Search This Blog

6.7.10

பெரியார் காந்தியை மகாத்மா என்று கூப்பிடவில்லை ஏன்?


சிதம்பரத்தில் சுயமரியாதைப் பிரசாரம்

எனக்கு முன் பேசிய மூன்று கனவான்களும் பேசியவற்றிற்குப் பின் நான் சில விஷயம் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். அதாவது முதலில் பேசியவர், தலைவர்கள் அடிக்கடி மாறுவதால் சுயராஜ்யம் தூரமாகி விடுகின்றது என்று சொன்னார்கள். நான் தலைவனல்ல ஒரு தொண்டனாவேன். நான் எப்போதாவது மாறவும் இல்லை. பொது வாழ்வில் தொண்டு ஆரம்பித்த காலத்தில் நமது விடுதலைக்கு என்ன என்ன காரியங்கள் தடையாயிருக்கின்றது என்று சொன்னேனோ அதையேதான் இப்போதும் சொல்லுகிறேன்.

தீண்டாமையும் வருணாசிரம தர்மமும் ஒழிந்தாலல்லது நமக்கு விடுதலை இல்லை என்பது எனது உறுதி. அதற்காக இப்போதும் பாடுபடுகிறேன். காங்கிரசினால் தீண்டாமையும் வருணாசிரமும் ஒழியாது என்பது உறுதியாதலால் நான் அதை விட்டுவிட்டு அதற்காக தனியாய் பிரசாரம் செய்கின்றேன்.

ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிடவில்லை என்கின்றார். ஸ்ரீமான் காந்தியை நான் மகாத்மா என்று கூப்பிட்ட காலத்தில் எனக்கு அவரிடம் இருந்த மதிப்பு இப்போது இல்லை. என்னவென்றால், இப்போது அவர் வருணாசிரமத்திற்கு வியாக்கியானம் செய்ததில் பிறவியில் ஜாதி உண்டென்று சொல்வதோடு இந்த ஜன்மத்தில் பிராமணனுக்குத் தொண்டு செய்தால்தான் அடுத்த ஜன்மத்தில் பிராமணனாகப் பிறக்கலாம் என்று சொல்லி இருக்கிறார் இதைக் கேட்ட பிறகு அவரை ‘மகாத்மா’ என்று சொல்ல எனக்கு இஷ்டமில்லை.

மற்றபடி மற்ற மதங்களிலும் பிரிவுகளும் மூடநம்பிக்கைகளும் இருப்பதாக சொல்லியிருக்கிறார்.

மற்ற மதங்களிலும் இருக்கின்றது என்கின்ற சமாதானம் போதாது. ஜனசமூகம் உண்மையான விடுதலை பெற மற்ற மதங்களிலும் உள்ள மூடநம்பிக்கைகளும் ஒழிய வேண்டியது தான். ஆனால், இப்போது எனது வேலை அதுவல்ல. என் தலைமீதும் எனது சகோதரர்கள் மீதும் சுமத்தப்பட்ட மதத்தின் யோக்கியதை வெளியாகி மக்கள் உண்மையறிந்து அதிலிருந்து அறிவு பெற்ற பிறகுதான் நமக்கு மற்ற மதங்களின் சீர்திருத்தத்தைப்பற்றி பேச யோக்கியதை உண்டு. ஆதலால் மற்ற மதங்களின் ஊழல்கள் இருப்பதற்காக நாம் நமது மதம் என்பதின் ஊழல் களை மூடி வைத்திருக்க முடியாது. நான் தொட்டால் அருகில் சென்றால் செத்துப் போகும் சாமிகளைப்பற்றி அலக்ஷியமாய் பேசினதற்காக வருந்து வதாக பேசினார். நான் அதற்கு பரிதாபப்படுகின்றேன். நான் தொட்டால் நான் அருகில் சென்றால் செத்துப் போகும் சாமியை நான் வேஷ்டி துவைக்கக்கூட உபயோகிக்கமாட்டேன். யார் என்னை என்ன சொன்னாலும் சரி, எனக்குக் கவலையில்லை. அப்படிப்பட்ட குணம் ஏற்பட்ட உருவத்திற்கு என்ன பெயர் சொன்னாலும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அதை வெறும் கல்லென்றும் செம்பென்றும் தான் சொல்லுவேன். ஸ்ரீ முத்துகிருஷ்ணன் பிள்ளையை அனுசரித்து ஸ்ரீமான் ரங்கநாதம் செட்டியாரும் பேசியிருக்கிறாராதலால் அவருக்குத் தனியாய் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.

ஆனாலும் முன்பு இந்த ஊர் ஜில்லா மகாநாட்டுக்கு தலைமை வகித்த காலத்தில் தீண்டாமை ஒழிய வேண்டு மென்பதையும் அதற்கு விரோதமாய் உள்ள மதம், சாஸ்திரம், புராணம் என்பதையும் பற்றி அப்போது அதாவது சுமார் 5, 6 வருஷங்களுக்கு முன்னால் நான் 2-மணி நேரம் அக்கிராசனர் என்கின்ற முறையில் பேசியிருப்பதை ஞாபகப்படுத்தி கொண்டாரானால் நான் ஏதாவது இப்போது மாறி இருக்கின்றேனா அல்லது காங்கிரசும் அந்த கூட்டத்தில் இப்போது இருப்பவர்களும் மாறி இருக்கின்றார்களா? என்பது புலனாகும் என்றும் சொல்லிவிட்டு ஸ்ரீமான் திருநாராயண அய்யங்கார் பேசியதற்கும் மற்றதற் கும் பொதுவாக நீண்ட பதில் உரைத்ததாவது:-

ஸ்ரீ அய்யங்கார் வெகு நேரம் பேசியதில் குறிப்பாய் எடுத்துக் காட்டிய குற்றம் இன்னது என்பது எனக்குத் தெரியவில்லை என்று நாயக்கர் சொன்னதும் அய்யங்கார் எழுந்து “நீங்கள் சாமியை கல்லென்று சொன்னீர்களே இது சரியா” என்றார். உடனே ஸ்ரீமான் நாயக்கர், “ஆம், வேண்டுமானால் எல்லோரும் என்னுடன் வாருங்கள் காட்டுகின்றேன்” என்று மேஜை மீதிருந்த கைத் தடியை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். எல்லோரும் கைத்தட்டி சிரித்தார்கள். அய்யங்கார் பதில் சொல்ல வகையில்லாமல் தலைகுனிந்தார்.

மற்றொரு பார்ப்பனர் - (பத்திரிகை நிரூபர்) “அந்த கல்லுக்கு மந்திர உச்சாடனம் செய்யப்பட்டிருக்கிறது.” நாயக்கர்:- அப்படியானால் மொட்டைப் பாறையில் உடைத்த கல்லுக்கும் செய்த மந்திர உபதேசம் உண்மையில் சக்தி உள்ளதானால் இதோ எதிரில் இருக்கும் சகோதரருக்கும் கொஞ்சம் அதே மந்திர உபதேசம் செய்து அவரை அந்த கல்லுச்சாமிக்கும் பக்கத்தில் இருந்து பூசனை செய்யும் படியாகவாவது செய்யக்கூடாதா என்றார்.

அந்த அய்யரும் தலை கவிழ்ந்தார்.

மறுபடியும் ஸ்ரீ திரு. நாராயணய்யங்கார் “இந்து மதம் இல்லை என்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் நீங்களாவது ஒரு புது மதம் சொல்லுவது தானே” என்றார்.

நாயக்கர்:- நான் ஒரு புது மதத்தை போதிக்க வரவில்லை. ஒழுக்கத் திற்கு விரோதமான கொள்கைகளை மதம் என்றும் சாமி என்றும் புராணம் என்றும் பின்பற்றாதீர்கள். ஒழுக்கமாகவும் சத்தியமாகவும் மற்ற ஜீவன்களிடத் தில் அன்பாகவும் பரோபகார எண்ணத்துடன் இருந்தால் போதும் என்று தான் சொல்லுகிறேன். அதற்குத் தகுந்த கொள்கைகள் எந்த மதமானாலும் சரி அது மதம் அல்லாவிட்டாலும் சரி என்றுதான் சொல்லுகின்றேன்.

அய்யங்கார்:- இருக்கின்றதை மறைப்பதானால் புதிதாக ஒன்றைக் காட்ட வேண்டாமா என்றார்.

நாயக்கர்:- வீட்டிற்குள் அசிங்கமிருக்கின்றது, நாற்றமடிக்கின்றது, எடுத்து எறியுங்கள் என்றால், அதற்கு பதில் என்ன அந்த இடத்தில் வைக்கின்றது என்று ஏன் கேட்க வேண்டும். இந்து மதம் என்பதாக உலகமெல்லாம் நாறுகின்றதே அந்த துர்நாற்றம் போய்விட்டால் அதுவே போதும். நீங்களே இந்துமதம் என்பதாக ஒன்று இல்லை என்றும் சொல்லி ஒப்புக் கொண்டு விட்டீர்களே இனி நான் என்ன சொல்ல வேண்டும்.

அய்யங்கார்:- நீங்கள் இவ்வளவு சமத்துவம் பேசுகின்றீர்களே. உங்களுக்கு லக்ஷ லக்ஷமாக சொத்துக்கள் இருக்கின்றதே, அதை ஏன் எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுக்க கூடாது? உமக்குத்தான் பிள்ளை குட்டி இல்லையே என்றார்.

