Search This Blog

3.9.10

தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு ஆலயங்களில் சம உரிமை


பரோடாவில் ஆலயப் பிரவேசம்

சுதேச சமதானங்களில் முற்போக்கான காரியங்களை முதன்மையாகச் செய்து வரும் சமதானம் பரோடா சமதானம் ஒன்றே யென்பதை நாம் கூற வேண்டியதில்லை. அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்தில், பரோடா அரசாங்கம் மிகவும் அனுதாபங் கொண்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்து கொண்டு வருகின்றது. தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளை எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் ஆட்சேபணையின்றிச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனச் சென்ற வருஷத்தில் பரோடா அரசாங்கத்தார் உத்தரவு பிறப்பித்தனர். இவ்வுத்தரவை அகங்காரம் பிடித்த உயர் ஜாதி இந்துக்கள் எவ்வளவோ எதிர்த்தனர். பள்ளிக் கூடங்களில் சேரவந்த தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளுக்கு எவ்வளவோ கஷ்டங்களை உண்டாக்கினார்கள், தங்கள் பிள்ளைகளை ஜாதி இந்துக்களின் பிள்ளைகள் வாசிக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிய தாழ்த்தப்பட்ட வகுப்புக் குடும்த்தினரின் குடிசைகளை நெருப்புக்கிரையாக்கினர். அவர்கள் தண்ணீர் எடுக்கும் கிணறுகளில் மண்எண்ணெய் ஊற்றிக்குடி தண்ணீருக்குத் திண்டாட விட்டனர். இவ்வாறு உயர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்தாலும், அவர்கள் அரசாங்கத்தார் தமக்குக் கொடுத்த சுதந்தரத்தை உபயோகிக்காமல் விட்டு விட வில்லை. அரசாங்கத்தாரும், தாம் பிறப்பித்த உத்தரவை மாற்றாமல், பிடிவாதமாகவே நிறைவேற்றினார்கள். இவ்வகையில் அரசாங்கம் கொண்டிருந்த உறுதியைத் தாழ்த்தப்பட்ட சமுகத்தினர்பால் அனுதாபம் உள்ள எவரும் பாராட்டாமலிருக்க முடியாது.

இப்பொழுது இன்னும் சிறந்த துணிகரமான காரியமாக, தாழ்த்தப்பட்டார் அனைவரும் கோயிலுக்குள் செல்ல உரிமையுண்டு என்றும் உத்தரவு பிறப்பித்ததை நாம் பாராட்டுகிறோம். இதற்கு முன் போர் சமதானத்திலும் இவ்வாரே தாழ்த்தப்பட்ட சமுகத்தார்க்கும் கோயில் பிரவேசம் அளித்திருக் கின்றனர். அதைப் பின்பற்றி பரோடாவும் தைரியத்தோடு வைதிகர்களின் எதிர்ப்பைச் சிறிதும் பொருட்படுத்தாமல் இக்காரியத்தைச் செய்ததைப் பாராட்டுகிறோம். இப்பொழுது தான் சென்னைச் சட்டசபையில், தாழ்த்தப் பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத்தக்க சட்டத்தை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திற்குச் சிபார்சு செய்வதாகத் தீர்மானம் நிறைவேறியிருக்கின்றது. சென்னை அரசாங்கத்தார், இத்தீர் மானத்தை அனுசரித்தும் பரோடா, போர் முதலிய சமதானங்கள் செய்திருக்கும் உத்தரவுகளைப் பார்த்தும் தாமதமில்லாமல் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத் தகுந்த சட்டத்தை நிறைவேற்ற முன்வருமா? என்று கேட்கிறோம். சுதேச சமதானங்கள் இக்காரியத்தைச் செய்த பின்னும் சென்னை மாகாணப் பொது ஜனங்களின் பிரதிநிதியாகிய சட்டசபை இக்காரியத்தை நிறை வேற்ற வேண்டுமென்று சிபாரிசு செய்த பிறகும் சென்னை அரசாங்கம் மௌனஞ் சாதித்துக் கொண்டு வாளாவிருக்குமாயின் அது நேர்மையும் ஒழுங்கும் ஆகாது என்பதைச் சொல்ல விரும்புகிறோம். அரசாங்கத்தின் நோக்கம் எல்லா வகுப்பினருக்கும் சமத்துவமளிப்பதும், எல்லா வகுப்பினருக்கும் நீதிபுரிவதும் அல்ல வென்று பொது ஜனங்கள் நினைக்கும் படி இருக்கும். ஆகையால் சென்னை அரசாங்கம் சிறிதும் தாமதம் இல்லாமல் பரோடா போர் முதலிய சமதானங்கள் செய்தது போலத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு ஆலயங்களில் சம உரிமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறுகின்றோம்.

--------------"குடி அரசு" - துணைத் தலையங்கம் - 06.11.1932

2.9.10

தேவர்கள், அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ் நாட்டின் நிலை!


இனவெறி!

கேள்வி: கருணாநிதி என்று அவரது பெயரைச் சொல்லி அழைப்பதை, அவர் தவறாகக் கருதுகிறார். எனவே, இனிமேல் திருக்குவளை தீயசக்தி என்றே அவரைக் குறிப்பிடுவோம் என்று ஜெயலலிதா திருச்சி பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளாரே, இது சரியா?

பதில்: இந்தப் பட்டங்களுக்கு ஜெயலலிதா பொறுப்பல்ல தீயசக்தி என்பது எம்.ஜி.ஆர். கொடுத்த பட்டம். திருக்குவளை என்பது பிறந்த ஊர். இவற்றைக் கூறுகிற ஜெயலலிதாவை குற்றம் சொல்வதில் நியாயம் இருக்குமா?

(துக்ளக், 1.9.2010)

கேள்வி: கருணாநிதியை இனி தீய சக்தி என்றுதான் அழைக்கவேண்டும் என்று ஜெயலலிதா பேசியது, இன் னும்கூட அவர் திருந்தவில்லை என்றுதானே காட்டுகிறது?

பதில்: இனி தீய சக்தி என்று அழைப்பதென்ன...? வெகு காலமாகவே அப்படித்தான் கூறி வந்திருக்கிறார். தனிப்பட்ட முறையில் அவருக்குக் கலைஞர் பேரில் விரோதம் வளர்ந்து விட்டிருக்கிறது அதனால்தான் தனி நபர் தாக்குதலும் பழகிப் போனது.

(கல்கி, 5.9.2010)

பொதுவாழ்வில் ஒழுக்கத் தைப்பற்றியும், நேர்மை பற்றியும் எல்லாம் வாயை அகல விரித்தும், பேனாவின் முனை யைக் கூர்தீட்டியும் கருத்துகளை வெளியிடக்கூடிய இந்தப் பார்ப்பன ஏடுகள் ஒழுக்கமான முறையில் பதில் சொல்லாத தற்குக் காரணம் கடைந்தெடுத்த அக்மார்க் இனப்பற்றுதான் என்பது வெளிப்படை.

தீயசக்தி என்று ஜெயலலிதா சொல்லவில்லை; எம்.ஜி.ஆர். சொன்னதைத்தான் திருப்பிச் சொல்கிறார் என்று திருவாளர் சோ சப்பைக் கட்டு கட்டுகிறார்.

எம்.ஜி.ஆர். அவர்கள் பெரும்பாலும் கலைஞர் என்ற வார்த்தையைத்தான் பயன் படுத்தி இருக்கிறார் என்பதை தனது இன நலனுக்காக வசதியாக மறைத்து எழுதும் போக்கிரித்தனத்தைக் கவனிக் கத் தவறக்கூடாது. எம்.ஜி. ஆரைப்பற்றி குறைகூறி, ராஜீவ் காந்திக்கே கடிதம் எழுதியவர் ஜெயலலிதா இந்த நிலையில் எம்.ஜி.ஆரைத் துணைக்கழைத்து ஜெயலலிதாவைக் காப்பாற்றத் துடிக்கிறது இந்தக் கைபர் கணவாய்!

பார்ப்பனர் அல்லாதாரை சூத்திரர்கள் என்று மனு தர்மத்துக்கு வக்காலத்து வாங்கி இன்றைக்குக்கூட எழுதும் சோ போன்ற இனவெறியர்கள் ஜெயலலிதாவுக்காக இனவெறியோடு எழுதுவதில் ஆச்சரியம் என்ன இருக்க முடியும்?

சோ பார்ப்பனர் ஒரு வகையில் ஜெயலலிதா அம்மையாரைக் காப்பாற்ற பூணூலை முறுக்கிக் கொண்டு கிளம்புகிறார் என்றால், கல்கியோ தனி நபர் தாக்குதல் என்பது ஜெயலலிதாவுக்குப் பழகிப்போன ஒன்று என்று சமாதானம் சொல்லுகிறது நியாயப்படுத்துகிறது.

இதன்மூலம் தனி நபர் தாக்குதலை கல்கி ஆதரிக்கிறது என்பது வெளிப்படை. இதுதான் கல்கி வாசகர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் கண்ணியமிக்க பாதை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கேள்வி சிறப்புப் பரிசு பெறுகிறது என்பதையும் கண்டிப்பாக மறக்காமல் நினைவில் வையுங்கள். காகப்பட்டர் குணம் இன்னும் கல்கி கூட்டத்தை விட்டுப் போகவில்லை என்பதை மறக்கவேண்டாம்.

என் ஜென்மப் பகைவர் கருணாநிதி என்று செல்வி ஜெயலலிதா கடந்த தேர்தலின் போது கூறவில்லையா?

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் நாட்டில் நடப்பது அரசியல் அல்ல இனப் போராட்டமே என்பது எளிதில் விளங்காதா?

இது தந்தை பெரியார் சொல்லும்போது சிலருக்குக் கசப்பாகக் கூட இருக்கும். ஆச் சாரியாரே (ராஜாஜி) சொல்கிறாரே அது எப்படி இருக்கும்?

தேவர்கள், அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ் நாட்டின் நிலை! (திருவொற்றி யூரில் ஆச்சாரியார் பேசியது 18.9.1953).

--------------------மயிலாடன் அவர்கள் 2-9-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

ராசியும் வானியலும்


ஜோதிடத்தில் தலையாய பங்குவகிப்பது இராசி அல்லது இராசிச் சக்கரமாகும். இந்த இராசி என்பது என்ன? இதற்கும் வானியலுக்கும் என்ன தொடர்பு? இதனை முதலில் விளங்கிக் கொண்டால் ஜோதிடத்தினை அறிவியல்பூர்வமாக விளங்கிக் கொண்டால் ஜோதிடத்தினை அறிவியல்பூர்வமாக விளங்கிக்கொள்ள ஏதுவாகும். இரவு வானில் விண்மீன்கள் ஜொலிப்பதைக் கண்டு களித்திருப்பீர்கள். சற்றுக் கவனமாக நோக்கினால், விண்மீன்களும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்வது போன்று தோற்றமளிப்பதைக் காணலாம். மெய்யாக, பூமி சூழல்வதால்தான் இத்தோற்றம் ஏற்படுகிறது.

மேலும், சலியாது பலநாள்கள் வானத்தை உற்று நோக்கினால் சில விண்மீன்கள் மட்டும் ஏனைய விண்மீன்களிலிருந்து வேறுபட்டுத் தோற்றமளிப்பதைக் காணலாம். மேலும் விண்மீன்களின் பின்புலத்தில் இந்தக் குறிப்பிட்ட சில மட்டும் சலனிப்பதைக் காணலாம். இவைதான் கோள்கள். கிரகம் என்று வடமொழியிலும் பிளானட் என்று கிரேக்க மொழியிலும் வழங்கப்படுகிறது. பிளானட் என்றால் அலைபவன் என்று பொருள்.

விண்மீன்களை உற்றுநோக்கினால் வேறு சில தோற்றங்களையும் காணலாம். சிலசமயம் வானில் புலப்படும் முகில்களில் யானை, குதிரை என பல உருவங்கள் தென்படுவது போன்று, விண்மீன்கள் இடையே சில உருவங்களைக் கற்பனை செய்ய முடியும். சில வார இதழ்களில் புள்ளிகளை இணைத்து மறைந்துள்ள உருவங்களைக் கண்டுபிடி எனக் கூறுவதுபோல, விண்மீன் சிலவற்றை இணைத்துப் பார்த்தால் சில உருவங்களைக் காணலாம்.

இவ்வாறுதான் கரடி, நாய், மீன், மனிதத் தலை, குதிரை, வேடுவன், எருது எனப் பல உருவங்களை நமது முன்னோர்கள் கற்பனை செய்துள்ளனர். இவைகளை விண்மீன் தொகுப்பு எனக் கூறலாம். இவை கற்பனைதானே தவிர, மெய்யாக இரவு வானில் உள்ள பொருள்கள் அல்ல. கோள்கள், விண்மீன்கள் தவிர வானத்தில் காட்சி தருபவை சூரியனும் சந்திரனும்தான்.

பூமி கோள வடிவில் உள்ளதால் பூகோளம் என்கிறோம். பார்வைக்கு இரவு வான் நம் தலைமீது கவிழ்த்து வைக்கப்பட்ட தேங்காய் மூடி போன்று உள்ளது அல்லவா? கற்பனையாக இரவு வானின் தேங்காய் மூடி உருவை முழுமையாக்கினால், ஒரு பெரும் கோளம் கற்பனை செய்யலாம் அல்லவா? இதைத்தான் வான்கோளம் என்கிறோம். அதாவது, ஒரு மிக மிகப்பெரிய கோளத்தில் விண்மீன்கள் பதிந்துள்ளன எனவும், இந்தக் கோளத்தின் மய்யத்தில் சிறு எலுமிச்சைப் பழம்போல் பூமி கோளமாய் இருக்கிறது என்றும் கற்பனை செய்யலாம் அல்லவா? இவ்வாறுதான் நமது முன்னோர்களும் கற்பனை செய்தனர். இதனை, பூகோளம் என்றழைத்தனர்.

வான்கோளத்திற்கும், பூமிக்கும் இடையே கோள்கள் பூமியைச் சுற்றி வலம் வருவதாகவும் புனைவு செய்தனர். சூரியன் ஒரு நாளில் பூமியைச் சுற்றுவதால் இதனை முதல்கோள் எனவும், அதற்கு மேலே சந்திரன் என கோள்களை வரிசைப்படுத்தினர்.

சூரியன் பூமியைச் சுற்றும் பாதைக்கு, பூமியின் அச்சு 23லு பாகை சாய்வாக உள்ளது. ஆகவே, பூமியின் வட, தென் முனைகளுக்கு நேரே வான்கோள வட, தென் முனைகள் அமையாது, 23லு பாகை சாய்வாக வான்கோளத்தின் மத்திய ரேகை அமையும். வான்கோளத்தில் சூரியன் வலம் வரும் பாதை சூரிய வீதி என்றழைக்கப்படுகிறது. சூரியவீதியின் சிறப்பு என்னவெனில், கோள்கள் அனைத்தும் மற்றும் நிலவும் சூரிய வீதியைச் சார்ந்தே வான்கோளத்தில் சலனிக்கும். சூரியவீதிக்கு 80 இரண்டு பக்கமும் உள்ள பகுதியில் மட்டுமே கோள்கள் பாயும். சூரியவீதியின் இருபுறமும் 80 உள்ள வான்கோளம் பகுதியே ராசி என்று அழைக்கப்படுகிறது. வான் கோளத்தின் மத்தியப் பகுதியில் 160 அகலத்தில் 3600 வட்டமாக ராசி உள்ளது.

இந்த ராசியை 12 சம பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியில் உள்ள விண்மீன்களைக் கற்பனையாக, சில உருவங்களைப் புனைவு செய்தனர் நமது முன்னோர். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ன 12 ராசிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பூமி (1) வான்கோளத்தில் உள்ள மேஷ ராசிக்கு நேராய் உள்ளது. ஆகவே, சூரியனிலி ருந்து யாராவது பூமியைப் பார்த்தால், பூமி மேஷ ராசியில் உள்ளது போன்று தோன்றும். ஆனால், பூமியிலிருந்து பார்ப்பவருக்கு, சூரியன் துலாம் ராசி யில் உள்ளது போன்று தோன்றும். வானியலில், இதை, சூரியன் துலாமில் இருப்பதாகக் கூறுவோம்.

ஆனால், பூமி (2) என்ற இடத்தில் பூமி தனது சுற்றுப்பாதையில் அமைத்தால், சூரியனிலிருந்து பார்ப்பவருக்கு பூமி மிதுனத்திலும், பூமியிலிருந்து பார்ப்பவருக்கு சூரியன் தனுசுவிலும் உள்ளது போன்று தோன்றும்.

ஆக உள்ளபடியே ராசிகளையும், விண்மீன் தொகுப்பு (Constellations) களை நமது முன்னோர் வடிவமைத்தது, இரவு வானின் நிகழ்வுகளைச் சுட்டுவதற்குத்தான். காலப்போக்கில் இந்த உருவங்கள் தான் புராணங்கள் உருவாகி புனைவுகள் புரட்டுகள் நிலைகொண்டிருக்கும் எனக் கருதலாம். சந்திரன் இன்று இரவு எங்கே இருக்கும் என்று எப்படி விவரிப்பது. பூமியின் சூழற்சியால் சந்திரன் மேற்கு முகமாக மெல்ல மெல்ல ஒவ்வொரு நொடியும் நகரும் அல்லவா? இச்சூழலில் எப்படி விவரிப்பது. இங்குதான் ராசிகள் உதவுகின்றன. இன்று கடக ராசியில் சந்திரன் இருக்கும் என்றால் மிகத் தெளிவாக அனைவரும் விளங்கிக்கொள்ள முடியும். கடக ராசி மேற்குமுகமாக நகர்ந்தாலும் அத்துடன் சந்திரனும் இணைவாக நகரும் அல்லவா? ஆகவே விண்மீன் தொகுப்புகள் வானவியலில் கற்பனைப் பிரதேசங்கள், வான் நிகழ்வுகளை எளிதில் சுட்ட உபயோகமானவையாகத் திகழ்கின்றன. கோள்களும், சந்திர சூரியனும் ராசி மண்டலத்தில்தான் சலனிப்பவை என்பதால் விண்மீன் தொகுப்புகளிலேயே மிக முக்கியத்துவம் பெற்றதாக ராசி மண்டலமும், அதன் 12 விண்மீன் தொகுப்பும் (ராசிகளும்) திகழ்கின்றன.

உத்ராயணம் தட்சணாயனம் என்றால் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் இருக்கும். ஜூன் 21ஆம் தேதி கடக ராசியிலும், செப்டம்பர் 23 ஆம் தேதி துலாம் ராசியையும், டிசம்பர் 22 ஆம் தேதி மகர ராசியிலும் அமையும். மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களில் இரவு பகல் பூமி முழுவதும் சரிசமமாக இருக்கும். இந்த இரண்டு நாள்களை, சம இரவு நாள்கள் எனவும் இந்நாள்களில் வான்கோளத்தில் சூரியன் அமையும் புள்ளிகளை, சம இரவுப் புள்ளிகள் எனவும் அழைப்பர்.

மார்ச் 21ஆம் தேதிக்குப் பிறகு சூரியன் மேஷத்திலிருந்து கடகம் நோக்கி நகரும். பூமி 23லு பாகை சாய்வாக இருப்பதால், சூரிய ஒளி பூமியின் வடகோளத்தில் அதிகமாயும் தென் கோளத்தில் குறைவாகவும் விழும். வடகோளத்தில் கோடை; தென் கோளத்தில் குளிர் நிலையைப் பூமியில் தோற்றுவிக்கும். இச்சமயத்தில் நமது பார்வைக்கு, சூரியன் நேர் கிழக்காக உதிக்காது. சூரிய உதயப் புள்ளி மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகரும். இச் சமயத்தில் வடகோளத்தில் உள்ளவர் களுக்குப் பகல் பொழுது நீளும். ஜூன் 21 ஆம் தேதி சூரிய உதய விலகல் வடக்கு நோக்கி உச்சத்தை அடையும். மறுபடி சூரிய உதய விலகல் வடக்கு நோக்கி உச்சத்தை அடையும். மறுபடி சூரிய உதயப் புள்ளி தெற்குநோக்கி நகரத் தொடங்கும். செப். 23 அன்று மறுபடி சமஇரவு. அன்று மார்ச் 21ஆம் தேதி உதித்தது போல, சூரியன் நேர்கிழக்கில் உதிக்கும். செப். 23 முதல் டிச. 22 வரை சூரிய உதயப்புள்ளி தெற்கு நோக்கி நகரும். டிச. 22 அன்று, உச்ச கட்டத் தெற்குப் புள்ளியில் சூரிய உதயம் அமையும். டிச. 23 முதல் சூரியன் வடக்கு நோக்கி நகரும். மறுபடி மார்ச் 21 சம இரவு நாள். அன்று நேர் கிழக் காக சூரிய உதயம் அமையும்.

அதாவது டிச. 23 முதல் ஜூன் 21 வரை சூரிய உதயப் புள்ளி வடக்கு முகமாகவும், ஜூன் 22முதல் டிச. 22 வரை தெற்குநோக்கியும் அமையும். ஆகவே, இதனைக் குறிக்க முன்னதை உத்தராயணம் எனவும் பின்னதைத் தட்சணாயனம் என்று அழைப்பர். ஆக மகரம் முதல் கடகம் வரை சூரியப் பெயர்ச்சி உத்தராயணம். சிம்மம் முதல் மறுப்பு கடகராசியை அடைவது தட்சணாயனம்.

ராசிகள் உருவானது எங்கே?

இந்திய ஜோதிடத்திலும் வானவியலிலும் பயன்படுத்தப்படும் ராசி எனும் கருத்தும், 12 ராசிகளின் பெயர்களும் பெரும்பாலும் கிரேக்க பாபிலோனியக் கொள்கைகளுக்கு ஒப்பாக இருப்பது வியப்பான சிறப்புச் செய்தி ஆகும்.

வராகமிகிரர் தனது பிரஹத் சம்ஹிதையில் கிரேக்க ஜோதிடர்கள் குறித்துக் (யவனர், மிலேச்சர் என குறிப்பிட்டு) கூறுகிறார். மேலும், பிரஹக் ஜாதகம் எனும் நூலில் ராசிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. சிதம்பர அய்யர் இந்நூலினைக் குறித்துக் கூறும்போது, கிரேக்கர்கள் இந்தியர்களிடையே நீண்டகாலத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் எனக் கூறுவதும் கவனிக்கத்தக்கது. அதுபோன்றே வராகமிகிரர் பயன்படுத்தும் சில கலைச் சொற்கள் கிரேக்க மொழியின் திரிபு என பாலசந்திரராவ் சுட்டிக்காட்டுகிறார். மேலும், வானியல் நூல்கள் ஆசிரியர்கள் குறித்துக் கூறும்போது, பவுலிஸ், ரோமசு சித்தாந்தங்கள் எனவும் சுட்டப்படுகின்றன. பவுலிஸ் என்பது பவுலஸ் அலெக்ஸாண்டிரனஸ் என்பர் எனவும் ரோமசு என்பது ரோமபுரியைக் குறிப்பது எனவும் கூறப்படுகிறது. ஆக வானவியல் கருத்துகள் பரவியதுபோல ஜோதிடக் கருத்துகளும் இங்கும் அங்கும் உலகம் முழுவதும் பரவியிருக்கக்கூடும் என துணியலாம்.

2.8.2000 அன்று மாலை சுமார் 4 மணி அளவில் திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கூடினர். அந்நகரமே அல்லோலப் பட்டது. அன்று சனி பகவான், அதுவரை தான் குடியிருந்த மேஷ ராசியை விட்டு அகன்று ரிஷபராசிக்கு மாறியதே இதற்குக் காரணம்.

சனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்ற சுமார் 36 ஆண்டுகள் எடுக்கும். ஆகவே, 12 ராசிகள் உள்ள சூரியவீதியில் சனி ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2.5 ஆண்டுகள், காணப்படும். இதனைத்தான், அந்த ராசியை, சனி பிடித்துள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. இரண்டரை ஆண்டுகள் கழித்து, சனி அந்த ராசியிலிருந்து விலகி அடுத்த ராசிக்கு மாறும். இதனைத்தான் சனிப்பெயர்ச்சி எனக் கூறுகிறார்கள்.

ஆகஸ்ட் 2000த்தில் மேஷ ராசிக்காரருக்கு சனி விலக ஆரம்பித்து விட்டதாகவும், ரிஷப ராசிக்காரரை சனி பிடித்து விட்டதாகவும் அதற்கடுத்துள்ள மிதுன ராசிக்காரருக்கு சனியின் பார்வை படியத் தொடங்கிவிட்டதாகவும் ஜோதிடம் கூறுகிறது. இதுதான் 7லு நாட்டுச் சனியின் பின்புலமுள்ள கருத்து. (புரட்டு)

சனி மட்டுமல்ல, எல்லாக் கோள்களுமே சூரியனைச் சுற்றுவதால் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும். சந்திரன் இரண்டே கால் நாளும், இராகு, கேது ஒன்றரை வரு டமும், சனி இரண்டரை வருடமும், குரு ஒரு வருடமும், செவ்வாய் ஒன்றரை மாதமும், சூரியன், சுக்கிரன், புதன் ஆகியவை ஒரு மாதமும் ஒரு ராசியில் தங்கும் என்பது வழக்கு. (நன்றி: விவேகானந்தன், தீக்கதிர்). நாள் என்ன செய்யும்? கோள் என்ன செய்யும்?

தி. வெங்கடேஸ்வரன் அவர்கள் எழுதிய கட்டுரை “விடுதலை”14-8-2010

1.9.10

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோரின் சிந்தனைக்கு!


கோகுலாஷ்டமியா?

இன்று கடவுள் கிருஷ்ணன் பிறந்த நாளாம். பிறப்பு இறப்பு அற்றவர் உருவம் அற்றவர் கடவுள் என்று ஒரு பக்கத்தில் வாய்ப்பறை கொட்டுவோர் அதற்கு நேர் எதிராக அறிவு நாணயமற்ற முறையில் கடவுள் பிறந்தார் என்றும், இந்த உருவத்தில் உள்ளார் என்றும், அந்தக் கடவுளுக்கும் பெண்டாட்டிகள், வைப்பாட்டிகள், பிள்ளை குட்டிகள் உண்டு என்றும் கூறும் அபத்தத்தை ஆபாசத்தை என்னவென்று சொல்ல!

கடவுள் சண்டை போட்டார்; கொலை செய்தார் விபச்சாரம் செய்தார்; சூழ்ச்சி செய்தார்; தந்திரம் செய்தார் என்றெல்லாம் கடவுள்கள் இந்து மதத்தில் கற்பிக்கப்பட்ட திலிருந்து இந்து மதத்தின் சாக்கடை நாற்றத்தையும் இவ்வாறெல்லாம் தெருப்புழுதியாக எழுதி வைத்துள்ள ஆசாமிகளின் ஆபாச சேட்டைகளையும் ஆறறிவுள்ள மனிதர்கள் எண்ணிப் பார்க்கவேண்டாமா?

இன்றைக்குக் கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்களே இந்தக் கிருஷ்ணன் எப்படிப் பிறந்தானாம்?

தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம் அதிகமாகிவிட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்கவேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம். கறுப்பு மயிர் கிருஷ்ணனாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ணனாகவும் ஆயினவாம் இவ்வாறு கூறுவது இந்து மதத்தின் அபிதானகோசம்தான்.

எவ்வளவுக் காட்டுமிராண்டித்தனத்தில் கடவுளின் கீழ்த்தர உற்பத்தி நடந்திருக்கவேண்டும்?

கடவுள்தானே தேவர்களையும், ராட்சதர்களையும் படைத்தான் என்கின்றனர். அப்படி இருக்கும்போது கடவுளால் படைக்கப்பட்ட ராட்சதன், கடவுளால் படைக் கப்பட்ட இன்னொரு தேவர்களை எப்படித் துன்புறுத்துவான்? கடவுளின் வளர்ப்பு சரியில்லையா?

எந்த அவதாரம் எடுத்தாலும் ராட்சதனைக் கொன்றான் ராட்சதனைக் கொன்றான் என்று எழுதி வைத்துள்ளார் களே, அந்த ராட்சசன் வம்சம் அழிந்து போய்விட்டதா அல்லது தொடர்கிறதா?

வரலாற்று ஆசிரியர்கள் எல்லாம் பார்ப்பன பி.டி. சீனிவாசய்யங்கார் உள்பட, இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று விநியோகம் செய்து வந்த விவேகானந்தர் வரை ராட்சதர்கள் என்று இதிகாசங்களிலும், வேதங்களிலும், புராணங்களிலும் சொல்லப்படுபவர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று எழுதியுள்ளார்களே இதன் பொருள் என்ன?

திராவிடர்களை இழிவுபடுத்த, மட்டந்தட்ட, கொன் றொழிக்க, இட்டுக்கட்டி எழுதப்பட்ட சரக்குகள்தான் இவை என்பது விளங்கவில்லையா?

நாட்டில் நடப்பது ஆரியர் திராவிடர் போராட்டம் என்று தந்தை பெரியார் சொன்னதும் தேவர்கள் அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ்நாட்டின் நிலை என்று சி. ராஜகோபாலாச்சாரியார் (ராஜாஜி) 18.9.1953 அன்று திருவொற்றியூரில் பேசியதும் இதனை நிரூபிக்கின்றனவே!

பார்ப்பனர்களுக்காகப் போரிட்டவர்களுக்கு விழா கொண்டாடும்போது அவர்களை எதிர்த்துப் போரிட்ட திராவிடர்கள் என்ன செய்யவேண்டும்? அந்தக் கடவுள் களை வீதிக்கு வீதி போட்டுக் கொளுத்தவேண்டாமா?

தந்தை பெரியார் இராமன் படத்தை எரிக்கச் சொன்னதும், பிள்ளையார் பொம்மைகளை வீதிகளில் போட்டு உடைக்கச் சொன்னதும் இந்த அடிப்படையில் தானே?

புத்த மார்க்கத்தை ஒழிக்கத்தான் கிருஷ்ண அவதாரம் கற்பிக்கப்பட்டது என்ற வரலாற்று உண்மையைக் கொஞ்சம் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.

புத்தர் ஒழுக்க நெறிகளைப் போதித்தார் கட்டுப் பாடுகளை, நியதிகளை வரையறுத்தார். ஆரியர்களின் யாகங்களை எதிர்த்தார். அவர்கள் வகுத்த வருணாசிரம அமைப்பை நிர்மூலப்படுத்தினார்.

அந்த ஒழுக்க நெறிகளுக்கு மாறாக ஆபாச உணர்வையும், விபச்சாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் ஒரு கதாபாத்திரத்தை (கிருஷ்ணனை) உருவாக்கி கவர்ச்சியைக் காட்டி மக்களை மதிமயங்கச் செய்த ஏற்பாடுதான் இது.

சினிமாக்காரர்களைக் காட்டியும், பாலுணர்வைத் தூண்டும் சமாச்சாரங்களை ஒளிபரப்பியும் மக்களை இப்பொழுது திசை திருப்பவில்லையா? மதி மயக்கம் செய்யவில்லையா? இந்த ஒழுக்கங்கெட்ட விவகாரங்களை இந்து மதத்தின் கிருஷ்ணாவதாரத்திலிருந்து கற்றுக் கொண்டவர்கள்தான் இவர்கள்.

குளிக்கும் பெண்களின் ஆடைகளைத் திருடிச் செல்வதும், நிர்வாணமாகக் கரைக்கு வந்து இரு கைகளையும் உயரே தூக்கிக் கும்பிட்டால்தான் ஆடைகளைக் கொடுப்பேன் என்று அடாவடித்தனம் செய்ததும் தான் கிருஷ்ணக் கடவுளின் சிறப்பாம்.

இந்தக் கேவலமான கடவுளின் பிறந்த நாள் என்று கூறி அரசு விடுமுறை வேறு விடுகிறது. செல்வி ஜெயலலிதா ஆரம்பித்து வைத்த இந்த விடுமுறை இப்பொழுதும் தொடர்வது நியாயந்தானா?

--------------------"விடுதலை” தலையங்கம் 1-9-2010

தமிழனுக்கு உச்சிக்குடுமி எப்படி வந்தது!


ஆரியர் பழக்க வழக்கமும் அவர்களது மதம், கடவுள் ஆகியவைகளும் அவை பற்றிய யோக்கியத் தன்மை, சக்தி, நடப்பு முதலியவைகளும் தமிழர்களாகிய நமக்குப் பெரிதும் பொருத்த மற்றவை என்பது நமது கருத்தாகும்.

இதை மறுத்து அவற்றுள் எதையாவது நமக்கு பொருத்தமுள்ளதென்றும் அவை நம்முடையவையே ஒழிய ஆரியருடைய தல்லவென்றும் நம் சைவப் பண்டிதர்களைப் போல் தமிழர் யாராவது ஆதாரத்தோடு வழக்காடுவார்களே யானால், அப்படி இருந்தாலும் அவை அந்த(அதாவது மக்கள் இன்றைய அறிவுபெறாத அந்த) காலத்தில், அதுவும் ஒரு சமயம் அன்று இருந்த மக்களுக்குப் பொருத்தமாயிருந்தாலும் இருக்கலாமே ஒழிய இந்தக் காலத்திற்கு அவை கண்டிப்பாய் ஒதுக்கித்தள்ள வேண்டியவைகளேயாகும் என்பதும் நமது அபிப்பிராயம்.

அதற்காக வேண்டியே, அதாவது அவைகளை நம் மக்கள் உணர வேண்டுமென்பதற்காகவே அவைகள் பற்றிய ஆதாரங்களை ஆரியர்களாலும், ஆரியர்களின் கொள்கைகளுக்கும் அவர்களது மதம், கடவுள்களுக்கும் அடிமைப்பட்ட நம் பண்டிதர்களாலும், கற்பிக்கப்பட்ட ஆதாரங்களிலிருந்தே சில எடுத்து, அடிக்கடி குடிஅரசில் எழுதி வரப்படுகிறது.அந்தப்படி இவை சம்மந்தமாக குடிஅரசில்எழுதி வந்ததும், வருவதுமான சேதிகள் கண்டிப்பாக ஆரியர்களால் ஏற்படுத்தப்பட்ட வடமொழி ஆதாரங்களிலிருந்தும், அவைகளை ஆரியர்களாலேயே மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் மொழி பெயர்ப்புகளிலிருந்தும், மற்றும் அவற்றை நம் தமிழ்ப் பண்டிதர்களால் மொழிபெயர்த்தோ அல்லது ஆரியர் மொழி பெயர்த்ததைக் கவிகளாகப் பாடிய கவிகளிலிருந்தோ எடுத்துக் கையாளப்படுபவைகளே யல்லாமல் கற்பனையாக எந்தச் சங்கதியும் குறிப்பிடப்படுவதில்லை என்பதை மறுபடியும் வாசகர்களுக்கு உணர்த்துகிறோம்.

பொதுவாக ஆரிய நாகரிகத்தையோ, அவர்களது பழக்க வழக்கங்களையோபற்றி ஊன்றி ஆதாரங்களைக் கவனித்து சிந்தித்துப் பார்ப்போமானால் அவர்களுக்குள் ஒரு சமுதாயக் கட்டுப்பாட்டு முறையோ, ஒழுக்கமோ, நீதியோ, பகுத்தறிவு உணர்ச்சியோ ஏதும் இருந்ததாகக் காணப்படுவதற்கு இல்லை. அக்கால மானாபிமானத்துக்கும் இக்கால மானாபிமானத்துக்கும் சிறிதும் சம்மந்தமில்லை என்பதாகவும் தெரிகிறது. ஆகவே ஆரியர்கள் சகல துறைகளிலும், அக்காலத்திய ஆரியர் வாழ்வில் பூரண சுயேச்சையோடு எவ்விதக்கொள்கையும் இல்லாமல் அவரவர்கள் இச்சைப்படி விலங்குகள் போல் வாழ்ந்து வந்ததாகவே தெரிகிறது. அதனால்தான் வள்ளுவர்.

தேவரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்

என்று பாடினார் போலும்(தேவர்ஆரியர்). நாளாவட்டத்தில் அவர்கள் இந்தக் கால தேச வர்த்தமானத்திற்குத் தகுந்தபடி எது மேன்மை யாகக் கருதப் படுகிறதோ அதைத் தங்கள் பழக்க வழக்கங்களாக மாற்றி அமைத்துக் கொண்டு வந்து இன்றைய நிலைமைக்கு அவர்கள் வந்திருக்கக் கூடும் என்றாலும் வேத, புராண, இதிகாச காலங்களில் அவர்கள் மிருகப் பிராயத்தில் இருந்திருக்கிறார்கள் என்பதே அவற்றிலிருந்து தெள்ளென விளங்குகின்றதாகும்.

நம் பண்டிதர்கள் பெரிதும் அவற்றைத் தங்கள் சமயத்திற்கும், தங்கள் கடவுள் நடப்புக்கும் பொருத்திக்கொண்டதால் அந்தக் கேவலமான சேதிகளை வெறுக்க யோக்கியமற்றவர்களாகி மூடிவைத்துத் தொல்லை கொடுத்துக் கொண்டே வருகிறார்கள். அதனாலேயே அவை நம்மாலும் வெறுக்கப்படாமல் உயர் சமயமாகப் போய்விட்டதெனலாம்.

அந்தக் காலத்தில் கணவன், மனைவி என்கின்ற கூட்டு வாழ்க்கை ஒப்பந்தம் இன்று இருப்பதில் 100இல் ஒரு பங்கு இருந்ததாகக்கூட தெரியவில்லை.

அந்தக் காலத்து நாணயம், ஒழுக்கம், நம்பிக்கை, நல்லெண்ணம், பிறர்நலம் பேணுதல் முதலிய நற்குணங்களும் இக்காலத்தவைகளுக்கு மிகமிக மாறுபட்டதும் தாழ்ந்ததுமாகவே இருந்து வந்திருக்கிறது. அந்தக்கால ஆரியர்களுக்கு ஏதாவது ஒரு சமயம் இருந்திருப்பதாகக்கூடத் தெரியக்காணுவ தில்லை. அவர்களுக்கு அப்போது ஏதாவது ஒரு கடவுளே, பலகடவுள்களோ இருந்திருந்ததாகவும் தெரியவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் பஞ்ச பூதங்களையும், சூரியன், சந்திரன் முதலியவைகளையும் மனிதனைப்போல் உருவகப்படுத்திக்கொண்டு தங்களுக்கு வேண்டியதை நல்கும்படி வேண்டிக்கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்படி வேண்டியிருப்பதிலும் ஒரு கவனிக்கத்தக்க விஷயமென்னவென்றால், தங்களுடைய ஒழுக்க ஈனங்களையும், மோசடிகளையும் அவைகளுக்கும் கற்பித்து இருக்கின்றார்கள்.

ஆரியர்களின் முதல் ஆதாரம் வேதம் என்பதாகத்தான் தெரிகிறது. அந்த வேதம் பெரிதும் விபச்சாரம், மதுமாம்சம் அருந்துதல், தாங்கள் அல்லாதவர்களை (ஆரியரல்லாதவர்களை) இழிவாய்ப் பேசுவதும், அவர்களை அடியோடு அழிக்கவும், தங்களுக்கு ஏவலாளாகக் கொள்ளவும், பழிவாங்கும் தன்மைபோல் கொடுமை செய்வதுமான காரியங்களையே கொள்கையாகவும், பிரார்த்தனையாகவும் கொண்டிருக்கின்றன. வேதத்திலும் அதன் பின் ஏற்பட்ட வேதசாரமான புராணக்கதை, காவிய இதிகாசங்களிலும் பார்த்தால் தகப்பன் மகன், அண்ணன்தங்கை என்கின்ற பேத முறைகூட இல்லாமலும், மிருகம், மக்கள் என்கின்ற இன பேதம்கூட இல்லாமலும், ஆணும், ஆணுமாகவும் இன்னமும் எத்தனையோ விதமாக இயற்கைக்கு விரோதமான சேர்க்கையுடன் இருந்து வந்திருப்பதாகப் பல இடங்களில் காணப்படுகின்றன.

இவைகளையெல்லாம் ஏதோகாட்டுமிராண்டி காலத்துக் கொள்கை என்றும், எந்த சமூகத்திலும், மனிதன் மிருகப் பிராயத்தில் இருந்த காலத்தில் இப்படித்தான் இருந்திருக்க முடியும் என்றும், ஒருவிதத்தில் சமாதானம் செய்து கொள்ளலாம் என்றாலும், மேற்கண்ட விஷயங்களைக் கொண்ட ஆதாரங்களை இன்று ஆரியரும், தமிழரும், தங்கள் தங்கள் சமய ஆதாரங்கள் என்றும் தங்களால் போற்றிப் பாராட்டிப் பாதுகாக்க வேண்டிய புண்ணிய சரித்திரங்கள் புண்ணிய காரியங்களில் என்றும் பிரசங்கித்துப் பிரச்சாரம் செய்கின்றார்களே இதற்கு என்ன சமாதானம் என்பது நமக்கு விளங்கவில்லை. சிவன், விஷ்ணு, பிரம்மா, சுப்ரமணியன்,இராமன் கிருஷ்ணன் முதலிய கடவுள்களைப் பற்றிப் பிறகு யோசிப்போம். அக்கினி, வாயு, வருணன் முதலிய பஞ்சபூதக் கடவுள்களைப்பற்றியும் பிறகு யோசிப்போம். இந்திரன் என்கின்ற கடவுளைப்பற்றி ஆரியர்கள்தானாகட்டும், தமிழர்கள்தானாகட்டும் அக்கடவுளின் கதைகளையும், பண்டிகைகளையும் எதற்காக கொண்டாட வேண்டும் என்று கேட்கிறோம்.

