Search This Blog

25.8.10

ஜாதிவாரி கணக்கெடுப்பதற்கு பயோ மெட்ரிக் முறை என்பது தேவையற்றது

ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு பயோ மெட்ரிக் முறை காலங்கடத்தும் தந்திரமேயாகும்
இப்பொழுதுள்ள படிவத்தில் ஒரே ஒரு வரியைச் சேர்த்தாலே போதுமானது
முதலமைச்சர் கலைஞர் இதுகுறித்து
பிரதமருக்கும், சோனியாவுக்கும் எழுதவேண்டும்

ஜாதிவாரி கணக்கெடுப்பதற்கு பயோ மெட்ரிக் முறை என்பது தேவையற்றது; இது காலங்கடத்தும் வீண் முயற்சியாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா ஆகியோருக்கு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதவேண்டும்; அல்லது தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் களைச் சந்திக்கச் செய்யவேண்டும் என்றும் அறிக்கையில் திராவிடர் கழகத் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அறிக்கை வருமாறு:

மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரியான அம்சம் இடம்பெற்றால்தான், சமூகநீதி இட ஒதுக்கீடு குறிப்பாக மக்கள் தொகையில் மிகப்பெரும் எண்ணிக் கையைக் கொண்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் தொகை, துல்லியமாகக் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்பதால், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற கட்சி பேதமின்றி ஒரு குரல் கொடுத்து, கருத்தொற்றுமை ஏற்பட்டதை மத்திய ஆட்சியாளர் ஏற்றுக்கொண்டுள்ளது மிகவும் பாராட்டி நன்றி செலுத்தவேண்டிய ஒன்றாகும்.

கட்சி வேறுபாடின்றி ஜாதிவாரி கணக்கு, மக்கள் தொகை கணக்கெடுப்பில் இடம்பெற வேண்டியது அவசியம் என்று கூறப்பட்டாலும், இன்னமும் இதுகுறித்து குறுக்குசால் ஓட்டி, கைக்கெட்டியதை வாய்க்கெட்டாமல் செய்யும் சக்திகள் ஓர் அணியாகத் திரளும் பிற்போக்காளர்கள்; இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களாகிய அவர்கள் வசம் சிக்கியுள்ள ஆயுதங்களைப் பயன்படுத்தி முயற்சிக்கின்றனர்.

சமூகநீதிப் போராளிகள் அவர்களை அடையாளம் காணத் தவறக்கூடாது; அத்துடன் அவர்களது சூழ்ச்சியை முறியடிக்கும் வண்ணம் இறுதிவரை விழிப்புடனும், ஒற்றுமையுடனும் செயல்படவேண்டும்.

மூன்று முட்டுக்கட்டைகள்

1. அதிகாரிகளான மேல்ஜாதிவர்க்கத்தினர்

2. அவர்களைக் கொண்ட ஊடகங்கள் ஏடுகள் தொலைக்காட்சிகள்.

3. ஜாதியை நிலை நிறுத்திவிடுமே இந்த ஏற்பாடு என்று புரியாமல் குழம்பி, கொள்ளிக் கட்டையை எடுத்து தங்கள் தலையைத் தாங்களே சொரிந்துகொள்ளும் அப்பாவிகளான பாமரத்தன்மை வாய்ந்த மற்ற மக்கள்.

பயோ மெட்ரிக் முறை தேவையற்றது

மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்பது போன்று, இப்பிரச்சினையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு பயோ மெட்ரிக் (Bio Metric) என்ற முறையைக் கையாண்டால், அது இந்த யுகத்தில் எளிதில் முடியாது பல ஆண்டுகள் நீடிக்கும் அபாயம் உண்டு.

அது முற்றிலும் தேவையற்றது. இதைத்தான் நேற்று (12.8.2010) நாடாளுமன்றத்தில் முலாயம்சிங், லாலு பிரசாத், சரத்யாதவ் போன்ற முக்கிய தலைவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆதரவாளர்களும் கூட இதே கருத்தைத்தான் எதிரொலித்துள்ளார்கள்!

இப்போதுள்ள படிவங்களில் ஜாதி பிற்படுத்தப் பட்டவர் என்று அதில் துணைப் பிரிவுபோல ஜாதி ஒரே வரியில் வீட்டில் உள்ளவர்கள் எண்ணிக்கையைக் கேட்டு எழுதும்போதே குறித்துவிடலாமே!

அங்கமச்ச அடையாளங்கள் எல்லாம் தேவையற்றவை!

இதுபற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறிய பதிலுரை மிகவும் அதிருப்தி அளிப்பதாகும்.

எடுத்த கொள்கை முடிவினை நடைமுறை சாத்திய மற்றதாகவும் ஆக்கி விடுவதாக அமைந்துள்ளது.

அவரது இந்த வாதம் ஏற்கத்தக்கதல்ல.

ஒரே ஒரு வரி சேர்த்தால் போதுமே!

1. சென்சஸ் அட்டவணை, அதற்குரிய வழிகாட்டும் முறைகள் 2011 பிப்ரவரி மக்கள் தொகையில், எளிதாகச் செய்யலாம்; இன்னமும் படிவங்களை அச்சடிக்கத் தொடங்கவில்லை.

ஒரே ஒருவரி சேர்ப்பதால் குடி முழுகிப் போய்விடாது. எளிதில் லகுவாக ஜாதியைப் பதிவு செய்ய முடியுமே!

கூடுதலாக சில கலங்கள் பத்திகள்தானே அந்த வினாப் பட்டியலில் சேர்க்கப்படவேண்டும்?

2. முன்னாள் ரிஜிஸ்டிரார் ஜெனரலும், சென்சஸ் கமிஷனர் ஆஃப் இண்டியாவும் ஆன டாக்டர் விஜயனுன்னி (Dr. M. Vijayanunni) அவர்கள் மிகவும் தெளிவாக 23.7.2010இல் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய மாநாட்டில் அளித்த ஒரு ஆய்வுரையில் குறிப்பிட்ட கருத்துகள் கீழே தரப்படுகின்றன:

ஒரு வெளியார் நிறுவனம் ஒளிப்படம் எடுப்பது, விரல்ரேகை பதிவு செய்வது, அய்ரிஸ் பிரின்ட் எடுப்பது போன்ற செயல்களை மேற்கொண்டிருக்கும் பயோமெட்ரிக் புள்ளிவிவரத் தொகுப்பு நேரத்தில் சென்சஸ் அமைப்பின் நெருங்கிய மேற்பார்வையும் பங்கேற்பும் இருக்காது. அந்த நேரத்தில் ஜாதி பற்றிய புள்ளிவிவரம் தொகுக்கப் பட்டால், அது ஒரு சாதாரணமான பயன் ஏதுமில்லா செயலாகவே தரம் தாழ்ந்துபோகும். நம்பத்தகுந்த முழுமையான ஜாதிவாரியான புள்ளிவிவரங்களாக அது அமையாது. மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் இவ்வாறு பயோமெட்ரிக் புள்ளி விவரங்களைத் தொகுப்பது என்பது இப்போதுதான் முதன் முறையாக மேற்கொள்ளப்படுவதால், அது எந்த அளவுக்கு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட இயலும் என்பதை எவரும் அறுதியிட்டுக் கூறமுடியாது. அவ்வாறு பயோமெட்ரிக் புள்ளிவிவரத் தொகுப்புடன் சேர்த்து ஜாதிவாரி மக்கள் தொகைப் புள்ளிவிவரக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால், ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பது என்னும் நோக்கமே தோல்வி அடைந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் அமலில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீடுபற்றிய வழக்கில், உச்சநீதிமன்றம் ஓராண்டு அவகாசம் தந்துள்ளது. அதற்குள் நாம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட (மிகவும் பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்கள் இதில் அடக்கம்) கணக்கெடுப்பு முடியவேண்டும். அதுபற்றி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் தொகுத்து, எத்தனை சதவிகித இட ஒதுக்கீடுகள் நியாயம் உள்ளதுபற்றி அறிவிக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதால்,

மற்ற மாநிலங்களைவிட நமது மாநிலத்திற்கு இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசரமும், அவசியமும் மிகவும் அதிகமாகும்.

முதலமைச்சருக்கு வேண்டுகோள்

எனவே, நமது முதல்வர் கலைஞர் அவர்கள் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி. சோனியா காந்தி அவர்களுக்கும் கடிதம் எழுதி, ஜாதிவாரி கணக்கெடுப்பில் பயோ மெட்ரிக் முறை இடம் பெறாமல், எளிமையான வகையில் உடனடியாக ஒரு வரி கூடுதல் கலம் மூலமே தகவல் திரட்டப்படவேண்டும் என்பதை வற்புறுத்திட வேண்டும். முடிந்தால் நமது தமிழ்நாட்டு எம்.பி.,க்கள் அனைவருமோ அல்லது குறைந்தபட்சம் கூட்டணிக் கட்சி எம்.பி.,க்களோ சேர்ந்து சென்றும், பிரதமரைப் பார்த்து வலியுறுத்தி விடலாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.


தலைவர்,
திராவிடர் கழகம்.

சென்னை
13.8.2010

24.8.10

பேய் உண்டா? ஆவி என்பதும் மெய்யா?


செக்குப்பட்டி

தொலைக்காட்சிப் பெட்டிகள் எந்த ஆவியின் சக்தியாலோ, ஆண்டவனின் அருளாலோ, சாய்பாபாக்களின் கை அசைப்பாலோ ஆகாயத்தில் இருந்து வந்து குதித்தவை அல்ல - அது அறிவியலின் மகத்தான கண்டுபிடிப்பு.

