Search This Blog

25.9.10

பிள்ளையார் கதையைப்பற்றி பேசியதற்கு கலைஞர் மீதே வழக்கு


பிள்ளையார் கதையைப்பற்றி பேசியதற்கு
கலைஞர் மீதே வழக்குப் போட்டு விட்டார்கள்!
சென்னைப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்

பிள்ளையாரைப் பற்றி பேசியதற்காக கலைஞர் மீதே வழக்குப் போட்டு விட்டார்கள் என்று திராவிடர் கழக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கமளித்தார்.

சென்னை திருவல்லிக்கேணியில் 18.9.2010 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

ஒரு காலத்தில், அறிவு விளங்காத காலத்தில் எல்லாம் பொம்மை விளையாட்டே என்று விளையாடிக் கொண்டிருந்தனர். யார்? வள்ளலார் சொன்னார்- எல்லாம் பொம்மை விளையாட்டே! என்று சொன்னார். அன்றைக்கு இருந்த மனிதனுடைய அறிவு அவ்வளவுதான். தீவட்டி காலம் வேறு. மின் வெளிச்ச காலம் வேறு.

காற்றடித்தது, பார்த்தான்; எல்லாம் வாயு பகவான் என்று கன்னத்தில் போட்டுக் கொண்டான். அன்றைக்கு காட்டுமிராண்டி காலத்தில் இருந்த மனிதன்-குகையிலே வாழ்ந்த மனிதன் காற்றை வாயு பகவான் என்று சொன்னான். அந்தக் காலத்தில் அவனுக்கு இருந்த அறிவு அவ்வளவுதான். வாயு பகவானை இன்றைக்கு எங்கே கொண்டு போய் வைத்து விட்டான்? இதோ.. ஃபேனுக்குள் கொண்டு போய் வைத்து விட்டான். சுவிட்சை ஆன் பண்ணினால் வாயு பகவான் சுற்ற வேண்டும். இன்னும் சொல்லப் போனால், ஸ்விட்சை ஸ்லோவில் வைத்தால் ஸ்லோவிலேயே சுற்ற வேண்டும். வாயு பகவான் நினைத்தால் ஃபாஸ்ட்டில் கூட போக முடியாது.

வாயு, அக்னி பகவான்கள் நமக்கு வேலைக்காரர்கள்

இப்பொழுது வாயு பகவான் நமக்கு வேலைக் காரனா-இல்லையா? (சிரிப்பு - கைதட்டல்) இப்பொழுது அக்னி பகவானை வத்திப் பெட்டிக்குள் வைத்தாகி விட்டது.

கலைஞர் இப்பொழுது எல்லோருக்கும் இலவச கேஸ் அடுப்பு கொடுத்துவிட்டார். டக்கென்று தட்டினவுடனே எரிகிற மாதிரி அளவுக்கு வந்தாகி விட்டது. வாயு பகவான், அக்னி பகவான் எல்லாம் இப்பொழுது கூப்பிட்டவுடனே வருகின்றான். வா இந்த பக்கம் என்றால் வருகின்றான். இந்த பகவான்கள் எல்லாம் இன்றைக்கு வேலைக்காரனா? அல்லது எஜமானனா? அன்றைக்கு அறிவு வளராத காலத்தில் ஆதி மனிதன் சந்திலே, பொந்திலே வாழ்ந்த மனிதன் அவற்றைக் கடவுளாகக் கும்பிட்டான். அன்றைக்கு அதை ஏற்றுக் கொண்டிருந்தான்.

பிள்ளையாருக்கு 15 மனைவிகளாம்!


பிள்ளையார்பற்றி கதைகள் ஏராளம் உண்டு. பலவற்றிலும் - எல்லாம் கட்டுக்கதை புராணங்கள் தானே - தமிழ்நாட்டில் அது இறக்குமதி கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதானே!

அபிதான சிந்தாமணி 1910இல் வெளிவந்த அந்தக்கால தமிழ் கலைக்களஞ்சியம் - என்சைக்ளோ பீடியா!

அதில் பிள்ளையாருக்கு 15 மனைவிகள் உண்டு என்று சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்றன!

1. சித்தி என்ற மனைவி 2. புத்தி என்ற மனைவி (சித்தி புத்தி விநாயகர் என்றால், இரண்டு மனைவிமார்களையும் இணைத்ததுபோலும்!) 3. மோதை 4. பிரமோதை 5. சுமகை 6. சுந்தரி 7. மனோரமை 8. மங்கலை 9. கேசினி 10. காந்தை 11. சாருகாசை 12. சுமத்திமை 13. நந்தினி 14. காமதை 15. வல்லபை
முதலியவரை மணந்தனர்.

பக்கம் 1751, விநாயகர் தலைப்பு இது ஒரு ஆதாரம்

பெரியார் எழுதியதைத்தானே
சொன்னோம்?

நாங்கள் விநாயகன் பிறப்பைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரையைத்தான் இப்பொழுது எடுத்துப் போட்டிருக்கின்றோம். இது அபிதான சிந்தாமணி அந்தக் காலத்து என்சைகுளோ பீடியா.

அண்மைக் காலத்தில் தான் இந்தப் பதிப்புகள் வெளியே வந்திருக்கிறது. தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி பயன்படுத்துகின்ற நூல் இது. சிங்காரவேலர் - புலவர் பச்சையப்பன் கல்லூரியிலே பேராசிரியராக இருந்தவர். பச்சையப்பன் கலாசாலை தமிழாசிரியரும், அபிதான சிந்தாமணியின் நூலாசிரியருமான காலஞ்சென்ற சிங்காரவேலு முதலியார் 1910இல் முதலில் எழுதியிருக்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் வந்த நூல். சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்னாலேயே வந்த புத்தகம் இது. இதில் நிறைய செய்திகள் இருக்கின்றன. அவ்வளவு நேரத்தை நான் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. வருத்தப்படுகிற தோழர்கள், கோபப்படுகிற தோழர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக நான் சொல்லுகின்றேன்.

மிரட்டலுக்கு அஞ்சுகிறவர்கள் அல்லர்!

நீதிமன்றம் அது, இது என்று சொல்லி மிரட்டலாம் என்று பார்த்தால், அதற்கெல்லாம் அஞ்சுகிறவர்கள் அல்லர் நாங்கள். அப்படி வந்தால் நல்ல வாய்ப்பு என்று கருதுகிறவர்கள் நாங்கள். இரண்டாவது ஜெயிலுக்குப் போவதற்கு யாருமே பயப்படுவது கிடையாது. ஜெயிலில் இருக்கிற அதிகாரிகளே இப்பொழுது ஜெயிலுக்கு போகிறார்கள். ஒரு காலத்தில் அரசு அதிகாரிகள் போக மாட்டார்கள். எங்களை மாதிரி போராட்ட வீரர்கள் அடிக்கடி ஜெயிலுக்குப் போவோம்.

ஆகவே இந்த அச்சுறுத்தல்கள், பயமுறுத்தல்கள் நடவடிக்கைகள் இவை எல்லாம் தேவையில்லை. ஏன், நாங்கள் இதைச் சொல்லுகிறோம். பக்தியைக் காட்டி, விநாயகனைக் காட்டி இந்த நாட்டில் அமைதியைக் கெடுக்கிறார்கள்.

ஏராளமான காவல்துறையினர்

இந்தப் பிள்ளையாருக்கு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு. அதிகாரிகளுக்கு ஓய்வு கிடையாது. இந்த கூட்டம் நடந்தால் கூட என்ன நடக்குமோ என்ற கவலை. அவர்களுடைய குடும்பம், அவர்களுடைய வாழ்க்கை அத்தனையையும் விட்டு, விட்டு விநாயகனை கடலில் கரைப்பதற்காக பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் எல்லாம் யார்? நமது அதிகாரிகள் அல்லவா? எங்கே பிள்ளையார் ஊர்வலம் விடுவது? பெரியார் பிறந்த மண்ணிலே ஊர்வலம் விடுவதா? பாபர் மசூதியை இடித்த பொழுது இந்தியா முழுவதும் கலவரம் ஏற்பட்டது. கலவர பூமியானது. இரத்த ஆறு ஓடிற்று. ஒரே ஒரு மாநிலம்தான், ஒரே ஒரு கொலை கூட இல்லாமல், இந்த மாநிலத்தின் காவல் துறையை கேரளத்திற்கும், ஆந்திரத்திற்கும் அனுப்பியது. இந்த மண் தமிழ் மண். இதற்கு பத்திரிகையாளர்கள் எழுதினார்கள். தமிழ்நாட்டில் எந்த கலவரமும், ரத்தக் களறியும் நடைபெறாததற்குக் காரணம் தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டை, தமிழ் மண்ணைப் பக்குவப்படுத்தியிருக்கிறார் என்று எழுதினார்கள்.

கடவுள் இல்லை என்று சொல்லுகிறவர்கள்

தமிழ்நாட்டில் மனித நேயம் இருக்கிறது. மதவெறி கிடையாது. தமிழ்நாட்டில் அண்ணன், தம்பிகளாக இருக்கக் கூடியவர்கள். இதோ பாருங்கள். கோயிலுக்குப் பக்கத்திலேயே கூட்டம் நடத்துகிறோம்.

கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை,; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்,

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகின்ற ஓர் இயக்கம் இந்த இயக்கம் (கைதட்டல்). ஆனால் ஒரு சிறிய பிரச்சினை பக்தர்களுக்கு எங்களால் உண்டாகுமா? அல்லது உண்டாக விடுவோமா?

பெரியார் கேட்ட கேள்விக்கு....

எங்கள் கூட்டத்தில் தான் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். எல்லோர் கேட்ட கேள்விக்கும் பெரியார் பதில் சொன்னார். ஆனால், பெரியார் கேட்ட கேள்விக்கு இதுவரை எவனும் பதில் சொல்லவில்லை (கைதட்டல்). அதுதான் மிக முக்கியம்.

பக்தியைக் காட்டி
கலவர பூமியாக ஆக்க...

கடவுளை, மதத்தை பக்தியைக் காட்டி இந்தநாட்டை ஒரு கலவர பூமியாக ஆக்குகிறார்களே!

இஸ்லாமிய சகோதரர்களாக இருக்கட்டும், கிறிஸ்தவ சகோதரர்களாக இருக்கட்டும்; யாரும் யூத நாட்டிலிருந்து இஸ்ரேல் நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்லர். யாரும் அரேபிய நாட்டிலிருந்து ஹெலி காப்டரில் வந்தவர்கள் அல்லர். மூன்று தலைமுறைக்கு முன்னாலே, அய்ந்து தலைமுறைக்கு முன்னாலே இவர்களும் இந்த நாட்டைச் சார்ந்தவர்கள் தான். இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தான்.

