பார்ப்பானை விலக்காத பெயர் தமிழன் - பார்ப்பனரை விலக்கிய பெயர் திராவிடம்!
இனமானப் பேராசிரியரின் கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
சென்னை, டிச.24 தமிழன் யார்? திராவிடன் யார்? என்ப தற்கு எளிய முறையில் கருத்தினைக் கூறியவர் இனமானப் பேராசிரியர் அன்பழகனார் ஆவார். பார்ப்பானை விலக்காதவன் தமிழன்; விலக்கியவன் திராவிடன் என்று பேராசிரியர் கூறியதை எடுத்துக்காட்டி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தாய்க்கழகத்தின் சார்பில் நூற்றாண்டு விழா
கடந்த 20.12.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் தாய்க் கழகத்தின் சார்பில் (திராவிடர் கழகம்) நடைபெற்ற இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர் களின் நூற்றாண்டு விழாவில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார்.
அவரது தலைமையுரை வருமாறு:
எந்த இடத்திலிருந்து தன்னுடைய பொதுவாழ்க்கையைத் தொடங்கினார்களோ...
மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் நடைபெறக்கூடிய நம்முடைய ஒப்பற்ற இனமானப் பேராசிரியர் அவர் களுடைய நூற்றாண்டு தொடக்கம் என்பதை - அவர்கள் எந்த இடத்திலிருந்து, எந்த அமைப்பிலிருந்து தன்னுடைய பொதுவாழ்க்கையைத் தொடங்கினார்களோ, அந்தத் தாய்க்கழகம் இன்றைக்கு அவரை சிறப்பிப்பது - அவரை நினைவூட்டுவதின்மூலமாக நாம், நம் நெஞ்சங்களை உரப்படுத்திக் கொள்வது - நம்மை லட்சியப் பாதை நோக்கி, தொய்வில்லாத தொடர் பயணத்தைத் தொடர்வது என்பதற்கு உறுதி ஏற்கின்ற நாளாக, இந்தப் பெரியார் திடலிலே, இனமானப் பேராசிரியர் அவர்களுடைய நூற்றாண்டு தொடக்கத்தை, நாங்கள் இன்றைக்குத் தொடங்கியிருக்கிறோம்.
இது ஒரு தொடக்கம் - முடிவல்ல!
ஓராண்டு காலத்தில், பல்வேறு ஊர்களில், பேராசிரியர் அவர்களுடைய பாடங்களைப் புதுப்பித்து நடத்த வேண்டும்.
எஃகு கோட்டையினுடைய பொதுச்செயலாளராக...
அப்படிப்பட்ட ஒரு அருமையான நிகழ்வை நினைத் துக் கொண்டிருக்கின்றபொழுது, நாங்கள் எதை நினை வூட்டவேண்டும் என்று நினைத்தோமோ, அதை நம்மு டைய மாண்புமிகு அமைச்சர், மானமிகு சகோதரர் நீர்வளத்துறை அமைச்சர் என்பதைவிட, பேராசிரியர் வகித்த பெரிய பொறுப்பான, பல ஆண்டுகள் வகித்த பெரிய பொறுப்பான, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு எஃகு கோட்டையினுடைய பொதுச்செயலாளராக, பேராசிரியருக்குப் பிறகு பொறுப்பேற்று, திறன்பட, எப்படி பேராசிரியர், கலைஞருக்கு மிகப்பெரிய தோன்றாத் துணையாக, எந்தக் கருத்திலும் மாறுபடாதவராக இருந் தாரோ, அதேபோல, இந்தியா என்ன, உலகம் முழுவதும் பாராட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு முதலமைச்சர் இருக்கிறார் என்றால், அவர்தான், சமூகநீதிக்கான சரித்திர நாயகர் ஒப்பற்ற நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களாவார்கள்.
எத்தனை வியூகங்கள், சூழ்ச்சிகள் வந்தாலும், திராவிட இயக்கத்தை அசைத்துவிட முடியாது
எப்படி கலைஞரிடத்தில், பேராசிரியர் அவர்கள் ஒன்றுபட்டு இருந்தார்களோ, அதேபோல, இன் றைக்கு அதே வழி வழி பாரம்பரியம் தொடர்கிறது என்று சொல்லக்கூடிய வகையில், நம்முடைய மாண்புமிகு மானமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள், பொதுச்செயலாளராகவும், தளபதி அவர்கள் தலைவராகவும் இருப்பது இருக்கிறதே, எதிர்காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி, எத்தனை வியூகங்கள், சூழ்ச்சிகள் வந்தாலும், திராவிட இயக்கத்தை அசைத்துவிட முடியாது என்ப தற்கு - இவர்கள் எல்லாம் சரியான காவலர்களாக, தள நாயகர்களாக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் நீர்வளத் துறை அமைச்சர் என்பதைவிட, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுச் செயலாளர் - அதுவும் பேராசிரியரிடத்தில் அமர்ந்தி ருக்கக் கூடியவர்.
எப்படி கலைஞர் அவர்களுடைய இடத்தில், தளபதி அவர்கள் அமர்ந்து, ஒப்பற்ற முறையில் சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
என்று சொல்லக்கூடிய அளவிற்கு, சிறந்த ஒரு சாதனை வரலாற்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்களோ, அது போல, இயக்கத்தை சிறப்பாகக் கட்டி காத்து நடத்திடும் அருமைச் சகோதரர் துரைமுருகன் அவர்களே,
கருஞ்சட்டைத் தமிழராகவே என்றைக்கும் இருக்கக்கூடியவர்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்று சொன்னால், அவர் எப்பொழுதும் அறிவாலயத்தில்தான் இருப்பார் என்று சிலர் சொன்னார்கள். ஆம், எப்பொழுதும் அறிவாலயத்தில் இருப்பதுதான் சிறந்தது. அதுதான் மிக முக்கியம். வேறு இடங்களுக்குப் போனால், அங்கே அறிவு மழுங்கிவிடும். அதையெல்லாம் உணர்ந்துதான், கருஞ்சட்டைத் தமிழராகவே அவர் என்றைக்கும் இருக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்று, இன்றைக்கு நம்முடைய நிகழ்ச்சிகளில் எல்லாம் சிறப்பாகப் பங்கேற்கின்ற அருமைச் சகோதரர் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் மானமிகு சுப.வீ. அவர்களே,
இந்த நிகழ்வில் முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய பேராசி ரியருடைய திருமகனார் அன்புச்செல்வன் அவர்களே,
உரையாற்றி விடைபெற்றுச் சென்ற டாக்டர் சொக்கலிங்கம் அவர்களே,
அனைவரையும் வரவேற்ற கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
கழகத்தினுடைய பொருளாளர் மானமிகு குமரேசன் அவர்களே, சிறப்பான இணைப்புரையை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய திராவிடர் கழக மாநில மாணவர் கழக செயலாளராக இருக்கக்கூடிய அருமை நண்பர் பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்களே,
நன்றியுரை கூறவிருக்கக்கூடிய அருமை வழக்குரைஞர் மணியம்மை அவர்களே,
இங்கே சிறப்பாக வருகை தந்திருக்கக்கூடிய பேராசிரி யருடைய குருதிக் குடும்ப கொள்கை உறவுகளே,
தோழர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறப்பான வகையில், இந்த நூற்றாண்டு விழா தொடங் குகிறது. மிகக் குறுகிய நேரத்தில்தான் இந்த ஏற்பாடுகளை செய்தோம்.
டிசம்பர் 19 ஆம் நாளுக்கு வரலாற்று முக்கியத்துவம்
நாங்கள் இந்தக் கூட்டத்திற்கு அழைத்தபோதுகூட, பெரிய அளவிற்கு இடைவெளி இல்லை. காரணம் என்னவென்றால், 19 ஆம் தேதி நிகழ்ச்சி என்று சொன் னாலே, திராவிட இயக்க வரலாற்றில் அன்று இரண்டு வரலாற்று முக்கியத்துவம் உண்டு.
அன்றைக்கு எல்லோருக்கும் தெரிந்தது நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்களின் பிறந்த நாள்.
பல ஆண்டுகளாக நாம் அதை சிறப்பாக நடத்திக் கொண்டு வருகிறோம். அவர்கள் வாழ்ந்த நேரத்தில், அவர்களையும் அழைத்து அவரைப் பெருமைப்படுத்தி யிருக்கின்றோம். அவருடைய வாழ்வும், தொண்டும் என்று இதே மேடையில் மிகச் சிறப்பான நிகழ்ச்சிகளையெல்லாம் நடத்தியிருக்கின்றோம்.
தந்தை பெரியாரின் கடைசி கர்ஜனை
இன்னொரு சிறப்பான, மறக்க முடியாத நிகழ்ச்சி என்னவென்றால், தந்தை பெரியார் என்ற அந்த மகத்தான மாபெரும் சிங்கத்தினுடைய கர்ஜனை- பெருமுழக்கம் - கடைசி முழக்கமாக அமைந்த நாள் டிசம்பர் 19 ஆம் தேதிதான்.
தியாகராயர் நகரில் அய்யா அவர்கள் ஆற்றிய உரை - கடைசி உரை - மரண சாசனம் என்ற பெயரால் அதனை நாம் புத்தகமாக வெளியிட்டு இருக்கிறோம். அதை நிகழ்த்தியது டிசம்பர் 19 ஆம் தேதிதான்.
நான் சற்று நேரத்திற்கு முன்பாக பேசிக் கொண்டி ருக்கும்பொழுதுகூட சொன்னேன். பெரியாருடைய கடைசி உரை அதுதான். அதற்குப் பிறகு அவர்கள் உரையாற்ற வாய்ப்பில்லை.
மூன்று நாள்கள்தான் அவர்கள் சங்கடமில்லாமல் மருத்துவமனையில் இருந்தார்கள். டிசம்பர் 24 ஆம் தேதி காலை காலமாகிறார்.
பெரியார் தன் பேச்சை முடிக்கிறார்- பேராசிரியர் பிறக்கிறார்
இந்த சூழலை எண்ணிப் பாருங்கள் பெரியார் தன் பேச்சை முடிக்கிறார்- பேராசிரியர் பிறக்கிறார்; இதில் ஒன்றும் பெரிய வைதீகம் கிடையாது; கோ-இன்சிடன்ஸ்தான் இது.
ஆனாலும்கூட இதில் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால், திராவிடர் இயக்கம் தொய்வில்லாத இயக்கம் - தொடரக்கூடிய இயக்கம் -லட்சியப் பணி என்பது இருக்கிறதே - இது தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக வந்துகொண்டிருக்கின்றது என்பதற்கு ஒரு அடையாளம்.
எத்தனையோ செய்திகள் சொல்வதற்கு இருக்கின்றன. நான் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் சுருக்கமாக சொல்கிறேன்.
நிறைய கருத்தரங்குகளை நடத்தவேண்டும். இங்கே புத்தகங்கள் சிறப்பாக வெளியிடப்பட்டு இருக்கின்றன. பேராசிரியர் அவர்கள் எழுதி, கிடைக்காத புத்தகங்களாக இருந்தவற்றையெல்லாம் மறுபதிப்பு கொண்டு வந்தோம் நாங்கள்.
அப்படி மறுபதிப்பாக வெளிவந்த புத்தகம்தான் வகுப் புரிமை போராட்டம்.
சகோதரர் மானமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள் இங்கே எடுத்துச் சொன்னார்கள்.
அன்றைய காலகட்டத்தில் வகுப்புரிமையைப்பற்றி விளக்குவதற்கு புத்தகங்கள் இல்லை!
கம்யூனல் ஜி.ஓ. என்று சொல்லக்கூடிய வகுப்புரிமை செல்லாது என்று வந்த நேரத்தில், நாங்கள் எல்லாம் மாணவர்கள். பேராசிரியர் அவர்கள், பச்சையப்பன் கல்லூரிக்கு வந்துவிட்டார். அந்தக் காலத்தில் நானும், எஸ்.டி.சோமசுந்தரம் போன்றவர்களும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கின்றோம்.
அந்தக் காலகட்டத்தில், வகுப்புரிமை என்றால் என்ன வென்று விளக்குவதற்கு, அய்யாவினுடைய உரைகள், பத்திரிகைகள் இருக்கின்றன. புத்தகங்கள் இல்லை என்று சொன்ன நேரத்தில், ஒரு அற்புதமான புத்தகத்தை உரு வாக்கிக் கொடுத்த பெருமை இந்த இயக்கத்திற்கு - வகுப்புரிமையைப்பற்றி ஒரு நல்ல ஆவணம்.
வகுப்புரிமைப் போராட்டம் - கம்யூனல் ஜி.ஓ. என்ற தலைப்பில் பேராசிரியர் அவர்கள் எழுதினார்கள்.
உங்கள் குழந்தைகளுக்கு முத்தையா என்று பெயரிடுங்கள் என்றார் தந்தை பெரியார்!
இந்த புத்தகத்திற்கு என்ன சிறப்பு என்று சொன்னால் நண்பர்களே, வகுப்புரிமைக்கு ஆணை பிறப்பித்த மேனாள் அமைச்சர் முத்தையா அவர்கள், ‘குடிஅரசு’ ஏட்டிலே தந்தை பெரியார் ‘‘உங்கள் குழந்தைகளுக்கெல்லாம், இனி பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கெல்லாம் முத்தையா என்று பெயரிடுங்கள்’’ என்று சொன்னார்.
அப்படி பல பேர் தங்களுடைய குழந்தைகளுக்குப் பெயரிட்டார்கள். அப்படி பல முத்தையாக்கள் வந்திருக் கிறார்கள்.
அந்த முத்தையா முதலியார் என்பதைக்கூட எடுத்து விட்டுச் சொன்னார் - மூதறிஞர் முத்தையா அவர்கள், பேராசிரியருடைய புத்தகத்திற்கு அவரே மதிப்புரை கொடுத்திருக்கிறார். இது ஒரு பெரிய வரலாற்று ஆவணம்.
எத்தனையோ புத்தகங்கள் வரலாம்; ஆனால், அவர் சொன்ன விளக்கம் இருக்கிறதே - ஓர் ஆணை போட்டவர் அமைச்சர் - அதே அமைச்சர் பெரிய அளவிற்கு அணிந் துரை கொடுக்கிறார்.
அந்த அணிந்துரையில் பேராசிரியர் அவர்கள் எப்படியெல்லாம் சிறப்பான வகையில், இந்தக் கருத்துகளை எழுதியிருக்கிறார், விளக்கியிருக்கிறார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
இங்கே சொன்னதைப்போல, பேராசிரியர் அவர்கள் அதைப்பற்றி கவலைப்பட்டதில்லை. மற்றவர்களாக இருந் தாலும், அதை மறுபடியும் மறுபடியும் சொல்லியிருப்பார்கள்.
வகுப்புரிமைபற்றிய பழைய புத்தகத்தை காட்டியவுடன், இந்தப் புத்தகம் இருக்கிறதா? என்னிடம்கூட தேடிப்பார்த் தால் இருக்காது என்றார்.
இந்தப் புத்தகத்தை மறுபதிப்பு செய்யலாம் என்று இருக்கிறோம் என்று சொன்னவுடன்,
அப்படியா! ரொம்ப மகிழ்ச்சி, செய்யுங்கள் என்றார்.
அதற்குப் பிறகு இந்தப் புத்தகம் பல பதிப்புகளாக வெளிவந்திருக்கின்றது.
இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியது சமூகநீதியில்!
ஏனென்றால், இந்தியாவிற்கே தமிழ்நாடு வழிகாட்டியது சமூகநீதியில். பெரியார் பொதுவாழ்விற்கு வந்ததும் சமூகநீதிக்காக - காங்கிரசில் சேர்ந்ததும் சமூகநீதிக்காக - காங்கிரசைவிட்டு வெளியே வந்ததும் சமூகநீதிக்காக.
நான் எதைச் செய்தாலும், வகுப்புரிமைக்காக, சமூக நீதிக்காகத்தான் இருக்கும் என்பது மய்யக் கருத்து. அப்படி வந்த புத்தகங்கள், அதிலே சின்னச் சின்ன வெளியீடு களையெல்லாம் கூட அவருடைய உரைகளை நாங்கள் அச்சடித்துக் கொடுத்தவுடன், அவர் ரொம்ப மகிழ்ச்சி யடைந்தார்.
அவருக்கு ஒரு சிறப்பு என்னவென்றால், பேராசிரியர் அவர்களைப் பார்க்கும்பொழுது, வயது வித்தியாசம் இல்லாமல், கைலாகு (ஷேக் ஹேண்ட்) கொடுப்பார்.
நேற்றுக்கூட பேராசிரியர் வீட்டில், நம்முடைய சகோதரர் அன்புச்செல்வனைப் பார்த்ததும், பொதுவாக இந்தக் கரோனா காலகட்டத்தில் யாருக்கும் கை கொடுப்பதில்லை - அதை நாம் தவிர்த்துவிடுகிறோம்.
அவரிடம் கையை நீட்டியவுடன், அவரும் கைகொடுத்தார். ஏனென்றால், ஒரே ஒரு விதிவிலக்கு போன்று. ஏனென்று கேட்டால், பேராசிரியர் வீட்டில், பேராசிரியருக்குப் பெருமை செய்கின்ற நேரத்தில், பேராசிரியர் எதைச் செய்வாரோ, அதைச் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் கைகுலுக்கி வரவேற்றார்.
யாராக இருந்தாலும், பேராசிரியர் அவர்கள் கடைசிவரையில் கை குலுக்குவார். எப்படிப்பட்ட உணர்வோடு அவர் இருந்தார் என்பதற்கு ஏராளமான செய்திகள் இருக்கின்றன.
அவர் கல்லூரி மாணவர் - நான் பள்ளி மாணவன்!
எங்களைப் போன்றவர்களுக்கு அவருடைய நட்பு என்பது மிகப்பெரிய பேறு. அவருடைய பொதுவாழ்க்கை 85 ஆண்டுகால பொதுவாழ்க்கை - இதில் ஏறத்தாழ ஒரு 75 ஆண்டுகாலத்திற்கு மேலாக - மாணவப் பருவத்திலிருந்து - நான் பள்ளி மாணவன் - அவர் கல்லூரி மாணவராக இருந்து வெளியே வந்த காலத்திலிருந்து - கடலூர், சிதம்பரத்தில் நடைபெற்ற பல்வேறு செய்திகள் இருக்கின்றன. ஒரே ஒரு செய்தியை சொல்கிறேன்.
ஆசிரியர் திராவிடமணி அவர்கள்
எங்களைத் தயாரித்தவர்!
திராவிடர் கழகமாக மாறுகிறது - நான் 12 வயது சிறுவன் - ஆனால், எங்களுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள், அதற்கு முன்பு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, எங்களைத் தயாரித்தி ருந்தார். மாணவப் பருவத்திலிருக்கும்போதே பேராசிரியர் அவர்களை நாங்கள் கூட்டத்திற்கு அழைத்து வருவோம். இன்றைய இளைஞர்களுக்கு இந்த செய்தி மிகவும் ஆச்சரியமாக இருக்கும்.
அந்த நிகழ்வை, பேராசிரியர் மேடையில் இருக் கும்பொழுதே நான் சொல்லியிருக்கிறேன்.
சிதம்பரத்திலிருந்து ரயிலில் வருவார். சனி, ஞாயிற் றுக்கிழமைகளில் பொதுக்கூட்டம் நடத்துவோம் கடலூரில்.
வருவதற்கு 50 காசுதான் டிக்கெட்; போவதற்கு 50 காசுதான் டிக்கெட். ஆக மொத்தம் ஒரு ரூபாய் செலவாகும்.
பண வசூல் செய்து நடத்துவது கிடையாது இயக் கத்தில் - பணி செய்வதெல்லாம் வானரப் படை போன்று, மாணவர்களாக இளைஞர்களாக இருந்த நாங்கள்தான்.
வாங்குகின்ற சம்பளத்தில் பாதியை பொதுக்கூட்டம், பிரச்சாரத்திற்கே செய்வார்!
நாங்கள் சென்று, பேராசிரியர் அவர்களை வரவேற் போம். ஆசிரியர் திராவிட மணி அவர்கள், அரசாங்கப் பணியில் இருப்பார். அவர் வாங்குகின்ற சம்பளத்தில் பாதியை பொதுக்கூட்டம், பிரச்சாரத்திற்கே செலவு செய்து விடுவார்.
2 ரூபாய் மணியார்டர் அனுப்புவோம். கூட்டத்திற்காக பேராசிரியரை ஜட்கா வண்டியில் அழைத்துக்கொண்டு வந்து தங்க வைப்போம். எங்களுடைய ஆசிரியர் இடம் - அது ஒரு தனி அமைப்பு.
அங்கேயே குளிப்போம் - சாப்பாடு வாங்கி வந்து கொடுப்போம் - மாணவர்களிடையே பேசுவார். இரவு கூட்டம் நடைபெறும் - ஆயிரக்கணக்கான மக்கள் திரள் வார்கள். காங்கிரசுக்காரர்கள் இடையறாமல் கடலூரில் கலவரம் செய்வார்கள் - கல்லெறிவார்கள். அதைப்பற்றி யெல்லாம் கவலைப்படாமல் கூட்டத்தை நடத்துவோம்.
1943 இல் நடைபெற்ற சேலம் மாநாடு
1943 ஆம் ஆண்டிலிருந்து இதைத் தொடங்கினோம். 1944 ஆம் ஆண்டில் நடைபெற்றவை எனக்கு நன்றாக நினைவில் இருக்கின்றன. ஏனென்றால், இளமைக்காலத்தில் நடைபெற்ற நிகழச்சிகள் மனதில் நன்றாகப் பதிவாகி விடுகின்றன.
இங்கே உரையாற்றிய நம்முடைய அமைச்சர் துரைமுருகன் அவர்கள் சொல்லும்பொழுது, பேராசிரியருடைய குரலில், ஏற்றம் - இறக்கம் என்பது அவருடைய தனித்தன்மை என்றார்.
அது சம்பந்தமாக எனக்கு ஒரு மறக்க முடியாத சம்பவம் என்னவென்றால்,
நீதிக்கட்சியை, திராவிடர் கழகமாக மாற்றுகிறார்கள். அறிஞர் அண்ணா அவர்களுடைய பெயரில் தீர்மானம்.
தந்தை பெரியார் எழுதிய வாசகங்கள் பெரிய அளவிற்கு இருக்கிறது.
பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் அங்கே வந்திருக்கிறார்கள். எனக்கு அதிக விவரம் புரியாது. நாங்களெல்லாம் அங்கே சென்றிருந்தோம்.
‘‘எங்கள் தலைவர் பெரியாரே!'' என்று ஒன்றுக்கு 32 சைசில் பிட் நோட்டீஸ் என்று அந்தக் காலத்தில் அதற்குப் பெயர். அடித்துக் கொடுக்கிறோம்.
யார் யார் பெரியார் தலைவராக வரக்கூடாது என்று நினைக்கிறார்களோ - வேறு தலைவர் இயக்கப்படவேண்டும் என்று நினைக்கப்படக் கூடிய கட்டம்.
ஒரு பெரிய இரண்டு அலைகள் வீசுவது போன்று இருந்தது அந்த மாநாட்டுத் திடலில். மாநாடு தொடங்கப் போகின்ற நேரத்தில், தஞ்சைத் தோழர்கள் கணிசமான அளவிற்கு வந்துவிட்டார்கள்.
மற்றவர்கள் எல்லாம் பெரியாருடைய தலைமையைப் பறித்து, வேறு வகையான அளவிற்குச் செய்யவேண்டும் என்று நினைக்கின்ற நேரத்தில்,
நாவலர், பேராசிரியர் போன்றவர்கள் எல்லாம் மாணவப் பருவத்திலிருந்து வந்திருக்கின்ற கட்டம்.
சேலம் மாநாட்டில், கொடியேற்று விழா - நீதிக்கட்சி கொடி - சிவப்பு - தராசுதான் அந்தக் கொடி. மாநாட்டுத் தொடக்க விழாதான் அது.
‘சண்டே அப்சர்வர்’ பாலசுப்பிரமணியம்
அப்படிப்பட்ட சூழ்நிலையில், ‘சண்டே அப்சர்வர்' பாலசுப்பிரமணியம் அவர்கள் ஆங்கிலத்தில் அருமை யாகப் பேசக்கூடியவர். தமிழில் பேசமாட்டார் அவர்.
பி.பாலசுப்பிரமணியம் ஆகிய அவரை, சுருக்கமாக பி.பா. என்றுதான் அழைப்பார்கள்.
எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது - அவர்தான், பெரியாரை எதிர்த்து, முதல் குரல் கொடுப்பதற்குத் தயாரிக்கப்பட்டவர். அவர்தான் ஓபனிங் - பெரியாருக்கு எதிராக சொல்லவேண்டும் என்பதற்காக.
அவர் என்ன செய்வாரோ, என்ற ஒரு கொந்தளிப்பான சூழ்நிலையில், பரபரப்பாகக் காணப்பட்டது மாநாட்டு மேடை. அவருடைய பேச்சை, அன்பழகன் அவர்கள், அன்றைக்குப் பேராசிரியர் என்ற வார்த்தை கிடையாது. தோழர் அன்பழகன் அவர்கள், மொழி பெயர்ப்பார் என்று சொன்னார்கள்.
பெரிய பெரிய மாநாடுகளில்தான் ஒலி பெருக்கி உண்டு.
எங்களுக்குக் கொஞ்சம் அரசல் புரசலாகத் தெரியும்; எங்களுடைய ஆசிரியர் அவர்களும் எங்களுக்குச் சொல்வார். பெரியாருடைய தலைமையை நாம் ஆதரிக்கவேண்டும் என்பதற்காக தென்னார்க்காடு மாவட்டம், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த தோழர்கள் எல்லாம் அங்கே குழுமியிருக்கிறார்கள்.
பி.பா. அவர்கள் ஏதாவது தவறாக சொன்னார் என்றால், அவரை எதிர்க்கவேண்டும் என்கிற உணர்வோடு, தஞ்சையை சேர்ந்த ஒரு குழு தயாராக இருக்கிறது.
பி.பா. அவர்களின் உரையை மொழி பெயர்ப்பது யார் என்றால், நம்முடைய பேராசிரியர் அவர்கள். அப்பொழுது தான் அவர் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார்.
அந்த மாநாட்டு சூழ்நிலையைப் பார்த்தார், பி.பாலசுப்பிரமணியம் அவர்கள், பெரியாருக்கு ஆதரவு எக்கச்சக்கமாக இருக்கிறது - அதை நன்றாகப் புரிந்துகொண்ட அவர், என்ன சொல்லப் போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபொழுது,
அதற்கு நேர் எதிராக முதல் வாக்கியத்தை ஆரம்பித்தார்.
அதுதான் முதல் வெற்றி - சேலம் மாநாடு - திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றப்பட்ட மாநாடு.
My Leader Periyar E.V.Ramasamy என்றார்.
ஒரே கைதட்டல் எழுந்தது.
அவர்மீது எவ்வளவு கோபம் இருந்ததோ, அப்படியே அது தலைகீழாக மாறியது. எல்லோரும் கைதட்டியதும், பேச்சை அப்படியே நிறுத்திவிட்டார் பி.பா. அவர்கள்.
‘‘எனது தலைவர், பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களே’’
உடனே மொழி பெயர்க்க நின்றிருந்த பேராசிரியர், ‘‘எனது தலைவர், பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களே'' என்று இந்த அன்பழகன் சொல்லவில்லை - இந்த பி.பா. கூறுகிறார் என்றார்.
அமைச்சர் ஏற்றம் - இறக்கம்பற்றி சொன்னாரே, :அதற்காக இதைச் சொல்லுகிறேன்.
என்று இந்த அன்பழகன் சொல்லவில்லை, இந்த பி.பா. கூறுகிறார் என்றார்.
பி.பா. அவர்களும் உற்சாகமடைந்துவிட்டார்
கைதட்டல் அடங்குவதற்கே அய்ந்து நிமிடங்கள் ஆயிற்று. பி.பா. அவர்களும் உற்சாகமடைந்துவிட்டார். அதற்குப் பிறகு அவருடைய உரையை பேராசிரியர் மொழி பெயர்த்தார். எதிர்க்க வந்தவர்கள் எல்லாம் ஒரு வர்கூட தங்களுடைய ஆயுதத்தை எடுக்க முடியவில்லை. எல்லோரும் பெரியாரை பாராட்டிப் பேசுவது போன்ற சூழ்நிலை உருவானது.
அந்த முதல் வாக்கியத்தை, முதல் திருப்பத்தை உரு வாக்கிய பெருமை இனமானப் பேராசிரியர் அவர்களுக்கு உண்டு. இது வரலாற்றுச் சின்னமாகும்.
இப்படி எத்தனையோ செய்திகளை சொல்லலாம்.
இந்த இயக்கத்தில் அவருடைய பயணத்தை அன்றைக்குத் தொடங்கியதிலிருந்து, அவர் இறுதி மூச்சு அடங்குகின்ற வரையில், அதே கொள்கையில், அதே அளவிற்கு இருந்தார்.
இறுதியாக ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டும்.
பேராசிரியருடைய புத்தகங்கள் இங்கே இருக்கின்றன. இந்தப் புத்தகங்களை நீங்கள் வாங்கினால் மட்டும் போதாது.
சிறுசிறு வெளியீடுகள் பெரிய அளவிற்கு இருந்தாலும், அதை நிறைய பேர் படிப்பதில்லை என்று அமைச்சர் அவர்கள் இங்கே சொன்னார்; அது உண்மைதான்.
ஆனால், நம்முடைய இயக்கத் தோழர்களில் இளை ஞர்கள் நிறையப் பேர் படிக்கிறர்கள்.
சோசியல் மீடியா என்று சொல்லக்கூடிய சமூக வலை தளங்களில் உலக அளவில் ஒரு சர்வே எடுத்திருக்கிறார்கள்.
அந்த சர்வேயில், அதிகமாக மக்கள் தேடுகின்ற, படிக்கின்ற, ஆவல் காட்டுகின்ற ஒரு தலைவர் யார் என்றால், தந்தை பெரியார் - அவருடைய தத்துவங்கள் என்று சொல்லியிருக்கிறது.
பேராசிரியரின் இனமானப் பாடங்கள்
தந்தை பெரியாரால் எனக்குக் கிடைத்த பேறு என்பது 1933ஆம் ஆண்டு முதலே!
1938ஆம் ஆண்டு நான் பத்தாம் வகுப்பில் படிக்கின்ற பொழுதுதான் பெரியார் பேச்சு, அண்ணா பேச்செல்லாம் எனக்கு விளங்க ஆரம்பித்தது!
இன்றைக்குப் பல மொழிகளில் பெரியார் தேவைப் படுகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், எளிமையாக பாடங்களை எடுப்பார் பேராசிரியர் அவர்கள்.
‘‘இவர்தாம் பெரியார்’’
ஒரு சிறிய வெளியீடு - ‘‘இவர்தாம் பெரியார்'' என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது.
பேராசிரியர் அரசு அவர்கள், சென்னை பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் அவர்களுடைய பெயரில் ஓர் அறக்கட்டளை நிறுவச் சொன்னார்கள். உடனே அதைச் செய்தோம்.
அந்த அறக்கட்டளையின் சார்பாக முதல் சொற்பொழிவிற்கு யாரை அழைக்கவேண்டும் என்று கேட்டார்கள் எங்களிடம். இனமானப் பேராசிரியரைத்தான் அழைக்க வேண்டும் என்றோம்.
அவரை கேளுங்கள் - நீங்கள் இரண்டு பேரும் வந்து தொடங்கி வையுங்கள் என்றார் அவர்.
பேராசிரியர் அவர்கள், சென்னை பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரை - மிக அற்புதமான உரையாகும்.
தந்தை பெரியார் அவர்களின் 132 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலரில் பேராசிரியர் அவர்கள் எழுதிய கட்டுரை களையும் இதில் இணைத்திருக்கிறோம்.
அந்த உரை மிகப்பெரிய அளவில் இருந்தது. எப்படி யெல்லாம் தந்தை பெரியார் அவர்களிடத்தில் அவருக்கு அறிமுகம் கிடைத்தது என்று 31.3.2010 ஆம் ஆண்டு ஆற்றிய உரை இது.
ஏறத்தாழ 11 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்றப்பட்ட உரை அது. அதில், தனக்கும், பெரியார் அவர்களுக்கும் உறவு ஏற்பட்டது என்பதை - பேராசிரியர் அவர்கள் ஸ்கேன் போன்றவர் - எதையும் மிகைப்படுத்தமாட்டார். இருப்பதை, அப்படியே சொல்வார்.
அந்த உரையை சரளமாகப் பேசிக்கொண்டே வந்தார். அப்படி வரும்பொழுது, புதிதாக திடீரென்று தமிழரா? திராவிடரா? என்று சொல்கிறார்கள். திராவிடர் கழகம் என்று பெயர் செய்யும்பொழுது முன்னால் நின்றவர் அவர். ஆகவே, மிக அழகாக அதற்குப் பதில் சொல்கிறார்.
பேராசிரியர் பேசுகிறார் கேளுங்கள்:
திராவிடன் - தமிழன் பற்றிய பேராசிரியரின் அருமையான விளக்கம்
சில பேராசிரியர்கள் கூட கேட்டார்கள்
கேள்வி: எதற்காக தமிழ்நாட்டில் தமிழர்களாகிய நாம் ‘திராவிடர் கழகம்‘ என்று பெயர் வைக்க வேண்டும்? ‘தமிழர்’ என்னும் பெயருடன் இருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள்.
நான் அவர்களுக்குச் சொன்ன விளக்கம் இதுதான்.
1. பார்ப்பனரை விலக்காத பெயர் ‘தமிழன்’,
பார்ப்பனரை விலக்கிய பெயர் ‘திராவிடன்’ என்பதுதான்!
2. தமிழர் என்று கூறிக் கொள்ளுவதில் நான் பெருமைப்படுகிறேன். திராவிடர் என்பதால் நான் உரிமை பெறுகிறேன்.
3. உண்மையாகவே நாம், ‘தமிழர்’ என்று சொல்லும் பொழுது நமக்குக் கிடைக்காத உரிமையும், பெருமையும் ‘திராவிடர்’ என்று சொல்லுகிறபொழுது நமக்குக் கிடைக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
4. நான் திராவிடன் என்று சொல்கிறபொழுது நான் ஆரியத்தோடு ஒட்டாது, இன்னொரு இனத்தைச் சேர்ந்தவன் என்று பிரித்துக் காட்டுகிற அந்த ஆற்றல் தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழி பேசுகிற வேறு இனத்தவராகவும் இருக்கலாம்.
இங்கிலாந்து நாட்டுக்காரன்கூட இங்கு வந்து தமிழ் பேசலாம். டாக்டர் கால்டுவெல்கூட தமிழில் ஓரளவு எழுதக் கூடியவர். வீரமா முனிவர் என்ற மற்றொரு பாதிரியார் கான்ஸ்டன்டைன் பெஸ்கி அவர்கள் தமிழிலேயே நூல் இயற்றியிருக்கிறார். டாக்டர் ஜி.யு.போப் திருவாசகத்தை மொழி பெயர்த்தவர்; சைவ சித்தாந்தத்தைப் பற்றிப் பாராட்டிச் சொன்னவர்.
அவர் எழுதுகிறபொழுது சொல்கிறார்.
“தமிழ்நாட்டில் அறநூல்களைத், திருக்குறளையும், நாலடியாரையும் போன்ற நூல்களைத் தமிழர்கள் பெற்றிருக்கிற பொழுது - ஓர் உயர்ந்த அறநெறிக் கருத்துகளைப் பெற்றிருக்கிறபொழுது - நீதி நெறிக் கருத்துகளைப் பெற்றிருக்கிறபொழுது - அவர்கள் தங்களை வேறு எந்த மொழி பேசுகிறவர்களையும் விடத் தாழ்ந்தவர்கள் என்று எண்ணித் தலை குனியத்தேவையில்லை; யாருக்கும் தலைகுனியத் தேவையில்லை தமிழர்” என்று ஜி.யு.போப் அவர்கள் சொன்னார்கள்.
எனவே அந்த அடிப்படையில் திராவிடன் என்று சொல்கிறபொழுது, நம்முடய தகுதி உயர்கிறது - நம்மை வீழ்த்துவதற்கான முயற்சிகள் உடைபடுகின்றன!
அந்தவகையிலே, தந்தைபெரியார் அவர்கள் தமிழ்நாட்டு அரசியலில் ‘திராவிடன்’ என்று சொல்வதற்கு ஒரு செல்வாக்கை ஏற்படுத்தினார்
அறிஞர் அண்ணா அவர்கள் ‘திராவிடன்’ என்று சொல்வதற்கான காரணங்களை பல கட்டுரைகளில் எழுதினார். ஆனால் அய்யா முன்னிலையில் இருந்து அது நடைபெற்ற காரணத்தால் தான்-நீதிக்கட்சி ‘திராவிடர் கழகம்‘ என்று அழைத்த பொழுதுதான் - தமிழ்நாட்டில் நாமெல்லாம் திராவிடர் என்று சொல்லக்கூடிய ஒரு நல்ல சூழ்நிலை ஏற்பட்டது.
பெரியார் இல்லையானால் அறிஞர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டிருக்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.
“I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidan”. - அறிஞர் அண்ணா. ஏப்ரல் - 1962.
‘‘நான் திராவிடப் பாரம்பரியத்தில் இருந்து வந்தேன்’’ என்றார் அண்ணா அவர்கள்.