நாயக்கர்:- ஸ்ரீமான் அய்யங்கார் சொல்லுகின்றபடி எனக்கு ஒன்றும் அப்படி பெருவாரியான சொத்துக்கள் கிடையாது. ஏதோ சுவல்ப வரும்படிதான் வரக்கூடியதாயிருக்கின்றது. அதையும் எனக்கு சரியென்று தோன்றிய வழியில் பொது நலத்துக்குத்தான் செலவு செய்து வருகிறேன். அல்லாமலும் இந்த தொண்டுக்கு வருமுன் பெருவாரியாக வியாபாரமும் செய்து வந்தேன். வருஷம் ஒன்றுக்கு 1000 ரூபாய் கூட இன்கம்டாக்ஸ் செலுத்தி இருக்கின்றேன். ஆனால் அவைகளை இப்போது அடியோடு நிறுத்தி விட்டேன். இந்த பிரசார செலவு சில சமயம் மாதம் 200, 300 ரூபாய் வீதம் ஆகிவருகிறது. மற்றும் அநேக செலவுகளும் இருக்கின்றன. நான் ஒன்றும் அதிகமாய் அனுபவிப்பதில்லை. நான் அனேகமாய் மூன்றாவது வகுப்பு வண்டியில்தான் போகிறேன். அப்படி இருந்தும் நான் ஒன்றும் மீத்து வைப்பதுமில்லை.

அய்யங்கார்:- புரோகிதத்தைப் பற்றி இழிவாய்ப் பேசினீர்கள். நான் புரோகிதத்திற்கும் போவதில்லை, பிச்சைக்கும் போவதில்லை, காப்பிக்கடை வைத்து எச்சில் கிண்ணம் கழுவி ஜீவிக்கிறேன். எல்லாரையும் ஒன்றாகக் கண்டிக்கிறீர்கள். அப்படியானால் என்னதான் செய்கின்றது? எந்த புஸ்தகத்தைதான் படிக்கின்றது.

நாயக்கர்:- நான் குறிப்பிட்டு யாரையும் சொல்லுவதில்லை. மனிதத் தன்மைக்கு விரோதமான குணம் யாரிடமிருந்தாலும் மனிதனின் சுபாவத்திற்கும், சமத்துவத்திற்கும் சுயமரியாதைக்கும் விரோதமான கொள்கைகளும் கதைகளும் எதிலிருந்தாலும் அவைகளை ஒதுக்கி சுட்டுப் பொசுக்க வேண்டும் என்றுதான் சொல்லுகின்றேன் என்று ஆவேசமாய் சொல்லி கடைசியாக முடிவுரையாக சொன்னதாவது:-

இந்த ஊர் எவ்வளவோ நல்ல ஊர் என்றுதான் சொல்வேன். சில ஊர்களில் கல்லுகள் போடவும் கூட்டத்தில் கலகம் செய்யவும் கூச்சல் போடவும்கூட பார்த்திருக்கின்றேன். இதெல்லாம் எனக்கு அனுபவிப்பது சகஜம் தான். எவ்வளவுக்கெவ்வளவு எதிர்ப்பு ஏற்படுகின்றதோ, எவ்வளவுக்கெவ்வளவு எதிர்பிரசாரங்கள் ஏற்படுகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு எனது வேலை சுலபமாகும். எனது எண்ண மும் நிறைவேறும் என்கின்ற தைரியம் எனக்கு உண்டு. இம்மாதிரி வேலை கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்இருந்தே பலர் செய்து வந்திருக்கிறார்கள். ஆனால் அந்த சமயம் இருந்த அரசர்கள் முட்டாள் களாகவும் பலவிதத்தில் பார்ப்பனர்களால் மயக்கப்பட்டவர்களாகவும் இருந்ததினால் அது பலிக்காமல் போய்விட்டது. “ராமராஜ்ய”மாகவோ “பாண்டிய ராஜ்ய” மாகவோ இருந்தால் நான் இதுவரை ‘ஒரே’ பாணத்தால் கொல்லப்பட்டிருப்பேன் அல்லது கழுவேற்றப்பட்டிருப்பேன். நல்ல வேளையாக அந்த அரசாங்கங்கள் மண் மூடிப்போய்விட்டது. வேறு ஒரு லாபமும் இல்லாவிட்டாலும் நமது பணம் கொள்ளை போனாலும் மனிதனின் சுயமரியாதையைப் பற்றியாவது வெள்ளைக்காரர் ராஜ்யத்தில் இதுவரை தாராளமாக பேச இடம் கிடைத்துவிட்டது. சுயமரியாதை விதை ஊன்றியாய் விட்டது. இனி நான் கொல்லப்பட்டாலும் சரி நான்கு நாள் முன்னோ பின்னோ சாகவேண்டியது தான். வீட்டில் ஒயில் எழுதி வைத்துவிட்டுத்தான் நான் இத்தொண்டிற்கு பிரவேசித்திருக்கின்றேன். ஒவ்வொரு பயணத்திற்கும் முடிவாக பயணம் சொல்லிக் கொண்டு தப்பிப் பிழைத்தால்தான் திரும்பி வரமுடியும் என்று என் பெண் ஜாதிக்கும் தாயாருக்கும் முடிவு சொல்லி உத்திரவு பெற்றுத்தான் நான் பயணம் புறப்படுகின்ற வழக்கம். நான் பேசிக் கொண்டிருக்கும்போதே உயிர்விட வேண்டும் என்பது எனது ஆசை. ஏனெனில் நான் எடுத்துக் கொண்ட வேலை அவ்வளவு பெரியதும் பல எதிரிகளைக் கொண்டதும் தக்க விலை கொடுக்க வேண்டியதுமானது என்று எனக்குத் தெரியும். ஆதலால் இனி நாஸ்திகம் என்ற பூச்சாண்டிக்கும் தேசத் துரோகம் என்ற பூச்சாண்டிக்கும் இனி பயப்படுவது என்பது முடியாத காரியம். ஆயிரம் தரம் சொல்லுவேன், நாம் கும்பிடும் சாமிகளும் நமது கோயிலில் உள்ள சாமிகளும் வெறும் கல், வெறும் கல். நமது தேசீய இயக்கம் என்கின்ற காங்கிரஸ் முதலியவைகள் வெறும் புரட்டு, வெறும் புரட்டு என்பது எனது முடிவு. யார் ஒப்புக் கொண்டாலும் சரி, ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சரி நான் யாருக்கும் போதிக்க வரவில்லை. எனக்குப்பட்டதைச் சொல்ல வந்தேன். சரியானால் ஒப்புக் கொள்ளுங்கள். தப்பானால் தள்ளிவிடுங்கள். சாமி போய்விடுமே என்று யாரும் சாமிக்காக வக்காலத்து பேச வேண்டியதில்லை. பேசினாலும் நான் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. உண்மையான கடவுளும் உண்மையான தேசீயமும் எனக்குத் தெரியும் அதை வெளியிடும் தொண்டு தான் இது” என்று பேசி உட்கார்ந்தார்.


உடனே அக்கிராசனர் இனி யாராவது பேச வேண்டுமா என்றும் இதற்கு யாராவது பதில் சொல்லுகிறீர்களா என்றும் கேட்டார். 2 நிமிஷம் நிஸ்சப்தமாய் இருந்தது. ஒருவரும் பேசவில்லை என்று சொல்லிவிட்டு ஒரு கனவான் ராயல் கமிஷன் பகிஷ்கார விஷயமாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதைச் சிலர் பகிஷ்காரத்திற்காக இக்கூட்டம் கூட்டவில்லை என்று ஆட்சேபித்தார்கள். ஸ்ரீமான் நாயக்கர் எழுந்து அதைப்பற்றி கவலையில்லை என்றும் தான் அதையும் எதிர்ப்பதாகவும் சொல்லி அதைப் பற்றி சில விஷயம் பேச அக்கிராசனரை அனுமதி கேட்டார். மணி சுமார் பத்தாய் விட்டதால் சீக்கிரம் சொல்லி முடிக்கும்படி சொன்னார். ஸ்ரீமான் நாயக்கர் வெகுவேகமாக அரசியல் புரட்டையும் பகிஷ்காரப் புரட்டையும் சொன்னார். பிறகு ஸ்ரீமான் காப்பிக்கடை திரு.நாராயணய்யங்கார் பேசி ஓட்டுக்குவிட்டார். சிலரே கை தூக்கியதால் தோல்வி உற்றதாக அக்கிராசனர் சொன்னார். மறு படியும் ஓட்டு எடுக்க கைதூக்கச் சொல்லும்படி அக்கிராசனரை அய்யங்கார் வேண்டிக் கொண்டார். அக்கிராசனர் மறுபடியும் தீர்மானத்திற்கு சாதகமா னவர்களை கை தூக்கும்படி சொன்னார். வெகு சிலரே கைதூக்கினார்கள். பாதகமானவர்களை தூக்கும்படி சொல்லாமலும் முடிவு சொல்லாமலும் அக் கிராசனர் முடிவுரை துவக்கி கூட்டத்தை முடித்து விட்டார். பிறகு வந்தனோ பசாரம் கூறப்பட்ட சுமார் 6 மணி முதல் 10 மணிக்கு மேலாக அதாவது 4.30 மணி நேரம் மக்கள் சுமார் 1000 பேருக்கு மேல் அசையாமல் பொறுமையுடன் உட்கார்ந்து கேட்டுகொண்டு இருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது. இதுவரை இம்மாதிரி கூட்டம் பொறுமையாக 4.30 மணி நேரம் உட்கார்ந்து கேட்ட தில்லை என்று சொல்லலாம். இனியும் 2 மணி நேரம் பேசினாலும் இருக்க ஜனங்களுக்கும் பிரியம் தானே யொழிய யாரும் நேரத்தை கவனிக்கவில்லை. தவிர பேசியவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருவருக்கொருவர் கண்ணிய மாயும், யோக்கியமாயும், பேசிக் கொண்டார்களேயொழிய நியாயத் தப்பாய் யாரும் பேசிக் கொள்ளவில்லை. கூட்டம் முடிந்து திரும்பிப் போகும்போது மாத்திரம் வழியில் பார்ப்பனர்களைப் பற்றியும் அவர்கள் சூழ்ச்சியைப் பற்றியும் அவர்கள் கையாளாய் இருக்கும் பார்ப்பனர் அல்லாத ஆட்களைப் பற்றியும் பத்திரிகைகளைப் பற்றியும் மிக கேவலமாக பேசிக் கொண்டார்கள். நாயக்கர் வரவால் சிதம்பரம் ஒருவித புத்துயிர் பெற்றதென்றே சொல்ல வேண்டும்.

