ஆயர்குல
மாதர்கள் வழக்கம் போல் யமுனா நதிக்குக் குளிக்கப் போனால் நீரும் அவர்கள் அறியாதபடி
பின் தொடர்ந்து, அவர்கள் தங்கள் உடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு
ஆற்றிலிறங்கிக் குளித்துக் கொண்டிருக்கும் சமயம் பார்த்து, அவர்களின் ஆடைகளை
எடுத்து மரத்தின் மீது ஏறி வைத்துக் கொண்டு, அவர்களை எல்லாம் ஆடையின்றி
நிர்வாணமாகப் பரிதவிக்கவிட்டு, நீர் மரத்திலிருந்து கொண்டே, அவர்களை இரு கையையும்
தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டால் தான் தருவேனென்று சொல்லுவதும், அவர்களும் வேறு
வழியில்லாமல், உம்மிஷ்டப்படிச் செய்யவும், நீரும் அவர்களின் மர்மஸ்தானத்தைத்
தரிசித்துப் பரவசமடைந்தவுடன் அவர்களின் புடைவைகளைத் திருப்பிக் கொடுத்ததுமான
செயலிலிருந்தும் உமது வெட்கங்கெட்ட காமாந்தகாரமான செய்கையும், திருட்டுத்தனமும்
விளங்கவில்லையா?
கிருஷ்ணன்:- நான் கிருஷ்ண அவதாரம் எடுக்க வேண்டியதற்கு முக்கியக்
காரணம், மதுரை மாநகரில் கம்சன் என்னும் அரசன் செய்துவந்த கொடுமைகளையும்,
அஸ்தினாபுரியை அரசாண்டு வந்த துரியோதனாதிகள் செய்துவந்த கொடுமைகளையும் பொறுக்க
முடியாமல், பூதேவி என்னிடத்தில் வந்து முறையிட்டுக் கொண்டதால், அவள் கஷ்டத்தைத்
தீர்க்க வேண்டி, நான் வசுதேவருக்கும், அவர் பத்தினி ரோகிணிக்கும் புத்திரனாய்ப்
பிறந்து எம் தாய் மாமனாகிய கம்சனையும் கொன்று பாண் டவர்களையும், கவுரவர்களையும்,
சூதினாலும், தந்திரத் தினாலும் அவர்களுக்குள்ளேயே சண்டையிடுமாறு செய்து, டில்லி
மாநகரம் என்னும் குருக்ஷேத்திரப் பூமி யில் அவ்விருவருக்குமுள்ள பதினெட்டு அக்ரோணி
சேனைகளையும், பதினெட்டு நாளில் மடியவைத்து, என் மனைவியின் பூமிப் பாரத்தையும்
தீர்த்து வைத்தேன். இதுதான் நான் கிருஷ்ணாவதாரம் எடுத்ததற்கு முக்கியக் காரணம்.
வினா- நீர் அடிக்கடி பூமிப்பாரம் தீர்க்க வேண்டியதற் காகப்
பூலோகத்தில் வந்து பிறப்பதைப் பார்க்கப் போனால், ஒரு வியாபாரி தன் கையில் பிடித்த
துலாக்கோல் எந்தப் பக்கத்தில் கூடுதல் குறைச்சலாகின்றதோ அந்தப் பக்கத்தைச்
சமப்படுத்தி வைத்துக் கொள்வதுபோல், பூவுலகத்தின் பாரங்களைச் சமப்படுத்த அடிக்கடி
நீர் வந்து பிறப்பதாகத் தெரிகிறது. அப்படியிருந்தாலுங்கூட, நீர் பூமிப்பாரம்
தீர்க்க எடுத்த அவதாரமெல்லாம் பூலோகத்தின் கண்ணுள்ள ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா,
அய்ரோப்பா, ஆஸ்திரேலியா முதலிய பல கண்டங்களில் ஒன்றாகிய, ஆசியாக் கண்டத்தின் ஒரு
பாகமாகிய பாரத பூமியில்தானே உம் மனைவிக்குப் பூபாரம் தீர்க்க முடியாமல் போவதும்,
அதைத் தீர்த்து வைக்க நீர் அவதாரபுருடனாய் பூமியில் பிறந்து பல கஷ்ட நஷ்டங்களை
அடைவதுமான காரியம் நிகழ்கிறது! இது உம்மோடு மட்டும் நின்றபாடில்லாமல் உம்
மைத்துனராகிய சிவபெருமான் கூட இந்திய நாட்டில் அதிலும் தென் கோடியிலுள்ள
தமிழ்நாட்டில் 64 அவதாரம் எடுத்திருக்கின்றார்? அதன்றி உம் மகன் பிரமனும்
மன்மதனும் கூடத் தென் நாட்டில்தானே அவர்களின் திரு விளையாடல்களைப்
புரிந்திருக்கின்றார்கள்? ஏன் உங்களில் யாராவது ஒருவர் மேல்நாட்டுக்குப் போய்
உங்களின் திருவிளையாட்டைக் காட்டியிருக்கக் கூடாது? அங்கே போய் உங்கள் நாடகத்தை
நடித்தால், செருசலத்திலுள்ள யூதர்கள், கிறிஸ்து பெருமானைச் சிலுவையில் வைத்து,
தலையில் முள் முடிதரித்துக் கால், கைகளில் ஆணியடித்து வைத்தது மாதிரி அடித்து
விடுவார்கள் என்ற பயமா என்ன?