அறிவியல் கண்டுபிடித்த அந்தக் குழந்தையை மூட வியல் கத்தி கொண்டு சிதைக்கும் கொலைகாரத் தன்மையை என்னவென்று சொல்வது! விஞ்ஞானக் கண்டுபிடிப்பை அஞ்ஞான சாக்கடையில் குளிப்பாட்டு கிறார்களே என்ற வேதனை.

இரவு பத்து மணிக்கு மேல் நிஜம் என்ற பெயரிலும், குற்றம் என்ற தலைப்பிலும், நடந்தது என்ன? என்று சொல்லிக் கொண்டும் தொலைக் காட்சிகளில், குறிப்பாகக் கிராமப் பகுதிகளில் தலை விரித்தாடும் மூடநம்பிக்கைக் குப்பைகளை பூதாகரப்படுத்தி ஒளிபரப்புவதைக் காணச் சகிக்கவில்லை.

நாமக்கல் மாவட்டம் செக்குப்பட்டி கிராமமாம். வாகை மரத்தில் பேய் குடி கொண்டு இருக்கிறதாம். அந்தப் பேயே அப்படிச் சொன்னதாம். ஒரு வருடத்துக்கு முன் ரயிலில் அடிபட்ட ஒருவரின் ஆவிதான் அந்த ஊரில் சேட்டை செய்கிறதாம். அந்த மரத்தின் வழியாகச் சென்ற ஒரு பெண் ஆவி மிரட் டலால் சாமி ஆடினாராம். அடேயப்பா, செட் அப் பண்ணி ஒளிப்பதிவு செய்தது போல் இருக்கிறது.

ஊடகப் பேரவையில் உரையாற்றிய பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் ஒரு தகவலைச் சொன்னார். அது பெரும் அதிர்ச்சிக்கு உரியது. பேய் நடமாடியதாகக் கூறப்பட்ட ஒரு ஊருக்கு திராவிட இயக்கத் தமிழர் பேர வைத் தோழர்கள் சிலர் சென்றபோது அந்த ஊர்க்காரர்கள் சொன்னார்களாம். நீங்களும் டி.வி.க்காரர்கள் போல ஏமாற்ற வந்திருக்கிறீர்களா? என்று கேட்டனராம். சென்ற தோழர்கள் ஆர்வத்தோடு விசாரித்த போது, ஓர் உண்மை வெளிப்பட்டது. குறிப்பிட்ட தொலைக் காட்சி யின் பெயரைச் சொல்லி உங்கள் ஊரைப் பற்றி டி.வி.யில் வரவேண்டுமானால், நாங்கள் சொல்லுவது போலச் சொல்லுங்கள் என்று கூறி ஒத்திகை நடத்தி பதிவு செய்து அதன் பின்னர் அதனை ஒளிபரப்பினார்களாம். இதை விட வெட்கக்கேடு வேறு ஒன்று இருக்க முடியுமா?

குறிப்பிட்ட மரத்தில் பேய் இருக்கிறது என்று சொன்னால், உடனே திராவிடர் கழகத் தலைமை நிலையத்திற்குத் தெரிவியுங்கள். கோடரி கொண்டு அந்த மரத்தினை வெட்டித் தள்ள திராவிடர் கழக இளைஞர் பட்டாளம் தயாராக இருக்கிறது.

பேய் உண்டா? ஆவி என்பதும் மெய்யா என்பது பற்றி பிரபல மனநல நிபுணர் டாக்டர் ருத்ரன் (இவரும் டி.வி.யில் அடிக்கடி வரக் கூடியவர்தான்) என்ன கூறு கிறார்?

உலகில் ஆவி என்ற ஒன்றோ, பேய், பூதம், பிசாசு, பில்லி சூனியம் என்பதோ இல்லை. சில போலிகள் இந்தப் பொய் வியாபாரத்தைச் செய்கிறார்கள். வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டவர்களிடம் இதைச் சொல்லி பயமுறுத்தி அவர்களின் முட்டாள்தனத் தைப் பயன்படுத்தி ஏமாற்று கிறார்கள் என்று கூறினார். சொன்ன இடம் சன் தொலைக்காட்சியில் உங் களுக்காக நிகழ்ச்சியில். இவ்வளவுக்கும் டாக்டர் ருத்ரன் கருப்புச் சட்டைக்காரர் அல்லர் - ஆன்மிக வாதிதான்.

---------------- மயிலாடன் 24-8-2010 "விடுதலை” யில் எழுதிய கட்டுரை

************************************************************************************

பேய்-பிசாசா?

தொலைக்காட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு பேய் - பிசாசு - ஆவிக் கதை களை இறக்கைக் கட்டிப் பறக்கவிடும் நிலையில், கலைஞர் தொலைக்காட்சி யில் ரோஸ் மேடம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிதான் வித்தியாசமாக இருந்தது. சுடுகாட் டிற்குச் சென்று நிரூபிக்கிறேன் என்று சொன்ன மயிலாடுதுறை மந்திரவாதி பகுத்தறிவுவாதிகளின் சவாலை ஏற்று, இறுதியில் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

குமுதம் ரிப்போர்ட்டரில் (9.11.2003) ஒரு தகவல் வெளிவந்தது. மயிலாடு துறையையடுத்த எலந்தங்குடி கிராமத்தைப் பற்றியது அது. ஊரே கெட்ட குணம் புடுச்சு ஆட்டுது செத்துப்போன கருவக்காட்டு உஷாதான் இப்பப் பேயா வந்து தலைச்சன் பிள்ளைகளைக் காவு கேட்டுக் கிட்டு இருக்கா என்பதுதான் அந்தப் புரளி.

இதுகுறித்து நேரடி விசாரணையை (ரிப்போர்ட்) மேற்கொண்டு குமுதம் ரிப் போர்ட் கட்டுரை ஒன்றைத் தீட்டியிருந்தது. சிலரிடம் பேட்டி வாங்கியும் போட்டது.

பேய் பிடிச்ச பொண்ணுங்களுக்கு ரத்தம் என்றால் ரொம்பப் பிரியமாம். உயி ரோடிருக்கும் பேயைப் பிடித்து, அப்படியே அதன் கழுத்தைக் கடித்து, சூடாக ரத்தத்தைக் குடித்துவிடுவார்களாம். அதுபோல ஒரு பெண்ணு ரத்தம் குடிச்ச அடுத்த வினாடி செத்துப் போச்சு இப்படிப் பேய்க் கதைகள் பில்டப் கொடுத்து பரவ ஆரம்பித்துள்ளன என்றும் சிலர் வருத்தத்துடன் சொல்கின்றனர்.

கருவக்காட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், சூதாட்டக்காரர்கள் கிளப்பி விட்ட புரளி என்றும் சிலர் கூறினர். அதுதான் உண்மை என்று பட்டது என்று குமுதம் ரிப்போர்ட்டரும் கூறி முடித் துள்ளது.

உண்மையிலேயே பேய், பிசாசு உண்டா? இதுகுறித்து இங்கிலாந்து நாட்டுக்கார மனோதத்துவம் மற்றும் நரம்பியல் வல்லுநர் பிரைட்லைட் என்பவர் என்ன கூறுகிறார்?

பேய், பிசாசு இருப்பது பற்றி இவர், காந்தவியல் மின்புலம்மூலம் ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லை என்று உறுதி செய்துவிட்டு, அதை மக்களுக்கு உணர வைப்பதற்காக பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் தற்போது புழக்கத்தில் இல்லாத 800 வருட பழங்காலக் கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு, ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.

அதில் பேய் மற்றும் பிசாசு பிடித்தவர்கள், தங்களுக்குப் பேய் பிடித்தபோது திடீர் சத்தம் கேட்டதாகவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்ட தாகவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைந்துவிட் டது என்றும் கூறினார்கள்.

பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அந்த இடத்திற்குச் செல்லும்போது வழக்கத்திற்கு மாறான காந்தபுலம் மேற்கூறிய பிரமைகளை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே, பேயோ, பிசாசோ அதைச் செய்யவில்லை என்று கூறியதோடு நின்றுவிடாமல் விஞ்ஞானக் கருவிகளுடன் அவர்களுக்கு அதை நிரூபித்தும் காண்பித்தார்.

(தினத்தந்தி, 10.2.2006).

அறிவியல் இவ்வாறு கூறுகிறது. இந்த நாட்டில் உள்ள படித்த அமாவாசை இருட்டு அறிவாளர்களோ ஊடகங்களோ பொய்யை விற்றுப் பிழைப்பு நடத்துகின் றன - உஷார்!

குறிப்பு: பேரம்பாக்கம் என்னும் ஊரில் சுடுகாட்டில் இருந்த முள்செடியில் பேய் இருந்ததாகப் புரளி கிளம்பிய போது, திராவிடர் கழக மகளிர் அணியினர் அங்கு சென்று அதை வெட்டித் தீயிட்டுக் கொளுத்திக் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். (14.4.1991).

----------------- மயிலாடன் அவர்கள் 25-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை












தினமணி தன் ஆவணி அவிட்டப் புத்தியைக் காட்டலாமா?


பூணூல் கொழுப்பு!

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து நேற்றைய தினமணியில் (23.8.2010) அன்புள்ள ஆசிரியருக்கு பகுதியில் இது தேவையா? எனும் தலைப்பில் கீழ்க் கண்ட பெட்டிச் செய்தி ஒன்று இடம் பெற்றுள்ளது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பால் என்ன ஆகப் போகிறது? அமைச்சரவை (பிரதமர் தலைமையில்) ஜாதி வாரிக் கணக் கெடுப்புக்கு ஒப்புதல் தந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. சமீபத்தில் காடுகளில் புலிகள் எத்தனை? சிங்கங்கள் எத்தனை? யானைகள் எத்தனை? எனக் கணக்கிட்ட செய்தி வெளியாகியது. நல்லவேளை நரிகள் எத்தனை? நாய்கள் எத்தனை? பூனைகள் எத்தனை? என்ற கணகெடுப்பு ஒன்றுதான் நடக்கவில்லை!

அதிகமான ஜாதிகள் உள்ளவர்கள் விகிதாசாரப்படி, முன்னுரிமை கோரி நாங்கள்தான் ஜாதியில் அதிகமாக உள்ளோம் என போராட மைனாரிட்டி ஜாதிகள், அதெல்லாம் சரியல்ல. பன்றி பல குட்டிகள் போட்டு என்ன பிரயோஜனம்? நாங்கள் ஜாதியில் குறைந்தாலும் சிங்கம் என்பார்கள்.

ஆக, இப்படி போராட்டம் பெரிதாகி வெடிக்க அதில் பலர் சாக, அதற்கு ஆதரவாக இப்போது காஷ்மீரில் நடக்கும் அராஜகம் போல் அராஜகம் வெடிக்க வருங்கால இந்தியாவுக்கு இது தேவையா?

எவன் திறமை மிக்கவனோ - அவனே உயர்ந்த ஜாதி! எவன் தேசபக்தி மிக்கவனோ அவனே பெரிய சக்தி! இறைவா! இந்தத் தலைவர்களின் பொய் முகங்களை நீதான் உலகுக்கு உணர்த்த வேண்டும்!

இதனைப் படிக்கும்போது ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு எதிராக உள்ளவர்களின் மனப்பான்மை எந்த உஷ்ணத்தில் கொழுந்துவிட்டு எரிகிறது என்பதை எளிதில் உணரலாம்.

நல்லவேளை, நரிகள் எத்தனை? நாய்கள் எத்தனை? பூனைகள் எத்தனை? என்ற கணக்கெடுப்பு ஒன்றுதான் நடக்கவில்லை என்று தனது ஆத்திரத்தின் மூலம் அவரது கீழ்மையான குரைச்சல் இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

நாய்கள் கணக்கை ஜாதிவாரிக் கணக்கெடுப்போடு ஒப்பிட்டு எழுதியிருப்பதைக் கவனித்தில் கொள்ள வேண்டும்.

மைனாரிட்டி ஜாதிகள் - பன்றி பல குட்டிகள் போட்டு என்ன பிரயோஜனம்? நாங்கள் ஜாதியில் குறைந்தாலும் சிங்கம் என்பார்கள் என்பதன் மூலம் பெரும்பான்மை மக்கள் பன்றிக் குட்டிகளோடு ஒப்பிடப்பட்டுள்ளனர்.

அசல் ஆர்.எஸ்.எஸ். நெய்யில் பொரித்த பண்டமாக இருக்கக்கூடிய ஒருவர் ஆசிரியராக இருக்கும் இந்த ஏட்டில் இதைத்தான் எதிர்பார்க்க முடியும் என்று சமாதானம் அடைந்துவிட முடியாது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதையாக தினமணி தனது தீய, ஆலகால நஞ்சினைக் கக்கிக் கொண்டு திரிகிறது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் வருண வெறி நாகங்களை அடையாளம் காணக் கடமைப் பட்டுள்ளனர்.

ஜாதியை ஒழித்துக் கட்டியே தீரவேண்டும் என்ற ஜாதி ஒழிப்பு ஆவேசத்தில் எழுதப்பட்ட கடிதமா இது? அல்ல, அல்ல. ஆவணி அவிட்டமாகிய இன்று பழைய அழுக்குப் பூணூலை அப்புறப்படுத்தி விட்டு, தடித்த புது முறுக்குடன் புதிய பூணூலைத் தரித்துப் பலமுறை இழுத்துவிட்டு அழகு பார்க்கும் கூட்டம்தான் இந்த வகையில் மூக்கணாங்கயிறு இல்லாத பொலிகாளை போல துள்ளுகிறது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடந்தால் காஷ்மீரில் நடப்பது போல அராஜகம் வெடிக்க ஆரம்பிக்குமாம். இந்தியாவுக்கு இது தேவையா என்று மூக்கை ரத்தம் கசியக் கசிய சிந்துகிறது.

உரிமை பாதிக்கப்பட்ட மக்கள், அந்த உரிமை எந்த வகையிலாக இருந்தாலும் அதற்காகப் போர்க் கோலம் பூணத்தான் செய்வார்கள்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளைப் புரிந்துகொண்டு அதற்கான வாய்ப்புகளை சட்ட ரீதியாக அளிக்கத் தவறினால், அந்த மக்களின் குமுறல் எரிமலையாகி ஒரு நாள் வெடிக்க ஆரம்பித்தால், ஆதிக்கவாதிகளின் கதி என்னவாகும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகம் முழுமையும் உரிமையின் கூர் வாட்கள் கடந்த காலத்திலும் சரி, நிகழ் காலத்திலும் சரி, ஆதிக்க வாதிகளை எப்படியெல்லாம் சிதைத்துள்ளன என்ற வரலாறு தரும் பாடத்தைப் படித்துக் கொள்ளவில்லையானால், புத்திசாலித் தனமாக அதன் வீரிய வீச்சைப் புரிந்துகொண்டு செயல்பட முன்வரவில்லையானால் வட்டியும் முதலுமாக அதற்கு எதிர்ப்பாக இருப்பவர்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்று எச்சரிப்பது நமது கடமையாகும்.

இட ஒதுக்கீடு வந்தால் தகுதி, திறமை தற்கொலை செய்துகொண்டுவிடும் என்று கூறிப் பார்த்தனர்; அது எடுபடவில்லை; இட ஒதுக்கீடு அடிப்படையில் படித்துத் தேர்ந்தோர் தங்களின் திறமைகளைச் சாதனைகள் மூலமாகப் பட்டொளி வீசிப் பறக்கிறார்கள்.

கடைசியில் தங்களுக்கும் இத்தனை விழுக்காடு இட ஒதுக்கீடு தேவை என்ற மனு போடும் நிலைக்கு வந்தார்கள் இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் என்பதை மறந்துவிட்டு, தினமணி தன் ஆவணி அவிட்டப் புத்தியைக் காட்டலாமா?

எவன் திறமை மிக்கவனோ, அவனே உயர்ந்தவன் - எவன் தேசபக்தி மிக்கவனோ அவனே பெரிய சக்தி என்று மகரிஷி மாதிரி உபந்நியாசம் ஒரு பக்கத்தில்.

திறமைக்கும், தேச பக்திக்கும் அளவுகோல் என்ன? மனப்பாடம் செய்து தாள்களில் வாந்தி எடுத்துப் பெறும் மதிப்பெண்கள்தானா? வகுப்பில் மக்குப் பையன் என்று கூறப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசன்தான் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதியனவற்றைக் கண்டுபிடித்துத் தந்தவர் என்பதை யெல்லாம் தினமணிகள் வசதியாகச் சாமர்த்தியமாக மறந்து விடும்.

இறைவா! இந்தத் தலைவர்களின் பொய் முகங்களை நீதான் உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று இறுதியாக மங்கலம் பாடிக் கடிதம் முடிக்கப்பட்டுள்ளது.

இறைவனன்றிதான் ஒன்றும் அசையாதே. அப்படியானால் இப்பொழுது நடைபெற்று வரும் (ஜாதி வாரிக் கணக்கெடுப்பு உள்பட) அனைத்தும் அவனால்தான் நடைபெறகிறது என்று ஒப்புக்கொண்டு கிருஷ்ணா, ராமா என்று முணுமுணுத்து பஜனை செய்துகொண்டு கயிற்றுக் கட்டிலில் படித்துக் கிடக்க வேண்டியதுதானே! அதற்குப் பிறகு என்ன ஜாதி முறுக்கும் - பூணூல் கொழுப்பும்?

---------------- "விடுதலை” தலையங்கம் 24-8-2010



23.8.10

ஓணம் பண்டிகையும் - பார்ப்பனர்கள் சூழ்ச்சியும்


வாமனாவதாரம்!

விஷ்ணு பத்து அவதாரம் எடுத்தான் என்று பார்ப்பனர்கள் கதை கட்டி வைத்துள்ளார்கள். இந்த அவதாரங்கள் எல்லாம் அசுரர்களை அழிக்கத்தான் என்றும் எழுதி வைத்துள்ளார்கள்.

அசுரர்கள் என்றால் வேறு யாருமல்லர் சூத்திரர்களாகிய திராவிடர்கள்தாம். சுரர்களாகிய பார்ப்பனர்களுக்காக அவதாரம் எடுத்து அசுரர்களான நம் மக்களை வதம் செய்வதுதான் இந்த அவதாரச் சூழ்ச்சிக் கதைகள்.

வராக அவதாரம் (பன்றி) என்றால், அசுரனாகிய நரகாசுரனை அழித்ததாக இருக்கும்.

மச்ச அவதாரம் என்றால், (மீன் உருவம்) வேதங்களைத் திருடி ஒளிந்துகொண்ட கோமகா சூரன் என்பவரை வதம் செய்ததாகக் கதைத் துள்ளனர்.

இரண்யாட்சதனை வதம் செய்ததாக நரசிம்ம அவதாரம் (சிங்க ரூபம்) கூறுகிறது.

கடவுளே படைத்து, கடவுளே அழிக்கும் விசித்திரமும், விபரீதமும் இந்து மதத்திற்கே உள்ள விசேஷமான வைபவங்கள்!

ஓணம் பண்டிகை என்று இன்று கொண்டா டப்படுகிறது. இப்பண்டிகை கேரள மாநிலத்தில் களைகட்டக் கூடியதாகும்.

இதில் பொதிந்துள்ள சூழ்ச்சியைக் கவனித்தால் அந்த முறையை இன்றுவரை பார்ப்பனர்கள் பல வடிவங்களில் பின்பற்றி வருகின்றனர் என்பதை எளிதிற் புரிந்துகொள்ளலாம்.

மாவலி என்னும் சக்ரவர்த்தி மூன்று உலகையும் கட்டி ஆண்டானாம். குடிமக்களுக்கு எல்லாவகையிலும் நன்மைகள் புரிந்த காருண்ய ஆட்சியை அவன் நடாத்திக் கொண்டு வந்தானாம்.

பொறுக்குமா தேவர்களுக்கு? அவனை அடக்கவேண்டும் அழிக்கவேண்டும் என்று மகா விஷ்ணுவிடம் மனு போட்டார்களாம் தேவர்களாகிய பார்ப்பனர்கள். அவனும் காசிப முனிவன் என்னும் பார்ப்பானுக்குக் குள்ள வடிவத்தில் மகனாகப் பிறந்தானாம்.

மாவலி சக்ரவர்த்தி யாகம் நடத்தித் தான தருமங்களைச் செய்தபோது, விஷ்ணுவின் அவதாரமான இந்த வாமனன் என்ற குள்ளப் பார்ப்பான் தனக்கு மூன்று அடி மண் தானமாகத் தரவேண்டும் என்று யாசித்தானாம். ஆகட்டும் என்று அரசன் மாவலி கூற, உடனே அந்தக் குள்ளப் பார்ப்பான் விசுவ ரூபம் எடுத்து, ஒரு அடியை ஆகாயத்திலும், மற்றொரு அடியை பூமியிலும் பதித்து, மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று கேட்க, மாவலி சக்ரவர்த்தி தன் தலையைக் காட்டினானாம். (மூன்றாவது அடியைப் பாதாளத்தில் வைக்க வேண்டியதுதானே?) மாபாதகனான அந்தக் குள்ளப் பார்ப்பானாகிய விஷ்ணு, மக் களுக்கெல்லாம் வாரி வழங்கி மக்களின் இதயத்தில் எல்லாம் நிறைந்திருந்த அந்த மாவலியை அழுத்திச் சிறை வைத்தானாம்.

அந்த நாளில் மாவலி சக்ரவர்த்தி ஒவ்வொருவர் வீட்டுக்கும் வருகை தருவதாக அய்தீகமாம். கேரள மாநிலத்தில் வீட்டுக்கு வீடு கோலம் போட்டு, மாவலியின் வருகைக்காக அலங்காரம் செய்து வைத்திருப்பார்களாம்.

நரகாசுரனை வதை செய்த நாளில் தமிழ்நாட்டில் தீபாவளி என்று கொண்டாடுவதில்லையா அதுபோல, கேரள மாநிலத்தில் மாவலியை அழித்த நாளில் ஓணம் பண்டிகையாம். (எல்லாம் ஒரே மாதிரிதான்).

கதை எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். அறிவுக்குப் பொருத்தமற்றதைத் தான் ஆரியப் பார்ப்பனர்களால் கிறுக்க முடியும். பக்தி என்னும் மயக்க மருந்துக்கு ஆட்பட்ட நம் மக்கள் கடவுள், மதத்தின் பெயரால் எவற்றைக் கிறுக்கினாலும், அவற்றைக் கிரீடமாகக் கருதித் தலையில் அணிந்து கொள்வார்களே அந்தக் குருட்டுத் தைரியத்தில் தான் இந்த மூடத்தனக் குப்பை மேடுகள்!

அதேநேரத்தில், இந்தப் புராணங்களில், பண்டிகைகளில் உள்ளீடாக இருக்கும் ஒரு மய்யக் கருத்தைக் கவனிக்கத் தவறக்கூடாது.

திராவிடர்கள் நல்லவர்களாக இருந்தாலும், நல்லாட்சி புரிந்தாலும் அவற்றைக் கண்டு பொறாதவர்களாக ஒழித்துக் கட்டவேண்டும் என்று கருதுகின்றவர்களாக ஆரியப் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அந்த மய்யப் புள்ளியாகும்.

கலைஞர் அவர்கள் சூத்திரராக இருந்து நல்லாட்சி புரிந்து வந்தாலும், பார்ப்பன ஊடகங்கள் அவர்மீது சேற்றை வாரி இறைக்கும் அவலத்தை அன்றாடம் நாம் பார்த்துக் கொண்டே இருக்க வில்லையா!

தமிழ் செம்மொழி என்று அறிவிக்க கலைஞர் காரணமாக இருந்தால், அதனைப் பாராட்ட மனம் இல்லாது, தமிழ் செம்மொழி ஆனால், வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் கிடைக்குமா? என்று எழுதக் கூடிய பார்ப்பன ஏடுகள் இருக்கத்தானே செய் கின்றன. பண்டிகைகள் கொண்டாடும் தமிழர்கள் அவற்றிற்குள் படிந்து கிடக்கும் பாஷாணத்தை சூழ்ச்சியைப் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டாமா?

-----------------------"விடுதலை” தலையங்கம் 23-8-2010

பூணூல் என்னும் கோவணக் கயிற்றின் மகாத்மியம்!


பூணூல்!

நாளை (ஆவணி 8 ஆகஸ்ட் 24) ஆவணி அவிட்டம் என்ற பெயரில் பார்ப்பனர்கள் பூணூலைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள்.

இந்தப் பூணூல் வந்த விதம் குறித்து அமெரிக்கா வரை சென்று இந்து மதத்தின் பிரதாபங்களைப் பீரங்கியாக முழங்கி வந்த விவேகானந்தர் என்ன சொல்லுகிறார்?

முடிவில்லாத பிறப்பாகிய மாயையைக் கடக்கும் பொருட்டு, ஜீவனுடைய சோகங்களையும், துன்பங் களையும் கருணையினால் அழித்து விடுகின்றவரே உண்மைக் குரு. பழைய காலத்தில் சிஷ்யனானவன் கையில் சமித்துகளை எடுத் துக்கொண்டு குருவினுடைய குடிலுக்குப் போவான். குருவும் அவனுடைய தகுதியை அறிந்து, உளம், சொல், செயல் ஆகிய மூன்றையும் அவன் அடக்கி வைப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய முஞ்சா என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி, அவனுக்குத் தீக்ஷை செய்து வேதங்களைப் போதிப்பார். அரையிலே கட்டிய முப்புரி யாகிய அப்புல்லிலே சிஷ்யன் கோவணத்தைக் கட்டிக்கொள்ளுவான். முஞ்சா என்னும் அப்புல்லினால் ஆக்கப்பட்ட கயிற்றுக்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்துகொள்ளும் வழக்கம் பின்னாளில் வந்து விட்டது.

மேலும், வேதங்களில் பூணூலைப் பற்றிய குறிப்பு ஏதுமில்லை என்றும் விவே கானந்தர் கூறியுள்ளார் (ஆதாரங்கள்: சுவாமி விவேகானந்தர் சம்பாஷணை, பக்கம் 2628).

கோவணம் கட்டுவதற்குப் பயன்பட்ட நூல்தான் திரிநூல் என்பதைக் காண்க!

சரி... நான் ஒரு இந்து சனாதனி என்று பெருமையாகச் சொல்லிக் கொள்பவரான காந்தியாரின் பூணூலைப்பற்றிய கருத்து என்ன? அவர் ஏன் பூணூலை அறுத்து எறிந்தார்?

லட்சக்கணக்கான இந்துக்கள் பூணூல் தரிக்காமலிருக்கும்போது அது எனக்கு அவசியமென்று தோன்றவில்லை. ஆதலால், நான் அதை அணியவில்லை. பூணூலை அணிபவன் உயர்ந்த வாழ்வு மாசற்ற வாழ்வு வாழவேண்டும். ஆத்மார்த்திக மான புனிதத் தன்மையின் அறிகுறியாக இருக்கவேண் டும் இப்பூணூல். இன்றுள்ள இந்துக்கள், இன்று இந்து மதம் உள்ள நிலையில், இப் பூணூலை அணிந்து கொள்வதற்குத் தகுதி உள்ளவர்களா என்பது எனக்குச் சந்தேகம். இந்து மதத்திலுள்ள தீண் டாமை, உயர்வு, தாழ்வு, வேற்றுமை, இன்னும் பல கொடுமைகள், போலித்தனம் யாவும் ஒழிந்த பிறகுதான் இந்துவுக்குப் பூணூல் அணி யும் உரிமை உண்டு. ஆகை யால், பூணூல் அணிவதை என் மனம் எதிர்க்கிறது. இந்து மதத்தை உயர்த்துவதற்கு இது ஒரு வழி என்று எனக்குத் தோன்றவில்லை. (காந்தியாரின் சுயசரிதம், பக்கம் 480).

காந்தியார் கூற்றில் முரண்பாடுகள் உள்ளன என்பது உண்மையாகும். இந்து மதத்தில் தீண்டாமை இல்லாததுபோலவும், அதற்கு மாறாக தீண்டாமையை அனுசரிப்பது போலவும் எழுதுவது சரியானதல்ல.

காந்தியார் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் பாலக்காட்டில், மாட்டுக் கொட்டகையில் சந்தித்தபோது, தீண்டாமை சாத்திர சம்பிரதாய வழிபட்டது என்று முகத்துக்கு முகம் சொல்லிவிட்ட பிறகு (சங்கராச் சாரியாரைவிட சாஸ்திரம்பற்றி யார் கூறவேண்டும்?) காந்தியார் இந்து மதம் குறித்துக் கணித்திருப்பது தவறாகும்.

காஞ்சி மச்சேஸ்வரர் கோயில் குருக்கள் பார்ப்பான் தேவநாதன்கூட நாளை கண் டிப்பாகப் பூணூல் தரித்துக் கொள்வான் என்பதில் அய்யமில்லை.

என்னே பூணூல் என்னும் கோவணக் கயிற்றின் மகாத்மியம்!

------------------------மயிலாடன் அவர்கள் 23-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை