Search This Blog

1.12.08

மக்களைப் பிரிக்கத்தான் ஜாதி - மக்களை ஒன்றுபடுத்தவே பகுத்தறிவு இயக்கம்




மணமக்களுக்குக் குருதிப் பொருத்தம் பார்ப்பீர்!
உடல் பரிசோதனைக்குப் பிறகே திருமணம்!!


தமிழர் தலைவரின் புதிய சிந்தனை வெளிச்சம்

தருமபுரி டி.பி. பழனியப்பன் - ஆர். மலர்விழி ஆகியோரின் செல்வன் டி.பி. அமுதன் பி.இ., திருப்பத்தூர் கருப்புச்சட்டை மா.சீ. பாலன் - சொரூபராணி ஆகியோரின் செல்வி குறிஞ்சிமலர் பி.இ. ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 30.11.2008 ஞாயிறு காலை 11 மணிக்கு, வாணியம்பாடி பாரத் மகால் திருமண மண்டபத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் இனிதே நிறைவேறியது.

மணமகளின் தந்தையார் கருப்புச்சட்டை மா.சீ. பாலன், திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன் ஆகியோர் வரவேற்று உரையாற்றினர்.

திருப்பத்தூர் அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் ரத்தின நடராசன், மூத்த வழக்கறிஞர் டி.சி. ஆறுமுகம், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.

வாழ்க்கை இணை நல ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைத்த தமிழர் தலைவர் அவர்கள் செறிவாக பல கருத்துகளை எடுத்து வைத்தார்.

மணமகன் - இயக்கத்தில் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர். அவரது தாத்தா பென்னாகரம் பி.கே. இராம மூர்த்தி, பாட்டி சாரதா அம்மையார், அடுத்து மணமகனின் பெற்றோர் பழனியப்பன் - மலர்க்கொடி, அதற்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்தான் மணமகன் அமுதன்.

மணமகள் குறிஞ்சிமலர் - அவர் குடும்பத்தில் கொள்கைக் கண்ணோட்டத்தில் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந் தவர். மணமகளின் தந்தையார் எப்பொழுதும் கருப்புச் சட்டை அணிவதால் அவர் கருஞ்சட்டை பாலன் என்றே அழைக்கப் படக் கூடியவர்.

கொள்கைக் கருத்துகள் அடங்கிய துண்டு வெளியீடுகளை மக்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்கக் கூடியவர்! அது போல தந்தை பெரியார் பொன்மொழிகளை, கல்வெட்டு களாகச் செதுக்கி மக்கள் மத்தியில் அறிவைக் கொடுத்துக் கொண்டு இருக்கக் கூடிய சீரிய தோழர் ஆவார்.

இந்த இரண்டு கொள்கைக் குடும்பங்கள் இணைந்த வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவாக வெகுசிறப்புடன் நடைபெற்றது. மிகப்பெரிய மண்டபத்தில் ஏராளமானவர்கள் கூடி தமிழர் தலைவரின் உரையைச் செவிமடுத்தனர். பெண் கள் மிக ஆர்வமாகக் கேட்டனர். அனைவரும் அமைதியாக ஆசிரியர் உரையினைக் கேட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

மூன்று முக்கிய கருத்துகளை அவ்விழாவில் எடுத்து வைத்தார் தமிழர் தலைவர்.

(1) ஜாதி ஒழிப்பு அடிப்படையில் இத்திருமணம் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் முயற்சியில் நடைபெறக் கூடியதாகும். (திருமண நிலைய இயக்குநர் திருமகளும் இவ்விழாவில் பங்கேற்றார்).

மனிதர்களுக்கு ஜாதி என்பது வெறுக்கத்தக்கதாகும். இந்த ஜாதிக்கு இந்த அடையாளம் என்று யாராவது சொல்ல முடியுமா? மக்களைப் பிரிக்கத்தான் ஜாதி இருக்கிறது. மக்களை ஒன்றுபடுத்தவே பகுத்தறிவு இயக்கம் இருக்கிறது.


அய்யங்கார், பார்ப்பனர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அவசர அவசரமாக ரத்தம் தேவைப் படுகிறது. ஏபி பாசிட்டிவ் பிரிவு ரத்தம் தேவைப்படுகிறது. எங்கு தேடியும் அந்தப் பிரிவு ரத்தம் உடையவர் அவசரத் துக்குக் கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட தோழர் ஒருவரின் குருதி பொருந்தி வந்தது. அந்த நேரத்திலே தாழ்த்தப்பட்டவரின் ரத்தம் தேவையில்லை - தீட்டுப்பட்டுவிடும் என்று மறுத்துவிடுவார்களா? இப்பொழுதெல்லாம் யார் சார் ஜாதி பார்க்கிறார்கள்? நான் பெரியார் கட்சியில் சேர்ந்து ரொம்ப நாளாகிவிட்டது என்றுதானே சொல்லுவார்? என்ற வினாவை தமிழர் தலைவர் எழுப்பியபோது அனைவரும் அக்கருத்தை ஆதரிக்கும் வகையில் பலத்த கரவொலி எழுப்பினர்.

மணமகன் குடும்பத்தில் இதற்கு முன்பே ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக மணமகனின் மாமா டாக்டர் கவுதமன் - டாக்டர் பிறைநுதல் செல்வி ஆகியோர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள்தாம்; அது காதல் திருமணம்; அவர்களின் மகனுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம்தான்.

இப்பொழுது நடக்கும் இந்தத் திருமணம் காதல் திருமணம் அல்ல - பெற்றோர்களால் - கொள்கையின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்று விரிவாக எடுத் துரைத்தார் கழகத் தலைவர்.

(2) மணமகன் - மணமகளுக்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது என்பது மூடத்தனம். உண்மையிலே பார்க்கப்பட்ட வேண்டியது குருதிப் பொருத்தமாகும். இன்னும் சொல்ல வேண்டுமானால், மணமகன், மணமகள் ஆகியோரின் உடல் பரிசோதனை செய்யவேண்டும்! அத்தகைய ஒரு காலம் விரைவில் வரும் - வரவேண்டும் என்ற அரிய கருத்தினை அறிவுக் கருத்தினை இத்திருமண விழா வில் தமிழர் தலைவர் சிறப்பாக - மிகவும் தேவையான ஓர் கருத்தை எடுத்து வைத்தார். மக்கள் மத்தியிலே இந்தக் கருத்து விவாதத்திற்கு வைக்கப்பட்டுள் ளது இத்திருமணத்தில் முதன் முதலாக.

(3) மூன்றாவதாக தமிழர் தலைவர் சொன்ன கருத்து பொறி தட்டியதுபோலவிருந்தது.

உடல் உறுப்புகளை தானம் செய்யும் போக்கு அண்மைக் காலமாக வளர்ந்து வருவது வர வேற்கத்தக்க நல்ல அறிகுறியாகும்.

திருக்கழுக்குன்றம் மருத்துவர் அசோகன் அவர்களின் மகன் ஹிதேந்திரன் சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில், மகனின் உடலுறுப்புகளைத் தானம் செய்தார். அந்த உறுப்புகள் பலரின் உயிரைப் பிழைக்க வைத்தது. இந்த மனப்பான்மை, மனிதத்தன்மை நாட்டில் வளரவேண்டும்.

பெரியார் உடல்கொடை அமைப்பினை திராவிடர் கழகம் நடத்தி வருகிறது. கழகத் தோழர்கள் பலரும் தங்கள் மறைவுக்குப் பிறகு மருத்துவமனைகளில் உடலைக் கொடையாக அளிக்க ஏற் பாடு செய்த வகையில், அவ்வாறே அளிக்கப்பட்டும் வருகிறது.

