Search This Blog

1.3.09

இந்து மத அபிமானிகளே, சிந்தியுங்கள்!




`முரசொலி’ ஏட்டில் பாஞ்சாலியை அவமதித்து இந்திரஜித் என்பவர் கவிதை ஒன்றை எழுதி விட்டாராம், பாஞ்சாலியை அவமதிப்பது, இந்துக்களின் நம்பிக்கையையும், பழக்க வழக்கங்களையும் கொச்சைப்படுத்துவது ஆகுமாம்.

பாஞ்சாலியை அவமதித்த இந்திரஜித் மீது முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பா.ஜ.க.,வின் தமிழக மாநிலத் துணைத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் என்பவர் கூறியிருக்கிறார்.

பாஞ்சாலிக்கு வக்காலத்து வாங்கும் மனிதர்களும், அமைப்புகளும் இந்தக் காலத்திலும்கூட இருக்கின்றனர் என்பதுதான் கவனிக்கத்தக்கது.

பஞ்ச பாண்டவர்கள் அய்ந்து பேருக்கும் மனைவியாக இருந்ததோடு அல்லாமல் ஆறாவதாக கர்ணன் மீதும் ஆசைப்பட்ட ஒரு பெண்ணுக்காக ஒருவர் வக்காலத்து வாங்குகிறாரே,

அதே நிலை இன்றைக்கு இருக்குமானால், அதனை ஏற்றுக் கொள்வார்களா - நவீன பாஞ்சாலி என்று கோயில் கட்டிக் கும்பிடுவார்களா?


சந்து என்ற ஒன்று இருக்கும்வரை பெண்கள் கற்புள்ளவளாக இருக்க முடியாது என்கிற `பொன்மொழியை’ உதிர்த்தவராயிற்றே துரோபதை.

இந்து மதத்தில் ஒழுக்கத்திற்கு இடம் ஏது?

குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக உடல் முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு மற்ற ஆண்களுடன் புணரலாம் என்று இந்து மத சாத்திரம் கூறவில்லையா?


இந்து மதக் கடவுளான சரஸ்வதியின் கதி என்ன? சரஸ்வதியின் அப்பனும் பிரம்மாதான், புருசனும் பிரம்மா தானே?

குரு பத்தினியைக் கற்பழித்தான் சந்திரன் என்று சொல்லுவது எந்த மதத்தில்?

கவுதம முனிவரின் மனைவியை கற்பழித்தான் இந்திரன் என்று இவர்களின் புராணங்கள் கூறவில்லையா?

மாற்றான் மனைவியை மாறுவேடம் பூண்டு கற்பழித்தவன்தானே விஷ்ணு?
தாருகாவனத்து ரிஷிப் பத்தினிகளைக் கற்பழித்தவன்தானே இந்து மதத்தின் முழுமுதற் கடவுளான சிவன்.

இந்து மதத்தில் கற்பழிக்காத கடவுள் உண்டா?

சண்டை போடாத பகவான் உண்டா?

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பனன் ஒருவனுக்கே மோட்சம் அளித்த மதமாயிற்றே!


இந்த யோக்கியதை உடைய மதத்துக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்,

அய்யகோ மத நம்பிக்கையாளர்களின் மனதைப் புண்படுத்துகிறார்களே என்று புலம்புவதில் பொருள் இருக்க முடியுமா?

மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றால், அவர்கள் ஒன்று செய்யலாம்.

இந்து மதப் புராணங்கள், வேதங்கள், உபநிஷத்துகள், சாத்திரங்கள், இதிகாசங்கள் ஆகிய எல்லா வற்றையும் ஒரே மூட்டையாகக் கட்டி பகிரங்கமாக அறிவித்து, ஒரு பொது இடத்தில் கொளுத்திச் சாம்பலாக்கி அதனை `இந்து மகாசமுத்திரத்தில்’ வழித்து எறிய முன்வரட்டுமே, அதுதான் அறிவார்ந்த, ஒழுக்கமான செயலாக இருக்க முடியும்.


அறிக்கை விடும் பொன். ராதாகிருஷ்ணன்கள், இந்து மதத்தின் அமைப்புப்படி எந்த வருணத்தில் வைக்கப் படுகின்றனர் என்பதைச் சிந்திக்கவேண்டாமா?

இந்து மத அமைப்புப்படி நாலாவது வருணமான `சூத்திரர்’ என்ற பிரிவின் கீழ்தானே வருவார்கள்?

சூத்திரன் என்றால் யார்? அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் என்ன? யுத்தத்தில் புறமுதுகு காட்டி ஓடியவர்கள் என்பதில் தொடங்கி பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன் என்பதுவரை கூறப்பட்டுள்ளதே இவற்றை ஏற்றுக் கொள்ளமுடியுமா?

மனதைப் புண்படுத்துவது என்றால், உண்மையில் இதுதானே புண்படுத்தியிருக்க வேண்டும்?

