Search This Blog

5.3.08

மகா சிவராத்திரியாம் - மண்ணாங் கட்டியாம்

(மார்ச்சு 6-ஆம் தேதி மகா சிவராத்திரியாம். அதன் யோக்கியதையை தந்தை பெரியார் எழுதுகிறார் - படியுங்கள்)

சிவராத்திரி என்பது ஒரு பட்டினித் துக்கநாள் ஆகும். வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி, பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப் போல், சைவர்கள் என்று கருதக் கூடியவர்களின் சிவன் ராத்திரியும் (கைலாச யாத்திரை, சமாதி) பட்டினி விரத விழா. தை, மாசி போன்ற காலங்களில் குளிர் நிறைந்துள்ளபடியால், உடல் அங்கங்கள் இயக்கம் தடுமாறும்; உண்ணும் உணவு போன்றவை சரியானபடி ஜீரணம் ஆகாமல் இருக்கும்; வயிற்று இரைச்சல் போன்ற வயிற்றுக் கோளாறு உண்டாகும்.

ஆனால், இந்தச் சிவராத்திரி விரத மகிமை பற்றிக் கூறப்படும் புராணக் கதைகளோ அறிவுக்கும், இயற்கைக்கும், மக்கள் நடப்பு - பண்பாடுகளுக்கும் பொருந்தாதவை ஆகும். இந்த விரதம் பற்றிக் கூறப்படும் புராணக் கதையைப் பாருங்கள்!

முன்னொரு சமயம் ஊரும் பேரும் இல்லாத ஒரு வேடன் வேட்டைக்குச் சென்றானாம். அவனுக்குக் காலை முதல் இரவு வரை காட்டில் அலைந்தும் எந்த விலங்கும் அவனுக்குத் தென்படவில்லையாம். இரவு நெருங்கும் நேரமானதால் விலங்குகள் நடமாட்டம் ஆரம்பித்தன. ஒரு புலி இந்த வேடனைக் கண்டுவிட்டது. இவனைப் பின்தொடர்ந்து வந்தபடியால், அவன் உயிர் தப்ப ஓடி, ஒரு பெரிய வில்வ மரத்தின் மேல் ஏறிக் கொண்டானாம். அப்போது மழையும் பெய்தது. அந்தப் புலியும் விடாமல் துரத்தி வந்து அவன் ஏறியிருந்த மரத்தின்கீழ் தங்கல் போட்டது. புலியும் அவன் இறங்குகிறானா என்று பார்த்துக் கொண்டே கீழே படுத்து இருந்தது. வேடன் பசி மயக்கத்தில் அதிகக் களைப்பு அடைந்து, வீடு செல்ல எண்ணியபடியால், அந்தப் புலியை விரட்ட, அந்த வில்வ மர இலைகளைக் கொத்துக் கொத்தாய் பறித்து அந்தப் புலியின் மேல் வீசினான். மழையின் காரணத்தால் அந்த இலைகளில் உள்ள ஈரப் பசையால் புலிக்குப் பக்கத்தில் உள்ள குத்துக் கல் மீது அந்த இலைகள் விழுந்தன. அது ஒரு சிவலிங்கமாம். அன்று இரவு வேட்டை கிடைக்காததால் அந்த வேடன் பகல் முழுதும் பட்டினி.

(வேடர்கள் பொதுவாக காலையில் பழைய உணவு சாப்பிட்டு விட்டு வேட்டைக்கு வந்து வேட்டையாடிய விலங்கைக் கொண்டு சென்று, இரவு சமைத்துச் சாப்பிடுவது வாடிக்கையாதலால், பகல் முழுதும் பட்டினி என்பது சாதாரணம்தான்).

அவன் மாலை மழையில் நனைந்து குளித்ததுபோல் ஆயிற்றாம்; அவன் புலியை விரட்ட மரத்திலிருந்து கீழே போட்ட வில்வ இலைகள் மழையின் நீரால் நனைந்து, அவனை அறியாமல், அவன் அறியாத லிங்கத்தின்மீது விழுந்தனவாம். எனவேதான் அன்று சிவராத்திரி, இரவில் லிங்கபூசை செய்ததுபோல் ஆயிற்றாம். அவன் இவ்விதம் செய்தது சிவனைக் கும்பிட வேண்டும் என்ற எண்ணமில்லாமல் போனாலும், சந்தர்ப்ப வசத்தால் பகல் முழுதும் பட்டினி கிடந்தது, சிவராத்திரி - பகல் உபவாசம் இருந்தது போல் ஆயிற்றாம். புலியை விரட்ட, மழைத் தண்ணீரால் நனைந்த வில்வ இலைகள் லிங்கத்தின்மீது தற்செயலாய் விழுந்தபடியால், அதைக் குளிப்பாட்டி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ததுபோல் ஆயிற்றாம். இதனால் அவன் வான்உலகை அடைந்தானாம்.

அடுத்த கதை -

ஒரு பாப்பன வாலிபனைப் பற்றியது. இவன் ஒரு சுத்த அயோக்கியனும் ஒழுக்கக்கேடனும் ஆவானாம். இதனால் ஊரைவிட்டுத் துரத்தப்பட்டானாம். காலை முதல் இரவு முடிய உண்ண உணவு இல்லாமல், பசியால் வாடிய அவன் இரவு வந்ததும் ஒரு சிவன் கோவிலை அடைந்தானாம். அப்போது அந்தக் கோயில் அர்ச்சகன் பொங்கல் படையலை அந்த ஈசுரவன் சிலை முன் வைத்துவிட்டு வெளியில் சென்று இருந்தான். இந்தப் பார்ப்பன வாலிபன் யாரும் இல்லாத சமயம் அங்குச் சென்றபடியால் அவற்றை எடுத்து உண்ண ஆசைப்பட்டு, என்னென்ன பலகாரங்கள் இருக்கின்றன என்பது தெரியாதபடியால், இருண்ட வெளிச்சமாக இருந்ததைக் கருதி, கோயிலில் இருந்த விளக்கின் திரியை தூண்டிவிட்டானாம். அப்போது திரும்பி வந்த அர்ச்சகன், பார்ப்பன இளைஞன் பலகாரங்களை மூட்டை கட்டுவதைக் கண்டு, ஆத்திரத் தில் அவனை அடித்துக் கொன்றான். அன்று மகாசிவராத்திரியாம்.
ஒழுக்கங்கெட்ட அந்தப் பார்ப்பான், காலை முதல் இரவு வரை பட்டினி இருந்தது மகாசிவராத்திரி விரத பகல் உபவாசம் ஆனதாம். திருட எண்ணி, பிரசாதங்களைப் பார்ப்பதற்கு விளக்கு வெளிச் சத்தைத் தூண்டியது சிவராத்திரியில் ஈஸ்வரலிங்க சிலைக்கு தீப ஆராதனை செய்தது போலவும் பிரசாத நிவேதனம் செய்தது போலவும் ஆனதாம். இதனால் பார்ப்பனப் பூசாரியால் கொல்லப் பட்டதும் நேராக சிவலோகம் சென்றானாம். சிவராத்திரியில் மனிதக் கொலை; இவன் கொலை செய்தது எந்தப் புண்ணியத்தைச் சேர்ந்ததோ? கொலை செய்த அர்ச்சகனுக்கு எந்த லோகம் அளிப்பதோ? என்பது எல்லாம் அதில் கூறப்படவில்லை. மனிதனுக்குப் பிறப்பு அடுத்து இறப்பு வருவது இயற்கைத் தத்துவம் என்பது உண்மை. உலகில் மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பாய் தெரிந்த உண்மையாகும். ஆனால், இந்தச் சிவராத்திரிகள் விரதங்களின் முக்கிய அடிப்படை, பகலை அடுத்து இரவு வருவதுபோல, மனிதருக்குப் பிறப்பை அடுத்து இறப்பு வருவது என்பதுதானாம். இதைத் தெரிந்து கொள்ள பூசையும் விரதமும் வேண்டுமா? என்றுதான் நாம் கேட்கின்றோம்.

