Search This Blog

12.11.16

பிராமணன் என்றால் என்ன அர்த்தம்?


‘பிராமணன்’ என்றால் என்ன அர்த்தம்?


ஜாதிப் பிரிவுக்கு மூல கர்த்தா பிரம்மா. இந்த பிரம்மாவைத்தான் உலக சிருஷ்டிக்கே கர்த்தா என்கிறது சாஸ்திரங்கள். அது மட்டுமல்ல; பிரம்மாவை-சிவனுக்கும், விஷ்ணுவிற்கும், தகப்பனுக்கும் மேலானவனுமாவான் என்றும் சாஸ்திர புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன.

பிரம்மா முகத்தில் பிராமணர்களையும், மார்பில் சத்திரியர்களையும், இடுப்பில் வைசியர்களையும், காலில் சூத்திரர்களையும் சிருஷ்டித்தார் என்று சொல்லிவிட்டு உடலில் இருந்து உலகை சிருஷ்டித்தார் என்று அதே சாஸ்திரங்களும் புராணங்களும் கூறு கின்றன. வேதத்தில் நான்கு ஜாதிகள் இல்லை. தேவர்கள்-கருப்பர்கள் அல்லது தேவர்கள்-அசுரர்கள்.

மனுதர்மம், வர்ணாசிரம தர்மம் என்பவை எல்லாம் ஆரியர்களுக்கு இந்த நாட்டில் ஸ்திரமான நிலையும் மக்களிடத்தில் செல்வாக்கும் ஏற்பட்ட பிறகுதான், தங்களையே கடவுள்களாக ஏற்படுத்திக் கொண்டு மற்றவர்களை கீழ்மக்களாக, மனுதர்ம மனித (மனுஷ) தர்ம சாஸ்திரத்தை ஏற்படுத்தி அதை பிரம்மாவின் மகனான மனு எழுதினார் என்று வெளியிட்டு அமலுக்குக் கொண்டு வந்துவிட்டார்கள்.


பொதுவாகச் சொல்லப்போனால், இந்த ஜாதிப்பிரிவு உற்பவத்திற்கு, ஆரியர்களுடைய சாமார்த்தியமான தந்திரங்களே காரணமாகும். ஜாதிப் பிரிவு, பித்தலாட்டமும் சுயநல தந்திர முமானதாகும் என்பதற்கு எடுத்துக் காட்டும் ஆதாரமும் வேண்டுமானால் முக்கியமாக ஒன்றைப் பார்க்கலாம்.

அதாவது, முதல் ஜாதியாராகிய ‘பிராமண’னுக்கு உயர்வும் அவனுக்கு பல வசதிகளும் கொடுக்கப்பட்டிருக் கிறதே தவிர, ஒழுக்கம், நீதி, நாணயம் என்பவையான உயர் மனிதப் பண்பு என்பவைகளில் ஒரு குணம்கூட கொடுக்கப்படவில்லை.

‘பிராமண’ தர்மம் என்ன வென்றால்,

¨ அவன், உடலுழைத்து பாடுபடக் கூடாது.

¨ அவன், மற்றவர்களிடம் வேலை வாங்கலாம்.

¨ அவன், ஏர் உழுதால் பாவம்!

¨ அவன், மற்றவர்கள் உழைப்பால் உயிர் வாழலாம்!

¨ அவன், விபசாரம் செய்தால், விபசாரத்திற்கு உள்ளான பெண் ணுக்கு மோட்சம்!

¨ அவன், பலாத்கார புணர்ச்சி செய்தால், ஊரை விட்டு வெளி யேற்றலாம்.

¨ அவன் கொலை செய்தால், அவ னுக்கு மொட்டை அடித்தாலே போதுமான தண்டனை!

¨ அவன், திருடினாலும், அவன் சொத்துக்களை அவன் எடுத்துக் கொண்டதாகுமே தவிர, பிறர் பொருளை களவாடினதாகாது.

¨ அவன் சொத்துடையவனிடமி ருந்து பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ளலாம். 

--அவன், மது வருந்தலாம்; மாட்டு மாமிசம் சாப்பிடலாம், சூது ஆடலாம், தன் நலத்திற்குப் பொய் பேசலாம்! இவை குற்றமாகாது!

¨ அவன் என்ன செய்தாலும் அரசன் அவனை தண்டிக்கவே கூடாது.

இன்னோரன்ன மற்றும் இது போன்ற பல சலுகைகள், வசதிகள், உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 

இப்படிப்பட்டவர்தான் மக்களில் மேலான - முதலாவதான உயர்ந்த ஜாதி, தேவர்க்கொப்பான தேவர்கள் என்று சொல்லும்படியான ஜாதியாம்!