ஒரு பொன். ராதாகிருஷ்ணனுக்காக அல்ல; இந்த எண்ணத்தில் உள்ள அத்தனைச் சூத்திரத் தமிழர்களுக்கும் சேர்த்துதான் இதனைக் குறிப்பிடுகிறோம், சிந்திப்பார்களாக!

------------------- நன்றி: "விடுதலை" 7-6-2007
http://viduthalai.com/20070607/news06.htm

சிவனின் நெற்றியில் ரத்தப் போக்கு எப்படி ஏற்பட்டது?


வரப்போகுதய்யே . . . !



மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப்போகுதய்யே, என்று பாடினாராமே நந்தன், அந்தநாள் வருகிறது. ஊர்பலவற்றிலே, உள்ளே கிடக்கும் உற்சவமூர்த்திகள், வெளிக்கிளம்புவர்!திருவாதிரை ஒருவாய்க்களி, என்ற பேச்சும், திரும்பிப் பார்த்தால் உலக்கைத்தடி என்ற ஏசலும், நடக்கும். அத்திருவிழாவிலே கலந்துகொள்பவர்கள், சேவை செய்துவிட்டு, நெற்றியிலே அர்ச்சகர் அளிக்கும் திருச்சாந்தினை அணிந்து வீடு திரும்புவர், மோட்சத்திற்கு அச்சாரம் தந்துவிட்டதாகக் கருதிக்கொண்டு, அந்த விழாவிலே, திலகமிடும் செயல்புரியும் சீலர்கட்கு, அதை ஒட்டியுள்ள புராணம் தெரியுமோ, என்பது சந்தேகந்தான். தெரிந்தால், தன்மானமுள்ளவன், இத்தகைய திருவிழாவிலே கலந்துகொள்ளமாட்டன். கேட்க ஆபாசமானது, அந்தத் திலகத்தின் திருக்கதை!

சிவனுக்கும் காளிக்கும், நர்த்தனம், நடந்ததாம் முன்பொருபோது. சளைக்காமல் சதிராடிய காளியை எப்படியேனும் தோற்கடிக்க வேண்டுமென்ற கருத்துடன் தோடுடைய செவியன், காலைத் தூக்கி நின்று ஆடினாராம். ஒரு ஆடவன், பெண்ணின் எதிரே காலைத்தூக்கி நின்று ஆடினால், காட்சியின் கோரத்தையும் அதைக்காண நேரிடும் அம்மையின் கண்ணிலும் கருத்திலுமுண்டாகும் மிரட்சியையும் விவரிக்க வேண்டுமா! அதிலும், அவர் எப்படி எப்படி ஆடுகிறாரோ, அப்படியெல்லாம் அம்மையும் ஆடவேண்டும் என்பதே நர்த்தனப்போட்டியிலே முக்கியாம்சம்; என்ன செய்வாள் காளி? எப்படிக் காலைத்தூக்கி ஆடுவது? தோற்றாளாம்; இந்தக்கேவலமான முறையில் கெலித்த கடவுள், களித்தாராம், இன்றும் பக்தர்கள் இதைத்தான், காலைத் தூக்கி நின்றாடிய தெய்வமே! என்று பாடிக் களிக்கின்றனர். புராணம் இத்துடன் முடிந்திருந்தால், திருவாதிரை திலகம் ஏற்பட்டிராது. மேற்கொண்டும் ஒன்று நடந்தது, அதைவிட ஆபாசமானது. சிவனாரின் நர்த்தனத்தின்போதும் ஜடையிலேயே இருந்தாளாம் கங்கா தேவியார். திடீரெனச் சிவனாரின் நெற்றியிலே, உதிரம் ஒழுகிற்றாம். அவர் கீழே விழவுமில்லை, வேறுவகை காயமும் ஏற்படவில்லை. அவர் தெரிந்துகொண்டார் உதிர உற்பத்தியின் காரணத்தை, மேலே இருந்த கங்கையும் சற்று வெட்கினார்கள், திடீரென மாதவிடாய் ஆனதால், உதிரம் சிவனாருக்கு அபிஷேகிக்க வேண்டி நேரிட்டதற்காக, சிவனார், உதிரத்தையே திலகமாக்கிக்கொண்டார். அந்த உதிரத்தின் அறிகுறியாகத்தான் இன்றும் திருவாதிரையின்போது, பக்தர்கள், திருச்சாந்தை திருவிழவிலே பெற்று, நெற்றியிலே தீட்டிக்கொள்கின்றனர். அறிவும் தன்மானமும் தமிழருக்குப் பிறந்தால், இனி இத்திருவாதிரைத் திலகத்தைத் தரிப்பானா என்று கேட்கிறோம். வெட்கக்கேடு! வெட்கக்கேடு!! வேண்டாம் இந்த மானமற்ற செயல்!!

----------------- அறிஞர் அண்ணா - 02.01.1943

பெரியார் ராசிக்காக பச்சைக்கல் மோதிரம் அணிந்திருந்தாரா?