இந்தப் பாழும் அர்த்தமற்ற - பொய்யான - ஒரு காசுக்கும் உதவாத, நமக்கு இழிவையும் அவமானத்தையும் தருவதான பண்டிகைக்கும், உற்சவத்திற்கும், பூசைக்கும், சடங்குக்குமாகப் பொருளையும், பணத்தையும் விரயப்படுத்துவது மக்களின் அறியாமை யும், சுயநலக்காரர்களின் சூழ்ச்சியும், புரோகிதர்களின் ஆதிக்கமும் தந்திரமுமே ஆகும். இவைகளை உடனடியாக ஒழிக்க வேண்டும்.
------- தந்தைபெரியார் -- நூல்: "இந்துமதப் பண்டிகைகள்"
---------------நன்றி:விடுதலை

4.3.08

மனுநீதிப்படி சூத்திரர்களுக்குக் கடவுள் யார்?

{14-12-1947 அன்று திருவண்ணாமலையில் நடந்த திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசிய போது பல அறிவார்ந்த வினாக்களை எழுப்பியுள்ளார். இச்சொற்பொழிவைப் படிப்பவர்கள் தாராளமாக சிந்தித்து விருப்பு வெறுப்பின்றி ஒரு முடிவுக்கு வர வேண்டுகிறேன்.}


உன்னைப் பார்த்துத்தானே என் புருஷனும் தேவடியாள் வீட்டுக்குச் சென்று விடுகிறான் ! .

வருடந்தோறும் கல்யாணம் ? தேவடியாள்கள் ?

கடவுள் இருக்கட்டும் - நாங்கள் வேண்டாமென்றுகூறவில்லை! எங்கும் வியாபித்திருக்கும் அந்தக்கடவுளுக்கேன் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள்?

அவருக்கேன் 10 - ஏக்கர், 20 - ஏக்கர்,விஸ்தீரணத்திற்கு மாடமாளிகையும் கூடகோபுரங்களும்? அவருக்கேன் ஒரு கோடி இரண்டுகோடி மதிப்பு பெறும்படியான நகைகள்?

அவருக்கேன்பல லட்சரூபாய் பெறுமான தங்கக் குல்லாய்கள் -வைரக் குல்லாய்கள்?அவருக்கேன் நித்தியம் ஆறுவேளை பூஜை?
பாடுபட்டும் பல பாட்டாளி மக்கள் பசியுடன் இருக்க அவருக்கேன் 10 - படி, 20 - படி சோற்றுருண்டைகள்? அவருக்கேன் பாலாபிஷேகம் - தேனாபிஷேகம்?

அவருக்கேன் வருடந்தோறும் கல்யாணம்? அவருக்கேன் தேவடியாள்கள்?
அவருக்கேன் தேரும் - திருவிழாவும்?

சர்வசக்தி படைத்த அவருக்கேன் ஏராளமான பொருள் செலவு செய்து நாம் இதையெல்லாம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும்?
இவை அவருக்குத் தேவையில்லை என்றால் நாஸ்திகமா?
அவர் பேரைச் சொல்லி நம்மை ஏமாற்றும் பார்ப்பான் தன்மையை ஏன் இன்னும் நீ ஒழிக்காமல் இருக்கிறாய்?
நீ கொடுப்பதால் இத்தனையும் நடக்கிறதா?

அல்லது நீ கெடாமல் இருந்தால் கூட இத்தனையும் நடக்குமா?
நீ கொடாமல் இருந்தால் ஒரு நாள் வைத்திருப்பானா இந்தக் கல்லுப்பொம்மைக் கடவுளை - இந்தப் பேராசை பார்ப்பான்?

உனக்கு முன்னாலன்றோ கடப்பாரை எடுத்துக் கொண்டு போவான் - கோயிலை இடித்து உள்ளதையும் அபகரித்துக் கொள்ள?
இதை அறியாமல் பைத்தியக்காரத்தனமாக ஏனப்பா அள்ளிக் கொடுத்து வருகிறாய்?
கடவுள் பேரால் ஏனப்பா அள்ளிக் கொடுத்து வருகிறாய்?
கடவுள் பேரால் ஏனப்பா ஒரு கூட்டத்தை சோம்பேறிகளாக்கி வருகிறாய் - என்று கேட்பதா பாவம்? கடவுள் சொத்தால் யாருக்கு லாபம்?

கடவுளின் சொத்துக்களைக் கொண்டு எத்தனைத் தொழிற்சாலைகள் ஆராய்ச்சிப் பண்ணைகள் நடத்தலாம்!

இத்தனை சொத்துக்களையும் கடவுளுக்கு அழுதவன் நீயும், உன் பாட்டனும் பூட்டனும் தானே? ஒரு பார்ப்பானாவது ஒரு அடி நிலம் விட்டிருப்பானா சாமிக்கென்று? அப்படிச் செய்ய அவனென்ன உன்னைப் போல் பைத்தியக்காரனா?

பார்ப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் கூட வீதியிலுள்ள சாமான் வீட்டுக்குள் போகுமே ஒழிய, ஒரு ஓட்டை உடைகல் சட்டிப்பானைக்கூட வீதிக்கு வராதே – தெரியுமா உனக்கு அது?

