Search This Blog

2.8.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - சூடான்-சுரிநாம்-சுவாசிலாந்து




சூடான்

350ஆம் ஆண்டுவரை எகிப்திய நாகரிகமும் நூபிய நாகரிகமும் இணைந்து வளர்ந்த பகுதி சூடான். அரேபியர்கள் வந்து ஆக்ரமித்து இசுலாத்தைப் பரப்பினர். ஆங்கில எகிப்திய சூடான் என்று இப்பகுதி 1898 முதல் 1955 வரை அழைக்கப்பட்டது. 1953இல் இங்கிலாந்தும் எகிப்தும் இந்நாட்டுக்கு சுயாட்சி உரிமை வழங்கின. பிறகு 1956இல் சூடான் விடுதலை அடைந்தது.

ஆப்ரிகாவின் வடபகுதியில், செங்கடல் பகுதியில் எகிப்துக்கும் எமிரேட்சுக்கும் இடையில் உள்ள இந் நாட்டின் பரப்பு 25 லட்சத்து 5 ஆயிரத்து 810 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை 4 கோடி 13 லட்சம். சன்னி முசுலிம்கள் 70 விழுக்காடு. உள்ளூர் பழமைவாத நம்பிக்கை கொண்டோர் 25 விழுக்காடு. அரபி மொழி ஆட்சி மொழி. 61 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர்கள்.

1-.1-.1956 இல் விடுதலை நாள். குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவராக உள்ளார். ராணுவத் தளபதிதான் குடியரசுத் தலைவராக உள்ளார். 19 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்.

சுரிநாம்

1651ஆம் ஆண்டில்தான் அய்ரோப்பியர்கள் இந்நாட்டில் தோட்டப் பயிர்களை வளர்த்தனர். 1667இல் டச்சு நாட்டுக் கடற்படை சுரிநாமைக் கைப்பற்றியது. 1975ஆம் ஆண்டு வரை ஆண்டு வந்தது. 25-.11.-1975இல் நாட்டுக்கு ஆலந்து விடுதலை அளித்தது.

வடஅமெரிக்க நாடான சுரிநாமின் பரப்பு 1 லட்சத்து 63 ஆயிரத்து 270 சதுர கி.மீ. மக்கள்தொகை 4 லட்சத்து 40 ஆயிரம். மக்களில் இந்துக்கள் 27 விழுக்காடு. இசுலாமியர்கள் 20 விழுக்காடு. ரோமன் கத்தோலிக்கர் 23 விழுக்காடு. புரொடஸ்டன்ட் கிறித்துவர் 25 விழுக்காடு.

டச்சு மொழியும் இங்கிலீசும் பேசும் மக்களில் 88 விழுக்காடு கல்வியறிவு பெற்றவர்கள். குடியரசுத் தலைவர்தான் ஆட்சித் தலைவர். 10 விழுக்காடுப் பேர் வேலை கிட்டாதோர். 301 கி.மீ. தொலைவு மட்டுமே இருப்புப்பாதை உண்டு.

சுவாசிலாந்து

மொசம்பிக் நாட்டிலிருந்து வெளியேறிய பாண்ட்டு இனக் குழுவினர் 18ஆம் நூற்றாண்டில் குடியேறிய நாடு சுவாசிலாந்து. ஜுலு குழு மக்களிடம் ஏற்பட்ட சிக்கலான கலவரங்களின் விளைவாக மன்னர் பிரிட்டிஷ் அரசுக்குப் பாதுகாப்பு கோரி 1840இல் கேட்டுக் கொண்டார். 1881இல் நாட்டுக்கு விடுதலை அளிப்பதாக பிரிட்டிஷ் அரசு கூறியது. தென் ஆப்ரிகாவின் பாதுகாப்பில் இருந்த சுவாதிலாந்தைத் தன் பாதுகாப்பில் 1902 இல் எடுத்துக் கொண்ட பிரிட்டன் 1968 இல் சுவாசிலாந்துக்கு விடுதலை அளித்தது.

தென் ஆப்ரிக நாடான சுவாசிலாந்தின் பரப்பளவு 17 ஆயிரத்து 363 சதுர கி.மீ. மக்கள் தொகை 11 லட்சத்து 50 ஆயிரம். பழைய நம்பிக்கைகளுடன் கிறித்துவ நம்பிக்கையும் கலந்த ஜியானிய மதத்தினர் 40 விழுக்காடு. ரோமன் கத்தோலிக்கர் 20 விழுக்காடு, முசுலிம்கள் 10 விழுக்காடு உள்ளனர்.

இங்கிலீஷ்தான் ஆட்சி மொழி. சிஸ்வாடி எனும் ஆப்ரிக்க மொழியும் ஆட்சி மொழியாக உள்ளது. மக்களில் 82 விழுக்காடு மட்டுமே கல்வி அறிவு பெற்றவர்கள்.

மன்னராட்சி நடக்கும் இந்நாட்டின் விடுதலை நாள் 6.9.1968. பிரதம மந்திரி ஆட்சிப் பொறுப்பை நிருவகிக்கிறார். 69 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 40 விழுக்காட்டினர் வேலை கிட்டாமல் உள்ளனர். 301 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே இருப்புப் பாதை உண்டு.

------------------நன்றி:-"விடுதலை" 1-8-2009

பொது இடங்களில் மதச் சின்னங்கள் அகற்றப்படுவது மிகவும் சரியான நடவடிக்கையே!


சபாஷ், சரியான தீர்ப்பு

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் மிகச் சரியான மிக உயர்ந்த தீர்ப்பினை அளித்துள்ளனர். அதன்படி பொது இடங்களில் எந்தவித ஆக்கிரமிப்புகளையும் மேற்கொள்ளக்கூடாது. கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள் போன்ற மத வழிபாட்டுச் சின்னங்களையும் நிறுவக் கூடாது. அப்படி நிறுவினால் அவற்றை உடனடியாக அகற்றிவிடலாம் (இடிக்கலாம்) என்று திட்டவட்டமாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மத்திய அரசின் சுற்றறிக்கைகளும், மாநில அரசின் ஆணைகளும் இருக்கத்தான் செய்கின்றன. தமிழ்நாட்டில்கூட மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நீதியரசர் பி.டி. தினகரன் அவர்கள் நடைபாதைக் கோயில்களை இடித்துத் தள்ள உத்தரவு பிறப்பித்தார். மேல்முறையீட்டில் இரு நீதிபதிகள் அதற்குத் தடையாணை அளித்துவிட்டனர். அது இல்லாதிருந்தால், ஆக்கிரமிப்புகளை அகற்றிட அன்று எடுக்கப்பட்ட தீவிரமான நடவடிக்கைகள் சிறப்பாக செயல்பட்டிருக்கும்.

இப்பொழுது தீர்ப்பு அளித்திருப்பது உச்சநீதிமன்றம் என்பதால், கண்களை மூடிக்கொண்டு பொதுமக்கள் நலன் கண்ணோட்டத்திலும் ஆங்காங்கே மதவாதப் பிரச்சினைகளுக்கு இடமில்லாத தன்மையிலும், பொது இடங்களில் மதச் சின்னங்கள் அகற்றப்படுவது மிகவும் சரியான நடவடிக்கையே ஆகும்.

நடைபாதைகளில் இருந்த சில்லறைக் கடைகள் அகற்றப்பட்டன; குடியிருப்புகளும் இடிக்கப்பட்டன. ஆனால், கோயில்கள் மட்டும் ஆங்காங்கே செங்குத்தாக இன்னும் நின்றுகொண்டிருக்கின்றன. பார்க்கும்பொழுதே பளிச்சென்று தெரிகிறது. இது வேண்டுமென்றே விடுபட்டுள்ளது. விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று பொதுமக்களே, பக்திமான்கள்கூட விமர்சனம் செய்வதைக் கேட்க முடிகிறது.

தொடக்கத்தில் சிறிதாக ஒரு செங்கல்லை நட்டு வைப்பார்கள். அதன்பின் அதன்மேல் குங்குமத்தைத் தடவி, பூவையும் சாத்துவார்கள். நாளடைவில் அது ஒரு சிறிய கோயிலாகும். கோயிலின்முன் கண்டிப்பாக உண்டியல் வந்துவிடும். அதன்பின் கோயிலை எடுத்துக்கட்ட நிதி வசூல், குடமுழுக்கு இவ்வளவும் நடந்த பிறகு திடீரென்று புரோகிதப் பார்ப்பான் வந்து குதித்துவிடுவான்.

நடைபாதைகளில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு நடைபாதைக் கோயிலின் முன் பக்தர்கள் கூட்டம்.

இந்தக் கோயில்கள் எல்லாம் இந்து அறநிலையத் துறையின்கீழ் வராதவை ஆகம அங்கீகாரமும் கிடையாது.

அன்றாட உண்டியல் வசூல் கல்லா கட்டப்படும். இரவு நேரங்களில் அங்கெல்லாம் கும்மாளம்தான். சமூகச் சீரழிவுக் கலாச்சாரங்கள் எல்லாம் அரங்கேற்றம்தான்.

சாலைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. மக்கள் பெருக்கம், வாகனங்கள் எண்ணிக்கையில் அதிகம், இவற்றின் காரணமாக சென்னை போன்ற பெருநகரங்களில் மக்கள் நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகளைக் கடப்பதற்கு வெகுநேரம் காத்துக்கொண்டு இருக்கவேண்டியுள்ளது.

இந்த நிலையில், நடைபாதைகளில் கோயில்கள் என்றால், வழிபாடு என்றால் அது பொதுமக்களுக்குத் தொல்லையான ஒன்றுதானே.

விபத்துகள் அதிகம் நடப்பதற்கும் காரணமாகிவிடுகிறது. புறநகர்ப் பகுதிகளில் சாலையோரக் கோயில்கள் சில விளம்பரம் பெற்றவை. பேருந்துகள் அந்த வழியாகச் செல்லும்போது பேருந்தை நிறுத்தி, ஓட்டுநரும், நடத்துநரும் கீழே இறங்கி அந்தச் சாமிக்கு ஒரு வணக்கம் போட்டு வருகின்றனர். பயணிகளும் கீழே இறங்கி கோயில் உண்டியலில் பணம் போடுவதும் உண்டு. அவசரத்தில் ஊர் போய்ச் சேரவேண்டிய மற்ற பயணிகளுக்கு இதனால் நேர இழப்பு வேறு.

எல்லா வகைகளிலும் இடையூறாக இருக்கக் கூடிய, பொது இடத்தில் எழுப்பப்படும் இத்தகு கட்டடங்கள் உடனுக்குடன் அவ்வப்பொழுது இடித்துத் தள்ளப்படவேண்டும். இதனை மாநகராட்சியோ, நகராட்சியோ, ஊராட்சியோ சரிவர செய்ய ஆரம்பித்தால், அதன்பின் பொது இடத்தில் கோயிலோ, வேறு ஆக்கிரமிப்புகளோ எழுப்பும் எண்ணமும் மக்களிடமிருந்து அகன்றுவிடும்.

சிறப்பான தீர்ப்பினை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம். நீதித்துறை கூறிவிட்டது நிருவாகத் துறை செயல்படட்டும்!

------------------ நன்றி:-"விடுதலை" 1-8-2009

1.8.09

பகவான் ரமணரிஷி சொத்தோ உறவினருக்கு- தந்தை பெரியாரின் சொத்தோ பொதுமக்களுக்கு






பகவான் ரமணரிஷி தமது சொத்துகளைத் தம்பிக்கு எழுதி வைத்தார். தந்தை பெரியார் அவர்களோ தம்மிடம் சேர்ந்த அத்துணை சொத்துகளையும் மீண்டும் பொது மக்களுக்கே சொந்தம் என்று பல அறக்கட்டளை நிறுவனங்களை உருவாக்கினார் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார். உரத்தநாடு வட்டம் கண்ணுகுடி மேற்கில் 18.7.2009அன்று நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நிலவில் மனிதன்

ஒரு காலத்திலே காற்றை வாயுபகவான் என்று சொல்லிக்கொண்டிருந்தோம். இப்பொழுது வாயுபகவானை கன்ட்ரோலில் கொண்டு வந்து வைத்தோம். ஃபேன் ஸ்லோவிலே சுற்றச் சொன்னால் ஸ்லோவிலேயே சுற்ற வேண்டும். வேகமாக்க சுவிட்சைத் திருப்பினால் வேகமாகச் சுழல வேண்டும்.

மனிதனுடைய அறிவு ஆற்றல் வளர்ந்திருக்கிற இடத்திலே, சூரியன் சந்திரன், பூமி மூன்றும் சேர்ந்து ஒரே நேர்கோட்டில் வந்தால் கிரகணம் என்று சொல்லுகிறார்கள். இது ஒரு சாதாரண நிகழ்வு. வானவியல் துறையிலே இது ஏன் நிகழுகிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். மனிதன் அடுத்தபடியாக செவ்வாய் மண்டலத்திற்கே இறங்கப் போகிறான்.

நிலா, நிலா ஓடிவா என்று நாம் கூப்பிட்டுக்கொண்டு வந்ததற்குப் பதிலாக நம்மாளே போயிருக்கிறான்.

ஸ்கைலாப் பூமியைநோக்கி வந்த பொழுது

அமெரிக்காகாரன் போன காலத்தைப் பார்த்து நாம் வியந்தோம். இன்றைக்கு சந்திரயான் மயில்சாமி அண்ணாதுரையைப் பாராட்டுகின்றோம். இவ்வளவையும் நம்மாள் படித்துவிட்டு பெரிய சுனாமி வரப்போகிறது, புயல் வரப்போகிறது. எல்லோருக்கும் ஆபத்து, உலகத்திற்கு மிகப் பெரிய கெடுதி வரப்போகிறது என்று தெரிந்தவுடனே எல்லோரும் நடுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். எம்.ஏ படித்தவன், எம்.எஸ்.சி படித்தவன், பி.எஸ்.சி. படித்தவன் டாக்டரேட் படித்தவன் எல்லாம் படித்து என்ன செய்வது?

முன்பு அப்படித்தான் அஷ்ட கிரகங்கள் சேர்ந்தவுடனே உலகுக்கு ஆபத்து என்று சொன்னான். ஸ்கைலாப் உடைந்து போய் மேலே இருந்து கீழே வருகிறது. எல்லா மக்களும் செத்துப் போய் விடுவார்கள் என்று நினைத்தவுடனே இருக்கிற கோழி, ஆடுகளை எல்லாம் அடித்து சாப்பிட்டு விடுவோம். ஏனென்றால் அடுத்த நாளைக்கு இருக்கப் போகிறோமோ என்று தெரியவில்லையே. இப்படி பயந்தவர்கள் எல்லாம் உண்டு. ஒரு பெரிய பயத்தை உண்டாக்கிவிட்டார்கள். இந்த அறியாமைக்கு மூலகாரணமே பயம்தான்.

அறிவியலை சொல்லிக் கொடுக்கக் கூடிய ஆசிரியர்

கடவுள் எந்த இடத்தில் பிறந்தார் என்றால் எங்கே அச்சம் இருக்கிறதோ, எங்கே பயம் இருக்கிறதோ, எங்கே ஆசை இருக்கிறதோ, எங்கே பேராசை இருக்கிறதோ அங்குதான் கடவுளுக்கு வேலை.

நாங்கள் அதைப் பற்றியே கவலைப்படாதவர்கள் என்ன கெட்டு போய்விட்டோம். கடவுளை மட்டுமே நம்பிக்கொண்டு டாக்டரை நம்பாத காலத்தில் எட்டு வயதில், பத்து வயதில் இறந்து போனார்கள். இன்றைக்கு நம்ம ஊரிலேயே சராசரி வயது இந்தியாவிலேயே 69 வயது, அமெரிக்காவிலே, ரஷ்யாவிலே 85, 90 வயதைத் தாண்டி வாழ்கிறார்களே! 95 வயதைத் தாண்டி வாழ்கிறார்களே!

பட்டுக்கோட்டையில் எங்களுடைய கழகத் தோழர் மாமுண்டியார் என்று அழைக்கப்படக்கூடிய இராமாமிர்தம் அவர்கள் யாருக்காவது சந்தேகமிருந்தால் பாருங்கள். இப்பொழுதுதான் 97 வயதைக் கொண்டாடியிருக்கின்றார்கள். முந்தாநாள் தான் அவரைப் பார்த்தோம். கடவுள் இல்லை என்று சொன்னதால் என்ன ஆனது?

இதை ஏற்காகச் சொல்லுகிறோம் என்றால் மூடநம்பிக்கையைக் கொண்டு வந்து நம்முடைய மூளையில் ரொம்ப பத்திரமாக ஏற்றிவிட்டான் கிரகணநேரத்திற்குள் சாப்பிடக்கூடாது, ஆபத்து. வெளியே வரக்கூடாது என்று சொல்கிறார்கள்.

விஞ்ஞானம் சொல்லிக் கொடுக்கக்கூடிய பேராசிரியர் அறிவியலை சொல்லிக்கொடுத்து விட்டு, பாம்பு போய் நிலாவைக் கவ்விப்பிடிக்கிறது என்று சொல்கின்றார்கள். அதனால் ஆபத்து. ஆகவே குளிக்க வேண்டும் முதலில். அதற்குப் பரிகாரம் என்று கீழே போடுகிறான்.

நம்புங்கள் நாராயணனை!

இதைவிட நம்புங்கள் நாராயணன் என்று அதற்குப் பெயர் வேறு வைக்கின்றான். நீங்கள் உடனே பிரார்த்தனை பண்ண வேண்டும். பிரார்த்தனை பண்ணினால் கஷ்டம் தீரும் என்று மூடநம்பிக்கையைப் பயன்படுத்தக் கூடிய நிலையிலே இருக்கிறார்கள்.

ஆனால் அதே நேரத்திலே இன்னொரு செய்தியைப் போடுகிறார்கள். கோவிலே மூடப்பட்டது

திருப்பதி கோவில் கிரகணத்தின் பொழுது மூடப்படும். பழனியில் கோயில் மூடப்படும். கிரகணத்தைப் பார்த்து கடவுளே பயந்து கொண்டிருக்கின்றார். கடவுளே கதவை மூடிக்கொண்டால் நீ எப்படி அப்ளிகேசன் போட்டு நீ எப்படி தப்பிக்க முடியும்? அறிவு பூர்வமாக, வாத பூர்வமாக எண்ணிப் பார்க்க வேண்டாமா?

நாங்கள் எதையும் பேசிவிட்டுப் போகிறவர்கள் அல்லர். நாளைய விடுதலையில் பார்த்தால் ஒரு செய்தி இருக்கும். சூரிய கிரகணத்தின் பொழுது சாப்பிட்டால் கேடு விளையும் என்று ஒரு மூட நம்பிக்கையைப் பரப்பினார்கள். நான் அப்பொழுது திருச்சியிலே இருந்தேன்.

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அய்ந்தாயிரம் பிள்ளைகள் படிக்கிறார்கள். பெரியார் கல்வி வளாகத்தில் வெறும் குழந்தைகள் படிப்புக்கு உள்ளே நுழைந்தால், அதே நேரத்தில் பி.எச்டி. வரை படித்துவிட்டு வரலாம்.

எல்லா படிப்பும் பெரியார் கல்வி வளாகத்தில் இருக்கிறது. அதில் அய்ந்தாயிரம், ஆறாயிரம் பெண்கள் படிக்கிறார்கள். கொஞ்சம் ஆண் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

நான் சூரிய கிரகணம் அன்றைக்கு எதிர்பாராமல் திருச்சியிலே இருந்தேன்.

அடுத்த நாள் மாலை கிரகணம் பற்றி செய்திகள் வெளிவந்தன. முன்னதாக சாப்பிட வேண்டும், பின்னதாக சாப்பிட வேண்டும் என்று இப்படி மூடநம்பிக்கையைப் பரப்பியிருந்தார்கள். விஞ்ஞானத்தைப் படித்தால் போதாது.

கிரகண நேரத்தில் சாப்பிட்டோம்


நாம் எல்லோரும் சேர்ந்து எது கிரகண நேரமோ அந்த நேரத்தில் திறந்த வெளி அரங்கத்தில் எல்லோரும் அமர்ந்து சிற்றுண்டியை சேர்ந்து சாப்பிடுவோம்.

அடுத்த நாள் காலையிலே யாருக்கு என்ன வயிற்றுக்கோளாறு ஏற்படுகிறது என்று சொல்லுங்கள். ஏதாவது அஜீரணம் ஆகிறதா? சொல்லுங்கள் என்று சொன்னோம்.

அன்று மாலை நேரத்தில் ஏற்பட்ட கிரகணத்தின் பொழுது நாங்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் எல்லோரும் உட்கார்ந்து பெரியவிருந்து வைத்த மாதிரி நடத்திக்காட்டினோம்.

அந்த நிகழ்ச்சிக்கு எல்லா செய்தியாளர்களையும் கூப்பிட்டு கிரகணம் என்பது மூடத்தனம் அதிலே வந்து இதைச் செய்யக் கூடாது. அதைச் செய்யக் கூடாது. குளிக்க வேண்டும் என்று சொல்லுவது தேவையில்லாத ஒன்று என்பதை எடுத்து தெளிவாகச் சொன்னோம்.

அதே மாதிரி வருகிற 22ஆம் தேதி அன்றும் பெரியார் கல்வி நிறுவனங்களின் சார்பில் கிரகண மூடநம்பிக்கையை முறியடித்து அந்த நேரத்தில் எல்லோரும் உண்ணக் கூடிய சிற்றுண் டியைக் கொடுங்கள் என்று சொன்னோம்.

கிரகணத்தின் பொழுது சாப்பிட்டால் ஒன்றுமில்லை என்பதை நடைமுறையில் காட்டுங்கள். அந்த பயம் தெளியட்டும் என்று சொன்னோம். பெரியார் திடலில் என் தலைமையில் அந்த மூடநம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்சி நடக்கும் என்று சொல்லியிருக்கின்றோம்.

மூளைக்கு விலங்கு போட்டு

எதற்காகச் சொல்கிறோம் என்று சொன்னால் சின்னச் சின்னச் செய்திகளில் கூட நமது மூளைக்கு விலங்கு போட்டு விட்டான். அய்யோ பிசாசா! என்று சொல்லுகின்றான், பேய் என்று சொல்லுகின்றான்.

இப்பொழுது பேய், பிசாசு என்பதெல்லாம் இல்லையே. சுடுகாடு இருக்கின்ற இடங்களை எல்லாம் ஆக்கிரமித்து இப்பொழுது எங்கு பார்த்தாலும் வீடுகட்டுகின்றான்.

அப்பொழுது பேயை, பிசாசைப் பற்றி இவன் நம்புவதில்லை.

அனைவரும் உறவினர்

ஆகவே, மனிதனுக்குள்ள ஒரு அறியாமையைப் போக்கக் கூடிய பகுத்தறிவுப் பணியை செய்த தலைவர் தந்தை பெரியார் அவர்கள். அதோ சிலையாக நிற்கிறாரே, அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் பிறந்த காரணத்தால்தான் இந்தத் துணிச்சல் நமக்கு வருகிறது.

அந்தத் துணிச்சல் இருக்கின்ற காரணத்தால்தான் மனிதன் வெற்றி பெறக் கூடிய வாய்ப்புக்கும், சூழ்நிலைக்கும் வந்திருக்கின்றான். எனவே சமூக நீதி, இட ஒதுக்கீடு என்று சொன்னாலும், அனைவருக்கும் கல்வி என்று சொன்னாலும், ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று ஆண் பெண் பேதமிருக்கக் கூடாது என்று சமுதாயத்தை வலியுறுத்தியவர் அறிவு ஆசான் தான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்.

எனவே, அப்படிப்பட்ட தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய இந்தப் பணியை, சிறப்பை நாம் ஏற்று தந்தை பெரியார் தொண்டு செய்து பழுத்தபழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகுதொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் பார் என்று புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்களே அப்படிப்பட்ட அந்தத் தொண்டறத்தின் காரணமாகத்தான் தந்தை பெரியார் அவர்கள் இவ்வளவு பெரிய வாய்ப்பை உருவாக்கினார்கள்.
இங்கே சொன்னார்கள்.

இந்த வட்டாரத்திலேயிருந்து பெரியாருடைய கல்வி நிறுவனங்களிலே படிக்கக் கூடிய பிள்ளைகள், படித்த பிள்ளைகள் ஏராளம் இருக்கிறார்கள் என்று எங்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. ஒரு பார்ப்பனர், வெங்கட்ட ரமணர் என்பது அவருடைய பெயர்; அவர் பகவான் ரமணரிஷியானார்.