இந்துவாக இருந்தாலும், மற்றவர்களாக இருந்தாலும் எல்லோரும் மனிதர்கள்தானே. மதங்கள் நம்மைப் பிரிக்கலாம். மனங்கள் நம்மைப் பிரிக்கக் கூடாது என்று சொல்லுவதுதான் சுயமரியாதை இயக்கம். கடவுள் பக்தி, மதம் என்கிற போதை பக்தியை நீங்கள் ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று சொல்ல வேண்டிய கடமைக்காகத்தான் நாங்கள் இந்தப் பணியைச் செய்கின்றோம். ஏன் நோட்டீஸ் அடிக்கிறோம்? மற்றவர்களை புண்படுத்த வேண்டும் என்பது எங்களுடைய ஆசையா? மற்றவர்களை சங்கடப்படுத்த வேண்டும் என்பதா எங்களுக்கு ஆசை?

பிள்ளையார் கதையை சொல்லும் போது - ஒரு கதை அல்ல; எத்தனையோ கதை இருக்கிறது.

பிள்ளையார் பற்றி பலவகையான கதைகள்

ரொம்பபேர் என்ன தெரிந்து வைத்திருக்கிறோம்? பிள்ளையார் என்றால் அவர் திருமணம் ஆகாதவர். பிள்ளை-யார்? என்று போட்ட புத்தகத்திலேயே ஆதாரபூர்வமான பல செய்திகள் இருக்கின்றன.

வடநாட்டில் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையான கதையை எழுதி வைத்திருக்கின்றான். இரண்டும், இரண்டும் கூட்டினால் நான்கு என்றால், அமெரிக்காவில் கூட்டினாலும் நான்குதான்; இங்கே கூட்டினாலும் நான்குதான்.

அதே மாதிரி அறிவியல் தத்துவம் என்றால் ஒரே மாதிரிதான். அபிதான சிந்தாமணியில் ஒரே ஒரு சங்கதியை நான் சொல்லுகின்றேன். விநாயகர் என்ற தலைப்பில் பல புராண செய்திகள் இருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. ஒன்றை சொல்ல விரும்புகிறேன். தன்னை நம்பினாருக்கு விக்னத்தை நீக்குபவரும், அவ்வகையில் வணங்காத வருக்கு விக்னத்தைத் தருபவரும், தனக்கு மேல் நாயகர் இல்லாததால் இப்பெயர் வந்தது.

பிள்ளையார் இப்படி இருந்தால்...

தன்னை வணங்கியவனுக்கு லாபம் கொடுக்கின்றான். வணங்காதவனுக்கு தண்டனை கொடுக்கின்றான் என்றால் அவன் கருணையே வடிவானவனா? என்னைக் கும்பிடுகிறவனை விட்டு விடுவேன். என்னை கும்பிடா தவர்களை ஒவ்வொரு அறை கொடுத்து கொண்டு போவேன் என்று சொன்னால் அது மரியாதையா? முதலில் இந்தத் தத்துவமே தவறு. இவருக்கு யானை முகம் கொண்ட வரலாற்றை கஜபு தலைப்பில் காண்க என்று இருக்கிறது. இவருக்கு சிந்தாமணி விநாயகர் எனவும், வஸ்திர துண்டு விநாயகர் எனவும், கலாதனர் எனவும், கணேசர் எனவும், பாலசங்கரர் எனவும், கபிலர் விநாயகர் எனவும், தூமதேபு எனவும், மகோச்சுடர் எனவும், இண்டு விநாயகர் எனவும், வல்லபை கணேசர் என்று இத்தனை பெயர் அவருக் குண்டு. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கதை இருக்கிறது. இவர் சித்தி புத்தி விநாயகர். யார் யாரை விநாயகர் திருமணம் செய்து கொண்டார் என்ற என்ற பெரிய லிஸ்ட்டே போட்டிருக்கின்றான்.

கடவுள் விவகாரம் - நீதிமன்றத்திற்கு

இதெல்லாம் நீதிமன்றத்திற்குப் போக வேண்டாமா? அதனால் வழக்கு சீக்கிரம் வரவேண்டாமா? பிள்ளை யாரைக் கொண்டு வந்து மரத்துக்கடியில் வைத்தான். குளத்துக் கரையில் வைத்தான். ஏன் அப்படி வைத்தான் என்றால் பிள்ளையாருடைய தாயார் பார்வதி மாதிரி மனைவி வேண்டுமாம். முதல்வர் கலைஞர் அவர்கள் விநாயகரைப் பற்றிப் பேசியதற்காக வடநாட்டுக்காரன் அவர் மீது வழக்கு போட்டனர்.

இப்பொழுது அல்ல. கொஞ்ச நாட்களுக்கு முன்னாலே இந்தக் கதையைச் சொன்னார். இதை அவர் சொன்னவுடனே அவர் மீது வழக்குப் போட்டான். திராவிடர் கழகம் அப்பொழுது தி.மு.கவை ஆதரிக்காமல் தள்ளியிருந்த காலம்-அரசியல் ரீதியாக.

ஏனென்றால், அவர்கள் பி.ஜே.பி.யோடு இருந்தார்கள். அதனால் நாங்கள் ஆதரிக்கவில்லை.

கலைஞர் மீது வழக்கு

ஒரு நிகழ்ச்சியில் கலைஞர் பிள்ளையாரைப் பற்றிப் பேசினார். பகுத்தறிவை கலைஞர் அவர்கள் குறைத்துக் கொள்ள மாட்டார். கலைஞர் மீது வழக்கு போட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று நோட்டீஸ் கொடுத்தான்.

நான் அன்றைக்கே வெளிப்படையாக அறிக்கை கொடுத்தேன். கலைஞர் மீது கணபதிக்காக வழக்கு போட்டால்- இந்த பேச்சுக்காகப் போட்டால் - வாதாடக் கூடிய முதல் வக்கீலாக நான்தான் இருப்பேன். நீதிமன்றத்திற்கு அவருக்காக வாதாடப் போவேன் என்று விடுதலையில் எழுதினேன். பிறகு அந்த வழக்கை வாபஸ் வாங்கி விட்டார்கள்.

(தொடரும்)-------------"விடுதலை” 25-9-2010

வெற்றி பெற்ற பெரியாரின் தொலைநோக்கு

பெரியாரின் தொலைநோக்கு

பெரியார் சுய சிந்தனையாளர் மட்டுமல்ல; சுதந்திர சிந்தனையாளர். அவர் தொடாத துறைகளே இல்லை. முழுக்க முழுக்க மானுடத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்த தலைவர் ஒருவர் உலகில் உண்டென்றால், அவர் பெரியார் ஒருவர் தான். மானுடம் மானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ தனது வாழ்நாளை செலவழித்தவர் அவர்.இயந்திரங்களின் யுகம் தொடங்கிய 20 ஆம் நூற்றாண்டில் அவர் பொது வாழ்வுக்கு வந்தவர்.முதலாம் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், தொழிற்புரட்சி ஆகியவற்றைக் கண்டும்,கேட்டும்,அனுபவித்தும் வந்த காலத்தில் - பழம் பெருமை பேசிய இந்த நாட்டில் பகுத்தறிவைப் பேசியவர்; பரப்பியவர். உலகம் கண்ட மாற்றங்களை தனது இதழ்களில் வெளியிட்டவர்.

அவர் இங்கிலீஷ் படித்தவர் இல்லை.ஆனாலும் இங்கிலீஷ் படியுங்கள் என்றார். அது அந்தக்கால கட்டத்தின் அறிவு மொழி என்பதை உணர்ந்திருந்தார். மனித வாழ்வுக்கான வசதிகளை அளித்த இயந்திரங்கள் அப்போதுதான் இந்தியா போன்ற பின்தங்கிய நாடுகளுக்கு வரத்தொடங்கின. மனித அறிவின் கொடை வழங்கிய அந்தப் பொறிகளைப் பற்றி மக்களிடம் தனது பிரச்சாரத்தின் போது எடுத்துப் பேசுவார். உடல் உழைப்பைக் குறைத்து முன்னிலும் அதிகமான வாழ்க்கை வசதிகளை வழங்கும் வகையில் இயந்திரங்கள் உருவானால் அதனை வரவேற்பதுதான் சரி என்பது அவரது கருத்து. இந்த அடிப்படையில் தான் அவர் 1944 ஆம் ஆண்டு எழுதிய ஒரு நூல் "இனி வரும் உலகம். எதிர்கால உலகம் எப்படி இருக்கும் என்பதைப்பற்றிய பெரியாரின் தொலைநோக்குப் பார்வையே இந்த நூலின் சாரம்.

சமூகம், வாழ்க்கை, ஒழுக்கம், மனிதப்பண்பு, கல்வி, இயந்திரங்கள், அறிவியல், தொழில்நுட்பம், உலக நிலை,அரசியல் இப்படி பல்வேறு பொருள் குறித்தும் பெரியாரின் தொலைநோக்குப் பார்வையை இந்நூல் நமக்குத் தருகிறது. அவர் சொல்லிய சில மாற்றங்கள் இப்போது வந்துவிட்டன; சில கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு மனிதர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். அவற்றில் சில இங்கே ....

பெரியாரின் கருத்து:

சரீரத்தால் செய்யப்பட வேண்டிய எல்லாக் காரியங்களும் அநேகமாக இயந்திரங்களாலேயே செய்யும்படியாக ஏற்பட்டுவிடும்... கக்கூஸ் எடுக்க வேண்டியதும், துலக்க வேண்டியதும், வீதி கூட்ட வேண்டியதும் கூட இயந்திரத்தினாலேயே செய்து முடித்துவிடும்.

மனிதனுக்கு பாரம் எடுக்க வேண்டியதோ, இழுக்க வேண்டியதோ ஆன காரியங்கள் இருக்கவே இருக்காது.


பெரியாரின் கருத்து:

போக்குவரவு எங்கும் ஆகாய விமானமும்; அதிவேக சாதனமு மாகவே இருக்கும்

இன்று பயன்பாட்டில்:

தமிழகத்தின் பெரும்பாலான மாநகராட்சிகளில் விமான நிலையங்கள் வந்துவிட்டன.


பெரியாரின் கருத்து:

கம்பியில்லாத் தந்தி சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும்

இன்று பயன்பாட்டில்:

செல்பேசிகள் (Cellphones) இல்லாதவர்களே இன்று இல்லை என்றநிலை வந்துவிட்டது.


