Search This Blog

11.8.16

அட கூறு கெட்ட குமுதமே கேள்!

அட கூறு கெட்ட குமுதமே கேள்!
‘குமுதம்‘ இதழுக்கு இப்பொழுது அப்படி என்ன நெருக்கடி? திராவிடர் கழகத் தலைவர் மீது தரக்குறைவான வார்த்தைகளால் தாக்க வேண்டிய அவசியம் என்ன?
ஆடிட்டர் குருமூர்த்தியின் கையாளாக வேண்டிய “நெருக்கடி” என்ன? இந்து ஆன்மீகக் கண்காட்சி என்ற பெயராலே இந்து வெறித்தனத் தீயை விசிறி விடும் வேலையில் அவாள் ஈடுபட்டு கொண்டிருப்பதன் முகத் திரையை திராவிடர் கழகத் தலைவர் தார் தாராக கிழித்தார் என்ற ஆத்திரத்தில் குருமூர்த்திக் கும்பல்கள் நான்குகால் பாய்ச்சலில் ஈடுபடுவதைப் புரிந்து கொள்ள முடியும்.
விவேகானந்தர் ரதம் என்று சொல்லி அரசுப் பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவியதைக் கண்டித்த காரணத்தால் ‘காச் மூச்சென்று’ அவாள் வட்டாரம் அலறுவது இயல்புதான்.
ஆனால் அவர்களின் அழுக்குக் குரலைக் கடன் வாங்கி இந்த வாரக் குமுதம் (17.8.2016) விழுந்து பிறாண்டுகிறதே!

திராவிடர் கழகத் தலைவர் மீது அப்படி என்ன குற்றச்சாட்டாம்?
திமுகவுக்கு ஆதரவாக இருப்பது,  நேரம் கிடைக்கும் போதெல்லாம் கருணாநிதியைப் புகழ்வது, பெரியார் புத்தகங் களை ஸ்டால் போட்டு விற்பது என்பது முதல் குற்றச்சாட்டு.
திமுக தவைர் கலைஞர் அவர்களைப் புகழ்வது என்ன பஞ்சமா பாதகமா? திமுக தலைவர் அவர்களிடம் மாறுபட்ட நிலையில் இருந்ததில்லையா? கண் மூடித்தனமாகப் புகழ்வதும் இல்லை, கண்மூடித்தனமாக எதிர்ப்பதும் திராவிடர் கழகத்தின் வேலையல்லவே.
வெளிநாட்டில் குமுதத்தின்  முதலாளி இருந்த சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி கொள்ளையடித்த பூணூல் யார்? கம்பி எண்ண வேண்டிய அவசியம் ஏற்பட்ட போது முதல் அமைச்சராக இருந்த கலைஞரின் காலைப் பிடித்து கண்ணீரால் கழுவியவர்கள் யார் என்று நமக்குத் தெரியாதா?
பெரியார் புத்தகங்களை ஸ்டால் போட்டு வீரமணி விற்கிறாராம். அடேயப்பா எவ்வளவு பெரிய குற்றச்சாட்டு.

வேறு எதைப் போட்டு விற்க வேண்டுமாம்?
இதே குமுதம், புத்தக கண்காட்சிகளில் எதைப் போட்டு விற்கிறார்களாம்?
புதிய கல்விக் கொள்கைகளை வீரமணி எதிர்க்கிறாராம் - அதுவும் ஒரு குற்றச்சாட்டாம்.
குமுதத்தில் வேலை பார்க்கும் பார்ப்பனர் அல்லாதாருக்கும் சேர்த்துதான் புதிய கல்விக் கொள்கைகளை வீரமணி எதிர்க்கிறார். அன்று ஆச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தது தந்தை பெரியார் தலைமையிலான திராவிடர் கழகமே!

இன்றைக்கு அதே குலக்கல்வி புதிய  சூழ்ச்சியோடு முகமூடி அணிந்து வருகிறது.
ஆச்சாரியார் ஆட்சிக் காலத்தில் குலக்கல்வி திட்டத்தை  அன்று திராவிடர் கழகம் எதிர்த்தது போல, இன்று புதிய குலக்கல்வித் திட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர்க்கிறது,
அது கூடவே கூடாது. எங்கப்பன் தொழிலைத்தான் நாங்கள் செய்வோம் என்று குமுதம் சொல்லுகிறதோ!
குமுதத்தில் இதை எழுதியது பார்ப்பன கையா அல்லது அதன் தொங்கு சதையா?
மலம் கழிக்கும் பொழுது, பழத்தைச் சாப்பிடுகிறாயே என்று கேட்டால், நீ என்ன சொல்லுவது, நான் தொட்டுக் கிட்டுக்கூட சாப்பிடுவேன் என்று குமுதக் கோணாங்கி கூறினால், நாம் என்ன செய்யட்டும்! தாராளமாகத் தின்னுத் தொலையட்டும் என்று தான் சொல்ல வேண்டும்.
கருப்பு நிற ஆடை அணிந்து சபரிமலை செல்வோர் கோடிக்கணக்கில் பெருகி விட்டார்கள். சிவப்பு நிற ஆடை  அணிந்து மருவத்தூர் போகிறார்கள். இன்னொரு பெரியார் தேவையா? அப்ப வீரமணி வேஸ்ட்னு ஆகாதா?- கேட்கிறது குமுதம்.
ஆக மக்கள் மூடநம்பிக்கை நோய் பரப்பும் கொசுக்கடியிலிருந்து தப்பிக்க எவ்வளவுப் பெரிய அக்கறை இந்த குமுதத்துக்கு!

ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவன் ஒரு கடவுள் என்பார்கள் - அந்த அசிங்கத்தைக் கும்பிடப் போகிறோம் நாங்கள் என்றால் அதை கண்டிப்பவர் வீரமணி மட்டும்தான் என்று சொல்லுவது வீரமணி அவர்களுக்குப் பெருமைதான்.
ஆமாம்... இந்த அசிங்கத்தை குமுதம் ஆதரிக்கிறதா? எதிர்க்கிறதா? அல்லது நம்பித் தொலைக்கிறதா?
நாட்டில் எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை பெருகு கிறது என்பதால் மருத்துவத்துறையே வேஸ்ட் என்று கூறலாமா?
பெரியார் கொள்கை மீது ரொம்ப அக்கறை உள்ளவர் போல காட்டிக் கொள்வது உண்மையென்றால், பெரியார் இருந்த காலத்தில் இந்தக் குமுதக் கோமாளிகள் காதொடிந்த ஊசி முனை அளவுக்காவது  அவருக்கு உதவி செய்தது உண்டா? ஆதரவு தெரிவித்ததுண்டா?
இந்த குமுதத்தின் யோக்கியதை என்ன தெரியுமா?
தந்தை பெரியார் மறைந்த போது நாடே துயரத்தின் உச்சியில் இருந்த போது, ஏடுகள் எல்லாம் கறுப்புக் கட்டம் கட்டித் தன் துயரத்தை வெளிப்படுத்தியிருந்தன. அந்தத் தருணத்தில் கூட இந்தக் குமுதம் எவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டது தெரியுமா?
தந்தை பெரியாரிடம் ஒரு கட்டத்தில் மாறுபாடு ஏற்பட்டபோது வெளியே சென்ற கோவை அய்யா முத்து அவர்கள், தந்தை பெரியாரைக் குறை சொல்லி எப்பொழுதோ எழுதிய கட்டுரையை தூசி எடுத்து வெளியிட்டு  தன் கேவலப் புத்தியை அநாகரிகமாக அப்பட்டமாக காட்டிக் கொண்டதுதான் இந்தக் கேடு கெட்ட குமுதம்.
கோயிலுக்கு செல்வோர் பற்றி கணக்குக் காட்டி திராவிடர் கழகத் தலைவரை குறை கூறுகிறது குமுதம் - இதே ‘குமுதம்‘ இன்னொரு காலக்கட்டத்தில் என்ன எழுதிற்று தெரியுமா?
கேள்வி: ஏராளமான கோயில்கள் தோன்றிக் கொண்டே இருக்கிறதே. பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகள் புதை குழிக்குள் போய்விட்டதா?
ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்
பதில்: புதிதாய்த் தோன்றுவது கோயில்கள் அல்ல உண்டியல்கள். பெரியாரின் கொள்கைகள் புதை குழியில் போவதற்கானவை அல்ல. புதைகுழியில் புதைய இருப் பவர்களைக்  காப்பாற்றுவதற்காக.
(குமுதம், 9.6.2010, பக்கம் 20)
அது மட்டுமா? டில்லியில் பெரியார் மய்யத்தை உருவாக் கினாரே திராவிடர் கழகத் தலைவர்  கி,வீரமணி  அவர்கள் அதைப் பற்றி எப்படி செய்தி வெளியிட்டது இதே குமுதம்?
“தலைநகரில் தமிழர் பெருமை” என்ற தலைப்பிட்டு டில்லி - பெரியார் மய்யம் படத்தையும் வெளியிட்டுப் புளகாங்கிதம் அடைந்ததே (குமுதம் 19.5.2010 பக்கம்: 60-61)
அந்த பெருமைக்குரிய சாதனையைச் செய்தவரும் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு வீரமணி தானே?
யாரோ பேச்சு பொழுது விடிந்தால் போச்சு என்பார்களே அது இதுதானா?
உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர், பெரியார் சிலைக்கு மாலை போடுகிறாராம்  வீரமணி- இப்படியும் ஒரு குற்றச்சாட்டு.
வழிபாட்டில் நம்பிக்கை இல்லைதான். அதனால்தான் பெரியார் சிலையையும் நாங்கள் வழிபடுவதில்லை. இந்த சாதாரண உண்மையைக் கூட தெரிந்து கொள்ளாத தலைப் பிராட்டைகளா இவர்கள்?
சரி.. கடவுள் தூணிலும் இருப்பார். துரும்பிலும் இருப்பார். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று கதறும் கடவுள் பக்தர்களே!.
அந்த கடவுள் உண்மையில் இருந்தால் நீங்கள் நம்பும் கோயிலைச் சுற்றிலும் சென்ட்ரல் ஜெயில் காம்ப வுண்டை விட உயரமாக எதற்காக மதில் எழுப்புகிறீர்கள்? தனி ஆர்டர் கொடுத்து செய்து அல்லவா பெரிய பெரிய பூட்டைப் போட்டுப் பூட்டுகிறீர்கள்? அப்படி இருந்தும் திருடன் புருசன் பெண்டாட்டிக் கடவுள்களை அடித்துக் கொண்டு போகிறானே, அம்மனின் தாலியை அடித்துக் கொண்டு செல்கிறானே!  அதற்கு என்ன சொல்லுகிறீர்கள் என்று நாங்கள் கேட்க முடியாதா?
உங்கள் சிவபுரத்து நடராஜன் சிலையின் கையில் உள்ள தட்டு அமெரிக்காவில் உள்ள நார்டன் துரை சிகிரெட்டு சாம்பலை உதறும் ஆஷ்டிரேயாகப் பயன்படுத்துவது ‘பிரார்த்தனைக் கிளப்’ நடத்திய குமுதம் அறியுமா?
அன்றைய அம்பேத்கர் பிறந்த நாளில் தாலியகற்றும் நிகழ்ச்சியை திடலில் கழகம் நடத்துதியது குறித்தும் கேலி செய்துள்ளது.
ஆம் அதில் என்ன தப்பு? கல்யாணம் ஆனதற்கு பெண்களுக்குத் தாலி அடையாளம் என்றால், ஆணுக்கு என்ன அடையாளம்? அவன்தானே அதிகமாக ஊர் சுற்றுகிறான்? - ஓடு காலிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் வேலையில் இறங்குவது தான் குமுதத்தின் வேலையா? கணவன் இறந்த பின் அந்தத் தாலியை அறுத்து முண்டச்சி என்று முத்திரை குத்தி மூலையில் முடக்குகின்றீர்களே?
விதவை என்று கூறி வீட்டில் நடக்கும் விழாக்காலங்களில் கூட எதிரே வரக்கூடாது என்று பெண்களின் மீது பெரிய அவமானத்தை இழிவை சுமத்தியிருக்கிறீர்களே - நீங்கள் எல்லாம் சகோதரிகளுடன் பிறந்தவர்கள்தானா? என்று கேட்பவர்கள் கேடானவர்களா? கேடு கெட்ட குமுதமே பதில் சொல் பார்க்கலாம்.
பெண்களின் அரை குறை ஆடைகளை அட்டைப் படமாக்கி கல்லாப் பெட்டியை நிரப்பும் ஏடுகள் எல்லாம் திராவிடர் கழகத்தைப் பற்றியோ, அதன் தலைவரைப் பற்றியோ பேச, எழுத அருகதை உண்டா?
பெண்கள் படத்தை கிட்டதட்ட நிர்வாணமாக்கி போடு கிறீர்களே என்று மக்கள் காரித்துப்பிய போது ஏன் - ஆண் களைக்கூட அப்படிப் போடுவோம் என்று சொல்லி கையை வைத்து மறைத்துக் கொண்ட ஆண்களின் நிர்வாணப் படத்தை - குமுதம் என்ற குட்டிச்சுவர் வெளியிட்டதுண்டே!
இப்படியும் ஒரு பிழைப்பா? வேறு பிழைப்பு இருக்கவே இருக்கிறது - செய்வது தானே!
அய்யப்பன் கோயில் பிரச்சினை, பெரியார் சிலைக்கு மாலை என்று ஆர்.எஸ்.எஸ். பேர்வழி எஸ்.குருமூர்த்தி எடுத்த வாந்தி¬யையே மறு சுழற்சியில் குமுதம் எடுத்தி ருப்பது மூலம் கோணிப்பைக்குள்ளிருந்த பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டதே. யாருடைய கையாளாகவோ, தொங்கு சதையாகவோ இருந்து கொண்டு குமுதம் குட்டிக்கரணம் அடிக்கும் மர்மக்குட்டு உடைந்து விட்டதே!
மத்திய பிஜேபி ஆட்சியை அணு அணுவாக தோலு ரித்துக் காட்டுகிறாரே வீரமணி.
செத்துப்போன பசுவின் தோலை உரித்த தாழ்த்தப் பட்டவர் தாக்கப்படுவது குறித்தும் - புதிய கல்வி என்ற குலக்கல்வி பற்றியும் அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறாரே-  பிரச்சாரம் செய்கிறாரே - அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுகிறாரே, போராட்டம் நடத்துகிறாரே என்ற ஆத்திரம் அலைமோதுகிறதோ. இந்த நேரத்தில் தலைவர் வீரமணி மீது சேற்றை வாரி இறைக்கின்ற காரணத்தைத் தமிழ்மக்கள் புரிந்து கொள்வார்கள்.  இதில் நம்மீது சேற்றை வாரி இறைப்பதன் பின்னணியில் ஆதிக்கக் கைகள் இருக்கின்றன என்பது தான் உண்மை.  யார் எந்தப் பக்கத்திலிருந்து வீசுகிறார்கள் என்பதையும் நாட்டு மக்கள் அறிவார்கள்.
தாங்களே முன்வந்து அடையாளம் காட்டிக்கொண்டது விபீடணக் கும்பல் - அதுவும் ஒரு வகையில் நல்லது தானே!
                              ----------------------------- 11-08-2016 ‘விடுதலை’ யில் கருஞ்சட்டை எழுதிய கட்டுரை

0 comments: