Search This Blog

28.12.18

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தந்தை பெரியார்
"கட்டாய இந்தி ஒழிந்ததுபற்றி நாம் மகிழ்ச்சி கொண் டாடுகிற நேரத்திலேயே மற்றொரு துக்ககரமான சம்பவம் அதாவது வகுப்புவாரி உரிமை இந்திய அரசியல் சட்டத் திற்கு விரோதமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஏற்பட்டுவிட்டதால், மற்றொரு கிளர்ச்சி துவக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இயற்கை நமக்கு ஓய்வு தருவதில்லை.
வகுப்புவாரி உரிமைக்கு ஆகவேதான் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது. அதாவது பார்ப்பனரல்லாத மக்களின் நலனுக் காக, அவர்களுக்கும் உத்தியோகத் துறையிலும், கல்வித் துறையிலும் அவர்களுக்கான விகிதாசாரம் கொடுத்து நியாயம் வழங்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது. நானும் காங்கிரசில் இருந்த காலம் முதற்கொண்டே வகுப்புவாரி உரிமைக்கு ஆகவே பாடு பட்டு, அதன் காரணமாகவே, அதாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானத்தை நான் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிற்குக் கொண்டு போனபோது, அந்தத் தீர்மான மானது காங்கிரசின் கொள்கைகளுக்கு விரோதமாய் இருக்கிறது என்று கூறப்பட்டு என்னுடைய தீர்மானம் தள் ளப்பட்டு விட்டதால் நான் காங்கிரசிலிருந்து அதற்காகவே விலகினேன்.
பின்னர் சுயேச்சை அமைச்சர்கள் பதவிக்கு வந்தபோது வகுப்புவாரி உரிமைத் திட்டம் சட்டமாக்கப்பட்டு, எவ் வளவோ எதிர்ப்புகளுக்கு இடையில் அமல் நடத்தப்பட்டு வந்தது. அந்த சட்டமும் சரியானபடி, மக்களின் விகிதாசாரக் கணக்குப்படி அவர்களுக்குப் பங்கு அளித்தது என்று கூற முடியாது. ஆனாலும், நம்மவர்கள் - பல தொல்லைகள், சங்கடங்கள் இருந்தபோதிலும், வகுப்புவாரி உரிமையின் பயனாய் ஓரளவுக்கு முன்னுக்கு வந்தார்கள். குறிப்பாக போலீஸ் இலாகாவிலும், டிப்டி கலெக்டர்களிலும் நம்ம வர்கள் கணிசமான அளவில் முன்னேறினார்கள். நம்மவர் களுக்கு மேல் உத்யோகஸ்தர்களாய் பார்ப்பன அதிகாரிகள் இருந்ததால் அவர்கள் நம் உத்தியோகஸ்தர்கள் மேலுக்குவர முடியாமல் அழுத்தி தங்கள் வர்க்கத்தாருக்கே சலுகை காட்டி, அவர்களின் கொள்ளைக்கும் வழி செய்து கொடுத்து வந்தார்கள்.
நமது முன்னாள் முதல் மந்திரி ஓ.பி. ராமசாமி ரெட்டியார் அவர்கள் காலத்திலேதான்  வகுப்பு வாரி உரிமையின்படி, கல்லூரிகளில் மாணவர் களைச் சேர்ப்பது என்ற முறை நடைமுறைக்கு வந்தது.
அதிலும், அடுத்த ஆண்டில் அப்போது கல்வி மந்திரியாய் இருந்த தோழர் அவினாசிலிங்கம் அவர்கள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படும்போது தகுதி, திறமை என்பவை களின் பேரால் 20, 30 சதவிகிதம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், அந்தப்படி 'தகுதி', 'திறமை' என்ற அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்குப் போக மீதி இருக்கும் இடத்திற்குத்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை கையாளப்படும் என்றும் ஆக்கி வைத்தார்கள்.
இந்தப்படியாக சரியானபடி விகிதாசாரம் கொடுக்கப்படாமலும், பார்ப்பனர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு மேற்பட்டு 8, 10 மடங்கு என்று கொடுக்கப்பட்டு, நமக்கு மிகக் குறைந்த அளவுக்கே பங்கு கொடுக்கப்பட்ட வகுப்புவாரி உத்தரவும் இனிமேல் செல்லுபடி யாகாது என்று தீர்ப்பு கூறப்பட்டு விட்டது.
ஆகவே, இனிமேல் இதுவரை அனுஷ்டிக் கப்பட்டு வந்த வகுப்புவாரி திட்டமானது 1950இல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒழிக் கப்பட்டுவிட்டது. நாமும் இந்த வகுப்புவாரி திட்டம் போதாததாய் இருப்பதால், இது ஒழிக்கப்படவேண்டும் என்கிறோம். ஏன்? இது சரியானபடி மக்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விகிதாசாரத்தை பிரதிபலிக்க வில்லை, எனவே, இந்தத் திட்டம் ஒழிக்கப்பட்டு அந்த மக்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த ரீதியில், அதாவது இந்த நாட்டு ஜனசமுதா யத்தில் 100-க்கு 3 பேராக இருக்கும் பார்ப் பனர்களுக்கு 3 ஸ்தானமும், அதேபோல் மற்ற வகுப்பார்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற மாதிரியில் அவரவர்களுக்கு விகிதாசாரப்படி பங்கு வழங்கும் புதிய திட்டம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறோம்.
இன்றைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இனிமேல் தகுதி, திறமை என்பவைகளின் பேரால்தான் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இப்போது கல்லூரிகளில் சேர்வதற்குத் தகுதி, திறமையாக வைத்திருப்பது மார்க் ஒன்றுதான் ஆகும். இந்த மார்க்கை பார்ப்பனப் பிள்ளைகள்தான் அதிகமாக வாங்கத் தக்கபடி கல்வியில் சூழ்ச்சி இருக்கிறது. அதிக மார்க் எப்படி வாங்குவது என்ற வழியைப் பார்ப்பனர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள் என்பதோடு, மார்க் அவர்கள் காலடியிலேயே போய் விழுகிற மாதிரியில் இன்று கல்வித் துறையில் அவர்களுக்கு வாய்க்கால் வெட்டிவிடப் பட்டிருக்கிறது.
இரண்டாவதாக, அவர்கள் பரம்பரையாக விஷயங் களின் கருத்தைப்பற்றி கவலை இல்லாமல் சொற்களை உருப்போட்டு படிக்கப்பட்ட பரம்பரையில் உதித்தவர்கள். ஆகவே, படித்ததை நெட்டுருப் பண்ணி பரீட்சையில் வாந்தி எடுப்பது அவர்களுக்கு சுலபமான காரியமாகும்.
நம்மவர்களுக்கு இரண்டுமே கிடையாது. கருத்தை உட்கொண்டு அறிவு பெறுவது வழக்கம். அந்தப்படி இருக்கும்போது நம் பிள்ளைகள் எப்படி இன்று கல்லூரியில் சேருவதற்கு 'தர்மாமீட்டராய்' இருக்கும் தகுதியையும், திறமையையும் பெற முடியும்? எனவே, இவர்கள் சொல்லுகிற தகுதியையும், திறமையையும் பெற்று நம்முடைய பிள்ளைகள் படிக்க முடியாது. படிக்காத காரணத்தினால் உத்தியோகமும் வகிக்க முடியாது. பழைய வேலைக்குத்தான், அதாவது மனு (அ) தர்ம காலத்துக்குத்தான், பார்ப்பானுக்கு சேவை - பூஜை செய்து அவன் காலைக் கழுவி தண்ணீர் குடிப்பதால் நற்பதவி கிட்டும் என்ற தன்மைக்குப் போகவேண்டும். இதைத்தான் பார்ப்பனர்களும் விரும்புகிறார்கள்.
ஏனென்றால், நாமும் படித்து உத்தி யோகம் வகித்து பார்ப்பனர்களோடு சரிசம மாகப் போட்டியிட தலைப்பட்டால், 'சூத் திரர்கள்' செய்யவேண்டிய வேலைகள் என்று தர்ம சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டு 'ரிசர்வ்' செய்யப்பட்டிருக்கிறதே, ஏர் உழுவது, துணி வெளுப்பது, சிரைப்பது, செருப்புத் தைப்பது, வண்டி இழுப்பது, மூட்டை தூக்குவது, கக்கூஸ் எடுப்பது போன்ற காரியங்களுக்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். பார்ப்பனர் களுக்கும் முகத்தில் பிறந்தவர்கள் என்ற மரியாதையோ, உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்ற பெருமையும் இல்லாமல் அவர்களும் சாதாரண மனிதர்களாவதுடன், எல்லா வேலை களையும் அவர்களும் சேர்ந்து செய்யவேண்டிய நிலைமை வந்துவிடுமே என்பதற்காகத்தான் அடிப்படையிலேயே, அதாவது நம் மக்கள் படித்து, மான உணர்ச்சியோ, மனிதத் தன் மையோ அடைந்துவிடக் கூடாது என்பதற்காக நம்மை படிக்கவொட்டாமலேயே அடிப்பது என்ற முயற்சி செய்து தற்காலிகமான வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.
இந்தக் காரியத்தில் நாம் சற்று அலட்சிய மாகவோ, அஜாக்கிரதையாகவோ, கவலை யற்றோ இருந்தோமேயானால், நிச்சயமாய் இன்று பார்ப்பனர்கள் பெற்றிருக்கிற இந்த தற்காலிக வெற்றியானது சாசுவத வெற்றியாகி நாமெல்லாம் என்றும் மீளா அடிமையில், படுகுழியிலேதான் அழுந்திக் கிடக்க நேரிடும்.
எனவே, இதை இப்படியே விட்டுவிடாமல் நம்முடைய இன நலத்தைக் கருதி, நம்முடைய பிற்கால சந்ததிகளின் நன்மையைக் கருதி, நம்முடைய பிள்ளைகள் மாடு மேய்ப்பதற்கே தகுதியுடையவர்களாக ஆகாமல், மனிதத் தன்மை யுடையவர்களாக வாழவேண்டும் என்பதை மனதில் கொண்டு இதிலே நாம் பெருத்த கிளர்ச்சி செய்யவேண்டும்.
இந்தக் காரியத்திலே ஏமாந்துவிட்டுவிட்டோமானால், நம்முடைய வாழ்வு மனுக்காலத் தன்மைக்குத்தான் போய்விடும். எனவே, இதில் முழு மூச்சோடு 'இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது' என்ற முடிவோடு நீங்கள் இருக்கவேண்டும்.
இந்தக் காரியத்தில் கிளர்ச்சி துவக்குவதற்காக அடுத்த மாதத்தில் சென்னையிலாவது, திருச்சியிலாவது ஒரு பொது மாநாடு கூட்ட இருக்கிறேன். அதற்காக முன்னேற்பாடு கூட்டம் ஒன்று அடுத்தவாரம் கூட்டுவேன். மாநாட்டில் இனிமேல் என்ன நடவடிக்கை எடுத்துக்கொள்வது என்பதுபற்றி யோசித்துக் கூறுகிறேன். அதற்குப் பின்னர் நாம் பெருத்த முறையில் கிளர்ச்சி செய்யவேண்டும். அத்தகைய கிளர்ச்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, பெருவாரியாக மக்கள் அனைவரும் வரப் போகும் வகுப்புரிமைக் கிளர்ச்சியிலே பங்குகொண்டு, நம் உரிமைக்காகப் போராட வேண்டும்".
(24.8.1950 அன்று ஈரோட்டில் நடைபெற்ற
பொதுக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரை)


(உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு தொகுதி - 3)

0 comments: