Search This Blog

2.4.19

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தந்தை பெரியார்
திராவிடர் கழகத்தின் கொள்கைகளைப்பற்றியும், திராவிடர் கழகத்தின் அவசியத்தைப்பற்றியும், திராவிடர் கழகத்தின் எதிர்காலத்தைப்பற்றியும் நீங்கள் அறிய வேண்டியது மிகமிக அவசியம். திராவிடர் கழகம் என்பது இச்சென்னை மாகாணத்தில் 100க்கு 95 பேராயுள்ள பெரும்பான்மை மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு வரும் ஒரு கழகம். அதாவது ஆரிய ரல்லாத, தற்போது சூத்திரர் என்று இழிவாகக் கருதப்பட்டுவரும் பிராமணர் அல்லாத மக்களின் நலத்திற்காகப் பாடுபட்டு வரும் கழகம், திராவிடர் கழகத்திற்கு வேறு பெயர் கூற வேண்டு மென்றால் ஆரியரல்லாதார் கழகம் என்றோ , அல்லது சூத்திரர் கழகம் என்றோதான் அழைக்க வேண்டியிருக்கும். சூத்திரர் என்றால் பார்ப்பனரின் தாசிமக்கள், பஞ்சமர்கள், சண்டாளர்கள், 4 ஆம் ஜாதி, 5 ஆம் ஜாதி என்று பொருள், ஆரியர் அல்லாத மக்களுக்கு சூத்திரர் என்ற பெயரை நாங்களாகக் கற்பித்துக் கொண்டோம், வகுப்புத் துவேஷத்தை வளர்ப்பதற்காக, என்று சிலர் கூறுவதுபோல் நீங்கள் யாரும் நினைத்துவிடக் கூடாது.
சூத்திரர் என்பது பார்ப்பனர் படைப்பே
"சூத்திரர்" என்ற பெயர் ஆரியரல்லாத மக்களுக்கு ஆரியர் கொடுத்த பெயர். சூத்திரர் என்று நம்மை இழிவாக அழைத்தது மட்டுமல்ல அவர்கள் தங்கள் வேதத்திலும், சாஸ்திரங்களிலும் கூட அப்படித்தான் எழுதி வைத்துள்ளார்கள். இதிகாசங்களிலும் இதையே வலியுறுத்தி இருக்கின்றனர். கடவுள் பேரால் நம்மைச் சூத்திரர் என்றுதான் அறிமுகப்படுத்தியிருக்கின்றனர். ஆகவே, இது நம்மால் வேண்டுமென்றே கற்பிக்கப்பட்டதல்ல, பார்ப்பனர் கற்பித்ததுதான்.
திராவிடர் என்பது கற்பனையல்ல
திராவிடர் என்ற பெயர் அப்படி யாராலும் கற்பிக்கப்பட்ட தல்ல. ஆரியர் என்ற பெயரும் அப்படித்தான் என்று, மக்கள் அவரவர் வாழ்ந்து வந்த தேசத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப, அமைந்திருந்த அங்கமச்ச  அடையாளங்களைக் கொண்டு பல இனப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனரோ, அன்று  இரண்டு வெவ்வேறு இனங்களுக்குக் கொடுபட்ட  பெயர்தான் திராவிடர், ஆரியர் எனப்படும்  பெயர்கள். இதே சமயத்தில் கொடுபட்ட பெயர்தான் மங்கோலியர் என்பதும், நீக்ரோக்கள் என்பதும்.   உஷ்ணமான ஆப்பிரிக்கக் காட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்து வந்த சற்று கரடு முரடான மக்களை  நீக்ரோக்கள் என்று அழைத்தனர். நல்ல குளிர்ப்   பிரதேசமான மத்திய ஆசியாவில் வசித்து வந்த தவிட்டு நிற மக்களுக்கு ஆரியர் என்று பெயர் அளித்தனர். அதற்கடுத்தாற்போல் சற்று குட்டையாகவும் சப்பை மூக்குடனும் சீனா, ஜப்பான் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை மங்கோலியர் என்று அழைத்தனர். இப்பிரதேசங்களுக்குத் தெற்கே சற்று சம சீதோஷ்ணமான சமவெளிகளில் வாழ்ந்த தென்னாட்டு மக்களைத் திராவிடர்கள் என்றழைத்தனர்.
பிரிவுக்குக் காரணம் அங்கமச்சமேயன்றி பிறப்பு வேறுபாடல்ல
ஆகவே, அன்று அங்கமச்ச அடையாளங்களைக் கொண்டு மக்களைப் பல இனங்களாகப் பிரித்தார்களேயொழிய, ஒருவன் கடவுளின் நெற்றியில் இருந்து தோன்றியவன் என்றோ, மற்றொருவன் கடவுளின் பாதத்திலிருந்து தோன்றியவன் என்றோ அல்லது கண்ணில் இருந்து வந்தவன், காதிலிருந்து வந்தவன், மூக்கிலிருந்து வந்தவன் என்றோ பிரிக்கவில்லை. இதை நான் பேர் ஊர் தெரியாத எவனோ, மாட்டுக்கும் மனிதனுக்கும் பிறந்த எவனோ எழுதியதாகக் கூறப்பட்டு வரும் எந்த சாஸ்திரங்களைப் பார்த்தோ, வேதங்களைப் பார்த்தோ கூறவில்லை. சரித்திர ஆராய்ச்சி நிபுணர்களின் முடிவை ஆதாரமாக வைத்து எழுதப்பட்டதும், அரசாங்கத்தாரால் அங்கீகரிக்கப்பட்டதும், உங்கள் நாலாவது அய்ந்தாவது வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்குப் பாடப்புத்தகமாக இருந்து வரு வதும், அசல் ஆரியப் பார்ப்பனர்களால், எழுதப்பட்டிருப்பது மான புத்தகங்களைப் பார்த்துத்தான் கூறுகிறேன்.
பார்ப்பனர்களின் பசப்பான பொய்யுரை
"என்னப்பா இன்றைக்குக் கூட்டமாமே என்ன விசேஷம்" என்று யாராவது இன்று  ஒரு ஹோட்டல் அய்யன் கேட்டிருப்பா ரானால், அவர் என்ன கூறியிருப்பார் தெரியுமா? "எவனோ ஈரோட்டிலிருந்து ஒரு அயோக்கியன் வருகிறானாம். அவன் மைலாப்பூர்  பார்ப்பான் ஒருவனை ஏதோ பணங் கேட்டானாம் அவன் கொடுக்க மறுத்துவிட்டானாம். அதிலிருந்து பார்ப் பனர்களைத் திட்டுவதையே தொழிலாகக் கொண்டு பிரசாரம் செய்து வருகிறான். அதுக்கேன் போப்போறீங்க. அவ்வளவுக்கும் பார்ப்பனத் துவேஷமாகவே இருக்கும்" என்றே கூறியிருப்பான். அப்படித்தானாக்கும் என்று நினைத்தே சற்று தயக்கத்துடன்தான் நீங்களும் வந்திருப்பீர்கள்.
யார் என்ன கூறியிருந்தாலும் சரியே. நான் கேட்கிறேன், பண்டிதர்கள், பாவலர்கள் யாராயிருந்தாலும் பதில் கூறும்படி சவாலிட்டுக் கேட்கிறேன்.
"இந்தியா", "இந்து" இன்று வந்த பெயர்கள்
இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு 'இந்தியா' என்ற பெயரோ, 'இந்துக்கள்' என்ற பெயரோ, எங்காவது வழங்கப்பட்டி ருந்ததாக உங்களில் யாராவது கூற முடியுமா? கூற முடியுமானால், அதற்கு உங்கள் வேதத்திலோ, சாஸ்திரத்திலோ, இதிகாசங் களிலோ ஒரே ஒரு ஆதாரமாவது காட்ட முடியுமா? ஆதாரம் கண்டோம் என்று யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்! யாராவது சொல்வார்களானால், மன்னிப்புக் கேட்டுக் கொள்ளத் தயாராயிருக்கிறேனே! நன்றியறிதலோடு என் தவறைத் திருத்திக் கொள்ளவும் தயாராய் இருக்கிறேனே! 200 ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தின்படி இத்தேசத்திற்கு, இந்தியா என்று பெயர் இருந்ததாக யாராவது காட்ட முடியுமா? இந்தியா என்பதும், இந்துக்கள் என்பதும் நடுவாந்தரத்தில், அதுவும் சமீபத்தில் ஆரியர்களால் கற்பித்துக் கொள்ளப்பட்ட பெயர்களே ஒழிய பழைய மூலப் பெயர்கள் அல்ல. ஆனால், ஆரியர், திராவிடர் என்ற பெயர்கள் மட்டும் என்று தோன் றியனவோ என்றுகூட வரையறுத்துக்கூற முடியாத அளவுக்குப் பழைமைப் பெயர்கள். ஆரியர் அல்லாத திராவிடர்களைத்தான் ஆரியர்கள் 'தஸ்யூக்கள்' என்றும், 'சூத்திரர்' என்றும், இழிவான வேலைகளுக்கே உரியவர்கள் என்றும், அரக்கர்கள், இராட் சதர்கள் என்றும் கூறியிருக்கின்றனர். இதை நாம் கூறவில்லை . சரித்திர ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். பண்டித நேரு கூட தம் மகளுக்கு எழுதிய கடிதத்தில், இராமாயணத்தில் குரங்குகள், அரக்கர்கள் என்று பழித்துக் கூறப்படுவது திராவிடர்களைப் பற்றித்தான் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது புல்தரை தேடி வந்த ஆரிய லம்பாடிக் கூட்டம், திராவிடர்களோடு போராடித் தமக்கு அடிமைப்பட்டுப் பணியாட்களாக உழைக்க ஒப்புக் கொண்டவர்களைச் சூத்திரர், பஞ்சமர் என்றும், தம்மை எதிர்த்துத் தம் ஆட்சியை வெறுத்து ஓடியவர்களை அரக்கர்கள், இராட்சதர்கள் என்றும் கூறி வந்திருக்கிறது.
யாகத்தை எதிர்க்கும் நாம் அரக்கர்களாம் சூத்திரர்களாம்
நம்மவர் தென்னாட்டில் பெரும் பகுதியாகவும், வடநாட்டில் ஆரியர் பெரும் பகுதியாகவும் இருப்பது வட நாட்டிலிருந்த திராவிடர்கள் ஆரிய எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் தென்னாட்டை நோக்கி வந்து இருக்கவேண்டும் என்பதைத் தான் காட்டுகிறது. ஆரியர்களின் முக்கிய சடங்காகிய யாகத்தை எவன் பழித்தானோ, கெடுத்தானோ அவனே ஆரியர்களால் அரக்கனென்றும், இராட்சதனென்றும் கூறப்பட்டான். ஆகவே, யாகத்தில் உயிர்ப்பலி கூடாது, அத்தியாவசியமான பொருள்கள் நெருப்பில் போட்டு எரிக்கப்படக் கூடாது என்று கூறும் நம்மைத்தான், அரக்கர் என்கின்றனர் இந்த அன்னக்காவடிப் பார்ப்பனர். இன்றும் நாம் யாகத்தைத் தடுக்கிறோம். பழிக் கிறோம். ஜீவஹிம்சை கூடாது என்று கெஞ்சிக் கூத்தாடிச் சர்க்காருக்கு விண்ணப்பித்துக் கொண்டு யாகங் களின் மீது தடையுத்தரவு வாங்கி வருகிறோம்.
யாகம் என்றால் என்ன? என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். ஆடு, மாடு தின்ன ஆசைப்படும் சில பிராமணப் பைசாசங்கள் ஒன்று கூடிக்கொண்டு, அவற்றின் இரத்தம் வெளிப்பட்டால் ருசி கெட்டுவிடும் என்பதற்காக, அவற்றை வெட்டிக் கறி செய்யாமல், அவை களைக் கட்டிப் போட்டு, அவற்றின் விதைகளைக் கிடுக்கிக் கொண்டு கசக்கிக் கசக்கிச் சாக வைப்பார்கள். ஒரு ஆடோ, மாடோ இவ்விதம் சாக வைக்கப்பட பல மணிநேரங்கூட ஆகலாம். ஆனாலும், அகோர மாமிச பிண்டங்களான இந்த 'யாகப் பிசாசுகளுக்கு' அதுபற்றிக் கவலையேது? இவ்வாறு உயிர்வதை செய்யப்பட்ட மிருகத்தை யாக குண்டத்திலிட்டு, அதில் நெய்யூற்றி வேக வைத்துத் தின்பதுதான் மனுதர்ம சாஸ்திரப்படி செய்யப் படும் யாகம். இப்படிப்பட்ட கோரவதை கூடாது என்று தடுத்த வர்கள்தான் ஆரியரால் அரக்கராக சித்தரிக்கப்பட்டனர்.
சூத்திரனுக்கு யாகம் செய்யும் உரிமை கிடையாது. யாகத்தை வெறுப்பவன் சூத்திரன். ஆகவே, யாகத்தை வெறுக்கும் திராவிடராகிய நாம் ஆரிய சாஸ்திரப்படி சூத்திரர்தான். ஆரியன் ஏது? சூத்திரன் ஏது? என்று நம்மைக் கேட்கிறார்கள் சில அப்பாவி மக்கள். சட்டம் கூறுமா சூத்திரன் இல்லையென்று? சூத்திரன், பிராமணன் இல்லையென்றால், கோயிலில் மணியடிக்கும் தொழில் ஒரே ஜாதிக்காரன் வசமே இருக்கக் காரணமென்ன? கோயில் அர்ச்சகர்கள் யார்? அவர்கள் ஏன் சமஸ்கிருதம் ஓதுகிறார்கள்? சமஸ்கிருதம்தான் தேவபாஷை, மற்றவை மிலேச்ச பாஷை, நீச்ச பாஷை என்று ஆரிய சாஸ்திரம் கூறியிருப்பதை நீ அறிவாயா? திடுதிடுவென்று நாலு ஜாதியாரும் கோயிலுக்குள் போவோம், சற்றிருங்கள் என்று கூறி, பிராமணத் தோழன் உங்களைத் தாண்டிக் கொண்டு மூலஸ்தானத்திற்குள் போய்விடுகிறானா இல்லையா பாருங் களேன்? இதைப் பார்த்த பிறகும் எந்தத் தோழனாவது பிராமணன் சூத்திரன் இல்லை என்று கூறுவானாயின் அவன் அறிவு மலையேறி விட்டது என்றுதானே கூறவேண்டும். ஏன் இந்த உயர்வு தாழ்வுக் கொடுமையை இன்னும் மூடி வைக்கப் பார்க்கிறீர்கள்? உள்ளதை மூடி வைத்தால் அது புரை ஓட ஆரம்பித்துவிடும் என்பதை நீங்கள் அறியீரோ!
வந்த சுதந்திரம் மனிதத் தன்மையைத் தந்ததா?
திராவிட மக்கள்தான் சூத்திரர்களாக இழிவுபடுத்தப் பட்டுள்ளனர். சுதந்திரம் வந்துவிட்டதென்று கூறிவிட்டால் மட்டும் திருப்தி ஏற்பட்டுவிடாது. இந்த உயர்வு தாழ்வு ஒரே மட்டமாக்கப்படவேண்டும். பணம் பெற்றாலும் சூத்திரப் பட்டம் போகாது; பதவி பெற்றாலும் சூத்திரப் பட்டம் போகாது; பட்டங்கள் பல பெற்றாலும் இப்பட்டம் நீங்காது. பணம், பட்டம், பதவி இவற்றை என்று வேண்டுமானாலும் பெற்றுவிடலாம். ஆனால், இந்த இழிவு நீங்குவது மட்டும் அவ்வளவு சுலபமானதல்லவே. சர்.எ. இராமசாமி முதலியார் பட்டம் பல பெற்றவர்தான். பணமும், செல்வாக்கும் உடையவர்தான். பெரிய பதவிகளை எல்லாம் வகித்தவர்தான். வகித்தது மட்டுமல்ல, எல்லாவற்றையும் திறம்பட நடத்தி உலகத்தின் இரண்டாவது அறிவாளி என்று அமெரிக்க மக்களாலேயே புகழ்ந்து பேசப்பட்டவர்தான். இன்றும் திவான் பதவியில் இருந்து வருபவர்தான் என்றாலும், அவர் சூத்திரர்தானே? அவ்விழிவு அவரது பட்டத்திற்கோ, பணத்துக்கோ, பதவிக்கோ பயந்து ஓடிவிடக் காணோமே! ஆகவே, இவ்விழிவு நீங்க வேண்டுமென்பதுதான் பட்டம், பணம், பதவி இவை பெறுதலைவிட மகா முக்கியமான காரியமாகும்.
இவ்விழிவு நீங்கினால் தம்பிழைப்புப் போய்விடுமே என்று அஞ்சுபவர்களுக்காகவோ அல்லது அவர்களுக்காகப் பரிதாபப்படுபவர்களுக் காகவோ நாம் இவ்விழிவை இதுவரை மறந்திருந்தால்தான், ஒரு காலத்தில் உலகத்திற்கே நாகரிகம் கற்பித்துக் கொடுத்த நாம் இன்று ஆரியர்களால் சின்னப்படுத்தப் பட்டிருக்கிறோம்.
நாம் சுதந்திரம், சுயேச்சை பெற்றுவிட்டால் போதுமா? நாம் மனிதத் தன்மை பெறவேண்டாமா? ஒருவன் உயர்ஜாதி மற்றொருவன் இழிஜாதி என்ற பாகுபாடு இருக்கும் வரையிலும், நாம் எப்படி மனிதர்களாகி விட்டோம் என்று கூறிக் கொள்ள முடியும்? இந்த நாட்டு மக்கள் மனிதத் தன்மை அடைவதற்காக நான் செய்துவரும் இவ்வேலையை யார் ஒப்புக்கொண்டாலும், நான் அவருக்குக் கையாளாயிருந்து பணியாற்றத் தயாராயிருக்கிறேனே! நான் வேண்டியது இழிவு நீக்க வேலையே ஒழிய தலைமைப்பதவி அல்லவே.
யார் கவலைப்பட்டார்கள்?
இதுவரை இவ்விழிவு பற்றி யாராவது கவலை எடுத்துக் கொண்டதுண்டா? எத்தனையோ ரிஷிகள், எத்தனையோ நாயன்மார்கள், எத்தனையோ குருமூர்த்திகள், எத்தனையோ ஆச்சாரியர்கள் தோன்றிய நாடுதானே இது. இவர்களுள் எத்தனை பேர் இவ்விழிவு நீங்க என்ன முயற்சி எடுத்துக் கொண்டார்கள்? தெய்வீகப் பக்தியுள்ள சிலர் ஜாதிப் பிரிவினையை எதிர்த்தனர் என்றாலும், ஆரியம் அதற்கு அடிபணியவில்லையே? மூட நம்பிக்கைகளை வெறுத்த சித்தர்களை நாஸ்திகர் என்று கூறி, மக்கள் அவர்களைப் பின்பற்றாதபடி செய்துவிட்டதே? ஜீவஹிம்சை கூடாது என்று கூறிய பவுத்தர்களையும், சமணர்களையும் கழுவிலேற்றி விட்டதே? வருணாசிரமத்தைப் பாதுகாக்கத்தானே இவ்வளவும் செய்யப்பட்டது. அதுவும் அந்த வருணாசிரம தர்மத்தில் ஆரியத்தின் பிழைப்புச் சிக்கிக் கொண்டதால்தானே அவ்வளவும் செய்யப்பட்டது.)
கீதையை எறிந்து கைகழுவி திருக்குறளைக் கையிலெடு!
பல்லாயிரக்கணக்கான பெண்களைக் கெடுத்த காமாந்த காரனான கிருஷ்ணன் ஏன் கடவுளாக்கப்பட்டான்? அவனது உளறல் மொழிகள் அடங்கிய கீதை ஏன் நித்திய பாராயண மாக்கப்பட்டு விட்டது? மகா ஒழுக்க சீலரான திருவள்ளுவர் ஏன் கடவுளாக்கப்படவில்லை? அவரது பொய்யாமொழிகள் அடங்கிய குறள் ஏன் பாராயணமாக்கப்படவில்லை? இவற்றை நீ சிந்தித்துப் பார்த்ததுண்டா? கிருஷ்ணனும், கீதையும் வருணா சிரம தர்மத்தை (ஜாதிப் பிரிவினையை) ஆதரிப்பதுதான், ஆரியத்தின் போற்றுதலுக்குக் காரணம் என்பதை நீ இன்றா யினும் உணருவாயா? உன் திருவள்ளுவரும் திருக்குறளும் ஆரியத்தால் போற்றப்படாமைக்குக் காரணம் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்'' என்ற கூற்றுத்தான் என்பதை உணர்வாயா? இன்றாயினும் உணர்வு பெற்று கிருஷ்ணனையும், கீதையையும் தூக்கியெறிந்து விட்டு உண்மைத் திராவிடனான வள்ளுவனையும், அவன் குறளையும் அத்திட்டத்தில் வைப்பாயா?
ஏன் தம்பி இவ்வளவு வடநாட்டுப்பற்று?
ராமகிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப் பார். உன் இராமலிங்கம் எந்த விதத்தில் அவரைவிடத் தாழ்ந்தவர்? அவரை எந்த வடநாட்டானாவது போற்றக் கண்டுள்ளாயா? உன்னுடைய ஒரு நாயன்மாரையாவது வடநாட்டானுக்குத் தெரியுமா? கபிலன் கூறியது என்னவென்று நீ அறிவாயா? ஏன் தம்பி உனக்கு இவ்வளவு வடநாட்டு ஆரியப்பற்று? இனியேனும் இன உணர்வு கொண்டெழு தம்பி! உன் இனத்தான் எந்தவிதத்திலும் அறிவிலோ, ஆற்றலிலோ தாழ்ந்தவன் அல்ல என்பதை இன்றே உணர்வாய்!
ஒரு குலத்துக்கொரு நீதியை ஒழித்திட வரிந்து கட்டு!
இதை எல்லாம் கூறினால் என்னை வகுப்புத் துவேஷி என்கிறாயே! பூசணிக்காய் அளவு எழுத்தில் பிராமணாள் ஹோட்டல் என்று போர்டு போட்டுக் கொள்கிறானே அதை ஏன் அனுமதிக்கிறாய்? ஜாதி பேதம் பாராட்டுவதில்லையென்று பெருமையடித்துக் கொள்ளும் தேசியத் தோழனே! உன் சுதந்திர ராஜ்யத்தில், நடைமுறையில் இருந்துவரும் இந்து லாவில், ஜாதிக்கோர் நீதி ஏன் கூறப்பட்டிருக்கிறது? இந்துலா சட்ட புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே போடப்பட்டிருக்கிறதே; ''இச்சட்டம் மனுதர்ம சாஸ்திரம் மற்றுமுள்ள இந்துமத சாஸ்திரங்கள் இவற்றை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கிறது: இச்சட்டத்தில் ஏதாவது சந்தேகம் வருமானால் நீதிபதி தானாக முடிவு கட்டக் கூடாது; இச்சாஸ்தி ரங்களில் வல்லவர்களான சாஸ்திரிகளைக் கொண்டுதான் முடிவு கட்ட வேண்டும் என்று எழுதியிருக்கிறதே'' ஜாதி, பேதம் பாராட்டாத சாஸ்திரிகளை எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? அந்தச் சட்டத்தை இன்னும் புரட்டிப் பார்த்தால் ஒரு சூத்திரனுக்கு ஒரு பார்ப்பனத்தியிடம் பிள்ளை பிறக்குமானால், அப்பிள்ளைக்குச் சூத்திரனுடைய சொத்தில் பங்குரிமை இருக்குமென்றும், அதேபோல், ஒரு பார்ப்பனனுக்கு ஒரு சூத்திரச்சியினிடம் ஒரு பிள்ளை பிறக்குமானால், அப் பிள்ளைக்கு பார்ப்பனன் சொத்தில் பங்குரிமை இருக்காதென்றும் கூறப்பட்டிருக்கிறதே. இது உன் கண்களுக்கு ஏன் படாமற் போகிறது? இந்த ஒரு குலத்துக்கொரு நீதியை அனுமதிக்கும் சட்டத்தை மாற்ற உனக்கு ஏன் கவலையில்லை?
முதலில் இவைகளைச் செய்!
பாடுபடும் நான் ஏன் சூத்திரன்? பாடுபடாத சோம்பேறிப் பார்ப்பான் ஏன் பிராமணன்? என்றால் மட்டும் உனக்குப் பொத்துக் கொண்டு வரவேண்டுமோ கோபம்? சிந்திக்கும் அறிவு உனக்குச் சற்றேனும் இருக்குமானால், என்னை வகுப்புத் துவேஷி என்று கூற உனக்கு நாக்கு நீளுமா? ஏன் இந்தப் பித்தலாட்டம்? நாலு ஜாதி என்று பிரித்துக் கூறும் சாஸ்திரங்களை ஏன் அனுமதிக்கிறாய்? ஜாதி பிரிவினை பற்றிக் கூறும் பகுதிகளைச் சாஸ்திரங்களிலிருந்து எடுத்து விட்டாயா? அல்லது அவற்றை எரித்துவிட்டாயா? எங்களை வகுப்புத் துவேஷி என்று கூறுவதற்கு, ஹோட்டல்காரனை மனிதன் ஹோட்டல் என்று போட்டுக் கொள்ளும்படி சொல்! இந்துலாவில் ஜாதிப் பற்றி இருப்பனவற்றையெல்லாம் திருத்தியமை! சாஸ்திரங்களையெல்லாம் கொளுத்தி விடு! ஜாதி பிரிவினைப் பற்றிக் கூறும் சகலத்தையும் அழி! கோயிலில் மணியடிக்கச் சகல ஜாதிக்கும் உரிமையுண்டு என்று சட்டம் செய்! பிறகு நான் வகுப்புப்பற்றிப் பேசினால் வாயேன் சண்டைக்கு? அதுவரை பொறுத்துக் கொண்டிரு தம்பி! இன்றேல் உன் வண்டவாள மெல்லாம் அம்பலமாகி விடப் போகிறது.
சமபந்தியில் பார்ப்பான் என்றால் சந்தோஷப்படலாமா நீ?
பார்ப்பானெல்லாம் இப்போது சம்பந்தி போஜனம்கூட செய்கிறார்களாம் ஜாதி பாராட்டாமல். எங்கள் வீட்டுச் சோறு ருசியாய் இருந்தால் எந்தப் பார்ப்பானும் தான் சாப்பிடுவான். உண்மையில் எத்தனை பிராமணர்கள் தங்கள் வீட்டில் ஒரு பறையனையோ, சக்கிலியையோ தம்முடனிருந்து சாப்பிட அனுமதிப்பார்கள்? நீ சாப்பிடுவதைக்கூட நாங்கள் பார்க்கக் கூடாது என்கிறாயே! அதுதான் போகட்டும் என்றாலும், நான் வெட்டிய குளத்துத் தண்ணீரானாலும், அதையும் திரை போட்டு மறைத்துக் கொண்டுதானே குடிக்கிறாய்!
ஆலயப்பிரவேசம் உண்மை என்றால்
அவனையும் மணி அடிக்கச் செய்!
பஞ்சமனைக் கோயிலில்கூட அனுமதித்து விட்டார்களாம்! அவனும் முடிச்சவிழ்க்க வேண்டுமென்று விட்டாயா? அல்லது மோட்சத்திற்குப் போகட்டுமென்று விட்டாயா? மோட்சத்திற்குப் போவதற்காகவே விட்டிருந்தால், இத்தனை நாள் அடித்து அனுபவித்த அந்த மணியைக் கொஞ்சம் அவனிடம் கொடேன்! அவனும் ஆசை தீர அடிக்கட்டுமே! செய்வாயா? செய்தால் சாமி ஓடிப்போகுமே! அல்லது செத்துப் போகுமே! அப்புறம் உன்னை யார் காப்பாற்றுவார்கள்? ( இந்த அக்கிரமமெல்லாம் செய்ய உனக்கு உரிமையுண்டு. நான் ஏன் சூத்திரன் என்று கேட்பதற்குக்கூட எனக்கு உரிமையில்லையா? கேட்டால் கலகம் செய்கிறேன் என்பதா? உனக்குப் பழக்கமாகிவிட்டது, உன் புத்தி அடிமைத்தனத்தால் சின்னப் புத்தியாகிவிட்டது. ஆகவே, பொறுத்துக் கொண்டிருக்கிறோம். மானமுள்ள, அறிவுள்ள, வேறு எவன் இவ்விழிவைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? வேறு எந்த நாட்டிலாவது சூத்திரனும், பஞ்சமனும் உண்டா? இந்த உயர்வு தாழ்வு இருக்கும் வரைக்கும் இது ஒரு ஞான பூமியாகவும் ஆக முடியுமா?


'குடிஅரசு' - சொற்பொழிவு - 08.05.1948
எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தந்தை பெரியார்
மாணவர் கழகத்தின் சார்பாக அழைக்கப்படும் யாரும் மாணவர்களைப் புகழாமல் செல்வதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். மாணவர்கள் நிலை நிரந்தரமானதல்ல; என்றுமே ஒன்றுபோல் இருப்பதில்லை. நேற்று குழந்தை களாய் இருந்தவர்கள்தான் இன்று பள்ளிகளிலும், கல்லூரி களிலும் மாணவர்களாய் படித்து வருகிறீர்கள். நாளை நீங்கள்தான் பெரியவர்களாய் வாழ்க்கை நடத்தப் போகி றீர்கள். இந்த நிலையற்ற பருவத்தில் எது நல்ல காரியம் என்று உங்களால் சிந்தித்துச் சுலபத்தில் அறிந்துகொள்ள முடியாது. மாணவர்கள் தாமாகவே ஒரு நல்ல காரியத்தை ஆராய்ந் தறிந்து அதைச் செய்து முடிக்கக் கூடிய சக்தி படைத்தவர்கள் என்று என்னால் நினைக்க முடியவில்லை. அவர்களைக் கொண்டு பல நல்ல நல்ல காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்றுதான் நான் அபிப்பிராயப்படுகிறேன். ஆகவே, அவர்கள் தம்மைத் தம்முடைய திரண்ட சக்தியை நல்ல தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படிக் கூறுவதற்காக மாணவர்கள் என்மீது கோபித்துக் கொள்ளக் கூடாது. மாணவர்கள் தலைவர் இட்டக் கட்டளைப்படி நடக்கக் கூடியவர்கள். சொல்லிக் கொடுப்பதைப் படிக்கக் கூடியவர்கள். ஆதலால் தமக்கு எல்லாம் தெரிந்துவிட்டதாக அவர்கள் ஒருபோதும் நினைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி நினைப்பவர்களிடமிருந்துதான் காலித்தனம், கட்டுப்பாட்டுக்கு அடங்காத தன்னிச்சைத்தனம் விரைவில் புறப்படுகிறது. ஆகவே, அவர்கள் மிக ஜாக்கிரதையாக விஷயங்களைச் சிந்திக்கவேண்டும். தம்மால் கூடுமான அளவுக்கு நல்ல தலைவர்களை அவர்கள் தேடித் திரிதல் வேண்டும். எந்த அளவுக்கு தாம் அன்பு செலுத்துகிறார்களோ அந்த அளவுக்கேனும் தம்மீது அன்பு செலுத்தக் கூடிய, தம்மை நல்வழிப்படுத்துவதில் ஆசையும், அக்கறையும் உள்ள தக்க பெரியார்களைத் தேடிப் பிடிக்கவேண்டும் அவர்கள். அந்த வழியில் நாங்கள் முயற்சி செய்து அவர்களில் ஒரு சிலரையாவது எங்களையும், எங்கள் கொள்கைகளையும் நம்பச் செய்து, அப்படிப் பெற்ற சிலரை நாங்கள் எங்களுக்குச் சொந்தமான பெருஞ்சொத்தாக மதித்து நாங்கள் மகிழ்ந்து வருகிறோம்.
மாணவர்களின் உண்மையான தகுதி
மாணவர்கள் நல்ல சோல்ஜர்கள்; நல்ல ஜெனரல்களல்ல. மாணவர்கள் நல்ல சிப்பாய்கள், நல்ல கமாண்டர்களல்ல. ஆகவே, நல்ல சிப்பாய்களைப்போல அவர்கள் பல கட்டு திட்டங்களுக்குட்பட்டு நடக்கவேண்டும்.
தொண்டின் முன்பு சோதனை
மாணவர்கள் பொது நலத் தொண்டில் ஈடுபட நினைக் கும்போது, முதலில் பொதுநலத் தொண்டில் ஈடுபடத் தமக்குத் தகுதியிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். தங்கள் நலன்களை விட்டுக் கொடுக்க, அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்க அவர்கள் தயாராக இருக்கவேண்டும். தங்கள் உயர்வைக் கருதாமல், தங்கள் பட்டத்தைப் பெரிதாகக் கருதாமல், தங்களை சாதாரண சராசரி மனிதனாகக் கருதிக் கொள்ள அவர்கள் முதலில் சம்மதிக்க முடியுமா என்று பார்த்துக் கொள்ளவேண்டும். தங்கள் வாழ்க்கையையும், அவர்கள் கூடுமான அளவுக்குச் சராசரி மனிதனுடைய வாழ்க்கைக்கு உட்பட்டதாக ஆக்கிக் கொள்ளவேண்டும்.
தற்காத்தல்
ஒரு பக்குவமடைந்த பெண்ணை எப்படி எங்கு வெளியே சென்றால் கெட்டுப் போகுமே என்று தாய், தந்தையர் கவலையோடு காப்பாற்றி வருகிறார்களோ, அதேபோல், மாணவர்கள் தங்கள் புத்தியை, தங்கள் சக்தியைக் கண்ட இடத்திலெல்லாம் செலுத்தாமல் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.