பெரியாரின் கருத்து:

உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்

இன்று பயன்பாட்டில்:

3 ஜி (3G Cellphones) எனப்படும் முகம் காட்டிப் பேசும் செல்பேசி வசதி வந்துவிட்டது.


பெரியாரின் கருத்து:

ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும்

இன்று பயன்பாட்டில்:

எஃப்.எம். ரேடியோ (FM Radio) என்னும் பண்பலை வானொலிக் கருவி மற்றும் ஐ பாட் (i pod), எம்.பி.3 பிளேயர் கருவிகள்
(mp 3,mp4,mp5 players) பயன்பாட்டில் உள்ளன.


பெரியாரின் கருத்து:

விஞ்ஞான சாதனங்களால் ஓர் இடத்தில் இருந்து கொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்கச் சாத்தியப்படும்

இன்று பயன்பாட்டில்:

வீடியோ கான்பரன்ஸ் (Video Conference) மற்றும் இ லேர்னிங் (E Learning) என்னும் காணொலித் தொடர்பு மூலம் கல்வி,வணிகம்,நிர்வாக நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.


பெரியாரின் கருத்து:

பிள்ளைப்பேறுக்கு ஆண் பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக பொலிகாளைகள்போல் தெரிந்தெடுத்து மணிபோன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு, அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி நல்ல குழந்தைகளைப் பிறக்கச் செய்யப்படும். ஆண் பெண் சேர்க்கைக்கும், குழந்தை பெறுவதற்கும் சந்பந்தமில்லாமல் செய்யப்பட்டுவிடும். மக்கள் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டு ஓர் அளவுக்குள் கொண்டு வந்துவிடக்கூடும்

இன்று பயன்பாட்டில்:

முதல் சோதனைக் குழாய் குழந்தை லூயிஸ் பிரவுன் 1978 ஜூலை 25 இல் பிறந்தார்.அவருக்கு இப்போது வயது32.

சோதனைக் குழாய் மூலம் குழந்தை உருவாக்கம் (Test Tube Baby) இன்று எல்லா நாடுகளிலும் வழக்கத்தில் உள்ளது.


பெரியாரின் கருத்து:

ஒரு டன்னுள்ள மோட்டார் கார், ஓர் அந்தர் வெயிட்டுக்கு வரலாம்; பெட்ரோல் செலவு குறையலாம்; பெட்ரோலுக்குப் பதில் மின்சார சக்தியே உபயோகப்படுத்தப்படலாம்; அல்லது விசை சேகரிப்பாலேயே ஓட்டப்படலாம்

இன்று பயன்பாட்டில்:

மின்சாரத்தால் இயங்கும் மகிழுந்துகள் (Electric Car), இந்தியாவில் ரேவா கார் (Reva Electric Car) வந்துவிட்டன. நேனோ டெக்னாலஜி (Nano Technology) என்னும் புதிய தொழில் நுட்பத்தால் சிறிய அளவில் பொருள்கள் உருவாக்கம் செய்யப்படுகின்றன.

உதாரணம் : டாடா நேனோ கார் (Tata Nano Car), கையடக்க மடிக்கணினிகள் (Laptop and Leaptop Computers)


--------------------”உண்மை” செப்டம்பர் 15_30 - 2010



24.9.10

விநாயகர் பற்றி துண்டுப் பிரசுரம் இந்து முன்னணி புகாருக்கு கி. வீரமணி பதிலடி

விநாயகனை வெட்டி, கை, கால்களை அறுத்து
கடலில் தூக்கிப் போட்டது நீங்களா? நாங்களா?
சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி

விநாயகனின் கை கால்களை அறுத்து வெட்டி தூக்கி எறிந்தது நீங்களா? நாங்களா? விநாயகனை பங்கப் படுத்தியது நீங்களா? நாங்களா? என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

சென்னை திருவல்லிக்கேணியில் 18.9.2010 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

உலகத்தை படைத்தது கடவுள் இல்லை

ஸ்டீபன் ஹாக்கிங் என்ற விஞ்ஞானி அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட மிகப்பெரிய அறிஞர். அண்மையில் அவர் ஒரு புத்தகமே ஆராய்ச்சி நூலாக வெளியிட் டிருக்கின்றார்.

பிரபஞ்சம் உலகம் என்பது யாராலும் உருவாக்கப்பட்டதல்ல என்று சொல்லியிருக் கின்றார். அதே போன்று கடவுள் மறுப்பு கருத்தை லிண்டர் அவான்ஸ் என்ற விஞ்ஞானியும் கூறியிருக்கின்றார்.

பல பேர் கேட்பார்கள் உலகத்தை படைத்தது கடவுள் என்று இவன் சொல்லிக் கொண்டிருக்கின்றான். அந்தக் கடவுளைக் காட்டிதான் நம்மை கீழ்ஜாதியாக்கினான். நமக்குப் படிக்க உரிமை இல்லை என்று சொன்னான். இன்றைக்கு தந்தை பெரியாருடைய கருத்துகள் அறிவியல் பூர்வமான, ஆதார பூர்வமான கருத்துகள். கடவுள் இல்லை என்று அறிவியல் அறிஞர்கள் அறிக்கை மேல் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பெரியார் சொன்ன கருத்துகள்தான்

தந்தை பெரியார் அவர்களும், அவருடைய இயக்கமும் அறிவியல் ரீதியாக சொன்ன கருத்துகளைத்தான் நாங்கள் வலியுறுத்தக் கூடிய பிரச்சாரத்தை செய்கின்றோம். இந்த பிரச்சாரம் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய பிரச்சாரம். எதிலே அரசியல் சட்டத்திலே. அரசாங்கங்கள் இதை ஊக்கப் படுத்த வேண்டுமே தவிர, தடுக்கக் கூடாது. காரணம், என்னவென்றால் இந்திய அரசியல் சட்டத்திலே ரொம்பத் தெளிவாகவே அடிப்படை உரிமைகள் பற்றி (குரனேயஅநவேயட சுபைவள) சொல்லப்பட்டிருக்கிறது. இதே போல இன்னொரு பகுதி இருக்கிறது. இதுவும் ரொம்ப பேருக்குத் தெரியாது. வழக்கறிஞர்களுக்குக் கூட பல பேருக்கு தெரியாது. அடிப்படை கடமைகள்

அடிப்படை கடமைகள் என்ற பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கக் கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிற கடமைகள் என்ன?

1. அறிவியல் மனப்பான்மையை மக்களிடத் திலே ஒவ்வொரு குடிமகனும் வளர்க்க வேண்டும்.

2. ஏன்? எதற்கு? என்று கேட்க வேண்டும்.

3. மனித நேயத்தை வளர்க்க வேண்டும்.

4. சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள கடமை

இந்திய அரசியல் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கக் கூடிய கடமை இது. இதைத்தான் பிள்ளையார் விழா ஆனாலும், ராமர் பிரச்சினை ஆனாலும், இந்த மூடநம்பிக்கைகளை எடுத்து விளக்கி நாங்கள் சொல்ல வேண்டுமென்று நினைக்கின்றோமே. தவிர, வேறு ஒன்றும் இல்லை.

பிள்ளையாருக்கும், நம்முடைய நாட்டுக்கும் சம்பந்தமே கிடையாது. ஏழாம் நூற்றாண்டு வரையிலே நம்முடைய நாட்டிற்குப் பிள்ளையார் வரவில்லை. மதவெறியைப் பரப்ப பிள்ளையார்

தந்தை பெரியார் பிள்ளையார் சிலையையே உடைத்தார். அப்பொழுதெல்லாம் இந்த மாதிரி பிள்ளையார் ஊர்வலம் கிடையாது. ஆனால் இன்றைக்கு பிள்ளையார் ஊர்வலம் எதற்குப் பயன்படுகிறது? மத வெறியைப் பரப்பப் பயன்படுகிறது.

ஒரு சமுதாய மக்கள் இன்னொரு சமுதாய மக்களை வெறுப்பதற்காக பயன்படுத்தப் படு கிறது. மதவெறியை மாய்த்து மனித நேயத்தைக் காப்பாற்ற வேண்டிய எங்களுக்குடைய கடமை என்பதற்காகத்தான் இந்த பொதுக் கூட்டத் தைப் போட்டு நடத்துகின்றோம்.

யாருக்கும் சிக்கலை உண்டாக்குவதற்கு அல்ல. யாருக்கும் பிரச்சினையை உண்டாக்குவதற்கு அல்ல. இன்று மாலை வந்த பத்திரி கையை நண்பர்கள் காட்டினார்கள்.

வருடாவருடம் நாங்கள் புராணக்கதைகளில் உள்ள மூடநம்பிக்கைகளை எடுத்துச் சொல்லி எவ்வளவு ஆபாசமாக, அருவருப்பாக இருக்கிறது இந்தக் கதைகள் என்பதைப் பற்றி எடுத்துச் சொல்லி மக்களுக்கு விளக்குவோம்.

இங்கே சொன்னார்கள் பிள்ளையாரை ஊர்வலமாகக் கொண்டு போய் அதை உடைத்து, கை, கால்களை தனித்தனியாக அறுத்து, கடலில் தூக்கி எறிகின்ற வேலையை நாங்கள் யாரும் செய்வதில்லை.

விநாயகரை அவமதித்து துண்டுப் பிரசுரம்

கடவுள் இல்லை என்று சொல்லுகின்றவர்கள்தான் நாங்கள். ஆனால், நாங்கள் யாரும் இதைச் செய்வதில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கையாளர்கள் தான் இந்த பாடுபடுத்துகிறார்கள். அது அவர்களுடைய உரிமை. அது எப்படியோ போகட்டும்.

எனக்கு இந்த செய்தி வந்ததினாலே நான் சொல்லுகின்றேன். இதைப் பற்றி அதிகமாகப் பேசாமல் அய்யா அவர்களுடைய தொண்டைத் தான் அதிகமாக பேச வேண்டும் என்று நினைத்தேன்.

இன்று மாலை வந்த செய்தி விநாயகர் சிலையை அவமதித்து துண்டு பிரசுரம். சென்னையை அடுத்த பம்மல் பகுதியில் விநாயகர் சிலையை அவமதித்து திராவிடர் கழகம் சார்பில் துண்டு பிரசுரம் வெளியிட்டதாக கூறப்படுகிறது. நாங்கள் ஓன்றும் எதையும் ரகசியமாக செய்யக் கூடியவர்கள் அல்ல.

லட்சக்கணக்கான துண்டறிக்கைகள்

விடுதலையில் விளம்பரப்படுத்தி லட்சக்கணக்கான துண்டறிக்கைகள் மூலம் நாடு பூராவும் பிரச்சாரம் செய்கின்றோம் இருப்பதை எடுத்துச் சொல்லுகின்றோம்.

