Search This Blog

2.7.10

பெண்கள் உண்மை விடுதலையடைய வேண்டுமானால் ஆண்மை அழிய வேண்டும்




பெண்கள் விடுதலையின் பேரால் உலகத்தில் அனேக இடங்களில், அனேக சங்கங்களும், முயற்சிகளும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருவது யாவரும் அறிந்ததே. இம்முயற்சிகளில் ஆண்களும் மிகக் கவலையுள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு மிகப் பாசாங்கு செய்து வருகின்றார்கள். ஆண்கள் முயற்சியால் செய்யப்படும் எவ்வித விடுதலை இயக்கமும் எவ்வழியிலும் பெண்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்கமுடியாது. தற்காலம் பெண்கள் விடுதலைக்காக பெண்மக்களால் முயற்சிக்கப்படும் இயக்கங்களும் யாதொரு பலனையும் கொடுக்காமல் போவதல்லாமல் மேலும் மேலும் அவை பெண்களின் அடிமைத்தனத்திற்கே கட்டுப்பாடுகளை பலப்படுத்திக்கொண்டே போகும் என்பது நமது அபிப் பிராயம். எதுபோலவென்றால், இந்திய பொதுமக்கள் விடுதலைக்கு வெள் ளைக்காரரும் பார்ப்பனரும் பாடுபடுவதாக ஏற்பாடுகள் நடந்து வருவதின் பலனாக எப்படி நாளுக்கு நாள் இந்திய மக்களுக்கு அடிமைத்தனம் விடுதலை பெற முடியாதபடி பலப்பட்டு என்றென்றைக்கும் கட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறதோ அதுபோலவும் சமூகசீர்திருத்தம், சமத்துவம் என்பதாக வேஷம் போட்டுக் கொண்டு பார்ப்பனர்களும் புராணக்காரர்களும் சீர் திருத்தத்தில் பிரவேசித்து வருவதன் பலனாக எப்படி சமூகக் கொடு மைகளும் உயர்வு தாழ்வுகளும் சட்டத்தினாலும் மதத்தினாலும் நிலை பெற்று பலப்பட்டு வருகின்றதோ அது போலவுமே என்று சொல்லலாம்.

அன்றியும் ஆண்கள், பெண்கள் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டு கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும் பெண்கள் விடுதலைக்காக பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக்கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர் களுக்கு செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல் லாதார்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருக்கால் ஏதாவது ஒரு சமயம் ³ விஷயங்களில் விடுதலை உண்டாய் விட்டாலுங் கூட ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம். ஏனெனில் ஆண்மை என்னும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்துவிடக் கூடாது அந்த ஆண்மை உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை யென்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உலகத்தில் “ஆண்மை” நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் “ஆண்மை” என்ற தத்துவம் அழிக்கபட்டாலல்லாது பெண்மை விடுதலை யில்லை யென்பது உறுதி. “ஆண்மை”யால்தான் பெண்கள் அடிமையாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

சுதந்தரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் “ஆண்மை”க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டது. ஏன்? “ஆண்மை”க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண்மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதை மாத்திரம் பெண்கள் நன்றாய் உணர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுகின்றோம்.

எனவே பெண்மக்கள் அடிமையானது ஆண் மக்களாலேயேதான் ஏற்பட்டது என்பதும், அதுவும் “ஆண்மை”யும் பெண் அடிமையும் கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக் கொண்டி ருக்கிறார்கள் என்பதும், அதோடு பெண் மக்களும், இதை உண்மை என்றே நினைத்துக்கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால் பெண் அடிமைக்கு பலம் அதிகம் ஏற்பட்டிருக்கின்றதென்பதும், நடுநிலைமைப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் யோசித்துப்பார்த்தால் விளங்காமல் போகாது. பொது மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு ஒழிய வேண்டுமானால், எப்படி கடவுளாலேயே மக்களுக்கு பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டிருக்கின்றது என்ற இந்துமதக் கொள்கையைச் சுட்டுப்பொசுக்க வேண்டியது அவசியமோ அதுபோலவே பெண்மக்கள் உண்மை விடுதலை பெற்று உண்மை சுதந்திரம் பெற வேண்டுமானால் “ஆண்மை”யும் “பெண் அடிமையும்” கடவுளால் உண்டாக்கப்பட்டவை என்பதற்குப் பொறுப்பாயுள்ள கடவுள் தன்மையும் ஒழிந்தாக வேண்டும்.