பார்ப்பனர் ரமணரிஷி

திருவண்ணாமலையில் மயக்கம் போட்டு விழுந்தார். உடனே சாமியார் என்று சொல்லி விட்டான். அதன் பிறகு மரத்துக்கடியில் கோவணம் கட்டினார். சொத்து சேர்ந்தது. நம்முடைய நாட்டிலே சொத்து சேர்ப்பதற்கு சுலபமான வழி சாமியார் ஆவது.

திருவண்ணாமலையில் ரமணரிஷி ஆசிரமம் நடத்தினார். சொத்துகள் ஏராளம் குவிந்தன. அதன் பிறகு அவனுடைய சொந்தக்காரர் ஒவ்வொருவராக வந்தார்கள். இந்த ரமண ரிஷி பார்ப்பனரிடம் பெருமாள் சாமி என்ற பர்ப்பனரல்லாத சீடரை வெளியே போ என்று சொன்னார். அவர் வழக்குப் போட்டு இன்னமும் வழக்கு நடக்கிறது. ரமணரிஷி வழக்க 35, 40 வருடமாக நடக்கிறது. இந்த சொத்துகள் பூராவுமே என்னுடைய சொந்த சொத்து. அதனால் என்னுடைய குடும்பத்திற்கு என் தம்பிக்கு என்று சொன்னார். நான் உயில் எழுதி வைத்துவிட்டேன்.

--------------------தொடரும் .... "விடுதலை" 1-8-2009

இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? பாப்பான், தமிழன் என்றெல்லாம் பிரிப்பது சரியா?




ஆவணி அவிட்டம்!

இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? நீங்கதான் தேவையில்லாமல் பாப்பான், தமிழன் என்றெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க, இதெல்லாம் அவுட்டேட் என்று கூறும் படித்த மேதாவிகள் பார்ப்பனர் அல்லாதாரில் உண்டு. கெட்டியாக மூடிக்கொண்டிருக்கும் இந்த அறியாமைக் கண்களைத் திறக்க இதோ ஒரு செய்தி. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் திரு. வைத்தியநாதய்யரை ஆசிரியராகக் கொண்ட தினமணி (1.8.2009, பக்கம் 4) ஏட்டில் இடம்பெற்றுள்ள சேதிதான்.

ஆவணி அவிட்டத் தினத்தன்று (ஆகஸ்ட் 5) இணைய தளம் மூலம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூல் மாற்றிக் கொள்ளும் வசதியை டிரெடிஷனல் விஸ்டம் என்ற அமைப்புச் செய்துள்ளது.

www.traditionalwisdom.in என்ற இணைய தளம்மூலம், கட்டணம் ஏதுமின்றி, வெளிநாட்டில் உள்ளோரும் அன்றைய தினம் வேத மந்திரங்களைக் கேட்டு பூணூலை மாற்றிக் கொள்ளலாம். அதற்கான நேரங்கள் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்கள் அறிய... (ஒரு முகவரி கொடுக்கப்பட்டுள்ளது).

..... ..... .....

இதற்குப் பிறகும் இப்பல்லாம் யார் சார் ஜாதியைப் பாக்குறாங்க? என்று எவராவது மே(ல்)தாவித்தனமாகச் சொல்வார்களே யானால் அவர்களுக்கு ஆப்புக் கொடுக்க இதனைக் கத்தரித்து சட்டைப் பைக்குள்ளேயே தயாராக வைத்துக் கொள்ளலாம்.

பூணூலை மாற்றுவது எதற்காக? அழுக்கடைந்த சட்டையைச் சலவை செய்து மாற்றிக்கொள்வது போன்றதா இது?

அதுவரை பார்ப்பனச் சிறுவனாக இருந்தவன், துவிஜாதியாக இரு பிறப்பாளனாக பிராமணனாக ஆக்கப்படுவதற்குப் பெயர்தான் பூணூல் கல்யாணம். வருடந்தோறும் அதனைப் புதுப்பித்துக் கொள்வதற்குத்தான் இந்த ஆவணி அவிட்டம்.


இன்னும் சில அறிவு ஜீவிகள், ஏன் சார் நம்ப ஆசாரி, பத்தர், செட்டியார் எல்லாம்கூட பூணூல் போட்டுக் கொள்கிறார்களே, பார்ப்பனர்களை மட்டும் குறை சொல்லலாமா? என்று கேட்பதுண்டு.

இது புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதைதான். சாஸ்திரத்தில் சூத்திரர்கள் பூணூல் போட இடம் இல்லையே.

சூத்திரன் பிராமண ஜாதிக் குறியைபூணூல் முதலியவற்றைத் தரித்தால் அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டிவிட வேண்டும் (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 224) என்கிறது மனுதர்மம்.

பார்ப்பனர்கள் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் என்று ஒரு நாளைத் தேர்ந்தெடுத்து, பூணூல் மாட்டுவது புதுப்பிப்பது என்பது நம்மைச் சூத்திரன் என்று இழிவுபடுத்தும் அதிகாரப்பூர்வமான ஏற்பாடு என்பதை சற்சூத்திரர்கள் அறிவார்களாக!

"தமிழர்களே, உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய பார்ப்பானைப் பிராமணன் என்று அழையாதீர்!"

- தந்தை பெரியார்
.

--------------------- மயிலாடன் அவர்கள் 1-8-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை

பெரியார் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ய வீரமணி முட்டுக்கட்டை போடுகிறாரா?


எப்படி சந்திக்கவேண்டுமோ அப்படியே சந்திப்போம்!

தந்தை பெரியார் எழுத்துகளை வெளியிடுவது குறித்து வழக்கு ஒன்றில் கடந்த ஜூலை 27 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சந்துரு அவர்கள், பெரியார் எழுத்துகளை யாரும் வெளியிடலாம். அதற்குத் தடையில்லை என்று தீர்ப்பு ஒன்றினை வழங்கினார்.

அவ்வளவுதான். எட்டுப் பத்தி தலைப்பிட்டு செய்தி வெளியிட்டது ஒரு மாலை ஏடு. சில அவசரக் குடுக்கைகளோ தயாராக அடித்து வைத்திருந்த சுவரொட்டிகளை ஒட்டி அர்த்தராத்திரியில் குடைபிடித்து ஆடித் தீர்த்தன.

ஒரு நாள் இடைவெளியில் ஜூலை 29 ஆம் தேதி அதே உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் நீதிபதி திரு. சந்துரு அளித்த தீர்ப்புக்கு மாறான தீர்ப்பினை வழங்கியது.

நாணயமான பத்திரிகையாளர்களாக இருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்?

27 ஆம் தேதி தீர்ப்புக்குக் கொடுத்த அதே முக்கியத்துவத்தை இதற்கும் கொடுத்திருக்கவேண்டும் அல்லவா?

அதுதான் இல்லை. தலைப்பு செய்தி வெளியிட்ட மாலை ஏடோ உள்பக்கத்தில் ஒப்புக்குச் செய்தியை வெளியிட்டது. அதாவது உண்மையான செய்தியா என்றால், தலைகீழான புரட்டல் செய்தி. வீரமணியும் பெரியார் எழுத்துகளை வெளியிட முடியாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டது. இதன்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கேகூடத் தொடுக்க முடியும். திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் பெருந்தன்மை அவர்களை மன்னித்துவிட்டிருக்கிறது.

புர்ரட்சி பேசும் மக்களுக்கும், தங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாத ஒரு களை கழகமோ பார்ப்பனியத்தனமாக செய்தியை வெளியிட்டது_

டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அளித்த தீர்ப்பைப் புரிந்துகொள்ளும் சாதாரண அறிவுகூட இல்லாமல், வழக்கில் வீரமணி தோற்றுவிட்டதாகவும், இனி அவர் உச்சநீதிமன்றம்தான் செல்லவேண்டும் என்றும் இணைய தளத்தில் சில்லுக்கோடு விளையாடிக் கொண்டிருக்கிறது.


தீர்ப்பு ஆங்கிலத்தில் அளிக்கப்பட்டதால், புரிந்துகொள்ள முடியாத முட்டாள்தனத்தில் அவ்வாறு எழுதி இருக்கவேண்டும். அல்லது ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டு என்ற ரீதியில் செயல்பட்டு இருக்கவேண்டும்.

பொய்யைச் சொல்லி பொழுதைக் கழிப்பதும் சீ ஒரு பிழைப்பா?

தினமணி அய்யர்வாள் ஒரு கார்ட்டூன் போட்டார் என்றால், பார்ப்பனர்களின் தொங்கு சதையாக இருக்கும் குமுதத்தால் சும்மா இருக்க முடியுமா?

சாலையில் நிர்வாணமாக ஒரு பெண் நடந்து சென்றால் அது சட்டப்படி குற்றம். ஆனால், அதே வகையில் குமுதம் ஒவ்வொரு வாரமும் வெளிவருகிறதே அது குற்றமாக சட்டத்தின்முன் தெரியாமல் போனது ஏனோ?

பெரியாரை வீரமணி சங்கிலியால் தளைப்படுத்தியிருந்தாராம், நீதிமன்றத் தீர்ப்பு வீரமணியிடமிருந்து பெரியாரை விடுவித்துவிட்டதாம்.

சரி, இப்பொழுது வேறு வகையாக தீர்ப்பு வெளிவந்துவிட்டதே பெரியாரை வீரமணி மீண்டும் சிறைப்படுத்தி விட்டார் என்று கார்ட்டூன் போடப் போகிறதோ!

தந்தை பெரியாரை யாரும் சிறைப்படுத்த முடியாது என்கிற பாலபாடம் கூட தெரியாத பைத்தியக்காரர்கள் எல்லாம் பத்திரிகை நடத்தினால் இப்படித்தான்!

திட்டமிட்டு ஒரு விஷமப் பிரச்சாரம் நாட்டில் கிளப்பி விடப்பட்டுள்ளது. தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யக்கூடாது, அப்படிப் பிரச்சாரம் செய்ய வீரமணி முட்டுக்கட்டை போடுகிறார் என்பது போன்ற ஒரு திட்டமிட்ட பாமரத்தனமான பிரச்சாரத்தை கிளப்பிவிட்டுள்ளனர்.

அது உண்மையா? பெரியார் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்த யாரை, அல்லது எந்த அமைப்பை வீரமணி தடுத்தார்? எங்கே போய் குறுக்கே நின்றார்?

பெரியாரைப்பற்றி எத்தனையோ கூட்டங்கள் போடலாம்; நூல்களை எழுதலாம் செய்யவேண்டியதுதானே! அதனை விட்டுவிட்டு தந்தை பெரியார் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட முறையில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்குச் சொந்தமான வெளியீடுகளை நாங்கள் வெளியிடுவோம் என்று வீண் வம்புக்கு வருவதுதான் பெரியார் கொள்கையைப் பரப்பும் முறையா?

மோதல் போக்கை மேற்கொண்டு விளம்பரம் தேடுவதுதான் பெரியார் கொள்கைப் பிரச்சாரமா? வீண் வம்புக்கு வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதுதான் பெரியார் பணி முடிக்கும் பணியா?

இதற்கு முன்பேகூட பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்ட சில நூல்கள் பெரியார் திராவிடர் கழகத்தின் பெயரில் வெளியிடப்பட்டுள்ளன. இது அறிவு நாணயம்தானா? இதுதான் தந்தை பெரியார் கற்றுத் தந்த பொது ஒழுக்கமா?

கொள்கையில் ஓட்டை விழுந்தால்கூடப் பரவாயில்லை. ஆனால், நாணயத்தில், ஒழுக்கத்தில் தவறு இருக்கக்கூடாது. அதுதான் ஒரு கழகத்துக்கு முக்கியமான பலம் (விடுதலை, 11.10.1964) என்று சொன்னவர் தந்தை பெரியார். இந்த அடிப்படை ஒழுக்கம் இல்லாதவர்கள் எல்லாம் பெரியார் பெயரில் கழகம் நடத்த முயலலாமா?

தந்தை பெரியார் கொள்கைகள் பரவவேண்டும் என்ற உண்மையான அக்கறையிலா தினமணிகள் இந்தப் பிரச்சினையை ஊதிப் பறக்கவிட முயற்சிக்கின்றன?


அல்ல... அல்ல... பெரியாருக்குப் பிறகு அவரின் கொள்கையும், அவரது இயக்கமும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று எண்ணி மனப்பால் குடித்துக் கிடந்தவர்களுக்கு, அதிர்ச்சியாக, இந்த வீரமணி பலமான கட்டுமானத்துடன், திட்டவட்டமான முறையில் அறிவியல் சாதனங்களை எல்லாம் பயன்படுத்தி, தமிழ்நாடு அளவில் மட்டுமல்ல, உலகளவில் கொண்டு சென்று கொண்டிருக்கிறாரே என்ற ஆத்திரம்தான் இதற்கெல்லாம் காரணம்.

பெரியார் கொள்கை தாங்கும் நூல்களை தமிழில் மட்டுமல்ல; ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழிகளில் எல்லாம் வெளியிட்டுக் கொண்டுள்ளாரே... என்ற கோபம் அவர்களின் குரல் வளையை அவர்களே நெரித்துக்கொள்ளும் ஒரு நிலைக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டது.

விடுதலை எட்டுப் பக்கம் ஆனதும், இரு இடங்களில் பதிப்பு என்று ஆக்கப்பட்டதும்,

பெரியாருக்குப் பின் உண்மை மாதம் இருமுறை ஆனதும்,

தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆங்கில இதழ் மீண்டும் கொண்டு வரப்பட்டதும்,

குழந்தைகளுக்குப் பெரியார் பிஞ்சு இதழ் ஆரம்பிக்கப்பட்டதும்,

பாமர மக்களும் தந்தை பெரியார்பற்றி அறிந்துகொள்வதற்குப் பெரியார் திரைப்படம் எடுக்கப்பட்டதும்,

பெரியார் வலைக்காட்சி தொடங்கப்பட்டதும்,

முந்நூறுக்கும்மேல் பகுத்தறிவு நூல்களை மலிவு விலையில் வெளியிட்டதும்,

அதனைப் பரப்பிட பெரியார் நகர்வுப் புத்தகச் சந்தை ஏற்பாடும்,

புத்தகக் கண்காட்சிகள் நடப்பும், பெரியார் நூலகம், ஆய்வகம் நவீன முறையில் ஓங்கி வளர்க்கப்பட்டு இருப்பதும்,

தமது சொந்த 10,277 நூல்களை பெரியார் நூலகம் ஆய்வகத்துக்கு தமிழர் தலைவர் வழங்கியதும்,

வெளிநாடுகளில் இருந்தெல்லாம் தந்தை பெரியார் பற்றியும், திராவிடர் இயக்கம்பற்றியும் ஆய்வுகளை மேற்கொள்ள வசதி செய்து கொடுக்கப்பட்டு இருப்பதும்,

இந்தியாவின் தலைநகரிலேயே பெரியார் மய்யம் எழுப்பப்பட்டு இருப்பதும்,

உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரியார் பன்னாட்டு மய்யம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதும்,

உலக மனிதநேய அமைப்பில் திராவிடர் கழகத்தை அங்கம் வகிக்கச் செய்திருப்பதும்,

பெரியார் பெயரில் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டு, அதில் பெரியார் சிந்தனைகள் என்ற தனித்துறை உருவாக்கப்பட்டு சான்றிதழ் முதல் முனைவர் பட்டப் படிப்புவரை பெறுவதற்கு வகை செய்யப்பட்டு இருப்பதும் எல்லாம் தந்தை பெரியார் கொள்கைகளைப் பரவாமல் தடுப்பதற்காகத்தான் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஏற்பாடு செய்து வைத்துள்ளாரா?

கொஞ்சமாவது மனச்சான்றோடு சிந்தித்துப் பார்க்கட்டும்!


தினவெடுக்கும் தினமணியும், கோணல் புத்தி குமுதமும், சாலையோர மதகடியில் உட்கார்ந்து கொண்டு வருவோர், போவோரையெல்லாம் சீண்டி வெட்டி வம்பு வளர்ப்போர்போல் செயல்படும், களை வளர்க்கும் காலிகளும் இவற்றை மறுக்கப் போகின்றனவா? அப்படியே மறுத்தாலும் மக்கள் மன்றம் தம் கண்ணுக்கெதிரே பார்த்துக் கொண்டு இருக்கும் நடப்புகளுக்கு மாறாகப் பேசுபவர்களுக்கு, அரட்டைக் கச்சேரி நடத்துபவர்களுக்கு நல்ல பாடத்தையும் கற்பிக்கும் அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.

ஒரு அடிப்படை தெரியுமா? தந்தை பெரியார் அவர்களின் எழுத்துகளைத் தொகுக்க திருச்சி சிந்தனையாளர் கழகத்திற்கு அனுமதி கொடுத்த தந்தை பெரியார் மிக முக்கியமான கருத்தினை வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தகவலைப் பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் முதல் தொகுதி முன்னுரையில் (பக்கம் iv) அதன் பதிப்பாசிரியர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

1. என்னால் ஒரு தடவை பேசப்பட்டவை, எழுதப்பட்டவை திரும்பத் திரும்ப வந்திருக்கும் இடங்களை கவனமாகப் பார்த்து Repetition னைத் தவிர்க்கவேண்டும்.

2. கருத்து முரண்பாடுகள் உள்ளதுபோல் தோன்றும் இடங்களைக் கண்டு அவற்றுக்குத் தெளிவான விளக்கம் அமையும்படி தொகுப்பு அமையவேண்டும்.

மேற்கண்டவாறு அன்னார் (பெரியார்) தொடுத்த வினாவும், விடுத்த எச்சரிக்கைக் கட்டளைகளும் தொகுப்புப் பணி மேலும் விரிவானதாக ஆகுமாறு செய்தன. அத்துடன் தொகுப்புப் பணியில் நேரக்கூடிய குறைபாடுகளைத் தவிர்த்துக் கொள்ளவும் இவை வழிகாட்டிகளாக அமைந்தன
என்று தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் அந்நூல் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

தந்தை பெரியார் சொன்ன இந்த எச்சரிக்கைகள் பெரியார் திராவிடர் கழகத்தினர் வெளியிடுவதில் பின்பற்றப்படுகிறதா?

அப்படியே முழுமையாக வெளியிடும்போது கொள்கைக் குழப்பத்துக்கு இடம் அளிக்கும் என்று ஆனந்தவிகடன் இதழ் பேட்டியில் வீரமணி கூறிவிட்டாரே என்று ஆகாயத்துக்கும், பூமிக்குமாகக் குதிக்கும், கொதி தாங்காத இந்த நொய்யரிசிகளுக்கு தந்தை பெரியார் விடுத்த எச்சரிக்கையைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இருந்திருந்தால், மானமிகு வீரமணி அவர்கள் கூறிய கருத்தின் நுட்பத்தை, ஆழத்தைப் புரிந்துகொண்டிருப்பார்கள்.

பரிதாபம், அவர்களிடமெல்லாம் இத்தகைய பெரிய விஷயங்களை, நுட்பங்களையெல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

போதும் போதாததற்கு இதில் மார்க்சிஸ்டுகள் வேறு கூட்டத்தில் கோவிந்தா போடக் கிளம்பிவிட்டனர்.

ஒரே ஒரு கேள்வி அவர்களுக்கு. தீக்கதிரில் வெளிவந்த ஒரு கட்டுரையை பிறர் வெளியிடுவார்களானால், அதனைப் புரிந்துகொள்ளலாம். ஒரு வருட தீக்கதிர் தொகுப்பை நாங்கள் அச்சிட்டு விற்கப் போகிறோம் என்று யாராவது சொன்னால், அதனை தீக்கதிர் நிருவாகம் ஏற்றுக்கொள்ளுமா? அதுபோன்றதுதானே குடிஅரசை வெளியிடுவோம் என்று _ கழகத்தால் ஒழுங்கு நடவடிக்கையின் அடிப்படையில் விலக்கப்பட்டவர்கள் கூறுவதும்?

பெரியார் நூல்களை யார் வெளியிட்டால் என்ன என்று கார்ட்டூன் போடும் பார்ப்பனர்களைப் பார்த்து ஒரு கேள்வி.

சங்கராச்சாரியாரின் தெய்வத்தின் குரல் நூல்களை அவருடைய ஆன்மிகச் சிந்தனைகளைப் பரப்புவதற்காக யாரும் வெளியிட்டுக் கொள்ளலாம் என்ற ஓர் அறிவிப்பினை தினமணி வைத்திகள் வெளியிடச் செய்வார்களா?

அப்படியானால் பெரியார் திடல் சங்கர மடமா? ஆனைக்கு அர்ரம், குதிரைக்குக் குர்ரம் என்று பேச ஆரம்பிக்கக் கூடாது; அடிப்படை உரிமைகள் சம்பந்தப்பட்டது இது.

தொலைநோக்காளர் பெரியார் அதனால் தான் நூல்களை வெளியிட ஓர் அமைப்பை நிறுவிச் சென்றார். அதற்கு உரியவரையும் அடையாளம் காட்டிச் சென்றுள்ளார். அவர் உயிரோடு இருந்த காலத்திலேயே அதன்படி அந்த நிறுவனத்தின் பேரால் நூல்கள் வெளியிடப்பட்டன; அவர் மறைவிற்குப் பிறகு, அன்னை மணியம்மையார் அவர்களால் அந்த நிறுவனத்தின் பெயராலேயே நூல்கள் வெளியிடப்பட்டன. அன்னை மணியம்மையார் அவர்களின் மறைவிற்குப் பிறகு அதே அடிப்படையில், அந்த நிறுவனத்தின் பெயரால் அந்நிறுவனத்தின் செயலாளர் வீரமணி அவர்களால் நூல்கள் போர்க்கால அடிப்படையில் காலத்திற்கேற்ற பொலிவுடன் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் குற்றம் கூற ஒன்றும் இல்லை. இது ஒரு கல்வெட்டு சிலாசாசனம்!

அவரவர்கள் வேலையை அவரவர்கள் பார்க்கட்டும்! வீண் வம்பு வளர்த்துதான் தீருவோம் என்று வரிந்து கட்டி வந்தால், அதனை எப்படி சந்திக்கவேண்டுமோ அப்படி சந்திக்கவும் தயார்தான்!

************************************************************************************************************************************************

பொறுப்பேற்பார்களா?

பெரியார் நூல்களை, எழுத்துகளை யாரும் வெளியிடலாம் என்று அதிகாரப்பூர்வமாகத் திறந்துவிட்டால் என்ன ஆகும்? அத்தகைய நிலை இல்லாதபோதே திருட்டுத்தனமாக சிலர் வெளியிடுகிறார்கள். தமிழர் தலைவர் நூலை சிப்பி புக்ஸ் வெளியிட்டுள்ளது. எப்படி வெளியிட்டுள்ளார்கள் தெரியுமா?

ஈ.வி. இராமசாமி நாய்க்கர் வரலாற்று நூலாம். 1927 ஆம் ஆண்டிலேயே அந்த ஜாதி அசிங்கத்தை தம் பெயரிலிருந்து தூக்கி எறிந்த தந்தை பெரியாரை இதைவிட எப்படி கொச்சைப்படுத்த முடியும்?

பெரியார் நூல்களை யாரும் வெளியிடலாம்; திறந்து விடுங்கள்; விடுதலை செய்யுங்கள் என்று வக்கணையாக வாய்க்கிழியப் பேசும் அக்கப்போர் பேர்வழிகள் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்வார்களா?

பெரியார் திராவிடர் கழகம் கோவையில் வெளியிட்ட ஒரு நூலில் தந்தை பெரியார் சுயப்புத்தி இல்லாதவர் என்றும், அன்னை மணியம்மையார் பாண்டிய மன்னனை மதம் மாறச் செய்த பாண்டிமாதேவி என்றும் கொச்சைப்படுத்தியுள்ளார்களே இவர்கள்தான் தந்தை பெரியார் அவர்களை மதிப்பவர்களா? அய்யா அவர்களின் கொள்கைகளை உண்மையாகப் பரப்புபவர்களா? இத்தகையவர்களை நம்பித்தான் அனுமதிக்க முடியுமா? சிந்திப்பீர்!


------------------------கலி. பூங்குன்றன் பொதுச்செயலாளர்,திராவிடர் கழகம் -"விடுதலை" 01-08-2009

************************************************************************************
இது தொடர்பான மேலும் கருத்துக்களை அறிந்து கொள்ள கீழ்கண்ட சுட்டிகளைப் படிக்க வேண்டுகிறேன்.

1.http://thamizhoviya.blogspot.com/2009/07/blog-post_2339.html

2.http://thamizhoviya.blogspot.com/2009/08/blog-post.html

நன்றி
*************************************************************************************