எக்ஸ்ரே மீது கோபப்பட முடியுமா?

யாராவது எக்ஸ்ரே கருவி மீது கோபப் படுவீர்களா? எக்ஸ்ரே எடுக்கும் பொழுது எலும்பு முறிந்திருக்கிறது என்று சொல்லுகின்றான்.

இரத்த பரிசோதனை கருவி இரத்தத்தில் புற்றுநோய் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

உடனே இரத்தப் பரிசோதனைப் பற்றி சொன்னவர் மீது நடவடிக்கை எடு என்றால் அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி? நடவடிக்கை எடுத்தால் அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி?

ஆகவே நாங்கள் எந்த விலையையும் கொடுக்கத் தயார்.

கலைஞரின் பொற்கால ஆட்சி

நாங்கள் எப்பொழுதும் எதிர்நீச்சல் அடித்தே வளர்ந்து கொண்டிருக்கிறவர்கள். நாங்கள் ஏதாவது சீட்டு வாங்கப் போகிறவர்களா?

தி.மு.க ஆட்சி கலைஞர் ஆட்சி பொற்கால ஆட்சியை தமிழகத்திலே நடத்தி வருகிறது. வாராது வந்த மாமணி போன்ற ஆட்சியை ஆதரியுங்கள் என்று சொல்லியிருக்கின்றார். கலைஞர் ஆட்சியை காப்பது நமது கடமை என்று சொல்ல வேண்டியது எங்களுடைய வேலை. அடுத்த தேர்தலைப் பற்றி கவலைப் படுவதை விட அடுத்த தலைமுறையைப் பற்றி கவலைப்படுவதுதான் திராவிடர் கழகத் தினுடைய, சமுதாய புரட்சியாளர்களுடைய சிந்தனை.

இந்து முன்னணி புகாராம்!

இந்து முன்னணியைச் சார்ந்த பொறுப்பாளர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். புகாரைத் திட்டமிட்டு அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

ஏனென்றால் இதன் மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு பதற்றத்தை உண்டாக்க வேண்டும். ஒரு நெருக்கடியை உண்டாக்க வேண்டும். அவர்கள் திராவிடர் கழகத்தோடு மோத வேண்டும். அதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒரு சிக்கலை உண்டாக்க வேண்டும் என்பது தான். இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.காரர் களுடைய நோக்கம். அதற்காக இதை செய்கிறார்கள்.

மனதைப் புண்படுத்துகிறது

புகார் மனுவில் இந்து மக்களுடைய மனதைப் புண்படுத்தும் வகையில், விநாயகர் சிலையை அவமதித்து துண்டுப் பிரசுரம் வெளியிட்ட திராவிடர் கழகம் மீதும், அதன் தலைவர் திரு.கே.வீரமணி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. பம்மல், திண்டுக்கல் போன்ற பல ஊர்களில் இந்த மாதிரி செய்திருக்கிறார்கள்.

அப்படி எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் காவல்துறை மீதோ, அரசாங்கத்தின் மீதோ எங்களுக்கு கோபம் இல்லை.

நடவடிக்கை எப்பொழுது?

நடவடிக்கை எப்பொழுது வரும் என்று ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம் (கை தட்டல்). தயது செய்து யாரும் தாமதிக்க வேண்டாம். நீங்கள் எங்கள் மீது வழக்கு போடுங்கள். நான் கோர்ட்டுக்கு போய் நீண்ட நாள் ஆகிவிட்டது.

அரசியல் சட்ட வழக்கிற்காக, பொது நல வழக்கிற்காக, தடா வழக்கிற்காக நீதி மன்றத்திற்குப் போயிருக்கின்றேன். அதே மாதிரி வாய்ப்பு வர வேண்டும். பிள்ளையார் கதையை நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும்

இந்த பக்தர்களை கூண்டில் நிறுத்தி ஒவ்வொரு புராணத்திலும் என்னென்ன இருக்கிறது என்பதை படித்து, விநாயகர் புராணத்தை எடுத்துக் காட்டி விளக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். பொதுக்கூட்டங்களில் இதைப் பற்றி விளக்கிச் சொல்லுகின்றோம். அதுபோல, வாய்ப்பு கிடைக்கின்ற இடத்தில் குறிப்பாக நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு விளக்க வேண்டும் என்று நினைக்கின் றோம். ஒவ்வொரு இடத்திலும் பதிவு பண்ணுவார்கள்.

இந்த பிள்ளையாருடைய யோக்கியதை என்ன என்பதை நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்று விரும்புகின்றோம். இதை விட உலகத்திற்கு தெரிய வைக்கக் கூடிய வாய்ப்பு வேறு கிடைக்காது. எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள். நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லுகின்றார்.

விநாயகர் புராணம்

விநாயகர் புராணத்தில் உள்ள செய்தி பெரியார் சொன்ன செய்தியைச் சொல்லுகின் றேன். இது தேவாரத்தில் பாடலாக இருக்கிறது. பல கதைகள் உண்டு.

ஏழாம் நூற்றாண்டில் வந்தது

ஏழாம் நூற்றாண்டில் பிறந்தது எப்படியோ? என்ற தலைப்பில் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் எழுதியிருக்கின்ற நூல். இவர் எழுதிய கட்டுரை பல்கலைக் கழகங்களுக்கெல்லாம் பாடமாக இருக்கிறது. நரசிம்மவர்மனின் படைத் தலைவனான பரஞ்சோதி வாதாபியை வென்று திரும்பி வந்த பொழுது கொண்டு வந்த பொம்மை தான் வாதாபி கொண்ட கணபதி. இதுதான் பிள்ளையார் வந்த வரலாறு என்று எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள்.

பார்வதி மனைவி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கிறார். உடம்பில் இருக்கின்ற அழுக்குருண்டையைத் திரட்டி ஒரு பிடி பிடித்து உருவமாக வைத்து விட்டுப் போய் அதற்கு உயிர் கொடுத்தார். இதுதான் பிள்ளை யார்.

ஒரு வெட்டு வெட்டினான்!

பாத்ரூமுக்கு கதவு கிடையாது. நான் குளிக்கும் பொழுது யார் வந்தாலும் உள்ளே விடாதே என்று சொல்லி விட்டார். பார்வதி சிவ பெருமான் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார் போல இருக் கிறது. ஆகவே விடாதே என்று சொல்லி விட்டு போய் விட்டார். சிவபெருமான் திடீரென்று வந்து உள்ளே போகிறார். விநாயகன் தடுக்கின்றார். என்னை தடுப்பதற்கு நீ யார் என்று வாளை எடுத்து பிள்ளையார் கழுத்தை சிவபெருமான் சீவி விடுகின்றார். உடனே உள்ளே போய் விடுகின்றார்.

இந்த அம்மா கேட்கிறார். நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள். நான் ஒரு காவலாளியை வைத்திருந்தேனே என்று சொல்லுகின்றார்.

இல்லை ஒருவன் தடுத்தான். நான் அவன் கழுத்தை வெட்டிவிட்டேன் என்று சிவபெருமான் சொல்லுகின்றார்.

அப்படியா.. அந்தப் பிள்ளைக்கு உயிர் ஊட்டுகின்றேன் என்று சொல்லுகின்றார்.

பிள்ளையாரின் ஆபாசமான கதைகள்

என்ன செய்வது என்று சிவபெருமான் பார்த்தார். ஒரு யானை இருந்தது. யானை தலையை வெட்டி, வெட்டிய உடலுக்கு உயிர் ஊட்டினார். இது ஒரு கதை. பிள்ளையாருக்கு என்று எழுதி வைத்திருக்கின்றான்.

இன்னொரு கதை- பரமசிவனும், பார்வதியும் காட்டில் உலவுவதற்குப் போனார்கள். அவர்கள் சென்ற பொழுது ஒரு ஆண் யானையும், பெண் யானையும் கூடி கலவியில் இருந்ததைப் பார்த்த இவர்கள். அதே மாதிரி நாமும் செய்ய வேண்டுமென்று நினைத்தார்கள். இதை விட அசிங்கம் வேறு இருக்க முடியுமா? இதுதான் விநாயகன் பிறந்த கதைகள். நாங்கள் கொஞ்சம் தரத்தோடு பேசுகின்றோம்.

புராணக்கதையைப் பற்றி பேசினால் வாயை டெட்டால் போட்டுத்தான் கொப்பளிக்க வேண்டும். அவ்வளவு அசிங்கமான, ஆபாசமான கதைகளை எழுதி வைத்திருக்கின்றார்கள். இன்னும் கேவலமாக இவைகள் எல்லாம் விநாயகர் புராணங்கள் பரமசிவனும், பார்வதியும், கலவியில் ஈடுபட்டால் எப்படி யானை தலையோடு மனித உருவம் பிறக்கும், இருக்கும்? இப்படி கேள்வி, ஆராய்ச்சி என்று இறங்கினால் அது ரொம்ப தூரத்திற்கு இழுத்துக் கொண்டே போய்விடும்.

----------------தொடரும் ...”விடுதலை” 249-2010

ஒரு பக்கம் பன்றி வராக அவதாரம்-இன்னொரு பக்கம் பன்றிக்காய்ச்சலுக்கு ஊசி

ஒரு பக்கம் பன்றியை வராக அவதாரம் என்று வணங்குகிறான்
இன்னொரு பக்கம் பன்றிக்காய்ச்சலுக்கு ஊசி போடுகிறான்
திருவல்லிக்கேணி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்

ஒரு பக்கம் பன்றியை வராக அவதாரமாக வைத்து நம்மவர்கள் கும்பிடுகிறார்கள். இன்னொரு பக்கம் பன்றிக் காய்ச்சலுக்கு ஊசி போட்டுக்கொண்டிருக்கின்றார்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

சென்னை திருவல்லிக்கேணியில் 18.9.2010 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

அறிவு ஆசான் பிறந்தநாள் பகுத்தறிவுப் பகலவன் நமக்கெல்லாம் விழி திறந்த வித்தகர் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாள் என்றால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெரிய வளர்ச்சியை அவருடைய கொள்கை வளர்ச்சியை நாம் பார்க்கிறோம்.

உலகில் எத்தனையோ சமுதாயப் புரட்சியாளர்கள்

உலகத்தில் எத்தனையோ சமுதாய புரட்சியா ளர்கள் தோன்றியதுண்டு. ஆனால் தந்தை பெரியார் அவர்கள் ஒரு தனித்தன்மை வாய்ந்த ஒரு சமுதாயப் புரட்சியாளர். உலக வரலாற்றிலேயே எத்தனையோ நாடுகளில் எத்தனையோ தலைவர்கள் வந்திருக் கிறார்கள்.

அய்.நா. மாமன்றம் (UNESCO) தந்தை பெரியார் அவர்களைப் பாராட்டி விருது வழங்கியது. அய்யாஅவர்கள் வாழ்ந்த காலத்திலே நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்கள்தான் சென்னையிலே அவர்களுக்கு இந்த விருதை, அன்றைக்கு மத்திய அமைச்சராக இருந்த டாக்டர் திரிகுணசென் என்ற வங்காளப் பேராசிரியர் பொருளாதார நிபுணர் அவர்களுடைய தலைமையிலே சென்னை ராஜாஜி மன்றத்திலே அரசு நிகழ்ச்சியாக இல்லாமல் யுனெஸ்கோ மன்றம் என்ற தனிப்பட்ட அமைப்பின் சார்பாக வழங்கக்கூடிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்பொழுது அந்த நிகழ்ச்சியிலே வழங்கிய யுனெஸ்கோ விருதிலே, தென்கிழக்கு ஆசியா வினுடைய சாக்ரட்டீஸ் என்று அய்யா அவர்களைக் குறிப்பிடுகிறார்கள் (கைதட்டல்).

அதே போல நாம் அய்யா அவர்களைப் பற்றி முழக்கங்கள் கொடுக்கின்ற பொழுதுகூட, இங்கர்சாலோடு ஒப்பிடுகிறோம்; லெனினோடு ஒப்பிடுகிறோம். காரல் மார்க்சோடு ஒப்பிடுகிறோம்; இப்படிப்பட்ட தலைவர்கள் எல்லாம் புரட்சி யாளர்கள்.

பெரியார் மாறுபட்டவர்

ஆனால், தந்தை பெரியார் அவர்கள் எப்படி அவர்களிடமிருந்து மாறுபட்டவர்கள் என்று சொன்னால் இத்தனை தலைவர்களும் ஒன்று அவர்கள் சிந்தித்துச் சொன்ன நேரத்திலே எதிர்ப்பை சந்திக்கவில்லை. எந்தத் தலைவரும்-அது சாக்ரட்டீஸ் காலம் தொட்டு காரல் மார்க்ஸ் காலம் வரையிலே, மிகப்பெரிய புரட்சியாளர்கள் காலம் வரையிலே சந்திக்காத ஒன்றை தந்தை பெரியார் அவர்கள் சந்தித்தார்.

மிகப்பெரிய எதிர்ப்பு. தந்தை பெரியார் அவர்களுக்கு அன்றாடம் எதிர்ப்புக்கிடையிலே வாழ்ந்தார். தனது வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் அடித்தே வளர்ந்தவன் என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டார்.

புகழிலே ஆசை இருக்கும்

நல்ல பெயர் எடுக்க வேண்டும்; புகழ்பெற வேண்டும்; பதவி, பணம், பட்டம் இவைகளைப் பற்றி எனக்குக்கவலை இல்லை என்று சொல்லுகின்ற மனிதருக்குக்கூட புகழிலே ஆசை இருக்கும். ஆனால், தந்தை பெரியார் அவர்கள், எனக்குப் புகழைப் பற்றியும் கவலை இல்லை. யார் இகழ்ந்தாலும் சரி; இகழ்வதும் சரி, புகழ்வதும் சரி எனக்கு ஒன்றுதான் என்று இரண்டையும் சம நிலையில் எடுத்துக்கொண்ட மிகப்பெரிய தத்துவஞானி அவர். உலகில் அவ்வளவு சுலபமாக இதுபோன்று இருக்க முடியாது.

தந்தை பெரியார் அவர்களைப் பாராட்டி அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவருடைய ஒவ்வொரு பிறந்தநாள் விழாவும் எல்லா ஊர்களிலும் நடைபெறும். இந்த செப்.17முதல் அடுத்த செப். 16 வரை

செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கினால் அடுத்த செப்டம்பர் 16ஆம் தேதி வரையிலே அய்யா அவர்களுடைய பிறந்தநாள் விழாக்கள் ஒவ்வொரு நாளும் நடைபெறும்.

ஒவ்வொரு ஊரிலும் நடைபெறும். இது வரலாறு. அப்படி நடைபெறும்பொழுது, பல கட்சி நண்பர்கள் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் எல்லோரும் வருவார்கள்.

அய்யா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும், நூறாண்டு காலம் வாழவேண்டும் என்றெல்லாம் பாராட்டினார்கள். தந்தை பெரியார் அவர்களால்தான் எங்கள் பிள்ளைகள் படித்தார்கள்; அறிவு பெற்றார்கள்; பகுத்தறிவு பெற்றார்கள்; மானம் பெற்றார்கள் என்றெல்லாம் நன்றி உணர்ச்சியைக் குவிக்கின்ற வகையிலே சொல்லுவார்கள்.

வெட்கமாக இருந்தது

அய்யா அவர்கள் இறுதியிலே பேசும்பொழுது சொல்லுவார்கள். நீங்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தபொழுது எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்தது. வெட்கமாக இருந்தது.

எனக்கு எதிர்ப்பு, வசவு என்று சொன்னால் அதைக்கேட்பதற்கு எனக்குத் தயக்கம் கிடையாது. என்னை யாராவது பாராட்டுகிறார்கள். வாழ்த்துகிறார்கள் என்று சொன்னால், எனக்கு அதுதான் சங்கடமான விசயம்.

ஒரு மனிதன் பாராட்டைக் கேட்டுக் கொண்டிருப்பதைவிட பெரிய கொடுமை வேறு ஒன்றுமே கிடையாது. அய்யா அவர்கள் எவ்வளவு பெரிய தத்துவஞானி என்பதற்கு உதாரணம் இதுதான்.

அய்யா சொன்னார். நீங்கள் எல்லாம் வாழ்க! வாழ்க என்று சொல்லுவதற்காக நான் மகிழ்ச்சி அடைந்தால், என்னை ஒழிக என்று சொல்லு கிறவர்கள்தான்-வாழ்க என்று சொல்லுகிறவர்களைவிட ரொம்ப அதிகம்.

இரண்டும் எனக்கு ஒன்றுதான்

இதற்காக நான் மகிழ்ச்சி அடைந்தால், அதற்காக நான் எவ்வளவு வருத்தப்படவேண்டும். அதற்கும் நான் வருத்தப்பட்டதில்லை. இதற்கும் நான் மகிழ்ச்சி அடைந்ததில்லை. இரண்டும் ஒன்றுதான் என்று சொன்ன ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

தந்தை பெரியார் அவர்களுடைய பகுத்தறிவு சிந்தனை என்பதிருக்கிறதே, அது எல்லையற்ற ஒரு தொண்டறம். அறிவைத் தாராளமாகப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லுவார்கள். உண்மைகளைப் பார்க்கும்பொழுது அதனை நிர்வாணத் தன்மையிலே ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்லுவார்கள். எனவேதான் தந்தை பெரியார் அவர்களைப் பகுத்தறிவுப் பகலவன் என்று தெளிவாக எடுத்துச்சொன்னார்கள்.

அமெரிக்காவில் அண்ணா

அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருக்கின்றார். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. அவருக்கு அமெரிக்க மருத்துவ மனையிலே சிகிச்சை செய்ய ஏற்பாடு. சிகிச்சையிலிருந்து வெளியேறக்கூடிய ஒரு பருவத்திலே அவர் ஓய்வோடு இருக்கின்ற காலகட்டம். அந்த காலகட்டத்திலே நாங்கள் விடுதலை மலரை அண்ணா அவர்களுக்கு அனுப்புகின்றோம். அய்யாஅவர்களுடைய செய்திகள் ஒவ்வொரு ஆண்டும் இருக்கும். அந்த மலரைப் படித்து விட்டு அண்ணா உடனே பதில் எழுதினார். அய்யா அவர்களுக்கு அண்ணா எழுதினார்

அய்யாஅவர்களுக்கு எழுதினார். அய்யா நீங்கள் ஏதோ கொஞ்சம் சலிப்படைந்த மாதிரி அந்த குறிப்புகளில் நான் பார்த்தேன். தயவு செய்து நீங்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சலிப்போ, விரக்தியோ அடைய வேண்டிய அவசியமில்லை. காரணம் சொல்லுகின்றார்- தந்தை பெரியாரின் தலைமகன் பேரறிஞர் அண்ணா சொல்லுகின்றார். பகுத்தறிவு குடும்பத்தின் தலைமகன் அண்ணா. அவருடைய ஆட்சியையே தந்தை பெரியார் அவர்களுக்குக் காணிக்கை என்று சட்ட மன்றத்திலே பிரகடனப்படுத்தினார்களே இதுவே ஒரு வரலாறு. அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே நிகழ்ந்த சம்பவம் இது.

உலக வரலாற்றிலே எந்தப் புரட்சியாளருக்கும்....

உலக வரலாற்றிலே எந்தவொரு புரட்சி யாளருக்கும் கிடைக்காத மிகப்பெரிய வாய்ப்பு இந்த வாய்ப்பு. இந்தச் செய்தியைக்கேட்டு மருத்துவமனையிலே இருந்த அண்ணா எனக்கு வலி குறைந்தது என்று சொன்னார்.

இதை தந்தை பெரியார் ஒப்புக்கொண்டார். இதுதான் சிறப்பானது. எனவே, எந்த ஒரு புரட்சியாளரும் அவருடைய வாழ்நாளிலே தான் பெற்ற தனது வெற்றிக்கனியை சுவைத்ததில்லை. நீங்கள் மட்டும்தான் வரலாற்றிலேஅதற்கு விதி விலக்கு என்று பெரியார் அவர்களுக்கு அண்ணா எழுதினார். தந்தைபெரியார் அவர்களுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு, அலை அலையாக. எதிர்நீச்சல் தொடர்ச்சியாக. அதே நேரத்தில் வெற்றிகள் இன்னொரு பக்கம்.

ஆனால், வெற்றிகள் குவிந்துவிட்டதே என்பதற்காக தந்தை பெரியார் அவர்கள் மகிழ்ச்சி அடைந்ததில்லை. விரக்தி அடையவில்லை. ஏனென்றால், இது காலம் காலமாக இருக்கின்ற மூடநம்பிக்கை, பல்லாயிரக்கணக்கான ஆண்டு களாக இருக்கின்ற இழிநிலை. சூத்திர, பஞ்சம என்ற நிலை. அவர்கள் சொன்ன மாதிரி மிருகத்தை எல்லாம் கடவுள் ஆக்கினான்.

