Search This Blog

28.11.08

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்!


மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கரவாதம் கண்டிக்கத்தக்கது!

உளவுத் துறையில் அதிரடி மாற்றங்கள் தேவை!

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை


மும்பையில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கரவாதச் செயல்களைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

மும்பை நகரில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கரவாதம் மனித நேயமற்ற அசல் காட்டுமிராண்டித்தனம்! வெறுக்கத்தகுந்தது; வன்மையான கண்டனத்திற்குரியது.

பிணைக் கைதிகளாக பலரும் பிரபல ஓட்டல்களில்;

பல முக்கிய காவல் துறையினர், அதிகாரிகள் சாவு! 100 பேருக்குமேல் உயிரிழப்பு; 200 பேர் படுகாயம்!

மாநகரமே ஸ்தம்பித்துள்ள நிலையில், ஓட்டலில் தீயணைப்பு வீரர்கள் நுழைந்து தீயை அணைத்தனர். இராணுவம் உடனே நுழைந்து தீவிரவாதிகள்மீது தாக்குதல்;

விடிவு ஏற்படுத்த தொடர் முயற்சி என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது! கண்டிக்கப்பட வேண்டிய செயல்!

முதலாவதாக செய்யவேண்டியது

இன்று அதிகாலை 3 மணியளவில், தொலைக்காட்சியில் கண்டு உறக்கமில்லை; காரணம், நாடு இப்படி செல்லுகிறதே என்ற வேதனை!

மத்திய - மாநில உளவுத் துறையினர் முன்கூட்டியே இதனை மோப்பம் பிடித்திருக்கவேண்டாமா? உடனடியாக பிரதமர் தலையிட்டு மத்திய - மாநில காவல்துறை - குறிப்பாக உளவுத் துறையில் அதிரடி மாற்றங்களை செய்யவேண்டியது முதலாவதான முக்கிய நடவடிக்கையாகும்.

இறந்தவர்களுக்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கல்!

மக்களின் பீதியைப் போக்க அனைவரும் கட்சி, ஜாதி, மதக் கண்ணோட்டமின்றி ஒன்றுபட்டு தீவிரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து, அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கை களுக்கும் உறுதுணையாக இருக்கவேண்டும்.


------------------- "விடுதலை" 27.11.2008

27.11.08

ஒரேயொரு பார்ப்பனர்கூட, தான் சாதிக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை!






சாதி அமைப்பு முறையில் வேறு சில தனித்த தன்மைகள் உள்ளன. இவை ஜனநாயகத்திற்கு எதிராக மோசமான விளைவுகளைக் கொண்டுள்ளன. சாதி அமைப்பின் இத்தகைய தனித்த தன்மைகளில் ஒன்று, அதனுடைய ‘படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை.' சாதிகள் சமமாக இல்லை. அவை ஒன்றுக்கு மேல் ஒன்றாக இருக்கின்றன. அவை ஒன்றோடொன்று பொறாமை கொள்கின்றன. சாதி, தனக்கு மேலிருப்பவர் மீது வெறுப்பையும், தனக்குக் கீழ் இருப்பவர் மீது இழிவையும் சுமத்துகிறது. சாதி அமைப்பின் இந்தத் தன்மைதான் மிக மோசமான பின்விளைவுகளைக் கொண்டதாக உள்ளது. அது, மனமுவந்து உதவும் இணக்கமான சூழலை அழித்து விடுகிறது.

சாதியும் வர்க்கமும் எந்த இடத்தில் வேறுபடுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். சாதி அமைப்பில் இருப்பது போன்ற முழுமையான தனிமைப்படுத்துதல் வர்க்க அமைப்பில் இல்லை. சாதி அமைப்பில் சமமின்மையுடன் இணைந்த இரண்டாவது தீய விளைவு இது. இதன் மூலம் உள்ளார்ந்த உணர்வும், ஆதரவும் இரு சாதிகளுக்கிடையில் ஒருசார்புடையதாகத்தான் இருக்கிறது என்ற உண்மை விளங்குகிறது. மேலிருக்கும் சாதி, அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழியிலும், கீழிருக்கும் சாதி ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட வழியிலும் செயல்பட்டாக வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் சமமான வாய்ப்புகள் இல்லாததன் விளைவு சிலர் தலைவர்களாகவும், மற்றவர்கள் அடிமைகளாகவும் இருக்க அது கட்டாயப்படுத்துகிறது. இதன் மூலம் ஒவ்வொருவரும் தமது வாழ்க்கை அனுபவங்களை சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ளும் வாழ்வியல் முறை தடுக்கப்படுகிறது.

இது, சமூகத்தை வாய்ப்புகள் பெற்ற வர்க்கமாகவும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வர்க்கமாகவும் பிரிப்பதில் முடிவடைகிறது. இத்தகைய பிரிவினை, சமூக ஒருங்கிணைப்பைத் தடுக்கிறது. மூன்றாவதாக ஒரு தனித்தன்மை சாதி அமைப்பிற்கு இருக்கிறது. இது, ஜனநாயகத்தின் வேர்களையே நிர்மூலமாக்கும் தீய தன்மைகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சாதியினரும் குறிப்பிட்ட ஒரு தொழிலையே செய்ய வேண்டும் என்றும் அது நிர்பந்திக்கிறது.

சாதி அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? முதல் தடை, சாதி அமைப்பின் உயிர்நிலையான படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மையில்தான் இருக்கிறது. மக்கள் இரண்டு வர்க்கங்களாக மேல் என்றும் கீழ் என்றும் மட்டும் பிளவுபட்டிருந்தால், கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து, மேலே இருப்பவர்களை எதிர்க்க முடியும். ஆனால், இங்கு ஒரேயொரு கீழ் வகுப்பு இல்லை. வர்க்கம் என்பது, கீழ் வர்க்கம் என்றும், அதற்கும் கீழான வர்க்கம் என்றும் படிநிலைப்படுத்தப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளன. கீழே இருக்கும் வர்க்கம், அதற்குக் கீழ் இருக்கும் வர்க்கத்துடன் இணைவதில்லை. கீழே இருக்கும் வர்க்கம், தனக்குக் கீழே இருக்கும் வர்க்கத்தை உயர்த்தினால், தனக்கு இருக்கும் உயர் நிலையும், தனது சாதிக்கு அளிக்கப்பட்டிருக்கும் உயர் நிலையும் (அவர்களை மேலே உயர்த்துவதன் மூலம்) பறிபோய் விடும் என்றும் நினைக்கிறது...

கல்வி சாதியை ஒழித்து விடுமா? இதற்குரிய பதில் ‘ஆம்'; அதே நேரத்தில் ‘இல்லை'! இன்று வழங்கப்படும் கல்வியால், சாதியை ஒன்றும் செய்து விட முடியாது. அது எப்போதும் போலவே நிலைப் பெற்றிருக்கும். இதற்கு பார்ப்பன சாதியே மிகச் சரியான எடுத்துக்காட்டு. பார்ப்பனர்களில் நூறு சதவிகிதம்பேர் படித்திருக்கிறார்கள்; இல்லை, அவர்களுள் பெரும்பான்மையினர் மெத்தப் படித்திருக்கிறார்கள். இருப்பினும், ஒரேயொரு பார்ப்பனர்கூட, தான் சாதிக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை. உண்மையில், மேல் சாதியில் இருக்கும் படித்த நபர், கல்வி கற்காமல் இருப்பதைவிட, அவர் கல்வி கற்ற பிறகு சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புகிறார். ஏனெனில், சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ள, கல்வி கூடுதல் நலனை அவருக்கு அளிக்கிறது. இதன் மூலம் அவர் பெரிய பதவிகளைப் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, கல்வி சாதியை ஒழிக்க உதவிகரமாக இல்லை.

கல்வியின் இன்னொரு எதிர்மறையான விளைவு இது. ஆனால், இதே கல்வி இந்திய சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டால், அது சாதியை ஒழிப்பதில் உதவிகரமாக இருக்கும்; அம்மக்களின் போராட்ட உணர்வை அதிகரிப்பதாகவும் இருக்கும். அறியாமையால், அவர்கள்தான் சாதி அமைப்பின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். ஒரேயொருமுறை அவர்களின் கண்கள் திறக்கப்பட்டுவிட்டால், அவர்கள் சாதி அமைப்புக்கு எதிராகப் போரிடத் தயாராகி விடுவார்கள்.

தற்பொழுதுள்ள கொள்கையின் குறைபாடு என்னவெனில், கல்வி பரவலாக அளிக்கப்படுகிறது; ஆனால், இந்திய சமூகத்தில் எந்தப் பிரிவினருக்கு கல்வி அளிக்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை. சாதி அமைப்பு முறையை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள விரும்பும் இந்திய சமூகத்தின் சுயநலவாதிகளுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு பலப்படுத்தப்படும். இதற்கு மாறாக, இந்திய சமூகத்தின் சாதி அமைப்பு முறையை நிர்மூலமாக்க நினைக்கும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு கண்டிப்பாக ஒழிந்துவிடும்.



--------------‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா' 20.5.1956 ‘டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 17 பக் : 520

நமது குறிக்கோள்




திராவிட மன்னர்கள்

தருமராஜன் போல் நாட்டைச் சூதாட்டத்தில் தோற்றதில்லை.
அரிச்சந்திரன் போல் நாட்டை முனிவருக்குத் தானம் செய்ததில்லை.

திராவிடக் கவிஞர்கள்


அதல சுதல பாதாளமென அண்டம் புளுக எழுதவில்லை.
கண்ட கண்ட உருவெடுத்தார் கடவுள் எனக் கதை தீட்டவில்லை.
காலடியில் புரண்டு தொழுதால் கடாட்சம் என்று கூறவில்லை.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்றனர்.

திராவிடர்

உயிர்வாழ மானத்தை இழந்ததில்லை.
உறுதியின்றி உலுத்தராய் இருந்ததில்லை.
சூது, சூட்சியை ஆயுதமாகக் கொண்டதில்லை.
சுதந்திர வாழ்வுக்காக உயிரையும் தந்தனர்.

திராவிடம்

அன்னிய ஆட்சிக்கு அடிமைப் பட்டிருக்கவில்லை.
பஞ்சமும், பிணியும், பதைப்பும் கண்டதில்லை.
பாட்டாளி பதைக்கப் பார்த்துச் சகித்ததில்லை.
உழைப்பால் உயர்ந்து உரிய இடம் பெற்றது உலகில்.

திராவிடம்: இன்று

திராவிட மன்னர்கள் மறைந்தனர்; மக்கள் பண்பை மறந்தனர்.
வீரம் கருகிவிட்டது! வீணருக்கு ஆதிக்கம் ஏற்பட்டது.
திராவிடக் கலைக்கும் மொழிகட்கும் மதிப்பில்லை.
திராவிடத் தொழில் தூங்குகிறது. திராவிடன் தேம்புகிறான்.
திராவிடச் செல்வம் கோயிலில், கொடி மரத்தில், கொட்டு முழக்கில், வெட்டி வேலையில், வெளிநாட்டில் சென்று முடங்கிவிட்டது.
திராவிடன், தேயிலை - கரும்பு - ரப்பர் தோட்டக் காடுகளில் கூலியாய் வதைகிறான்.
திராவிட நாட்டிலே, மூலை முடுக்குகளிலெல்லாம் மார்வாடிக் கடைகள், குஜராத்திகளின் கிடங்குகள், முல்தானியின் முகாம்கள், சேட்களின் கம்பெனிகள்.

பெரிய வியாபாரங்கள் எல்லாம் வட நாட்டாரிடம்.

தொழிற்சாலைகளிலே, துரைமார்கள் இல்லை - பனியாக்கள்!

டால்மியாவுக்குத் திருச்சிக்குப் பக்கத்திலே நகரமே இருக்கிறது.

ஆஷர் சேட்களுக்கு திருப்பூர் - கோவை வட்டாரத்தில் ஆலை அரசர்கள் எல்லாம் கட்டியம் கூற வேண்டிய நிலைமை.

சென்னையிலே, சவுகார்பேட்டை இருக்கிறது பாரத் பாங்க் இருக்கிறது.

தினம் ஒலிக்கும் மணி. ஒரு வடநாட்டு கோயங்கா உடையது.

சென்னையில் பெரிய கட்டடங்கள் இன்று வடநாட்டாருக்குச் சொந்தம்!

இந்நிலையில் உள்ள திராவிடத்திலே, ஆடை முதல் ஆணிவரை, வட நாட்டிலிருந்து வருகிறது, வருகிறது என்னும்போது, ஏராளமான பணம் இங்கிருந்து வடநாட்டுக்குப் போகிறது என்று பொருள்.

வளம் இழந்து, இருக்கும் கொஞ்சம் நஞ்சம் வளத்தையும் வடநாட்டுக்குக் கொட்டி அழுதுவிட்டு, வறுமைப் பிணியுடன் வாடும் திராவிடம் தலைதூக்க, அதன் மக்களுக்கு முழு வாழ்வு கிடைக்க, வெளிநாடுகளுக்குக் கூலிகளாகச் சென்றுள்ளவர்கள் திரும்பி வர, வாழ்க்கைத் தரம் உயர, திராவிட நாடு திராவிடருக்கு என்ற நமது திட்டம் தவிர வேறு திட்டம் இல்லை!

பொருளாதாரத்தையே அடிப்படையில் கொண்ட இப்பிரச்சினையை, வெறும் கட்சிக் கண்களுடன் நோக்காமல், நாட்டுப்பற்று நிரம்பிய கண் கொண்டு காணும்படி, திராவிடர் கழகத்தைச் சாராத அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

தலையிலே பிரி பிரியாக வர்ணத் துணியைச் சுற்றிக் கொண்டு, போர் போராக உள்ள சாமான்களின் பக்கத்திலே உட்கார்ந்து கொண்டு, வட்டிக் கணக்கைப் பார்த்துக் கொண்டே வயிற்றைத் தடவிக் கொண்டுள்ள மார்வாரியையும் பாருங்கள், பாரம் நிறைந்த வண்டியை, மாட்டுக்குப் பதிலாக இழுத்துச் செல்லும் தமிழனையும் பாருங்கள்! மெருகு கலையாத மோட்டாரில் பவனிவரும் சேட்டுகளையும் பாருங்கள், கூலி வேலைக்கு வெளிநாடு செல்ல, கிழிந்த ஆடையும், வறண்ட தலையும், ஒளியிழந்த கண்களும் கொண்ட தமிழன், கப்பல் டிக்கட்டுக்குக் காத்துக் கொண்டிருக்கும் காட்சியையும் காணுங்கள். இங்கே பச்சைப் பசேலென்று உள்ள நஞ்சை புஞ்சையையும் பாருங்கள். அதே போது நடக்கவும் சக்தியற்று, பசியால் மெலிந்துள்ள தமிழர்களையும் பாருங்கள் - எங்களை மறந்து இந்தக் காட்சிகளைக் காணுங்கள். நாங்கள் கூறுகிறோம் ஒரு திட்டம் என்பதைக் கூட மறந்து - நீங்களாக யோசித்து ஒரு திட்டம் கூறுங்கள். பண்டைப் பெருமையுடன் இருந்த ஒரு நாடு பல்வேறு வளங்கள் நிரம்பிய நாடு, இன்று வடநாட்டுடன் இணைக்கப்பட்டு, இப்படி வதைபடுவது நியாயமா? இந்த இணைப்பிலிருந்து விடுபட்டு, தனித்து நின்று தனி அரசு நடத்தி, நாட்டு வளத்தைப் பெருக்கி அந்த வளம் நாட்டு மக்களுக்கே பயன்படும்படிச் செய்வது குற்றமா? அதற்கு திராவிட நாடு திராவிடர்க்கே என்பதன்றி வேறென்ன திட்டம் இருக்க முடியும்? இருந்தால் கூறுங்கள்!

------------------- பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகள் தொகுதி-1

இட ஒதுக்கீடு கொடுப்பதால்தான் ஜாதி வளர்கிறதா?


படிப்பது ஜாதியை வளர்ப்பதற்கல்ல!

சென்னை சட்டக்கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் ஜாதி அடிப்படையில் நடந்த மோதல்கள் உள்ளபடியே வெட்கப்படத் தக்கதாகும்.

எதிர்கால உலகைப் படைக்கக்கூடியவர்கள் என்று கணிக்கப்படக்கூடிய மாணவர்கள் - அதுவும் சட்டம் படிக்கும் மாணவர்களின்அறிவு எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது வெட்கமும், வேதனையும் கலந்து நம்மைத் தாக்குகின்றன; தலையைத் தொங்கப் போடவும் வைக்கிறது.

தாழ்த்தப்பட்ட மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட மாணவர் களும் கல்வி, வேலை வாய்ப்புகளில் வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வளர்ச்சிப் பாதையில் புலிப் பாய்ச்சலாக அமையவேண்டும் என்பதற்காக தந்தைபெரியார் பாடுபட்டார். அவர் கண்ட இயக்கம் அன்று முதல் இந்தச் சமூக விழிப்புணர்வுப் பணியினைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களும் சரி, பிற்படுத்தப்பட்டவர்களும் சரி, பார்ப்பனிய வருணாசிரம அடிப்படையில் உரிமைகள் மறுக்கப்பட்டவர்கள்தாம். கல்விப் பக்கம் அவர்கள் தலை வைத்துப் படுக்கக் கூடாது என்பதிலே பார்ப்பனர்கள் குறியாக இருந்தவர்கள்தாம்.

இரண்டு முறை சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் சென்னை மாநிலத்துக்கு முதலமைச்சராக இருந்திருக்கிறார். அந்த இரண்டு முறையுமே கிராமத்துப் பள்ளிகளை இழுத்து மூடுவதில்தான் குறியாக இருந்தார். காரணம், கிராமங்களில் தான் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் படிக்கக் கூடியவர்கள்.

இரண்டு முறையும் அவரைப் பதவியிலிருந்து விரட்டியவர் தந்தை பெரியார் அவர்கள்தான். 1952 இல் குலக்கல்வி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி அப்பன் தொழிலைப் பிள்ளைகள் கற்கவேண்டும் என்று ஆணை பிறப்பித்த மகானுபாவரும் அவரேதான்.

தீப்பந்தமும், தீப்பெட்டியும் தயாராக இருக்கட்டும் என்று தந்தைபெரியார் அவர்கள் ஆணையிட்ட பிறகே, தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி முதலமைச்சர் பதவியை விட்டு விலகினார் என்ற வரலாறுகள் எல்லாம் - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதில்லை.

வைக்கத்திலே தீண்டாமையை ஒழிக்க தந்தை பெரியார் எப்படியெல்லாம் பாடுபட்டார் என்பதுகூட நம் பாடத் திட்டங்களில் இடம்பெறுவது இல்லை.

மாணவர்களிடையே நடந்த இந்த ஜாதி மோதலுக்குப் பிறகாவது பாடத்திட்டத்திலே சமூகச் சீர்திருத்தம், தீண்டாமை, ஜாதி ஒழிப்புப்பற்றிய பாடங்களைச் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்படவேண்டும்.

கிராமப்பகுதிகளிலே ஜாதியை வளர்க்கும் அமைப்புகள் ஊர் நாட்டாமைகள் இன்னும் இருக்கின்றன. இந்தப் பகுதியிலிருந்து கல்லூரிகளுக்கும் படிக்க வரும் மாணவர்கள் அந்தத் தொற்று நோயைச் சுமந்து வருகிறார்கள். எனவே, இதன் மூலத்தையும் அறிந்து அதில் கைவைக்க வேண்டும்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, இட ஒதுக்கீடு கொடுப்பதால்தான் ஜாதி வளர்கிறது என்கிற ஒன்றைக் கிளப்பிட முயலுகிறார்கள்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் சென்னையில் இதுகுறித்து நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாநில வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஒருவர் - தலித் மாணவர்களுக்கு மாநில அரசு இட ஒதுக்கீடு கொடுத்து ஒதுக்கி வைத்துவிட்டது (தீக்கதிர், 26.11.2008, பக்கம் 6) என்று குற்றப்பத்திரிகை படித்துள்ளார்.

இட ஒதுக்கீடு என்பது உரிமைகள் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படும் உதவியே தவிர, ஜாதியை வளர்ப்பதற்கான கூறு அல்ல. இட ஒதுக்கீடு விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை - அணுகுமுறை மாறியிருக்கிறதா? என்று தெரியவில்லை.

அதேபோல, சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை - உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்கள், நுழைவுத் தேர்வு முறை தேவை என்ற ஒரு யோசனையைக் கூறியிருக்கிறார்.

நுழைவுத்தேர்வு வைத்து மாணவர்களைத் தேர்வு செய்த நேரத்தில், சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியிலே தகராறுகள், அடிதடிகள் நடக்கவில்லையா?

ஒரு அரசு சட்டம் இயற்றி, நீதிமன்றமும் ஒப்புக்கொண்ட ஒன்றை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மறுதலித்துப் பேசுவது நியாயமும் அல்ல, நீதியும் அல்ல.

மனித உணர்வுக்கும், உறவுக்கும் ஜாதி தீங்கானது என்பதை மாணவச் சமுதாயம் உணர்ந்திட வேண்டும்.

படிப்பது - பகுத்தறிவை வளர்ப்பதற்கேயன்றி, பிளவுபடுத்தும் ஜாதிச் சாக்கடையில் வீழ்வதற்கல்ல!


---------------------நன்றி: "விடுதலை"தலையங்கம் 27-11-2008

ஆர்.எஸ்.எஸ். பரிவார்களின் யோக்கியதை இதுதான்1




ஆர்.எஸ்.எஸ். பரிவார்களின் செயல் பாரீர்!


முதல்வர் கலைஞரின் தலையை வெட்டச் சொல்லி பரிசு அறிவித்த வி.எச்.பி. தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ராம்விலாஸ் வேதாந்தி எனும் நபர், தனக்கு சிமி, அல்கொய்தா பயங்கரவாதிகளிடமிருந்து கொலை மிரட்டல் வந்திருப்பதாக முன்பு புகார் கூறியிருந்தார். காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு மிரட்டல் தொலைபேசிகள் எங்கு இருந்து வந்தன என்பதைத் தொலைபேசித் துறைமூலம் கண்டறிந்தனர்.

கத்ரா நகர பஜ்ரங்தள் தலைவர் ரமேஷ் திவாரி (பார்ப்பனர்) என்பவரும் அவரது கூட்டாளிகளும் தொலைபேசி மிரட்டல்களைத் தந்துள்ளனர். என்ன காரணம்? கான்பூர் குண்டு வெடிப்பு விசாரணையைத் திசை திருப்பவும், வேதாந்திக்குக் கூடுதல் பாதுகாப்புப் போலீசார் நியமிக்கப்படவும் வேண்டி, தொலைப்பேசி மிரட்டல் விடுக்குமாறு பஜ்ரங்தள் மேலிடம் கட்டளை இட்டதாம்.

ரமேஷ் திவாரி உள்பட அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


எப்படி இருக்கிறது, ஆர்.எஸ்.எஸ். பரிவார்களின் செயல் தன்மைகள்?


----------------நன்றி: "விடுதலை" 27-11-2008