---------------- தந்தபெரியார் அவர்கள் 26.02.1928 அன்று சிதம்பரத்தில் ஆற்றிய சொற்பொழிவு. ”குடி அரசு” - 04.03.1928

5.7.10

நல்ல வர்க்கம் என்று நினைப்பது மதியீனமும் பேராசையுமே!


நமது வர்க்கம்

நமது நாட்டில் கல்யாணம் செய்வதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பெண் தேடுவதிலோ, மாப்பிள்ளை தேடுவதிலோ நல்லவர்க்கமாக இருக்க வேண்டும் என்கின்ற சாக்கைச் சொல்லிக் கொண்டு பணக்காரர்கள், பிரபுக்கள் வீட்டிலேயே போய் சம்பந்தம் வைத்துக் கொள்ள பிரயத்தனப்படுவதைப் பார்க்கின்றோம். ஆனால் பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் என்கின்றவர்களின் வீட்டுப் பிள்ளைகளில் பெரிதும் சமையல்காரன் வர்க்கமாவும், மோட்டார் டிரைவர் வர்க்கமாகவும் முடிந்து விடுகின்றது. அந்த பிரபுக்கள் வர்க்கமெல்லாம் தாசிகளிடமே போய் சேர்ந்து விடுகின்றது. ஏனெனில் பிரபுக்கள் என்றால் அவர்களுக்குக் கட்டாயம் தாசிகள் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் பிரபுப்பட்டம் பூர்த்தியாவ தில்லை. ஆதலால் இவர்கள் வர்க்கம் தாசிகளிடமே இறங்கி விடுகின்றது. அப்பிரபுக்களின் மனைவிமார்கள் அய்யோ பாவம்! வேறு வகையின்றியும் குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்கின்ற கவலை மீதும் தங்கள் கணவர்களைப் போல் வெளியில் வேறு தக்க மனிதர்களின் சிநேகம் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்குள்ளாகவே சரிபண்ணிக் கொள்ளக் கருதி சமையல் காரனுடனேயோ, அல்லது மோட்டார் டிரைவருடனேயோ மாத்திரம் தான் பெரிதும் சம்பந்தம் வைத்துக் கொள்ள முடிகின்றது. ஆகவே இதனால் சமையல் வர்க்கமும் டிரைவர் வர்க்கமும்தான் பிரபுக்கள் வீட்டில் இறங்கிவிடுகின்றது. இதைக் கண்ட ஒரு தாசி தன் மகனைப் பார்த்து சமதானாதிபதிக்குப் பிறந்த நீ சங்கீதத்தில் பிழைக்கின்றாய், சமையல் காரனுக்கு பிறந்தவன் சர்வாதிகாரம் பண்ணுகின்றான். என்னே! கடவுளின் திருவிளையாடல் என்று சொன்னதாக ஒரு பழமொழி சொல்லிக் கொள்ளப்படுவதுண்டு. ஆதலால் அறிவும் கல்வியும் அழகும் உடையது தான் நல்லவர்க்கமாகுமே தவிர பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் என்கின்றதனாலேயே அவர்கள் எப்படி இருந்தாலும் நல்ல வர்க்கம் என்று நினைப்பது வெறும் மதியீனமும் பேராசையுமேயாகும்.

-----------------தந்தைபெரியார் - “ குடிஅரசு”, கட்டுரை - 30-06-1929

பெரியார் கண்ட வாழ்வியலைத் தெரிந்து கொள்ள வேண்டும்

பிறக்கும்பொழுது எல்லா குழந்தைகளும் நாத்திகக் குழந்தைகளாகத்தான் பிறக்கின்றன
சென்னை புரட்சிக் கவிஞர் விழாவில் தமிழர் தலைவர் பேச்சு

பிறக்கின்ற எந்தக் குழந்தையும் பக்தி எண்ணத்தோடு பிறப்பதில்லை. நாத்திகக் குழந்தையாகத்தான் பிறக்கின்றது என்று வாழ்வியல் சிந்தனை கருத்துகளை எடுத்துக் கூறி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

சென்னை_வியாசர்பாடியில் 19.6.2010 அன்று நடைபெற்ற புரட்சிக் கவிஞர் விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:

அற்புதமான விழா !

மிகுந்த மகிழ்ச்சிக்கும், எழுச்சிக்கும் இடையிலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் விழா இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இன்று பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கி இதுவரையிலே சிறப்பாக நடைபெறுகின்றது இந்த விழா. குடும்பங்கள் இணைந்த அற்புதமான விழாவாக அமைந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும், திராவிடர் கழகத் தோழர்களுக்கும் என்னுடைய மனமுவந்த நன்றியைப், பாராட்டைத் தெளிவாக தெரிவித்துக்கொள்கிறேன்.

எடுத்துக்காட்டான விழா!

ஏனென்றால் இது ஓர் எடுத்துக்காட்டான விழா. ஏற்கெனவே நம்முடைய தலைமை நிலையத்தாலே நடத்தப்பட்டிருந்தாலும்கூட, புரட்சிக் கவிஞர் அவர்களுடைய பெயரைப் பயன்படுத்தி ஒரு நல்ல விழாவை, அருமையான பெரியார் குருத்துகளை அழைத்து வந்து அவர்களுக்குள்ளே இருக்கின்ற ஆற்றல்களை அற்புதமாக வெளியே கொண்டு-வந்திருக்கின்றீர்கள்.

பெரியார் பிஞ்சுகளின் கலை நிகழ்ச்சிகள்

இங்கே நம்முடைய இளம் பெரியார் பிஞ்சுகள் அற்புதமாக கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். அவர்களுக்குள்ளே எவ்வளவு பெரிய ஆற்றல் புதைந்திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும் பொழுது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மிக அழகாகச் சொன்னார்.

இன்று குழந்தைகள் நீங்கள்!

இன்று குழந்தைகள் நீங்கள் எனினும்

இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்!

இன்று குழந்தைகள் நீங்கள்!

தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல்

அன்றன்று வாழ்விற் புதுமை காண வேண்டும்!

இன்று குழந்தைகள் நீங்கள்!

என்று அவர்கள் சொன்னார்கள். அப்படிப்பட்ட அறிவார்ந்த ஒரு கருத்தரங்கம். வெறும் கேளிக்கை சிரிப்பு, அர்த்தமற்றது என்று இல்லாமல், பொருள் பொதிந்த ஒரு சமுதாய மாற்றத்திற்கான நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சியை அமைத்த தோழர்களைப் பாராட்டுகிறோம்.

பெரியார் மய்யம்பற்றி தகவல் நூல்

அது போல பெரியார் மய்யம் தகவல்கள் அடங்கிய குறிப்பு நூலை பகுத்தறிவாளர் கழக மாநில பொதுச்செயலாளர் தோழர் வீ.குமரேசன் அவர்களாலே தொகுக்கப்பட்டு சிறப்பாக அந்த நூலை இங்கே வெளியீட்டீர்கள்! அதற்காகவும் எனது மனம் நிறைந்த பாராட்டுதல்கள். நம்முடைய பிள்ளைகள் நல்ல அளவுக்கு நடனம் ஆடியது. புரட்சிக் கவிஞரின் சங்கே முழங்கு என்ற பாடலைப் பாடும்பொழுது மிகச் சிறப்பாக இருந்தது.

வெற்றிச்செல்வன் ஆற்றல்

நம்முடைய பெரியார் பிஞ்சு வெற்றிச்செல்வன் அவர்களுடைய ஆற்றலை நாம் கண்டோம். அந்த அளவிற்கு நம்முடைய இனத்தில் ஆற்றல் வாய்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

ஒரு காலத்திலே நம்முடைய பிள்ளைகள் நன்றாகப் படித்தால் பார்ப்பாரக் குழந்தைகள் மாதிரி இருக்கிறது என்று சொல்லுவார்கள். குழந்தை சிவப்பாக இருந்தால் பார்ப்பாரக் குழந்தை மாதிரி இருக்கிறது என்று சொல்லுவார்கள்.