நமது பார்வையில் மற்றொரு முக்கிய விஷயம் ஒன்று அடங்கி யிருக்கிறது. உடலுறுப்புகள் ஜாதி பார்த்து தானம் செய்யப்படு வதில்லை. யாருக்கு உயிர் காக்க உறுப்புகள் தேவைப்படுகின் றனவோ - அவர்கள் எந்த ஜாதி என்று பார்க்காமல் அளிக்கப்படு கிறது.

இதன்மூலம் முக்கியமாக ஜாதி ஒழிக்கப்படுகிறது (பலத்த கைதட்டல் - வரவேற்பு).

பிரச்சாரத்தால் ஜாதி ஒழிக்கப்படுவதைவிட இத்தகு நடவடிக்கைகள் மூலம் செயலளவில் ஜாதி ஒழிக்கப்பட வாய்ப்பு கிட்டுகிறது என்று முத்தாய்ப்பாக மூன்று கருத்துகளை எடுத்து வைத்தார் தமிழர் தலைவர்.


மணமகள் பொறித்த முத்திரை

இந்த விழாவில் மணமகள் குறிஞ்சிமலர் தானாகவே முன்வந்து ஒரு சிற்றுரையை நிகழ்த்தி, அனைவரின் புருவத்தையும் நிமிரச் செய்தார்.

ஜாதி ஒழிப்புத் திருமணங்கள் மிகவும் அவசியம்தான். அந்த ஜாதி ஒழிப்பு ஒத்த கொள்கையுடையவர்களிடையே நிகழ்வது மேலும் சிறப்புடையதாக இருக்கும். எங்கள் திருமணம் இந்த வகையில் நடந்திருக்கிறது என்று சொன்னபோது பலத்த கைதட்டல் கிடைத்தது.

திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி நன்றி கூறினார். விழாவுக்கு ஏராளமான கழகத் தோழர்கள் வருகை தந்தனர்.


--------------------"விடுதலை" 1-12-2008

பழனியில் மாநாடு கூட்டி, ஊர்வலத்தில் பார்ப்பனர்கள் பாடைகட்டி தூக்கிச் சென்றவருக்கு பிறந்த நாள்


வாழ்க தமிழர் தலைவர்!

திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ஆசிரியர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் பவள விழா நிறைவு (76 ஆம் அகவை) நாள் டிசம்பர் 2 ஆகும் (2008).

இந்நாளில் உலகத் தமிழர்கள் சார்பிலும், உலகப் பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள், மனிதநேய மாண்பாளர்கள் சார்பிலும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.

கடந்த ஆண்டு (அகவை 75- பவள விழா) தமிழக முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் அன்புக் கட்டளையை ஏற்று, அவருக்காக எடுக்கப்பட்ட விழாவில் நேரிடையாகப் பங்கு கொண்டு அனைவரையும் மகிழ்வித்தார்.

சென்ற ஆண்டு மட்டும் விதிவிலக்கு என்றும், நான் நேரில் பங்கேற்க இனி இயலாது என்றும் கழகத் தலைமைச் செயற்குழுவில் (20.11.2008) கறாராகக் கூறிவிட்டார்
.

ஒரு இயக்கத்தின் - அதுவும் ஒரு சமூகப் புரட்சி இயக்கத்தில் புத்தம், சங்கம், தம்மம் மூன்றும் முக்கியமான ஆயுத எழுத்துப் போன்றவை.

தலைமை - இயக்கம் - கொள்கை மூன்றும் மிகவும் போற்றத் தக்கவையாகும். இது நாமாகக் கற்பித்துக் கொண்டதும் அல்ல - தந்தை பெரியார் அவர்கள் கொடுத்த விளக்கக் கருவூலமாகும்.

அந்த வகையில் தலைவருக்கு விழா என்ற பெயரில் தலைமையின் சிறப்புகள், தலைமைப் பண்புகள், வழிகாட்டுதல்கள், சாதனைகள், செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்க, விளக்கம் அளிக்க, பிரச்சாரம் செய்ய தலைவரின் பிறந்த நாளைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் இதன் விழுமிய பொருளாகும்.

நமது கழகத் தலைவரைப் பொறுத்தவரை - தந்தை பெரியார் அவர்களால் நேரிடையாக வார்த்துத் தயாரிக்கப்பட்டு நமக்கு அளிக்கப்பட்ட கடைசித் தலைவர் ஆவார்.

தந்தை பெரியார் தந்த புத்தி போதும் என்று அவர் சொல்வது என்பது ஒவ்வொன்றிலும் தந்தை பெரியார் அவர்கள் அணுகிச் செயல்படும் முறையை அப்பழுக்கின்றி அப்படியே பின்பற்றுவது என்பது பொருளாகும்.

தாய் எட்டடிப் பாய்ந்தால் (இந்த) குட்டி பதினாறடி பாய்கிறது என்று நம் இன எதிரிகள் சொன்னதும், பழனியில் மாநாடு கூட்டி, ஊர்வலத்தில் பார்ப்பனர்கள் அவரைப் பாடைகட்டி தூக்கிச் சென்றதும், நமது தலைவர் மிகத் துல்லியமாக தந்தை பெரியார் வழியில் பயணிக்கிறார் என்பதற்கான சான்றொப்பமாகும்.


(1) இயக்கச் செயல்பாடு என்று வருகிறபோது இளைஞரணி, மாண வரணி, தொழிலாளர் அணி, மகளிரணி, மகளிர் பாசறை, பெரியார் சமூகக் காப்பு அணி என்று அணி வகை செய்து அணிவகுத்துச் செயல் படவைக்கும் முறையை உருவாக்கி, அவற்றின் செயல்பாட்டையும் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் மாதம்தோறும் ஆய்வு செய்து வரு கிறார். அத்தகு கூட்டங்களில் அடுத்த மாதத்துக்கான திட்டத்தையும் வகுத்துக் கொடுக்கிறார்.

(2) தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம், சுயமரியாதைத் திருமண நிலையம் (இணைய தள வசதியுடன்), இளைஞர் களம், பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி, புதுமை இலக்கியத் தென்றல் (சென்னையில்), பெரியார் வலைக்காட்சி (பெரியார் வெப்-விஷன்), பெரியார் சுய மரியாதை ஊடகத் துறை என்று கால மாற்றத்திற்கேற்ப புதுமைகளைப் புகுத்தி வருகிறார்.

(3) பிரச்சாரத்தில் இயக்க வெளியீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இயக்க வரலாற்றில் வேறு எப்பொழுதும் இல்லாத வகையில் ஏறத்தாழ 350 நூல்களை வெளியிட்டுள்ளார்.

பெரியார் நூலகம் - ஆய்வகம் என்பதை விரிவாக்கி சகல வசதிகளுடனும் செயல்படும் வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

பழைய ஏடுகளை, இதழ்களை நவீன முறைகளைப் பயன்படுத்திப் பாதுகாத்து வருகிறார்.

விடுதலை, உண்மை, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட், பெரியார் பிஞ்சு என்ற ஏடுகளை - இதழ்களை எழிலார்ந்த முறையிலும், கருத்தடக்கம் செறிந்த தன்மையிலும் வார்த்துக் கொடுத்துள்ளார்.

(4) கிராமப் பிரச்சாரம், கல்வி நிறுவனங்கள் முன் பிரச்சாரம், பெரியார் நகர்வுப் பேருந்து மூலம் இயக்க நூல்கள் பரப்புவதற்கான ஏற்பாடுகள் என்கிற முறையில் புது சாதனைகளைப் படைத்துள்ளார்.

தமிழகம் தழுவிய அளவில், ஏராளமான எண்ணிக்கையில் பெரியார் புத்தகக் கடைகளைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டும் வருகிறார்.

(5) சமூகநீதிக் களத்தில் அளப்பரிய சாதனை புரிந்துள்ளார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் புகுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பு ஆணையை எதிர்த்து வெற்றி கண்டு அதன்மூலம் இட ஒதுக்கீட்டின் விழுக்காட்டை அதிகரிக்கச் செய்தார்.

மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்தது!

(6) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியார் அவர்களின் ஆணையை நிறைவேற்றும் வகையில் நம்பிக்கை ஊட்டும் ஒரு இடத்தை எட்டச் செய்தது.

(7) மதச்சார்பின்மையை மய்யப்படுத்தி அரசியல் கட்சிகளை ஓரணியில் திரளச் செய்தது.

(8) இந்தியாவின் தலைநகரான டில்லியில் பெரியார் மய்யம் உருவாக்கியமை, உலகப் பகுத்தறிவு - மனிதநேய அமைப்புடன் திராவிடர் கழகத்தை இணைத்துக் கொண்டு உலகளாவிய வகையில் தந்தை பெரியார் சிந்தனைகளைக் கொண்டு சென்றது. சிகாகோவைத் தலை நகரமாகக் கொண்டு பெரியார் பன்னாட்டு மய்யத்தை (பெரியார் இன்டர் நேஷனல்) உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏற்படுத்தி, பகுத்தறிவுப் பகலவனின் மண்டைச் சுரப்பினை பரவும் வகை செய்திருப்பது.

(9) தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை பல்கலைக் கழகம் என்ற அளவுக்கு வளர்த்து ஆளாக்கியிருப்பது என்று பவள விழா நிறைவினை எட்டும் தலைவரின் தொண்டும் பணியும் எதிரிகள் அச்சமுற, நல்லுள்ளம் கொண்டோர் போற்றும் வகையில் அரும்பணியாற்றி வரும் தமிழர் தலைவருக்கு நன்றி உணர்வுடன் நல்வாழ்த்துகளைக் கூறுவோம்!

அவர்தம் வழி தொடர்ந்து அய்யா பணி முடிக்க உறுதி கொள்வோம்! சூளுரைப்போம்!! வாழ்க பெரியார்! வாழ்க தமிழர் தலைவர்!!

--------------------"விடுதலை" தலையங்கம் 1-12-2008

"தமிழ் ஓவியா" வலைப்பூ வும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்சி அடைகிறது.நன்றி.

ஜாதியை முற்றாக ஒழிக்கவேண்டும்


பெரியாரும் -ஜாதி ஒழிப்பும்

இணையங்களிலும் ஊடகங்களிலும் உள்ளவர்கள் பெரியார் கொள்கைகள் என்ன வென்றே தெரியாமல் தமது மனம் போன போக்கில் இதுதான் பெரியார் கொள்கை என்று எழுதி வருகிறாகள்.
அதுவும் குறிப்பாக இரட்டை நாக்குப் பேர்கவழிகளாம் பார்ப்பனர்கள் தொடர்ந்து பெரியார் கொள்கைகளைக் கொச்சைப் படுத்து எழுதி வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஜாதி -இட ஒதுக்கீடு தொடர்பாக அவர்கள் வைக்கும் வாதங்கள் கொஞ்சம் கூட நேர்மையும் நாணயமும் இல்லாதவை. அதுவும் நம்மைப் பார்த்து ஜாதியைக் கட்டிக் கண்டு அலைபவர்கள் என்றெல்லாம் பேசுவது அவர்கள் எந்தத் தரத்தில் உள்ளார்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக அறிந்து கொள்ள முடிகிறது.

ஜாது பற்ரி பெரியாரின் கொள்கை என்ன? என்பதைப் பார்ப்போம்.

"தந்தை பெரியார் அவர்களின் கொள்கை - அதாவது திராவிடர் கழகத்தின் கொள்கை என்பது ஜாதியை முற்றாக ஒழிக்கவேண்டும் என்பதாகும்

இந்தப் போராட்டத்தில் திராவிடர் கழகம் பல காலக் கட்டங்களிலும் பல வடிவங்களில் போராடி வந்திருக்கிறது.

உணவு விடுதிகளில் "பிராமணாள் போர்டு" அழிப்பு - இராமாயண எதிர்ப்பு, மனுதர்மம் எரிப்பு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவு எரிப்புப் போன்ற போராட்டங்களைத் தொடர்ந்து திராவிடர் கழகம் நடத்தி வந்துள்ளது. ஜாதி ஒழிப்பு மாநாடுகளையும், இடைவிடாத பிரச்சாரங்களையும் செய்து வருகிறது

ஜாதி ஒழிப்பில் மிக முக்கிய கரு - கோயில் கருவறைக்குள் பார்ப்பனர்கள் மட்டுமல்லாது தாழ்த்தப்பட்டவர் உள்ளிட்ட அனைத்து ஜாதியினருக்கும் கோயிலில் அர்ச்சகர் உரிமை ஈட்டுவதற்கான போராட்டத்தைத் தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிக் கொடுத்தார்கள். அந்தப் போராட்டக் களத்திலேயே தன் இறுதி மூச்சையும் துறந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் காலத்திலும் சரி, அதனைத் தொடர்ந்து அன்னை மணியம்மையார் அவர்களின் காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, இதற்காகப் பல வடிவங்களிலும் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளோம்.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலிலும்கூட, திராவிடர் கழகத்தின் ஆதரவுக்கு இந்தப் பிரச்சினையை நிபந்தனையாக வைத்த நேரத்தில், தி.மு.க. தலைவர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள், திராவிடர் கழகத்தின் நிபந்தனையை ஏற்று, திருச்சியில் நடைபெற்ற தி.மு.க. மாநாட்டிலும், தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், அதனை ஏற்றுக்கொண்டதோடு, ஆட்சிக்கு வந்த நிலையில், அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே இதற்கான தீர்மானத்தை ஒருமன தாக நிறைவேற்றி அதன்பின் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் சட்டமும் நிறைவேற்றப்பட்டது. (G.O. (MS) No.118 Tamil Development Culture and Religious Endownments (RE 4-2) 23rd May 2006).
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் பல முக்கிய கோயில்களில் 69 விழுக்காடு அடிப்படையில் அர்ச்சகர்ப் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அதில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் முக்கிய கோயில்களில் எல்லாம் தாழ்த்தப்பட்டவர் உள்பட அனைத்து ஜாதியி னரும் அர்ச்சகராகும் புரட்சிகரமான மாறுதல் உருவாக இருக்கிறது.

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில், சமுதாய அமைப்பில் இது ஒரு மாபெரும் திருப்புமுனை; அழிக்க முடியாத வரலாற்றுக் கல்வெட்டாகும்.

ஜாதி ஒழிப்புத் திசையில் அடுத்தகட்டமாக பல முக்கிய தீர்வுகள் காணப்பட வேண்டியுள்ளன.

(அ) இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு இருக்கிறதே தவிர, ஜாதி ஒழிப்புக்கு இடம் இல்லாத வகையில் இருந்து வருகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் "ஜாதி" (Caste) என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது
1973 டிசம்பர் 8, 9 ஆகிய நாள்களில் சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் அவர்களால் கூட்டப்பட்ட "தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில்" கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாதி என்பது எந்த இடத்திலும் இல்லாது செய்யப்படவேண்டும்; நடப்பிலும் இல்லாது பார்த்துக் கொள்ளப்படவேண்டும்; சாதி உணர்ச்சி அறவே மறையும்படிச் செய்யவேண்டும்; இதனை வெறும் மன மாற்றத்தால் மட்டுமே செய்ய முடியுமென்று தத்துவார்த்தம் பேசி காலங்கடத்தாமல், "தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைபிடித்தாலும் அது சட்ட விரோதம்" என்று அரசியல் சட்டத்தின் 17 ஆவது விதி கூறுகிறதே, அவ்விதியில் உள்ள "தீண்டாமை" (“Untouchability”) என்பதற்குப் பதிலாக, "சாதி" (“Caste”) என்ற சொல்லை மாற்றி, சாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகடனப்படுத்துவதாக அமைய வேண் டும் என்று 1973 இல் டிசம்பரில் நடைபெற்ற அந்த மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்தைச் செயல்படுத்த வைக்க திராவிடர் கழகம் தொடர்ந்து பாடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது

(ஆ) கிராமப்புறங்களில் குறிப்பாக தேநீர்க் கடைகளில் இன்னும் இரட்டை தம்ளர் முறை இருப்பது மனிதத் தன்மைக்கும், அரசின் சட்டத் திற்கும் பெரும் சவாலும் அவமானகரமானதுமாகும். மிகக் கடுமையான முறையில் இரும்புக்கரம் கொண்டு இந்த முறையை ஒழித்துக்கட்ட வேண்டும்என்று இக்கூட்டம் தமிழ்நாடு அரசை வற்புறுத்துகிறது.

(இ) ஜாதி ஒழிப்பு இணையர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜாதிப் பட்டம் கொடுக்காமல், அவர்களுக்குப் பல்வேறு தனிச் சலுகைகளும், குறிப்பிட்ட விழுக்காடு இட ஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பிலும் அளிக்க ஆவன செய்யுமாறுமாநில, மத்திய அரசுகளை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இட ஒதுக்கீடு பெறும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத் தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரைக் குறிப்பிடும்பொழுது அவர்களின் தனிப்பட்ட ஜாதியைக் குறிப்பிடாமல், S.C., S.T., B.C., M.B.C.என்கிற முறையில் குறிப்பிடலாம் என்று இப்பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது

(ஈ) திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இருபால் இளைஞர்களும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்வதையே முதன்மை நோக்கமாகவும், செயலாகவும் கொள்ளுமாறு இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
(உ) இட ஒதுக்கீட்டினால் ஜாதி உணர்வு வளரும் என்ற பிரச்சாரம் இட ஒதுக்கீட்டை எதிர்ப்போர் தொடக்க முதலே சொல்லி வரும் புரட்டுப் பிரச்சாரமாகும்.
கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பெற்று வளர்ந்து வருவோரிடையே ஜாதி மறுப்புத் திருமணங்கள்தான் பெருகி வருகின்றன என்பதை திராவிடர் கழகப் பொதுக்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

(ஊ) ஜாதியின் மிச்ச சொச்சங்களை ஆணி வேர், சல்லி வேர், பக்க வேர் உள்பட அழித்திடும் பணியில் போர்க்கால அடிப்படையில் திராவிடர் கழகம் ஈடுபடுவதை முதன்மையாகக் கருதி, அதற்காகப் பிரச்சாரம், போராட்டம், நிபந்தனை என்கிற முறையில் - எந்த விலையும் கொடுத்து, அர்ப்பணிப்புத் தன்மையுடன் முழு மூச்சில் வீச்சில் பாடுபடுவது என்று திராவிடர் கழகப் பொதுக்குழு கட்டளைத் தீர்மானமாக நிறைவேற்றிப் பிரகடனப்படுத்துகிறது.

(எ) ஜாதியை மய்யமாகக் கொண்டு அரசியல் கட்சிகளைத் தொடங்கும் - நடத்தும் அமைப்புகளை அடையாளம் கண்டு நிராகரிக்கு மாறு தமிழினப் பெருமக்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது. ஜாதி உணர்வு - தமிழின உணர்வை அழித்துவிடும் என்பதால், ஜாதி உணர்வுக்கு இடம் கொடுக்கவேண்டாம் என்று தமிழர்களை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

(ஏ) முதற்கட்டமாக நாடு தழுவிய அளவில் ஜாதி ஒழிப்பு விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், இதற்காகப் போராட இளைஞர் களைத் தயார்படுத்தும் தன்மையிலும் பிரச்சாரப் பொதுக்கூட்டங் களையும், ஜாதி ஒழிப்பு மாநாடுகளையும் திட்டமிட்ட வகையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.


-----------3-5-2008 இல் நடந்த திராவிடர் கழகப் பொதுக்குழு நிறைவேற்றிய தீர்மானங்களிலிருந்து.


ஜாதி ஒழிய பெரியார் கூறும் கருத்து உற்று நோக்கக்கூடியது. தன் வாழ்நாளெல்லாம் ஜாதி ஒழியப் போரடிய அந்தப் போராளியின் வாக்குமூலம் இது; படியுங்கள்.

"உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத் தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம் தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீறி இருந்தாலும் சாதி உண்மையிலேயே ஒழிந்ததாக ஆகாது.

ஏன் எனில், சாதி என்பது இந்த நான்கில் இருந்தும் ஆக்கப்பட்டதே ஆகும். இப்போது சொல்லுவேன்; நாகரிகத்திற்காகச் சிலர் சாதி ஒழிய வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால், அவர்கள் மேற்கண்ட நான்கையும் ஒழிக்கத் துணிவு கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களால் நமக்கு ஒரு பயனும் ஏற்படாது. சில சமயங்களில் அவர்கள் நமக்கு எதிரிகளாகவும் ஆகக்கூடும். மனிதனை மடையனாக, அடிமையாக ஆக்கப்பட்ட பின்புதான் சாதி புகுத்தப்பட்டதாகும். சுதந்திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் சாதியை ஒழிக்க முடியாது. மடமைக்கும் அடிமைத் தன்மைக்கும் ஆக்கம் அளித்துச் சாதியை நிலை நிறுத்துவது தான், சாதியை ஒழியாமல் பாதுகாப்பதுதான் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பனர் என்பவைகளாகும்.

உண்மையில் சாதி ஒழிய வேண்டும் என்று கருதுபவர்கள், இந்த நான்கு ஒழிப்புக்கும் சம்மதித்தவர்களாகவே தான் இருப்பார்கள்."


-------93ஆம் பிறந்த நாள் விழா 'விடுதலை' மலர் 17.9.1971.


பெரியாரைப் போல் ஜாதி ஒழிவதற்காக உழைத்தவர்கள் வரலாற்றில் வேறு எவருமில்லை. எனவே அருள் கூர்ந்து பெரியாரின் உண்மை உழைப்பை உணருமாறு வெண்டி முடிக்கிறேன்.
நன்றி

குண்டு வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் பஜ்ரங்தளத்திற்கு நேரடித் தொடர்பு


இந்தியாவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில்
ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் பஜ்ரங்தளத்திற்கு நேரடித் தொடர்பு

தமிழர் தலைவர் பட்டியலிட்டு ஆதாரத்துடன் விளக்கம்


சென்னை, டிச. 1- இந்தியாவில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் மதவெறிக் கூட்டமான ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார், பஜ்ரங்தளத்திற்கு உள்ள நேரடித் தொடர்புகளை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

2002 ம.பி. போபாலில் குண்டு வெடிப்பு

வரிசையாகச் சில சம்பவங்களைச் சொல்லுகின்றேன். இவைகள் எல்லாம் ஆதாரப்பூர்வமான சம்பவங்கள். 2002 போபால் - மத்தியபிரதேசம் - குண்டுவெடிப்பு, அபிநவ் பாரத் - பஜ்ரங் தளத்தின் பங்கு உண்டு என்று மத்திய பிரதேசத்தினுடைய முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் சொல்லியிருக்கிறார். 2002-ஆம் ஆண்டு மத்திய அரசாங்கத்தில் யார் இருந்தது? உள்துறை அமைச்சராக யார் இருந்தது? அத்வானி ஜி அவர்கள் இருந்தார். அடுத்து 2003 -ஆம் ஆண்டு உமாபாரதி உத்தரவு போடுகிறார். அவர்தான் முதலமைச்சராக இருக்கிறார். குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட யாரையும் கைது செய்யக்கூடாது என உத்தரவு போடுகிறார். வன்முறையாளர்களைக் கைது செய்யக்கூடாது என உத்தரவு போடுகிறார்.

ஏதோ அதிகாரம் வந்துவிட்டதைபோல

இங்கு ஏதோ கூட்டத்தில் பேசினார்கள் என்றவுடனே, ஆகா அவரைக் கைது செய், இவரை கைது செய். இன்னும் முழு அதிகாரம் தங்கள் கையில் வராத நிலையில் ஏதோ அதிகாரமே வந்துவிட்டதைப்போல, தமிழ்நாட்டு முதலமைச்சர் யார் யாரை கைது செய்யவேண்டும் என்ற பட்டியலை நாங்கள்தான் வைத்திருக்கிறோம் - அதற்கு காப்பிரைட் வைத்திருக்கிறோம் என்று சில நண்பர்கள் சொல்லுவது வேதனையாக இருக்கிறது.

அவர்கள் நண்பர்களாக இருக்கின்ற காரணத்தால் நாங்கள் நாணப்படுகிறோமே தவிர, அதற்கு மேலே நான் சொல்லுவதற்கு விரும்பவில்லை.

2004-ஆம் ஆண்டு கத்ரியா மசூதி குண்டுவெடிப்பு

2004-ஆம் ஆண்டு புனே கத்ரியா மசூதி வெடிப்பிற்கு பஜ்ரங்தள் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தவர் ராகேஷ் தாவடேமீது வழக்கு உள்ளது. அவரே மாலேகான் குண்டுவெடிப்பிலும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

மாலேகான் குண்டுவெடிப்பு

மாலேகான் குண்டு வெடிப்பு சம்பவம் இப்பொழுது வெளியே வந்திருக்கிறது. இலங்கையில் என்ன நிலை? ஜெயவர்த்தனே காலத்திலும் சரி, அதற்கு முன்னாலும் சரி, ஒரு உதாரணத்தைச் சொல்லுகின்றேன். என்ன செய்வார்கள் என்றால், யாரையாவது கொல்லுவார்கள்! சிங்கள அரசே முன்னின்று சிங்களர்களைக் கொன்று விடுவார்கள்.

புலிகள்மீது பழியைப் போடுவார்கள்

கொன்றுவிட்டு அந்தப் பிணத்தைப் போட்டுவைத்து விட்டு அதற்குப் பக்கத்திலே விடுதலைப் புலிகளினுடைய அறிக்கைகள், நோட்டீசுகளை இரண்டு, மூன்று வாசகங்களைப் போட்டு வைத்து விடுவார்கள். உடனே செய்தியை எப்படிக் கொடுப்பார்கள் என்றால், விடுதலைப்புலிகள் ஈவு இரக்கமின்றி இவர்களைக் கொன்றுவிட்டார்கள் என்று அந்தச் செய்தியைப் பரப்புவார்கள்.

இப்படி ஒரு புதுக் கண்டுபிடிப்பு


அதுமாதிரி இஸ்லாமிய மக்கள்மீது பழிதூற்ற வேண்டும். புதிதாக ஒரு ஒலி முழக்கத்தை எழுப்புகிறார்கள் - கண்டுபிடித்திருக்கிறார்கள். எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகள் இல்லை, ஆனால் தீவிரவாதிகள் எல்லோரும் முஸ்லிம்களே! என்னய்யா அர்த்தம் இது?

ஒன்று இரண்டு தவறு நடக்கலாம். எந்த மதத்துக்காரன் தவறு செய்தாலும் விட்டுவிடுங்கள் என்று சொல்லுவது நம்முடைய நோக்கமல்ல. தவறு செய்தால் திருத்தப்பட்ட வேண்டியவன். ஆனால், அதே நேரத்தில் காந்தியாரைக் கொன்ற கூட்டம் - அவர்களுடைய மத வெறியின் தத்துவமென்ன? எண்ணிப் பார்க்க வேண்டாமா?

வழக்கின் ஆதாரப்பூர்வ ஆவணங்கள் எங்கே?

அந்த வழக்காவது முதலிலே ஒழுங்காக நடந்ததா? அந்த வழக்கினுடைய ஆதாரப்பூர்வமான ஆவணங்கள் பறிபோய்விட வில்லையா? வழக்கு சரியானபடி நடத்தப்படவில்லை! இதெல்லாம் பழைய கதை. இந்த நிலையிலே வேண்டுமென்றே திசை திருப்புவதற்காக சொல்லுகின்றார்கள்.

2006-ஆம் ஆண்டு நான்டெட் குண்டு வெடிப்பு

2006-ஆம் ஆண்டு நான்டெட் குண்டு வெடிப்பு நடக்கிறது. குண்டு தயாரிக்கும்பொழுது இரண்டுபேர் இறந்தார்கள். வேறு விதமாக சாயம் கொடுத்து அந்த செய்தியைக் கொடுத்தார்கள்.

ஆர்,டி.எக்ஸ். வெடி மருந்து பொருட்கள் சப்ளை

இறந்தவர்கள் இரண்டுபேரும் பஜ்ரங்தளத்துக்காரர்கள் - அதிலே சம்பந்தப்பட்டவர்கள். ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து பொருள்களை சப்ளை செய்தவர்கள். புரோகித்திற்கு சம்பந்தம் இருக்கிறது என்று சொல்லக்கூடிய அளவிற்கு பல்வேறு செய்திகள் கிளப்ப கிளப்ப வந்து கொண்டிருக்கின்றன.

புதை பொருள்கள்போல வெளியே வந்து கொண்டிருக்கிறன. இராணுவத்திலே இருக்கக் கூடிய ஒருவன் இராணுவத்தையே பயன்படுத்தி காஷ்மீருக்குப் போய் இன்னும் கேட்டால் இதைத் தோண்டினால் எதுவரைக்கும் வரும் என்று சொன்னால் மேனாள் காஷ்மீர் கவர்னராக இருந்த சின்காவும் விசாரிக்கப்பட வேண்டும். அங்கே அமர்நாத் கிளர்ச்சி. அவ்வளவு வளர்வதற்கு காரணம் என்ன?

காஷ்மீர் ஆளுநர் மாற்றப்பட்ட பிறகுதான்

அந்த கவர்னர் மாற்றப்பட்ட பிறகுதான் நிலைமை சீரானது. பொதுவாக ஒரு அரசாங்கம் மாறினால் கவர்னர்கள் மாற்றப்படுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலை அந்த அரசியல் முறைகள் கூட கடைப்பிடிக்க முடியாத நிலை. பிறகு மாற்றப்பட்ட சூழல் ஏற்பட்டது. சாதாரணமாக ஏதோ பட்டாசு வெடித்தான், செத்துப்போய்விட்டான் என்று சிவகாசி பட்டாசு வெடித்த மாதிரி செய்திகளை மழுப்பிவிட்டார்கள்.

மீடியாக்கள் அவர்கள் கையில்

ஏனென்றால் அவர்களுக்கு என்ன வசதி என்றால் மீடியாக்கள் அவர்கள் கையிலே இருக்கின்றன. பத்திரிகை அவர்களுடைய கையிலே இருக்கிறது. இன்னும் கேட்டால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் நடைபெறுகிறது. ஆனால் அரசாங்க அதிகாரிகள் ஏற்கெனவே பா.ஜ.க. ஆட்சியிலே போடப்பட்டவர்கள்.

இராணுவத்துறையில் ஊடுருவல்

இராணுவத் துறையிலே ஊருடுவல் செய்யப்பட்டவர்கள். வெளியுறவுத்துறையிலே போனவர்கள், மற்ற மற்ற இடங்களிலே இருக்கக் கூடியவர்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மை. எனவே கட்சி வெற்றிபெற்றிருக்கிறது. அரசு மாறியிருக்கிறது. ஆனால், அரசு அதிகாரிகளிலே பலர் ஆர்.எஸ்.எஸ்.சினுடைய மிக முக்கியமான அனுதாபிகளாக, ஆதரவாளர்களாகத்தான் இன்னமும் பெரிய அளவிலே இருந்துகொண்டிருக்கிறார்கள் என்பது மற்றொரு மறுக்கப்பட முடியாத உண்மை.

2008-இல் குற்றப்பத்திரிகை தாக்கல்

அடுத்து 25-3-2008-இல்தான் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. 2006 பஞ்சமார்ஹி மத்தியப் பிரதேசம் லெப்டினன்ட் கர்னல் புரோகித் - அபிநவ் பாரத் உறுப்பினர் களுக்குப் பயிற்சி கொடுத்தார். இதிலே பணம் வசூல் பண்ணு கிறார்கள். அதுமட்டுமல்ல, மோசடிக் குற்றம் வேறு, ஹவாலா பணம் வந்திருக்கிறது - ஹவாலா குற்றமிருக்கிறது.

இப்ராகீம் - கொட்டை எழுத்தில்

புரோகித் - சம்பந்தம் இல்லை

அப்துல்காதரா? அலாவுதீனா? இப்ராகீமா? கைது செய்யப் பட்டார் என்று கொட்டை எழுத்தில் செய்தி போடுவார்கள். அதே நேரத்தில் அபிநவ் பாரத்தைச் சேர்ந்த புரோகித் என்று சொன்னால், அவருக்கு சம்பந்தம் இல்லை என்று மறைத்து விடுவார்கள்.

The conspiracy of Silence என்ற வார்த்தையை ரொம்ப ஆழமாக அம்பேத்கர் அவர்கள் பயன்படுத்தினார். பத்திரிகை களில் அவர்களுக்கு வேண்டாத விசயங்களை ரொம்ப சுபலமாக மறைத்துவிடுவார்கள். அதைத்தான் ஆங்கிலத்தில் அற்புதமான வார்த்தையாக அம்பேத்கர் அவர்கள் பயன்படுத்தினார்கள். அந்த மதவெறி அமைப்புகளில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிதான் இதுவரையில் சேர்ந்தான்.

இராணுவத்தில் லெப்டினென்ட் கர்னல் துரை

ஆனால், இவை இராணுவத்தில் இருந்துகொண்டே இந்தப் பணியை செய்வதற்குத்தான் அவர் லெப்டினென்ட் கர்னல் வரைக்கும் போயிருக்கிறான். இப்பொழுது இராணுவத்தில் விசாரணை வைத்தால் இன்னும் எத்தனைபேர் இப்படி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. காரணம் என்னவென்றால், அதற்கு ஆதரவான அரசாங்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே அவர்களுக்கு ரொம்ப வசதியாக சாலை போட்ட மாதிரி ஆகிவிட்டது. பச்சைக் கொடி காட்டியமாதிரி ஆக்கிவிட்டார்கள்.

2006-ஆம் ஆண்டு கான்பூர் வெடிவிபத்து

2006 - கான்பூர் வெடிவிபத்து - பஜ்ரங்தளத்தைச் சேர்ந்த இரண்டுபேர் இறந்தனர். விசாரணை முடித்துக் கொள்ளப் பட்டது. தற்போது மீண்டும் தொடர்கிறது. அதேபோல 2006 பக்ரீத் அன்று குஜராத் மோடாசா குண்டுவெடிப்பில் ஒரு சிறுவன் சாவு.

குற்றவாளிகள் விடுவிடுப்பு


குஜராத் காவல்துறை பிரக்யாசிங் தாக்கூரையும் கூட்டாளி களையும் ஒன்றும் செய்யாமல் செய்துவிட்டது. அதாவது அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் என்று சொல்லப் பட்டது. ஏனென்றால் மோடி அரசாங்கத்தை நடத்துகிறவர் காவல்துறையை கையில் வைத்திருப்பவர்.

--------------தொடரும்


-------------------"விடுதலை" 1-12-2008

மதவெறியின் காரணமாக பார்ப்பனர் செய்த கொலைகள்


இந்துப் பயங்கரவாத சாமியார்கள்


சைக்கிள் குண்டு வெடிக்கும். பலர் இறப்பார்கள் சைக்கிள் விற்பனைக்குத் தடைவரும். புதிய சைக்கிள் வாங்கினால் பெயர், முகவரியைப் பதிவு செய்வார்கள்.

கார் குண்டு வெடிக்கும். பெரும்பாலும் பழைய கார்களாக இருக்கும்!

டிபன்பாக்ஸ் குண்டுகள், பை குண்டுகள் ரயில் குண்டுகள் பலப்பல குண்டு வெடிப்புகள்.

வெடிகுண்டு வைத்தது யார் எனக் கேள்வி பிறக்கும். கணிணியின் முன் அமர்வார்கள். அது முதலில் தொப்பியை வரையும், பிறகு தாடியை வரையும், அதன் பிறகுதான் கண், மூக்கு, காது என காட்டும்.

உடனே, சிமி, ஹூஜி, அய் எம், லஸ்கர் என்றெல்லாம் கற்பனைக் குதிரையிலேறி ஊகங்களைச் செய்தியாக்குவார்கள். சிலரைப் பிடிப்பார்கள். அவர்களில் சிலரைச் சுட்டுக் கொன்று விடுவார்கள். பயங்கரவாதிகளின் படலம் பரிதாபமாக முடிந்துவிடும்.

இதுதான் இதுவரை நாம் கண்ட காட்சிகள்.

கடந்த பத்து நாள்களாகக் கதையே மாறிவிட்டது. வருகின்ற செய்திகள் எல்லாமே-செய்திகள்; ஊகங்கள் அல்ல. எல்லா ஊடகங்களும் ஒரே மாதிரியாகச் செய்திகளைக் கூறுகின்றன. சென்னையிலிருந்து வெளிவரும் இரண்டு, மூன்று இங்கிலீசு நாளேடுகள் முக்கிய செய்திகளை ஒரு நாள், இரண்டு நாள் மறைத்தாலும், வேறு வழியில்லாமல் மூன்றாம் நாள் வெளியிட்டு விடுகின்றன. அமுக்க முடியாத அளவுக்கு அவை உண்மைச் செய்திகள்.

அவாள் தமிழ் ஊடகங்களுக்கு இதுவெல்லாம் செய்தியே அல்ல. வெளியிடுவதே இல்லை. வாழ்க பத்திரிகா தர்மம்!

என்ன அப்பேர்பட்ட செய்திகள்? இந்துப் பயங்கரவாதிகள் பற்றிய செய்திகள்? இந்தச் சொல்லையே பயன்படுத்தக் கூடாது என்று கோபம் மிகக் கொண்டு கொதித்திருக்கிறார்கள், இந்துக்களின் தலைவர்கள். ஏனென்றால் இந்துக்கள் பயங்கரவாதிகளாக இருக்க முடியாது என்கிறார் திரிசூலம் புகழ் பிரவீண் தொகாடியா.

உண்மை நிலை என்னவென்றால், இந்துப் பயங்கரவாதம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட முதல் நபரே சாமியாரிணி பிரக்யா சிங் தாக்கூர் என்பவர்தான். சுக்ரபால் சிங் எனும் சூரத் நகரின் பிரபல ஆயுர்வேத மருத்துவரின் மகள். வரலாறுப் பாடத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். 2002ஆம் ஆண்டு கும்பமேளாவில் சாமியார் அவதேசானந்தகிரி என்பவரிடம் உபதேசம் பெற்று சாமியாரிணியாகி பூரண சதானந்த்கிரி என்று பெயர் மாறியவர்.

ஃபயர் பிராண்டு (FIRE BRAND) என்று வருணிக்கப்பட்ட சாத்வி ரிதம்பாராவைப் போல் காலித்தனமாகப் பேசுபவர். உமாபாரதியையும் சேர்த்து இம்மூவரும் இந்துமத வெறிப் பிரச்சாரகர்கள். படிக்கும்போது சங் பரிவார்களின் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்த்தி பரிசத் (ABVP) தீவிர உறுப்பினர். படித்து முடித்ததும் ராஷ்டிரிய ஜாக்ரன் மஞ்ச் அமைப்பில் முக்கியஸ்தர். இந்து ஜாக்ரன் மஞ்ச் என்பது ஆர்.எஸ்.எசின் அங்கம். இந்துக் கோயில்களைக் காப்பது, இசுலாமிய மசூதிகளை உடைப்பது என்கிற விசயங்களைக் கவனிக்கும் அமைப்பு. இதன் செயல்பாடுகளின் காரம், மணம், குணம் போதுமான அளவில் இல்லை எனக் கூறிக் கோபித்துக் கொண்டு வெளியேறிய தீவிரவாதிகள் கண்ட அமைப்பு-தான் ராஷ்டிரீய ஜாக்ரன் மஞ்ச் என்பது. சாத்வி பிரக்யா சிங்குக்கு இதுதான் சரியான இடம்.

வந்தே மாதரம் ஜன கல்யாண் சமிதியுடன் தொடர்பு கொண்டவர். ராஷ்ட்ரவாதி சேனா என்ற கா(லி)விப் படையுடனும் நெருங்கிய தொடர்பு. பயங்கரவாதம் மனதில் இருந்தால் மட்டும் போதாது, பயங்கரமாகத் தோற்றமும் இருக்கவேண்டும் என்று நினைத்தாரோ, என்னவோ, ஆண்களைப் போல பாய்கட் செய்துகொண்டு கிராப் வைத்துக் கொண்டார். மோட்டார் சைக்கிளில் (ஸ்கூட்டரில் அல்ல) சுற்றி வருவார். அவருடைய மோட்டார் சைக்கிளில்தான் வெடிகுண்டு வைத்து மசூதிக்கு அருகில் நிறுத்தி வெடிக்கச் செய்தார். இந்த மோட்டார் சைக்கிளை விற்று விட்டதாகப் பொய் சொன்னார். மோட்டார் சைக்கிளின் எந்திர எண்ணை அழித்து விட்டிருக்கிறார் என்பதைக் காவல்துறை கண்டு பிடித்துவிட்டது.

இந்த ஆர்.எஸ்.எஸ். ஆள்களின் செயல்முறை பற்றி (MODUS OPERANDI) பற்றி நமக்கு முன்னமே அறிமுகம் உண்டு. காந்தியாரைக் கொன்ற கோட்சே, ஆர்.எஸ்.எஸ்சிலிருந்து விலகினார், அதன் பிறகுதான் சுட்டார். அதேபோல், தம்கையில் இசுமாயில் என்று பச்சை குத்திக் கொண்டு ஆண்குறியின் முன்தோலையும் வெட்டி எறிந்து இசுலாமியத் தோற்றம் கிடைக்கவேண்டும் என்று செய்தார். சாத்வி பிரக்யா 1997ஆம் ஆண்டிலேயே ஏபிவிபி-இல் இருந்து விலகிவிட்டதாகக் கூறி, எனவே அவர் இந்துப் பயங்கரவாதி அல்ல என்று எதிர்கால(?) இந்தியப் பிரதமர் கனவில் உலாவரும் லால் கிஷன் அத்வானி கூறிவிட்டார்.

உறுப்பினர் அட்டையைத் தேடக்கூடாது, உள்ளத்துக் கொள்கையைப் பார்க்கவேண்டும்; அதன்படி சாத்வி சங் பரிவாரைச் சேர்ந்தவர். ஆகவே, அவரைக் கைகழுவக் கூடாது என்கிறது வி.எச்.பி. இது எல்லா வகையிலும் சரியே! அபினவ் பாரத் எனும் அமைப்பின் பிரமுகர் என்ற நிலை இன்றைக்கும் சாத்விக்கு உண்டு. 1920களில் இருந்த இந்துமகா சபையின் தலைவர்களில் ஒருவரான பி.எஸ்.மூஞ்ச்சே என்பவரால் உருவாக்கப்பட்டது. காலாவதியாகிப் போன இந்த அமைப்பின் தற்கால உரு 2000களில் மும்பையில் பதிவு செய்யப்பட்டது. என்றாலும் பொறுப்பாளர்கள் எல்லாம் புனேயைச் சேர்ந்தவர்கள். தலைவரே புனேயைச் சேர்ந்த ஹிமானி சவர்க்கார். ஆம், நீங்கள் நினைப்பது சரியே! சவர்க்காரின் தம்பியின் மருமகள். அதைவிட மற்றொன்று, காந்தியாரைக் கொன்ற விநாயக் கோட்சேயின் மகள். வழக்குரைஞராக இருந்தும் அதைக் கைகழுவிவிட்டு இந்துத்வ வெறியைத் தழுவிக் கொண்டவர். இந்த அமைப்பின் தொண்டர்கள் இந்துப் பயங்கரவாதிகள் என்றாலும் சிக்கிக் கொண்டு சிறையில் இருப்பவர்கள் இதன் உறுப்பினர்கள்.

கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய ஆள் சிறீகாந்த் பிரசாத் புரோகித். புனேயைச் சேர்ந்த புரோகிதப் பார்ப்பன ஜாதிக்காரர். இந்தியப் போர்ப்படையில் லெப்டினைட் கர்னல் எனும் பதவியில் இருந்து கைதான ஆள். போர்ப்படை அதிகாரி என்ற நிலையில் பயங்கரவாதச் செயல்களுக்காகக் (இதில் கொலைக் குற்றமும் உண்டு) கைது செய்யப்பட்ட முதல் ஆள் எனும் பெருமை(சிறுமை அல்லவா?)க்குச் சொந்தக்காரர். வெடிகுண்டு செய்வது பற்றிச் சொல்லிக் கொடுத்த இருவரில் ஒருவர். இன்னொருவர் மிதுன் சக்ரவர்த்தி எனும் புனே நகரக்காரர்.

புரோகித் போல ஆயிரம் பேருக்கு சொல்லிக் கொடுத்து போர்ப்படையின் முப்பிரிவுகளிலும் சேர்த்துவிட்ட போன்சலா மிலிட்டரிப் பள்ளி, மகாராட்டிரா மிலிட்டரி ஃபவுண்டேசன் ஆகியவை புனே நகரிலேயே உள்ளன. இவை தனியார் நடத்தும் பள்ளிகள். போன்சலா மிலிட்டரிப் பள்ளியின் 160 ஏக்கர் வளாகத்தின் பெயரே ராம்பூமி என்பது. இதில் பயிற்சி எடுப்போர்க்குப் பெயர் ராம்தாண்டிகள். இங்கே வழிபடும் தெய்வம், சுடப்பட்ட தோட்டக்களால் உருவாக்கப்பட்ட ராமன் பொம்மை. மதபோதனை, ராமனின் பெருமை எல்லாம் பாடத்திட்டங்களில் உண்டு. இதில் 1993 பிப்ரவரி மாதம் 20ஆம் நாள் சேர்ந்து, படித்து இந்துப் பயங்கரவாதியாக வெளியேறியவன்தான் புரோகித்.

மாலேகான் பகுதியில் 2007 செப்டம்பர் 29இல் வைக்கப்பட்ட குண்டு வெடிப்புச்சதி தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே அபினவ் பாரத் அமைப்பின் உறுப்பினர்களே! சஞ்சய் எனப்படும் பானுராவ் வித்தல்ராவ் சவுத்ரி, ராகுல் மனோகர் பான்டே, லட்சுமண் ராஜ் கொண்டவார், நரேஷ் ராஜ் கொண்டவார், ஹிமான்சு பான்சே, மிதுன் சக்ரவர்த்தி, மரோட்டிவாக், யோகேஷ் ரவீந்திர விடுல்கர், சமீர் குல்கர்னி, மேஜர் (ஓய்வு) ரமேஷ் உபாத்யாயா, அபய் ரகிர்கர், ராகேஷ் தாவ்டே, போன்ற அனைவருமே அபினவ் பாரத் அமைப்பைச் சேர்ந்தவர்கள். பல நூற்றாண்டு-களாகக் கொல்லப்பட்ட இந்துக்களின் உயிர்களுக்குப் பழி தீருங்கள் என்பதுதான் இவர்களுக்கான கட்டளை உபதேசமாகும். இசுலாமியர்கள் இந்து தரும சத்ருக்கள் என்றுதான் சொல்லித் தரப்படுகிறது. இவர்கள், தற்கொலைக் கமாண்டோக்கள் (SUICIDE COMMANDO SQUAD) என்றும் அர்ப்பணிக்கப்பட்ட மராட்டிய இளைஞர்கள் (DEDICATED MAHARASHTRIAN YOUTH) என்று மாதிரி-யெல்லாம் மிலிட்டரிப் பள்ளிகளில் உருவேற்றப்பட்டவர்கள் இந்த அமைப்பில் அதே மாதிரியில் உருவாக்கப்படுகிறார்கள்.

