Search This Blog

26.9.12

பெரியார் அறக்கட்டளையின் பணியும்- நமது கடமையும்!

அறக்கட்டளையின் பணியும்- நமது கடமையும்! (2)

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் வைர விழா என்பது தமிழ்நாட்டின் சமூக, கல்வி வளர்ச்சி மற்றும் மூட நம்பிக்கை ஒழிப்பு என்னும் திசையில் அது சாதித்திருக்கும் பட்டியலை நினைவு கூர்வதாகும்.

மருத்துவ உதவிப் பணிகளும் சாதாரண மானவையல்ல; சென்னை, திருச்சி, வல்லம், சோழங்கநல்லூர், சேலம், திருவெறும்பூர் என்று இதன் மருத்துவப் பணிகளின் கரம் நீளக் கூடியதாகும். இயக்கத் தோழர்கள் பலருக்குத் தேவையான  மருந்துகளையும் வாங்கிக் கொடுத்து வருகிறது. அதனை ஓர் அமைப் புக்குள் கொண்டுவரவேண்டும் என்பதற் காகவே பெரியார் மருத்துவக் காப்பு நிதி என்ற ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. (வாய்ப் புள்ளவர்கள் நிதி தரலாமே!)


கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார் அவர்கள் மனிதனை நினை என்று சொன்னதன் பொருளுக்கான விளக்கமும் - செயல்முறையும் இதன்மூலம் விளங்குமே!

பெரியார் அறக்கட்டளை ஒரு பக்கம் வளர்ந்து, அதன் பணிகள் பரவலாக விரிந்து, பயன்பெறுவோர் எண்ணிக்கையும் பெருகி வந்தாலும் உள்ளுக்குள் புகுந்து அழிக்கும் கிருமிகள்போல கூட இருந்தே குழி வெட்டிய கொடுமைகளும் நிகழ்ந்தன.

வெளிப்படையான இன எதிரிகள் ஒரு பக்கம் - இந்தத் தொண்டால் யார் பலன் அடைகிறார் களோ, அவர்களே அதனைப் புரிந்துகொள்ளாமல் எதிரிகளுக்கு அம்பாகப் பயன்படும் கொடுமை ஒருபுறம் - கூட இருந்தே உடன் கொல்லும் துரோகம் இன்னொருபுறம் - இவற்றையெல்லாம் கடந்துதான் தந்தை பெரியார் அவர்களின் தொண்டு, அவர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் பணிகளும் ஓங்கி ஓங்கி வளர்ந்திருக்கின்றன.

வருமான வரித்துறை என்பது ஓர் ஆயுத மாகப் பயன்படுத்தப்பட்டது. அதற்கும் முகம் கொடுத்து, சட்டப்படி அறக்கட்டளை என்று ஏற்கும்படிச் செய்த வகையில், நமது மதிப்பிற் குரிய அறக்கட்டளையின் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஆற்றியிருக்கும் பணியை யாராலும் அளவிடவே முடியாது. பாதுகாத்தது மட்டுமல்ல - அதனை வளர்த்திருக்கும் நேர்த்தி களையெல்லாம் எண்ணிப் பார்த்தால், இயக்கம் மட்டுமல்ல, இந்த நிறுவனங்களால் பலன் பெறுவோரும் காலாகாலத்திற்கும் நன்றி கூறிடக் கடமைப்பட்டுள்ளனர்.

தனது மகத்தான இந்த வெற்றிகளுக்குப் பின் பலமாக, பின்புலமாக இருந்தவர்களுக்கு எல்லாம் நன்றி தெரிவிக்கும் பண்பாட்டை உள்ளடக்கியதுதான் திருச்சி விழா. இது பாராட்டு விழா அல்ல - நன்றி காட்டும் விழா என்று குறிப்பிட்டது மிகச் செறிவானதாகும்.


இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அப்படி நன்றி காட்டப்பட்டவர்கள் அவ்விழாவில் சொன்ன கருத்து - மிக உயர்ந்த சீலத்தைக் கொண்டதாகும். தந்தை பெரியார் அவர்களால் பலன் பெற்ற இந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த நாங்கள், தந்தை பெரியார் அவர்களின் நிறுவனத்துக்கு முடிந்த உதவிகளைச் செய்வதற்குக் கிடைத்த வாய்ப்புக்காக நாங்கள் தான் நன்றி கூறவேண்டும் என்று சொன்னார்களே, அந்த மெருகேறிய உள்ளங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகுமே!

தந்தை பெரியார் அவர்களை உணர்ந்தவர்கள், புரிந்துகொண்டவர்களின் ஒவ்வொரு செயல்பாடும், பண்பாடும் பெருநிலை கொண்டதாகத்தானிருக்கும் என்பதற்கு இவையெல்லாம் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.

இந்த நிறுவனம் மேலும் வளர்ந்து, அதனால் பலன் பெறும் மக்களின் தொகையும் பெருக நம்மால் இயன்ற உதவிகளைத் தொடர்வது என்று தமிழர்கள் உறுதி கொள்வார்களாக!


வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!!
                   --------------------”விடுதலை” தலையங்கம் 26-9-2012

பிள்ளையார் உடைப்புப்பற்றி பெரியார்









பிள்ளையார் உருவத்தை உடைப்பதில் ஒன்றும் அதிசயப்பட வேண்டியதில்லை தயங்கவேண்டிய தில்லை.

பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையின்போது நாடு முழுவதும் எத்தனை எத்தனை ஆயிரக்கணக்கான, லட்சக் கணக்கான, மண்ணு பிள்ளையாரை மக்கள் குயவனிடம் வாங்கி பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன் கடலில், ஆற்றில், ஓடையில், ஏரியில், குளத்தில், கிணற்றில், புனலில், வயலில் எறிந்துவிடுகிறார்கள். அது உடன் கரைந்து நீரோடு நீராக, மண்ணோடு மண்ணாக ஆகி விடுவதில்லையா? இது தெரிந்தே மக்கள் நீரில் போடுவதில்லையா? அதுபோன்ற செய்கைதான் இந்த உடைத்துத் தூளாக்கி மண்ணோடு மண் ஆக்குவதுமாகும்.

நாம் காசு போட்டு வாங்குகிறோமே ஒழிய, வேறு எந்த மனிதனுக்கும் உரிமை இருக்கிற வஸ்துவிடமும் நாம் செல்லவில்லை; தொடவில்லை.

நாமாக வாங்கி உடைப்பதும், நமக்குப் பிள்யைர் கடவுளல்ல!
வேத சாஸ்திர ஆதாரம் என்பதன்படியும் அது - கணபதி கடவுளல்ல!
கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை!

கணபதி கடவுள் என்பதால் மனிதன் காட்டுமிராண்டி ஆக்கப்படுகிறான்; அதற்கு கோவில், பூசை, நைவேத்தியம், உற்சவம் முதலியவைகளால் நம் அறிவும், செல்வமும், நேரமும் முற்போக்கும் பாழாகிறது. உண்மையான கடவுள் என்பதும் நாஸ்திகமாகிறது.
கணபதிக்கு கற்பிக்கப்பட்டிருக்கிற பிறப்பும், குணங்களும் மிகுதியும் கீழ்த்தரமானவை; அறிவுள்ள - மானமுள்ள கடவுள் தன்மை அறிந்த மக்களுக்கு ஏற்றதல்ல; பொறுத்துக் கொள்ளக் கூடியதல்ல!

காட்டுமிராண்டி காலத்தில் 1000, 2000 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டினரால் ஏற்பட்ட இந்த தேவர் - தெய்வங்கள் உணர்ச்சியேதான் இந்த 1953 -ஆம் (விஞ்ஞான) ஆண்டிலும் நமக்கு இருக்க வேண்டுமா?


ஆற்றங் கரையில் மூக்கைப் பிடித்து ஜெபித்துக் கொண்டு ஏழையாய் பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டிருக்க வேண்டிய, பிராமணர் (பார்ப்பான்) இன்று சக்கரவர்த்தியாக, அதாவது 565 தேசங்களுக்கு தேசாதிபதியாக, பிரதமராக இருந்து உரிமை அடையும்படி தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கும் போது, கல்லை - செம்பை- மண்ணை - அழுக்கு உருண்டையை வணங்கிக் கொண்டிருக்கச் செய்யப்பட்ட காட்டுமிராண்டி களான நாம் மனிதத் தன்மை பெற்று உண்மை, சத்தியம் (சத்து) கண்டுபிடித்து மண் பொம்மையை அழிக்கப்படாதா என்று கேட்கிறேன். இதில் அக்கிரமம், அநீதி, அசத்தியம், அறிவில்லாமை, அடாது செய்தல் என்ன இருக்கிறது?

யார்தான் ஆகட்டும், ஆத்திரப்படக் காரணம் என்ன இருக்கிறது?

மற்றும் இன்று ஆரியப் பார்ப்பனர்களில் சங்கராச்சாரி பார்ப்பனர் முதல் மடிசந்தி பார்ப்பனர் ஈறாக, அரசியல் பார்ப்பனர் முதல் சீர்திருத்த பார்ப்பனர் ஈறாக, ஜட்ஜு பார்ப்பனர் முதல் அட்டன்டர் பார்ப்பனர் ஈறாக, லஞ்சம் ஃபோர்ஜரி பாங்கி மோசடி பார்ப்பனர் முதல் குச்சு நுழைவு மாமா, குடி, சூதாட்ட பார்ப்பனர் வரை கட்டுப்பாடாக தமிழர்களை மனுகால சூத்திரராகச் செய்து வரும் பார்ப்பன ஆதிக்கப் பிரச்சாரத்திற்கு அரசியல், கல்வி இயல், மத இயல்களில் செய்துவரும் நிரந்தர பந்தோபஸ்தான சுயநல ஏற்பாட்டிற்கு தமிழர்களே, சூத்திரர்கள், பஞ்சமர் என்ப வர்களே, என்ன செய்யப் போகிறீர்கள்?

இதைவிட வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் - சூத்திர மந்திரிகளே, சூத்திர பார்லிமென்ட், சட்டசபை மெம்பர்களே, வைஸ் சேன்ஸ்லர் முதல் கல்விமான்களே, உலகப் பிரசித்தி கோடீஸ்வரர்களே, புலவர்களே, பிரபுக் களே, மாஜி ஜமீன்தார்களே, மாஜி மகாராஜாக்களே, ஸ்ரீலஸ்ரீ! ஸ்ரீலஸ்ரீ!! ஸ்ரீலஸ்ரீ!!! பண்டார சந்நிதிகளே சொல் லுங்கள் கேட்க, தலை வணங்க சித்தமாக இருக்கிறேன்.

----------------------7.5.1953 விடுதலை இதழில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை

25.9.12

பெரியார் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு


செப்டம்பர் 23 விழா!

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் 60ஆம் ஆண்டு வைர விழா திருச்சியில் பெரியார் நூற்றாண்டுக் கல்வி வளாகத்தில் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதியன்று வெகு நேர்த்தியாக நடைபெற்றது.

பல ஆண்டுகளாக தந்தை பெரியார் அவர்களின் எண்ணத்தில் உதித்திருந்த கருத்துக்கு 1952 செப்டம்பர் 23ஆம் தேதியன்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சாரம் என்ற அமைப்பைப் பதிவு செய்ததன் மூலம் சட்ட ரீதியான வடிவத்தைக் கொடுத்தார்கள்.

அன்னை மணியம்மையார் அவர்கள் திருமணம் என்பதுகூட இந்த எண்ணவோட்டத்திற்கான ஒரு முக்கிய அம்சமாகும்.

தந்தை பெரியார் அவர்களின் எண்ணமும், செயல்பாடும் எத்தகு தொலைநோக்கானவை - சிறப்பானவை  என்பதற்கு - பெரியார் நிறுவனங்கள் வளர்ந்தோங்கி நிற்கும் காட்சிகள் கட்டியங்கூறிக் கொண்டு நிற்கின்றன.

இயக்க வெளியீடுகள் விடுதலை (இரு இடங்களில் பதிப்பு) உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் போன்ற ஏடுகளும், இதழ்களும் அகப் பொலிவிலும், தோற்றத்தின் பொலிவிலும், புதிய தலைமுறையினர் மத்தியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.


வேறு எந்தக் காலத்திலும் இல்லாத அளவுக்குச் சந்தாக்களின் எண்ணிக்கை உயர்ந்து பல்லா யிரக்கணக்கான வாசகர்களை ஈர்த்து, தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை மணம் தமிழர் களின் வீடுகளில் கமழும் நிலை என்பது சாதாரண மானதல்ல.

அதிகார மய்யங்களைக் கைகளில் வைத்துக் கொண்டுள்ள அமைப்புகளே ஆச்சரியப்படும் அளவுக்கு இந்தியாவின் தலைநகரமான டில்லியில் கேந்திரமான இடத்தில் பெரியார் மய்யம் செம்மாந்து நிற்கிறது.

அதை மய்யப்படுத்தி பல்வேறு ஆக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு மேலும் விரிவாக்கப் பணிகள் திட்ட அளவில் உள்ளன.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியார்  அவர்களைப்பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இன்றைக்கு 55 ஆண்டுகளுக்கு முன் கணித்துச் சொன்னது கனிந்திருக்கும் கால கட்டம் இது.

மதவாதம் உலகப் பந்தை சீரழித்துக் கொண்டிருக்கும் ஒரு கால கட்டத்தில், மதமற்ற உலகு ஒன்றின் மூலம் தான் சமத்துவ, சமாதானம், ஒப்புரவு உலகினைக்  காண முடியும்.

சச்சரவுகளும், சுரண்டலும், ஆதிக்க வெறியும், அமைதி தொலைந்த வாழ்வும், மூடத்தனமும், பெண்ணடிமைத்தனமும் பின்னிப் பிணைந்து கிடக்கும் உலக மக்களுக்குத் தந்தை பெரியார் கொடுக்கும் சிந்தனை ஒளிதான் அதற்கான திறவு கோலாகும்!
இந்தத் திசையில் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் மிகப் பெரிய பொறுப்பு இந்த இயக்கத்திற்கு இருக்கிறது.

கல்வியின் மூலம்தான் ஒடுக்கப்பட்ட எந்த ஒரு சமுதாயமும் முன்னேற முடியும் என்ற உறுதியான எண்ணத்தின் அடிப்படையில் பெரியார் அறக்கட்டளை மூலம் ஒரு தொடக்கத்தைக் கொடுத்தார்கள்.

இருபால் ஆசிரியர் பயிற்சி பள்ளி, தொடக்கப் பள்ளி, நாகம்மையார் குழந்தைகள் இல்லம் என்ற தொடக்கம், அன்னை மணியம்மையார் காலத்தில் வளர்த்து இன்று தமிழர் தலைவர் தலைமையில் வானுற உயர்ந்து கண்டோர் களிக்கவும், சரியாகக் கணிக்கவும், மாற்றார் மலைக்கவுமான ஒரு பெரு நிலையை எட்டியுள்ளது.

நிறுவனப்படுத்தப்படாத எந்த ஒரு செயலுக்கும் ஆயுள் காலம் குட்டையாகும். இதனை மிக ஆழமாக உணர்ந்து, காலா காலத்துக்கும் அய்யாவின் தத்துவம் நிலை பெற்று, இயக்கம் வலு பெற்று நிற்பதற்கான அடிப்படைப் பணிகளை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் திட்டமிட்டுச் செய்துள்ளது.

அந்த வரலாற்று உண்மையைப் பதிவு செய்யும் நிகழ்ச்சிதான் கடந்த 23ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற விழாவாகும். பல்வேறு சிறப்பு அம்சங்களோடு அது நடைபெற்றுள்ளது. அந்த நிறுவனம் மேலும் வலுப் பெற, ஒளி பெற ஒல்லும் வகைகளில் எல்லாம் உதவ வேண்டியது ஒடுக்கப்பட்ட மக்களின், தமிழினப் பெரு மக்களின் முக்கிய கடமையாகும்.

                     ------------------------"விடுதலை” தலையங்கம் 25-9-2012

ஆஸ்திகமும், நாஸ்திகமும்



1. ஆஸ்திகம் என்று உண்டானதோ, அன்றே நாஸ்திகமும் உண்டாயிற்று.

2. ஆஸ்திகம் அறியாமை, பயம், சுயநலம் இவற்றில் முளைத்து; நாஸ்திகம் அறிவின் விசாரணையில் முளைத்தது.

3. ஆஸ்திகம் அறிவைப் பாழ்படுத்துகிறது. நாஸ்திகம் அறிவை ஓங்கச் செய்கிறது.

4. ஆஸ்திகம் உலகை மிருகநிலைக்கு அழைத்துச் செல்கிறது; நாஸ்திகம் அதை நாகரிக நிலைக்கு அழைத்துச் செல்கிறது.

5. ஆஸ்திகம் மக்களை அவமதிக்கிறது. நாஸ்திகம் மக்களை மேன்மைப்படுத்துகிறது.

6. ஆஸ்திகம் மக்களை அழியவைக்கும்; நாஸ்திகம் மக்களை வாழவைக்கும்.

7. ஆஸ்திகத்தால் வறுமை, பிணி முதலியன ஓங்கும்; நாஸ்திகத்தால் அவை அழியும்.


8. ஆஸ்திகமும் நாஸ்திகமும் என்றும் தீராப்பகை கொண்டன.

9. ஆஸ்திகத்திற்கு அறியாமையும் அரசாங்கமும், முதலாளித்துவமும் துணை. நாஸ்திகத்திற்குப் பகுத்தறிவே (விஞ்ஞானம்) துணை.

10. ஆஸ்திகம் அழியக்கூடியது; நாஸ்திகம் என்றும் அழியாதது.

11. ஆஸ்திகம் சில சமயம் நாஸ்திகத்தைப் புறம்பே அழிக்கும்; ஆனால், நாஸ்திகமோ ஆஸ்திகத்தை உள்ளும் புறமும் அழிக்கவல்லது.

12. ஆஸ்திகத்தின் வெற்றி தற்காலிக வெற்றியாகும், நாஸ்திகத்தின் வெற்றியோ நிலைபெற்ற வெற்றியாகும்.

13. ஆஸ்திக நாஸ்திகப் போராட்டத்தின் லாபநஷ்டக் கணக்கு. ஆஸ்திகத்திற்குத் தோல்வியும், நாஸ்திகத்திற்கு வெற்றியும் சரித்திர முறைப்படி இதுவரை உண்டு, இனியும் உண்டு.

14. ஒரு மதத்தின்படி அதனை நம்பாத மற்ற மதங்கள் நாஸ்திகமானபடியால், எல்லா மதத்தையும் நம்பாத முழு நாஸ்திகமே நன்மையளிக்கும்; பெருமையளிக்கும். ஆகையால், அம்முழு நாஸ்திகமே எங்கும் பரவுக!
ஓங்குக!!


           --------------------------அறிஞர் அண்ணா - “திராவிடநாடு” 31.10.1943

24.9.12

கோயில் நகை அறைக்குள் பெண் அதிகாரி போகக்கூடாதா?



திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் இருக்கும் பொற்குவியலைக் கணக்கிடும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகிறது - நீதி மன்றத்தின் ஆணையின் அடிப்படையில்.

ஒரு கோயிலுக்குள் தேவையில்லாமல் பெரும் அளவு மதிப்புள்ள பொற்குவியல்கள் முடங்கிக் கிடப்பது சரியானதுதானா? தேவையானதுதானா? அறிவுடைமையானதுதானா? என்ற கேள்விகள் எழுந்தால்,  அவை நியாயமானவையே!

ஆன்மிகப்படியோ ஆச்சாரப்படியோ  பக்த மெய்யன்பர்கள் கூற்றுப்படியே பார்த்தாலும் கூட கோயில் என்பது மனதை ஒருமுகப் படுத்துவதற்கான ஓரிடம் என்றே கூட வைத்துக் கொள்வோம்!

(உடம்பே கோயில் ; உள்ளமே இறைவன் உறையும் இடம் என்று கூறும் சிலரின் தத்துவார்த்தச் சங்கதியைக் கூட சற்றுத் தூர ஒதுக்கி வைத்துக் கொண்டு சிந்திப்போம்!)

இப்படி மனதை ஒருமுகப்படுத்தும் இடத்தில் எதற்காக இந்தத் தங்கக் குவியல்கள்? எதற்காக இவை தூசிபடிந்து, அழுக்கேறிக் கிடக்கவேண்டும்?

அதுவும் தேவையில்லாமல் இப்படி சொத்துக்கள் குவிந்து கிடந்தால் அங்கே தவறுகள் நடப்பது என்பது எதிர் பார்க்கக் கூடியதே! அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல சந்தர்ப்பங்களில் கோயில் நகைகளைக் கடத்திச் சென்றுள்ளனர் என்ற குற்றச் சாற்றும் கூட எழும்பியதுண்டே!


பொதுவாக தங்கம் என்பது அரசின் ரிசர்வ் வங்கியில் இருக்க வேண்டியதாகும். அதன் மதிப்பின் அடிப்படையில்தான் ரூபாய்ப் புழக்கமும் இருக்க வேண்டும் என்பது பொருளாதாரக் கண்ணோட்டத் தில் கூறப்படுவதாகும்! ரிசர்வ் வங்கியில் இருக்கும் தங்கத்தின் மதிப்பை விட பணப்புழக்கம் அதிகமாக நாட்டில் இருந்தால் அது பணவீக்கத்தில் கொண்டு போய்விடும் என்றெல்லாம் பொருளாதார மேதைகள் கூறி என்ன பயன்? அந்த மேதைகள் யாராவது அரசு கஜானாவில் இருக்க வேண்டிய தங்கம் கோயிலுக் குள் முடங்கிக் கிடக்கக்கூடாது என்று வாய் திறந்து சொன்னதுதான் உண்டா?

இப்பொழுது இதில் இன்னொரு பிரச்சினை கிளம்பியிருக்கிறது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் குறிப்பிட்ட அறையில் உள்ள நகைகளை மதிப்பிட பெண் அதிகாரி ஒருவர் சென்றபோது அவர் தடுக்கப்பட்டுள்ளார்! அது கோயில் அய்தீகத்துக்கு விரோதமானதாம்! பெண்ணை அனுமதிக்கக்கூடா தாம். எந்த ஒரு நியாயத்தின் அடிப்படையிலாவது கோயில் சமாச்சாரங்கள் ஒத்துப் போகின்றனவா?

பெண்ணை சக்தி என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, சக்தியில்லையேல் சிவன் இல்லை என்று இன்னொரு பக்கத்தில் சிலாகித்துக் கொண்டு, இப்படி பெண்ணை அவமானப்படுத்த லாமா?


கோயில் நிருவாக அதிகாரிகளாக, ஆணையர்களாக பெண்கள் இருக்கிறார்கள் - அவர்களையும் அனுமதிக்கக்கூடாது என்று சொல்லப் போகிறார்களா?

இராத்திரி பூராவும் என்ன வேலை செய்து கொண்டு இருந்தான் இந்த அர்ச்சகப் பார்ப்பான் என்று யாருக்குத் தெரியும்? குஜராத்தில் சவ்மிய நாராயண் கோயில் அர்ச்சகர்ப் பார்ப்பனர்கள் கோயிலுக்குள்ளேயே தனி அறையில் காமலீலைகள் செய்து வந்த செய்தி படங்களுடன் பக்கம் பக்கமாக வெளி வரவில்லையா?

காஞ்சிபுரம் மச்சேந்திரசுவாமி கோயில் அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் கர்ப்பக் கிரகத்திலேயே பக்தைகளிடம் உடலுறவு வைத்துக் கொண்டது சிரிப்பாய்ச் சிரித்ததே!  இந்த யோக்கியதையுள்ள பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாகக் கோயில் கருவறைக்குள் ராஜா மாதிரி நடந்து செல்லலாம். அதிகாரி என்ற முறையில் பெண் ஒருவர் கோயில் நகை அறைக்குள் போகக் கூடாதா?

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் நகையறைக்கு அரசு பணி நிமித்தமாகச் சென்ற பெண் அதிகாரியைத் தடுத்தவர்கள் மீது அரசு அதிகாரி தன் கடமையைச் செய்யவிடாமல் தடுத்த தாகக் கூறி வழக்குப் பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

                   -----------------------"விடுதலை” தலையங்கம்  24-9-2012