எட்டி நில் என்கிறான்!

கடவுள் ஆக்கியது மட்டுமல்ல, நாயைக் கொஞ்சுகிறான். கழுதையை, குதிரையைத் தடவிக்கொடுக்கின்றான். அப்படிப்பட்ட நிலை யிலே ஆறறிவு படைத்த நம்முடைய சகோதரனை, எட்டி நில் என்று சொல்லுகின்றான்.

தொட்டால் தீட்டு என்று சொல்லுகின்றான். உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரையிலே தண்ணீர் ஊற்றிக் குளிக்க வேண்டும் என்று சொல்லுகின்றான். சுதந்திரம் அடைந்து இதுவரை 63 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரத்திற்கு மிட்டாய் கொடுக்கின்றோம்.

ஒவ்வொரு ஆண்டும் காந்தியாருடைய நாளிலே தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கின்றோம்.

ஆனால், இன்னமும் கிராமங்களுக்குப் போனால் என்ன நிலை? தீண்டாமை ஒழிப்பு சட்ட மாகிவிட்டது. யாராவது தீண்டாதவன், பறையன், பள்ளன் எட்டிநில் என்று சொன்னால் உடனே காவல்துறைக்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய எல்லா அதிகாரமும் இருக்கிறது.

இன்னமும் இரட்டைக் குவளை முறை

இன்றைக்கும் நண்பர்களே! கிராமங்களில் இரட்டைக்குவளை முறை இருக்கிறதா? இல்லையா? கடைசி இரட்டைக்குவளை இருக்கிற வரையிலே பெரியாருக்கு வேலை உண்டு. பெரியார் வாழ்கிறார். பெரியார் தத்துவம் மறையாது.

மருந்து என்பது எப்பொழுதும் தேவை. பன்றிக்காய்ச்சல் எப்பொழுது வரும் என்று யாருக்குத் தெரியும்? தேர்தல் வந்தால் பன்றிகள் வரும் கூட்டத்தைக் கலைக்க. இப்பொழுது பன்றிக்காய்ச்சலும் சேர்ந்து வந்திருக்கிறது.

பன்றிக்காய்ச்சலுக்கு உங்களிடம்தான் மருந்து இருக்கிறது. நீங்கள் அளிக்கின்ற வாக்குகள் மூலம்தான் பன்றிக் காய்ச்சலை அகற்ற முடியும்; பொற்கால ஆட்சியைத் தொடரமுடியும். பன்றிக் காய்ச்சலுக்கு அவரவர் தடுப்பு மருந்து போட்டுக் கொள்ள வேண்டியது தானே.

பத்து அவதாரங்கள்

நமது கடவுள் பத்து அவதாரங்கள் எடுத்திருக்கிறது. நாவலர் நெடுஞ்செழியன்தான் ரொம்ப வேடிக்கையாகச் சொல்லுவார். இந்தத் தொகுதிக்கு அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1971இல் திருவல்லிக்கேணி தொகுதியில் தான் அவர் வெற்றிபெற்றார். அதுவும் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையிலே வெற்றிபெற்றார்.

பத்து அவதாரமும் சுற்றிச்சுற்றி...

அவர் பேசும்பொழுது சொல்லுவார் பத்து அவதாரத்தையும் மகாவிஷ்ணு எங்கே எடுத்தார்? ஒரு அவதாரம் பாகிஸ்தானில் எடுக்கவில்லை. இன்னொரு அவதாரம் அபிசீனியாவில் எடுக்க வில்லை. சுத்தி சுத்தி பகவான் இங்கேயா எடுத்தான் என்று கேட்பார்.

அப்படி எடுத்த அவதாரங்களில் ஒன்றுதானே வராக அவதாரம். சிறீமுஷ்ணம் என்கிற இடம். சிதம்பரத்திற்குப் பக்கத்தில் திருமுட்டம் என்ற இடம் இருக்கிறது. அங்கு பன்றியைக் கடவுளாகவே வைத்துக் கும்பிடுகிறான்.

இன்னொரு பக்கம் பன்றிக்காய்ச்சல்

இன்னொரு பக்கம் பன்றிக் காய்ச்சலுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கின்றோம் (கைதட்டல்). தந்தை பெரியார் அவர்கள்தான் சொன்னார் கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்று அது யாரையும் வைவதற்கு அல்ல. புண்படுத்துவதற்கு அல்ல. நான் சொல்லுகிறேன் இந்தக் கூட்டமோ, அல்லது எங்களுடைய பிரச்சாரமோ மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும் என்பதற்காக. எங்களுக்கு யாரும் எதிரிகள் அல்லர். நாங்கள் யாரையும் எதிரிகளாக நினைப்பவர்கள் அல்லர்.

எல்லோரையும் மனிதர்களாக ஆக்க வேண்டும் என்று பாடுபடுகின்ற இயக்கம், திராவிடர் கழகம். சுயமரியாதை இயக்கம் (கைதட்டல்). எங்களைப் பலபேர் தவறாகப் புரிந்துகொள்ளுகிறார்கள். மனதைப் புண்படுத்துகிறார்களே என்று சொல்லுகின்றார்கள். இருப்பதை வைத்துத்தானே உங்களைத் திருத்த வேண்டும்?

அறுவை சிகிச்சை செய்யாமல்...

நோய் இருக்கிறது; அதுவும் புரையோடிப் போய் இருக்கிறது. புரையோடிப் போன அந்த நோயைத் தீர்க்க அறுவை சிகிச்சை செய்துதானே ஆக வேண்டும்? அறுவை சிகிச்சை செய்யும் பொழுது கத்தியை வைக்காமல் எப்படி அறுவை சிகிச்சை செய்ய முடியும்? அறுவை சிகிச்சை செய்கிற மருத்துவருக்கு நோயாளி மீது ஏதாவது கோபமா? இல்லை.

மாறாக, நோயாளியைக் காப்பாற்ற வேண்டும் என்பது அவர்களுக்கு எவ்வளவு கவலையோ அது போல என்னுடைய சகோதரர்கள். அவர்கள் இந்து முன்னணியில் இருக்கலாம். அவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சார்ந்தவர்களாக இருக்கலாம்.

திராவிடர்கள்தானே அவர்கள்? பார்ப்பனர்களைத் தவிர. ஆனால், எங்களுடைய சகோதரர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்கள் எவ்வளவு பெரிய கடவுள் வழிபாட்டாளர்களாக இருந்தாலும் அவர்களைத் திருத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உண்டு. காரணம் இந்த நாட்டு இந்து மதம் அவர்களையும் சூத்திரர்கள் என்று சொல்லுகிறது. சூத்திரர்கள் என்றால் பாரத ரத்னா பட்டமல்ல. சூத்திரன் என்று சொன்னால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன். தேவடியாள் மகன் என்று எழுதி வைத்திருக்கின்றான். இன்னமும் இது நமது அரசியல் சட்டத்தில் இருக்கிறது.

--------------------தொடரும்........ “விடுதலை” 22-9-2010

**************************************************************************

கருவறையில் தேவநாதன் செயலுக்கு கடவுள் இருந்திருந்தால் தண்டித்திருக்க வேண்டாமா?
திருவல்லிக்கேணி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி


கடவுள் பக்தியினால் ஒழுக்கம் வளரவில்லை; அதற்குப் பதிலாக தேவநாதன்களால் ஒழுக்கக்கேடுதானே வளர்ந்திருக்கிறது. கடவுள் இருந்திருந்தால் தண்டித்திருப்பானா? இல்லையா? என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

சென்னை திருவல்லிக்கேணியில் 18.9.2010 அன்று நடைபெற்ற அய்யா பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இந்து சட்டத்தில் ஜாதி முறை இருக்கிறது

இந்துலா என்கிற இந்து சட்டத்தில் ஜாதி முறை ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. வருணாசிரம தர்மம் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் 18 இடங்களில் ஜாதி இருக்கிறது.

உலகத்தில் எங்குமில்லாத பிறவிக் கொடுமை இந்த நாட்டில்தான் இருக்கிறது. ஜாதி முறையை யார் உண்டாக்கியது?

மனிதன் உண்டாக்கினான் என்றால், ரொம்ப நாளைக்கு முன்னாலேயே அதை ஒழிப்பதற்குத் தயாராக இருப்பார்கள்.

ஜாதியை உண்டாக்கிய ஆரியம் வஞ்சகமாக என்ன செய்தது என்றால், ஜாதியை நீயும் நானும் உண்டாக்கவில்லை; கடவுள்தான் உண்டாக்கினார் என்று சொல்லிவிட்டது.

பிரம்மா முகத்திலிருந்து பிறந்தவர்களாம்!

அந்த பிரம்மா ஆன கடவுள் உருவாக்கினார். அந்த பிரம்மா ஆனவர் இந்த உலகத்தைக் காப் பாற்றுவதற்காக தன்முகம், தோள், தொடை, பாதம் இவைகளிலிருந்து உண்டான, பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்று பிரித்திருக்கிறார் என்று சொல்லி விட்டார்கள். இது மனு தர்மத்தில் இருக்கிறது.

அந்த நான்கு ஜாதிகள், நான்காயிரம் ஜாதிகளாக ஆகியிருக்கின்றன கீழ் ஜாதிக்காரர்கள் படிக்கக் கூடாது. சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் அறிவைக்கொடுக்கலாகாது.

80 ஆண்டுகளுக்கு முன்னாலே தமிழன் நிலை

இந்த இயக்கம் தோன்றுவதற்கு முன்னாலே-80 ஆண்டுகளுக்கு முன்னாலே தமிழன் படித்தி ருந்தானா? தமிழர்களுக்குப் படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்ததா? ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு வாய்ப்பு இருந்ததா? ஏன் இல்லை? அப்படியானால், தமிழ னுக்கு அறிவு இல்லையா? அன்றைக்கும் ஆறறிவு இருந்தது; இன்றைக்கும் ஆறறிவு இருக்கிறது.

ஆனால், அந்த அறிவை சாணை தீட்டிக் கொள்ளக் கூடிய அறிவு, வாய்ப்பு, மறுக்கப்பட்டது. யாருக்கும் இடமே கிடையாதே. தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் உள்ளே நுழையக்கூடாதே. நாடகம் பார்க்க பஞ்சமனுக்கு இடமில்லை

1800ஆம் ஆண்டு இறுதியில் சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் அபிராமசுந்தரி நாடகம் போடுகின்றான். பஞ்சமனுக்கு இடம் இல்லை என்று நாடக விளம்பரத்தில் போடுகின்றான்.