அபினவ் பாரத்தின் தலைவி ஹிமானி சவர்க்கர் வெளிப்படையாகவே கூறுகிறார் ஜெர்மனியில் இருப்பவர்கள் ஜெர்மானியர்கள், இங்கிலாந்தில் இருப்பவர்கள் இங்கிலீசுகள் என்பதைப் போலவே இந்துஸ்தானத்தில் இருப்பவர்கள் இந்துக்கள் என்று மட்டுமே அழைக்கப்பட வேண்டும். இதற்குச் சம்மதம் இல்லையென்றால் முசுலிம் நாடுகள் நிறைய இருக்கின்றனவே அவற்றுக்குப்போய் வசிக்கட்டும் என்கிறார் கோல்வால்கர், ஹெக்டேவர் வரிசையில் கோட்சே குடும்பப் பெண் மணி!

சதி தொடர்பாக தயானந்த் பாண்டே எனும் பார்ப்பனர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அமிர்தானந்தா சாமியார் என்றழைக்கப்படுபவர். இயற்பெயர் சுதாகர் துவிவேதி. இரண்டு வேதம் படித்துள்ள இப்பார்ப்பனர் தன்னை சங்கராச்சாரியாரின் வாரிசு எனக் கூறிக்கொண்டு ஜம்முதாவியில் திரிகூட நகரில் சாரதா சர்வக்ய பீடம் எனும் மடத்தைக் கட்டிக் கொண்டு ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்தவர். பான்டே சங்கராச்சாரி என்றுதான் இவரை அழைப்பார்களாம். இவர் கான்பூரில் கைது செய்யப்பட்டு மும்பைக்குக் கொண்டுவரப்படுகிறார். இவரும் ராணுவத்தில் பணியாற்றியுள்ளார்.

வாரணாசியில் உள்ள சுமேரு பீட மடத்தின் சுவாமி நரேந்திரானந்தா எனும் சாமியாரும் பயங்கரவாதத் தடுப்புப் படையின் விசாரணை வலையில் சிக்கியுள்ளார். தனக்கு பிரக்யா சிங்கைப் பற்றி எதுவும் தெரியாது என்று இவர் கூறுகிறார். வடநாட்டில் பத்திரிகைகளில் மற்றும் ஒரு சாமியாரின் பெயர் அடிபடுகிறது. கோரக்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்-பினரான ஆதித்திய நாத் எனும் காவியுடைக்காரர் விசாரிக்கப்படுகிறார் என்று சேதி. மும்பைக் காவல்துறை இதை உறுதி செய்யவில்லை.

இப்படியாகக் காவி உடை கட்டிக் கொண்டு இந்துத்வா பேசுபவர்களும் பச்சைக் காக்கிச் சீருடை அணிந்து போர்ப்படையில் சேர்ந்து சம்பளம் வாங்கிக் கொண்டு இந்துத்வா மனப்பான்மையுடன் இருப்பவர்களும் கைகோத்துக்கொண்டு இந்துப் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
போர்ப்படையினர் எப்படி இதில் ஈடுபட முடிந்தது? அதிகாரிகளின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும் போர்ப்படை நுண்ணறிவுப் பிரிவினர் என்ன செய்தார்கள்? செய்கிறார்கள்? ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து போர்ப்படையிடம் மட்டுமே கிடைக்கக் கூடியது. அதுஎப்படி சாத்வி கம்பெனிக்குக் கிடைத்தது? புரோகித் வழங்கினாரா என்பது பற்றிய விவரம் விசாரிக்க விசாரிக்கத்தான் தெரியும்.

நார்கோ அனலைசிஸ் சோதனையில் உண்மகளைப் புரோகித் உள்பட பலரும் கக்கிவிட்ட நிலையில், சாத்வி பிரக்யா மட்டும் உண்மையைச் சொல்லவில்லை என்றே தோன்றுகிறது. அழுத்தமான ஆள் போலும்! ஆனால், புரோகித்தின் மடிக்கணினி கிடைத்துவிட்டது. அதன் பதிவுகளை அக்குஅக்காகக் கவனித்துப்பார்த்தால் பலர் அகப்படும் வாய்ப்பு நிச்சயம் ஏற்படும்.

எங்கப்பன் ஏழாம்எண் குதிருக்குள் இல்லை என்கிற பாணியில் அசோக் சிங்கால், ராஜ்நாத் சிங், வெங்கய்ய நாயுடு, அருண் ஜெட்லி போன்றவர்கள் பேசிக் கொண்டு காவி மீது கைவைக்காதே, வைத்தால் நாடு கிடுகிடுக்கும் என்கின்றனர். குற்றம் புரிந்ததைப் பார்க்க வேண்டுமே தவிர அவர்கள் என்ன போர்வையைப் போர்த்திக் கொண்டு நடமாடுகிறார்கள் என்பதையா பார்க்க வேண்டும்? காவல்துறை கடமையைச் செய்கிறது என்றால் சோனியா காந்தியைக் குற்றம் சாற்றுகிறார், உலக உத்தமர் அசோக் சிங்கால்!

சிரித்திடும் ஓநாய் சிவ சொரூபத்தில் என்பதைப் போல இந்துமதக் காவிக்கும்பல் இந்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து சதிச் செயல்களில் ஈடுபட்டதை இப்போதுதான் இதழ்கள் மூலம் நாம் அறிய முடிகிறது. ஆனால், 2003 முதலே புலன் விசாரணை நடந்து வந்துள்ளது. சிக்கலான நூல் கண்டின் ஒரு முனை தற்போது கையில் கிடைத்துள்ளது. அதனை இழுக்க இழுக்க, அதன் நீளம் கூடுதலாக, கூடுதலாக பலர் மாட்டுவர்.

மவுரிய மன்னனைக் கொன்றவன் படைத்தலைவனாக இருந்த பார்ப்பன புஷ்யமித்திர சுங்கன், சதித்திட்டம் தீட்டிச் சதிகாரர்களை வளர்த்தவன் சாணக்கியன், தூத்துக்குடி ஆஷ் துரையை மதவெறியின் காரணமாகக் கொன்றவன் வாஞ்சி அய்யர், கொல்லக் கற்றுக் கொடுத்த வ.வே.சு. அய்யர், நீலகண்ட பிரம்மச்சாரி, இந்துக் கடவுள் பிள்ளையாரின் வாகனமான எலியைக் கொன்ற சுகாதார அதிகாரி சான்டர்சைக் கொல்ல சபேகர் சகோதரர்களைத் தூண்டிய திலக் என்று, இந்துமதப் போர்வையில் இந்துப் பயங்கரவாதத்தை நடத்திக் காட்டிய வரலாறு 2000 ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது. இதை முற்றிலும் ஒழித்து அமைதியை நிலைநிறுத்த திடசித்தமும், வாக்கு வங்கிகளைப் பற்றிக் கவலைப் படாமல் மக்களின் வாழ்வைப் பற்றிக் கவலைப்படும் மனோபாவம் ஆட்சியாளர்க்கு வரவேண்டும்! வருமா? என்பது மில்லியன் டாலர் கேள்வி.


-------------------- "உண்மை" நவம்பர் 16-30 2008 இதழில் - செங்கோ அவர்கள் எழுதிய கட்டுரை