இவை மாத்திரமல்ல, இந்த மேல் ஜாதிக்காரர்களான ‘பிராமணர்’கள் என்பவர்களால் கற்பிக்கப்பட்டிருக்கிற பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன், சந்திரன், சூரியன், அக்கினி, வாயு, வருணன், சரஸ்வதி முதலிய ஏராளமான தேவ தேவர்கள் ‘கடவுள்’கள் என்பவர்கள் யோக்கியதைகளும் இதுபோல நீதி, நேர்மை, நாணயம், உண்மை முதலிய மனிதப் பண்பு களுக்கு அப்பாற்பட்டதாகவும், பார்ப் பனர்களின் தர்ம உரிமையை விட பலமடங்கு மேற்பட்டதாகவே கற்பிக் கப்பட்டிருக்கின்றன.

மற்றும் மேல்கண்ட இரு கூட்டத் திற்கும் சூதும் வாதும், சூழ்ச்சியும், தந்திரமும் மாற்றாரைக் கெடுக்கும் கெடுமதியும் எல்லையற்றதாகவே நடப்பில் இருந்து வருகின்றன. மற்ற கீழ் ஜாதி என்பவற்றிற்கு மிகமிகக் கடுமை யான நிபந்தனைகள், தண்டனைகள், கொடுமைகள் தர்மமாக கற்பிக்கப் பட்டிருக்கின்றன. இந்த நிலையில் இப்படிப்பட்ட ஜாதிமுறை, உயர்ஜாதி ‘பிராமண’ ஜீவன்கள் இந்த நாட்டில் இருக்க விடலாமா? நீங்களே சொல்லுங்கள்.

_----------------------- 01-05-1957 ‘விடுதலை’யில் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த அறிக்கை


1.11.16

பொது சிவில் சட்டம் - சில கேள்விகள்


பொது சிவில் சட்டம் - சில கேள்விகள்



சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெற்ற (29.10.2016) பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் தெளிவாக்கப்பட்டுள்ள கருத்துகளும், தகவல்களும் முக்கியத்துவம்வாய்ந்தவையே.

(1) பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட முயற்சிக்கும், பொது சிவில் சட்டத்தை நோக்கிய சில கேள்விகள் உண்டு. மற்ற மதத்தை நோக்கி செலுத்தப்படும் பார்வைக்கு முன்னதாக பி.ஜே.பி. அமைக்கத் துடிக்கும் இந்து ராஷ்டிரத்துக்கான இந்தச் சட்டத்தில் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?


 (அ) பிறப்பின் அடிப்படையில் பேதப்படுத்தும் இந்து மதத்தின் வருணாசிரமம் - ஜாதிக்குத் தடை வருமா?

 (ஆ) சுடுகாடு - இடுகாடுகூட பொதுவாக இல்லாமல் இன்னும் ஜாதி அடிப்படையிலான இடங்கள் இருக்கின்றனவே - அவற்றைத் தடை செய்து இந்துக்கள் அனைவருக்கும் ஒரே சுடுகாடு - இடுகாடு உருவாக்கப்படுமா?

 (இ) இந்து மதத்துக்குள் முரண்பட்ட பல்வேறு பிரிவுகள் இருக்கின்றனவே அவையெல்லாம் அகற்றப்பட்டு ஒரே கோட்பாடு - சீரமைப்புக்குள் கொண்டுவரப்படுமா? எடுத்துக்காட்டாக பல்வேறு திருமண முறைகள் ஒழிக்கப் பட்டு, ஒரே மாதிரியாக ஏற்படுத்தப்படுமா?

 (ஈ) இந்து மதத்துக்குள்ளே சில பிரிவினர்களிடையே பலதார திருமணங்கள் உண்டே - அவையும் தடுக்கப்படுமா?

 (உ) இந்துக்களுக்குள் உணவுப் பழக்கவழக்கங்கள் பலவகைப்பட்ட முறைகளில் உள்ளனவே - வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி, நாய்க்கறி உணவுப் பழக்கவழக்கங்கள் முக்கியமாக உண்டே! மாட்டுக்கறித் தடை விதிப்பை அப்பகுதிகளிலும் முற்றாகச் செய்யும் நோக்கம் பின்வாங்கப்படுமா?

 (ஊ) இந்து மதக் கோவில்களில் அர்ச்சகர்களாக பார்ப் பனர்கள் மட்டுமே வர முடியும் என்ற நிலை ஒழிக்கப்பட்டு, இந்து மதத்தைச் சேர்ந்த எந்தப் பிரிவினரும் அதற்குரிய பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகராகும் உரிமை வழங்கப்படுமா?

 (எ) இந்து மத வேதங்கள், சாஸ்திர நூல்கள், (மனுதர்மம் உள்பட)உபநிஷத்துகள்,இதிகாசங்கள்,புராணங்கள்எனப்படு பவைகளில் ஜாதியை ஆதரித்தும், பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர் அல்லாதாரை சூத்திர்கள் என்றும், அசுரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும், பெண்களைப் பாவ யோனி யில் பிறந்தவர்கள் என்றும் எழுதப்பட்டுள்ளதே - இந்த அவமரியாதையை அகற்றும் நோக்கத்திலும், அனைவரும் சமத்துவம் என்ற ஒரே பொது நிலைக்குக் கொண்டு வரும் நோக்கத்திலும் அவையெல்லாம் தடை செய்யப்படுமா?