நம் பிள்ளைகளைப் பார்த்துதான்....

இன்றைக்கு அப்படி இல்லை. நம்முடைய பிள்ளைகளைப் பார்த்துதான் மற்றவர்கள் வரவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள். (கைதட்டல்).

இன்றைய விடுதலை ஏட்டைப் பார்த்தீர்களேயானால் கூட உங்களுக்குத் தெரியும். பொறியியல் துறையிலே பெண்கள் முதன்மையாக வந்திருக்கிறார்கள்.

பொதுப்போட்டியில் பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், மலைவாழ் மக்களும் வருகிறார்கள் என்று சொன்னால் இதுதான் மிகப்பெரிய செய்தி. இதுதான் ஆச்சரியம். நமக்குத் தகுதி இல்லை. திறமை இல்லை என்று சொன்னார்கள்; அது அத்துணையும் மாய்மாலம்.

அவை அத்துணையும் புரட்டு. அந்தப் புரட்டுகளை உடைக்கின்ற சக்தி பெரியாரின் கைத்தடிக்கு உண்டு. இந்த கழகத்தினுடைய பணி_இந்த கொள்கையினுடைய பயனால் இவை எல்லாம் விளைந்திருக்கிறது.

ஆகவே அருமை மாணவச் செல்வங்கள், இளம் பெரியார் பிஞ்சுகள், இவர்களின் பெற்றோர்களாகிய நீங்கள் அருமையாக வழிநடத்தியிருக்கின்றீர்கள். அதற்காகப் பாராட்டு. ஏனென்றால் எல்லா குழந்தைகளும் பிறக்கும்பொழுது நாத்திகக் குழந்தைகள்தான்.

கடவுள் நம்பிக்கையோடு பிறப்பதில்லை

எந்தக் குழந்தையும், அது யார் வீட்டில் பிறந்தாலும் கடவுள் நம்பிக்கையோடு பிறப்பதில்லை. எந்தக் குழந்தையாவது கும்பிட்டுக் கொண்டே வந்து பிறந்தது என்று சொல்வதற்கு ஏதாவது அடையாளம் உண்டா? அந்த குழந்தைக்கு சாமி எப்பொழுது தெரியும் என்றால் பெற்றோர்கள் கோவிலுக்குப் போய், பஸ்கி போட்டு, தண்டால் போட்டு, பழக்கம் ஏற்படுத்துவதன் காரணமாகத்தான் குழந்தைகள் சாமி கும்பிடுகின்றன. கன்னத்தில் போட்டுக்கொள் என்றால் போட்டுக்கொள்ளும்.

நாத்திக குழந்தைகள்தான்!

ஆகவே பிறந்த குழந்தைகள் அத்துணை குழந்தைகளும், பிறக்கும்பொழுது நாத்திகக் குழந்தைகள்தான். அவர்கள் யாரும் நம்பிக்கைவாதிகள் அல்ல. இயல்பாகவே அவர்கள் பகுத்தறிவுவாதிகள் தான். பசித்தால் அழும். குழந்தைக்கு என்ன உணர்வோ அதைக் காட்டும்.

குழந்தைகளின் ஆற்றலை, அறிவை நாம் தடுத்து விடுகின்றோம். இதைப் பண்ணாதே, அதைப் பண்ணாதே நம்பு, நம்பு, என்று சொல்லி பல வகையிலும் நாம் கட்டுப்பாடுகளைப் போடுகின்றோம்.

சிறார் முதல் பெற்றோர்வரை

இந்த நிகழ்ச்சிக்கு சிறார்கள் முதல் பெற்றோர்கள் வரை நிறைய பேர் வந்திருக்கிறீர்கள். இந்த முயற்சி ஒரு நல்ல வாழ்வியல் அரங்கம். இதுமாதிரி முயற்சிகளை நம்முடைய தோழர்கள், பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும், திராவிடர் கழகத் தோழர்களும் சென்னையில் பல்வேறு அரங்கங்களில் இப்படி மாதாமாதம் நடத்தினால் அந்த குடும்பங்களை அழைத்து நடத்தினால் அது மிகச்சிறப்பாக இருக்கும்.

ஏனென்றால் நம்முடைய குடும்பங்களுக்கு வேறு பொழுது போக்கெல்லாம் கிடையாது. எல்லோரும் இந்த மாதிரி ஒன்று சேரவேண்டும். அவர்களுக்கு பெரிய சாப்பாடு எல்லாம் தேவையில்லை. சாதாரணமான சிற்றுண்டியே கொடுக்கலாம்.

மாலை நேரத்தில் நிகழ்ச்சி தொடங்க வேண்டும். மாலை 4மணிக்குத் தொடங்கி இரவு 7 மணிக்கெல்லாம் முடித்துவிட வேண்டும். எல்லோரும் இரவு ஏழு மணிக்கெல்லாம் வீட்டிற்குப் போய்விட வேண்டும்.

பிள்ளைகள் எல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும். குடும்பத்தோடு வரவேண்டும். கணவன், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் வரவேண்டும். நல்ல நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும். உடல் கூறுகளைப் பற்றி ஒரு சிலர் பேச வேண்டும். உடல் நலனை எப்படி பாதுகாப்பது? மனவளத்தை எப்படி பெருக்கிக்கொள்வது இவை அத்துணையும் தெளிவாக எடுத்துச்சொல்ல வேண்டும்.

குழந்தைகளிடம் நேரத்தை
செலவு செய்வீர்!

அதிலேயும் அண்மைக் காலத்திலே நாம் குழந்தைகள் மத்தியில் செலவு செய்கிற நேரம் குறைந்து வருகிறது. இப்பொழுது கணவன்_மனைவி இரண்டு பேருக்கும் வருவாய் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கின்றோம். இரண்டு பேரும் உத்தியோகத்திற்கும் போகிறார்கள். அவர்கள் வளர்ச்சி அடைகிறார்கள். நல்ல குடும்பம்.

அதில் ஒன்றும் சந்தேகமில்லை. ஆனால் குழந்தைகளோடு நாம் நேரத்தை செலவு செய்வது இருக்கிறதே. இந்த வேகமான வாழ்க்கையிலே ரொம்ப குறைவாக இருக்கிறது. இது குழந்தைகளின் மனோ தத்துவ வளர்ச்சிக்கு ரொம்ப இடையூறாக இருக்கிறது.

பெற்றோர்கள் குழந்தைகளைப் படிக்க சேர்த்து விடுவார்கள். குழந்தை என்ன படிக்கிறது என்று கேட்டால் பல பேருக்குத் தெரியாது.

தாத்தா-பேரப் பிள்ளைகள்

தாத்தாக்கள் பேரப்பிள்ளைகளிடம் நன்றாகப் பழகுவார்கள். ஆனால் அப்பாக்கள் பிள்ளைகளோடு அந்த அளவுக்குப் பழகுகிறார்களா? என்றால் கிடையாது. பல குழந்தைகளிடம் நட்பு ரீதியாக நாம் பழக வேண்டும்.

குழந்தைகள் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்க வேண்டும். அதை விளக்கி நாம் சொல்ல வேண்டும். அது மாதிரி குழந்தை வளர்ப்பிலே மேலெழுந்த வாரியாக வரவேண்டும். நான் கூட வாழ்வியல் சிந்தனையில் ஒன்றை எழுதினேன்.

அமெரிக்காவில் நடைபெற்ற ஓரு சம்பவம்

அமெரிக்காவில் ஒரு குடும்பத்தில் நடைபெற்ற சம்பவத்தைப் படித்து விட்டு அதைப்பற்றி வாழ்வியல் பகுதியில் எழுதியிருந்தேன். பொதுவாக எல்லா பெண்குழந்தைகளும் அவர்களுடைய அப்பாவிடம் தான் அதிக ஈடுபாடு இருக்கும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த நிலையில் ஒரு குழந்தை திடீரென்று ஒரு கேள்வி கேட்டது. என்ன கேள்வி? அப்பா உங்களுக்கு எவ்வளவு சம்பளம் என்று கேட்டது. என்ன குழந்தை இந்த மாதிரி புதிதாக கேள்வி கேட்கிறதே என்று அப்பா நினைத்தார். அதற்கு ஒரு பத்து வயதுதான் இருக்கும். அதற்கு என்ன சம்பளத்தை பற்றி கவலை? வெளிநாட்டில் ஒருவருடைய கவலையை இன்னொருவர் பரிமாறிக்கொள்வது அவ்வளவு சுலபம் அல்ல. உங்கள் வயதென்ன? என்று எடுத்தவுடனே கேள்வி கேட்டுவிடமாட்டார்கள். உடனே தந்தை சொல்லுகிறார், ஏம்மா, உனக்கு எதைத் தெரிந்து கொள்ள வேண்டும்? என்று கேட்கிறார். அவர் தனக்கு சம்பளம் 100 டாலர், 200 டாலர் என்று சொல்லுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மகள் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொடுத்தார்

அந்த குழந்தைக்குப் பிறந்தநாள் வந்தது. மெழுகுவத்தி வைத்து கேக் வெட்டினார்கள். பிள்ளைக்கு அப்பா பரிசு கொடுப்பதற்குப் பதிலாக பிள்ளை ஞாபகமாக ஒரு செயலை செய்தது.

ஒரு கவரை எடுத்து எழுதியது நான் அப்பா அம்மாவை மகிழ்ச்சியாக நேசிக்கிறேன். விரும்புகிறேன் என்று ஒரு கவரை தனது தந்தையிடம், அந்த குழந்தை கொடுத்தது. அவருக்கோ ரொம்ப ஆச்சரியம். என்ன அதில் இருந்தது. என்றால் அப்பாவுக்கு மகள் கடிதம் எழுதியிருந்தது. அப்பா அவர்களுக்கு, உங்களுடைய சம்பளத்தை சொன்னீர்கள். நான் கணக்கு போட்டுப் பார்த்தேன் நீங்கள் சொன்ன சம்பளப்படி பார்த்தீர்களேயானால் பத்து பதினைந்து டாலர் வருகிறது. நீங்கள் கொடுக்கின்ற பணத்தை நான் சேமித்து வைத்திருந்தேன்.

4 நாட்களும் என்னோடு இருக்கவேண்டும்

நான்கு நாட்களுக்கு நீங்கள் என்னோடு இருக்க வேண்டும். நீங்கள் எழுப்பொழுதுமே இருப்பதில்லை. விடுமுறையில் கூட நீங்கள் வெளியில் போய் விடுகின்றீர்கள். ஆகவே நான்கு நாட்களுக்கு உங்களுக்கு என்ன சம்பளமோ அந்த சம்பளத்தை இந்தக் கவரில் வைத்திருக்கின்றேன் வாங்கிக் கொண்டு ஒழுங்காக நீங்கள் என்னோடு இருங்கள்.

இந்த நான்கு நாட்களும் நீங்கள் வேலைக்குப் போகாதீர்கள். சம்பளத்தைப் பிடித்துக் கொண்டால் கூட பரவாயில்லை என்று அந்த குழந்தை எழுதியிருந்தது. அப்பொழுதுதான் இவர்களுக்கு தெரிந்தது. நாம் குழந்தையைப் பெற்றால் மட்டும் போதாது. குழந்தைகளோடு நாம் நேரத்தை செலவழிக்க வேண்டும் என்று.

எனக்கு நேரமே இல்லை

எனக்கு நேரமே இல்லை, நேரமே இல்லை என்பதை விட ரொம்ப பைத்தியக்காரத்தனமான பதில் வேறு கிடையவே கிடையாது. சில பேர் சொல்லுவார்கள் என்னங்க உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் நேரம் இல்லைங்க என்று சொல்லுவார். அமெரிக்காவில் இருக்கின்ற ஒபாமாவுக்கும் 24 மணி நேரம்தான். நம்ம ஊரில் இருக்கின்ற அப்பாசாமிக்கும் 24 மணி நேரம்தான். யார் யார் எப்படி நேரத்தைப் பயன்படுத்துகின்றார்கள்? கலைஞருக்கும் 24 மணி நேரம்தான் அவர் எப்படி பயன்படுத்துகின்றார் என்பது நமக்கு தெளிவாக தெரியும். (கைதட்டல்)

நேரம், நினைப்பு, உழைப்பு

ஆகவே நாம் நேரத்தை நினைப்பை உழைப்பை நல்ல வண்ணம் பயன்படுத்துவோம் என்று சொல்லும் பொழுது குழந்தைகளோடு நாம் நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தைகளை கேள்வி கேட்கும் படியாகச் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு பகுத்தறிவைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

கேள்வி கேட்கும் பழக்கம்

குழந்தைகளுக்கு ஏன்? எதற்கு? என்பதை எதிலும் விளக்கமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு நிலா நிலா ஓடிவா, நில்லாமல் ஓடிவா என்று சொன்னோம். இப்பொழுது நிலா ஓடி வராது.நிலவை நோக்கி நாம் தான் சென்று இறங்கி வந்தோம் என்கின்ற தகவலைச் சொல்லுகின்றோம். ஆகவே பழைய மாதிரி நிலா, நிலா ஓடி வா என்பது இன்றைக்குப் பொருத்த-மில்லை.

செவ்வாய்க் கிரகத்துக்கு மனிதன்

நிலவில் மனிதன் இறங்கி அதற்குப் பிறகு செவ்வாய்க் கிரகத்துக்குப் போகத் தயாராகி விட்டான். ஆகவே மூட நம்பிக்கை இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும். தன்னம்பிக்கை யோடு வாழ வேண்டும். நிறைய பெண்கள் சகோதரிகள் எல்லாம் வந்திருக்கின்றீர்கள். இந்த நிகழ்ச்சியினுடைய வெற்றியே இதுதான் மிக முக்கியம்.

சமையலறை - டிவிதானா?

தாய்மார்களின் பணி ஒவ்வொரு நாளும் சமையல் அறையில் அதிக நேரம் செலவழிப்பது, குடும்பத்-தாரை கவனிப்பது, டி.வி முன்னால் ரொம்ப நேரம் உட்கார்ந்திருப்பது, இது மாதிரி நேரத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.

அதற்குப் பதிலாக அறிவு வளருகிற மாதிரி பல சங்கதிகள் இல்லை. எப்படி குற்றங்கள் இழைப்பது? அதிலிருந்து எப்படி தப்பிப்பது என்கிற மாதிரிதான் பல செய்திகள் இருக்கிறது.

அதிலும் பல தொலைக்காட்சிகளில் பார்த்தீர்-களேயானால் பெண்களை வில்லிகளாகத் தான் சித்திரிக்கிறார்கள். ஒன்றும் பெண்களை நல்லவர்-களாகவே காட்டக் கூடிய அளவில் இல்லை. ஆகவே இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை விட பொதுச் செய்திகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவு கருத்துகளை படியுங்கள்

விடுதலை ஏட்டை படிக்க வேண்டும். உண்மை இதழைப் படிக்க வேண்டும், பெரியார் பிஞ்சு படிக்க வேண்டும். வீட்டுக்கு வீடு குழந்தைகள் பெரியார் பிஞ்சை படிக்க வேண்டும். நல்ல அளவுக்கு சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பகுத்தறிவுக் கருத்து நூல்களைப் படிக்க வேண்டும். புரட்சிக் கவிஞர் பாடலை எடுத்து சொல்ல வேண்டும். ஒவ்வொரு இடத்திலும் பகுத்தறிவு சிந்தனையை வளர்த்தால் தன்னம்பிக்கை வளரும். தன்னம்பிக்கை வளர்ந்தால் மூடநம்பிக்கை தானே விட்டு விலகும்.

சூரியனைக் கண்ட பனிபோல்....

சூரியனைக் கண்ட பனிபோல அது விலகி விடும். ஆகவே அருமை தோழியர்களே! தோழர்களே! வ்ந்திருக்கின்ற பெற்றோர்களான அருமை தொண்டர்களே! எல்லாருக்கும் வேண்டுகோள். என்னவென்றால் இது போல குடும்ப நிகழ்ச்சியை அடிக்கடி நடத்துங்கள்.

பெரிய மண்டபத்தில் நடத்த வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. சிறிய இடமாக இருந்தால் கூட நடத்துங்கள். நான் சொன்ன மாலை 4 மணிக்கு ஆரம்பித்து இரவு 7 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி முடியும் என்று வையுங்கள். வீடு அகலமாக இருந்தால், வீட்டில் கூட நிகழ்ச்சிகளை நடத்தலாம். அது மட்டுமல்ல, நமக்கு வேண்டிய பத்து, இருபது குடும்பங்கள் சேர்ந்து ஒன்றாக சந்திக்க வேண்டும். நாளை ஞாயிற்றுக்கிழமை, இத்தனை மணிக்கு சந்திக்கிறோம் என்று சொல்லி விட்டால் வந்து விடுவார்கள். எல்லோரும் இப்பொழுது செல்போன் வைத்திருக்கின்றார்கள். எல்லோர் வீட்டிலும் தொடர்புகள் இருக்கிறது. ஆகவே அவர்களுக்கு நாம் சொல்லி விடலாம். 20 பேர் கொண்ட குடும்பம் ஒரு சிறிய அளவுக்கு சந்திக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நல்ல விவாதம் நடக்கும்.

ஆண்களுக்கு அனுமதி இல்லை

சில கட்டங்களில் மகளிர் மட்டுமே இருக்க வேண்டும், இதில் 4 மணியிலிருந்து 5 மணிவரை முதலில் மகளிர் மட்டும் தான் விவாதிப்பவர்களாக இருக்கலாம். ஆண்களுக்கு இதில் அனுமதி இல்லை என்று சொல்ல வேண்டும்.

ஏனென்று கேட்டால் உங்களுடைய பிரச்சினைகள், உடல் நலப் பிரச்சினைகளிலிருந்து, உளப் பிரச்சினைகளிலிருந்து வாழ்க்கைப் பிரச்சினை வரை நீங்கள் மனம் விட்டு ஒவ்வொரு வரும் விவாதிக்க வேண்டும்.

ஆண்களை வைத்துக் கொண்டு நீங்கள் விவாதம் செய்தவற்குரிய வாய்ப்பு இருக்கிறது. டாக்டர் ஷாலினி மாதிரி இருக்கிறவர்கள் வருகிறார்கள். அதே மாதிரி உடற்கூறு டாக்டர்களை அழைக்கிறோம். படித்த பெண்கள் கூட கவனிக்க வேண்டிய செய்திகளில் இருந்து தவறி விடுகின்றார்கள். பெரியார் கண்ட வாழ்வியலைத் தெரிந்து கொள்ள வேண்டும். உடல் நலன் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பொருளாதாரம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.