விடை:- அதற்கெல்லாம் பயந்து கொண்டு நாங்கள் இந்திய மண்ணில்
பிறக்கவில்லை. பின் எதனால் மற்ற நாடுகளுக்குப் போகாமல் இந்தியாவில் பிறந்தோம்
என்றால், உலகத்திலேயே இந்திய நாடுதான் மற்ற தேசங்களைவிடப் புண்ணிய பூமியென்று
அழைக்கப்படுவதனாலும், ஒவ்வொரு தெருக்களிலும் கோவில் குளங்கள் நிறைந்ததும்,
அக்கோவில்களில் குடி, கூத்தி, கொலை, சூதுவாது முதலிய அதரும கைங்கரியத்தை நடத்தி
வரும் நன்நாடு ஆனதனாலும், கல்விக்கரசியாகிய சரஸ்வதி பிறந்து உலகத்திலேயே அதிகப்படியாக
நூற்றுக்கு மூன்று வீதம் படித்த பண்டிதமணிகளால் நிறைந்த நாடானதனாலும்,
செல்வத்திற்கரசியாகிய சீதேவி பிறந்து அரைவயிற்றுக் கஞ்சிக்கு
அன்னக்காவடியெடுக்கும் புண்ணிய நாடானதினாலும், வீரம் செறிந்த சத்திதேவி பிறந்து
பக்தியிற் சிறந்து முக்தியை நோக்கும் மக்களைப் போல் எலும்புக் கூடும், நரம்பும்,
தோலுமாய் நடைப்பிணங்களாய்த் திரியும் பாரத புத்திரர்கள் பிறந்த நாடானதனாலும், ஆண்,
பெண் என்ற இரண்டு சாதியை இரண்டாயிரத்திற்கு அதிகமாக உற்பத்தி பண்ணும் இயந்திர நாடு
ஆனதனாலும், உலக மக்களிடத்திலே காணப்படாத, தீண்டாமை, பாராமை, நெருங்காமை, தெருவில்
நடக்காமை முதலிய புனித கைங்கரியத்தை உருவகப்படுத்தித் திருத்தொண்டு புரிந்த
நாடானதனாலும், ஒருவருக்கொருவர் மொழியொற்றுமை இன்றிப் பன்னூற்றுக்கணக்கான
படைகளையுடைய பாரத நாடானதனாலும், மண்ணில் மடிந்து போன மக்கள் பார்ப்பனர் மூலமாகத்
தலைமுறை தலைமுறையாக இவ்விடமிருந்து, சாப்பாடு சம்ரட்சணையைப் பெற்றுவரும்
செல்வம்பொருந்திய நாடானதனாலும், நாற்பது கோடி மக்களும் சுயமரியாதையற்று
அடிமைத்தளையின் ஆபரணத்தைப் பூண்ட நாடானதனாலும், மூடநம்பிக்கைக்கும், முட்டாள்
தனத்திற்கும் முதல் பரிசு பெற்ற புகழ் வாய்ந்த நாடானதனாலும், தெய்விகம் மறைந்து
வைதிகம் ஓங்கி மக்களை மாக்களாக்கும் திருவருள் சுரந்த நாடானதனாலும்,
பார்ப்பானுக்குப் பாக்கியத்தையும், பாட்டாளி மக்களுக்குக் கஷ்டத்தையும் கொடுத்து
வரும் கடவுளர் பிறந்த நாடானதனாலும், இன்னும் இதுபோன்ற புனிதகைங்கரியத்தைக் கைக்
கொண்ட நன்னாடானதனாலும் நாங்கள் இதில் வந்து பிறந்தோமே அன்றி வேறு
காரணத்திற்காகவல்ல!
வினா- ஆகையினால் நீர் அவதரிக்கும் போதே கடவுள் பிரிவினை, சமூகப்
பிரிவினை, ஜாதிப்பிரிவினை, பாஷைப் பிரிவினை, கோத்திரப் பிரிவினை, உடற்பிரிவினை,
உடைப் பிரிவினை, உணவுப் பிரிவினை, தலைப் பிரிவினை, கல்விப் பிரிவினை, ஒழுக்கப்
பிரிவினை, உயர்வு - தாழ்வுப் பிரிவினை, முதலிய பல்வேறு பிரிவினைகளை
உள்ளடக்கியதனால், நீர் உம் தாயார் வயிற்றிலிருந்து பிறக்கும் போதே கொலை, களவுகள்,
காமம், சூது, வாது முதலிய கொடிய பாதகங்களைச் செய்து தண்டனை அடைபவர்கள் வசிக்கும்
காராக்கிரமாகிய ஜெயிலில் பிறந்தீர் போலும். அல்லாமலும் உம்முடைய தந்தையாகிய
வாசுதேவர் உம்மைத் திருட்டுத் தனமாகக் கொண்டு போய் இடையச் சேரியாகிய ஆயற்பாடியில்
போட்டு விட்டு வரவும், கோகுல வாசிகளின் தலைவனாகிய நந்தகோபாலன் கண்டெடுத்துத் தன்
மனைவி யசோதையிடத்தில் கொடுத்து வளர்த்து வந்ததனால் தான், தாயில்லாப்
பிள்ளையாயிற்றே என்ற அனுதாபத்தினால் ஆயர்பாடியிலுள்ள சில பெண்கள் உமக்குத் தங்கள்
முலைப்பாலைக் கொடுத்துப் பிரியமாய் வளர்த்து வரும் போது, அதிலொருத்தியாகிய பூதனி
(பூதகி) என்ற பெண்ணின் ஸ்தன்னியத்தைக் கூடக் கடுமையாகக் கடித்து அவளுக்கு மரண
வேதனையை உண்டாக்கி விட்டீர் அல்லவா?
விடை:- ஆம் வாஸ்தவந்தான். மார்பில் பால் சுரக்காவிட்டால் சிறுவர்கள்
என்ன செய்வார்களோ அதைத்தான் நானும் செய்திருக்கின்றேனே அன்றி வேறொன்று மில்லையே!
வினா- அதனால் தான் பெண்கள் உமக்குப் பால் கொடுக்காதபடி
மாட்டுப்பாலைக் கொடுத்து வளர்த்து வந்திருக்கின்றார்கள். அப்படி வளர்த்துத் தான்
உம்மையும் மாடு மேய்க்கும் சிறுவர்களுடன் மாடு மேய்க்கப் புலன்களுக்கு
அனுப்பியதால், தங்க நிறம் போன்ற திருமேனியுடைய இராஜகுமாரனாக இருந்தும், அந்த
வெயிலிலும் கானலிலும் அலைந்து திரிந்ததனால் இயல்பான பொன்னிறம்மாறி, சரீரம்
கருத்துக் கரிக்கட்டை மாதிரி ஆனதனால்தானே உம்மைக் கோபாலகிருஷ்ணன் என்று பெயரிட்டு
அழைத்து வந்தார்கள். (அதன் பொருளாவது: கோபசு, பாலன் சிறுவன், கிருஷ்ணன் கருப்பன்
என்றபடி, மாடு மேய்க்கும் கருத்தப் பையன் என்பதுதான் அதன் அருத்தமாகும்). அப்படி
இருந்தும் உமது பிறவிக் குணமாகிய திருட்டுப் புத்தி மட்டும் உம்மை விட்டபாடில்லை.
சேரியிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும், யாருங்காணாதபடி உட்புகுந்து, அவர்கள்
வைத்திருக்கும் பால், தயிர், வெண்ணெய் முதலியவற்றைத் திருடித் தின்றுவிட்டு
ஒடுவதைக் கையும் களவுமாகக் கண்டுபிடித்து, உரலில் கட்டிவைத்துத் தயிர் கடையும்
மத்தால் உம்மை அடித்திருக் கின்றார்கள். அப்படியெல்லாம் பட்டும் புத்தி வராமல்,
ஒவ்வோர் இடையர் வீட்டிலும் புகுந்து புருடனில்லாத சமயம் பார்த்து அப்பெண்களை
யெல்லாம் கற்பழித்திருக்கிறீர் அல்லவா? இதுதானா நீர் பூவுலகில் பிறந்து பூமிபாரம்
தீர்க்க வந்த நேர்த்தி?
விடை:- அவர்கள் என் மீது மட்டற்ற காதல் கொண்டு என்னை விரும்பி
வந்தபடியால் தான் நான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர்களின் காம இச்சையை
நிறைவேற்றி வைத்தே னேயல்லாது, நான் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக நடக்கவில்லை.
இதனை அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
வினா:- ஒகோ! அப்படியா சங்கதி! ஆனால் நீர் அவர்களை "பூனை
மாமிசத்தைத் தள்ளினதுபோல்" தள்ளிவிட்டீராக்கும் என்றல்லவோ எண்ணினேன்.
அப்படியே நீர் சொல்லியது உண்மையாக இருக்குமானால், ஆயர்குல மாதர்கள் வழக்கம் போல்
யமுனா நதிக்குக் குளிக்கப் போனால் நீரும் அவர்கள் அறியாதபடி பின் தொடர்ந்து,
அவர்கள் தங்கள் உடைகளைக் களைந்து கரையில் வைத்துவிட்டு ஆற்றிலிறங்கிக் குளித்துக்
கொண்டிருக்கும் சமயம் பார்த்து, அவர்களின் ஆடைகளை எடுத்து மரத்தின் மீது ஏறி
வைத்துக் கொண்டு, அவர்களை எல்லாம் ஆடையின்றி நிர்வாணமாகப் பரிதவிக்கவிட்டு, நீர்
மரத்திலிருந்து கொண்டே, அவர்களை இரு கையையும் தலைக்கு மேல் தூக்கிக் கும்பிட்டால்
தான் தருவேனென்று சொல்லுவதும், அவர்களும் வேறு வழியில்லாமல், உம்மிஷ்டப்படிச்
செய்யவும், நீரும் அவர்களின் மர்மஸ்தானத்தைத் தரிசித்துப் பரவசமடைந்தவுடன் அவர்களின்
புடைவைகளைத் திருப்பிக் கொடுத்ததுமான செயலிருந்தும் உமது வெட்கங்கெட்ட காமாந்தகார
மான செய்கையும், திருட்டுத்தனமும் விளங்கவில்லையா?
விடை:- ஆம், அந்த வாலிப காலத்தில் எப்படிப்பட்டவர்களும் தவறி நடப்பது
இயற்கைதானே! அதையெல்லாம் குற்றமாகப் பாவிக்கலாமா? உலகத்தில் யார் தான் நெறியுடன்
பிறந்தது முதல் இறக்கிறபரியந்தம் நேர்மையுடன் நடந்திருக்கின்றார்கள்?
விடை:- நீர் சொல்வது வியப்பாக இருக்கின்றதே! சாதாரண மக்கள் தான்
தவறிழைத்தாலும் உம்மைப் போன்ற பரத்துவம் வாய்ந்த கடவுள் கூட அப்படிச் செய்வது
முறையாகுமா? என்றுதான் கேட்கின்றேன். சரி, இது போகட்டும். பிறந்தது முதல் உமக்குப்
பாலூட்டிச் சீராட்டிப் பாதுகாத்து வந்த நந்தகோபன் மகன், பலராமனுடன் எப்பொழுதும்
பொறாமையால், நீர் செய்யும் ஒவ்வொரு குற்றத்தையும் அவன் தலையில் சுமத்திவிடுவதும்,
பலராமனுடைய தங்கையாகிய சுபத்திரையைத் துரியோதனனுக்குக் கொடுக்க வேண்டுமெனச்
சொன்னதற்காக நீர் அதை மறுத்து, அர்ச்சுனனுக்குத் தான் கொடுக்கவேண்டும் என்று
சொல்லி ஒருவருக்கொருவர் சண்டை யிட்டு மண்டையுடைத்துக் கொண்டிருக் கின்றீர்களே.
இதானது உங்களுடைய சகோதரத் தன்மைக்கு ஏற்புடைத் தாகுமா என்றுதான் கேட்கின்றேன்.
விடை:- ஆம், வாஸ்தவந்தான். சுபத்திரை பலராமனுக்கு மட்டும் தங்கையல்ல.
எனக்கும் அவள் தங்கைதான் என்னை நந்தகோபன் பெறாவிட்டாலும், பெற்றவன் ஒரு பிதா,
வளர்த்தவன் ஒரு பிதாவென்ற நீதி வாக்கியத்தின்படி, நான் பிறந்தது முதல் என் தாய்
தந்தையரைப் பார்க்காமல் நந்தகோபனையும், அசோதையரையுமே என் சொந்தத் தாய் தந்தையாக
நினைத்துக் கொண்டிருந்தபடியால், அவர்கள் பெண்ணும் எனக்குச் சகோதரிதான் ஆகவேண்டும்.
ஆதலால், திரியோதரனுடைய சுபாவ குணங்களும், செய்கையும் எனக்குப் பிடிக்காதபடியால்
தான் அவனுக்குக் கொடுக்கும்படி வாதாடினேன். இதில் என்ன குற்றம்?
கிருஷ்ணாவதாரம்-சந்தேகமானது
வினா:- இதில் குற்றமொன்றுமில்லை. நீர் நல்லெண்ணத்துடன் தான்
அர்ச்சுனனுக்குக் கொடுக்கும்படி சொன்னீர். ஆனால், எனக்கு ஒரு பெருத்த
சந்தேகம் வந்து குறுக்கிடுகிறது. அதாவது, முதலில் நீரே பலராமனாகப் பிறந்திருப்பதாக
உமது சாட்சியத்தில் சொல்லி இருக்கின்றீர். இப்போது கிருஷ்ணனாகப் பிறந்ததாகவும்
சொல்லுகின்றீர். இதில் நீர் கிருஷ்ணனாகப் பிறந்த வரலாறுக்கும், பலராமனாகப் பிறந்த
வரலாறுக்கும், மலைக்கும் மடுவுக்குமுள்ள எவ்வளவோ வித்தியாசங்கள் காணப்படுவதும்
அன்றி, நீங்களிரு வரும் உருவத்தாலும், குணத்தாலும், செய்கையாலும் மாறுபட்டவர்
களாகவே காணப்படுகின்றீர்கள். அப்படி இருப்பதால், பரத்துவம் வாய்ந்த அவதாரம்
பலராமானா? அல்லது கிருஷ்ணனா? என்ற சந்தேகத்திற்கு இடந்தருகிறதல்லவா? ஆகையால்
இச்சந்தேகத்தைப் பற்றி என்ன சமாதானம் சொல்லப் போகின்றீர்?
விடை:-
மவுனம் (பதில் சொல்லவில்லை)
வினா:- இதற்குத் தகுந்த காரணம் சொல்ல முடியாமல் மவுனம் சாதிப்புதனால்
என்ன விளங்குகிறது என்றால், உமது சாட்சியமே நம்பிக்கையற்றதும், பொருத்தமற்றதுமாகவே
இருக்கின்றது. உமது இராமாவதாரத்தில், பரசுராமனும், ராமனும் சண்டையிட்டதாகச்
சொல்லியிருக்கின்றீர். இதில் நீங்களிருவரும் போர் தொடுத் திருக்கின்றீர்கள். நீர்
எடுத்திருக்கும் பதினொரு பிறப்பில் ஒன்றை ஒளித்து விட்டு, பத்து அவதாரம்தான் என்று
சொன்னீர். அல்லாமலும், இதில் நாலாவது அவதாரத்தைக் கொண்டு வந்து புகுத்திவிட்டீர்.