 (ஏ) இந்தியா முழுவதற்கும் மது விலக்குச் சட்டம் கொண்டுவரப்படுமா? (அய்) புதிய கல்வித் திட்டம் ஒன்றைக் கொண்டு வருவதாக உத்தேசித்துள்ளார்களே - அந்தத் திட்டம் பொது சிவில் சட்டத் திற்கு விரோதமான தன்மையில் இருக்குமாதலால் அத்திட்டம் கைவிடப்படுமா? புதிய கல்வித் திட்டத்தின் முகவுரையில் இந்திய நாட்டின் குருகுலக் கல்வி, வேதக் கல்வி அடிப்படையில் குரு - சிஷ்ய உன்னதமான உறவு என்றெல்லாம் கூறப்பட்டுள்ளதே - இப்பொழுது கொண்டுவர உத்தேசித்துள்ள பொது சிவில் சட்டத்துக்கு இந்தக் கல்வி முறை எந்த வகையில் உகந்ததாக இருக்க முடியும்?

 (ஒ) இந்தியாவில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கின்றனவே சி.பி.எஸ்.இ., செகண்டரிஸ்கூல், மெட்ரிகுலேசன், அங்கன்வாடி என்றெல்லாம் பல்வேறு வகையான கல்விக் கூடங்களும், கல்வித் திட்டங்களும் நடைமுறையில் உள்ளனவே இவை யெல்லாம் ஒழிக்கப்பட்டு இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான கல்வி கொண்டுவரப்படுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் முறையாகப் பதிலும், விளக்கமும் தெளிவோடு சொல்லியதற்குப் பிறகு, பொது சிவில் சட்டம்பற்றிய கருத்துக் கூறுமாறு பொதுமக்களைக் கேட்பதுதானே பொருத்தமாக இருக்க முடியும்? 


இன்னொரு முக்கிய கேள்வி இருக்கிறது. இந்து மதத் துக்குள் தாங்கள் துவிஜாதி (இரு பிறப்பாளர்) தாங்கள் பிர்ம்மாவின் நெற்றியிலிருந்து பிறந்தவர்கள், மற்றவர்கள் எல்லாம் பிர்ம்மாவின் காலில் இருந்து பிறந்தவர்கள் என்பதை அறிவிக்கும் தகவல் பலகையாகக் காட்சியளிக்கும் பூணூலுக்குத் தடை விதிக்கப்படுமா? முஸ்லிம் மதத்தில் பெண்கள் உரிமைப் பாதிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் - அவர்களை மீட்டெடுக்கவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கவலையுடன் கூறியிருப்பதை ‘வரவேற்கிறோம்.’ பெண்கள் எந்த மதத்தின்கீழ், எந்தப் பதாகையின்கீழ் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கவேண் டியதுதான். கல்வி வளர்ச்சியை ஊக்கப்படுத்த ஊக்கப்படுத்த எந்த மதத் தடைகளையும் தகர்த்துக் கொண்டு உரிமை மறுக்கப் பட்டவர்கள் கொந்தளித்து எழவே செய்வார்கள். அந்தக் கல்வி, அறிவுத் திசையை செப்பனிடுவதாகவும் இருக்க வேண்டும்.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் முஸ்லிம் பெண்கள் பர்தா முக்காடு அணிந்து வருவது அனேக மாக முற்றாக மறைந்துவிட்டது. இந்து மதத்திலும்கூட சில பிரிவுகளில் அது இருந்துதான் வருகிறது. தலாக் முறைகூட சிலநாடுகளில் கடைபிடிக்கவில்லைதான். இந்த முறை இந்தியாவில் இருப்பதால் எல்லா முசுலிம் வீடுகளிலும் இது அன்றாடம் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்பதற்கான விவரங்கள் கிடையாது! நூற்றுக்கு நூறு கல்வியைக் கொடுங்கள்- உரிமைகள் எந்த மதத்தில் மறுக்கப்பட்டாலும் கல்வியின் எழுச்சிக்குமுன் மறுப்புகள் மரித்துப் போய்விடும். 

அடிப்படையைச் செய்யாமல், இலைகளையும், கிளைகளையும் வெட்டிக் கொண்டிருக்கவேண்டாமே! 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டுகளில் கட்டாய கல்வி, அகில இந்திய அளவில் மதுவிலக்கு என்று கூடத்தான் இந்திய அரசமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல், பொது சிவில் சட்டம்தான் முக்கியம் என்று பி.ஜே.பி. சொல்லும்போது, அச்சமும், அய்யமும் கைகோர்க்கின்றன என்பது உண்மையே! 

 ----------------------------------’விடுதலை’ தலையங்கம் 1-11-2016