பெரியார் ஒரு பெரிய பச்சைக்கல் மோதிரம் போட்டிருப்பார். கடைசிவரையில் எந்தச்சுழ்நிலையிலும் பெரியாரின் கையைவிட்டு அதைக் கழற்றவேயில்லை. இதைப்பற்றிய பல விமர்சனங்கள் உண்டு. ஒவ்வொரு துறையைச்சார்ந்தவர்களும் அதற்கொரு விளக்கம் சொல்வார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் யாரும் பெரியாரின் பக்கம் கூடப் போயிராதவர்கள்.


சோதிடர்கள் - பெரியாரின் நீண்ட ஆயுளுக்கும் பெரும் பணவசதிக்கும் காரணமாகப்பெரியாரின் இராசிப்படி ஒரு பெரும் ஜோதிடரானமுனிவர் சொற்படிப் பச்சைக் கல்லை அணிந்திருக்கின்றார் என்றார். சித்த மருத்துவரான ஒரு பெரிய சாமியார் என்னிடம் சொன்னார். ‘இரசவாதம் தெரிந்த ஒரு பெரிய முடிவர்பாதரசத்தைக் கல்லாகித் தனது தவ வலிமையால் அதற்குப் பச்சை நிறம்கொடுத்து - பெரியார் சாமியாராய்த் திரிந்த காலத்தில் அவருக்குக் கொடுத்தார். அந்தத் தவ வலிமைதான் பெரியாரை எந்த எதிரியும்; ஏவல்; பில்லி;சூனியம்; மாந்திரிகம்;தாந்த்ரிகம் எதனாலும் அசைக்க முடியவில்லை. என்றார். சீர்திருத்தக்காரர்களான சில நண்பர்களே ‘நகைப் பைத்தியம் கூடாது என்று பெரியார் ஏன் இந்த மோதிரம் போட்டார்’ என்று மேலே சொன்ன புகார்களை மறைமுகமாய் நம்புகிற மாதிரிப் பேசியதும் உண்டு.


தென்மாவட்டங்களில் பெரியாரின் சுற்றுப்பயணம், சீருந்து நாகர்கோவில் சாலையில் போய்க்கொண்டிருக்கின்றது. அய்யா எதைப்பற்றியோ ஆர்வமாய் பேசிக்கொண்டு வந்தார். நான் கன்னத்தில் கையூன்றியபடிக் கூர்ந்து கேட்டுக்கொண்டே வந்தேன். என் விரலில் புதியதாய் ஒரு பெரிய மஞ்சள் கல் வைத்த மோதிரம் போட்டிருந்தேன். பெரியார் அவர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் புதிதாய்க் கடிகாரம்,மோதிரம், பேனா ஆகியவற்றை வைத்திருந்தால் குழந்தைபோல் வாங்கி அதன் விலை, தயாரிப்பு, சிறப்புகளைப் பற்றி விசாரிப்பார்.

என்னுடைய மோதிரத்தை வாங்கி அதன் பெரிய கல்லை உற்று உற்றுப் பார்த்துவிட்டு “என்ன விலை என்றார் நான் “இருபது ரூபாய்” என்று சொல்லி இரண்டு விரங்களைக் காட்டினேன். ” என்ன! இரண்டாயிரமா” என்றார். “இல்லை. வெறும் இருபது ரூபாய்” என்று சொல்லி, “என்னுடைய வீடு இருக்கும் உறையூர் பகுதியில்தான் இது போன்ற செயற்கை வைரக் கற்கள் தயாரிக்கிறார்கள்” என்பதையும் சொன்னேன்.

“எந்த வித்தியாசமும் அசலுக்கும் போலிக்கும் தெரியலையே” என்றார் பெரியார், “போலிக்குப் பெருமையே அது தான்யா” என்றேன். பெரியார் பின்னால் உட்கார்ந்திருந்த மணியம்மைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் பலமாய்ச் சிரித்தார். ஏனென்றால் அந்த வாக்கியத்தை அடிக்கடிப் பயன்படுத்துபவர் அய்யாதாம். வேறு பல பொருள்களும் உண்டு!

இது தான் சரியான சமயம் என்று பெரியாரிடம் கேட்டனர். அது வண்டிக்குள் எப்போதும் இருக்கும். பலரின் சந்தேகமும் கூட, ஆம்! பெரியாரின் பச்சைக் கல் மோதிரம் பற்றியச் சந்தேகம்தான். அய்யாவிடம் கேடகப் பலருக்கும் பயம். பெரியார் தம் மோதிரததை ஒரு முறை திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டார். “அதுவா” என்றார்.

கொஞ்சம் சகஜ நிலையில் இருக்கின்றார் என்று கண்டு கொண்ட நண்பர் தென்பாதி பெரியசாமி (கலைஞரின் புகைப்படக் கலைஞர் சிங்காரத்தின் தம்பி மாமனார்) மோதிரம் பற்றிப் பலரும் எழுப்பும் சந்தேகங்களை மெல்லக் கூறினார். “அப்படியா.. நாசமாப்போச்சு.. போ.. இதை ஏன் முதலிலேயே எங்கிட்ட கேக்கலே” என்றார் பெரியார்.

யாரும் ஏதும் சொல்லவில்லை பெரியாரே மீண்டும் பேசினார். “எங்க கோயமுத்தூர் ஜில்லாவுல வெள்ளக் கோவில்லே ஒருசெட்டியார் மஞ்ச நோட்டீசு குடுத்திட்டார்…(இன்சால்வென்சி). அவரோடு சொத்தெல்லாம் ஏலம் போச்சு.. நானும் போயிருந்தேன். அப்ப தங்கம் ஒரு பவுன் பதின்மூன்று ரூபாய்!(ரூ.13). அப்ப இந்தப் பச்சைக் கல்லும் ஏலத்துக்கு வந்தது. இந்தப் பச்சைக் கல் மோதிரம் போட்டப்புறம் தான்செட்டியார் திவாலாயிட்டார் என்று யாரும் ஏலம் கேட்கலே. சர்க்கார் மதிப்பு அப்போ இருநூற்றுப் பதினைஞ்சு ரூபாய். நான் ஒரு ரூபாய் கூட கொடுத்து இருநூற்றிப் பதினாறுக்கு வாங்கினேன். பலபேரு இதைப் போட வேண்டாம். செட்டியாரைத் திவாக்கின கல்லுன்னாங்க. நான் என்னதான் ஆகுதுன்னு பாப்போமேன்னு மோதிரமாகக் கட்டிப்போட்டேன்…. எங்க வீட்டில் சில பேருக்குத் திவால் பயம்.. நடந்தத்து என்ன தெரியுமா? எனக்குப் பணம் குவியுது… குவியுது.. என்ன பணறதுன்னே தெரியலே.. குவியுது..” என்றார், சிறுபிள்ளை போல் கைகளை தட்டிக்கொண்டே..


------------------நன்றி:- http://www.thanthaiperiyar.org

பெண்களை இழிவுபடுத்தும் இராமாயணம், மனுதர்மம், மகாபாரதம், கீதை உள்ளிட்ட நூல்களை கொளுத்தவேண்டும் ஏன்?


மார்ச் மதத்திற்கும் மகளிர்களுக்கும் ஒரு சிறப்புண்டு.

மார்ச்- 8 மகளிர் தினம் உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் நாத்திக இயக்கத்தை தலமையேற்று நடத்திய அன்னை மணியம்மையார் பிறந்த தினம் மார்ச் - 10. அந்நாளையொட்டி கீழ் கண்ட கட்டுரையை பதிப்பிக்கிறேன்.

-------------------------------------------------------------------------------------


அன்னை மணியம்மையார் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி திராவிடர் கழக மகளிரணி சார்பில் சென்னையையடுத்த திரு-வொற்றியூரில் 10.3.2007 அன்று பெண்கள் விடுதலை மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. பேரணி என்னும் பேராறு ஊரையே கலக்கி எடுத்தது.அம்மாநாட்டில் பங்கு ஏற்று உரையாற்றியோர் அனைவரும் பெண்களே திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மட்டுமே விதிவிலக்கு. அம்மாநாட்டில் நிறை உரையாற்றிய தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார்.

பெண்களை இழிவுபடுத்தும் இராமாயணம், மனுதர்மம், மகாபாரதம், கீதை உள்ளிட்ட இந்து சமய நூல்களின் பகுதிகளைத் தனியே அச்சிட்டு பகிரங்கமாகக் கொளுத்தும் போராட்டம் நடைபெறும் என்பதுதான் அந்த அறிவிப்பு.

மனித உரிமையில் நம்பிக்கையுள்ளவர்கள், பெண்ணுரிமைக்காகப் பேரிகை கொட்டுபவர்கள் யாராகவிருந்தாலும் இதனைப் போற்றி வரவேற்கவே செய்வார்கள்.

ஆனால் மத அடிப்படைவாதிகளோ மருள்வார்கள். ஆத்திரப்படுவார்கள். அக்னிக் குண்டத்தில் குதிப்பதுபோல அலறுவார்கள்! அதனால்தான் இந்து முன்னணி பிரமுகர் திருவாளர் இராம. கோபாலன் வாள் `வாள் வாள்’ என்று கத்துகிறார்.

பெரியார் நூல்களைக் கொளுத்துவோம் என்று ஏட்டிக்குப் போட்டி பேசுகிறார்கள்.
பெண்களை இழிவுபடுத்தும் கருத்துகளைப் பெரியார் சொல்லியிருந்தால் எடுத்துக்காட்டட்டுமே அப்படி எடுத்துக்காட்டி அதனை எரியூட்டினால் அதற்குப் பெயர்தான் அறிவார்ந்த செயல் என்பது. அதனை விட்டுவிட்டு ஏணிக்குச் கோணி என்ற தோரணையில் பேசுவது அவர்களின் இயலாமையையும், ஆற்றாமையையும் அறியாமையையும்தான் வெளிச்சம் போட்டுக் காட்டும்.

கேள்வி: பெண்களை இழிவுப்படுத்தி நூல்களில் வெளியிட்டுள்ள இதிகாச கருத்துகளைத்தானே தனியாக அச்சிட்டு தி.க.வினர் கொளுத்துவதாக அறிவித்துள்ளார்கள். அதற்கு உங்கள் பதில் என்ன?

இராமகோபாலனின் பதில்: மனுதர்ம நூலைப்பற்றி இப்பொழுது எந்த ஆன்மீகவாதி பேசுகிறார்கள்? அதைப்பார்த்தவர்கள் யார்? படித்தவர்கள் யார்?


(குமுதம்’ ரிப்போர்ட்டர் 22.3.2007)

நெஞ்சை நிமிர்த்தி பதில் சொல்கிறாரா இராம கோபாலன்?எப்படிப்பட்ட அந்தர்பல்டி அடிக்கிறார்?

மனுதர்மத்தைப் பார்த்தவர்கள் யார்? படித்தவர்கள் யார் என்கிறாரே அப்படியானால் மனுதர்மம் என்ற நூலே இந்து மதத்தில் கிடையாது என்கிறாரா?

இதன் மூலம் மனுதர்மத்தை இவர் பார்த்தது இல்லை படித்ததும் இல்லை என்பதை ஒப்புக் கொள்கிறார் என்றுதானே பொருள்?

அப்படியானால் அதனைக் கொளுத்துவதுபற்றி இவருக்கு என்ன கவலை வந்தது? இவர் ஏன் துடிக்கிறார்? பேட்டி கொடுக்கிறார்?

கருத்தைக் கருத்தால் வெல்ல முடியாதவர்கள் இப்படிக் குப்புறப்படுத்துக் கொண்டு குமுறுவார்கள் .

குரானில் பெண்களுக்கு எதிராகச் சொல்லப்பட்டவற்றையெல்லாம் எரிப்பாரா என்று எதிர்க் கேள்வி வைக்கிறார்.


இதன் மூலம் இந்து மதத்தில் பெண்கள் இழிவுப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை ஒப்புக் கொண்டு விட்டாரே!

இஸ்லாம் மதத்தில் பெண்களுக்கு உரிமை இல்லை என்று கூற வருகிறாரா அல்லது இழிவுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சொல்ல வருகிறாரா? இரண்டுக்கும் அடிப்படையில் வேறுபாடு உண்டே!

உரிமைகள் மறுக்கப்பட்டால் எதிர்த்துப் போராடலாம்தான். இசுலாம் மதத்தில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டுள்ள பகுதிகளைக் கூற வேண்டியதுதானே, இதுவரை இப்படி அறிவுப்பூர்வமான வழியில் அவர்கள் சிந்தித்ததுண்டா செயல்பட்டதுதான் உண்டா?

இந்து மதத்தின் ஆதிக்க உயிர் நாடியில் கை வைத்தவுடன் ஆள் காட்டி வேலை செய்வது என்பது ஆரியர்களின் குருதியில் வழிந்தோடும் புத்தியாகும்.

`என்னை அடித்து விட்டயா இரு... இரு என் அண்ணனிடம் சொல்லி வைக்கிறேன் அவனை அடித்துப் பாரு பார்க்கலாம்’ என்று கூறுகிற கோழைகளுக்கும் இந்த இந்து முன்னணி வகையறாக்களுக்கும் என்ன வேறுபாடு?

திராவிடர் கழகம் ஒன்றைச் சொல்லுகிறது ஒரு போராட்டத்தை அறிவிக்கிறது என்றால் அதற்கான காரணத்தை அறிவார்ந்த முறையில் பட்டியலிட்டுக் காட்டுமே! அரமைப்புச் சட்டத்தை எரிக்கும் போராட்டத்தை தந்தை பெரியார் அறிவித்த நேரத்தில்கூட அரசமைப்புச் சட்டத்தின் இத்தனை யாவது சரத்து ஜாதியைப் பாதுகாக்கிறது என்று எடுத்துக்காட்டி. அச்சிட்டு அத்தனைத்தானே எரித்தனர்? (1957 நவம்பர் 26)

மனுதர்ம சாஸ்திரத்தை எரித்தபோதும்கூட, அத்தியாயம் சுலோகம் உட்பட ஆதாரங்களை எடுத்துப் போட்டு அச்சிட்டுத் தானே கொளுத்தினோம்? (1981 மே 17)

மறுக்க முடியுமா இந்த மனுதர்மவாதிகளால்? இப்பொழுது எரிக்க இருப்பதாக தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ளாரே அதற்கு அடிப்படை ஆதாரம் என்ன என்று அவாள் தரப்பி லிருந்து வினா தொடுத்திருந்தால் அதற்குப் பெயர்தான் அறிவு நாணயம் என்பது.

அப்படி அவர்கள் கேட்க மாட்டார்கள் ஏன் கேட்கவும் முடியாது. காரணம் அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.

கருப்புச் சட்டைக்காரர்கள் எதைச் செய்தாலும் ஆதாரத்தோடு தான் செய்வார்கள் சொல்லுவார்கள் என்பதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள். அதன் காரணமாகத்தான் சவால் கிவால் என்று எகிற மாட்டார்கள்.

அவர்கள் கேட்காவிட்டாலும் பொது மக்களுக்கு அதனை வெளிப்படுத்த கழகம் தயாராகவே இருக்கிறது.

எந்த ஒரு போராட்டத்தை நடத்துவதாக இருந்தாலும் அதுபற்றிய விளக்கத்தை பொது மக்கள் மத்தியில் அய்யந்திரிபற எடுத்து விளக்கிய பிறகுதான் அந்தப் போராட்டத்தைக் கழகம் வெளிப்படையாக நடத்தும் அந்த முறையிலேயே சில எடுத்துக்காட்டுகளைக் கூற வேண்டியது எங்களின் கடமையாகும். அதற்கான ஒரு பட்டியலைத் தருகிறோம்.

படித்துப் பார்க்கட்டும் தவறு என்றால் தாராளமாகச் சுட்டிக் காட்டட்டும். முடியவில்லை என்றால் முக்காடு போட்டுக் கொண்டு மூலையிலே முடங்கிக் கிடக்கட்டும்.


ஒரு பெண் தன் நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்குத் தனது கணவனையோ குழந்தைகளையோ சகோதரர்களையோ யாரை வேண்டுமானாலும் கொலை செய்யத் தயங்க மாட்டாள். (பாகவத ஸ்கந்தம் 4+14+42)

இதன்மூலம் பெண் என்பவர் பிறவியிலேயே ஒரு கொலைகாரி என்று சித்திரிக்கப்படவில்லையா?

பெண்ணைவிடப் பாவகரமான பிராணி வேறு இல்லை. பெண் எரிகிற நெருப்புப் போன்றவள்.; பெண் மாய்கை (வஞ்சக) குணமுள்ளவள். க்ஷவரக்கத்தியின் கூர்மையான பதம் போன்றவள். இவைகள் எல்லாம் உண்மையாகவே ஒரு பெண்ணின் தன்மையில் இருக்கின்றன.
பாரதம் 42+43.

இதன் மூலம் பெண் என்பவர் ஒரு மனிதப் பிறவியேகூட அல்ல ஒரு பிராணி மிருகம் என்று கேவலப்படுத்தப்படவில்லையா?

பெண்ணாய் பிறப்பதைவிட கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை எல்லாக் கேடுகளுக்கு வேர் பெண்களே!-பாரதம் அனுசான்ய பருவம்

பெண்கள் என்பவர்கள் பிறவியிலேயே குற்றவாளிகள் (Born Criminals) என்று இதன் மூலம் குற்றப் பத்திரிகைப் படிக்கப்படவில்லையா?

இந்தவுலகில் ஆண்களைக் கற்பழிக்கும் இயல்பைப் பெண்கள் பெற்றிருப்பதனால்தான் புத்திசாலிகள் பெண்கள் மத்தியில் தற்காப்புடன் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள்.
(மனு-தர்மம் அத்தியாயம் 2 + சுலோகம் 213)

பெண்கள் என்பவர்கள் அடிப்படையில் விபச்சாரிகள் என்று இதன் மூலம் விமர்சிக்கப்படவில்லையா?

நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: `எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது ஒரு வேலைக்காரனாகவாவது ஒரு ஸ்திரீயாகவாவது, ஒரு நாலுகால் மிருகமாகவாவது பிறப்பான்’.

பெண்ணாகப் பிறப்பது என்பது தண்டனைக்குரியது என்பது இதன்மூலம் கூறப்படவில்லையா?

போதாயனர் உரைப்பது: `மாதர்கள் அறிவுகளே இல்லாதவர்கள்; அவர்கள் சொத்துரிமை கொள்ளவும் யோக்கியதையற்றவர்கள்.’

பெண்ணென்றால் மூடர்கள் என்பது இதன்மூலம் சொல்லப்படவில்லையா?

``பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும்,
யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும்
கணவன் இறந்தபின்பு பிள்ளைகள்
ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல்
ஸ்திரீகள் தன் சுவாதீனமாக
ஒருபோதும் இருக்கக் கூடாது
(மனுதர்மம் அத்தியாயம் 5 சுலோகம் 148)

பெண் என்பவருக்கு சுயமரியாதையோ சுய உரிமையோ இதன் மூலம் கிடையாது என்று வரையறுக்கப்படவில்லையா!


இதற்கு என்ன வியாக்யானம் சொல்ல வருகிறார். இந்து முன்னணியின் இராம. கோபாலர்?
ஒரு பெண் தந்தையோடு, கணவனோடு, பிள்ளைகளோடு இருப்பது பாதுகாப்பாக இருக்க வேண்டும். அனாதை ஆகிவிடக் கூடாது என்ற நோக்கத்தில்தான் இவ்வாறு சொல்லப்பட்டதாக வக்காலத்து வாங்குகிறார்.