இதனால் உமது அவதார மகிமையில் கொஞ்சங்கூட நம்பிக்கை வைக்க இடமில்லாமலும்
போய்விட்டது. அல்லாமலும், உம் தாய் மாமனாகிய கஞ்சனையும் நயவஞ்சகமாய்க் கொலை
செய்திருக்கின்றீர். குருகுலத்து மன்னர்களையும் உம்முடைய கபடநாடகச் சூழ்ச்சியால்,
ஒருவருக்கொருவர் பிரிவினையை உண்டாக்கிப் பாண்டவர் பக்கம் நீர் சேர்ந்துகொண்டு,
தருமமே உருவாக அவதரித்திருந்த தரும புத்திரன் மனத்தைக் கலைத்துத் தன் மாமன்
சகுனியுடன் பஞ்சமா பாதகத்தில் ஒன்றாகிய சூதாட்டத்தை ஆடச் செய்தும், அதன்
நிமித்தமாகத் தனது தர்மபத்தினியாகிய திரவுபதியை இராஜ சபையில் கொண்டு வந்து
நிறுத்தி அவள் துகிலை உரிந்து நிர்வாணமாக விட்டு மானபங்கப்படுத்தியும், பாண்டவர்
களைப் பதினான்கு வருடம் காட்டில் விரட்டிவிட்டு அவர்கள் பதினான்கு வருடம்
கழித்துத் திரும்பி நாட்டுக்கு வந்தும், அவர்களுக்கு உரிய இராச்சியத்தைத்
திருப்பிக் கொடுக்காமல், தூது செல்வதாகச் சென்று அவர்களுக்குள்ளேயே சண்டையை
மூட்டிவிட்டு, குருக்ஷேத்திரத்திரம் என்று சொல்லக்கூடிய டில்லியில் பதினெட்டு நாள்
வரையில் கடும்போரிட்டுப் பதினெட்டு அக்ரோணி சேனைகளையும் மடியவைத்து வேடிக்கைப்
பார்த்துத்தானா நீர் இந்தப் பூமிப்பாரந் தீர்க்கவேண்டும்? "அரிதரிது
மானிடராதலரிது" என்ற முதியோர் மொழிப்படி, மானிட ஜென்மமாகப்
பிறக்கவேண்டியதற்குப் "புல்லாய்ப் பூடாகிப் புழுவாகி, கல்லாய், மரமாய்,
மிருகமாய், பறவை" முதலிய எத்தனையோ பிறவிகள் எடுத்துக் கடைசியில் மனிதப் பிறவி
பிறக்கவேண்டி இருக்கின்றது. அப்படியிருக்க, இந்தப் பூமியிலுள்ள பாரத்தைக் குறைக்க,
இந்தப் புனிதமான மானிடப் பிறவி தானே உமக்குக் கிடைத்தது. என் உலகத்தில் எண்ண
முடியாத கல்மலை, கரிமலை, பனிமலை, மண்மலை, பொன்மலை, கருங்கல்மலை, செம்புராகல்மலை,
சிலேட்டுமலை, சலவைக் கல்மலை, சுண்ணக் கல்மலை முதலிய எத்தனையோ வகை மலைகள்
இருக்கின்றனவே! அவற்றில் சிலவற்றை எடுத்தெறிந்துவிட்டால் பூமிப்பாரம் தன்னால்
குறைந்து போய்விடாதா? இதற்கு ஏன் இவ்வளவு பெரிய கஷ்டத்தைத் தேடிக்கொள்ள வேண்டும்?
அல்லது இதனால் உமக்காவது போற கதிக்கு நல்ல கதி கிடைத்ததா? ஒன்றுமில்லையே!
கடைசியில் "தன்னப்பம் தன்னைச் சுடும்; ஒட்டப்பம் வீட்டைச் சுடும்"
என்பது போலத் தானே நீர் செய்த கபட நாடகத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது
போல், காட்டில் வேடன் கை வில்லாலடிபட்டு நடு ஆற்றில் எறியப்பட்டு, சாளக்கிராமம்
என்னும் கல்லாய்க் கிடந்து நாளது வரையில் உருண்டு கிடப்பது தானே மிச்சம். சரி, அது
எப்படியாவது போகட்டும். இந்த வியாச்சியத்தைப் பற்றி உமக்கு ஏதாவது தெரியுமா?
விடை:- என் மைத்துனர் சிவபெருமான் சொன்னது தான் எனக்கும்
தெரியுமேயல்லாது வேறொன்றும் தெரியாது.
வினா:- சரியிருக்கட்டும், உம் கிருஷ்ணாவதாரம் இத்துடன் முடியட்டும்.
அடுத்த அவதாரத்தையும் சொல்லி வாரும். அதையும் கேட்டுவிடுவோம்.
--------------------- "சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் கேஸ்" நூலிலிருந்து