தன்னலம் பேணாமை
நீங்கள் உங்களைச் சாதாரண மனிதர்களாக நினைத்துக் கொள்ளவேண்டும். உங்கள் வாழ்க்கைச் சவுகரியங்களையும் எவ்வளவு குறைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்ளவேண்டும். உங்களுக்கு மிகமிக அடக்கம் வேண்டும். நீங்கள் மிகமிக தன்னலமற்றவர்களாய் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட மாணவர்களால்தான் ஏதாவது உருப்படியான நன்மை ஏற்படும். மாணவர்கள் தம் மைனர் வாழ்க்கைத் தன்மையை அறவே விட்டொழிக்க வேண்டும். மைனர் வாழ்க்கை நடத்தக் கூடியவர்களை இயக்கத்தில் சேர்த்துக் கொண்டால், அவர்கள் தம் சொந்த வாழ்விற்காக இயக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, தம் சொந்த வாழ்விற்குத் தடை ஏற்படும்போது பேசாமல் வெளி யேறிவிடுவார்கள். அல்லது எதிர்ப்பு வேலை செய்வார்கள். அல்லது எதிரிகள் கையாளாக ஆகிவிடுவார்கள். அப்படிப் பட்ட நொண்டி மாடுகள் நுழையவொட்டாமல், மாணவர் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும்.
தொண்டிற்குத் தகுதியற்றோர்
பொதுத் தொண்டுக்கு வந்த உடனே தங்களைப் பெரிய மேதாவியாக நினைத்துக் கொள்ளக் கூடியவர்களும், தங்கள் தகுதிக்கு மேலாக போக போக்கியம், பெருமை, தங்களுக்குக் கிடைக்கவேண்டிய விகிதாச்சாரத்திற்கு மேலாக மதிப்பு, தங்களுக்குக் கிடைக்கவேண்டுமென்று நினைப்பவர்களும், எந்த இயக்கத்திலும் இருக்கத் தகுதியற்றவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்டவர்களால் பொதுவாழ்க்கையில் எப்போதும் எந்தக் கொள்கையிலும் நிலைத்திருக்க முடியாது.
அபாயகரமான நோய்
பொதுநலத் தொண்டர் எவருக்கும் உள்ளத்தில் அடக்கம் வேண்டும். தான் என்ற அகம்பாவம் கூடாது; ஏமாற்றம் ஏற்படுமானால், அதைச் சகித்துக் கொள்ளக்கூடிய பொறுமை வேண்டும். மாணவர்களுக்கு மற்றுமொரு கெட்ட நோய் இருந்து வருகிறது. ஒன்றிரண்டு தடவை மேடை ஏறினால் போதும். ஒன்றிரண்டு தடவை கைதட்டல் கிடைத்துவிட்டால் அதைவிட மேலாகப் போதும். பத்திரிகைகளில் அவர்களால் எழுதப்பட்ட ஒன்று, இரண்டு கதைகளோ பாட்டுகளோ வியாசங்களோ வந்துவிட்டால் போதும். உடனே தங்களைப் பெரிய தலைவர்கள் என்றும், ஆசிரியர்கள் என்றும், தங்களை மற்றவர் யாவரும் மதிக்கவேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு விடுவார்கள். இது மகா அபாயகரமான நோய். இந்நிலை வந்துவிட்டால் எப்படிப்பட்ட இயக்கமும், கொள்கையும் அவர்களை சீக்கிரம் கைவிட்டு விடும். அதற்கப்புறம் அவன் சீக்கிரத்தில் பொது வாழ்வில் வெறுப்பேற்பட்டு எதற்கும் தகுதியற்றவனாகி விடுவான். ஆகவே தான் அடக்கம் வேண்டும் என்று அவ்வளவு வற்புறுத்திக் கூறவேண்டியிருக்கிறது.
எனது அனுபவம்
நானும் மாணவனாய் இருந்திருக்கிறேன். ஆணவம் பிடித்த மைனராயும் இருந்திருக்கிறேன். சர்வாதிகாரக் காலியாயும் இருந்திருக்கிறேன். ஆனால், பொதுத் தொண்டுக்கு வந்த பிறகு சகல சுகத்தையும் கைவிட்டேன். என்னை ஒரு சாதாரண மனிதனாகவே கருதிக் கொண்டு யாராவது கூப்பிடும் வரையில் பின்னணியிலேயே இருந்து வந்தேன். அதனால்தான் என்னால் சலிப்பு இல்லாமல், ஏமாற்றமில்லாமல் பொதுத் தொண்டைத் தொடர்ந்து செய்து வர முடிகிறது. எனக்குரிய பங்கோ மரியாதையோ கிடைக்க வில்லையே என்று நான் ஒரு நாளும் ஏமாற்றமடைந்ததில்லை.
என் வாழ்க்கையில் நடைபெற்ற சாதாரணச் சம்பவம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அது, 1916 அல்லது 1917 இல் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். அப்போது நான் ஈரோடு முனிசிபல் சேர்மன் ஆக இருந்த காலம். அப்போது நான் ஒரு பெரிய புரஹாம் வண்டி வைத்திருந்தேன். ஊத்துக்குழி ஜமீன்தார், ஆனரபிள் சம்பந்த முதலியார் மற்றும் 3, 4 பிரபலஸ்தர்கள் என் வீட்டிற்கு வந்திருந்தனர். எல்லோருமாகச் சேர்ந்து ஒரு இழவு வீட்டுக்குத் துக்கம் விசாரிக்கப் போகவேண்டியிருந்தது. ஜமீன்தார் முதலிய எல்லோரையும் வண்டியில் அமர்த் தினேன். வண்டியில் மேற்கொண்டு இடமில்லை. நான் ஒருவன்தான் பாக்கி. வண்டி அவர்களைக் கொண்டுபோய் விட்டுவிட்டுத் திரும்பி வரவேண்டுமென்றால் நேரமாகி விடும். ஆதலால் என்னையும் உடன்வரவில்லையா என்று ஜமீன்தார் கேட்டதற்கு, இதோ பின்னால் வருகிறேன் என்று பதில் கூறி, வண்டியை விடு என்று சொல்லிவிட்டு, அவர்கள் அறியாமலே நான் வண்டி மீதேறி கோச்மேன் பக்கத்தில் அமர்ந்துகொண்டேன். குறிப்பிட்ட இடத்தை வண்டி அடைந்ததும், அவர்கள் இறங்கவும், கோச்மேன் பக்கத்திலிருந்து நான் இறங்குவதைப் பார்த்து அவர்கள் திடுக் கிட்டார்கள். அன்றையிலிருந்து என்னை அவர்கள் ஒருபடி உயர்வாகவே மதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜமீன்தார் என்னைக் கண்டால் பெரிய ஞானி என்று குனிந்து கும்பிடுவார். நான் அவரைப் பரிகாசம் செய்வேன். கோச்மேன் பக்கத்தில் உட்காருவதை நான் கேவலமாக மதிக்க வில்லை என்பதையும், விருந்தினர் களுக்காக எனது சவுகரியத்தை எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்து வருகிறவன் என்பதையும், அவர்கள் அறிந்து கொண்ட தினால்தான் என்னை மிக மேலானவனாகக் கருதத் தொடங்கிவிட்டார்கள்.
விட்டுக் கொடுப்பது வீணானதோ இழிவானதோ அல்ல
இப்படி நம் சவுகரியத்தைப் பிறருக்காக விட்டுக் கொடுப்பது இழிவல்ல. தப்பிதமுமல்ல. நான் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிய போதுகூட நான் மூன்றாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வேன். ராஜகோபாலாச்சாரி யாரும், திரு.வி.க.வும் இரண்டாம் வகுப்பில்தான் பிரயாணம் செய்வார்கள். திரு.வி.க. அவர்கள் அதற்காக வெட்கப்படுவார், கூச்சப்படுவார். உடம்புக்கு சவுகரியமில்லாதபோது நீங்கள் இரண்டாம் வகுப்பில் பிரயாணம் செய்வது தவறாகாது என்று நான் கூறி அவர்களைச் சமாதானப்படுத்துவேன். மாணவர்கள் இம்மாதிரி இளமை முதற்கொண்டே தம் வாழ்க்கைச் சவுகரியத்தை மிக எளிதாக்கிக் கொள்ள வேண்டும். சாதாரண உணவில் திருப்தி அடையவேண்டும். நான் காங்கிரஸ் தலைவனாய் இருந்தபோதுகூட எவ்வ ளவோ தர்க்க வாதம் செய்வேன். ஆயினும் ராஜகோ பாலாச்சாரியார், திரு.வி.க. ஆகியவர்களின் ஆலோசனை யின் பேரில்தான் எதையும் செய்து வந்தேன். எதிலும் அவர்கள் அபிப்பிராயப்படியே செய்வேன். விட்டுக் கொடுப்பதில் தலைவர்களை மதிப்பதில், நான் மிக்க தாராளமாக நடந்து வந்தேன். அந்தப்படியே நீங்களும் எதிலும் பிறருக்குக் கொஞ்சம் விட்டுக் கொடுக்கத் தயாராகத்தான் இருக்கவேண்டும்.
மாணவர்களுக்கே பாத்தியதை
திராவிடர் கழகம் கடைப்பிடித்துள்ள கொள்கைகள் மிகக் கஷ்டமானவைகள். திராவிடர் கழகம் கூறும் பரி காரங்கள்கூட மிகக் கசப்பானவையாகத்தான் இருக்கும். இக்கொள்கைகள் பெரும்பாலும் மாணவர்களால்தான் ஈடேற்றப்பட வேண்டும். மாணவர்கள்தான் தம் பின் சந்ததி யைப்பற்றி அதிகம் கவலைப்படவேண்டியவர்கள். ஆகவே, அவர்கள் தன் முதியோரைக் காட்டிலும் அதிக உற்சாகத் தோடு திராவிடக் கழகத்தில் சேர்ந்து பணியாற்றவேண்டும்.
அறிவின் அடையாளம் அகிம்சை
மாணவத் தோழர்களுக்கு அகிம்சையில் நம்பிக்கை இருக்கவேண்டும்; புண்ணியம் சம்பாதித்துக் கொள்வதற்காக அல்ல. ஹிம்சை சகலருக்கும் பொது, யாவருக்கும் துன்பத்தைக் கொடுக்கக் கூடியது என்பதற்காகத்தான்.
நமக்கு அறிவிருப்பதே நம் காரியங்களை இம்சையின்றி சாதித்துக் கொள்ளத்தான். அறிவு இருக்கும்போது மிருகத் தனத்தை ஏன் நாம் கடைப்பிடிக்கவேண்டும். மனிதத் தன்மைக்கு மிக அவசியமானது அகிம்சைதான்.
நாம்தானே இந்நாட்டில் பெரும்பான்மை மக்களாக இருக்கிறோம். பலாத்காரத்தை வளர்த்தால் நாம்தானே அதற்குப் பலியாக நேரிடும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். முடிவாக ஒன்று சொல்லுகிறேன். நீங்கள் நல்ல எளிய முறையில் வாழப் பழகிக் கொள்ளவேண்டும். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை இலகுவானதாக, இன்ப மானதாக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு அளவற்ற பொறுமையும், அடக்கமும் கீழ்ப்படிதலும் வேண்டும்.