உறவுக்குக் கை கொடுப்பது - உரிமைக்குக் குரல் கொடுப்பது!
அதே நிலைதான், நம்முடைய முதலமைச்சர், இன்றைய முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்கள்தான் திராவிடப் பாரம்பரியத்தின் முதலமைச்சர் என்று மிகத் தெளிவாக சொல்கிறார்.
எனவே, இந்தத் திராவிடம் என்பது
உறவுக்குக் கை கொடுப்பது -
உரிமைக்குக் குரல் கொடுப்பது.
ஆங்கிலத்தில் இன்க்ளூசிவ் குரோத் என்கிற வார்த்தையையும், எக்ஸ்க்ளூசிவ் குரோத் என்கிற வார்த்தைகளையும் அண்மையில் பயன்படுத்துகிறார்கள்.
இதுபோன்ற அடிப்படை தத்துவார்த்த கருத்துகளை சொல்வதற்கு, இனமான பேராசிரியர் என்றும் வாழ்கிறார். அவருடைய பாடங்கள் என்றைக்கும் இருக்கும்.
இங்கே அருமையாக சொல்லி முடித்தார் சகோதரர் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள். உறுதி எடுக்கின்ற நாள் என்றார்.
இன்றைக்கு சவால்கள் ஏராளம்!
இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றன
அண்ணா அவர்கள், கலைஞர் அவர்கள், பேராசிரியர் அவர்கள் போன்றவர்களெல்லாம் கொள்கை ரீதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனுடைய ஒட்டுமொத்தமாகத்தான், இந்தப் பக்கம் திராவிடர் கழகம் - அந்தப் பக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் - இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
6 மாத ஆட்சிக்காலத்தில் மற்றவர்கள் நினைக்க முடியாத அளவிற்கு, அற்புதமான சாதனைகள்
வெற்றிகரமான ஓர் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதுவும் 6 மாத காலத்தில் மற்றவர்கள் நினைக்க முடியாத அளவிற்கு, அற்புதமான சாதனைகளை செய்துகொண்டிருக்கின்ற ஓர் ஆட்சி - அதை எப்படியாவது வீழ்த்தி விட வேண்டும் என்று காரணம் தேடுகிறார்கள். பாவம், பரிதாபத்திற்குரியவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
நீராரும் கடலுடுத்த பாடலுக்கு எழுந்து நிற்க முடியவில்லை என்றால், எதிரிகள் எங்கெங்கே உள்ளே நுழைந்திருக்கின்றார்கள் என்று சொல்லும்பொழுது, நீதிமன்றம் ஒரு களம் - அங்கே அவர்களுக்கு.
நீதிபதி சொல்கிறார், எழுந்து நிற்கவேண்டும் என்று ஆணை இல்லை என்று.
நல்லது - இதுபோன்று அடிக்கடி சொல்லுங்கள்.
அதனால்தான், புதிய புதிய ஆணைகளைப் போட்டு, கொஞ்சம்கூட எதிர்காலத்தில் யாரும் திமிர முடியாத அளவிற்கு - உங்களை சிக்கலில் வைக்கக் கூடிய அளவிற்கு, ஆற்றல் வாய்ந்த அரசு, இங்கே நடைபெறக்கூடிய அரசு.
உருவத்தால் இல்லையே தவிர,
உணர்வால் அவர்கள் இருக்கிறார்கள்!
பெரியார் இல்லை, பேரறிஞர் அண்ணா இல்லை, முத்தமிழ் அறிஞர் கலைஞர் இல்லை, இனமானப் பேராசிரியர் இல்லை - ஆகவே நாங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்காதீர்கள்.
அவர்கள் உருவத்தால் இல்லையே தவிர, உணர்வால் அவர்கள் கொடுத்த பாடங்களைப் படித்து முறையாக செய்யக்கூடியவர்கள் இன்றைக்கு இருக்கிறார்கள்
அந்தக் களங்கள் இருக்கின்றன - ஆயுதங்கள் இருக்கின்றன - பயிற்சிகள் இருக்கின்றன.
அந்த வகையில்தான், இன்றைக்கு பேராசிரியருக்கு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம் என்று சொன்னால், அவருடைய பெருமைகளை மட்டும் சொல்வதற்காக அல்ல - அந்த ஆயுதங்கள் இன்னமும் தேவைப்படுகின்றன; அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தவேண்டிய அவசியங்கள் நமக்கு இருக்கின்றன.
ஊடகங்கள் ஒரு பக்கத்தில் இருக்கின்றன என்று நினைக்கலாம் -
நேற்று முதலமைச்சர், அமைச்சர் ஆகியோர், பேராசிரியர் பெயரை சென்னையில் உள்ள வளாகத்தில் உள்ள ஒரு கட்டடத்திற்கு வைத்திருக்கிறார்கள்.
அவர்களுக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை
அண்ணா பெயரில் கட்சியின் பெயரை வைத்துக்கொண்டிருப்பவர், அய்யய்யோ, அம்மா பெயரில் இருப்பதை மாற்றிவிட்டார்களே என்கிறார்.
அம்மா பெயரில் இருப்பதை மாற்றவில்லையே. இன்றைக்கு அழகாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை கொடுத்திருக்கிறார்.
வளாகத்தில் எத்தனையோ கட்டடங்கள் இருக் கின்றன. அதில் ஒரு கட்டடத்திற்குத்தான் பேராசிரியர் பெயரை வைத்திருக்கிறார்கள்.
குறை சொன்னவர்களை நினைத்துப் பரிதாபப் படுவதைத் தவிர அவர்களுக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை.
அவர்களுக்குத் தடுமாற்றம்; குறை சொல்வதற்கு அவர்களுக்கு வேறு சரக்கு கிடைக்கவில்லை.
அவர்கள் ஆட்சியில் இருந்தபொழுது என்ன நடந்தது? எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக வந்தபொழுது, கலைஞர் பெயரில் உள்ள கல்லூரிகள் போன்றவற்றை மாற்றினார்கள். அன்றைக்குக் கலைஞர் எதிர்க்கட்சித் தலைவர்.
கலைஞரின் நகைச்சுவையான பதில்
செய்தியாளர்கள் கலைஞரிடம் கேட்கிறார்கள்,
என்னங்க, உங்கள் பெயரில் இருக்கும் கல்லூரியின் பெயரை எடுத்துவிட்டார்களே?
கலைஞர் அவர்கள் சிரித்துக்கொண்டே, அப்படியா? அது வேறு ஒன்றுமில்லை. எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்திருக்கிறார் அல்லவா! அவரிடம் சிலர், நீங்கள் ஆட்சிக்கு வந்ததும் நல்ல பெயரை எடுக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதை அவர் தவறாகப் புரிந்துகொண்டு ‘நல்ல’ பெயரை எடுக்கவேண்டும் போலிருக்கிறது என்று எங்களுடைய பெயரை எல்லாம் எடுத்திருக்கிறார் என்று நகைச்சுவையாக சொன்னார்.
அந்த நேரத்தில்கூட கலைஞர் அவர்கள் கோபப்படாமல், ஆத்திரப்படாமல் நகைச்சுவையோடு சொன்னார்.
அண்ணாமலைகளின் ஆரோகணம்
அதேபோன்று இப்பொழுது அண்ணாமலைகள் ஆரோகணம் செய்கிறார்கள்.
நீராரும் கடலுடுத்த பாடலுக்கு எழுந்து நிற்கவேண்டும் என்று உத்தரவு போட்டது சரி; ஆனால், முழுப் பாடலையும் பாடினால் நன்றாக இருக்கும் என்று.
இன்றைக்கு முரசொலியில் அதுகுறித்து அருமையான தலையங்கம் எழுதியிருக்கிறார்கள். முழுப்பாடல் என்னவென்று.
கலைஞர் அவர்கள் மிகப்பெரிய விஷயத்தை செய்திருக்கிறார் - ஆரியம்போல் வழக்கு அழித்தொழிந்து என்ற சொல்லை எடுத்துவிட்டார்.
நியாயமாக சண்டை போடவேண்டும் என்றால், நாங்கள்தான் போடவேண்டுமே தவிர, அண்ணாமலைகள் அல்ல.
அந்தப் பாடலை முழுமையாக வைத்தால், யாருக்கு சங்கடம்? கொஞ்சநஞ்சம் கிடைக்கின்ற வாக்குகளும் பி.ஜே.பி.,க்குக் கிடைக்காது - அண்ணாமலை சொன்னதைக் கேட்டார்.
அவரும் அந்தப் பாட்டை முழுமையாகப் படித்து சொல்லவில்லை; யாரோ சொல்லிக் கொடுத் திருக்கிறார்கள், அதன்படியே அவர் சொல்லியிருக்கிறார். இன்றைக்கு அதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்கள்.
யாரும் மிஞ்சியவர்களோ, தப்பியவர்களோ கிடையாது
ஆகவே, திராவிட இயக்கத்துக்காரர்களிடம் கேள்வி கேட்டு, இதுவரையில் யாரும் மிஞ்சியவர்களோ, தப்பியவர்களோ கிடையாது.
அதற்கெல்லாம் அடித்தளம் நூற்றாண்டு விழா நாயகராக இருக்கின்ற நம்முடைய பேராசிரியர் அவர்கள் - பேரறிஞர் அண்ணா, கலைஞர் - எல்லாவற்றையும்விட இவ்வளவுபேரையும் ஆளாக்கிய தந்தை பெரியார்.
பேராசிரியர் சொன்னார், எங்களையெல்லாம் நீங்கள் இன்றைக்குப் பெருமைப்படுத்தலாம்; பெரியார் இல்லை என்றால், நாங்கள் யாருமே இல்லை என்று சொல்லி, நம்மையெல்லாம் உற்சாகப்படுத்தியவர் அவர்.
இளைஞர்களுக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கிறது?
ஆகவே நண்பர்களே, அவருடைய நூற்றாண்டு விழா என்பது இருக்கிறதே, வெறும் பேராசிரியருடைய மாட்சிக்காக மட்டுமல்ல. உள்ளபடியே, இங்கே ஒளிபரப்பப்பட்ட காணொலி காட்சிகளைப் பார்த்த பொழுது, மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. ஒரே ஒரு நாள் இடைவெளியில் இதனை தயாரித் திருக்கிறார்கள். இளைஞர்களுக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கிறது? பெரியார் திடலில் எவ்வளவு சரக்குள்ளவர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கே இன்றுதான் தெரியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
நம்முடைய அழைப்பை ஏற்று, பேராசிரியருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், அன்புச்செல்வம் அவர்கள், டாக்டர் சொக்கலிங்கம் போன்றவர்கள், நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கு நன்றி!
வரும்பொழுது வலியோடு வந்தார்; திரும்பிப் போகும்பொழுது, வலிமையோடு செல்கிறார்
அமைச்சர் அவர்கள் இங்கே வரும்பொழுது வலியோடு வந்தார்; கூட்டம் முடிந்து திரும்பிப் போகும்பொழுது, வலிமையோடு செல்கிறார்.
எனவே, வலியோடு வந்தவர்களுக்கு இங்கேதான் பச்சிலை கிடைக்கின்ற இடமாகும்.
கலைஞர்கூட சொல்லியிருக்கிறார்,
கீரிக்கும் - பாம்புக்கும் சண்டை வந்தால், பச்சிலை மூலிகையைத் தேடி இங்கேதான் வருவோம் என்று சொல்வார்.
ஆகவேதான், நீங்களும் பச்சிலை மூலிகையைத் தேடி வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு எந்த வலிகள் வந்தாலும், அவையெல்லாம் தீர்ந்து, வலிமையோடு இருப்பீர்கள்.
பேராசிரியருடைய இனமானப் பாடத்தை நீங்களும் சொல்லிக் கொடுங்கள்
காரணம், பேராசிரியர் இடத்தில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். பேராசிரியருடைய இனமானப் பாடத்தை நீங்களும் சொல்லிக் கொடுங்கள்; மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
இந்த இயக்கம் பொலிவுற்று இருக்கவேண்டும்; வலிமையோடு இருக்கவேண்டும். அதன்மூலமாக, மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு என்று சுயமரியாதை இயக்கமாகத் தொடரவேண்டும் என்று சொல்லி,
வாய்ப்பளித்த உங்களுக்கும், வந்திருக்கின்ற அனைவருக்கும் நன்றி கூறி முடிக்கின்றேன்.
வாழ்க பெரியார்!
வாழ்க இனமானப் பேராசிரியர்!
வளர்க பகுத்தறிவுத் தொண்டு!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார்.
--------------------------------------- ”விடுதலை” 24-12.2021