பெண்கள் விடுதலை பெறுவதற்கு இப்போது ஆண்களைவிடப் பெண்களே பெரிதும் தடையாயிருக்கின்றார்கள். ஏனெனில் இன்னமும் பெண்களுக்கு தாங்கள் முழு விடுதலைக்கு உரியவர்கள் என்கின்ற எண்ணமே தோன்றவில்லை. தங்களுடைய இயற்கைத் தத்துவங்களின் தன்மையையே தங்களை ஆண்களுக்கு அடிமையாகக் கடவுள் படைத்தி ருப்பதின் அறிகுறிகளாய்க் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். எப்படியெனில் பெண் இல்லாமல் ஆண் வாழ்ந்தாலும் வாழலாம்; ஆனால் ஆண் இல்லாமல் பெண் வாழமுடியாதென்று ஒவ்வொரு பெண்ணும் கருதிக் கொண்டிருக் கிறாள். அப்படி அவர்கள் கருதுவதற்கு என்ன காரணம் என்று பார்ப்போ மானால், பெண்களுக்குப் பிள்ளைகள் பெறும் தொல்லை ஒன்று இருப்பதால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழ முடியும் என்பதை ருஜுப்படுத்திக் கொள்ள முடியாதவர்களாயிருக்கின்றார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்த ரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களாயிருக்கின்றார்கள். அன்றியும் அப்பிள்ளை பெறும் தொல்லையால் தங்களுக்குப் பிறர் உதவி வேண்டியிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இடமுண்டாய்விடுகின்றது. எனவே உண்மை யான பெண்கள் விடுதலைக்கு பிள்ளை பெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதாயிருந்தாலும் பெண்கள் பொதுவாகஉண்மைவிடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம். இம்மாதிரி இதுவரை வேறு யாரும் சொன்னதாகக் காணப்படாவிட்டாலும் நாம் இதைச் சொல்வது பெரிதும் முட்டாள்தனமோ என்பதாகப் பொதுமக்கள் கருதுவார்கள் என்று இருந்தாலும் இந்த மார்க்கத்தைத் தவிர - அதாவது பெண்கள் பிள்ளை பெறும் தொல்லையில் இருந்து விடுதலையாக வேண்டும் என்கின்ற மார்க்கத்தைத் தவிர - வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்குக் கல்லுப் போன்ற உறுதி உடையதாய் இருக்கின்றது. சிலர் இதை இயற்கைக்கு விரோதம் என்று சொல்லவரலாம். உலகத்தில் மற்றெல்லாத் தாவரங்கள், ஜீவப்பிராணிகள் முதலியவை இயற்கை வாழ்வு நடத்தும்போது மானிட வாழ்க்கையில் மாத்திரம் இயற்கைக்கு விரோதமாகவே அதாவது பெரும்பாலும் செயற்கைத் தன்மையாகவே வாழ்வு நடத்தி வருகின்றபோது, இந்த விஷயத்திலும் இயற்கைக்கு விரோத மாய் நடைபெறுவதில் ஒன்றும் முழுகிப் போய்விடாது.

தவிர “பெண்கள், பிள்ளை பெறுவதை நிறுத்திவிட்டால் உலகம் விர்த்தியாகாது, மானிட வர்க்கம் விர்த்தியாகாது” என்று தர்ம நியாயம் பேசச் சிலர் வருவார்கள். உலகம் விர்த்தியாகாவிட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிட வர்க்கம் பெருகாவிட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடும்? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன கஷ்டம் உண்டாகிவிடும் என்பது நமக்குப் புரியவில்லை. இதுவரையில் பெருகிக் கொண்டு வந்த மானிட வர்க்கத்தால் மானிட வர்க்கத்திற்கு ஏற்பட்ட நன்மைதான் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை.