என்னய்யா? பஞ்சமன் என்றால் அது மனிதன் இல்லையா? நம்மாளுக்கு நாடகம் பார்க்கக்கூட உரிமை இல்லை. அப்படியானால் என்ன அர்த்தம்? பொருளாதார வசதி அவனுக்குக் கிடைத்தால் மட்டும் போதாது. சமுதாய இழிவு என்று சொல்லி அந்த உரிமை மறுக்கப்பட்டது.

பெரியார் கொதித்தெழுந்தார்

இதைக் கண்டு தந்தை பெரியார் கொதித்து எழுந்தார். எரிமலையாய் வெடித்தவர்தான் தந்தை பெரியார். பெரியார் அவர்கள் இல்லையானால், நம்முடைய தோளிலே துண்டு இருக்குமா?

நாம் ஒவ்வொருவரும் பெரியாருக்குக் கடமைப் பட்டிருக்கின்றோம். நீங்கள் விபூதி போட்டிருக்க லாம். நாமம் போட்டிருக்கலாம். பெரியாரின் கட வுள் மறுப்பை ஒப்புக் கொள்ளாதவராக இருக்க லாம். ஆனால், பெரியார் அவர்களுடைய உழைப்பு இல்லையானால் முத்தன் மகன் முனியன் அமெரிக் காவிலே கம்ப்யூட்டர் எஞ்சினீயராக இன்றைக்கு இருப்பானா? (கைதட்டல்)

பெரியார் பிறந்தநாள் என்றால்.....!

பெரியார் இயக்கத்தைப் பற்றி ரொம்ப பேருக்கு வரலாறு தெரியாது. பெரியார் பிறந்தநாள் என்றால், இந்த வரலாறை சொல்வதுதான். பெரியாருடைய தொண்டு என்பது காலம்காலமாக ஏற்படுகின்ற மாமருந்து. அரசாங்கத்தில் கணக்கெடுத்தார்கள். காலாவதி மருந்து எங்கெங்கிருக்கிறது என்று கண்டு பிடித்தார்கள். அதன் பிறகு காலாவதியான பொருள் எங்கெங்கு இருக்கிறது என்று கணக் கெடுத்தார்கள். இதை எல்லாம் காவல் துறையினர், மற்றும் அதிகாரிகள் எல்லாம் உள்ளே போய் கண்டுபிடித்து வழக்குப் போட்டார்கள்.

காலாவதியான கருத்துகளை வைக்கலாமோ?

காலாவதி மருந்தை சாப்பிட்டால் எவ்வளவு பெரிய கேடு ஏற்படும் என்று நினைத்து அதை தூக்கி எறிகிறார்கள் அல்லவா?

இதைத்தான் தந்தை பெரியார் செய்தார். காலா வதியான கருத்துகள் நம்முடைய மக்களைக் கெடுத்துக்கொண்டிருக்கிறது (கைதட்டல்). ஆகவே, காலாவதியான மருந்து-அது உடலை மட்டும் தான் கெடுக்கும். ஆனால் காலாவதியான கருத்து இருக் கிறதே, அது மூளையைக் கெடுக்கும். மூளைக் காய்ச்சல் வந்தால் மனிதனுக்கு எல்லா உறுப்பு களும் கெட்டுப்போய்விடும்.

பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார்

எனவே, பெரியார் அவர்கள் அறிவைப் பற்றிக் கவலைப்பட்ட காரணத்தால்தான் அவரை பகுத் தறிவுப் பகலவன் என்று உலகம் கொண்டா டியது. (கைதட்டல்). எனவே தந்தை பெரியார் அவர்களு டைய தொண்டர்களாகிய எங்களுக்கு யாரையும் புண்படுத்துவது எங்களுடைய நோக்கமல்ல. பெரியார் வெற்றி பெற்றிருக்கிறார். ஒவ்வொரு கட்டத்திலும். ஆனால், இந்தச் சமுதாயத்தில் இருக்கிற மூடநம்பிக்கையின் தாக்கம் இருக்கிறது பாருங்கள், அது புதுப்புது வடிவம் எடுக்கிறது அவ்வப்பொழுது.

பெரியார் காலத்தில் இல்லாத சவால்-இப்பொழுது!

பெரியார் காலத்தில் இல்லாத ஒரு மிகப்பெரிய சவால் பெரியார் தொண்டர்களாகிய எங்கள் காலத்தில் இருக்கிறது. அந்தக் கொடுமைகளை நாங்கள் சந்தித்தாக வேண்டும். சந்தித்துக் கொண் டிருக்கின்றோம். பெரியார் காலத்தில் டெக்னாலஜி- தொழில் நுட்பம் அவ்வளவு வளரவில்லை. நான் மேஜை மீது ஏறி 9 வயதிலிருந்து பேசிக்கொண்டி ருக்கின்றேன். ஒன்றுக்கு முப்பத்திரண்டு அளவில் நோட்டீஸ் அடிப்பார்கள். இந்த மாதிரி விளம்பரம் எல்லாம் அன்றைக்குக் கிடையாது. அய்யா போன்றவர்கள், அண்ணா போன்றவர்கள் கூட்டத்திற்கு வந்தால், அந்தக் கூட்டத்திற்கு மிகப்பெரிய அறிவிப்பு வரும். நோட்டீசில் கூட்டத்தில் ஒலிபெருக்கி உண்டு.

ஒலிபெருக்கி உண்டு இப்படி ஓர் அறிவிப்பு

ஒலிபெருக்கி உண்டு என்பது பெரிய அறிவிப்பு. அது சாதாரண அறிவிப்பு அல்ல. ஏதோ மிகப் பெரிய அளவுக்கு மோட்ச சாம்ராஜ்யத்தில் முன் சீட்டு பிடிப்பதுபோல வைதிகர்கள் நினைக்கிற மாதிரி நோட்டீஸ் போடுவர்கள். யார் கூட்டத்திற்கு? பெரியார் கூட்டத்திற்கே இப்படித் தான் போடு வார்கள். அண்ணா கூட்டத்திற்கும் இப்படித்தான்.

நாங்கள்,கலைஞர் எல்லாம் கிராமம் கிராம மாகப் பிரச்சாரத்திற்குப் போனவர்கள். இன்றைக்கு யாராவது துண்டறிக்கையில் கூட்டத்தில் ஒலி பெருக்கி உண்டு என்று போட்டால், அவர்களை எவ்வளவு கேலி செய்வார்கள்? இன்றைக்கு இந்த டெக்னாலஜி மின்னணுவியல் என்பது வளர்ந்தி ருக்கின்றது.

தந்தைபெரியார் இனி வரும் உலகம் என்ற நூலில் சொல்லியிருக்கின்றார். அவருடைய ஒப்பற்ற சுய சிந்தனையின் விளைவாகச் சொன்னார். இனி மேல் ஒவ்வொருவருடைய கையிலேயும் தொலைப்பேசி இருக்கும். இதை 70 ஆண்டுகளுக்கு முன்னாலே, கல் லூரிக்கே போகாத தந்தைபெரியார் சொன்னார். (கைதட்டல்). பள்ளிக்கூடத்திற்கு மழைக்குக்கூட ஒதுங்காத பெரியார் சொன்னார்.

அது மட்டுமல்ல; அவர் சொன்ன கருத்து இருக் கிறது பாருங்கள். ஒவ்வொருவருடைய தலையிலும் முகம் பார்த்து பேசக்கூடிய சிறிய கருவி இருக்கும். பள்ளிக் கூடத்திற்கு பாடம் நடத்த பலஆசிரியர்கள் தேவை யில்லை.ஒரு இடத்தில் வகுப்பு வைத்து, ஒரு ஆசிரியர் வகுப்பெடுத்தார் என்றால், எல்லா இடத்திற்கும் அது பரவும் என்று சொன்னார்.

வீடியோ கான்ஃபரன்சிங்-காவல் நீட்டிப்பு

வீடியோ கான்பரன் சிங் மூலம் இப்பொழுது நடைபெறுகிறது. நமது காவல்துறையே இப் பொழுது என்ன செய்கிறது? சிறைச் சாலையில் இருக்கிற கைதியை மீண்டும் ரிமாண்ட் பண்ண வேண்டும் என்று நினைத்தால், நீதிபதி நீதிமன்றத்தி லேயே இருந்து ரிமாண்ட் பண்ண உத்தரவு போடலாம் இன்றைக்கு. காரணம், கைதியை வெளியே அழைத்துப் போய் சிறைக்குள் மீண்டும் கொண்டு வந்து அடைப்பதற்கு அதிகப்படியான சிரமம் எடுக்க வேண்டியிருக்கிறது.

தீவிரவாதிகள் தப்பித்துவிடுவார்கள்

பயங்கரவாதிகள் எங்கே தப்பித்து விடுவார்களோ என்ற நிலை இருந்த காரணத்தால்தான் இன்றைக்கு வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாகவே கைதியை ரிமாண்ட் செய்கிறார்கள்.

ஒரு காலகட்டத்தில் நீதிபதிகளே சிறைச் சாலைக்கு வந்து கைதியிடம் கேள்வி கேட்டு, காவல் நீட்டிப்பை அதிகப்படுத்திவிட்டுப் போனார்கள். இன்றைக்கு அந்த நிலை மாறி இருக்கிறது.

வீடியோ கான்ஃபரன்சிங் என்பது சத்யசாயிபாபா கையைத் தூக்கியதால் பொத்தென்று விழுந்ததா? அறிவியல் கண்டுபிடிப்புதான் வீடியோ கான் பரன்சிங் என்பது.

அக்னியை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தால்?

திருமண விழாவில் முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியாக, அக்னி சாட்சியாக என்று சொல்லுவார் கள். அக்னி சாட்சியாக என்று நீதிமன்றத்தில் சொன் னால் ஃபயர் சர்வீசும் சேர்ந்து வரவேண்டும். (கைதட்டல்).

ஆகவே, எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும். எனவே, அக்னி சாட்சியாக என்றும் சொல்ல முடி யாது. இப்பொழுது உச்சநீதிமன்றத் தீர்ப்பிலேயே சொல்லிவிட்டார்கள்.

வீடியோ சாட்சியாக என்று சொல்லுவது ஏற் கப்படும். வீடியோ என்பதை யார் கண்டு பிடித்தது? அறிவியல் வளர்ச்சி. மேல்நாடுகளிலே சிந்தித்துச், சிந்தித்து மாறுதல்களை உண்டாக்கி, ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்திகள் கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

கம்ப்யூட்டரையே கெடுக்கின்றான்

பெரியார் அவர்களுடைய கருத்துகள் எவ்வளவு அறிவியல் பூர்வமானது; அவருடைய சிந்தனை என் பது எவ்வளவு உயர்ந்தது என்பதைக் காட்டுவதற்கு, ஒவ்வொரு நாளும் அறிவியல் வளர்ந்து கொண்டி ருக்கின்றது.

கம்ப்யூட்டருக்கு குங்குமம், சந்தனம், விபூதி வைத்து அதனுடைய தொழில்நுட்பத்திறனே பாழ் படக்கூடிய அளவுக்கு செய்கிறார்கள். கம்யூட்டரிலே தூசி, தும்பு படக்கூடாது என்பதற்காகத்தான் குளிர்சாதன அறையில் வைக்கிறார்கள். ஆனால் இவர்களோ, அதற்கு குங்குமம், விபூதி வைக்கிறார்கள்.

நம்மாள் கையிலே கம்ப்யூட்டரைக் கொடுத் தால் கணபதி உருவம் வரைகிறான். இப்பொழுது செல்ஃபோன் வந்திருக்கிறது. எல்லா இடத்திலே யும் பாத்தீர்களேயானால் எஸ்.எம்.எஸ். இல்லாத இடமே இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறது.

செல்ஃபோனால் நன்மையும்-தீமையும்

செல்ஃபோனினாலே எவ்வளவு நன்மை ஏற்பட்டிருக்கிறதோ அவ்வளவு கெடுதியும் இருக் கிறது. இளைஞர்களைக் கெடுக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொன்றிற்கும் மறுபுறம் இருக் கிறது. அது தொலைக்காட்சியாக இருந்தாலும், வானொலியாக இருந்தாலும், மறுபுறம் அதனு டைய கெடுதியும் இருக்கிறது. அதைப் பயன்படுத் துகிற முறையைப் பொறுத்தது. நன்மைகள் எவ் வளவு இருக்கிறதோ அந்த அளவுக்குத் தீமைகளும் இருக்கின்றன. கத்தியைப் பழம் அறுப்பதற்கும் பயன் படுத்தலாம். அது நன்மை. கத்தியை இன் னொருவர் மீது குத்துவதற்குப் பயன் படுத்தினால் அது தீமை. ஆகவே அந்த மாதிரி மூடநம்பிக்கை கள், அறிவியலுக்கு மாறான கருத்துகளை, அறி வியல் ரீதியாக இன்றைக்குப் பரப்புகின்ற மிகப் பெரிய கொடுமை இந்த நாட்டில் வந்துவிட்டது.

தொலைக்காட்சியால்...

தொலைக்காட்சியை எடுத்துக்கொள்ளுங்கள். முன்பு ஒரு ஊரில் மட்டும் நடைபெற்ற சம்பவம். ஆனால், இன்றைக்கு சாராய சாமியாரை எல்லா ஊர்களிலும் காட்டுகிறார்கள். இங்கே நம்மாள்கள் சொன்னார்கள்-பிள்ளையார் ஊர்வலத்தில் நித்யானந்தா வாழ்க! என்று ஒலி முழக்கம் போட்டுக்கொண்டு சென்றார்கள் என்று சொன்னார்கள். அதிலிருந்தே அவர்களுடைய நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளலாம். நமது பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் இங்கே பேசும்பொழுது சொன்னார். கடவுள் இல்லை என்பதற்கு தேவநாதன் போதுமே!

ஒழுக்கத்தை வளர்ப்பதற்காகவாவது கடவுள், கடவுள் பக்தி இருக்க வேண்டாம்களா? ஒரு பயத்திற்காகவாவது இருக்க வேண்டாமா? என்று எங்களைப் பார்த்துக் கேட்பார்கள்.

கடவுள் இருக்கிறது என்று சொன்னால்தானே ஒரு பயமாவது இருக்கும் அவனுக்கு. தவறு பண் ணாமலாவது இருப்பானே என்று சொன்னார்கள்.

இன்றைக்கு அந்த நிலை மாறிப்போய்விட்டது. காஞ்சிபுரம் கோவில் பார்ப்பன அர்ச்சகன் தேவ நாதன்-அவனைவிட கடவுள் இல்லை என்பதை அதிகமாகப் பிரகடனப்படுத்திய மேதை உலகில் வேறு யாரும் இல்லை. கோவில் கருவறைக்குப் பின்னாலேயே எல்லாப் பெண்களையும் வரச் சொல்லியிருக்கின்றான். மிகக் கேவலமாக நடந்துகொண்டிருக்கின்றான். இதற்குப் பிறகும் நம்மாள் அந்தக் கோவிலுக் குப் போய் கும்பிடுகின்றான். அந்தக் கடவுளுக்கா வது சக்தி இருந்தால், அவனை ஏதாவது செய்திருக்க வேண்டும். ஒன்றும் செய்யவில்லையே.

அந்த தேவநாதன் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டு ஹீரோ மாதிரி வருகிறான். அது மட்டுமல்ல; அந்தக் கோவில் சம்பந்தப்பட்ட நண்பரே என்னிடத்தில் சொன்னார், என்ன கொடுமைங்க? அந்த தேவநாதன், அப்பா அர்ச்சக ராக இருந்தார். அந்த வைதீகருக்காக இவரை நாங்கள் போட்டோம். அந்த தேவநாதன் 80 லட்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் என்று சொன்னார். எப்படிங்க 80 லட்சம் ரூபாய் சம்பாதித்தான் என்று கேட்டோம்.

பெண்களை பிளாக்மெயில் பண்ணி பணம் வாங்கினானா? என்று கேட்டோம். இல்லிங்க, அவன் செய்தது சாதாரண காரியமல்ல. அவன் செல்ஃபோன் மூலமாக அசிங்கமான காட்சிகளை அவனே படம் எடுத்து, அந்தப் படங்களை சி.டி. யாகப் போட்டு, வளைகுடா போன்ற வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் சம்பாதித்து விட்டான் என்று சொன்னார். இது எவ்வளவு பெரிய ஒழுக்கக்கேடு? எவ்வளவு பெரிய சங்கடம். தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்-கடவுளை மற; மனிதனை நினை என்று.

கடவுள் பக்தி ஒழுக்கத்தைப் பரப்பியதா? ஆத்திகர்கனின் கடவுள் நம்பிக்கை ஒழுக்கத் தைப் பரப்பியதா? மனிதனை வாழ வைத்ததா? பல குடும்பங்களை கெடவைத்ததா? இல்லையா? இன்றைக்குப் பெரியார் சொன்ன கருத்துகளுக்கு அறிவியல் ரீதியான ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது.

------------------தொடரும்.....”விடுதலை” 23-9-2010

23.9.10

ஓம் என்பதின் பொருள் என்ன?


ஓம்

இந்து மதத்தின் சமாச் சாரங்கள் அத்தனையும் ஆபாசத்தின் ஊற்றும், பிறப்புமாகும். ஓம் என்பதும் அந்த அடிப்படையிலேயே அமைந்த ஒன்றாகும்.

மறைமலை அடிகளார் எழுதிய சைவ சித்தாந்த ஞானபோதகத்தில் சைவ சித்தாந்த நூலாகிய சிவஞான சித்தியாரின் பாட்டை எடுத்துக் காட்டிக் கூறியுள்ளார்.

ஆண் - பெண் குறி சேர்க்கையினாலேயே இன்பமும், உயிர்களின் தோற்றமும் நிகழ்வதால் ஆண் - பெண் குறி சேர்க்கையே தொன்று தொட்டு சிவலிங்க வடிவாக வணங்கப் பெறலாயிற்று; நீண்டு குவிந்த கல் வடிவு ஆண் குறியின் அடையாளமாகவும், அக்கல்லைச் சூழ்ந்த வட்டகல் வடிவு பெண் குறியின் அடையாளமாகவும் காணப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்து சமயத்தின் ஒரு கிளையாகிய தாந்ராவின்படி ஓம் என்ற பொருளின் பதத்திற்கு விளக்கமும், ஆண் - பெண் குறியின் சேர்கையே என்பதாக ஒப்பிடப் பட்டுள்ளது.

நீதிமன்றத்திலேயே இந்த உண்மைகள் ஒப்புக்கொள்ளப்பட்டன என்றால், சிலருக்கு ஆச்சரியமாகவும் இருக்கக் கூடும்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் திராவிடர் கழகச் செயலாளர் தோழர் சுப்பிரமணியம் ஓம் என்பது குறித்து தட்டியில் எழுதி, பொதுமக்களின் பார்வைக் கும், சிந்தனைக்குமாக வைத்திருந்தார். (5.6.1990). ஆபாசமானது என்றும், மத நம்பிக்கையாளரின் மனதைப் புண்படுத்துகிறது என்றும் கூறி அவ்வூர் காவல்துறை வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது (இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 298).

பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவரும், சீரிய பகுத்தறிவாளருமான பிரபல வழக்கறிஞர் மானமிகு வை. பாண்டிவளவன் அவர்கள், கழகத் தோழர் சுப்பிரமணியம் அவர்களுக்காக வாதாடினார்.

அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் அ. தேவசகாயம் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதியரசர் வழக்கை தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் எதைப் பேசினாலும் அல்லது எழுதி னாலும் ஆதாரத்தின் வலு மிக அதிகமாகவேயிருக்கும். இராமாயணத்தைப் பற்றி தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களில் பேசும்போது கூட, பார்ப்பன ஆசிரியர்களால் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களை மேசையில் அடுக்கி வைத்தே அதிலிருந்து பக்கம் உள்பட எடுத்துக் கூறிப் படித்துக் காட்டுவார்.

அடுத்தடுத்த பதிப்புகளில் தந்தை பெரியார் எடுத்துக் காட்டிய பகுதிகளை சாமர்த் தியமாக நீக்கிவிட்டு வெளியிட்டதும்கூட உண்டு. அப்படி நீக்கப்பட்ட பகுதிகளையும், பழைய பதிப்பிலிருந்து ஒப்பிட்டு எடுத்துக்காட்டி, எதிரிகளின் அறிவு நாணயக் கேட்டை அம்பலப்படுத்துவார் பெரியார்.

அருவருப்பு, ஆபாசம் இவை இரண்டுமே இந்து மதத்தின் இரு விழிகள் - இரு கரங்கள் என்பதைப் பக்தர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்க.

ஓம் என்ற இந்த ஆபாச வார்த்தை பொறித்த சங்கிலியைக் கழுத்தில் தொங்க விட்டுக் கொள்வதும், கோவில்களில் ஓம் என்பதை வண்ண விளக்குகளால் ஒளிரச் செய்வதும் என்னே மானக்கேடு!

-------------- மயிலாடன் அவர்கள் 23-9-2010 “விடுதலை “யில் எழுதிய கட்டுரை