இந்திரவிழா சிலப்பதிகாரத்திலேயே கொண்டாடப்பட்டிருக்கிறது. இதிலிருந்து ஆரியர்கள் தவிர தமிழர்களும் ஆதிகாலத்தில் இருந்தே இந்திரவிழாவைக் கொண்டாடி இருக்கிறார்கள் என்றும் ஆதிகாலத்திலிருந்தே தமிழர்கள் தன்மானமிழந்து ஆரியர்களுக்கு அடிமைப்பட்டு வந்திருக்கிறார்கள் என்றும் தெரியவருகிறது. பழந்தமிழ் அரசர்கள் என்று சொல்லி உரிமை கொண்டாடப்படுபவர்களான மூவேந்தர் (சேர, சோழ, பாண்டியர்) எவருமே உண்மைத் தமிழனாக இருந்ததாகச் சொல்லுவதற்கு ஆதாரமே காண முடியவில்லை.

இன்றைய அரசியல் உலகத்தில் ஒரு முத்துரங்க முதலியாரும், பண்டிதர்கள் உலகத்தில் ஒரு கதிரேசன் செட்டியாரும், கலைவாணர்கள் உலகத்தில் ஒரு சிதம்பரநாத முதலியாரும் ஆகிய பெரியோர்கள் இன்று எப்படித் தமிழர்களாக இருந்து வருகிறார்களோ அப்படித்தான் பழங்கால தமிழரசர்கள் உலகத்திலும் சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் தமிழர்களாக இருந்திருக்கிறார்களே ஒழிய இன்று தமிழர்களின் உள்ளத்தில் உதித்தெழுந்த உணர்ச்சிப்படியான தமிழன் ஒருவனைக்கூட அக்காலத்தில் இருந்ததாகக் காணமுடியவே இல்லை.

தமிழர்களுக்கு ஆரியர் வேதம், கடவுள், சமயாதாரம் ஆகியவைகள் தவிர்த்த தனித்தமிழ்க் கொள்கையோ முறையோ ஏதும் இருந்ததாகச் சொல்ல நம் ஆராய்ச்சியாளர்களுக்கு இடமில்லாமலே நம் இன்றைய தமிழ்ப் பண்டிதர்களும், பழங்காலப் பண்டிதர்களும் இன்றைய அரசர்களும், பழந்தமிழ் அரசர்களும் செய்து விட்டார்கள். பெரிய புராணத்தையும், பக்த லீலாமிர்தத்தையும், கந்த புராணத்தையும், கம்பராமாயணத்தையும் கட்டிக்கொண்டு அழும் தமிழன் எவனாகட்டும் அவன் தனித் தமிழர் கொள்கை இதுவென எதையாவது காட்ட முடியுமா என்றும், இப்படிப்பட்ட தமிழன் யாராய் இருந்தாலும் அவன் பண்டார சன்னதியாயிருந்தாலும், அவன் நாஸ்திகனல்லாமல் அதுவும் முழு முழு நாஸ்திகனேயல்லாமல், கடுகளவு ஆஸ்திகனாகவாகிலும் இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

அன்பே கடவுள், உண்மையே கடவுள், ஒழுக்கமே கடவுள், ஒப்பு நோக்கே (சமரசமே) கடவுள் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு தமிழ் ஆஸ்திகன் மேற்கண்ட பெரிய புராணாதிகளையும், அவற்றில் வரும் கடவுளர்களையும், அவர்களது செயற்கைகளையும், பாராட்டி வழிபடுகிறவனாக இருந்தால் அவன் எப்படி தமிழ் ஆஸ்திகனாவான்? என்று கேட்கிறோம்.

தமிழனுக்கு உச்சிக்குடுமி எப்படி வந்தது! தீட்சை எங்கிருந்து வந்தது? பஞ்சாட்சரமேது! முத்திரஸ்தானம், (சமாசனம்) ஏது? அஷ்டாட்சரம் எது? பஞ்சகச்சம், திருநீறு திருநாமம் பூச்சுக்கள் ஏது? என்பன போன்ற எத்தனையோ விஷயங்கள் கவனித்தால் உண்மைத் தமிழன் எவனாவது இருக்கிறானா என்பதும் விளங்காமல் போகாது. தமிழனென்று தன்னை சொல்லிக் கொள்ள வேண்டுமென்றும், தமிழனுக்கு என்று தனிக் கொள்கைகள், அடையாளங்கள் ஒன்றும் இருக்க வேண்டியதில்லை என்றும் கருதிக் கொண்டு தமிழனில் பெரியவனாகத் தன்னைக் கருதவேண்டும் என்றிருப்பவர்கள் நம்மீது கோபித்துத்தான் தீருவார்கள். அதற்கு நாம் என்ன செய்யலாம்? இவர் கோபத்தைவிட, அதனால் ஏற்படும் கேட்டைவிட, தமிழர்களின் மானம் பெரிது என்று எண்ணுவதால் இவர்கள் கோபத்தால் வந்தது வரட்டும் என்கின்ற துணிவு கொள்ளவேண்டி இருக்கிறது.

-----------------------------பெரியார் ஈ.வெ.ரா - "குடிஅரசு" கட்டுரை _ 13.11.1943