--------------தொடரும்... "விடுதலை” 2-7-2010


புரட்சிக் கவிஞர் விழா-அறிவை, ஆற்றலை வளர்க்கும் விழா!
சென்னை புரட்சிக் கவிஞர் விழாவில் தமிழர் தலைவர் விளக்கம்

புரட்சிக் கவிஞர் விழா - நம் அறிவை, ஆற்றலை வளர்த்துக் கொள்ளும் விழா என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சென்னை வியாசர்பாடியில் 19.6.2010 அன்று நடைபெற்ற புரட்சிக் கவிஞர் விழாவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

கடனும் வாங்க மாட்டேன்!

நாம் வாழ்க்கையில் வரவுக்கு உட்பட்டு செலவழிக்க வேண்டும். நான் கடனும் வாங்க மாட்டேன். கடனும் கொடுக்க மாட்டேன் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, எல்லோரிடமும் நீங்கள் பழக வேண்டும். ஆண்கள் திருமணமானவராக இருந்தால் சம்பளம் வாங்கியவுடனேயே நேரடியாக மனைவியிடம் கொண்டு போய் கொடுக்க வேண்டும். இவருக்கு ஏதாவது தேவை என்று சொன்னால் காரணம் சொல்லி பணம் வாங்க வேண்டும். அனாவசியமாக செலவு பண்ணக்கூடாது.

பெரியார் அய்யா சொன்ன தத்துவப்படி 10 விழுக்காடோ, அல்லது 25 விழுக்காடோ நமது இல்லை என்று எடுத்து வைக்க வேண்டும். அதே மாதிரி இப்படிப்பட்ட குடும்பங்கள் சேர்ந்தால் ஒரு (பிக்னிக்) சுற்றுலா மாதிரி வெளியே செல்ல வேண்டும். அறிவு பூர்வமான சுற்றுலாவாக அது இருக்க வேண்டும்.

கோவிலுக்குப் போவதற்குப் பதிலாக

நாம் கோவிலுக்குப் போவதற்குப் பதிலாக நல்ல அறிவியல் மய்யங்களுக்குப் போய் பார்க்க வேண்டும். கல்விக் கூடங்களை பார்க்க வேண்டும். நல்ல சுகாதார வாய்ப்புகள் இருக்கும் படியாக பார்த்து கொள்ள வேண்டும்.

ஒரு காலத்தில் வேறு பொழுதுபோக்கு இல்லை. கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றைக்கு அறிவார்ந்த முறையில் வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி விழா

ஆகவே புரட்சிக் கவிஞர் விழா தமிழர் கலை, பண்பாட்டு புரட்சி விழா என்று சொன்னால் அது ஏதோ கடவுள் இல்லை என்று சொல்லுகின்ற விழா என்று நினைக்காதீர்கள். கடவுள் இல்லை. அதனால் இல்லை என்று சொல்லுகின்றோம். அவ்வளவுதானே தவிர ரொம்ப சுருக்கமான விசயம் இது. கடவுளை மற! என்று சொன்ன தந்தை பெரியார் மனிதனை நினை என்று சொன்னார். மனிதனை நினைத்தால்தான் அடுத்தவர்களுக்கு உதவி பண்ண முடியும்.

பகுத்தறிவு வாழ்க்கை முறை

மனிதனை நினைத்தால்தான் நம் பக்கத்தில் உள்ளவனை ஏமாற்றக்கூடாது. இன்னொருவர் நம்மை ஏமாற்றினால் எவ்வளவு சங்கடமாக இருக்கும் என்று நினைக்கக் கூடிய அளவில் வாழ்க்கை முறை இருக்க வேண்டும். எனவேதான் பகுத்தறிவு வாழ்க்கை முறை சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என்று சொன்னார்களே, அந்த சுயமரியாதை வாழ்வை சுகவாழ்வாக ஆக்கிக் காட்டுவதற்கு இது போன்ற கருத்தரங்குகள், குடும்ப விழாக்கள் ஒவ்வொரு மாதத்திலும் இந்த சென்னைப் பகுதியிலே சிறப்பாக நடத்தப்பட வேண்டும். அதிகம் செலவழிக்க வேண்டும் என்பது கூட அவசியம் இல்லை.

மாதாமாதம் நடத்த வேண்டும்

எப்படி பெரியார் நூலக வாசகர் வட்டத்தை வியாழக்கிழமைதோறும் அவர்கள் நடத்துகிற மாதிரி, நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பகுதியில் நடத்துங்கள். வடசென்னை மாவட்ட தி.க. தலைவர் தங்கமணி அவர்களைக் கேட்டேன். நீங்கள் இந்த மாதிரி செய்ய முடியுமா? என்று கேட்டேன். தாராளமாகச் செய்யலாம் என்று சொன்னார். பகுத்தறி வாளர் கழகம், திராவிடர் கழகம் மற்றும் ஒத்த கருத்துள்ளவர்கள் எல்லோரும் சேர வேண்டும். குடும் பத்தில் உள்ளவர்கள் கொஞ்ச நேரம் வீட்டை விட்டு வெளியே வந்து இதுமாதிரி கலந்து பேச வேண்டும்.

சிறுபிள்ளைகள் பார்க்கும் பொழுது...

நம்முடைய நிகழ்ச்சிகளை இந்த மாதிரி சிறு சிறு பிள்ளைகள் பார்த்தால் கூட ஓகோ, நாமும் அந்த மாதிரி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும். அதை ஒரு ரோல் மாடல் மாதிரி எடுத்துக் கொள்வார்கள். சிறுவன் வெற்றிச் செல்வனைப் பார்க்கும் பொழுது இன்னொரு குழந்தைக்கு என்ன வரும்? நாமும் வெற்றிச் செல்வன் மாதிரி ஏன் செய்யக்கூடாது என்று சொல்லக் கூடிய எண்ணம் வரும்.

ஆற்றலை வளர்க்கும் நிகழ்ச்சி

ஆகவே, அந்த மாதிரி ஆற்றலை வளர்ப்பதற்கு இந்த மாதிரி விழாக்களைப் பயன்படுத்துங்கள். எவ்வெப்பொழுதெல்லாம் நான் சென்னையில் இருக்கின்றேனோ, அப்பொழுது உங்களுடைய விழாக்களிலேயே கலந்து கொள்வதற்கு நானும் இசைவு தருகிறேன். (கை தட்டல்)

எனவே எனக்கும் உங்களை எல்லாம் சந்திப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. நம்மை பொறுத்தவரையிலே நாம் தான் உற்றார், உறவினர்கள்.

இன்பம் - துன்பம்

ஒருவருக்கு ஏற்படுகிற இன்பம் அனைவர்க்கும். அதே போல நம்முடைய குடும்பங்களுக்கு ஏற்படுகின்ற துன்பம் நாம் எல்லோரும் பங்கெடுத்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். எனவேதான் தந்தை பெரியார் குடும்பங்கள் என்று சொன்னால் தன்னம்பிக்கை உள்ள குடும்பங்கள். பிறருக்கு உதவக்கூடிய குடும்பங்கள், சுய மரியாதை குடும்பங்கள், பகுத்தறிவுக் குடும்பங்கள், சமுதாய நோக்குள்ள குடும்பங்கள் பெண்ணடிமை இல்லாத குடும்பங்கள் என்று ஆக்க வேண்டும். 1935இல் பெண்கள் பற்றி அய்யா அடிக்கடி இந்த மாதிரி வந்து உங்களுடைய பிரச்சினைகளை சொன்னால்தான் ஆண்களுக்கும் தெரியவரும். ஓகோ பெண்களை அடக்கி வைக்கக் கூடாது என்று என்னதான் பெண்ணுரிமையைப் பேசினாலும் இன்னமும் பல ஆண்கள் செவிசாய்ப்பதற்குத் தயாராக இல்லை.

அய்யா அவர்கள் எழுதியதை நான் படித்தேன்.

அய்யா அவர்கள் 1935இல் பெயர்கள் நிலை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கின்றார். அதில் தெளிவாகச் சொல்லுகிறார். பெண்களை நாம் எப்படி நடத்த வேண்டும்? எவ்வளவு கவுரவமாக நடத்த வேண்டும்? எவ்வளவு ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை பற்றிச் சொல்லியிருக்கின்றார். நம்முடைய அமைப்பில் ஓர் ஒழுக்கக் கேட்டைப் பற்றி கூட யாராலும் சொல்லி விட முடியாது.

கோவிலிலே கோளாறு

அதே நேரத்திலே கோவில்களுக்குப் போனால் அங்கே என்ன கோளாறு என்பது நமக்குத் தெளிவாகத் தெரியும். ஆகவே அது மாதிரி இங்கு கிடையாது.

நம்முடைய நிகழ்ச்சிகளுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்து வரவேண்டும். இங்கே வாருங்கள்; எங்கள் நிகழ்ச்சியை வந்து பாருங்கள்; என்ன சொல்லுகிறார்கள் என்று பாருங்கள்; உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லி ஒரு முறை அழைத்து வந்தால் நம்மைப் பற்றிய தவறான கண்ணோட்டம் இந்தக் கொள்கையினுடைய சிறப்பு பெரியார் எப்படி ஒரு வாழ்வியல் அறிஞர், வாழ்க்கைக்கு வழி காட்டியவர், நமக்கெல்லாம் விழி திறந்த வித்தகர் என்பது புரியும்.