எந்தப் பார்ப்பானாவது தன் வீட்டு எண்ணெயைக் கொண்டு கடவுளுக்கு தீபம் வைக்கிறானா?
எந்தப் பார்ப்பானாவது திருவண்ணாமலை தீபத்திற்கு நெய் டின்கள், எண்ணெய் டின்கள் அனுப்பியிருக்கிறானா?
எந்தப் பார்ப்பானாவது சூத்திரனுக்குச் சமாராதனை செய்திருக்கிறானா?
ஏன் ஒரு குண்டு விறகாவது உங்கள் சமாராதனைக்காக அவன் அனுப்பியிருப்பானா?

ஏன் அப்பா நீ மட்டும் இப்படி அழ வேண்டும்? அவன் மட்டும் ஏன் டிக்கெட் கொடுத்து வர வேண்டும் என்றால் இதையா நாஸ்திகம் என்பது?
ஒரே அடியாக மோஷத்தில் இடம் பிடித்துக் கொள்ள வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால் அதற்கு எங்களைத்தானா தூற்ற வேண்டும்?

ஒழுக்கமுள்ளவனுக்குத்தான் மோஷத்தில் இடம் இருக்குமென்றால் நீங்கள் நினைக்கிறீர்களா? ஒரு பார்ப்பானுக்காவது மோஷத்தில் இடம் கிடைக்குமென்று?

கடவுளுக்குத்தான் நேர்மை நீதி இருக்குமானால் அவர் பேரால் நம்மை வஞ்சித்துப் பிழைக்கும் பார்ப்பான் ஒருவரையாவது மோஷத்திற்கு அனுப்பி வைப்பாரா அவர்?

அப்படிப்பட்ட பார்ப்பானா உனக்கு மோஷத்திற்கு டிக்கட் கொடுப்பது? அதற்காகவா நீ அவன் காலைக் கழுவி தண்ணீர் குடிப்பது?
அறிவிருக்கும் போது நீங்கள் சிந்திக்க வேண்டாமா இவற்றையெல்லாம்?

நம்பத்தகாத காட்டுமிராண்டிக் காலத்திய சங்கதிகளைக் கொண்டு வந்து புகுத்தி மதம் கடவுள் என்ற பேரால் நம்மை ஏமாற்றி வாழும் பார்ப்பானை நம்பியா இந்த 1947-லும் நீ சூத்திரனாயிருப்பது?

இந்த இருபதாவது நூற்றாண்டிலா நீ உன் கடவுளைத் தாசி வீட்டிற்கு அழைத்துச் செல்லுவது?

உன் மனிதத்தன்மை ஒப்புக் கொள்கிறதா இதை?ஆண் மகன் தான் தானும் கடவுளைப் போல் இரண்டு பெண்டாட்டி வைத்துக் கொள்ளலாம். கடவுளைப் போல் தாசி வீட்டிற்குச் சென்று வரலாம் என்று நினைத்துக் கடவுளைக் கும்பிடுவானானால் என்னருமைத் தாய்மார்களே நீங்களுமா அந்தக் கடவுளுக்குத் தேங்காய், பழம் கொண்டு சென்று படைப்பது?

உன்னைப் போல் என் புருஷனும் தினம் தேவடியாள் வீட்டுக்குச் செல்லட்டும் என்று துதிக்கவா நீங்கள் கோயிலுக்குச் செல்லுவது அல்லது என் புருஷனைப் போல் எனக்கும் இன்னும் இரண்டாரு மாப்பிள்ளைமாரைத் தேடிக் கொடு என்று கேட்கவா சொல்லுகிறீர்கள்?

இல்லையே! பின்னையேன் போக வேண்டும்?
உங்களுக்கு அறிவிருந்தால் மனிதத் தன்மையில் விருப்பமிருந்தால் ஒழுக்கத்தில் நாட்டமிருந்தால் தாய்மார்களே! நீங்கள் ஆளுக்கொரு கம்பு எடுத்துச் செல்ல வேண்டும் - கோயிலுக்குப் போகும்போது!
சாமி உனக்கேன் இரண்டு பொண்டாட்டி? என்று கேட்டு அடிக்க வேண்டும் - அந்தக் கம்பால்!

இரண்டு பொண்டாட்டி இருந்தும் சாமி உனக்கேன் தேவடியாள்?

உன்னைப் பார்த்துத்தானே என் புருஷனும் தேவடியாள் வீட்டுக்குச் சென்று விடுகிறான்! என்று கூறி உடைத்து தூளாகும்படி அடிக்க வேண்டும் - அந்தக் கம்பால்.என் சகோதரியை ஏன் சாமி பொட்டிக் கட்டிக் கொள்ள வேண்டுமென்கிறாய்? என்று கேட்டு அடிக்க வேண்டும் - அந்தச் சாமியை!


அய்யரோ, தர்மகர்த்தாவோ அதைத் தடுக்க வந்தால் நியாயம் கூறையா?
அந்தச் சாமிக்கேன் வருடத்திற்கொரு கல்யாணம் போன வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று?

அதுவும் போதாமல் தேவடியாள் வேறு ஏன்? என்று அவர்களையும் அடித்துக் கேளுங்கள். உங்களைக் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றால் அங்கும் கேளுங்கள்.

கம்பைக் காட்டி நாங்கள் ஏனையா சட்டப்படி சாஸ்திரப்படி கடவுள் வாக்குப்படி சூத்திரச்சிகள் தாசிகள்?

இதை ஆதரிக்கும் இவர்களையும் இதை அனுமதிக்கும் கடவுளையும் இந்த இரும்புத்தடி கம்பால் அடித்தாலென்ன பாபம் வந்துவிடும்? என்று ஓங்கிக் கேளுங்கள்!

இப்படிச் செய்தாலன்றோ பாபம் வந்துவிடும்? என்று ஓங்கிக் கேளுங்கள்! இப்படிச் செய்தாலன்றோ உங்கள் இழிவு நீங்கும்!இதை விட்டு உங்களைப் பழிக்கும் கடவுளர்களுக்கு நீங்கள் ஒய்யார நடை நடந்து தேங்காய், பழம் எடுத்துச் செல்கிறீர்கள் என்றால் உங்கள் இழிவு நீங்குவது தான் எப்போது?

உங்கள் தாசிப்பட்டம் போவது தான் எப்போது? சூத்திரனுக்கும், சூத்திரச்சிக்கும் கடவுளுண்டா என்பது தெரியுமா உங்களுக்கு?

மனுநீதிப்படி சூத்திரர்களுக்குக் கடவுள்கள் இந்தப் பார்ப்பனர்கள் தான் இவர்கள் தான் சூத்திரர்களுக்குப் பூதேவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?


கடவுளை நோக்கி தவம் செய்தான் என்பதற்காக சூத்திரனான சம்பூகன் ராமன் என்ற கடவுளால் கொல்லப்பட்டான் - மனுதர்மப்படி என்பது சாஸ்திரம். இதை நீங்கள் படித்திருக்கிறீர்களா?

நீங்களெல்லோரும் பார்ப்பானுக்கு அடிமைகள்! உங்கள் சொத்துக்களையோ, உங்கள் மனைவி மக்களையோ அனுபவிக்க அவனுக்குச் சகல உரிமையுண்டு என்று கூறும் சாஸ்திரங்கள் இன்றும் இருந்து வருகின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

நாங்கள் இவற்றை எல்லாம் எடுத்துக் காட்டிக் கண்டித்து வருவதால் ஏதோ தந்திரமாக சில சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றனவே அல்லாது நாங்களே இல்லாவிட்டால் சூத்திரத் தாய்மார் ஒவ்வொருத்தரும் பொட்டுக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்குமே இந்நாட்டில்!

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் நான் கூறினால் சமீப காலம் வரைக்கும் நம் திராவிட நாட்டின் ஒரு பாகத்தில் பக்குவமடைந்த பெண் ஒவ்வொருத்தியும் முதலில் ஒரு ஜாதி பிராமணனால் தான் ருசி பார்க்கப்பட வேண்டும் என்ற முறை இருந்து வந்ததை நீங்கள் அறிவீர்களா?
இதை நான் கூறவில்லை.தோழர் அம்பேத்கர் அவர்கள்,

காந்தியாரும் காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் சாதித்ததென்ன? என்ற தமது புத்தகத்தில் 205 –ம் பக்கத்தில் மேல்நாட்டு ஆசிரியர்களின் மேற்கோள்ளுடனும் மலபார் கெஜட்டின் ஆதாரத்துடனும் இப்படிப்பட்ட ஒரு பழக்கம் - சம்பந்தமுறை திருமணம் செய்து கொண்ட மக்களிடையே இருந்து வந்ததாக விளக்கிக் கூறுகிறார்! வாங்கிப் பாருங்கள் அதில் ஊர் பேர் இருக்கிறது.

இப்படிப்பட்ட அக்கிரம அந்தணர்களுக்கா நீங்கள் அடிபணிவது?ஆகவே உங்கள் இழிவு நீங்க வேண்டுமாயின் ஒன்று இப்படிப்பட்ட இந்து மதம் ஒழிய வேண்டும் அல்லது அதை விட்டு நீங்கள் வெளியேற வேண்டும்!

நீங்கள் வெளியேறும் பட்சத்தில் கும்பிடவோ, கொடுக்கவோ மொட்டையடித்துக் கொண்டு காணிக்கை செலுத்தவோ, காவடி தூக்கிக் கொண்டு குரங்காட்டம் குதிக்கவோ அக்கிரகாரத்தில் ஆள் கிடையாது.

உண்மையாகவே கேட்கிறேன், ஒரு பார்ப்பானாவது பார்ப்பன அம்மையாவது திருப்பதியில் மொட்டை அடித்துக் கொள்ளும்போதோ அல்லது திருத்தணிக்குக் காவடி தூக்கும் போதோ அல்லது கோவிந்தா கோவிந்தாவென்று கூறிக் கொண்டு தெருவில் உருளும் போதோ நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

நீங்கள் கொடுப்பது ஒழிந்தால் கோயில்கள் தாமாக ஒழியும். அவை ஒழிந்தால் ஆரியத்தின் மோச வேலைகளும் அன்றே ஒழிந்துவிடும்.

ஒருவேளை ஆற்று மண்ணையாவது எண்ணி விடலாம். நமது சாமிகளை எண்ண முடியாது போல் இருக்கிறதே! எத்தனைச் சாமிகள்!

நூல் கேட்கும் சாமிகள், துணி கேட்கும் சாமிகள், மயிர் கேட்கும் சாமிகள், வெடி கேட்கும் சாமிகள், தேங்காய் கேட்கும் சாமிகள், காசு கேட்கும் சாமிகள், கற்பூரங் கேட்கும் சாமிகள்!இன்னும் என்னன்னமோ கேட்கும் சாமிகள். எத்தனை எத்தனை கோடியோ இன்னும் நம் நாட்டில் இருக்கின்றனவே!

அத்தனைக்கும் படைத்துத்தானே நாம் வர வர குட்டிச் சுவராகி வருகின்றோம்.

இதைக் கூறுவதா நாஸ்திகம்? நாஸ்திகம் என்றால் அர்த்தம் தெரியுமா உனக்கு? நாஸ்திகன் என்றால் அவனை தலைசிறந்த அறிவாளி என்று உலகம் போற்றும் என்பதை நீ அறிவாயா?

மேல் நாட்டார் தம் குழந்தைகளுக்கு ஒரு நாஸ்திகன் பெயரை இடுவதில் அளவற்ற பெருமையும், மகிழ்ச்சியும் கொள்வார்கள். உருவச் சிலை வைப்பார்கள் என்பது உனக்குத் தெரியுமா?

ஒருவன் கடவுள் இல்லை என்று கூறுவானானால் அவனே கடவுள் தன்மை பெற்றிருக்க வேண்டும். அவனுக்கு உலகில் நடக்கும் சகல காரியங்களுக்கும் காரணங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதை நீ அறிந்திருக்கிறாயா?கடவுள் இல்லை என்று ஒருவன் கூறுவானானால் கடவுள் தன்மை என்பதை தெரிந்த அவ்வளவு அறிவு பெற்று இருக்கிறான் என்று தான் அர்த்தம். கடவுள் இல்லையென்றால் யாருக்குக் கடவுள் இல்லை?

உண்மை ஞானிக்குத்தான் கடவுள் இல்லை! வேதாந்தி உண்மையின் முடிவு கண்டவனுக்குத்தான் அப்படிப்பட்ட ஒரு ஞானியை யாரும் வெறுக்க மாட்டார்கள். அவனும் யாரையும் வெறுக்க மாட்டான். அவனை யாரேனும் வெறுப்பார்களானால் அவர்களை அறிவிலிகள், முட்டாள்கள் என்று தான் உலகம் கூறும். அப்படியிருக்க என்னைப் போன்ற சாதாரண ஆட்கள் கடவுள் இல்லை என்று கூறும்படியான அவ்வளவு பெரிய அறிஞர்கள் அல்ல!

சாக்ரடீஸ், இங்கர்சால், பிராட்லா, ஸ்பென்சர் போன்றவர்கள் தான் அதற்குத் தகுதி வாய்ந்தவர்கள். நாங்களென்ன கடவுள் இல்லை என்று கூறி தப்பட்டையா அடித்துக் கொண்டு வருகிறோம்?

கடவுள் பேரைச் சொல்லி யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டாம் என்று தானே கூறி வருகிறோம்? அப்படி ஏதாவது கடவுளைப்பற்றிப் பேச நேர்ந்தால் எது கடவுள்? அது எப்படி இருக்கும்? எதைக் கொண்டு அதைக் கடவுளென்று தீர்மானிப்பது என்று தானே நாங்கள் கேட்கிறோம்?

சரியான சமாதானம் கூறத் தெரியவில்லையானால் தெரியவில்லை என்று சொல்லி விட்டுப் போயேன். எங்களை ஏன் நாஸ்திகர்கள் என்று கூறி மக்களிடம் எங்கள் மீது துவேஷத்தை உண்டாக்குகிறாய்?

ஒன்றரை முழம் குழவிக்கல் பொம்மையைக் கடவுளென்று கூறி அதற்கு பாலாபிஷேகம் செய்து, பட்டாடையும் உடுத்தி பல நகைகளும் போடுகிறாய்! அம்மனை அய்யர் தொடுகிறாரே என்ற கவலை இல்லையே உனக்கு!
மறுநாள் காலையில் போய்ப் பார்த்தால் அம்மணமாயிருக்கிறதே அந்த அம்மன் வந்தத் திருடன் நகையைக் கழட்டிக் கொண்டு போனதல்லாமல் சேலையையும் அவிழ்த்துப் போய்விட்டானே! உன் சாமியால் அதைத் தடுக்க முடியவில்லையே!


உண்மையில் சாமி அந்தக் கல்லில் இருக்குமானால் கிட்டப் போவானா அந்தத் திருடன்? போனாலும் தொடுவான் அந்தச் சாமியை? நினைத்தவுடன் நெஞ்சு புகைந்து போகாதா அவனுக்கு?ஏன் இப்படி என்று சிந்தித்துப் பார்த்தாயா நீ?

மற்ற உலக மக்களுக்கெல்லாம் முஸ்லீம், கிறிஸ்துவர்களுக்கெல்லாம் கடவுள் இல்லாமலா போயிற்று?

அவர்களெல்லாம் இப்படி ஒரு முழ பொம்மையை வைத்துக் கொண்டு கும்பாபிஷேகம், பூஜை, கல்யாணம், கருமாதி, உற்சவம் முதலியன செய்து கொண்டா கூத்தடித்தார்கள்?உன் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தாயா? திராவிடனுக்கு எங்காவது குழவிக்கல் பொம்மை சாமி இருந்தது என்று எழுதப்பட்டிருக்கிறதா அதில்?

அப்படித்தான் உனக்கு ஒரு சாமி வேண்டுமென்றால் அது உன்னைப் போலல்லவா இருக்க வேண்டும்?

உன்னைத் தொட்டாலும் உன் நிழல்பட்டாலும் தான் செத்துப் போவதாகக் கூறுவதா உனக்குச் சாமி? வெட்கமில்லையா உனக்கு?கோயில் கட்டுவதும் நீ! கும்பாபிஷேகம் செய்வதற்குப் பொருள் கொடுப்பதும் நீ! சாமியின் பூஜைக்கும் சாப்பாட்டிற்கும் படியளப்பதும் நீ!

அந்தச் சாமிக்கு தன்னைப் போல் உச்சிக்குடுமி வைத்து விட்டு தன்னைப் போல் பூணூலும் போட்டு விட்டு நீ கொடுத்த துணியை தன்னைப் போல் பஞ்சகச்சம் வைத்து அதற்கு உடுத்திவிட்டு அதன் மீது மாட்டு மூத்திரத்தைத் தெளித்துவிட்டு சாமிக்கு உயிர் வந்துடுத்து இனி எட்டி நில் - தொடாதே! என்று உன்னிடம் கூறிவிடுகிறானே பார்ப்பான்!

நீ அவனையும் தொடக்கூடாது. சாமியையும் தொடக்கூடாது. நீ அவன் சாப்பிடும் போதும் பார்க்கக்கூடாது! ஆனால் இரண்டு பேருக்கும் நீ தானே படியளக்க வேண்டும்?

இது யோக்கியமா ? ஏமாற்றுதல் அல்லவா என்று கேட்டால் இதற்கா நாஸ்திகம் என்று பெயர் கொடுப்பது? மாமாங்கம் என்று கூறிக் கொண்டு போய் மக்களின் மூத்திரம் கலந்தச் சேற்று நீரைத் தெளித்துக் கொண்டு வருகிறாயே!

புத்தியிருக்கா உனக்கு ?இங்கு உன் பெண்டாட்டியை மீட்டிங்குக்கு கூட்டிவர நடுங்குகிறாய் எட்டிப் பார்த்துவிட்டால் கூட அடிக்கப் போகிறாய். அங்கு மாமாங்கக் கும்பலில் அவள் கூட்டத்தில் அகப்பட்டு கூட்டத்தால் கசக்கப்படும் போது வெட்கமில்லாமல் கொந்து பத்திரம், செவ்வு பத்திரம், கழுத்து பத்திரம், காது பத்திரம் என்றுதானே கூறுகிறாய்.

கொஞ்சமாவது மானமிருந்தால் அப்படிப்பட்ட இடத்திற்குப் பெண்களை இழுத்துக் கொண்டு போவாயா நீ ?

மாமாங்கக் குளத்தில் எப்படித் தண்ணீர் பொங்கும் என்று சிந்தித்ததுண்டா நீ? இன்றாவது தெரிந்து கொள்.

ஜனநெருக்கத்தால் மூத்திரம் வெளியில் விட முடியாத ஜனங்கள் சரசரவென்று குளிப்பது போல் குளத்தில் இறங்கி மூத்திரப்பையை காலி செய்து விடுகிறார்கள். அதுதான் நுரைவரக் காரணம் என்றும் அவர்கள் விடும் மூத்திரத்தாலும், பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் நீரில் இறங்குவதாலும் தான் அந்த நீர்மட்டம் ஏறுகிறதென்றும் அறிவாளிகள் சொல்லுகிறார்கள்.