பெண்களின் அடிமைத்தன்மை பெண்களை மாத்திரம் பாதிப்ப தில்லை. அது மற்றொரு வகையில் ஆண்களையும் பெரிதும் பாதிக்கின்றது. இதைசாதாரண ஆண்கள் உணருவதில்லை. ஆனால் நாம் இவ்விஷயத்தில் அதைப்பற்றிச் சிறிதும் கவலைகொள்ளவில்லை. பெண்களைப் பற்றியே கவலைகொண்டு சொல்லுகின்றோம். தற்கால நிலைமையில் பெண்களின் விடுதலைக்குப் பெண்களே வேறு எந்த முயற்சி செய்தாலும் அது சிறிதாவது ஆண்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்கக்கூடியதாக இருக்கலாம். ஆனால் இந்தக்காரியத்தில், அதாவது பெண்கள் பிள்ளை பெறுவதில்லை என்கின்ற காரியத்தில் ஆண்களுக்கு எவ்விதக் கஷ்டமும் நஷ்டமும் கிடையாது என்ப தோடு ஆண்களுக்கு இலாபமும் உண்டு என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். எப்படியெனில் ஒரு மனிதன் தான் பிள்ளைகுட்டிக் காரணாயிருப்பதினாலேயே யோக்கியமாகவும் சுதந்திரமாகவும் நடந்து கொள்ளப் பெரிதும் முடியாமலிருக்க வேண்டியவனாய் விடுகிறான். அன்றி யும் அவனுக்கு அனாவசியமான கவலையும் பொறுப்பும் அதிகப்படவும் நேரிடுகின்றது. மற்றபடி இதனால் ஏற்படும் மற்ற விஷயங்களையும் முறைகளையும் மற்றொரு சமயம் விரிப்போம்.

-------------------- தந்தைபெரியார் - “குடி அரசு” - தலையங்கம் - 12-08-1928

பூஜை வேளையில் தமிழில் பேசினால் தோஷமாம்!

கரூரில் கர்ச்சனை!

கருஞ்சிறுத்தைகளே கழகத் தோழர்களே, தமிழின உணர்வுள்ள பெருமக்களே, மொழி மானம் போற்றும் மூத்த தமிழ்க் குடி மக்களே!

கோவை உலகத் தமிழ் மொழி மான மீட்பு மாநாட்டுக்குப் பின் தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் உங்களையெல்லாம் கரூருக்கு அழைக்கிறார்.

காரணம் என்ன?

தமிழை நீஷ பாஷை என்று சொல்லும் ஒரு கூட்டம் இன்னும் தமிழ் மண்ணில் இருக்கத்தான் செய்கிறது.

தமிழ் செம்மொழி ஆக்கப்பட்டால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் வந்து குதிக்குமா? என்று தமிழை தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் கொச்சைப்படுத்தும் குள்ளநரிகள், அன்றாடம் ஊளையிட்டுக்கொண்டுதான் திரிகின்றன.

பூஜை வேளையில் தமிழில் பேசினால் தோஷம் என்கிற ஜெகத்குருக்களும் நாட்டில் உண்டு.

தமிழில் பேசும் ஒவ்வொரு முறையும் தமிழ்ப் பேசிய தோஷத்தின் காரணமாகக் குளியல் போடும் காமக்கோடிகளும் உண்டு.

தமிழ் அர்ச்சனை மொழி என்றால் எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற வி.எஸ்.சிறீகுமார்கள் யார்?

தமிழர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் உள்பட அர்ச்சகர் ஆக உரிமையுண்டு என்று அரசு சட்டம் செய்தால், உச்சிக்குடுமி மன்றம்வரை சென்று உலுக்கும் உளுத்தர்கள் யார்? யார்?

இதே கரூரையடுத்த திருமுக்கூடலூரில் உள்ள சிவன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்ததால் கோயில் தீட்டாகிவிட்டது என்று தீக்குழியில் விழுந்ததுபோல துடிதுடித்தவர்கள் யார்?

கோயிலை இழுத்துப் பூட்டி தோஷம் கழித்த துன்மார்க்கர்கள் யார்?

அந்தக் கரூரில்தான் இந்து முன்னணியினர் மாநாட்டை நடத்தியுள்ளனர்.

செம்மொழி மாநாட்டை வரவேற்றுத் தீர்மானம் போட்டதுண்டா? கோயிலில் தமிழ்தான் வழிபாட்டு மொழி என்ற கோரிக்கைதான் உண்டா? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பு உண்டா?

பாலைவனத்தில் பலாவை எதிர்பார்க்க முடியுமா? பார்ப்பனர்களிடத்தில் பைந்தமிழ்பற்றி பரப்புரையைத்தான் காண முடியுமா?

குதிரை குப்புறத் தள்ளினாலும் பரவாயில்லை, குழியும் பறிக்கிறது என்றால் சும்மாவிட முடியுமா?

இந்து முன்னணியினர் கரூரில் ஊர்வலம் நடத்தி மானமிகு முதலமைச்சர் கலைஞர் உருவம் தாங்கிய செம்மொழி மாநாட்டுப் பதாகைகளை எல்லாம் கீழே தள்ளிப் பந்தாடியிருக்கின்றனர்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, கடைசியில் மனிதனையும் கடித்த மிருகம் போல ஆடித் தீர்த்துள்ளனர். தி.மு.க. தொண்டர்களை,பிரமுகர்களைத் தாக்கியும் இருக்கின்றனர்.

தூங்கும் புலியை இடறிப் பார்த்துள்ளனர். தி.மு.க. மட்டுமல்ல - கட்சிகளைக் கடந்த தமிழர்கள் மத்தியில் ஓர் எதிர்பார்ப்பு.

திராவிடர் கழகம் உடனடியாக ஒரு மாநாட்டை நடத்தாதா என்று எதிர்பார்த்த நிலையில், மிகவும் ஆச்சரியமாக அதே நேரத்தில் கரூரில் கழக மாநாடு என்று கழகத் தலைவர் அறிவித்தாரே அடடே! கரூர் வட்டாரத்தில் எத்துணை கலகலப்புத் தெரியுமா?

எப்பொழுது வரும் ஜூலை 6 என்ற எதிர்பார்ப்பு. இன எதிரிகளே வீதிக்கு வந்து ஏளனம் செய்யும்போது இனமானத் தமிழர்கள் ஏதிலிகளாகத் திண்ணையில் உறங்கிக் கிடக்கலாமா?

சோற்றால் அடித்த பிண்டங்களா நாம் சுருண்டு கிடப்பதற்கு?

கிளம்பிற்றுக் காண் தமிழினத்தின் சிங்கக் குட்டிகள் என்று நாடே வியப்புக் குறியாய் எழுந்து நிற்க,

கழகக் குடும்பத்தினரே, இனமானத் தமிழர்களே,

கரூர் கருங்கடலாயிற்றோ என்று கருதும் வண்ணம் கூடுவீர்! கூடுவீர்!!

நமது அடுத்த நிலையம் கரூர்தான். விடுப்பு எடுப்பதாக இருந்தாலும், வீட்டு வேலைகளாக இருந்தாலும், இப்பொழுதே அதைப் பற்றி சிந்தித்துப் பயணத்திற்கு ஆயத்தமாகுங்கள்!

கர்ச்சனை முழக்கத்தால் கரூர் நகரமே காதடைத்துப் போகட்டும்! வாரீர்! வாரீர்!!

--------------- மின்சாரம் அவர்கள் 30-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1.7.10

எங்கே போனது இந்து மத அடையாளமும், உணர்வும்?


அடையாளம் ஆபத்தா?

சென்னையில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு பா.ஜ.க. முன்னணி தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ள கருத்து எவ்வளவு நச்சுத் தன்மை கொண்டது என்பதை தமிழர்கள் உணர வேண்டும்.

இலங்கையிலும் தமிழர்கள் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு இங்கு நாம் எவ்வளவுதான் போராடினாலும் தமிழகத்தைத் தாண்டி அது எடுபடவில்லை, மற்ற மாநிலத்தவர்கள் அது தமிழர்களின் பிரச்சினை என்று ஒதுங்கி விட்டார்கள். தமிழர்கள் என்ற அடையாளத் தினால் ஒட்டு மொத்த இந்தியர்களின் ஆதரவைப் பெற முடியாமல் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

மலேசியத் தமிழர்களின் அவல நிலை குறித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேசுவதற்கு பா.ஜ.க. எம்.பி. ஒருவர் ஏற்பாடு செய்தபோது, மேற்கு வங்க எம்.பி.கூட கலந்து கொண்டார். ஆனால் தமிழக எம்.பி.க்கள் யாரும் வரவில்லை. அதாவது இந்து என்ற அடையாளத்துடன் மலேசியத் தமிழர்கள் போராடுவதால் வங்காளிகளின் ஆதரவு கிடைத்தது. ஆனால் தமிழர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. மொத்தத்தில் தமிழர்கள் என்ற அடையாளப் பிரச்சினையால் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார் கள். அதுவே அவர்களின் அழிவுக்கும் காரணமாக உள்ளது. (தினமணி, 30.6.2010 பக்கம் 6) என்று திரு. இல.கணேசன் கூறியுள்ளார்.

