திராவிட மாணவர் கழகப் பவள விழா மாநாட்டில், திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பேரணியில் சாரட்டில் அழைத்து வரப்பட்டாராம்.
அடேயப்பா - சில ஆரிய அடிமைகளுக்கு எத்தகைய ஆத்திரம் - வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு சந்திரமதி ஒப்பாரி வைப்பது ஏன்?
ஒரு மாநாட்டுப் பேரணியில் ஒரு இயக்கத்தின் தலைவரை சாரட்டில் அமர வைத்து அழைத்து வருவது "பஞ்சமா பாதகமா?"
தந்தை பெரியார் எத்தனை எத்தனை ஊர்வலங் களில் அவ்வாறு அழைத்துவரப்பட்டிருக்கிறார். மக்கள் வெள்ளத்தில் - பவனி வந்துள்ளார்!
ஜாதி ஒழிப்புப் போராட்டமான இந்திய அரச மைப்புச் சட்டத்தின் பகுதி கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்று விடுதலையான தோழர்க ளுக்கான பாராட்டு விழாவின்போது சிதம்பரத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் தந்தை பெரியார் இதேபோல அழைத்து வரப்படவில்லையா?
அந்தக் காட்சியைப் பற்றி புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் அவர்களால் பாடப்பட்டதுதான் “அவர்தாம் பெரியார்” என்ற அந்த ஒப்பற்ற பாடல்.
ஓர் உழவன் தன் மனைவியிடம் கூறுவதுபோல அமைந்த அந்தப் பாடல் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாயிற்றே!
அவர்தாம் பெரியார் - பார்
அன்பு மக்கள் கடலின் மீதில்
அறிவுத் தேக்கம் தங்கத் தேரில்
என்றார் புரட்சிக்கவிஞர்.
அந்த அறிவுத் தேக்கமான தந்தை பெரியார், தங்கத் தேரில் பவனி வந்ததாக மகிழ்ச்சிக் கூத்தாடுகிறாரே புரட்சிக் கவிஞர்.
அந்தத் தந்தை பெரியாரின் மாணவர் - அவரால் அடையாளம் காட்டப்பட்ட 75 ஆண்டு அப்பழுக்கற்ற பொது வாழ்வுக்குச் சொந்தக்காரரான தமிழர் தலைவரை ஒரு சாரட்டில் அழைத்து வந்தது கூடாத செயலா? கருஞ்சட்டை தோழர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில் - சூத்திரப்பட்டத்தை ஒழிப்பதற்காகவே குடந்தையில் பிரசவித்த திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டில் தந்தை பெரியாருக்குப் பிறகு இந்த இயக்கத்தை மேலும் வலுப்படுத்தி, சமூக நீதிக் கொடியை வானளாவப் பறக்கவிட்டு தந்தை பெரியார் கொள்கையை உலகெங்கும் பரவும் வகை செய்து மாதம் ஒன்றுக்கு 20 நாள்கள் சுற்றுப்பயணம் செய்து தன்மான பகுத்தறிவுப் பெரும் பணியை ஆற்றிவரும், முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்றவர்களால் 'தமிழர் தலைவர்' என்று போற்றப்படும் மதிக்கப்படும் ஒரு தலைவரை இயக்கத் தொண்டர்கள் சாரட்டில் அமர வைத்து, கொள்கை முழக்கமிட்டு அழைத்து வந்தது கொள்கை பிரச்சாரக் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க அணுகு முறையே!
அந்தப் பாடலில் புரட்சிக் கவிஞர் மேலும் பாடுகிறார்:
மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பு
வஞ்சகர்க்கோர் கொடிய நெருப்பு
மிக்க பண்பின் குடியிருப்பு
விடுதலைப்பெரும்படையின்தொகுப்பு
வஞ்சகர்க்கோர் கொடிய நெருப்பு என்று எவ் வளவுத் தொலைநோக்கோடு தொட்டுக் காட்டியுள்ளார் கவிஞர்.