இழந்ததை மீட்டெடுக்கும் விழா

ஆகவே இந்த முயற்சிகள் தொடரட்டும் என்று சொல்லி, தமிழர் கலை பண்பாட்டுத்துறை புரட்சி விழா என்றால், இழந்ததை மீட்டெடுக்கும் விழா.

இவ்வளவு அற்புதமாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தோழர்களுக்கு பாராட்டு என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

---------------------------- “விடுதலை” 3-7-2010


4.7.10

சுயமரியாதை இயக்கம் தோன்றிய பின் பலன் பாரீர்


சுயமரியாதை இயக்கத்தின் பலன்

சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு பார்ப்பனர்களும், புராணப் பண்டிதர்களும், புஸ்தகக் கடைக்காரர்களும், புரோகிதக் கூட்டத்தார்களும் எவ்வளவுதான் பழிகள் கூறி விஷமப் பிரச்சாரம் செய்து வந்தும் நாட்டில் தோன்றியிருக்கும் உணர்ச்சிகளையும் அதனால் ஏற்பட்டிருக்கும் பலன்களைப் பற்றியும், இரண்டொரு நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுகின்றோம்.

பார்ப்பனர்களை எந்தக் காரணங்கொண்டும் நம்புவதென்பதோ, அவர்களோடு ஒத்துழைப்ப தென்பதோ, அவர்கள் கலந்துள்ள கூட்டங்களில் சேர்வதென்பதோ, தேர்தல்களில் அவர்களுக்கு ஓட்டுச் செய்வதென்பதோ முதலாகிய காரியங்களில் அடியோடு மறுக்கப்பட்டு வருகின்றது. கோயில்கள் சம்பந்தமான விஷயங்களில் பூஜைகள் அபிஷேகங்கள் உற்சவங்கள், புதுக்கோயில்கள் கட்டுதல், ஆகிய காரியங்களில் அலட்சியம் காட்டப்பட்டு வருவதுடன், பல கோயில்கள் அரைகுறை வேலையில் இருந்தவைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

பண்டிகைகள் விரதங்கள், சடங்குகள் முதலியவைகள் அநேகமாக, சில இடங்களில் அடியோடு விடப்பட்டும், சில இடங்களில் மிக்க அலட்சியமாக ஏதோ நிர்ப்பந்தத்திற்கு நடத்துபவைகளாகவும் காணப்படுகின்றன.

விதவைகள் மணம் என்பதும், கலப்பு மணம் என்பதும், தினம் தினம் நடக்கும் விஷயங்களும், நடத்தத் தேவையான விளம்பரங்களும் வெளியான வண்ணமாய் இருந்து வருகின்றது. ஜாதி வித்தியாசம் ஒழித்தல் தீண்டாமை ஒழித்தல், முதலிய வித்தியாசங்கள் குறிப்பிடத் தகுந்த அளவுக்குப் பயன்கொடுத்து வருகின்றன. அதாவது தினமும் மக்கள் மகமதியராவதும், கிறிஸ்தவராவதுமான செய்திகள் வெளியகின்றன. கோயில் பிரவேசம் பல இடங்களில் நடக்கின்றன. புரோகித விலக்கு சங்கங்கள் புதிது புதிதாக ஏற்படுத்தப்படுகின்றன.

மதத்தைப் பற்றிய புரட்டுகள் வெகுதாராளமாய் வெளிப்படுத்தப் படுவதோடு மதப் புரட்டர்கள் எல்லாம் மூலையில் முக்காடிட்டு ஒடுங்கி உட்கார்ந்து கொள்ள வேண்டியதாகிவிட்டன. அன்றியும் அவர்களின் உண்மையான தோல்வி-யைக் காட்ட அறிகுறி என்னவென்றால் தாங்கள் வாய் திறக்க யோக்கியதை அற்றும்போய், புத்தியில்லாத பாமர மக்களை ஏவிவிட முயற்சியில் இறங்கியிருப்பதேயாகும்.

இந்து மதப்புரட்டு தேசமெல்லாம் பரவி வருவதுடன், அடுத்த ஜன கணிதத்தில் ஒவ்வொருவரும் இந்தியன் அல்லது இந்துவல்லாதவன் என்று சொல்ல வேண்டும் என்றும், எந்தக் காரணம் கொண்டும் ஜாதியையும், ஜாதிப் பட்டத்தையும் சொல்லக் கூடாதென்றும், நூற்றுக்கணக்கான சங்கங்களும் மகாநாடுகளும், தீர்மானங்கள் செய்தனுப்புவதுமேயாகும்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம், தேசத்துரோகம், தேசியத்திற்கு விரோதம் என்று எவ்வளவோ தூரம் பார்ப்பனர்களும், அவர்களது வால்களும், கத்தியும், இப்போது சட்டசபையிலும், சர்க்கார் உத்தியோகத்திலும் ஏற்பட்டு நிலைத்து அனுபவத்திற்கு வந்துவிட்டதோடு, பார்ப்பனர்கள் தங்கள் வகுப்புக்குள்ள உரிமையை கெஞ்சிக் கேட்கவேண்டிய அளவுக்கு, தைரியமாய் வெளியில் வந்து விட்டார்கள். உதாரணமாக சர்க்கார் மதுவிலக்குப் பிரச்சார ஜில்லா கமிட்டிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பார்ப்பனர் என்கின்ற கணக்கு வைத்து நியமிக்கவேண்டும் என்று திவான்பகதூர். திரு. ராமச்சந்திர ராவே, முயற்சி எடுத்துக் கொண்டதோடு தேவஸ்தானக் கமிட்டிகளில், பார்ப்பனர்களுக்கு உண்டான பங்கு ஏன் கொடுக்க-வில்லை? என்று சட்டசபையில் திரு.சத்திய-மூர்த்தியே பல கேள்விகள் கேட்கவும், இந்தக் கேள்வியை திரு.சத்தியமூர்த்தி வகுப்புவாரிப் பிரதி-நிதித்துவ உரிமையை ஒப்புக்கொண்டு கேட்கின்றாரா? என்று திரு.சி.எஸ்.இரத்தினசபாபதி முதலியார் கேட்கவும் சர்க்காரார் ஆம் என்று பதில் சொல்லவுமான நிலைமைக்கு வந்துவிட்டது.

மற்றும் ராமேஸ்வரம் கோயில் தேவஸ்தான சம்பந்தமான ஒரு உத்தியோக அறிக்கையில் சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, கோயில் வரும்படி குறைந்து வருகின்றது. ஆதலால் முன்போல இனி வரும்படி எதிர்பார்க்க முடியாது என்று காணப்பட்டிருக்கின்றது.

மற்றும் ரிஜிஸ்திரேஷன் இலாகா வருஷாந்திர ரிப்போர்ட் ஒன்றில் இப்போது ரிஜிஸ்டர் கல்யாணங்கள் அதிகப்பட்டு வருவதால், கல்யாணங்களை ரிஜிஸ்தர் செய்ய ஒவ்வொரு இடத்திலும், அதிகமான ரிஜிஸ்டிரார்களை நியமிக்க வேண்டும் என்று குறிக்கப்பட்டிருக்கின்றது.

வைதிகக் குடுக்கைகளுக்கும், புராண அழுக்கு மூட்டைகளுக்கும், வருணாச்சிரம புராணங்களுக்கும் அடியோடு பொதுமேடைகள் இல்லாமல் செய்துவிட்டது.

காஞ்சிபுரம் சங்கராச்சாரி மடத்தில் இருந்து வந்த பள்ளிக் கூடத்தில் தீண்டப்படாதவர்களைச் சேர்த்துக் கொள்ளாததற்காக கிராண்டு மறுக்கப்பட்டு பள்ளிக் கூடம் மூடப்பட்டுவிட்டது.

சென்னைப் பச்சையப்பன் காலேஜில் தீண்டப் படாதவர்களை சேர்த்துக் கொள்ளப்பட்டுவிட்டது. அருப்புக்கோட்டை நாடார் பள்ளிக் கூடத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட்டாய்விட்டது. திருப்பதி தேவஸ்தான சமஸ்கிருதப் பள்ளிக் கூடத்தில் பார்ப்பனரல்லாதார்களை சேர்த்துக் கொள்ளவேண்டுமாய் சர்க்கார் உத்தரவு போட்டு அந்தப்படி சேர்த்துக் கொண்டும் ஆய்விட்டது.

பெண்களுக்கு மூன்றாவது பாரம்வரை சம்பளம் இல்லாமல் சொல்லிக் கொடுப்பதாக சர்க்கார் ஒப்புக் கொண்டு அந்தப்படி அமலிலும் வந்துவிட்டது.

பெண்களுக்குப் போதனை முறைப் பாடசாலைகள் முக்கிய தாலுகாக்கள் தோறும் ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வேலை நடந்து வருகின்றது.

விதவைகள் ஆசிரமம் வெளி ஜில்லாக்களில் ஏற்படுத்த யோசனைகளும் ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றது. இவ்வளவும் அல்லாமல் முனிசிபாலிடிக்குச் சம்பந்தப்பட்ட பொதுக்கிணறுகளில் தீண்டப்படாதார் உள்பட எல்லோரும் தண்ணீர் எடுக்கலாம் என்றும் யாராவது ஆட்சேபித்தால் 50 ரூபாய் அபராதம் என்றும் சட்டம் செய்தாகிவிட்டது. ஜில்லா போர்டு, தாலுகா போர்டு சம்பந்தப்பட்ட கிணறுகளுக்கும் அதே மாதிரி சட்டம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

பதினாறு வயதிற்குட்பட்ட பெண்களுக்குக் கல்யாணம் செய்யக் கூடாது என்றும், பதினெட்டு வயதுக்கு மேற்படாத கல்யாணமில்லாத பெண்களை புணரக் கூடாது என்றும் சட்டம் செய்தாகிவிட்டது.

விதவைகள் சொத்துரிமைக்கும், பெண்கள் சொத்துரிமைக்கும் சட்டங்கள் கொண்டு வரப்படப் போகின்றன.

சாமிபேரால் பெண்களுக்குப் பொட்டுக் கட்டி விபசாரிகளாக்கப்பட்டுவருவதை நிறுத்தச் சட்டங்கள் செய்யப்பட்டுவிட்டன. பட்டணங்களில் விபசார விடுதிகளை ஒழிக்கச் சட்டம் செய்யப்படுகின்றது. இப்படியாக இன்னும் அநேக விஷயங்கள் இந்தியா முழுவதும் புற்றில் இருந்து ஈசல்கள் புறப்படுவதுபோல தினத்திற்குத்தினம் புதிதாக இந்த இரண்டு வருஷத்தில் ஏற்பட்டுக் கொண்டு வருகின்றதை கண்ணில் பார்த்துக் கொண்டு வருகின்றோம்.

இன்னமும் அடுத்த வருஷத் துவக்கத்தில், சில விஷயங்களுக்கு சத்தியாக்கிரகம் என்பவைகள் தாராளமாய் நடைபெறக் கூடிய நிலைமைக்கு நாடு வந்து விடும் என்கின்ற பலமான நம்பிக்கை நமக்குண்டு என்பதையும் தைரியமாய் வெளிப்படுத்துகின்றோம். அன்றியும் அதற்குள் பார்ப்பனர்கள் சாரதா சட்டத்தை மீறி செய்யப் போவதாய்க் கூறும் சத்தியாக்கிரகம் பார்ப்பனர்கள் இப்போது சொல்லுகின்ற படி நடக்கு-மானால், அதுவும் நமது சுயமரியாதை இயக்கத்தின் பலன் என்பதோடு அதை நம்மவர்கள் நடத்தப்போகும் சத்தியாக்கிரகத்திற்கு அனுகூலமாய் தேசத்தில் உணர்ச்சி உண்டாக்கவும் கூடும்.

--------------தந்தைபெரியார் - “ குடிஅரசு” - துணைத்தலையங்கம் - 03.11.1929

3.7.10

லஞ்சம் பற்றி பெரியார் - 2


ஸ்தல ஸ்தாபனங்களில் லஞ்சம்

வரவர நமது நாட்டு முனிசிபாலிட்டிகளும், டிஸ்டிரிக்ட் போர்டு களும், தாலூகா போர்டுகளும், மனிதர்கள் பதவியை அனுபவிக்க ஒரு சாதன மாயிருப்பதோடல்லாமல் அதன் தலைவர்கள் பணம் சம்பாதிப்பதற்கும் ஒரு சாதனமாகிக்கொண்டு வருகிறது. இவை கொஞ்ச காலங்களுக்கு முன்பாக நூற்றுக்கு பத்து பதினைந்து பேர்கள்தான் இம்மாதிரி தப்புவழியில் நடக்கக் கூடிய தலைவர்களை உடைத்தாயிருந்தன. இப்பொழுது பணம் சம்பாதிக்கும் தலைவர்களின் எண்ணிக்கை அதிகப்பட்டுக்கொண்டு வருவதோடல்லாமல் பொதுஜனங்களுக்கும் சர்க்கார் காரியங்களில் நீதி பெறுவதுபோல் பணம் கொடுத்தால் எந்தக் காரியத்தையும் ஸ்தல ஸ்தாபனங்களில் சாதித்துக் கொள்ள லாம் என்கிற தைரியம் வந்துவிட்டது. இம்மாதிரியான காரியங்கள் இரட்டை ஆட்சி ஏற்பட்டபிறகு அதிகப்பட்டுப்போய்விட்டது. இரட்டை ஆட்சிக்கு முன்பாகவும் இம்மாதிரி காரியங்கள் இருந்துவந்தது என்றாலும் சேர்மன் முதலானவர்கள் இவ்வளவு தைரியமாய் அந்தக் காலத்தில் லஞ்சம் வாங்கத் துணியவே இல்லை. லஞ்சம் வாங்குவதென்பது சகஜமாய் போய்விட்டால் பிராதுகளும், புகார்களும் எப்படி உண்டாகும்? இம்மாதிரியான காரியங்களை அடக்குவதற்கு அரசாங்கத்தால் பிராது எதிர்பார்த்துக்கொண்டிருப்பது சுத்தப் பயித்தியக் காரத்தன மென்பதோடு வேண்டுமென்றே சும்மா இருப்பதற்கு பிராது வரவில்லையே என்ற சாக்கை உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்வோம். எவ்வளவோ உபயோகமில்லாத காரியங்களுக்கு ஸி.ஐ.டி. என்று சொல்லுகிற வேவுக்காரர்களையும் வைத்து வரிகொடுப் போரின் பணத்தைப் பாழாக்குகிற நமது சர்க்காருக்கு லஞ்சம் வாங்குபவர் களைக் கண்டுபிடிப்பதற்கு வேவுக்காரர்களை வைப்பது கஷ்டமென்றோ அதிக செலவென்றோ சொன்னால் எவரேனும் ஒப்புக்கொள்வார்களா? ஜனங்களெல்லாம் யோக்கியமாய் இருப்பார்கள் என்று ‘அரசாங்கத்தார் நினைப்பார்களானால் கோர்ட்டுகளும், நிர்வாகமும் தேவையே இல்லையே. சர்க்காரார் வேண்டுமானால் இது விஷயங்களுக்குச் சுலபமாக ஒரு பதில் சொல்லிவிட முடியும். என்னவென்றால், அப்படிப்பட்ட சேர்மன்களையோ பிரஸிடெண்டுகளையோ அங்குள்ள கவுன்ஸிலர்கள் ஏன் தேர்ந்தெடுத்து நியமிக்கிறார்கள், என்று கேட்கலாம்.

கவுன்சிலர்களும், மெம்பர்களுமே ஆயிரம் பதினாயிரக்கணக்காய் ஓட்டர்களுக்கு லஞ்சம் கொடுத்து பதவி பெறுகிறபொழுது சேர்மன் முதலியவர்கள் வாங்குகிற லஞ்சம் இவர்களுக்கு எப்படிக் கிரமமாகத் தோன்றும்? இவர்கள் லஞ்சம் கொடுத்து பதவி பெறுகிற காரணத்தினால் லஞ்சம் வாங்குகிற சேர்மனை அநுமதிக்க வேண்டியதாகப் போய்விட்டது. இதுதான் உண்மையான கர்ம பலன் என்று சொல்லுவது.

ஜனங்கள் சுயராஜ்யத்திற்கு அருகர்களாகப் போய்விட்டார்கள். ஆதலால் சுயராஜ்யம் கொடுக்க வேண்டுமென்றும் பிரிட்டிஷார் ஒரு அதிகாரத்தைக்கூட தங்கள் கையில் வைத்துக்கொள்ளாமல் முழு சுதந்தரத் தையும் குடிகளுக்கே வழங்கிவிட வேண்டுமென்றும், கேட்டுக் கொண்டி ருக்கும் இக்காலத்தில் கொஞ்சம் நஞ்சம் கொடுத்திருப்பதாகச் சொல்லப்படும் குட்டி சுயஆட்சி ஸ்தாபனங்களிலெல்லாம் இம்மாதிரி லஞ்சங்களும் ஒழுங் கீனமான காரியங்களும் தாண்டவமாடுவதானால் அதற்குப் பொதுஜனங்களே உடந்தை யாயுமிருப்பார்களானால் சுய ஆட்சிக்கு நாம் அருகதை உடையவர்கள் என்று சொல்லுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?

தேசத்தின் சுதந்தரத்திற்காக ஏழைமக்கள் கஷ்டப்படுவதும், தேச பக்தர்கள் தியாகம் செய்வதும் இம்மாதிரி படித்தவர்களும், பணக்காரர்களும் லஞ்சம் வாங்கவும் லஞ்சம் வாங்குவதை அனுமதிக்கவும்தானா உபயோகப் படுத்த வேண்டும்? மகாத்மா சொல்லுகிறபடி தமது சுயராஜ்யத் திட்டத்திற்கு படித்த வகுப்பார் தான் எதிரியாயிருக்கிறார்கள் என்பதோடு மாத்திரம் அல்லாமல் சுயராஜ்யத்திற்கு நாம் அருகர்களல்ல என்பதற்கும் இந்தப் படித்த கூட்டத்தாரே தான் ஆதாரமாயிருக்கிறார்கள் என்பதை நாம் வருத்தத்துடன் சொல்லாமலிருக்க முடியவில்லை.

------------------தந்தைபெரியார் - “குடி அரசு” - கட்டுரை - 27.09.1925