Search This Blog

14.2.16

மக்களை மடையர்களாக்கும் மகாமகம் - பெரியார்

மக்களை மடையர்களாக்கும் மகாமகம்



மகாமகம் அல்லது மாமாங்கம் என்பதாக ஒரு பெரிய திருவிழா அடுத்த மாதம் (மார்ச்சு மாதம்) 10 தேதியில் கும்பகோணத்தில் நடத்த ஏற்பாடுகள் வெகு துரிதமாக நடைபெற்று வருகின்றது. சுமார் ஒரு லட்சம் ஜனங்களுக்கு மேலாகவே வந்து கூடுவார்கள் என்று கணக் கிடப்பட்டு, ரயில்வேக்காரர்கள் பல பிளாட்டுப்பாரங்களையும், கொட் டகைகளையும் போடுகிறார்கள். அதற்குத் தகுந்தபடி கூட்டங்களை வரவழைக்க அநேகவித சித்திரப் படங்களை அச்சடித்து ரயில்வே ஸ்டேஷன்களின் மேடைகளில் எல்லாம் கட்டித் தொங்கவிட்டு, பத்திரிகைகளுக்குப் பணங்கொடுத்துப் பிரசுரிக்கும்படி செய்தும், மற்றும் பல வழிகளிலும் விளம்பரம் செய்கிறார்கள்.

கும்பகோணம் - பார்ப்பனர்கள்
சாதாரணமாக கும்பகோணமானது ஒரு அழகான பட்டணம் என்றோ, சுகாதார வசதியான பட்டணமென்றோ, வேறு ஏதாவது ஒரு வழியில் மக்கள் அறிவுக்கோ, தொழிலுக்கோ, பயன் படத் தகுந்த விசேஷம் பொருந்திய பட்டணமென்றோ யாரும் சொல்லிவிட முடியாது. அது ஒரு புராதனமான பட்டணம் என்பதோடு, நாளுக்குநாள் க்ஷீணதிசை அடைந்துவரும் தோற்றமுடைய பழங்கால முறைக் கட்டங்களையும் உடைய ஊராகும். அதில் வசிக்கும் மக்களோ பெரும் பாலோர் பார்ப்பனர்களும் மேல் ஜாதி மிராசுதாரர்களுமாகும்.
கும்பகோணப் பார்ப்பனர்கள் என்றால் மிக தந்திர சாலிகள் என் பார்கள். கும்பகோணம் மாத்திரமல்ல தஞ்சாவூர் ஜில்லா முழுவதுமே உள்ள பார்ப்பனர்கள் பழைய ராஜாவின் தர்மத்தினாலும், மற்றும் தஞ்சை ஜில்லாவிலேயே ஏற்பட்டிருந்த இரண்டு முதல்தர காலேஜினாலும் சாப்பாடும், கல்வியும் சுலபமாய் இருக்கும் இடத்திலேயே கிடைக்கக் கூடிய நிலைமை இருந்ததால் படித்துப்பட்டம் பெறவும், அதற்கேற்ற உத்தியோகங்கள் பெறவும் சவுகரியம் ஏற்பட்டு இந்த மாகாணத்தில் அவர்களே முக்கியமானவர்களாய் இருந்துவந்திருக்கிறார்கள். சுமார் 25 வருஷங்களுக்குமுன் தமிழ் நாடு மாத்திரமல்ல சென்னை மாகாண முழுவதிலும் தஞ்சை ஜில்லா பார்ப் பனர்களே திவான்களாகவும், பிரபல வக்கீல்களாகவும் முன்சீப், ஜட்ஜு, டிப்டி கலெக்டர், போலீஸ், இன்ஸ்பெக்டர், சூப்பிரண்டுகளாகவும் மற்றும் பல பெரிய பதவி உடையவர்களாகவும் ஆக நேர்ந்து பிரபலமாகி விட்டார்கள். இந்தக்காரணங்களால் கும்பகோணம் பார்ப்பனர்களுக்கு அதிகமான விளம்பரம் ஏற்பட வசதியாகிவிட்டது. அங்குள்ள மிராசுதாரர்களும், ஏறக்குறைய பார்ப்பனர்களைக் காப்பியடித்து தங் களையும் மேல் ஜாதிக்காரர்கள் என்று விளம்பரப்படுத்திக் கொள்வதோடு நின்றுவிட்டார்களே தவிர, கல்வியில் அவர்களுடன் போட்டி போடவோ, உத்தியோகம் பெறவோ, முடியாத படி பார்ப்பனர்கள் செய்து வந்த சூழ்ச்சியை வென்று முன்னேற முடியவில்லை.  ஆதலால் பணம் சேர்ப்பதிலும், பூமியை பெருக்குவதிலும் மாத்திரம் கவலைகொண்டு ஆள் ஒன்றுக்கு 1000 வேலி 2000 வேலி என்பதாக நிலத்தை பெருக்கிக் கொண்டார்கள். இரண்டு கூட்டமும் சிறிதாவது சரீரத்தினால் உழைக்காமல், ஏழைகள், உழைப்பாளிகள் ஆகியவர்களின் பாட்டினாலேயே வாழ்ந்து வருகிறார்கள். இதைத்தவிர மற்றபடி அந்த ஜில்லாவுக்கும், கும்ப கோணத்துக்கும் வேறு உண்மையான யோக்கியதை ஒன்றும் கிடையாது.
தஞ்சை மாவட்டத்திலுள்ள 
ஸ்தல புராணம்

ஆனால் மற்றொரு யோக்கிய தையும் உண்டு, அது மேற் சொன் னவைகளை விட மிகவும் மோச மான யோக்கியதையேயாகும். அதென்ன வென்றால் தஞ்சை ஜில்லாவிலுள்ள ஒவ்வொரு கிராமமும் ஒவ்வொரு விசேஷ ஸ்தலங்களாகும். பாடல் பெற்ற ஸ்தலங்களாகவும், பூலோக வைகுண்டமாகவும், பூலோக சுவர்க்க மாகவும், மற்றும் இந்தியாவில் உள்ள முக்கிய புண்ணிய க்ஷேத்திரங்கள், புண்ணிய தீர்த்தங்கள், புண்ணிய மூர்த்தங்கள் என்பவை எல்லாம் தஞ்சை ஜில்லாவிலேயே ஒவ்வொரு கிராமத்தில் ஒவ்வொன்று பிரதிபலிப்பதாக கதைகளும், புராணங்களும் கர்ண பரம்பரை விசேஷங்களும் உண்டு. தஞ்சாவூர் ஜில்லாக்காரர்கள் படித்து விட்டு வெளியிடங்களுக்குச் சென்று ஆங்காங்குள்ள செல்வங்களை கொள்ளைகொண்டு போய் சேர்ப்பது ஒன்று, கிராமங்கள் தோறும் புண்ணிய க்ஷேத்திரங்களும், பாடல்பெற்ற க்ஷேத்திரங்களுமாய் இருப்பதால் மற்ற ஊர்களில் இருக்கும் மூடர்கள் எல்லாம் பாடுபட்டுத்தேடிய பணங்களை மூட்டை கட்டிக் கொண்டுபோய் அந்த ஜில்லாவில் அழுதுவிட்டு வரும் மடத்தனம் இரண்டு, ஆகிய இவைகளால் மாத்திரமல்லாமல், மைசூர், குடகு தேசத்தில் இருந்து வரும். காவேரியானது சேலம் கோயமுத்தூர் ஜில்லா வழியாக வந்தாலும் சேலம் ஜில்லாகாரர்களுக்கு குடிப்பதற்குக்கூட மார்க்கமில்லாமல்  செய்துவிட்டும், கோயமுத்தூர் ஜில்லாக்காரருக்கு ஒரு செண்டு பூமிகூட பயிராவதற்கு உதவாமல் ஏமாற்றிவிட்டு எல்லா தண்ணீரும் நேரே தஞ்சை ஜில்லா சென்று. ஜனங்கள் வெளிக்கு போவதற்குக்கூட இடமில்லாமல் எல்லா நிலமும் நஞ்சை பயிராகும்படியும் செய்து கொண்ட சூழ்ச்சியால் ஏற்பட்ட லாபம் மூன்று. இந்தப்படியாக இயற்கை வளம் பெற்ற தஞ்சை ஜில்லாவுக்கு மகாமக விசேஷம் என்னும் ஒருபுரட்டு யோகமும் சேர்வதில் அதிசயமொன்றுமில்லை. ஆனால் இப்போது நாம் இதை ஏன் எடுத்துக்காட்ட வருகிறோம் என்றால், நமது மக்கள் இத்தனை காலம்தான் மூடர்களாய், மடையர்களாய், கடையர்களாய் இருந்து இவ்விதப் புரட்டுகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் ஆளாகி, நஷ்டமும், கஷ்டமும், இழிவும், ஏமாற்றமும் அடைந்து வந்தோம் என்றாலும் இனியும் பாரம்பரியமாய் தலைமுறை தலை முறையாய் அடைய வேண்டுமா? என்பதை ஞாபகப்படுத்தவே இதை எழுதுகிறோம்.
மகாமக அற்புதம்!
தோழர்களே! மகாமகம் என்றால் என்ன? என்பதை சற்று விசாரித்துப் பாருங்கள். இதை அறிவதற்காக நாம் ஆவல் பட்டு தேடினோம், கும்பகோண ஸ்தலபுராணம் என்பதில் இருப்பதாக அறிந்தோம், அதை வரவழைத்துப் பார்த் தோம். அதில் உள்ளதை வெளியிடுகின் றோம்.
கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும் ஒன்பது கன்னிகைகளாக வெளிவந்து, வெள்ளியங்கிரிக்குச் சென்று பரமசிவனை அடைந்து, உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் எவ்வளவோ கொடியதாகிய பாவங்களைச் செய்து விட்டு எங்களிடத்தில் வந்து ஸ்நானம் செய்து அவர்களது பாவங்களை எங்களுக்குக் கொடுத்து தீர்த்துக் கொண்டு போய் விடுகிறார்கள் அந்தப் பாவங்களையெல்லாம் பெற்றுக்கொண்ட நாங்கள் எப்படி அவைகளை போக்கிக் கொள்ளுவது என்று கேட்டார்கள். அதற்கு பரமசிவனார் கும்பகோணத்திலே, தென் கிழக்கிலே ஒரு தீர்த்தம், உண்டு 12 வருஷத்துக்கு ஒரு முறை மாசி மாதம் மகாமக நாளன்று அதில் குளிப்பீர்களானால் உங்கள் பாவங்கள் தொலைந்து போகும் என்று சொன்னார்.  அதற்கு 9 கன்னிகைகளும் கும்பகோணம் எங்கே இருக்கின்றது என்று கேட்டார்கள். அதற்கு பரமசிவனார் அந்த 9 கன்னிகை களையும் பார்த்து நீங்கள் காசிக்குப் போயிருங்கள், அங்கிருந்து நான் விஸ் வேஸ்வரன் என்னும் பெயருடன் உங் களை கும்பகோணத்திற்கு அழைத்துப் போகின்றேன் என்று சொன்னார். அந்தப்படியே கன்னிகைகள் காசிக்குப் போயிருந்தார்கள். பரமசிவனார் அவர் களை காசியிலிருந்து கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்று மகாமக குளத்தைக் காட்டி குளிக்க வைத்தார். பிறகு சிவபெருமானும் அந்த  கன்னிகைகளும் கும்பகோணத்திலேயே கோவில் கொண்டு விட்டார்கள். ஆதலால் இதில் அந்த காலத்தில் குளித்தவர்களுக்கு சர்வபாவமும் கலைந்து சர்வ மங்களமும் உண்டாகும் என்று கண்டிருக்கின்றது.
மடையர்கள் என்றால் கோபமேன்?
தோழர்களே!  இதுதான் கும்பகோண ஸ்தலமகத்துவமும், தீர்த்த மகத்துவமும், கோவில் மகத்துவமும் ஆகும். இதற்கு அப்புறம் அந்தக் குளத்தில் எப்படிக் குளிப்பது, அதற்காக பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனப் பெண்களுக்கும் எப்படி, எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியது என்கின்ற விஷயங்களும் எந்தெந்த இடத்தில் குளிப்பது, எந்தெந்த சாமியை எப்படி எப்படி கும்பிடுவது என்கின்ற விஷயமும் இருக்கின்றது.
இந்தக் கதையை ஆதாரமாக வைத்த இந்தமகாமக உற்சவத்திற்காக எவ்வளவு ஆர்பாட்டங்கள், எவ்வளவு விளம்பரங்கள் எவ்வளவு பணச் செலவுகள், எவ்வளவு கஷ்டங்கள் என்பதை யோசித்துப்பாருங்கள். இந்துக்கள் மடையர்கள், அஞ்ஞானிகள், மூடர்கள் என்று ஒருவன் சொன்னால் உடனே கோபப்பட்டுக் கொள்ளத்தான் கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கின்றோமே அல்லாமல் அறிவைக் கொண்டு பார்க்கின்றோமா?
இந்த கும்பகோணத்துக்கும், அங்குள்ள மாமாங்கக் குளத்திற்கும் உள்ள விசேஷம் போலவே உலகத்தில் உள்ள அனேக சாக்கடை களிலும், பட்டிக்காடுகளிலும், குப்பை மேடுகளிலும் உள்ள குழவிக் கல்லு களுக்கும், நீரோடைகளுக்கும், குளங்களுக்கும், குட்டைகளுக்கு மெல்லாம் புராணங்களும், கதை ஆதாரங்களும், ஐதீகங்களும் இருந்து வருகின்றன. பொதுவாக இதுபோன்ற எந்தக் காரியங்களுக்கும் விசேஷம் என்பதெல்லாம் இரண்டே இரண்டு வாக்கியங்களில் தான் அடங்கி இருக்கின்றன. அதாவது, 1. சர்வ பாவங்களும் நிவர்த்தியாகி விடும். 2. வேண்டியதெல்லாம் அடையலாம். என்கின்றவைகளேயாகும். இந்த இரண்டு காரியமும் யோக்கியமான காரிய மாயிருக்குமா? என்பதை யோசித்துப் பாருங்கள். மனிதன் செய்த பாவம் போகுமா?
மனிதன் செய்கின்ற பாவமெல்லாம் இந்த மாதிரியான காரியங்களால் தீர்ந்து போவதாயிருந்தால், உலகத்தில் எந்த மனிதனாவது பாவ காரியங்களைச் செய்யத் தவறுவானா? தயங்குவானா? என்று யோசித்துப்பாருங்கள்.
மனிதனுக்கு வேண்டிய - அவன் ஆசைப்படும் படியான காரி யங்கள் எல்லாம் இந்த மாதிரியான சிறுகாரியங்களால் கை கூடிவிடுவதாய் இருந்தால் மனிதனுடைய முயற்சி - நடத்தை - ஒழுக்கம் என்பவைகளுக் கெல்லாம் அவசியமும், நிபந்தனையும், வரையறையும் எதற்காக வேண்டும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.
நிற்க, பாவமுள்ள மனிதர்கள் நதிகளில் ஸ்நானம் செய்ததால் நதிகளுக்கு அந்தப் பாவங்கள் ஒட்டிக்கொண்டது என்பதில் ஏதாவது அறிவோ, உண்மையோ இருக்க முடியுமா? அந்த நதிகள் அந்தப் பாவத்தை தொலைக்க மற்றொரு தீர்த்தத்தில் போய் குளிப்பது என்று மகாமக தீர்த்தத்துக்கு வந்து குளிப்பதானால் இதில் ஏதாவது புத்தி இருக்கின்றதா? நாணயம் இருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள். இத்தனை பாவங்களையும் ஏற்றுக்கொண்ட மகாமக தெப்பக்குளம் அதன் பாவத்தைத் தீர்க்க எந்த உரு வெடுத்து எந்த குளத்தில் போய் குளிப்பது என்பதையும், பிறகு அந்தக் குளம் வேறு எந்தக்குளத்துக்குப் போய் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளும் என்பதையும் யோசித்தால் கடுகளவு அறிவுள்ளவனாவது இதை ஏற்க முடியுமா என்று பாருங்கள். இதையெல்லாம் கவனித்தால் மதத்தின் பேரால், பாவ புண்ணியத்தின் பேரால், கடவுள் பேரால், தீர்த்தம் ஸ்தலம் மூர்த்தி என்னும் பெயர்களால் மக்கள் எவ்வளவு தூரம் ஏய்க்கப்பட்டு, கடையர்கள், மடையர்கள் ஆக்கப்படுகின்றார்கள் என்பதையும் சிந்தித்துப்பாருங்கள்.
மற்றும், அந்த புராணத்திலேயே இந்த மகாமகக் குளத்துக்குள் வடக்கு பாகத்தில் 7 தீர்த்தங்கள் இருப்பதாகவும், கிழக்கு பாகத்தில் 4 தீர்த்தங்கள் இருப்பதாகவும், நடுமத்தியில் 66,00,00,000 (அறுபத்தி ஆறுகோடி) தீர்த்தம் இருப்பதகாவும் இந்த மகாமக குளத்தில் முழுகினால் இத்தனை தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்குமென்றும் எழுதி, அந்தப்படி ஒரு சித்திரமும் வரையப் பட்டிருக்கின்றது. இது எவ்வளவு பரிகசிக்கத்தக்க விஷயம் என்றும் பாருங்கள். இதை எழுதினவன் எவ்வளவு அயோக்கியன் அல்லது எவ்வளவு மூடன் என்பதல்ல இப்போதய நமது கேள்வி. மற்றென்னவென்றால் இதைப் படித்துப் பார்த்து இதன்படி நடப்பார்கள் என்று நம்பிய மக்களை இவன் எவ்வளவு முட்டாளாகவும், அடிவண்டலாகவும் கருதி இருக்க வேண்டும் என்பதுதான் நமது கேள்வியாகும்.

தேங்கிய நீர் தீர்த்தமா-
தீர்த்தம் என்றாலும், நதி என்றாலும், குளம் என்றாலும் என்ன என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள். நதி என்றால் மழைபெய்வதால் ஏற்படும் வெள் ளங்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஓடை அல்லது நீர்ப்போக்காகும்.
குளம் என்றால் இந்தமாதிரி ஓடையில் இருந்து வழி வைத்து தண்ணீர் நிரப்புவதோ, அல்லது மழை வெள்ளத்தால் ஊரில் உள்ள அசுத்தங்களையும், கசுமாலங்களையும் அடித்துக் கொண்டுவந்து குளத்தில் விழுந்து தேங்கியிருப்பதோதான். மற்ற குட்டித்தீர்த்தங்கள் என்பதும் கிணற்றுக்குநீர் ஊற்று போன்ற ஊற்றேயாகும். இந்தத் தண்ணீர்களுக்கு எல்லாம் அந்தந்த இடத்தை அனுசரித்த குணங்களேதான் உண்டு. மற்றபடி அவற்றில் ஒருமனிதன் செய்யும் பாவம் என்பதைப் போக்கவோ, அவன் ஆசைப் பட்டதைக் கொடுக்கவோ ஆன சக்திகள் எப்படி இருக்கக்கூடும் என்பது ஒரு மனிதனுக்கு தெரியாதா? என்றுதான் கேட்கின்றோம்.
மாமாங்கக் குளம் 
என்றால் என்ன?

மாமாங்க குளம் என்பது மேல் கண்டமாதிரியான ஒரு சாதாரண தெப்பக்குளம். மகாமக சமயத்தில் அதில் உள்ள தண்ணீர் அவ்வளவையும் இறைத்து விட்டுவெறும் அடிவண் டலையும், சேற்றையும் மாத்திரம் மீதி வைத்து அதிலும் கந்தகப் பொடியைக் கலக்கி விடுவார்கள். அந்த சேறானது கருப்புக் களிமண்போல் இருக்கும். அந்தக் குளத்தின் விஸ்தீரணமோ சுமார் 500 அடிசதுரம் இருக்கலாம். அடிமட்டம் சுமார் 200 அடி சதுரம் இருக்கலாம். இதில் லட்சம் பேர்கள் குளிப்பது என்றால் எப்படி சாத்தியமாகும். அந்தக் குளத்தில் இறங்கி அந்த சேற்றில் கொஞ்சம் எடுத்துச் சரீரத்தில் பூசிக்கொள்ள வேண்டியதுதான். பிறகு இந்த அசிங்கம் போவதற்கு வேறு குளத்தில் குளிக்க வேண்டியதுதான். இதுதான் வழக்கமாம். ஒரு கிறித்தவரோ, ஒரு மகமதியரோ இந்தப்படி செய்தால், அதை நாம் பார்க்க நேர்ந்தால் அப்போது நாம் என்ன என்று சொல்லுவோம். மிஸ் மேயோ நமது பழக்க வழக்கங்களைப் பற்றியும், சடங்குகளைப் பற்றியும் தீர்த்தங்களைப் பற்றியும் எழுதியதைப் பார்த்து கோபித்துக்கொண்டோம். ஆனால் இந்த மாதிரி சேற்றில் குளிப்பதால் நாம் செய்த பாவங்கள் எல்லாம் தீர்ந்து விடும் என்று கருதி இருக்கிற முட்டாள்தனமான பேராசைக்காக நாம் வெட்கப்படுவதில்லை. என் றால் பிறகு எந்த விதத்தில் நாம் அறி வாளிகள், யோக்கியர்கள், மனிதத் தன்மையுடையவர்கள் என்று யோசித்துப் பாருங்கள். இந்த மாமாங்கத்தால் எத்தனை லட்ச ரூபாய் இரயில்காரன் கொள் ளையடிக்கப் போகிறான்? எத்தனை லட்ச ரூபாய் பார்ப்பான் கொள்ளை அடிக்கப் போகிறான் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அம்மை, காலராவுக்குப் பலியாவதோ?
இவை ஒரு பக்கம் இருப்பதோடு கூட்ட நெருக்கடியில் உயிர்ச்சேதம் எவ் வளவு, திருட்டு எவ்வளவு, இவை தவிர இப்பொழுதே அங்கு கும்பகோணத்தில் - காலராவும் அம்மையும் வந்து விட்டது. இதற்காக கொட்டகை கட்டி அங்கு கட்டிலும் படுக்கையும் போட்டாய்விட்டது. பிளேக்குக்கும் கொட்டகையும் போட் டாகி விட்டது. அதுவும்தான் தன் பாவத்தைத் தீர்த்துக்கொள்ள அங்குவரப் போகின்றது. சுடுகாட்டுக்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கி வைத்து அங்கு சில குழிகளும் தயாராய் முனிசிபாலிடியார் வெட்டி வைத்திருக்கிறார்கள்.
கும்பகோணத்துக் கொசுக்களோ அந்த ஊர் பார்ப்பனர்களையும் குச்சிக்காரிகளையும் விட எத்தனையோ பங்கு மோசமானவை என்று சொல்லலாம். ஏனெனில் இது அவர்களை விட மோசமாக வெளியில் இருந்து வருகின்றவர்களின் இரத்தத்தை உறிஞ்சக் காத்துக் கொண்டு இருக்கின்றது. மாமாங்கத்துக்கு போய் வந்தவனுக்கு வரப்போகின்ற மலேரியா காய்ச்சல் அடுத்த மாமாங்கம் வந்தா லொழியதீராது. இந்த நிலையில் உள்ள மகாமகம் என்ன புண்ணியத்தைக் கொடுக்கும் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
--------------------------------தந்தை பெரியார் - ’குடிஅரசு’ - தலையங்கம் - 12.02.1933

-*****************************************************************************

மகாமகம்


மாமாங்க சம்பந்தமான இந்த உண்மைகளை வெளிப்படுத்தி பாமரஜனங்களுக்கு எச்சரிக்கை செய்ததற்காக மிக மிக கோபங்கொண்டு மெயில் பத்திரிக்கையில் அதன் நிருபர் ஒரு சேதி எழுதி இருக்கிறார் அதன் சுருக்கமாவது சுயமரியாதை இயக்கத் தலைவர்களும், சில காங்கிரஸ்காரர்களும் சேர்ந்து மகாமக பகிஷ்காரம் செய்யப் புறப்பட்டு சில துண்டுப் பிரசுரங்கள் மாயவரத்திலிருந்து வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள். ஏனென்றால் சுயமரியாதைக்காரர்களை நாஸ்திகர்கள் என்றே ஜனங்கள் கருதுவதால் இவர்கள் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள். அன்றியும் இவர்கள் இப்படிச் சொல்லுவதாலேயே அனேகம் பேர் மாமாங்கத்துக்கு வருவார்கள், ஆதலால் சுயமரியாதைக்காரர் வேலை பயன்படாது என்று எழுதப்பட்டிருக்கிறது. சுயமரியாதைக்காரர்கள் நாஸ்திகர்கள் என்பதினாலேயே அவர்கள் நல்லது சொன்னாலும்கூட ஜனங்கள் கேட்க மாட்டார்கள் என்கின்ற தைரியம் மெயில் நிருபருக்கு எப்படி ஏற்பட்டதோ தெரியவில்லை. நாஸ்திகர் அல்லாதவர்கள் அவ்வளவு பெரிய மூடர்கள் என்று மெயில் பத்திரிகையின் நிருபர் கருதி இருப்பது அவரைத்தான் ஏமாற்றமடையச் செய்யுமே ஒழிய மற்றபடி சுயமரியாதைக்காரரை ஒன்றும் செய்து விடாது.


மாமாங்கத்திற்கு ஜனங்கள் போவதினால் சுயமரியாதைக்காரருக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை.  மாமாங்கத்திற்கு ஜனங்கள் போகாமல் இருந்து விடுவதால் சுயமரியாதைக்காரருக்கு லாபம் ஒன்றும் வந்து விடப்போவதில்லை. கால தேச நிலைமையை உத்தேசித்து இந்த மாதிரி முற்போக்குள்ள காலத்தில் எங்கோ ஒரு சுகாதார மற்ற ஆபாச ஊரில் உள்ள ஒரு சேற்றுத் தண்ணீரில் குளிப்பதற்காக மக்கள் 10, 20, 100, 200, ரூபாய் வீதம் செலவு செய்து கொண்டு போய், பலவித துன்பங்களையும் நோய்களையும் சம்பாதித்துக் கொண்டு வருவது அறிவுடமையா? என்ற கருத்தின் மீது தான் இந்தப் பிரச்சாரம் செய்கிறார்களே ஒழிய வேறு காரியம் ஒன்றும் இல்லை. இந்திய மக்களுடைய - (சிறப்பாய்) தென்னாட்டு மக்களுடைய பகுத்தறிவை அளப்பதற்கு இந்த கும்பகோண மாமாங்கமே ஒரு முக்கிய அளவு கருவி என்றே நினைக்கின்றோம். அன்றியும் இதுவரை செய்து வந்த பகுத்தறிவு பிரச்சாரமானது எவ்வளவு தூரம் பயன்பட்டது என்பதையும் அறிய இது ஒரு சந்தர்ப்பமும் ஆகும். தவிர ஆங்காங்குள்ள பகுத்தறிவு சங்கத்தாரும், சுயமரியாதைச் சங்கத்தாரும், அதன் சார்புடைய மற்ற சங்கத்தாரும், தேசியவாதிகள் என்பவர்களும் இந்த மாமாங்கப் புரட்டைப்பற்றி பாமர ஜனங்களுக்கு நன்றாய் விளக்கிப் பிரச்சாரம் செய்து அவர்களை இந்த மாதிரியான கஷ்டத்தில் இருந்தும், நஷ்டத்தில் இருந்தும் மீட்பார்களாக.       

               தந்தை பெரியார் -’குடிஅரசு’ - துணைத் தலையங்கம் - 19.02.1933

11 comments:

தமிழ் ஓவியா said...

கும்பகோணம் மகாமகத் திருவிழாவிற்கு மக்கள் வரிப் பணம் 260 கோடி ரூபாயாம்!


இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கடமைகள் (Fundamental Duties)
என்ற பகுதியில் 51கி பிரிவு கூறுவது என்ன?

ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்னவென்றால்,

1) அறிவியல் மனப்பான்மையை வளர்த்தலும்,
2) மனிதநேயத்தைக் காத்தலும்,
3) ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கத் தூண்டுதலும்
4) சீர்திருத்தமும் ஆகும்.

இதன்மீது பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல் அமைச்சர், முதல் கடைகோடி பொறுப்பாளர் வரை இதை உடைத்து நொறுக்கி மகிழ்வதில் தான் சுயஇன்பமும் அதுதரும் பக்தி போதையும் பெறுகிறார்களே தவிர, அரசமைப்புச் சட்டத்தை வெறும் காற்றில் பறக்கும் காகிதமாகக் கொள்கின்றனர்.

பெரும்பாலான அரசு அதிகாரிகளோ, அரசின் ஜால்ராக்களாகவும், முகமன் கூறுவதின் முழு உருவமாகவும், ‘ராஜாவை விஞ்சும் ராஜவிசுவாசிகளா கவே’ நடந்து கொண்டு, தாங்கள் பொது அதிகாரிகள் - இது மதச் சார்பற்ற அரசு - இந்து மதப் பிரச்சார அரசு அல்ல என்ற உணர்வினை அறவே இல்லாதவர்களாகவே, நடந்து கொள்கின்றனர்!
தமிழ்நாட்டில், நீதிக்கட்சியால் திராவிடர் இயக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட, இந்து அறநிலையப் பாதுகாப்புத்துறை ஒரு கணக்கு வழக்கு பார்க்கும் தணிக்கைத் துறை மட்டுமே என்பதை மறந்து, 69 கோயில்களுக்கு (இதன் அர்த்தம் (69) என்னவென்று மக்கள் அறிவர்) ஆளுங் கட்சியின் பக்திப் பிரச்சாரத் துறையாகவே மாறி விட்டது!

கும்பகோணம் என்ற ஒரு ஊரில் நடைபெறப் போகும் மகாமகத் திருவிழாவிற்கும், பகுத்தறிவுக்கும், மனித ஒழுக்கத்தின் வளர்ச்சிக்கும் கடுகளவாவது சம்பந்தம் உண்டா?

தந்தை பெரியார் அவர்கள் 1930களிலேயே இதனைப் பச்சையாக தோலுரித்து, சுயமரியாதை சூடு போட்டார்!

என்றாலும் ஆறாவது அறிவை இந்த பக்தி போதை, இந்த பக்த சிகாமணிகளிடமிருந்து பறித்துக் கொண்டதே!

புராண காலமா இது? செவ்வாய் கிரகத்தில் விண்வெளிக் கலம் இறங்கும் காலம்; மனிதர்கள் செவ்வாய்க் கோளில் குடியேற வசதி இருக்கிறதா என்று ஆராயும் காலம்!

நம் நாட்டு ஏடுகள், ஊடகங்கள், தொலைக்காட்சிகள் - இந்த போதைச் சரக்குக்கு அபார விளம்பரம் தந்து, மூடநம்பிக்கை வியாபாரம் செய்து மக்களின் அறி யாமையை, ஒழுக்கக் கேட்டைப் பரப்ப உதவி, அறிவி யலைக் குழி தோண்டிப் புதைத்து ‘நாய் விற்ற காசு குரைக்காது’ என்று மக்களைச் சுரண்டும் அறிவு டாஸ் மாக்குகளாக ஆக்குகின்றனவே!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு (1992இல்) நடந்த மகாமகத்தில், குளத்தில் இறங்கி நெருக்கடியில் செத்த மனித உயிர்கள் நூற்றையும் தாண்டியதுதான் கடவுளின் பாவ மன்னிப்புக்கு அடையாளமா?

அட மண்டூகங்களே, கெட்ட பின்பும்கூட ஞானம் வராதா உங்களுக்கு?

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா விவசாயத்திற்குவர வேண்டிய காவிரி நீர் இப்படி பாவம் தீர்க்கும் படலம் என்ற பெயரில் வீணடிக்கப்படுவதை அந்தப் பகுதி விவசாயிகளே குறை கூறியுள்ளது, ஏனோ அரசின் கேளாக் காதுகளில் விழவில்லை?

தமிழக அரசு இதற்காக, இந்த சில நாள் ஒருவாரக் கூத்துக் காக ஒதுக்கியுள்ள மக்கள் வரிப் பணம் 260 கோடி ரூபாயாம்!

சுற்றுச்சூழல் மாசுபடுதல், விதி மீறிய கட்டமைப்புகள், இவைகளால் ஏற்பட்ட கேடுகள் எவ்வளவு என்பது முடிந்தவுடன் தகவல்களாக வெளிவரும்!

260 கோடி ரூபாய் எப்படிச் செலவு செய்யப்பட்டது? என்ன கணக்கு - எல்லாம் உலகறிந்த ரகசியம் தானே!

காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும், பெரிய பெரிய மாவட்ட அதிகார அலுவலர்கள் பட்டாளமும் குவிக்கப்பட்டுள்ளது!

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்கே வந்து இந்த அழுக்குத் தண்ணீரில் அரைப் பகுதியை நனைத்து, அல்ல தலைமேல் தெளித்துக் கொண்டால், மீண்டும் அடுத்த 12 ஆண்டுகள் வரை தொடர்ந்து பாவங்களை தாராளமாக, ஏராளமாகச் செய்யலாம் என்றால், இது மனித ஒழுக்கத்தினை அழிக்கும் அருவருக்கத்தக்க விழா அல்லவா?

போக்குவரத்து வாகனங்களும், மற்றவர்களும் பிழைக்க இது ஒரு குறுக்குவழி!

உடலுழைப்பை அறியாத பார்ப்பனக் கூட்டம் ‘தட்சணை வசூலை’ தங்கு தடையின்றி நடத்தி, ‘மோட்சத்திற்கு டிக்கெட்’ கொடுக்கும் தரகு வேலை செய்வதுதான் இதில் மிச்சம்?

‘மகாமக மகாத்மியம்’ புராணக் கதை என்ன? தந்தை பெரியார் புட்டுபுட்டு வைத்தாரே! அவரும், அவர்தம் தொண்டர்களும் இயக்கமும் எழுப்பிய அறிவுக் கேள்விகளுக்கு இதுவரை எந்த மதவாதியாவது பதில் சொல்ல முடிந்ததா?

மோசடி சாமியார்கள் ‘துறவிகள்’ என்ற பெயரில் பக்தி வியாபாரம் செய்ய கடை விரித்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ்., விசுவ ஹிந்து பரிஷித், அவர்கள் அச்சான ஆரியக் கூட்டம் கொண்டாட்டத்தில் உள்ளது!

மது போதையைவிட இந்த மதபோதை மிகப் பெரிய மூளைக் காய்ச்சல் - மூளைச் சாவு அல்லவா?

2ஆம் பக்கத்தில் தந்துள்ள மகாமகப் புராணக் கதையைப் படியுங்கள், சிந்தியுங்கள்.

அறிவுள்ளவர்களும், ஒழுக்கமுள்ளவர்களும் அங்கே செல்லலாமா?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!! சிந்தியுங்கள்!!!

- கி.வீரமணி 14-02-2016

தமிழ் ஓவியா said...

மகாமகா மூடத்தன மகாமகம்!



இந்துக்களால் புண்ணிய நதிகளென கருதப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய நவநதிகளும் பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் அவை பாவங்களை கொண்டவைகளாயின. இப்பாவங்களை களைய சிவபெருமானிடம் வேண்டினார்கள்.

அதற்கு சிவபெருமான் "கும்பகோணத்தில் அக்னித் திக்கில் ஓர் தீர்த்தமுண்டு. அதில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மகநட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளை மகாமக நாளென்பர். அந்நாளில் அத்தீர்த்தத்தில் முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்" என்றார். அதன்படி நதிகள் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன என்பது தொன்மக் கதையாகும்.

இந்த மகாமக குளத்தினை நவகன்னிகளும், திசைத் தெய்வங்களும் உண்டாக்கின என்பதால் இந்த தீர்த்தம் மகாமக தீர்த்தம் என்றும் நவகன்னியர் தீர்த்தமென்றும் அழைக்கப்படுகின்றன. சிவன் கைலாசத்திலிருந்து நவகன்னிகையரை மகாமகக் குளத்திற்கு அழைத்துவந்து பாவங்களைப் போக்கினார்.

அவ்வகையில் ஒரே நேரத்தில் 12 சைவக் கோயில்களின் சுவாமிகள் ஒரே இடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது இக்குளத்தில் மட்டுமேயாகும். இந்நிகழ்வு வேறு எங்கும் கிடையாது. இக்கோயில்கள் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் கோயில்களாகும். இக்கோயில்களில் கோடீஸ்வரர் கோயில் மற்றும் அமிர்தகலசநாதர் கோயில் கும்பகோணம் நகரின் அண்மையில் உள்ளன.

மற்ற 10 கோயில்களும் கும்பகோணத்தில் அமைந்துள்ளன.

நவகன்னியர் அருள் பாலிக்கும் இடம் - காசி விஸ்வநாதர் கோயில்
அமிர்த கலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம் - கும்பேஸ்வரர் கோயில்
வில்வம் விழுந்த இடம் - நாகேஸ்வரர் கோயில்
உறி விழுந்த இடம் - சோமேஸ்வரர் கோயில்
பூணூல் விழுந்த இடம் - கௌதமேஸ்வரர் கோயில்
தேங்காய் விழுந்த இடம் - அபிமுகேஸ்வரர் கோயில்
சிவன் வேடுவ உருவத்துடன் அமிர்த கலசம் உடைக்க பாணம் எய்த இடம் - பாணபுரீஸ்வரர் கோயில்
புஷ்பங்கள் விழுந்த இடம் - கம்பட்ட விஸ்வநாதர் கோயில்
மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம் - ஏகாம்பரேஸ்வரர் கோயில்
அமிர்தத் துளிகள் விழுந்த இடம் - கோடீஸ்வரர் கோயில்
சந்தனம் விழுந்த இடம் - காளஹஸ்தீஸ்வரர் கோயில்
அமிர்த கலசத்தின் நடுப்பாகம் விழுந்த இடம் - அமிர்தகலசநாதர் கோயில்
இது என்ன பூணூல் விழுந்த இடம்? இந்து மத விவகாரம் என்றாலே எல்லாம் பூணூல் மயம்தானா?
20-02-2016

தமிழ் ஓவியா said...

மகாமகா மூடத்தன மகாமகம்!



இந்துக்களால் புண்ணிய நதிகளென கருதப்படும் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய நவநதிகளும் பக்தர்களின் பாவங்களை நீக்கும் பணியினால் அவை பாவங்களை கொண்டவைகளாயின. இப்பாவங்களை களைய சிவபெருமானிடம் வேண்டினார்கள்.

அதற்கு சிவபெருமான் "கும்பகோணத்தில் அக்னித் திக்கில் ஓர் தீர்த்தமுண்டு. அதில் குரு சிம்ம ராசியில் இருக்கும் போது வரும் மகநட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளை மகாமக நாளென்பர். அந்நாளில் அத்தீர்த்தத்தில் முறைப்படி நீராடினால் உங்களின் பாவங்கள் நீங்கும்" என்றார். அதன்படி நதிகள் புனித நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொண்டன என்பது தொன்மக் கதையாகும்.

இந்த மகாமக குளத்தினை நவகன்னிகளும், திசைத் தெய்வங்களும் உண்டாக்கின என்பதால் இந்த தீர்த்தம் மகாமக தீர்த்தம் என்றும் நவகன்னியர் தீர்த்தமென்றும் அழைக்கப்படுகின்றன. சிவன் கைலாசத்திலிருந்து நவகன்னிகையரை மகாமகக் குளத்திற்கு அழைத்துவந்து பாவங்களைப் போக்கினார்.

அவ்வகையில் ஒரே நேரத்தில் 12 சைவக் கோயில்களின் சுவாமிகள் ஒரே இடத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுப்பது இக்குளத்தில் மட்டுமேயாகும். இந்நிகழ்வு வேறு எங்கும் கிடையாது. இக்கோயில்கள் மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி கொடுக்கும் கோயில்களாகும். இக்கோயில்களில் கோடீஸ்வரர் கோயில் மற்றும் அமிர்தகலசநாதர் கோயில் கும்பகோணம் நகரின் அண்மையில் உள்ளன.

மற்ற 10 கோயில்களும் கும்பகோணத்தில் அமைந்துள்ளன.

நவகன்னியர் அருள் பாலிக்கும் இடம் - காசி விஸ்வநாதர் கோயில்
அமிர்த கலசத்திலிருந்து குடமூக்கு தங்கிய இடம் - கும்பேஸ்வரர் கோயில்
வில்வம் விழுந்த இடம் - நாகேஸ்வரர் கோயில்
உறி விழுந்த இடம் - சோமேஸ்வரர் கோயில்
பூணூல் விழுந்த இடம் - கௌதமேஸ்வரர் கோயில்
தேங்காய் விழுந்த இடம் - அபிமுகேஸ்வரர் கோயில்
சிவன் வேடுவ உருவத்துடன் அமிர்த கலசம் உடைக்க பாணம் எய்த இடம் - பாணபுரீஸ்வரர் கோயில்
புஷ்பங்கள் விழுந்த இடம் - கம்பட்ட விஸ்வநாதர் கோயில்
மற்ற உதிரி பாகங்கள் விழுந்த இடம் - ஏகாம்பரேஸ்வரர் கோயில்
அமிர்தத் துளிகள் விழுந்த இடம் - கோடீஸ்வரர் கோயில்
சந்தனம் விழுந்த இடம் - காளஹஸ்தீஸ்வரர் கோயில்
அமிர்த கலசத்தின் நடுப்பாகம் விழுந்த இடம் - அமிர்தகலசநாதர் கோயில்
இது என்ன பூணூல் விழுந்த இடம்? இந்து மத விவகாரம் என்றாலே எல்லாம் பூணூல் மயம்தானா?
20-02-2016

தமிழ் ஓவியா said...

மகாமக பக்தர்களே! ஒரு கணம் சிந்தியுங்கள்!

ஞாயிறு, 21 பிப்ரவரி 2016
கி.வீரமணி




தமிழ்நாடு அரசால் சுமார் 260 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இம்மாதம் 13ஆம் தேதி முதல் துவங்கி 22ஆம் தேதி பிப்ரவரி (2016) முடிவடையவிருக்கும் கும்பகோண மகாமகத்தின் மகத்துவம்பற்றி பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பனரல்லாத சூத்திரர்கள் முதலாளிகளாக உள்ள ஊடகங்களும் - தொலைக்காட்சிகள் உட்பட, நாளும் பக்திப் பிரவாகம் பொங்க செய்திகளை வெளியிட்டு, அறிவியல் மனப்பான்மை வளர்ச்சிக்கும், ஒழுக்கக் கேட்டிற்கும் அழிவைத் தேடித் தருகின்றன!

ஒரே முழுக்கில் 12 வருட பாவங்கள் ‘குளோஸ்!’

12 வருடங்கள் முழுவதும் ஒரு மனிதன் செய்த பாவங்கள் எல்லாம் இந்த இரண்டரை அடி - மேட்டூரிலிருந்து விடப்பட்டு தேக்கி வைக்கப்பட்ட கும்பகோண மகாமகத் தீர்த்தவாரி தலையில் தண்ணீர் தெளித்துக் கொள்ளுதல் மூலம் போய்விடும்; கழுவப்படும்! பல லட்சக்கணக்கில் ஒரே நேரத்தில் இறங்கிடும் - கரையேறும் பக்தர்கள் வாழ்வு - ஆரோக்கிய வாழ்வாக அமைய வாய்ப்பு உண்டா என்று, சற்று பகுத்தறிவுடன் பக்தர்கள் நிதானித்துச் சிந்திக்க வேண்டாமா? காஞ்சி சங்கராச்சாரியார் வகையறாக்களும், பல முன்னாள், இன்னாள் அமைச்சர்களும் இந்த பாவ விமோசன குளத்தில் நீராடி நனைந்த வேட்டியுடன் படத்திற்குப் ‘போஸ்’ கொடுப்பது நமக்குப் புரிகிறது!

சாமியார்களும் மடாதிபதிகளும் செய்த பாவங்கள் கொஞ்சமா நஞ்சமா?

அதுபோல மடத் தலைவர்களும்; சாமியார்கள், சாதுக்கள், சந்நியாசிகள், ஆதீனங்கள் என்ற பெயரால் மக்களை ஏமாற்றி, ராஜபோக செல்வங்களை அனுபவித்து வரும் காவிகளும் இதில் கலந்து மகிழுவது ‘நியாயம்தான்!’

காரணம் 12 ஆண்டுகளில் இவர்கள் செய்துள்ள பாவங்கள் கொஞ்சமா? நஞ்சமா? சாமியார்களின் ஆசிரமங்களில் நடந்த காவல்துறை வேட்டைகளில் கண்டறியப்பட்ட கருத்தடை தொழிற்சாலைகள் வரை - தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளும், அதன் மூலம் நடைபெற்றிருக்க வேண்டிய பாவங்கள் எவராலும் ஊகித்து அறிந்து கொள்வது எளிதுதானே!

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் கேட்ட கேள்வி

தந்தை பெரியார் கேட்டார். “பாவங்களை மன்னிக்க, போக்கிக் கொள்ள இவ்வளவு எளிதான வழி இருக்கையில், மனிதர்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டிய கட்டாயம் இல்லையே! ஹிந்து மதம் என்ற இந்த பார்ப்பன சனாதன வேத மதத்தில்தான் எவ்வளவு எளிய வழி அதுவும் (Wholesale) 12 வருட பாவத் தீர்வு முறை என்றார்.

பார்ப்பனக் கதையளப்புகள் வேறு!

இதற்குப் புராணக் கதைகள் - புளுகுகள் வேறு. இந்தியாவின் எல்லா நதிகளும் கங்கை, சிந்து (பாகிஸ்தானில் இப்போது) கோதாவரி, நர்மதா, காவிரி, சரஸ்வதி போன்ற நதிப் பெண்கள் பரமசிவனிடம் எல்லோரும் அவர்களது பாவங்களைக் கழுவிவிட எங்களிடம் வந்து கழுவி விட்டுச் செல்லுகிறார்களே என்று முறையிட, அவர்களை சிவன் சமாதானம் செய்து, ‘உங்களுக்கு ஒரே வழி, உங்கள் பாவங்களை 12 வருடங்களுக்கு ஒரு முறை தெற்கே கும்பகோணம் என்ற ஒரு ஊரில் உள்ள குளம் உள்ளது அங்கே சென்று குளியுங்கள்; நான் உங்களை அழைத்துச் செல்லுகிறேன்’ என்றாராம்!

அதன்படி, எல்லா நதிகளான பெண்களும் அங்கே வந்து அவர்கள் சுமந்த பாவங்களைக் கழுவி விட்டுத் திரும்பினார்கள் போலும்!

இப்படி ஓர் அண்டப்புளுகு அறிவுக்குப் பொருந்தாத புராணப் புளுகுகளை கும்பகோண ஸ்தல புராணம் ஒன்று கூறுகிறது!

இந்தக் கதை இல்லாமல், வேறு ஒரு கதையையும் உருவாக்கிக் கூறுகின்றனர்.

ஹிந்து ஆங்கில நாளேடு 12.2.2016, 19.2.2016 ஆகிய இரு வார கட்டுரைகளில் சில எழுத்தாளர்கள் எழுதியுள்ளதை அப்படியே தருகிறோம்! (எஸ். பிரபு)

“உலகம் அழியப் போகிறது, பிரளயம் வரப் போகிறது என்று கேள்விப்பட்டு கவலைப்பட்ட பிரம்மா, சிவபெருமானிடம் சென்று உதவி கேட்டார்.

உடனே சிவன், ‘அமுத கலசம்’ என்ற ஒரு பானையைத் தயாரித்து, அதில் உற்பத்தி விதைகள், தேங்காய், தர்ப்பை, மாந்தளிர்களை மாவிலை - பூணூல், வஸ்திரம், வில்வம் இவைகளைப் போட்டு, பூஜை செய்யும்படி மேருமலையின் உச்சியில் வைத்தாராம்!

பிரளயம் வந்தவுடன், அந்த வெள்ளத்தில் இந்தப் பானை உருண்டு திருக்குடந்தை என்ற இந்த கும்பகோணத்தில் வந்து உருண்டு நின்றது.

தமிழ் ஓவியா said...

உடன் சிவன் ஒரு வேடனாக மாறி, அந்தப் பானையைத் தனது வில்லிலிருந்து விட்ட அம்பு மூலம் உடைத்தாராம்!
அந்தக் குடம் பல துண்டுகளாக உடைந்து பலவிடங்களில் அமுதம் விழுந்து சிதறியதாம்! அவைதாம் இந்த புனித பொற்றாமரைக் குளம் முதலிய பல. கும்பேசுவரர் ஒன்றை தனது பூஜைக்காக ஒதுக்கி வைத்துக் கொண்டு, மற்ற 13 தீர்த்த வாரிகளை வைத்து, அஷ்டதிக்கு பாலகர்களுக்கும், கின்னரர் மற்றும் கந்தர்வர்களுக்கும் என புனித நதிகளை மீண்டும் உருவாக்கினாராம்!

இந்த அமுதம் மூலம் சிவன் கலந்து லிங்கத்தையும் உருவாக்கி அதனை வணங்கி இணையச் செய்தாராம்!
(கும்ப-லிங்கம் என்பது இதன் மூலம் தான் போலும்!)

மகா பிரளயத்திற்குப்பின் ஏற்பட்ட முதல் ‘சிருஷ்டி’ - உற்பத்தி இதுதானாம்! எனவேதான் இக்கோயிலுக்கு ‘ஆதிகும்பேசுவரர்’ என்று பெயர் அழைக்கப்பட்டு, சிவன், வேடனுடைய வில்லுடன் காட்சியளிக்கிறாராம் இங்கே!

எத்தனைத் தேன் தடவல்கள்!

(பக்தர்களை ஈர்க்க என்ன வித்தைகள் - தேன் தடவல்கள் என்ன தெரியுமா? கட்டுரையில் உள்ளபடி)

1) கணவன் - மனைவி ஒற்றுமை ஏற்படும்
2) பிள்ளைப் பேறு உண்டாகும்.
3) இந்த ஜென்மத்தில் மட்டுமல்லாத முந்தைய பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் எல்லாம் தொலையும்.

ஏனெனில் இந்த (ஒன்பது) நதிகளின் பாவங்களும் இங்கேதான் விலக்கப்படுகின்றன; கரைக்கப்படுகின்றன! கழுவாய் இது என்பதால் அவ்வளவுக் கொள்ளை - ‘புனிதமோ புனிதமாம்!’

திருஞான சம்பந்தர் குறிப்பிடவில்லையே!

இந்த கும்பகோண மகாமகக் குள மகாத்மியத்தை முதலில் துவக்கியது - கிருஷ்ணதேவராயர் இக்குளத்தில் குளித்து சென்றதின் தொடக்கமாம்!

திருஞானசம்பந்தர்கூட கோயில்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளாரே தவிர, மகாமகம் பற்றிக் குறிப்பிடவில்லை என்கிறார் ஸ்ரீராம் (‘ஹிந்து’ - 12.2.2016).

‘வாரார் கொங்கை மாதொரு பாகர்’ என்று மட்டுமே காசிவிசுவநாத சாமியைப் பாடியிருக்கிறார் அவர்!
தஞ்சையை ஆண்ட நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தான் இந்த மகாமகம் பிரசித்தி அடையச் செய்யப்பட்டது!
இதைச் செய்தவர் நாயக்கர்களின் முக்கிய அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சதர் என்கிற பார்ப்பனர் தான் (இவர் பெயரில் அமைந்த கிராமம்தான் கோவிந்த குடி என்ற ஊர்) தஞ்சாவூரில் உள்ள ‘அய்யன் கடை’ அய்யம்பேட்டை எல்லாம் இந்த பார்ப்பனர் பெயரில்தான் என்ற கருத்தும் உண்டு!)

கோவிந்த தீட்சதர் என்ற
பார்ப்பானின் தில்லுமுல்லு இது

இவர்தான் இதை ஒரு பக்தி வியாபாரமாக செழிக்க, பார்ப்பனத் திருமேனிகள் செழிக்க இப்படி ஒரு தந்திர வழிபாட்டுப் பக்திப் போதையைப் பரப்பி ஏற்பாடு செய்தவர் (கி.பி. 16 17ஆம் நூற்றாண்டில்)

ராஜ மரியாதை - ராஜாவுக்கு சமமாக நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தை அனுபவித்தவர் இவர். இவருக்கு எடைக்கு எடை தங்கம் - ‘துலாபாரம்’ ‘துலாபாரஷேதனா என்ற ஒன்றைப் புகுத்தினார்.

அந்த தங்கத்தை - எடைக்குப் பின் பார்ப்பனர்களுக்கே விநியோகம் செய்யும் ஏற்பாட்டைச் செய்தார். இதைக் காணவும் பெருங்கூட்டம் சேர்ந்தது, சேர்க்கப்பட்டது!

(அது 12 ஆண்டு மாசி, முழு பவுர்ணமி முழு நிலா என்பதுகூட, புத்தர் சித்திரை மாத முழு நிலாவைத் தோற்கடித்தது; புத்த மத எதிர்ப்பினை ‘நாசுக்காக’ முன்பே துவக்கியதற்காகவும் கூட இருக்கக் கூடும்! இது நமது கருத்து)

அன்று மன்னர்கள்- இன்று மந்திரிகள்

கி.பி. 1676 முதல் நாயக்கர் காலத்தில் இந்த மகாமகத் திருவிழாவில் தஞ்சையை ஆண்ட ராஜா - மன்னர்கள் பங்கேற்பதை ஒரு வாடிக்கை போல் செய்தனர்.

(மன்னர்களும் மனுசிந்தனை உடையவர்கள்தானே! மகத்தான புண்ணியம் தேட இதனை ஒரு வழியாகக் கொண்டிருக்கக் கூடும்).

அன்று மன்னர்கள்; இன்று மந்திரிகள் - அதுவும் மதச் சார்பற்ற ஆட்சி என்ற பெயரில்.
குளோரின் போட்டு இரண்டரை அடி தண்ணீரை விட்டே இந்தப் பாடு!
எத்தனை ஆயிரம் போலீஸ் - இந்த பக்தி மூடநம்பிக்கை வியாபாரத்தைக் கண்காணிக்க!
பக்தர்களே, கொஞ்சம் புத்தியுடன் சிந்தியுங்கள் - உங்களுக்கு நல்லது.

தமிழ் ஓவியா said...

துறவிகள் மாநாடா, அரசியல் மாநாடா?


கும்பகோணம் மகாமகத்தையொட்டி கோவிந்தபுரம் ருக்மணி சமஸ்தானத்தில் கடந்த வியாழனன்று அகில பாரதத் துறவிகள் மாநாடு நடைபெற்றுள்ளது. இத்தனைத் துறவிகள் ஒரே இடத்தில் கூடியதுகூட அதிசயந்தான்.

இந்த மாநாட்டில் இந்து முன்னணி இராம. கோபாலனுக்கு என்ன வேலை? இவர் என்ன துறவியா? எந்த மடத்தின் அதிபதி? அங்கு போய் என்ன பேசி இருக்கிறார்?
“இந்து சமுதாயத்தைக் காப்பாற்ற வாக்கு வங்கிமுறையை ஏற்படுத்த வேண்டும். கோயில்களில் அறநிலையத்துறை தேவையில்லை” என்று பேசி இருக்கிறார். இதனை வழிமொழியும் வகையிலும் சில மடாதிபதிகளும் பேசி இருக்கின்றனர்.

தமிழ் ஓவியா said...


இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? பி.ஜே.பி. கூறும் வாக்கு வங்கி அரசியலைத்தானே இவர்கள் சொல்லுகிறார்கள்?

இதன் பொருள் மக்களை மதவாரியாகப் பிரித்து அதன் அடிப்படையில் வாக்குகளை அள்ளிச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது.

‘நாம் இந்துக்கள், அவர்கள் முஸ்லிம்கள், கிறித்த வர்கள், அந்நியர்கள், ஆகவே இந்துக்களே, உங்கள் வாக்குகளை இந்துத்துவாவைப் பேசும், ராம ராஜ்யத்தை உருவாக்க துடிக்கும் எங்களுக்கு வாக்களியுங்கள் எங்களுக்கு என்றால் பி.ஜே.பி.க்கு வாக்களியுங்கள்” என்று சொல்லப் போகிறார்களா?

இந்து முன்னணி ராம. கோபாலன் சொன்னதை வழி மொழிகிறார்கள் என்றால் அதன் பொருள் இதுதானே?

இதுதான் இந்தத் துறவிகளின் ஆன்மிக ஒழுக்கமா? அடுத்த மதக்காரர்களை அந்நியப்படுத்துவது, மத அடிப்படையில் பகைமையை வளர்ப்பதுதான் இவர்கள் கூறும் ஆன்மிகமா?

அப்படியென்றால் ஆன்மிகம் என்பது மக்களை ஒன்றுபடுத்துவது அல்ல. மத ரீதியாகக் கூறுபடுத்துவது, மாச்சரிய உணர்வுகளைத் தூண்டி விடுவது என்று தானே பொருள்?

ஆன்மிகத்தைத் தேடுவதில் மதக் கண்ணோட்டம் தேவையில்லை; மதத்தால் வேறுபட்டாலும் அடிப்படை ஒன்றுதான் - ஆன்மிகத் தேடுதல் என்பது இதுதான் என்ற சொற்களை யாரும் உச்சரிக்காதது ஏன்? காரணம் அப்படி ஓர் ஆன்மிகம் ஏதுமில்லை.

இராமேசுவரம் கோயில் குட முழுக்கில் யாருக்கு முதல் மரியாதை என்று சிருங்கேரி சங்கராச்சாரியாரும், காஞ்சி சங்கராச்சாரியாரும் மோதிக் கொண்டார்களே அந்தமோதல் கும்பகோணத்தில் நடந்ததா என்று தெரியவில்லை. முற்றும் துறந்தவர்களிடத்தில் முரண்பாடுகளும் முணுமுணுப்புகளும், தன் முனைப்புகளும் இருப்பதுதான் வேடிக்கை.

இந்து மதத் துறவிகள் நடத்திய அம்மாநாட்டில், அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை. இந்தக் கால கட்டத்தில் இது ஒரு முக்கியமான பிரச்சினை. அதைப் பற்றி அலசியிருக்க வேண்டாமா? இந்து மதம் சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்சினையாயிற்றே!

குறைந்தபட்சம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்களாவது இந்தப் பிரச்சினைப் பற்றிச் சிலாகித்திருக்க வேண்டாமா? காரணம், மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் இந்தப் பிரச்சினையில் மிகவும் அக்கறை கொண்டு கவனம் செலுத்தியவர் ஆயிற்றே! இதைக்கூடப் பேசாமல், வேறு எதற்காகத்தான் இந்த அகில பாரதத் துறவிகள் மாநாடாம்?

இடுக்கோடு இடுக்காக திருவாளர் ராம. கோபாலன், தன் நச்சுப் பொடியைத் தூவி இருக்கிறார்.

‘கோயில்களில் அறநிலையத்துறை தலையீடு தேவையில்லை’ என்பதுதான் அந்த நச்சுப் பொடி. இதன் பொருள், கோயில் சொத்துக்களை எல்லாம் கோயில் பெருச்சாளிகளான பார்ப்பனர்கள் வசமே ஒப்படைக்க வேண்டும், யாரும் கேள்வி கேட்கக் கூடாது - தானடித்த மூப்பாக சுரண்டிட வேண்டும் என்பதுதான்.

அப்படியெல்லாம் ஒரு கால கட்டம் இருந்த காரணத்தினால்தான் இந்து அறநிலையத்துறை, நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது.

சர் சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் அரசால் போடப்பட்ட ஆணையம்கூட கோயில் குருக்களின் சுரண்டல் கூடாரமாகத்தான் இருக்கிறது என்பதை ஆதார பூர்வமாக அறிக்கையாகவே அளிக்கவில்லையா?
கோயில் சொத்துக்கள் எல்லாம் பார்ப்பான் வீட்டுச் சொத்தா? நமது அரசர்களால் வாரி வழங்கப்பட்டவை அல்லவா? அப்படி இருக்கும் பொழுது அதற்கு முறையான கணக்கு இருக்க வேண்டாமா?
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மன்னன் கிருஷ்ணதேவராயன் அளித்த வைர நகைகளைக் காணவில்லை என்று புகார் கூறப்பட்டதே! உயர்நீதிமன்றம் தலையிட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் நகைகள் பற்றிய தணிக்கை அறிக்கை தேவை என்று உத்தரவிடவில்லையா?

வெகு தூரம் கூடப் போக வேண்டாம்; சிதம்பரம் நடராஜன் கோயிலை எடுத்துக் கொள்ளலாமே! தீட்சதர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த புள்ளிவிவரம் என்ன?

ஆண்டு ஒன்றுக்கு சிதம்பரம் கோயில் வருமானம் ரூ.37,199 செலவினம் ரூ.37,000, மீதி ரூ.199. இதுதான் தீட்சதர்கள் நீதிமன்றத்தில் கொடுத்த கணக்கு; அதே நேரத்தில் தி.மு.க ஆட்சிக் காலத்தில் அக்கோயிலின் வருவாய் என்ன? 15 மாதங்களில் ரூ.25,12,485. இது எதைக் காட்டுகிறது?

அரசு தலையீடு இல்லை என்றால் சர்வமும் பார்ப்பனக் கொள்ளை மயம்தானே - இதைத்தான் ராம. கோபாலன் விரும்புகிறார் - ஆதீனங்கள் இதனைப் புரிந்து கொள்ளவில்லையா?

இல்லை, நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுக்கிக் கொண்டார்களா? 22-02-2016

தமிழ் ஓவியா said...

மலக்கழிவு28சதவிகிதம்;
மூத்திரக்கழிவு40சதவிகிதம்!

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் செய்யப்பட்ட ஆய்வின் அதிர்ச்சியூட்டும் முடிவு





கும்பகோணம், பிப்.24_ புண்ணிய நதிகள் ஒன்று கூடிய காரணத்தால் மகாமகக் குளத்தில் முழுக்குப் போட்டால் 12 வருட பாவங்களும் பறந்தே போகும் என்ற கதையை நம்பி பல லட்சம் மக்கள் முழுக்குப் போட்டார்களே, அதன் உண்மை நிலை என்ன தெரியுமா? அந்தக் குளத் தின் நீரை எடுத்து மாவட்ட ஆட்சியரே பரிசோதனைக்கு அனுப்பினார். அதன் முடிவு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. மலம், சிறுநீர் கலந்து பயங்கரமான மாசுக்கு ஆளாகியுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.

கும்பகோணம் மகாமகம் முடிந்த பிறகு அந்தக் குளத்து நீரை ஆய்வு செய்ததில், மனித சிறுநீரில் கலந் துள்ள யூரியாவும், மலக்கழிவும் அதிக அளவுள்ளதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

கடந்த சில நாள்களாக கும்பகோணத்தில் நடந்த மகாமகத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் முழுக்கு போட்டனர். மகாமகம் முடிந்த பிறகு மகாமகக் குளத்து நீரை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதனை அடுத்து நீரியல் வளத்துறை, மகாமகம் நடந்த குளத்தில் இருந்து நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியது. ஆய்வின் முடிவில் குளத்து நீர் மிக அதிக அளவு மாசடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

காவல்துறையினரின்
உடல்நலம் பாதிப்பு!

குளத்தைப் பாதுகாக்கும் 25,000 காவல்துறையினரின் உடல் நலம் குறித்த ஆய்வறிக்கையில், பல காவல்துறையினருக்கு தொண்டை கரகரப்பு, மற்றும் தோல் அரிப்பு தொடர்பான வியாதிகள் தொற்றியுள்ளன என தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் குளத்து நீரில் பல மணிநேரம் நின்று மக்கள் கூட்டத்தைக் கட்டுப் படுத்தியுள்ளனர். இது குறித்து பாதுகாப்பிற்கு நின்ற காவலர் ஒருவர், குளத்து நீரில் பலமணிநேரம் நின்ற காரணத்தால் கால் அரிப்பு மற்றும் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுவிட்டன என்று கூறினார்.

விநாடிக்குக் குறைந்தபட்சம் 75 லிட்டர் தண்ணீர் வெளியேறும்படி ஏற்பாடுகள் செய்திருந்தாலும் குளத் தில் குளிப்பவர்களின் எண்ணிக்கை அதிமானதும், தண்ணீரின் ஓட்டம் தடைபட்டது, மேலும் குறைந்த அளவு ஆழம் கொண்ட இடத்தில் தண்ணீரின் ஓட்டம் அறவே நின்றுவிட்டதால் குளத்தின் தூய்மையைத் தொடர்ந்து நிலைநிறுத்த முடியவில்லை. மேலும் ஆடைகளில் உள்ள நிறமூட்டி வேதிப்பொருள்கள் தண்ணீரில் கலந்த காரணத்தால் நீர் அதிகமாக மாசு அடைந்துள்ளது, எனவும் தெரியவந்துள்ளது.

இ.கோலி

இ.கோலி என்பது எசரிக்கியா கோலி என்பதன் சுருக்கமாகும் இவ்வகை பாக்டீரியாக்கள் மனிதக் குடலில் வாழ்கின்றன. இவை எண்ணிக்கையில் அதிக மாகும்பொழுது குடல்புண் மற்றும் அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. முக்கியமாக ஓ157:எச்7 போன்ற பாக்டீரியாக்கள் மனிதன் உண்ணும் உணவை நச்சாக்கி மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கின்றன. இத னுடைய வாழ்க்கைச் சுழற்சி மலத்தின் மூலம் வெளியேறி நீர்நிலைகளில் கலந்து பிறகு தாவரம் மற்றும் மீன் உணவு வழியாக மீண்டும் மனித குடலைச் சென்றடையும். சமைத்த உணவு உண்ணும் பழக்கம் உள்ள மனித இனங்களில் மிக அதிக அளவு இவ்வகை பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி பேதி, மற்றும் வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்கள் இவ்வகைப் பாக்டீரியாக்கள் குடலில் அதிகரிப்பதால் ஏற்படுகின்றன.




மனித மலக்கழிவு - மூத்திரக் கலப்பு
நீரில் இ-கோலி என்னும் பாக்டீரியாக்கள் அதிக அளவு உள்ளன. (இவ்வகை பாக்டீரியாக்கள் மனிதக் குடலில் உள்ள சளி போன்ற திரவத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும்.மலம் கழிக்கும் போது இந்த பாக்டீரியாக்கள் வெளியேறி நீரில் கலந்துவிடுகின்றன). இவ்வகைப் பாக்டீரியாக்கள் 28 விழுக்காடு குளத்து நீரில் கலந்துள்ளது. மேலும் மனித சிறுநீரில் உள்ள யூரியாவின் அளவும் குளத்து நீரில் 40 விழுக்காடு அதிகமாக உள்ளது என்று தெரியவந்துள்ளது.


மாவட்ட நீரியல் துறை நிர்வாக அலுவலர் ஒருவர் கூறும்போது,

நாங்கள் குளத்து நீரை ஓட்டத்திலேயே இருக்கும்படி பார்த்துக்கொண்டோம். ஆனால், வெளியேறும் நீரின் அளவு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே அதிகமாக இருந்தது. முக்கியமாக குளத்தின் கரைப்பகுதி மற்றும் 2 அடி ஆழமுள்ள பகுதி நீர் அப்படி தங்கிவிட்டது. இதனால் மாசுக்கள் அதிகமாகிவிட்டன. மேலும் மக்கள் தொடர்ந்து வந்து முழுக்குப் போடுவதால் மாசு மிகவும் அதிகமாகிவிட்டது என்று கூறினார்.

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரைத் தெரிந்துகொள்ள சமஸ்கிருதமே சரியான அளவுகோல்!


சமஸ்கிருதம் என்று சொன்னால் அது செத்தொழிந்த மொழி என்பது ஊருக்கே, உலகத்துக்கே தெரிந்த வெளிச்சமான உண்மை.

இந்தியாவில் சமஸ்கிருதம் பேசுவோர் எண்ணிக்கை வெறும் 14 ஆயிரமே என்று சொல்லப்பட்டாலும்கூட, அது நடைமுறை சாத்தியமில்லாமல் தானிருக்கிறது. 2013 இல் வெளிவந்த புள்ளி விவரம் இது; 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகும் எண்ணிக்கை உயரவில்லை; அதே தேக்க நிலைதான். (சங் பரிவார் வகையறாக்களுக்கு நமது அனுதாபங்கள்!)

அம்மொழி ஏதோ இருக்கிறது என்றால், புரோகிதத்திலும் அர்ச்சனையிலும்தான் - அதுகூடப் பொருள் புரிந்து சொல்லப் படுகிறதா என்பது சுவையான கேள்வி.

1960 ஆம் ஆண்டில் சர்.சி.பி.ராமசாமி அய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் இந்தியா முழுவதும் சுற்றிப் பார்த்து இந்துக் கோவில்களின் நிலவரங்களை நிரல்படுத்தியுள்ளது.

அர்ச்சகர்களைப்பற்றிக் கூறும்போது, ‘‘அனேகமாக இவர்கள் தற்குறிகளாக இல்லையென்றால், தப்பாகக் கற்றுக் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்’’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

இதன் பொருள் என்ன? சமஸ்கிருத மொழியை அறிந்த வர்கள் என்பதைவிட பாரம்பரியமாக அர்த்தம் தெரியாது. நெட்டுருப் போட்டு ஒப்பித்துக் கொண்டுள்ளனர்.

பார்ப்பனப் புரோகிதரை வைத்து நடத்தப்பட்ட விவாக சுபமுகூர்த்தத்திற்குச் சென்ற நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்கள், அந்தப் புரோகிதப் பார்ப்பான் கல்யாண வீட்டில் கருமாதி மந்திரத்தை சொல்லிக் கொண்டிருந்ததைக் கண்டு பிடித்துச் சுட்டிக்காட்டிய நிகழ்ச்சியும் உண்டு.

பார்ப்பனர்களின் தாய்மொழி சமஸ்கிருதம் என்று சொல்லிக் கொண்டாலும், அவர்கள் வீட்டிலாவது சமஸ்கிருத மொழியில் உரையாடல் உண்டா என்ற கேள்விக்கு இல்லை என்பதுதான் உண்மையான பதில்.

இந்த நிலை இருந்தாலும்கூட பார்ப்பனர்கள் சனாதன சங்கராச்சாரியாரிலிருந்து, அரசியல் ஆச்சாரியார் என்று சொல்லப்படும் ராஜகோபாலாச்சாரியாராக இருந்தாலும் சரி (ராஜாஜி) சமஸ்கிருதத்தின்மீது வைத்துள்ள பற்று என்பதைவிட வெறித்தனம் என்பது அளவிட்டுச் சொல்லப்பட முடியாத ஒன்றே.

தமிழ் ஓவியா said...

இதுகுறித்து அறிஞர் அண்ணா அவர்கள் எழுதியதுதான் நினைவிற்கு வருகிறது.

‘‘தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழியெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழி யாகிய சமஸ்கிருதத்தின்மீதுதான்.’’ (‘திராவிட நாடு’, 2.11.1947) என்று அண்ணா சொல்லும் உரைக்கல்லில் வைத்து உரைத்துப் பார்த்தால், பார்ப்பனர் தம் உள்ளத்தின் தன்மை உண்மையாகவே விளங்கும்.

‘‘சமஸ்கிருத பாஷை பிரம்மத்திற்குச் சமானம். அதாவது பரம்பொருளுக்குச் சமானம். பரம்பொருள் எங்கும் நிறைந்திருக்கிறது - அதற்கென்று ஒரு குறிப்பிட்ட பகுதியோ, தேசமோ கிடையாது. இதைத்தான் ‘‘சர்வ வியாபசத்வம்’’ என்பார்கள்.

உலகில் முதன்முதலில் தமிழ்மொழி தோன்றிற்று. அதுவும் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்டது. பிறகுதான் சமஸ்கிருதம் வந்தது. அதுவும் கொஞ்சம் நூற்றாண்டுகளுக்கு முன்புதான் ‘‘பாணிணி’’ என்ற ஒருவர் இந்த சமஸ்கிருதத்திற்கு இலக்கண சாஸ்திரங்களை இயற்றினார். அது முதற்கொண்டுதான், அந்த மொழியும், பாஷையும் வளர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால், பாஷா சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய (Philology) சாஸ்திரத்தில் சமஸ்கிருதம்தான் பண்டைய காலத்திலிருந்து வந்த ஒரு பாஷை என்று கூறப்பட்டுள்ளது’’ - இப்படி சொல்லியிருப்பவர் யார் தெரியுமா?

‘முற்றுந் துறந்த லோகக் குரு’ என்று அக்கிரகாரம் போற்றும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியார்தான் (‘ஞானவழி’ - வானதி பதிப்பக வெளியீடு).

சங்கராச்சாரியார் எல்லாவற்றையும் கடந்தவர் என்று அவர்கள் சொல்லிக் கொள்ளலாம்; எதைத் தாண்டினாரோ இல்லையோ, அவாளின் சமஸ்கிருதப் பற்றை மட்டும் தாண்ட முடியவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பூஜை வேளையில் எந்த காரணத்தை முன்னிட்டும் தமிழில் பேச மாட்டார். அப்படிப் பேச நேரிட்டாலும் குளித்து முழுகி விட்டுத்தான் மறுபடியும் பூஜையை ஆரம்பிப்பார்; காரணம், அவாள் பார்வையில் தமிழ் நீஷ பாஷையாம்.

இவர் ஆன்மிக ஆச்சாரியார் - அரசியல் ஆச்சாரியார் ராஜாஜி என்ன சொல்கிறார்?

‘பள்ளிக்கூடங்களிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும் வெளியே வரும் மாணவர்களுக்கு நமது முன்னோர்கள் நமக்கு வைத்துவிட்டுப் போன பெருமைகளின் சாவி என்ற ஸம்ஸ்கிருதம் தெரியாவிட்டால், மகாபெரிய விபத்தாகும்’’ என்று கூறுகிறார்.

அவரை விட்டுத் தள்ளுங்கள், கோமாளி என்று பொதுவாகச் சித்தரிக்கப்படும் திருவாளர் சோ.ராமசாமி கோவிலில் அர்ச்சனை மொழி தமிழ் என்றால், எப்படியெல்லாம் எகத்தாளமாக எழுதுகிறார்.

‘‘நாயன்மார்களும், ஆழ்வார்களும் இயற்றிய தமிழ்ப் பாடல்களை ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால், அர்த்தம் இருக்கும், அருள் இருக்காது; ரிஷிகளும் பக்த சீலர்களும் இயற்றிய ஸம்ஸ்கிருத துதிகளை தமிழில் மொழி பெயர்த்தால், பொருள் இருக்கும் புனிதம் இருக்காது. அதாவது இங்கே முக்கியத்துவம் மொழிக்கு அல்ல - ஒலிக்கு’’ என்று தலையங்கம் தீட்டுகிறார் (‘துக்ளக்’, 18.11.1998) எல்லாம் வல்ல கடவுள் என்று பசப்புவார்கள். ஆனால், அவரைக்கூட அவாளின் சமஸ்கிருதக் குடுவைக்குள் அடைக்கிறார்களே - புரிகிறதா - அதுதான் அவாளின் இனப்பற்றும் - மொழிப்பற்றும்.

சமஸ்கிருதத்திலிருந்து எதற்குத் தமிழில் மொழி பெயர்க்க வேண்டுமாம்? அதுபற்றி அவர் ஒன்றும் கூறவில்லையே! கோவிலில் வழிபாடு செய்ய தமிழில் பாடல்கள் இல்லையா?

திருவாசகம், தேவாரம் என்று ஒரு பட்டியல் இருப்பதாக சைவ மெய்யன்பர்கள் சொல்லுகிறார்களே, அவையெல்லாம் குப்பைக் கூளங்களா?

பார்ப்பனரைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், சமஸ்கிருதம்தான் சரியான அளவுகோல்! மத்தியில் உள்ளது பார்ப்பன ஜனதா ஆட்சி என்பதால், சமஸ்கிருதத் திணிப்பு திட்டமிட்டு நடக்கிறது - எச்சரிக்கை!