அந்த வஞ்சகர்கள் இன்னும் வற்றிப் போய்விட வில்லை. விடுதலைப் படையினை - விடுதலை என்னும் போர் ஆயுதத்தை நாளும் சுழற்றிவரும் தலைவர்மீது சேற்றை வாரி இறைக்க ஆசைப்படும் அந்த வஞ்சகர்களை தமிழர்கள் அடையாளம் காண வேண்டும். அவ்வளவுதான். குரைப்பதற்கெல்லாம் பதில் வேண்டாம். கொள்கையை நோக்குவதே நம் ஒரே குறி!
ஒரு வரலாறு தெரியுமா இந்தக் குட்டிச் சுவர் வாசிகளுக்கு? 1948ஆம் ஆண்டு அக்டோபர் 23, 24 நாள்களில் ஈரோட்டில் திராவிடர் கழக 19ஆம் மாநில தனி மாநாடு.
அந்த மாநாட்டு ஊர்வலத்தில் என்ன நடந்தது தெரியுமா?
அறிஞர் அண்ணாவை சாரட்டில் உட்கார வைத்த தந்தை பெரியார் அந்த ஊர்வலத்தில் கடைசி வரை நடந்தே வந்தார் என்ற வரலாறு தெரியுமா? இந்த வக்கிரங்களுக்கு.
கருப்புச்சட்டை அணிந்து மேல் துண்டை இடுப்பில் கட்டி அந்த 69 வயதில் சிங்க நடை போட்டு வந்தார் பெரியார் என்று கவிஞர் கருணானந்தம் அவர்கள் 'தந்தை பெரியார்' என்னும் வரலாற்று நூலில் அருமையாகக் குறிப்பிடுகிறார்.
தந்தை பெரியார் அவர்களோடு ஆசிரியர் வீரமணி அவர்களும் ஊர்வலத்தில் அமர்ந்து பவனி வந்த மற்ற பதியங்களை அறியுமா இந்தக் கத்துக்குட்டிகள்?
ஒன்றை நமது தோழர்கள் உணரவேண்டும். அவர்களின் கோபம் சாரட் வண்டியில் தமிழர் தலைவர் வந்ததல்ல.
சினத்துக்குக் காரணம் அந்தக் கும்பகோணம் மாநாடு! ஆத்திரத்துக்குக் காரணம் அந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கில் மாணவச் சிங்கக் குட்டிகள் கர்ச் சனை செய்து அணிவகுத்து வந்தார்களே அதுதான் காரணம்!
எங்கே இருந்து கிளம்பியது இந்த இளைஞர் சேனை - மாணவர் பட்டாளம்? திராவிடர் கழகம் இவ்வளவு பலம் வாய்ந்ததா? பெரியாருக்குப் பின் அஸ்தமனம் ஆகிவிடும் என்று அண்டா அண்டாவாக மனப்பால் குடித்துக் கிடந்தோமே - ஏமாந்து விட்டோம் - ஏமாந்து விட்டோம்!
இந்தக் கருஞ்சட்டைப் பட்டாளம் மேலும் மேலும் வாலிப வீரத்தோடு வளரத்தான் செய்யும் போலும் என்ற ஆற்றாமையால் அசிங்கத்தைப் பேனாவில் ஊற்றி எழுதுகிறார்கள்.
ஆரியம் எப்பொழுதும் நேருக்கு நேர் வராது, வந்த தும் இல்லை. அப்படி வந்தால் தானே என்றைக்கோ கதை முடிந்திருக்குமே! ஆனால் அதற்கு எடுபிடிகள் எப்பொழுதுமே மலிவாக நமது இனத்தில்தான் கிடைப்பார்களே - இது இன்று நேற்றல்ல காலந்தொட்டு தொடர்கிற தொடர்கதை தானே.
நாம் இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? அவர்களின் ஆபாச எழுத்துகளுக்கு அதே பாணியில் பதில் அளித்துக் காலத்தைக் கழிக்க வேண்டாம்.
'விடுதலை'யில் நேற்று நமது தலைவர் வெளியிட்ட அறிக்கையினைப் படியுங்கள் - படியுங்கள்.
இழிமொழிகளால் சோர்ந்தோமா? மாறாக வீறு கொண்டு எழுந்தோமா என்று காட்ட வேண்டிய தருணம் இது.
பள்ளிகளில் எல்லாம், கல்லூரிகளில் எல்லாம், பல்கலைக்கழகங்களில் எல்லாம் திராவிட மாணவர் கழக அமைப்பு தொடங்கப்படட்டும் - தொடங்கப் படட்டும்!
புறப்பட்டது காண் புலிப் போத்துகள் - சிங்கப் புயல்கள் என்று எதிரிகள் நடுநடுங்க வேண்டும், துரோகிகள் தொடை நடுங்கி பதுங்க வேண்டும்.
குடந்தை மாநாட்டை வெற்றி முகட்டில் நிறுத்தி விட்டோம் என்ற மகிழ்ச்சியோடு நம் பணி முடிந்து விட்டதாகக் கருதக் கூடாது.
குடந்தை மாநாடு புத்தெழுச்சியை - ஊட்டியது - புது வரலாற்றைப் படைக்கப் பல்லவியைக் கொடுத்து விட்டது - தந்தை பெரியார் பணியை தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் தலைமையில் முடித்திட - புதிய தலைமுறை புறப்பட்டு விட்டது - புதிய புறநானூற்றை எழுதத் துடிக்கிறது என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.
அதுதான் குடந்தை மாநாடு முழு வெற்றி கண்டதற்கன பதவுரை - பொழிப்புரை - கருத்துரை!
கருஞ்சட்டை இளஞ்சேனையே - காரியத்தில் கண் வைத்துக் கடமையாற்றுவோம்.
காவிகள் விரிக்கும் வலைகளை, கூண்டுகளை நொறுக்குவோம் - காவியா - கருஞ்சட்டையா என்று ஒரு கை பார்ப்போம்.
தமிழ் மண் தந்தை பெரியார் மண்ணேதான் என்பதை வரலாற்றுக்கு மீண்டும் நிரூபிப்போம்!
தமிழ்நாட்டு மாணவர்களும், இளைஞர்களும் நம் பாசறை நோக்கிப் பயணிக்க வேண்டும் அதற்கான ஆயத்தப் பணிகளை இந்தக் கணம் முதலே தொடங்குவோம்.
நமக்குக் காரியம்தான் முக்கியமே தவிர வெத்து வேட்டு விளையாட்டு வீரியமல்ல!
கதிரவனைக் கண்டு குரைப்பதுகள் பக்கம் கவனச் சிதைவு வேண்டாம்.
கால்சட்டைப் பருவம் முதல்
தந்தை பெரியார்
தடத்தை விட்டு
தவறிக்கூட
கால் பதிக்காத
தன்மானத் தலைவர்
நமக்கு மட்டுமே உண்டு
86இல் அவரது பொது வாழ்வின் காலம்
76 - இந்த அளவுகோல் வேறு யாருக்கும் கிடைக்காத ஒன்று!
குடந்தையில் நமது மாணவர்கள் எடுத்துக் கொண்ட உறுதி மொழிப் பதிவையும் யாரும் ஒரு கணம் எண்ணிப் பார்க்கட்டும்!
வேறு எங்கு எந்த அமைப்பில் இந்த ஒழுகலாறுகள் உண்டு? நமக்கு நிகர் நாமே! படை நடத்துவோம் பண்போடு, பணி முடித்திடுவோம் உறுதியோடு!
------------------------ மின்சாரம் அவர்கள் 11-7-2018 ‘விடுதலை’ இதழில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment