத்திற்கும் நல்ல குணங்களுக்கும் பொறுப்பற்றவர்களாகவும் ஆக்கப்படுகிறார்கள் என்பதை அறிவுள்ள மக்கள் உணர வேண்டும்.

இம்மாதிரி கடவுள்கள் முட்டாளாக ஆக்கிவிட்டு,எவனாவது இந்த முட்டாள்தனத்தை எடுத்துக் காட்டினால் "அய்யோ! கடவுளை குறை கூறுகிறானே," "மதத்தை இழிவுபடுத்துகிறானே"
என்று கூக்குரலிடுவதில் அறிவுடைமை ஏது?


ஆகவே மதவாதிகளும், புலவர்களும், சுயநலக்காரர்களும் செய்த காரியங்களால் தான் இன்று கடவுள்கள் சந்தி சிரிக்கப்படுகிறார்களே ஒழிய சுயமரியாதைக்காரர்களால் அல்ல என்பேன்.

------------------09-03-1950 விடுதலை இதழில் "சித்திரபுத்திரன்" என்ற புனைப் பெயரில் "தந்தைபெரியார்" அவர்கள் எழுதிய கட்டுரை.