மற்றவர்களின் பாதுகாப்பில் இல்லாமல் பெண்கள் இருந்தால்தானே அனுமதிக்கப்பட்டால்தானே பெண்ணும் ஒரு மனித ஜீவன் ஆணுக்கு சமமானவர்! அப்படியில்லாமல் எந்தப் பருவத்திலும் ஒரு ஆணின் பாதுகாப்பில் தான் பெண் இருக்க வேண்டும் என்றால் இதன் பொருள் என்ன? ஆணுக்கு என்றென்றும் அடிமையாக இருக்க வேண்டும் என்பதுதானே?

மனுதர்மத்தில் பெண்களைப்பற்றிச் சொல்லப்பட்டு இருக்கும் இலக்கணங்கள், வரையறைகளைப் படித்தால் தான் இராம. கோபாலன் மேற்கொள்ளும் சப்பைக் கட்டு அவிழ்ந்து விழுந்து விடும் என்பதை அறியலாம்.

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தர் (மனுதர்மம் அத்தியாயம் 9 சுலோகம் 17)

மகளிர்பற்றிய மனுதர்மத்தின் இந்தப் படப்பிடிப்புக்கு இராம. கோபாலர் என்ன பதில் சொல்லுவார்?

பெண்களையும், பிராமணர் அல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது. (மனுதர்மம் அத்தியாயம் 11 + சுலோகம் 66)

இதன் மூலம் பெண்கள் அற்பத்திலும் அற்பம் என்று ஆரியம் கருதுகிறது என்பது புலப்படவில்லையா?


பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் ( கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32)

பெண்களின் பிறப்பையே இதன்மூலம் கீழ்மைப்படுத்தவில்லையா கீதை?

மதவிதிகள் கூறும் நூல்களில் ஒன்றாகிய ராமாயணம் உரைப்பது: `தப்பட்டைகள், பயிரிடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக்கப்பட வேண்டும்’ (சுந்தரகாண்டம் 5).

இராமாயணத்திலும் பெண்கள்பற்றி இழிவாகத்தான் கூறப்பட்டுள்ளது என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

இந்தக் கேவலங்களைப் பொசுக்கினால் பொத்துக் கொண்டு வருகிறது சிலருக்கு என்றால் அவர்களையும் அடையாளங்காட்ட இதுதானே சரியான வாய்ப்பு?

பெண்களை இப்படி கேவலப்படுதி, கேவலப்படுத்தி சிறுமைப்படுத்தி, சிறுமைப்படுத்தி கட்டிப் போட்டு வைத்திருந்தால்தான் இன்றுவரைகூட பெண்ணென்றால் இளக்காரம் என்ற நிலையும் மறுக்க முடியுமா?

பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறவன் பணம் கேட்கிறான், வீடு கேட்கிறான், கார் கேட்கிறான், நகைகள் கேட்கிறான் என்றால் என்ன காரணம்? மதிப்பிழந்த பெண்களை திருமணம் செய்து கொள்வதற்கு இழப்பீடு கேட்கிறான் என்று தானே பொருள்?

இன்றைக்கும்கூட சதி மாதா கோயிலை எழுப்பவில்லையா? 1987+இல் கூட பா.ஜ.க., ஆட்சியில் ராஜஸ்தானில் ரூப்கன்வர், இறந்த கணவனோடு கட்டி வைத்து துடிக்கத் துடிக்கப்படுகொலை செய்யப்படவில்லையா? அந்த இடத்தில் சதி மாதா கோயில் கட்டப்படவில்லையா?

அந்தக் கொடுமையைப் பற்றி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன கூறுகிறார்? `தர்ம சாஸ்திரங்களில் `சதி’-யைப்பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சமூகங்கள் சிலவற்றில் இப்படிப் பழக்கம் இருப்பதாகத் தெரிகிறது. எவ்வாறாயினும் இந்தப் பழக்கத்திற்கு கண்டனம் தெரிவிக்க நான் விரும்பவில்லை. அது குறித்து மக்களும் கவனித்துக் கொள்வார்கள்’’(`தி வீக்’ அக்டோபர் 11-17, 1987)

இப்படி பெண்களை வஞ்சிக்கும், அவமதிக்கும் கூட்டம் இன்றைக்கும் இருக்கத்தானே செய்கிறது?

இவ்வளவுக்கும் இந்து மதத்தில் மூம்மூர்த்திகளுக்கும் மூன்று பத்தினிகளைப் பிரதானமாகக் கூறுகிறார்கள். பார்வதி தேவி என்றும் இலட்சுமிதேவி என்றும் சரஸ்வதி தேவி என்றும் உருகுகிறார்கள்.பூமியைப் பூமாதேவி என்கின்றனர். தண்ணீரைக் கங்காதேவி என்று கசிந்துருகுகிறார்கள். பசுவை கோமாதா என்று கும்பிடுகிறார்கள்.

ஆனால் உண்மையான தாய்களை, பெண்களைப் பாவ யோனியிற் பிறந்ததாகக் கூச்சமின்றிக் கூறுகிறார்கள். பெண்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்றும் இரக்கமின்றிப் பேசுகிறார்கள்.

திருவாளர் `சோ’ ராமசாமி-யின் `துக்ளக்’ ஒவ்வொரு இதழிலும் பெண்கள் பற்றி நஞ்சைக் கக்கிக் கொண்டு தானிருக்கிறார். இவர்கள் பெண்ணாகிய தாய்க்குப் பிறக்கவில்லையா? சகோதரிகளோடு பிறக்கவில்லையா? இவர்களுக்கு மகள்களே கிடையாதா?எண்ணிப் பாருங்கள்!

பெண்களை இழிவுப்படுத்தும் இதிகாசங்களைக் கொளுத்தினால் இவர்களுக்கு ஆத்திரம் கரைபுரள்கிறது.

மகளிரை இழிவுபடுத்தும் மனுதர்மத்தைப் பொசுக்குவோம் என்றால் `விட்டேனா பார்’ என்று `வீராவேசம்’ காட்டுகிறார்கள்.

இவர்களின் ஆத்திரமும் எரிச்சலும், கொதிப்பும் கோபமும் இவர்கள் இன்னும் மனு மந்தாதா காலத்திலேயேதான் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு!எரிப்போம் எதிரிகளையும் சந்திப்போம்!

----------------மின்சாரம் அவர்கள் 24-3-2007 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

மனிதனை முட்டாள் ஆக்கவே கடவுள், மதம்


"வயதில் அறிவில் முதியார் நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க"
.

என்று சரியாக படம் பிடித்தார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அப்படிப்பட்ட

தந்தைபெரியாரின் கருத்துக்கள் "உயர் எண்ணங்கள்" என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. அந்நூலில் உள்ள கருத்துக்கள் இங்கு தரப்படுகிறது. அந்த உயர் எண்ணங்களை நீங்களும் படித்துப் பயன் பெற வேண்டுகிறேன்.

------------------------------------------------------------------------------


10. மதம் - II



உலகில் இந்துக்கள் (இந்தியர்கள்) பரம முட்டாள்களாகக் கருதப்படுகிறவர்கள் ஆவார்கள். இதற்கு காரணம், அவர்களது மதமும், கடவுள்களும், சாதிகளும்தான்.


உலகில் மற்ற நாடுகளில் கடவுளுக்காக மதங்கள் இருக்கின்றன. இந்தியாவில் இந்துக்களுக்காக, மதத்திற்காகக் கடவுள்கள் இருக்கின்றன.

உலகத்தின் மற்ற இடங்களில் கடவுள் அல்லது மதத்திற்காக
சாதிகள் இருக்கின்றன! இந்தியாவில் சாதிகளுக்காகவே கடவுள்கள் -
மதங்கள் இருக்கின்றன.

முட்டாளாக்க மதம்

நமது நாட்டில் மனிதனை முட்டாள் (மூட நம்பிக்கைக்காரனாக) ஆக்கவே கடவுள், மதம் இருக்கின்றன. மக்களை வேறு வேறாகப் பிரிக்கவே கடவுள், மதம் இருக்கின்றன. மனிதனுக்கு மனிதன் வெறுப்பும் வேற்றுமையும் உண்டாக்கவே கடவுள், மதம், சாதி இருக்கின்றன.


தாளம் போடும் ஆட்சி

மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நமது நாட்டில் (இந்தியாவில்) மேற்கண்ட தன்மைகளைக் காப்பதையே மூலாதார உரிமையாகக் கொண்ட ஆட்சி (அரசும் - அரசியல் சட்டமும்) இருக்கிறது.


அதிலும் விசேஷமாகக் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இப்படிப்பட்ட ஆட்சித் தலைவராக, இத்தன்மைகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியமுள்ள, இவற்றால் தனிப்பட்ட நன்மை அடைபவர் களே ஆட்சித் தலைமையாளர்களாக இருந்து வருகிறார்கள்.

மதங்கள் ஒழிய

இன்றைய நிலைமையில் இந்தியாவில் பெரும் புரட்சி ஏற்பட்டு, அரசியல் சட்டம் கொளுத்தப்பட்டு வேறு உண்மையான சமதர்ம ஆட்சி ஏற்பட்டால் ஒழிய, இந்நாட்டில் இன்று இருந்துவரும் மேற்கண்ட கடவுள்கள் மதங்கள், சாதிகள் சம்மந்தமான இழிவுகளும் பேதங்களும் ஒழியாது; ஒழியச் செய்ய முடியாது.

நஷ்டப்பட்டவன் - கஷ்டப்பட்டவன்

அரசியலின் பேரால் தங்கள் வாழ்வை நிறுவிக் கொண்ட மக்களுக்கு மானம், வெட்கம், இழிவு என்பது தோன்றாது. நான் அரசியல் மதத்துறையின் பேரால் அயோக்கிய, மூட, சுயநல மக்களால் வெறுக்கப்பட்டவன்; துன்பப்பட்டவன்; நட்டப்பட்டவன்; மானத்தையும் பறிகொடுத்தவன்; மந்திரிப் பதவியை உதறித் தள்ளியவன்.

-------------------------------------- தந்தைபெரியார் – நூல்:-“உயர் எண்ணங்கள்” பக்கம்:- 24-25