இது எவ்வளவு பெரிய ஆபத்தான, நஞ்சு கொப்பளிக்கும் கருத்து என்பதைத் தமிழர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டு, தமிழர்கள் மத்தியில் தமிழன் என்ற இன உணர்வும், தமிழ் மொழி உணர்வும் வளர்க்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் (அந்த மாநாட்டின் கருத்தரங்கில் இல.கணேசன் பேசியுள்ளார். என்பதும் கவனிக்கத்தக்கது.) அந்த உணர்வு மேலோங்கினால் தங்களுக்குப் பேராபத்து என்பதை துல்லியமாக உணர்ந்த நிலையில், தமிழன் என்ற அடையாளம் வேண்டாம்;- அது தமிழர்களின் அழிவுக்குத்தான் பயன்படும்; மாறாக இந்து என்ற உணர்வுடன் வாழுங்கள் துன்பத்திலிருந்து விடுபடுவீர்கள் என்ற கருத்தில் பேசுகிறார் என்றால் அதன் பொருள் என்ன?

இனவுணர்வு அழிந்து, மத உணர்வு தலை தூக்க வேண்டும் என்பதுதானே இதன் திரைமறைவு நோக்கம்?

தமிழன் தனி அடையாளத்தோடு, தன்மானத்தோடு வாழக்கூடாது. மாறாக இந்து என்ற அடையாளத்தை ஏற்றுக்கொண்டு சூத்திரனாக பார்ப்பனர்களுக்குத் தாசர்களாக வாழ்ந்தால் பிழைத்துக் கொள்வீர்கள் என்று இதோபதேசம் செய்வதல்லாமல் இதன் பொருள் என்ன?

அவர் கூறுகிறபடி பார்த்தாலும் ஈழத்தில் அழிக்கப்பட்ட தமிழர்கள் இந்துக்கள் என்றால், அதற்காக இந்த இந்துத்துவா சக்திகள் துரும்பைக் கிள்ளிப் போட்டிருப்பார்களா?

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியில் இருந்ததே அப்பொழுது ஈழத்தமிழர்ப் பிரச்சினையில் மத்திய ஆட்சி எப்படி நடந்து கொண்டது? இலங்கை சிங்கள அரசுக்கு ஆயுத உதவி செய்யவில்லையா? அப்பொழுது எங்கே போனது இந்து மத அடையாளமும், உணர்வும்?

உலகில் முதல் மனிதர்கள் தோன்றியது தமிழ் நிலத்தில்தான் என்றும், மூத்த முதல் மொழி தமிழ் என்றும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மொழிக்கு இலக்கணம் கண்ட இனம் என்றும் பெருமைக்குரிய தமிழினம் தன் இன அடையாளத்தை இழந்துவிடவேண்டுமாம் மாறாக இந்து என்ற போர்வைக்குள் புகுந்துகொண்டு உயிர் பிழைக்க வேண்டுமாம்.

இல. கணேசன்கள், தமிழன் என்ற உணர்வு உள்ளவர்களாக இருந்தால் இப்படி ஒரு சிந்தனை ஏற்படுமா என்பதைத் தமிழர்கள் புரிந்து கொள்வார்களா?

இந்து என்று சொல்லுகிறாரே அதிலாவது ஒருமைப்பாடு உண்டா? இந்துக்களுக்குள்தான் எத்தனை எத்தனைப் பிரிவுகள் பிளவுகள் பிளவுகளுக்குள் ஏற்பட்ட வடகலை தென்கலை சண்டைகள் சாதாரணமானவைகளா?

வீடு எரியும்போது சுருட்டுக்கு நெருப்புக் கேட்பது போல, தமிழினம், ஈழத்தில் பற்றி எரியும்போது இந்து மதச் சுருட்டுக்கு நெருப்புக் கேட்கும் கேவலத்தை என்ன சொல்ல!