(21.2.1948 அன்று திருச்சியில் நடந்த திராவிடர் மாணவர்கள் மாநாட்டில், பெரியாரவர்க

6.1.19


மார்கழிப் பீடை
மார்கழி மாதம், பீடை மாதம்; அமங்கலமான மாதம்; ஆகையால் இந்த மாதத்தில், விடியற்காலத்தில் பஜனைகள் செய்ய வேண்டும்; கடவுள் என்பவர் மேல் தோத்திரங்கள் செய்ய வேண்டும்; காலையில் பொங்கல்கள் செய்து சாமிகளுக்குப் படைக்க வேண்டும்; நாமும் வயிறு நிரம்பச் சாப்பிட வேண்டும்; வீடுகள்தோறும் கோலம் போடவேண்டும்; வாயிற் படியில் புஷ்பங்கள் பரப்ப வேண்டும்; இரவில் தாதன் ஊர் முழுதும் சுற்றிப் பாட்டுப் பாட வேண்டும்; சேமக்கலம் கொட்டவேண்டும்; தப்புத்தட்ட வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் பீடை நீங்கும் என்று செய்து வருகின்றனர்.
கோயில்களிலும் இந்த மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே மேளதாளங்கள் முழங்குகின்றன; பூசைகள் நடைபெறுகின்றன; பொங்கல்கள் நைவேத் தியம் பண்ணப்படுகின்றன, கோயில் அர்ச்சகர்களும், வேலைக்காரர்களும் பொங்கலைப் பங்கு போட்டுக் கொள்கின்றனர். மூக்கால் மூன்று பருக்கை விழும்படி வயிற்றுக்குள் கொட்டுகின்றனர். வண்ணான் சாலைப் போல் வயிற்றைப் பெருக்க வைக்கின்றனர். பின்பு அஜீரணத்தால் அவதி அடைகின்றனர்.
வைதீகர்கள் வீடுகளில் காலையில் எழுந்தவுடன், சைவர்களாயிருந்தால், திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவை என்னும் பாடல்கள் ஓதப்படுகின்றன. வைணவர்களாயிருந்தால் நாலாயிரப் பிரபந்தத்தில் உள்ள ஆண்டாள் பாடிய திருவெம்பாவைப் பாடல்களை ஓதுகின்றனர்.
இவைமட்டும் அல்ல, மற்றொரு அதிசயமும் உண்டு. அது மிக வேடிக்கையான விஷயம். வைணவர்கள் பஜனைமடம் வைத்திருந்தால் அவர்கள் விடியற்காலை 4 மணிக்கே எழுந்திருப்பார்கள். வாலிபர்கள் மாத்திரம் அல்ல, சிறு குழந்தைகளும், வயதானவர்களும், வாலிபர்களும் விழித்துக் கொண்டு எழுவார்கள். குளிரைப் பொருட்படுத்தமாட்டார்கள்; பனியைப் பாராட்ட மாட்டார்கள்; கால்கைகள் குளிரினால் உதறும்; பற்கள் கப்பிரோட்டில் ஜட்கா வண்டி போவதுபோல் கடகட வென்று குளிரினால் ஆடும். அப்படியிருந்தும், பக்தியென்னும் முட்டாள்தனம், அவர்களை எழுப்பி விடுகிறது. இவர்களில் சிலர் குளிப்பார்கள்; குளிருக்கு அதிகமாகப் பயந்தவர்கள் கால் கைகளைச் சுத்தம் பண்ணிக் கொண்டு பட்டை நாமங்களைத் தீட்டிக் கொள்வார்கள். தாளம், மிருதங்கம், தம்பூரு அல்லது ஆர்மோனியத்தையும் தூக்கிக் கொள்வார்கள், தெருத் தெருவாக பஜனை செய்து கொண்டு வரு வார்கள். இதைப் போலவே சைவ பஜனை மடம் வைத்திருக்கின்ற ஊர்களில் சைவர்கள் விபூதியைப் பட்டையடித்துக் கொள்வார்கள். ருத்திராக்கங்களைச் சுமந்து கொள்வார்கள். தங்களுடைய முஸ்தீப்புகளுடன் பாடிக்கொண்டு புறப்பட்டு விடுவார்கள். இந்த பஜனைக் கோஷ்டியினர் அரிசிப் பிச்சை வாங்குவதும் உண்டு.
இக்காட்சிகள், நாகரிகமுள்ள நகரங்களிலும் நாட்டுப் புறங்களிலும் நடைபெறுகின்றன. இப்பொழுது இவைகள் எல்லாவிடங்களிலும் இல்லை என்றாலும் சில இடங்களில் இருக்கின்றன. எந்தக் காலத்திலும் பைத்தியக்காரர்கள் இருந்துதானே தீருவார்கள்? அதற்கு நாமென்ன செய்யலாம்? நமக்குத் தெரிந்த மருந்தைக் கொடுக்கலாம். இவ்வளவுதான் முடியும்.
இச்செயல்களால், சாதாரண மக்களின் மனத்தில் உண்டாகும், பக்தியும், விசுவாசமும் அதிகம். அவர்கள் இந்தப் பஜனைக் கோஷ்டியாரைப் பக்த சிரோன் மணிகளாகக் கும்பிடுவார்கள்! நமஸ்கரிப்பார்கள். என்ன அறிவு! எவ்வளவு கேவலம்!
இது போகட்டும், இவர்கள் காலையில் எழுந்து தண்ணீரில் விழட்டும்; சன்னிபிறந்து சாகட்டும்; விடியற்காலத்தில் பொங்கல் சோற்றையும், பலகாரங்களையும் உண்ணட்டும்; அஜீரணத்திற்கு உள்ளாகட்டும்; காலரா நோய்க்கு ஆளாகட்டும்; பிறருக்கும் அந்நோயைப் பரவ வைக்கட்டும்; எந்தச் சந்தியிலாவது போகட்டும்; அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. இதன் மூலமாக மக்கள் மனத்தில் முட்டாள்தனத்தை ஊட்டுகிறார்களே என்றுதான் கவலைப்படுகிறோம்.
மார்கழி மாதச் சனியன் இவ்வளவோடு விட்டதா! இல்லை! இல்லை! திருவிழாவுக்காக, வைகுண்ட ஏகாதசிக்காக, ஆருத்திரா தரிசனத்திற்காக, சீரங்கத் திற்கு ஓடச்செய்கிறது, சிதம்பரத்திற்கு ஓடச் செய்கிறது. குளிர்காலத்தில் - பனிக்காலத்தில் - காலராக் காலத்தில் எவ்வளவு தொல்லை! எவ்வளவு அலைச்சல்! எவ் வளவு பணச்செலவு! எவ்வளவு மூட நம்பிக்கை! எவ்வளவு முட்டாள்தனம்!
எதற்காகச் சீரங்கப் பயணம், எதற்காகச் சிதம்பர யாத்திரை! எல்லாம் மோட்சம் பெறத்தான்; மோட்சத் திற்கு இவ்வளவு கஷ்டம் ஏன்? மோட்சம் என்றால் சாவு என்றுதானே அர்த்தம்! இதற்கு ஒரு சாண் கயிறு கிடைக்கவில்லையா? அல்லது நமது அழகர் சொல்லுவது போல அரையணாவுக்குக் கவுரி பாஷாணம் கிடைக்கவில்லையா? இதுவும் இல்லா விட்டால், ரயில் தண்டவாளத்தில் போய்ப் படுத்துக் கொள்வதுதானே! இந்த மாதிரி சுகாதாரமற்ற பருவ காலத்தில் யாத்திரை செய்வதால் என்ன பலன் கிடைக்கிறது! பணம் செலவாகிறது; உடல் நலம் குன்றுகிறது, காலம் வீணாகிறது, தொற்று வியாதிகள் வருகின்றன; இவைதானே லாபம்! வேறென்ன? அறிவிருந்தால் ஆலோசித்துக் கொள்ளுங்கள்.
இம்மாதிரியான துன்பங்கள் ஏன் வருகின்றன? காரணம் என்ன? யோசித்துப் பார்த்தீர்களா? நீங்கள் யோசிக்காவிட்டாலும் நான் யோசித்துப் பார்த்தேன், சொல்லுகிறேன். மதம் என்னும் மடத்தனம், பக்தி என்னும் முட்டாள்தனம், மோட்சம் என்னும் கிறுக்கு, முன்னோர் வழக்கம் என்னும் மயக்கம், இவைகளால் தான் நாம் கெட்டலைகிறோம்! சீரழிகிறோம்! நான் சொல்லுவதைப் பற்றி திடீரென்று கோபித்துக் கொள்ள வேண்டாம். புத்தியைக் கொஞ்சம் செலவழியுங்கள்! மூளையைக் கொஞ்சம் உருகச் செய்யுங்கள்! விளங்கும்.
மார்கழி மாதத்தில் மேற்படி காரியங்களைச் செய்வதால் சந்தோஷமாகக் காலம் போக்குகிறோம் என்று சொல்ல வரலாம். சந்தோஷமாகக் காலம் போக்க இதுதானா வழி! முட்டாள்தனத்தையும், குருட்டு நம்பிக்கையையும் உண்டாக்கக் கூடிய செயல்களைப் புரிந்துதானா சந்தோஷப்பட வேண்டும்? சந்தோஷப்படுவதற்கு வேறு அறிவு வளர்ச்சியோடு கூடிய வழிகள் இல்லையா?
மார்கழி மாதக் கடைசியில், தை மாத முதலில் பொங்கல் பண்டிகையொன்று! அதற்கு எவ்வளவு தொல்லை! மனிதனுக்கு மாத்திரமா பொங்கல்! பொங்கல் நாலு நாள். பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையாம்! பொங்கலாம்! மாட்டுப் பொங்கலாம்! கன்னிப் பொங்கலாம்! இந்தப் பொங்கல்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை என்ன சொல்லுவது? புதுஉடைகள் வாங்கி அணிந்து கொள்வார்கள் பலர்! சம்பந்தி வீடுகளுக்கு வரிசை அனுப்புவார்கள் பலர்! இவைகளில் ஆகும் செலவு அளவு கடந்தவை. வரிசை கொடுக்கும் வகையில் ஒருவர்க்கொருவர் சொந்தக்காரர்களுக்கு ஏற்படும் மனவருத்தங்கள் பல. எங்கும் படையல், சர்க்கரைப் பொங்கல் வேறு வெண் பொங்கல் வேறு.
ஏழைகள் குடும்பங்களில் இந்தப் பொங்கல் சோறுகளை இரண்டு மூன்று தினங்களுக்கு வைத்துக்கொண்டு தின்று வியாதியடைவது வேறு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வண்ணான், அம்பட்டன், தோட்டி, வேலைக்காரன் வீடுகள் தோறும் சோற்றுப் பிச்சைக்காக அலையும் பரிதாபமான காட்சி வேறு; இவ்வாறு பல வகையில் பொங்கல் பண்டிகை தொல்லைகளை உண்டாக்கி விடுகிறது. போதும் போதாமைக்கு ஆஸ்பத்திரிகளில் மருந்துச் செலவு அதிகம். டாக்டர்களுக்குத் தொல்லை. அட அப்பா! எவ்வளவு தொல்லை! பாழும் பொங்கல் பண்ணுவதைப் பாருங்கள்!
மார்கழி மாதச் சனியன் இம்மாதிரி பல வகையில் மக்களை அல்லோல கல்லோலப் படுத்தி விடுகின்றது, படுத்தி விட்டது; என்ன பரிதாபம்! நமது மக்கள் மூடத்தனத்தால், குருட்டுத்தனத்தால் எவ்வளவு துன்பத்திற்கு ஆளாகின்றனர். எல்லாவற்றையும் யோசித்துப் பாருங்கள். இவை பயனில்லாத காரியங்கள்; வீணான காரியங்கள் என்று விளங்காமல் போகாது. இவைகளை நடத்தாவிட்டால் என்ன முழுகிப் போய்விடும். பூமி நடுக்கம் உண்டாகி நாம் பாதாளத்திற்குப் போய்விடுவோமா? கடல் புரண்டு வந்துவிடுமா? ஒன்றுமில்லையே. அப்படியிருந்தும் ஏன் பண்டிகைகளென்றும், விரதங்களென்றும் திரு நாட்களென்றும் அலைகின்றீர்கள். அந்நியர்கள், நாகரிமுடையவர்கள் நகைக்க இடம் கொடுக்க வேண்டாம். பயனுள்ள காரியங்களைச் செய்யுங்கள்! அறிவோடு செய்யுங்கள்! நாம் மற்ற நாட்டினரைப் போலப் பெருமையடையலாம்! சுதந்திரமடையலாம்! செல்வமடையலாம்! சமத்துவமடையலாம்! இது உறுதி! உண்மை! நிச்சயமாக நம்புங்கள்! நம்பாவிட்டால் எக்கேடு கெட்டாவது போங்கள்! மேலே சொல்லிய நமது விரதங்களையும், நமது பக்திகளையும், நமது பஜனைகளையும், நமது பண்டிகைகளையும், பிறர் பார்த்தால் சிரிக்க மாட்டார்களா? நாமே நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வரவில்லையா? கேலிக்கு இடமாகத் தோன்ற வில்லையா? வைதீகக் கண்ணுக்குப் பரிசுத்தமாகத் தோன்றலாம்! உண்மையாகத் தோன்றலாம்! தெய்வீகமாகத் தோன்றலாம்! அதைப் பற்றிக் கவலை இல்லை. நாகரிகக் கண்ணால் பாருங்கள்! அறிவுக் கண்ணால் பாருங்கள்! உண்மை விளங்கும். நான் பொய் சொல்லவில்லை; உண்மையாகச் சொல்கிறேன். உறுதியாகச் சொல்கின்றேன்; நான் ஒரு ஸ்க்குரூலூஸ் என்று அலட்சியம் செய்ய வேண்டாம். வந்தனம், பிறகு சந்திக்கிறேன்.


                ----------------------- குடிஅரசு, 27-12-1931இல் ஸ்க்குரூலூஸ்

2.1.19

எந்தத் தனிப்பட்ட பார்ப்பனர் மீதும் விரோதம் கிடையாது - பெரியார்


தந்தை பெரியார்
எங்களைப் பார்ப்பனத் துவேஷிகள் (வெறுப்பாளர்கள்) என்று சொல்கிறார்கள், "எவனோ பண்ணினான்; பார்ப்பானை ஏன் திட்ட வேண்டும்?" என்ற சிலர் கேட்கிறார்கள். எவனோ பண்ணினால் இவன் ஏன் பூணூல் போட்டுக் கொள்கிறான்? ஏன் தன்னைப் பிராமணன் என்று  சொல்லிக் கொள்கிறான்? ஏன் உச்சிக்குடுமி வைத்துக் கொள்கிறான்? ஏன் அக்கிரகாரத்தில் தனியாக வாழ்கிறான்? அவனுடைய  பெண்டாட்டி மட்டும் ஏன் தனியான வகையில் புடைவை கட்டிக் கொள்ளவேண்டும்? இந்த மாதிரியெல்லாம் ஏன் அவன் தன்னைத் தனியாகப் பிரித்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள வேண்டும்? 'யாரோ பண்ணியதற்குப் பார்ப்பானை ஏன் குறை சொல்ல வேண்டும்?' என்று சட்ட சபையில் சிலர் பேசுகிறார்கள். எவனோ பண்ணியிருந்தால் இந்தப் பார்ப்பான் ஏன் அவனைப் பின்பற்ற வேண்டும்? அவன் சொன்னபடி ஏன் நடக்க வேண்டும்? இவன் தானே நம்மைச் சூத்திரன் என்று சொல்கிறான்?
எவனோ உழைக்க இவன் அள்ளிக் கொட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான் சமுதாய அமைப்பு, சாஸ்திரம், புராணம், சட்டம் என்றால், நாம் எப்படிச் சும்மா இருக்க முடியும்? இந்த நிலைமையை மாற்றத்தானே நாம் பாடுபடுகிறோம். மற்றப்படி எனக்கு எந்தத் தனிப்பட்ட பார்ப்பனர் மீதும் விரோதம் (பகைமை) கிடையாது.
சாதிக்கு ஆதாரமாக என்னென்ன இருக்கின்றனவோ அவையெல்லாம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும். அவற்றி லெல்லாம் கைவைக்கக்கூடாது. என்றால் எப்படி ஒழியும்? கெட்ட துஷ்ட ஜந்துக்கள் ஒரு இடத்தில் இருந்தால் அவைகளை ஒவ்வொன்றாகச் சுட்டுக் கொண்டிருந்தால் ஆகுமா? துஷ்ட ஜந்துக்கள் இருக்க எவை காரணமாக இருக்கின்றனவோ அந்தக் கல், மண், முள், காடு எல்லா வற்றையும் நெருப்பு வைத்து ஒழித்து சமமாக்கினால்தானே அங்கிருக்கும் தேள், பாம்பு, கரடி, புலி எல்லாம் ஒழியும்? அந்த மாதிரிதானே சாதிக்கு ஆதாரமாக யார் யார் இருக் கிறார்களோ, என்னென்ன இருக்கின்றனவோ அவைகள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.
'மதத்தில் பிரவேசிக்கமாட்டோம்; சாதி முறையைப் பழக்க வழக்கங்களைக் காப்பாற்றுவோம்; இவை தனிப்பட்ட உரிமைகள்; இந்த உரிமைகள் பாதுகாக்கப்படும்' என்று அழுத்தமாகச் சட்டம் செய்து வைத்துக் கொண்டார்கள்.
கடவுள் சாதியை உண்டாக்கினார் என்றால் கடவுளை உடை, கொளுத்து என்று சொல்லிப் பிள்ளையாரை உடைத்தோம்! இராமனைக் கொளுத்தினோம்.
சட்டத்தில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது. அந்தப் பாதுகாப்பு நீக்கப்பட வேண்டும்.
இல்லையென்றால் அதற்கான விளக்கமோ சாதிக்குப் பாதுகாப்பான பகுதிகளை நீக்குவதற்கு உறுதிமொழியோ அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும். இல்லையென்றால் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவோம். என்று 3ஆம் தேதி  (1957 - நவம்பர்) கூடிய தஞ்சாவூர் மாநாட்டில் தீர் மானம் போட்டு 15 நாள் வாய்தா (காலக்கெடு) கொடுத்தோம்.
இன்றோடு அந்த வாய்தா தீர்ந்து போய்விட்டது. நாம் கொடுத்த 15 நாள்களில் என்ன செய்தார்கள் தெரியுமா? சாதியைக் காப்பாற்ற பாதுகாப்பு செய்து கொண்டார்கள்!
இந்தச் சட்டம் சாதியைக் காப்பாற்றுகிறது; ஆகவே இதை நெருப்பு வைத்துக் கொளுத்தப் போகிறோம் என்று சொல்கிறோம்; இல்லை நெருப்பு வைக்கக்கூடாது  என்றால் அந்த மாதிரி சாதிக்குப் பாதுகாப்பு சட்டத்தில் இல்லை என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; அல்லது இருந் தால் சட்டத்தைத் திருத்துகிறேன் என்று சொல்ல வேண்டும்.
நீ சாதியைக் காப்பாற்றித்தான் தீருவேன் என்கிறாய். சாதியைக் காப்பாற்றும் சட்டத்தைக் கொளுத்துபவர்களுக்கும்
3 ஆண்டு சிறை என்று சட்டம் கொண்டு வந்து விட்டாய்; இந்தச் சட்டத்திற்குப் பயந்து கொண்டு கொளுத்தா விட் டால் நாளைக்கு நம்மைச் சூத்திரன் என்றே கூப்பிடுவான்!
சட்டத்தில் ஏதாவது குறையிருந்தால் அதனை முறைப்படி திருத்தலாம் என்று மந்திரி சொல்கிறார். அரச மைப்புச் சட்டத்தை வகுத்த பார்ப்பனர்கள், நம்முடைய மக்கள் என்றென்றைக்கும் அடிமையாய் இருப்பதற்கான சட்டம் வகுத்துக் கொண்டார்கள் அதை எளிதில் மாற்ற முடியாதபடி பாதுகாத்துக் கொண்டிருக் கிறார்கள். ஆகவே தான் கொளுத்துகிறோம். கொளுத்துவது அவசியமில்லை என்று சொன்னால் சட்டம் இந்த வகையில் செய்ய முடியுமென்று சொல்லட்டுமே?
இப்போது சாதியைக் காப்பாற்ற சட்டம் எழுதிவைத்துக் கொண்டுள்ளான். இன்னும் கொஞ்ச நாள் போனால் - நாங்கள் ஒழிந்தால் அவனவன் சாதி முறைப்படி வாழ வேண்டுமென்று கொண்டு வந்து விடுவான்!
நம் கண்முன்னாலேயே ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்தாரே? பாதி நேரம் குலத்தொழில் படிக்காத பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்காதே என்று உத்தரவு போட்டாரே? இது ஒரு வருடம் நடந்ததே! இத் தனைக்கும் அன்று எதிர்க்கட்சி மெஜாரிட்டி. (பெரும் பான்மை) ஒன்றும் அசைக்க முடியவில்லையே! கத்தியை எடு என்று சொன்னவுடன் ஓடினார். பிறகு காமராசர் வந்தார் குலக்கல்வித்திட்டத்தை எடுத்தார்.
நாளையதினம் காமராசர் ஒழிந்து இந்த நிலைமை திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அந்த மாதிரியான சட்டமும், அமைப்பும், வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் நாம் உயிருக்குப் பயந்து கொண்டுதானே வாழவேண்டியிருக்கிறது? இன் னமும் புதிது புதிதாக அதிகாரங்களையெல்லாம் அவன் (பார்ப்பான்) அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறான். இந்த நிலைமையில் நாம் சும்மா இருந்தால் எல்லாவற்றையும் நாம் ஒப்புக் கொண்டுள்ளோம் என்று அவன் மேலும் மேலும் நம்மை அழுத்துகிறான்!
சட்டத்தைக் கொளுத்துகிறோம் என்று சொன்னால் மேலே இருப்பவர்கள் கவனிக்க வேண்டும். ஏன் இவ்வாறு இவன் சொல்கிறான்? ஏன் இப்படிச் செய்கிறான் என்பதைக் கவனிக்க வேண்டும்; சும்மா பிடித்து அடை என்றால் அடைத்து விடுகிறார்கள். அதனால் எரிந்து கரியாகிய சட்டம் எரியாததாக ஆகிவிடுமா?
1957 - நவம்பர் 3 ஆம் தேதி தஞ்சாவூரிலே மாநாடு நடைபெற்றது உங்களுக்கெல்லாம் தெரியும். 6 ஆம் தேதி என்னைப் பிடித்து திருச்சி, குளித்தலை, பசுபதி பாளையம் ஆகிய மூன்று ஊர்களில் பேசிய பேச்சுக்களை வைத்து என்மீது கேசு (வழக்கு) போட்டிருக்கிறார்கள்.
சட்டசபையில் மந்திரியே சொல்லியிருக்கிறார் "ராமசாமி சொல்வது எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டே இருக்கின்றன" என்று; "இல்லை இல்லை, கொல்லு! குத்து! என்று பேசி யிருக்கிறார்" என்று பத்திரிகைக்காரர்கள் எல்லாம் கூப்பாடு போட்டார்கள்; "அப்படியானால் அவர் பேசியபேச்சுக்களை எழுதிய ரிப்போர்ட் களைக் கொண்டு வாருங்கள்" என்று பத்திரிகைக் காரர்களை மந்திரி கேட்டார்; இந்தப் பத்திரிகைக்காரர்கள் ஒருவரும் போகவில்லை.
நம் கண்முன்னாலேயே ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்தாரே? பாதி நேரம் குலத்தொழில் படிக்காத பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்காதே என்று உத்தரவு போட்டாரே? இது ஒரு வருடம் நடந்ததே! இத்தனைக்கும் அன்று எதிர்க்கட்சி மெஜாரிட்டி. (பெரும்பான்மை) ஒன்றும் அசைக்க முடியவில்லையே! கத்தியை எடு என்று சொன்னவுடன் ஓடினார். பிறகு காமராசர் வந்தார் குலக்கல்வித்திட்டத்தை எடுத்தார். நாளையதினம் காமராசர் ஒழிந்து இந்த நிலைமை திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அந்த மாதிரியான சட்டமும், அமைப்பும், வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் நாம் உயிருக்குப் பயந்து கொண்டுதானே வாழவேண்டியிருக்கிறது? இன்னமும் புதிது புதிதாக அதிகாரங்களையெல்லாம் அவன் (பார்ப்பான்) அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறான். இந்த நிலைமையில் நாம் சும்மா இருந்தால் எல்லாவற்றையும் நாம் ஒப்புக் கொண்டுள்ளோம் என்று அவன் மேலும் மேலும் நம்மை அழுத்துகிறான்!
சட்டசபையில் மந்திரி சொல்கிறார் நம்முடைய நடவடிக்கைகள் சட்டத்துக்கு உட்பட்டே இருக்கின்றன என்று; இதை இந்தியா முழுவதிலும் உள்ள பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.
பிறகு இந்தப் பார்ப்பனர்கள் மேலிடத்தில் போய் ரகளை (கலகம்) செய்திருக்கின்றனர்; அதன் பின்னர் மேலிடத்தி லிருந்து உத்தரவு வந்திருக்கிறது!  மேலிடத்தாருக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதற்காக இப்போது கேசு (வழக்கு) எடுத்து இருக்கிறார்கள்; மேலிடத்து உத்தரவுக்காக நம்மீது நடவடிக்கை எடுப்பதனால் நமக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?
முன்பு கொடி கொளுத்துகிறேன் என்ற சமயத்தில் சட்டம் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் இப்போது சட்டம் செய்திருக்கிறார்கள். அவனுக்குத் தமிழ்நாடு சட்ட சபையிலே சட்டம் செய்திருக்கிறார்கள். அவனுக்கு நாடாளுமன்றத்திலே சட்டம் செய்ய வெட்கம்; உலக மெல்லாம் தெரிந்துபோகுமே. தமிழ்நாட்டில் காந்தி  சிலையை உடைக்கிறார்கள்; அரசமைப்புச் சட்டத்தைக்  கொடியைக் கொளுத்துகிறார்கள். அரசமைப்புச் சட்டத்தை எரிக்கிறார்கள் என்பது.
சட்டசபையிலே, என்மீது நடவடிக்கை எடுக்க சட்டமில்லை என்று சொன்ன விஷயத்திற்கே இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்; எது எப்படியிருப்பினும் கோர்ட்டில் (நீதிமன்றத்தில்) இருக்கும் வழக்கைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. அதற்காக வேறு நடவடிக்கை வந்துவிடுமே என்பதற்காக அல்ல; மனப்பூர்த்தியாகவே சொல்கிறேன்.
இந்த அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும், மதத்திற்கும் அவனவனுக்குண்டான பழக்க வழக்கங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மத சுதந்திரம் கொடுத்திருக்கின்றான். மாகாண அரசாங்கமே இதில் பிரவேசிக்க முடியாது. இந்து மதம் உள்ளவரையில் நாங்கள் சூத்திரர்கள்தான் - அடிமைகள்தான்; ஆகவே இந்த உரிமை கொடுத்துள்ள அரசமைப்புச் சட்டம் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.
இந்த நிலைமைக்கு வந்ததற்கே காரணம் ஒரு ஓட்டலில் "பிராமணாள்" என்று போட்டுள்ள போர்டை (பெயர்ப் பலகையை) எடுக்க மறுத்தான். அந்த ஓட்டல் (உணவகம்) முன்மறியல் செய்து 800 பேர்வரை சிறைக்குச் சென்றி ருக்கின்றனர். நம்முடைய சர்க்கார் (அரசு) ஏதும் செய்ய முடியாமல் விழிக்கிறார்கள். மேலே சொல்லிச் செய்யக் கூடாதா என்றால் அவனுக்கு மத சுதந்திரம் கொடுத் துள்ளோமே என்கிறான். ஏதோ ஓர் அளவுக்குச் செய்ய வேண்டும் என்றால் செய்யலாம். நாம் இங்கே மறியல் செய்கிறோம்; அங்கே கேரள ஆட்சியில் சாதிச்சொல் போடக்கூடாது என்று மிரட்டியிருக்கிறான்.
நாங்கள் தொடர்ந்து மறியல் செய்து கொண்டிருக்கிறோம். மேலும் மேலும் தொடர்ந்து செய்து கொண்டிந்தால் அதனால் ஏதாவது பயன் ஏற்படும் என்றால் செய்து கொண்டிருக்கலாம். நிலைமை மாறவில்லை. ஆகவே அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தப் போகிறோம். இதில் வெற்றிபெறாவிட்டால் காந்தி சிலையை உடைக்கப் போகிறோம்.
26ஆம் தேதி கிளர்ச்சியில்
நீதிமன்றத்தில் கூற வேண்டியது
நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப் பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப் படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை.
ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக்கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு. இதனால் எந்த உயிருக்கும் எந்த பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்துகொள்ள விரும்பவில்லை. நான் எதிர்வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன்.
பெரியார் அறிக்கை ('விடுதலை' 23-11-1957)
நேற்று சட்டசபையிலேயே கேட்டிருக்கிறார்கள் "ஜவகர் லால் நேரு, ராஜேந்திரபிரசாத் இவர்களுக்குக் கொடும்பாவி கட்டி இழுத்து, இவர்களுடைய சிலையை உடைத்தால் நீ என்ன செய்வாய்?" என்று; வேண்டுமானால் அதற்குச் சட்டம் செய்; சட்டத்தினாலேயே உயிர்வாழ்! மக்களுடைய அன்பினால், திருப்தியினால் நீ (அரசாங்கம்) உயிர்வாழப் போவதில்லை. சுதந்திரம் (விடுதலை) வந்துவிட்டது என்று நீ சொல்கிறாய்; இன்னமும் நாங்கள் சூத்திரர்கள் தான்; வடநாட்டானால் கொள்ளையடிக்கப் படத்தான்  இந்தச் சுதந்திரம் என்றால், நாங்கள்  சட்டத்தைக் கொளுத்திவிட்டு அதன் விளைவை அனுபவிக்கிறோம்; எத்தனை பேரைத் தண்டிக்க முடியும்? எவ்வளவு நாளைக்குத் தண்டிக்க முடியும்?
போலீஸ்காரனுக்கு அடங்கி நட, சட்டத்திற்கு அடங்கி நட, என்று நான் சொல்கிறேன். இப்படிச் சொல்கிற என்னுடைய பேச்சைக் கூட மதிக்கவில்லையானால் என்ன பொருள்? இல்லை நான் சொல்வது பொதுமக்கள் கருத்தா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். நேற்று நடந்தது தஞ்சாவூரில் மாநாடு; அதில் 2 லட்ச மக்கள் திரண்டனர். அவர்களுடைய உணர்ச்சியை நீ பார்த்திருக்க வேண்டும். இல்லை பொதுஜன வோட்டு எடு; சாதி ஒழிய வேண்டுமா வேண்டாமா என்று. ஒன்று மில்லை வெறும் அடக்குமுறை தான் என்றால் என்ன அர்த்தம்?
அடக்கு முறைச் சட்டம் செய்த பிறகு நாம் சும்மா இருந்தால் வெளியில் தலை காட்டமுடியுமா? இந்த நிலை யில் குடும்பத்துக்கு ஒருவர் சிறைக்குப்போக நாம் துணிந்து விட வேண்டியதுதானே! மூன்று வருடமா அது மூன்று நிமிடம் என்றால்தானே நாம் மனிதர்!
ஆகவே சாதிக்குப் பாதுகாப்பான அரசமைப்புச் சட்டத்தை வருகிற 26ஆம் தேதியன்று நாம் ஆயிரக் கணக்கில் கொளுத்த வேண்டும். இரகசியமாயல்ல, பகிரங்க மாகக் கொளுத்தி விட்டுப் பெயர் கேட்டால் சந்தோசமாகக் கொடுங்கள்! கோர்ட்டுக்கு (நீதிமன்றத்துக்கு) அழைத்துக் கொண்டு போனால் செல்லுங்கள்!
"இந்தச் சட்டம் சாதியைக் காப்பாற்றும் சட்டம்; இந்தப் பார்ப்பனச் சதிச்சட்டத்தை லேசில் மாற்ற முடியாது. இதற்கு எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் அறிகுறியாக இதைக் கொளுத்தினோம்" என்று சொல்லுங்கள்
முக்கியமாக உள்ள கழகத்தோழர்கள் நூற்றுக் கணக்கில் சட்டப் புத்தகம் வாங்கி ஊரில் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்; மக்கள் எல்லோரும் இதைக் கொளுத்த வேண் டும். கொளுத்திய அந்தத் துண்டு காகிதங்களையும் சாம் பலையும் ஒரு கவரில் போட்டு புக்போஸ்டில் (நூல் அஞ்சலில்) மந்திரிக்கு அனுப்ப வேண்டும்.
தைரியமுள்ளவர்கள் உங்களுடைய பெயர், விலாசம் (முகவரி) எல்லாம் அதில் போட்டு அனுப்புங்கள்.
"எங்களுடைய பிள்ளை குட்டிகளாவது சூத்திரத் தன்மையிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும்; அதற்காக எந்த விலை கொடுக்கவும் நாங்கள் யார் என்பதை 26ஆம் தேதியன்று நிரூபித்துக் காட்டுங்கள்!
         --------------17-11-1957 கடலூர் மஞ்சை மைதானத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : 'விடுதலை'  22-11-1957

28.12.18

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தந்தை பெரியார்
"கட்டாய இந்தி ஒழிந்ததுபற்றி நாம் மகிழ்ச்சி கொண் டாடுகிற நேரத்திலேயே மற்றொரு துக்ககரமான சம்பவம் அதாவது வகுப்புவாரி உரிமை இந்திய அரசியல் சட்டத் திற்கு விரோதமானது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஏற்பட்டுவிட்டதால், மற்றொரு கிளர்ச்சி துவக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இயற்கை நமக்கு ஓய்வு தருவதில்லை.
வகுப்புவாரி உரிமைக்கு ஆகவேதான் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது. அதாவது பார்ப்பனரல்லாத மக்களின் நலனுக் காக, அவர்களுக்கும் உத்தியோகத் துறையிலும், கல்வித் துறையிலும் அவர்களுக்கான விகிதாசாரம் கொடுத்து நியாயம் வழங்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டது. நானும் காங்கிரசில் இருந்த காலம் முதற்கொண்டே வகுப்புவாரி உரிமைக்கு ஆகவே பாடு பட்டு, அதன் காரணமாகவே, அதாவது வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானத்தை நான் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிற்குக் கொண்டு போனபோது, அந்தத் தீர்மான மானது காங்கிரசின் கொள்கைகளுக்கு விரோதமாய் இருக்கிறது என்று கூறப்பட்டு என்னுடைய தீர்மானம் தள் ளப்பட்டு விட்டதால் நான் காங்கிரசிலிருந்து அதற்காகவே விலகினேன்.
பின்னர் சுயேச்சை அமைச்சர்கள் பதவிக்கு வந்தபோது வகுப்புவாரி உரிமைத் திட்டம் சட்டமாக்கப்பட்டு, எவ் வளவோ எதிர்ப்புகளுக்கு இடையில் அமல் நடத்தப்பட்டு வந்தது. அந்த சட்டமும் சரியானபடி, மக்களின் விகிதாசாரக் கணக்குப்படி அவர்களுக்குப் பங்கு அளித்தது என்று கூற முடியாது. ஆனாலும், நம்மவர்கள் - பல தொல்லைகள், சங்கடங்கள் இருந்தபோதிலும், வகுப்புவாரி உரிமையின் பயனாய் ஓரளவுக்கு முன்னுக்கு வந்தார்கள். குறிப்பாக போலீஸ் இலாகாவிலும், டிப்டி கலெக்டர்களிலும் நம்ம வர்கள் கணிசமான அளவில் முன்னேறினார்கள். நம்மவர் களுக்கு மேல் உத்யோகஸ்தர்களாய் பார்ப்பன அதிகாரிகள் இருந்ததால் அவர்கள் நம் உத்தியோகஸ்தர்கள் மேலுக்குவர முடியாமல் அழுத்தி தங்கள் வர்க்கத்தாருக்கே சலுகை காட்டி, அவர்களின் கொள்ளைக்கும் வழி செய்து கொடுத்து வந்தார்கள்.
நமது முன்னாள் முதல் மந்திரி ஓ.பி. ராமசாமி ரெட்டியார் அவர்கள் காலத்திலேதான்  வகுப்பு வாரி உரிமையின்படி, கல்லூரிகளில் மாணவர் களைச் சேர்ப்பது என்ற முறை நடைமுறைக்கு வந்தது.
அதிலும், அடுத்த ஆண்டில் அப்போது கல்வி மந்திரியாய் இருந்த தோழர் அவினாசிலிங்கம் அவர்கள் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படும்போது தகுதி, திறமை என்பவை களின் பேரால் 20, 30 சதவிகிதம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும், அந்தப்படி 'தகுதி', 'திறமை' என்ற அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்குப் போக மீதி இருக்கும் இடத்திற்குத்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறை கையாளப்படும் என்றும் ஆக்கி வைத்தார்கள்.
இந்தப்படியாக சரியானபடி விகிதாசாரம் கொடுக்கப்படாமலும், பார்ப்பனர்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு மேற்பட்டு 8, 10 மடங்கு என்று கொடுக்கப்பட்டு, நமக்கு மிகக் குறைந்த அளவுக்கே பங்கு கொடுக்கப்பட்ட வகுப்புவாரி உத்தரவும் இனிமேல் செல்லுபடி யாகாது என்று தீர்ப்பு கூறப்பட்டு விட்டது.
ஆகவே, இனிமேல் இதுவரை அனுஷ்டிக் கப்பட்டு வந்த வகுப்புவாரி திட்டமானது 1950இல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒழிக் கப்பட்டுவிட்டது. நாமும் இந்த வகுப்புவாரி திட்டம் போதாததாய் இருப்பதால், இது ஒழிக்கப்படவேண்டும் என்கிறோம். ஏன்? இது சரியானபடி மக்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விகிதாசாரத்தை பிரதிபலிக்க வில்லை, எனவே, இந்தத் திட்டம் ஒழிக்கப்பட்டு அந்த மக்களின் எண்ணிக்கைக்குத் தகுந்த ரீதியில், அதாவது இந்த நாட்டு ஜனசமுதா யத்தில் 100-க்கு 3 பேராக இருக்கும் பார்ப் பனர்களுக்கு 3 ஸ்தானமும், அதேபோல் மற்ற வகுப்பார்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற மாதிரியில் அவரவர்களுக்கு விகிதாசாரப்படி பங்கு வழங்கும் புதிய திட்டம் ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறுகிறோம்.
இன்றைய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இனிமேல் தகுதி, திறமை என்பவைகளின் பேரால்தான் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இப்போது கல்லூரிகளில் சேர்வதற்குத் தகுதி, திறமையாக வைத்திருப்பது மார்க் ஒன்றுதான் ஆகும். இந்த மார்க்கை பார்ப்பனப் பிள்ளைகள்தான் அதிகமாக வாங்கத் தக்கபடி கல்வியில் சூழ்ச்சி இருக்கிறது. அதிக மார்க் எப்படி வாங்குவது என்ற வழியைப் பார்ப்பனர்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள் என்பதோடு, மார்க் அவர்கள் காலடியிலேயே போய் விழுகிற மாதிரியில் இன்று கல்வித் துறையில் அவர்களுக்கு வாய்க்கால் வெட்டிவிடப் பட்டிருக்கிறது.
இரண்டாவதாக, அவர்கள் பரம்பரையாக விஷயங் களின் கருத்தைப்பற்றி கவலை இல்லாமல் சொற்களை உருப்போட்டு படிக்கப்பட்ட பரம்பரையில் உதித்தவர்கள். ஆகவே, படித்ததை நெட்டுருப் பண்ணி பரீட்சையில் வாந்தி எடுப்பது அவர்களுக்கு சுலபமான காரியமாகும்.
நம்மவர்களுக்கு இரண்டுமே கிடையாது. கருத்தை உட்கொண்டு அறிவு பெறுவது வழக்கம். அந்தப்படி இருக்கும்போது நம் பிள்ளைகள் எப்படி இன்று கல்லூரியில் சேருவதற்கு 'தர்மாமீட்டராய்' இருக்கும் தகுதியையும், திறமையையும் பெற முடியும்? எனவே, இவர்கள் சொல்லுகிற தகுதியையும், திறமையையும் பெற்று நம்முடைய பிள்ளைகள் படிக்க முடியாது. படிக்காத காரணத்தினால் உத்தியோகமும் வகிக்க முடியாது. பழைய வேலைக்குத்தான், அதாவது மனு (அ) தர்ம காலத்துக்குத்தான், பார்ப்பானுக்கு சேவை - பூஜை செய்து அவன் காலைக் கழுவி தண்ணீர் குடிப்பதால் நற்பதவி கிட்டும் என்ற தன்மைக்குப் போகவேண்டும். இதைத்தான் பார்ப்பனர்களும் விரும்புகிறார்கள்.
ஏனென்றால், நாமும் படித்து உத்தி யோகம் வகித்து பார்ப்பனர்களோடு சரிசம மாகப் போட்டியிட தலைப்பட்டால், 'சூத் திரர்கள்' செய்யவேண்டிய வேலைகள் என்று தர்ம சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டு 'ரிசர்வ்' செய்யப்பட்டிருக்கிறதே, ஏர் உழுவது, துணி வெளுப்பது, சிரைப்பது, செருப்புத் தைப்பது, வண்டி இழுப்பது, மூட்டை தூக்குவது, கக்கூஸ் எடுப்பது போன்ற காரியங்களுக்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். பார்ப்பனர் களுக்கும் முகத்தில் பிறந்தவர்கள் என்ற மரியாதையோ, உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்ற பெருமையும் இல்லாமல் அவர்களும் சாதாரண மனிதர்களாவதுடன், எல்லா வேலை களையும் அவர்களும் சேர்ந்து செய்யவேண்டிய நிலைமை வந்துவிடுமே என்பதற்காகத்தான் அடிப்படையிலேயே, அதாவது நம் மக்கள் படித்து, மான உணர்ச்சியோ, மனிதத் தன் மையோ அடைந்துவிடக் கூடாது என்பதற்காக நம்மை படிக்கவொட்டாமலேயே அடிப்பது என்ற முயற்சி செய்து தற்காலிகமான வெற்றியும் பெற்றுவிட்டார்கள்.
இந்தக் காரியத்தில் நாம் சற்று அலட்சிய மாகவோ, அஜாக்கிரதையாகவோ, கவலை யற்றோ இருந்தோமேயானால், நிச்சயமாய் இன்று பார்ப்பனர்கள் பெற்றிருக்கிற இந்த தற்காலிக வெற்றியானது சாசுவத வெற்றியாகி நாமெல்லாம் என்றும் மீளா அடிமையில், படுகுழியிலேதான் அழுந்திக் கிடக்க நேரிடும்.
எனவே, இதை இப்படியே விட்டுவிடாமல் நம்முடைய இன நலத்தைக் கருதி, நம்முடைய பிற்கால சந்ததிகளின் நன்மையைக் கருதி, நம்முடைய பிள்ளைகள் மாடு மேய்ப்பதற்கே தகுதியுடையவர்களாக ஆகாமல், மனிதத் தன்மை யுடையவர்களாக வாழவேண்டும் என்பதை மனதில் கொண்டு இதிலே நாம் பெருத்த கிளர்ச்சி செய்யவேண்டும்.
இந்தக் காரியத்திலே ஏமாந்துவிட்டுவிட்டோமானால், நம்முடைய வாழ்வு மனுக்காலத் தன்மைக்குத்தான் போய்விடும். எனவே, இதில் முழு மூச்சோடு 'இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது' என்ற முடிவோடு நீங்கள் இருக்கவேண்டும்.
இந்தக் காரியத்தில் கிளர்ச்சி துவக்குவதற்காக அடுத்த மாதத்தில் சென்னையிலாவது, திருச்சியிலாவது ஒரு பொது மாநாடு கூட்ட இருக்கிறேன். அதற்காக முன்னேற்பாடு கூட்டம் ஒன்று அடுத்தவாரம் கூட்டுவேன். மாநாட்டில் இனிமேல் என்ன நடவடிக்கை எடுத்துக்கொள்வது என்பதுபற்றி யோசித்துக் கூறுகிறேன். அதற்குப் பின்னர் நாம் பெருத்த முறையில் கிளர்ச்சி செய்யவேண்டும். அத்தகைய கிளர்ச்சிக்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, பெருவாரியாக மக்கள் அனைவரும் வரப் போகும் வகுப்புரிமைக் கிளர்ச்சியிலே பங்குகொண்டு, நம் உரிமைக்காகப் போராட வேண்டும்".
(24.8.1950 அன்று ஈரோட்டில் நடைபெற்ற
பொதுக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரை)


(உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு தொகுதி - 3)