ஆகவே உங்களை இவையெல்லாம் சரியா, தப்பா என்று பகுத்தறிவு கொண்டுதான் நடக்கும்படி சொல்லுகிறோம். நாணயமாகத் தான் நடக்கும்படி சொல்லுகிறோம். இதற்கா நாங்கள் நாஸ்திகர்கள் ஆக்கப்படுவது ?

இதற்கா நரகத்திற்குப் போக வேண்டும் ?
உண்மையான கடவுள் இருந்தால் அவர் பேரைச் சொல்லி மக்களை வஞ்சித்து வரும் இந்தப் பார்ப்பனர்களையன்றோ நரகத்திற்கு அனுப்பிவிட்டு நமக்கு மகிழ்ச்சி செய்தி அனுப்பி வைப்பார்.

இதைக் கேட்பதா நாஸ்திகம்? இந்த அக்கிரமங்களைக் கண்டு இரத்தம் துடிக்க வேண்டாமா உங்களுக்கு ?

எங்களை நாஸ்திகர்களென்று கூறும் இவர்கள் மட்டுமென்ன மகாபக்தர்கள்? எவனாவது கடவுள் காப்பாற்றித் தருவார் என்று நினைத்துத் தன்னுடைய பணத்தை மேஜை மீது வைத்து விட்டுப் போய்விடுவானா ?

அப்படித்தான் கடவுளை காவல் வைத்துவிட்டுப் போனாலும் அந்தப் பணம் அப்படியே இருக்குமா?

கடவுள் காவலிருக்கும் போது பணம் வைக்க இரும்புப் பெட்டி ஏன்? அதற்குப் பூட்டேன்? அவரையே ஜெயில் கைதி மாதிரி பூட்டி வைப்பதேன்?

அப்படி பூட்டு போட்டுங்கூட அவரைப் பெயர்த்து விட்டு அடியில் இருப்பதை அடித்துக் கொண்டு போவானேன்? கோயில் நகைகள் கொள்ளைப் போவானேன்?
அன்பர்களே!

கோயிலும் கடவுள்களும் மதங்களும் பார்ப்பனர் தம் வாழ்வுக்காக வகுத்துக் கொண்ட வழிகள். அவை இருக்க வேண்டிய அவசியமில்லை !

அப்படி இருக்க வேண்டுமென்றாலும் அறிவுக்கேற்ற ஒரு நாணயமான, பாராபட்சமற்ற கடவுளை வணங்குங்கள். உங்களை இழிவுபடுத்தாத முட்டாள்களாக்கி வைக்காத ஒரு மதத்தை தழுவி நடவுங்கள் என்று தான் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

(14-12-1947 அன்று திருவண்ணாமலையில் நடந்த திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது – 23-12-1947 "குடிஅரசு" இதழில் வெளியானதில் ஒரு பகுதி)(பெரியார் களஞ்சியம் 2-ஆம் தொகுதியில் இருந்து…. பக்கம் :202)

-------நன்றி:சிந்திக்க உண்மைகள்

2.3.08

இறப்பும் - பிறப்பும் மனிதர் செயலா? கடவுள் செயலா?

உலகில் மனிதர் பிறப்பதும் சாவதும் ``கடவுள் செயலா?'' மனிதர் செயலா?'' என்பதைப்பற்றி விளக்குவதுதான் இக்கட்டுரையின் தத்துவமாகும்.மக்களுக்கு ஆராய்ச்சி அறிவின் தன்மை இல்லாததால் மனித இறப்பு பிறப்புப்பற்றிய விஷயத்தில் சிறிதும் அறிவில்லாமல் ``எல்லாம் கடவுள் செயல்'' என்ற கருத்தில் உழன்று வருகிறார்கள்.

இன்றைக்கு ஆயிரம் - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டவர்களாய் இருந்ததால் இறப்பு - பிறப்பு பற்றிய அறிவே இல்லாதவர்களாக, அதைப்பற்றிய கவலையற்றவர்களாக இருந்து வந்தார்கள்.மேல்நாட்டாரின் சம்பந்தம் நமக்கு ஏற்பட்டதற்குப் பிறகே பிறப்புப்பற்றியும், சாவு பற்றியும் நம் மனிதர்கள் சிந்தித்து அது சம்பந்தமான அறிவு பெற வேண்டியவர்களானார்கள்.சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு கிறிஸ்து பிறந்து அவர் செத்த காலத்தில் இந்த உலக ஜனத்தொகையே சுமார் 20 கோடி மக்களைக் கொண்டதாகத்தான் இருந்தது. பிறகு, 1500 (ஆயிரத்து அய்நூறு) வருடம் கழித்து பிறகு உலக ஜனத்தொகை (கி.பி.1500-இல் 45 (நாற்பத்து அய்ந்து) கோடி மக்களைத்தான் கொண்டிருந்தது.பிறகு, சுமார் 300 வருஷம் கழித்து கி.பி. 1800-இல் 70 (எழுபது) கோடி மக்களைக் கொண்டதாகத்தான் இருந்தது.பிறகு 115 வருஷம் கழித்து 1915-இல் இந்த உலகம் 165 (நூற்று அறுபத்தைந்து) கோடி மக்களைக் கொண்டதாக இருந்தது.அன்று மக்களுடைய ஆயுள் சராசரி 25 வருஷமாக இருந்தது.பிறகு கி.பி. 1954-ஆம் வருஷத்தில் உலக ஜனத்தொகை 326 கோடி மக்களாக ஆகி அவர்களுடைய ஆயுளும் சராசரி 60-65 வருஷங்களாகவும், நம் நாட்டில் 37 வருஷங்களாகவும் ஆகி இருந்தது.இன்று 1964-ஆம் வருஷத்தில் உலக ஜனத்தொகை சுமார் 350 கோடி என்பது மாத்திரமல்லாமல் மக்களின் ஆயுள்காலம் சராசரி மற்ற நாடுகளில் 60-க்கு 70 என்பதாகவும், நம் நாட்டில் சராசரி 50 வருஷமென்றும் ஆகி இருக்கிறது. அது மாத்திரமல்லாமல் இறப்பும் - பிறப்பும் பெருமளவிற்கு குறைந்து இருக்கிறது.மனிதநூல் ஆதாரப்படி மக்களுக்கு ஆயுள் 100 வருஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், மக்கள் சராசரி ஆயுள் 20 முதல் இன்று 50 வயது; மேல் நாடுகளில் 60-70 வயதாகவும் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் கடவுள் செயலா, மக்களின் அறிவு வளர்ச்சியும், வைத்திய வளர்ச்சியுமா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இங்கிலாந்து நாட்டு சரித்திரத்தைப் பார்த்தால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்!

காரணம் ``கடவுளால் உண்டாக்கப்பட்ட நோயை மனிதன் கடவுளுக்கு விரோதமாக மருந்து கொடுத்து சவுக்கியம் செய்வதா?'' என்ற கடவுள் பக்தி காரணத்தால் கொல்லப்பட்டார்கள்.நமது நாட்டிலும் காலராவுக்கும், அம்மைக்கும் 1900-ஆம் வருஷம் வரை மருந்தே இல்லாமலிருந்தது, அப்போது காலரா 100 பேருக்கு வந்தால் 90 பேர் செத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது 100-க்கு 10 பேர்களைக்கூட டாக்டர்கள் சாகவிடுவதில்லை. அம்மைக்கு மேல் நாட்டார் அம்மை குத்தி அம்மை வராமல் தடுப்பது மாத்திரமல்லாமல், மேல் நாட்டில் வந்த பிறகு சவுக்கியம் செய்ய மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.அது மாத்திரமல்லாமல், மக்கள் அதிகமாக பிள்ளை பெறாமல் இருப்பதற்கு மருந்து, இரண சிகிச்சை முதலிய காரியங்கள், மக்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் யார் காரணமென்று.மற்றும் மீன் பண்ணை வைத்து மீன்களை உற்பத்தி செய்கிறான் மனிதன். கோழிப் பண்ணை வைத்து முட்டைகளைப் பெருக்கி கோழிகளை உற்பத்தி செய்கிறான் மனிதன். இவற்றை தினம் கோடிக் கணக்கில் கொன்று தின்கிறார்கள் மனிதர்கள்.இந்த ஜீவன்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் யார் காரணம் என்பதைச் சிந்தியுங்கள்.தோட்டம் வைத்து காய்கறி, உணவுப் பொருள் உற்பத்தியாக்கி அறுவடை செய்து உண்பதற்கும் இதற்கும் என்ன பேதம்? சிந்தியுங்கள்! எனவே, கடவுள் நம்பிக்கை எவ்வளவு முட்டாள்தனமானது, ஆபத்தானது, வளர்ச்சியைத் தடுப்பது என்பதை உணருங்கள். இறப்பும் - பிறப்பும் மனிதர் செயலா? கடவுள் செயலா?


-------தந்தைபெரியார்- "விடுதலை"-21-5-1967

தினமலருக்கு- ரத்தக் கொதிப்பு!

மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு முன்பு பலதரப்பினரிடமும் ஆலோசனைகளைப் பெற்றார்.

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பலரும் கருத்துகளைக் கூறியுள்ளனர்.
புதுவை மாநிலங்களவை உறுப்பினர் நாராயணசாமி அவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தனி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
சுர்ஜிவாலா கூறும்போது விவசாயிகளுக்குத் தனி ஒதுக்கீடும், சலுகைகளும் அளிக்கப்பட வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர்களுக்கும், தனி ஒதுக்கீடு தேவை என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் விஷயத்திலும் கவனம் தேவை என்றெல்லாம் கருத்துக் கூறப்பட்டது.

இந்தத் தகவல்களையெல்லாம் வெளியிட்ட கருமாதி பத்திரிகையான தினமலர் (28.2.2008) என்ன தலைப்பைப் போட்டிருக்கிறது தெரியுமா?

ஜாதிக்கு ஜாதி தனி பட்ஜெட் போடுங்க...! என்று தலைப்பை வெளியிட்டு கடைசியில் தன் ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்துவிட்டது.

ஏழைகள், விவசாயிகள் நலனுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கீடு அளிக்கும் போக்கு போய், ஜாதி வாரியாக அளிக்கவேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு வந்துவிட்டது என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது.

சமுதாயத்தை பிறப்பின் அடிப்படையில் ஜாதியைச் சொல்லி பிளவு ஏற்படுத்தியவர்கள் யார்?
ஒரு ஜாதிக்கு மட்டும்தான் கல்வி, ஒரு ஜாதிக்கு மட்டும்தான் உத்தியோகம் - ஒரு ஜாதி மட்டும்தான் பிரம்மாவின் நெற்றியில் பிறந்தது என்று ஏற்பாடு செய்தவர்கள் யார்?
பள்ளத்தில்தான் வாழவேண்டும் என்று கூறி பள்ளர்களாக ஆக்கியது யார்? சேரிகளில்தான் வாழவேண்டும் என்று கூறி தீண்டத்தகாத மக்களாக ஒதுக்கி வைத்தது யார்?
இந்தக் கேடுகள் காரணமாகத் தானே அவர்கள் படிக்கவில்லை - சமூக அந்தஸ்து பெறவில்லை - இந்தச் சூழ்நிலை காரணமாகத்தானே அவர்கள் வறுமையின் பல் சக்கரத்தில் சிக்கிச் சீரழிந்தனர்?
இன்றைக்கும் சேரியில்லையா - அக்கிரகாரம் இல்லையா?
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வளர்ச்சிக்கு உரிமை கோருவதில் என்ன குற்றம்?
எல்லாம் பார்ப்பான் வயிற்றில் அறுத்து வைத்தபோது ஆனந்தம் பிடி கொள்ளவில்லை. அதில் மற்றவர்களுக்கும் உரிய பங்கு கேட்கும்போது பதறுவதா?
ஜாதி உள்ளவரை அது தொடர்பான கோரிக்கைகளும், உரிமைக் குரல்களும் கேட்டுக்கொண்டுதானேயிருக்கும்!ஜாதியால் தங்களுக்குக் கேடு வந்துவிட்டது என்று பார்ப்பனர்கள் உண்மையில் உணருவார்களேயானால், வீதிக்கு வரட்டும்; பூணூலை அறுத்து நெருப்பு வைத்துக் கொளுத்தட்டும்; சங்கர மடத்தில் சாம்பான் மகன் தீத்தானை சங்கராச்சாரியாக்கட்டும்!
மனுதர்மத்தைக் கொளுத்தட்டும்; கீதையைக் கிழித்து கழுதைக்குப் போடட்டும் - சூத்திரன் சம்பூகனைக் கொன்ற ராமன் படத்துக்குப் பாதுகையால் சாத்துப்படி நடத்தட்டும்!
இவ்வளவும் செய்து முடிந்த பின் ஜாதியைச் சாடட்டும்!
அதற்குப் பின் நாம் ஒரு முடிவுக்கு வருவது பற்றி யோசிக்கிலாம்!
குறிப்பு: விவசாயத்துக்கு நிதி ஒதுக்கீடுபற்றி கசிந்துருகும் தினமலருக்கு சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், தினமலர்க் கூட்டத்தின் அபிமானத்துக்குரிய பா.ஜ.க. ஆட்சியின் கடைசி நிதி ஆண்டில் (2003-04) விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் சதவிகிதம் என்ன தெரியுமா? வெறும் 1.3. தான்!
காரணம் என்ன? அவாள் கண்ணோட்டத்தில் விவசாயம்தான் பாவத் தொழிலாயிற்றே!
பயிரிடுதலை மேலான தொழிலென்று சிலர் கருதுகின்றனர்; ஆயினும் பெரியோர் அதைப் பாராட்டவில்லை. ஏனெனில், இரும்புக்கொதி நுனியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ? (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாம் 10, சுலோகம் 84) இதற்கு விளக்கம் தேவையில்லை

29-2-08 "விடுதலை" இதழில் மயிலாடன் அவர்கள் எழுதிய கட்டுரை

1.3.08

ஜாதியை ஒழிக்க கடவுளை ஒழி!

நான் என்ன சொல்லுகிறேன் என்றால், ``நம் கடவுள் நம்பிக்கை என்பதே கடைந்தெடுத்த முட்டாளின் அறிகுறி''யாக ஆகிவிட்டது. காரணம் என்னவென்றால், ``கடவுள் என்றால் ஆராய்ச்சியே செய்யக் கூடாது'', ``நம்பவேண்டும்'', ``அப்படியே ஒப்புக் கொள்ளவேண்டும்'' என்பதாகிவிட்டது. அது மாத்திரமல்ல; அப்படிப்பட்ட கடவுளைப் பற்றி, ``கடவுள் என்றால் என்ன? அவர் எப்படி இருப்பார்? எதற்காக இருக்கிறார்? ஏன் இருக்கிறார்? எதுமுதல் இருக்கிறார்? அவர் சக்தி எவ்வளவு? நம் சக்தி எவ்வளவு? அவரால் ஏற்பட்டது எது? நம்மால் ஏற்பட்டது எது? எது எதை அவருக்கு விட்டுவிடலாம்? எது எது நாம் செய்ய வேண்டியது? அவரில்லாமல் ஏதாவது காரியம் நடக்குமா? எதையாவது செய்யக் கருதலாமா?'' என்பதுபோன்ற (இப்படிப்பட்ட) நூற்றுக்கணக்கான விஷயங்களில் ஒரு விஷயத்தைக்கூட தெளிவாகத் தெரிந்து கொண்டவன் எவனும் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் இல்லை. இல்லை என்றால் அறவே இல்லை என்று சவால்விட்டுக் கூறுவேன்.

நான் இதை 60-70 ஆண்டாகச் சிந்தித்துச் சிந்தித்து அறிவில், ஆராய்ச்சி அனுபவத்தில் கண்டுகொண்ட உறுதியினால் கூறுகிறேன். இவ்விஷயங்களில் மக்களுக்கு விஷயம் தெரியாது என்று சொல்லுவதற்கு இல்லாமல் தெரிந்து கொண்டிருப்பது குழப்பமானதும், இரட்டை மனப்பான்மை கொண்டதுமாக இருப்பதால், மனிதனுக்கு இவ்விஷயத்தில் அறிவு பெற இஷ்டமில்லாமலே போய்விட்டது.

தோழர்களே! நான் சொல்லுகிறேன், கடவுள் நம்பிக்கைக்காரன் ஒருவன் ``நான் ஜாதியை ஒழிக்கப்பாடுபடுகிறேன்'' என்றால், அதில் அறிவுடைமையோ, உண்மையோ இருக்க முடியுமா? கடவுள் இல்லாமல் எப்படி ஜாதி வந்தது? மத நம்பிக்கைக்காரன் ஒருவன் ``நான் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுகிறேன்'' என்று சொல்ல முடியுமா? மதமில்லாமல் எப்படி ஜாதி வந்தது? சாஸ்திர நம்பிக்கைக்காரன் ஒருவன் ``நான் ஜாதியை ஒழிக்கப் பாடுபடுகிறேன்'' என்று சொல்ல முடியுமா? சாஸ்திரம் இல்லாமல் எப்படி ஜாதி வந்தது? ஆகவே, இந்த ஜாதி ஒழிப்புக் காரியத்தில் கடவுள், மத, சாஸ்திர நம்பிக்கைக்காரர்கள் இருந்தால், அவர்கள் மரியாதையாய் வெளியேறி விடுவது நாணயமாகும். இதனாலேதான் ``ஜாதி கெடுதி, ஜாதி கூடாது'' என்று சொல்லத்தான் சில ``பெரியவர்கள்'' முன் வந்தார்களே ஒழிய, அதை ஒழிக்கப் பாடுபட இன்றுவரை எவரும் முன்வரவில்லை.

ஆகவே, தோழர்களே! உங்களுக்கு நான் சொல்லுகிறேன், வணக்கமாகச் சொல்லுகிறேன். நீங்கள் ஜாதியை ஒழிக்கப் பிரியப்பட்டீர்களேயானால் இந்த இடத்திலேயே உங்கள் கடவுளையும், மதத்தையும், சாஸ்திரத்தையும் ஒழித்துக் கட்டுங்கள்! ஒழித்துவிட்டோம் என்று சங்கநாதம் செய்யுங்கள்! கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய மூன்றும் ஒழிந்த இடத்தில்தான் ஜாதி மறையும், ஜாதி ஒழியும். மற்ற இடம் எப்படிப்பட்டதானாலும் அங்கு ஜாதி சாகாது. ஆகவே, ஜாதி ஒழிய வேண்டும் என்பவர்கள் முதலில் நாத்திகன் ஆகுங்கள். நாத்திகம் என்பது அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் கொண்டு தெளிவடைவதுதான். இத்தெளிவு அடைந்த இடத்தில் இம்மூன்றும் (கடவுள், மதம், சாஸ்திரம்) தலைகாட்டாது. ஆகையால், இப்படிப்பட்ட நீங்கள் நாத்திகர் என்று சொல்லிக் கொண்டாலும் ஒன்றுதான், பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்டாலும் ஒன்றுதான். தோழர்களே! ஜாதி ஒழிப்புக்காரர்கள் வீட்டில் உருவச் சின்னங்களோ, மதக் குறியோ, சாஸ்திர சம்பிரதாய நடப்போ இருக்கக் கூடாது; கண்டிப்பாய் இருக்கக் கூடாது.

------- தந்தைபெரியார்- "விடுதலை" 17-8-1962