--------------------- “விடுதலை” தலையங்கம் 1-7-2010

காங்கிரசின் இனவுணர்வும் - திராவிட இயக்கத்தின் இனவுணர்வும்

புலவர் குழந்தை

கொங்கு நாட்டுத் தங்கக் கரும்பு புலவர் குழந்தை அவர்கள் திராவிடர் இயக்கத்திற்குக் கிடைத்திட்ட பெரும் புலவர் ஆவார். இன்று அவருடைய பிறந்தநாள் (1906).

கவிச் சக்ரவர்த்தி கம்பன் என்பார் தமிழர்களைக் காட்டிக் கொடுத்து இராமாயணம் எழுதினான் என்றால் நமது புலவர் குழந்தை. தமிழினத் தன்மானச் செருக்குடன் இராவண காவியம் தீட்டி தம் பெரும் புலமை கம்பனுக்குக் குறைவானதல்ல என்று கம்பீரமாகக் காட்டிய தீரர் ஆவார்.

கம்ப இராமாயணம் புகழ்பாடும் இரா.பி.சேதுப்பிள்ளைகூட புலவர் குழந்தையின் இராவண காவியத்தைப் பலபடப் புகழ்ந்துள்ளார்.

தேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை!

நான் கம்ப ராமாயணக் கவிச் சுவையில்

கட்டுண்டு கிடந்தனன்.

தங்கள் இராவண காவியம்

அக்கட்டை அவிழ்த்துவிட்டது

என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

கம்ப இராமாயண அன்பர் என்று அறிமுகமான புலவர் அய்யன்பெருமாள் கோனாரோ ஒருபடி மேலே சென்று புகழ்ந்துள்ளார்.

இனி யொரு கம்பனும் வருவானோ

இப்படி யும்கவி தருவானோ?

கம்பனே வந்தான்

அப்படிக் கவிதையும் தந்தான்

என்று கம்பன் அடிபொடியாழ்வார்களையே ஒப்புக்கொள்ளச் செய்த ஒப்பாரில்லாப் புலவர் மாணிக்கம் நமது புலவர் குழந்தை ஆவார்.

1948 இல் காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்ட இராவண காவியம் கலைஞர் அரசால் 1971 இல் தடை நீக்கம் செய்யப்பட்டது.

காங்கிரசின் இனவுணர்வுக்கும், திராவிட இயக்கத்தின் இனவுணர்வுக்கும் இடையே உள்ள ஒப்புவமை இதுதான்!

தந்தை பெரியார் நெறியில் நின்று திருக்குறளுக்குத் தனிச் சிறப்புமிக்க உரையும் எழுதிய பெருமை இந்தப் பெருமகனாரையே சாரும்.

தமிழ்ப் புலவர்கள் எல்லாம் தமிழரை இழிவு படுத்தும் புராணக் கருத்துகளைப் பாடிவந்தனர். அதற்கு மாறாக இராவண காவியத்தைச் செய்து தமிழரின் இழிவைப் போக்கிய புலவர் குழந்தை அவர்களைப் பாராட்டுகிறேன். இக் காவியத்தைப் பள்ளிகளில் பாடமாக வைக்கவேண்டும் என்று தந்தை பெரியார் அவர்களே பாராட்டினார்கள் என்றால் புலவர் குழந்தையின் பெருமைக்கு வேறு எந்த மகுடம் தேவை?

-------------------- மயிலாடன் அவர்கள் 1-7-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

வைதிகர்களுக்கு சிறிது சிறிதாகப் புத்தி உதயம் ஆகிறது!

வைதிகர்களின் இறக்கம்

பெண்களுக்குக் கல்வி கற்பிக்கக்கூடாது. ஒரு பெண் தனது கணவனையே தெய்வமாக மதித்துக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். அவர்களுக்குச் சுதந்தரமே கிடையாது, என்று சனாதன தருமத்தின் பேராலும் சாஸ்திரத்தின் பேராலும் கடவுளின் பேராலும், இதுவரை கண்மூடித்தனமாக கூச்சல் போட்டுவந்த வைதிகர்களுக்கு இப்போதுதான் சிறிது சிறிதாகப் புத்தி உதயம் ஆகி வருவதாகத் தெரிகிறது. நமது சுயமரியாதை இயக்கத்தை பார்ப்பனர்களும் அவர்களுடைய கூலிகளும். நாஸ்திக இயக்கம் என்று கூறி பாமர மக்களை ஏமாற்றி வந்தாலும், நமது கொள்கைகளும், தீர்மானங்களும், பிரச்சாரமும் அவர்களை நேர் வழியில் நடக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன என்பதிற் சந்தேகமில்லை. நாம் ஒவ்வொரு கூட்டத்திலும் மகாநாட்டிலும் பெண் மக்களின் பொருளாதார உரிமை, பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலிய நியாயமான உரிமைகட்காக பேசியும் தீர்மானங்கள் செய்தும் போராடி வருவது எல்லோருக்கும் தெரியும். சில நாட்களுக்கு முன்னர் திருவல்லிக்கேணியில் பெரிய பெரிய சாஸ்திரிகள் என்பவர்களும் பண்டிதர் என்பவர்களும் ஒன்று கூடிப் பெண்மக்கள் முன்னேற்றத்திற்கான சில தீர்மானங்கள் செய்திருக்கின்றனர் அவையாவன:

1. அவிபக்தமாகவோ, விபக்தமாகவோ உள்ள நமது இந்துக் குடும்பங்களில் சாஸ்திரியமாக விவாகம் செய்யப்பட்ட பெண்களுக்கு விவாக சமயத்திலிருந்து புருஷனது குடும்பச் சொத்திலும் அவனது சம்பாதனத்திலும் அப்படியே ஸ்திரிகளின் சொத்திலும் அவர்களின் சம்பாதனத்திலும் புருஷர்களுக்குச் சமபாகமும், ஏற்படுத்துவதற்கு வேண்டிய முறையை நமது ஆரியர்கள் யாவரும் சமுகக் கட்டுப்பாட்டின் மூலம் ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.

2. சாஸ்திரியமாக விவாகம் செய்து கொண்ட பெண்ணைத் தகுந்த காரணமின்றித் தள்ளிவிட்டும் மறு விவாகம் செய்பவரைச் சமுகப் பகிஷ்காரம் செய்வதற்கு வேண்டிய கட்டுப்பாட்டை அமைத்துக் கொள்ளுவது அவசியம்.

3. ஒரு குடும்பத்தில் புருஷர்களுக்குப் போலவே ஸ்திரீகளுக்கும் குடும்பச் சொத்தில் பாகம் கிடைக்குமாறு வழி தேட வேண்டும்.

4. ஒரு குடும்பத்தில் ஒரு பிதாவுக்கு ஒரு ஆணும் பெண்ணுமாக இரண்டு குழந்தைகள் பிறந்து பெண்ணுக்குக் கல்யாணமாகி புத்திரனுக்குக் கல்யாணமாவதற்குள் பிதா முதலியோர் இறந்த சில நாளைக்கெல்லாம் அந்த ஆண் பிள்ளை இறப்பானானால் பிதா மூலம் கிடைத்த அவனது சொத்தும் ஸ்வார்ஜித சொத்தும் அவனது தாயாதிகள் அடைவது என்ற கெட்ட முறையை மாற்றி அவனது சகோதரியும், அவளது குழந்தைகளும் அனுபவிக்கும் படிக்கான முறையை ஏற்படுத்தி அதை அனுபவத்தில் கொண்டு வர வேண்டும். ஆகவே இவ்வழியை ஆரியர் யாவரும் சமுகக் கட்டுப்பாடு மூலம் ஏற்படுத்திக் கொள்ளத் தவறினால் அதன் மூலம் ஸ்திரீகளுக்கு நேரும் கஷ்டங்களைப் போக்க வேண்டி நமது காருண்யக் கவர்ன்மெண்டாரை அவ்வழியில் கடுமையான சட்டமியற்றி அதை உடனே அனுஷ்டானத் துக்குக் கொண்டுவந்து ஸ்திரீகளைக் காக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானங்களேயாகும்.

குறுகிய கால அளவில் இவ்வளவு தூரம் பெண் மக்கள் விஷயத்தில் வைதிகர்களின் விடாப்பிடியைத் தளரச் செய்த நமது சுயமரியாதை இயக்கம் இன்னும் கூடிய விரைவில், பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலியவற்றிற்கும் எவ்வித எதிர்ப்பும் நாட்டில் இல்லாமற் செய்து தக்க ஆதரவு தேடிவிடும் என்று உறுதி கூறுகின்றோம்.

------------------------ தந்தை பெரியார் "குடிஅரசு", கட்டுரை - 11.08.1929