கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறிய வேண்டாம்!
காம்ரேடுகளுக்கு நமது கனிவான வேண்டுகோள் (3)
சி.பி.எம். அகில இந்திய முன்னணித் தலைவர்களும் சரி மாநில சி.பி.எம். எழுத்தாளர்களும் சரி, நீதிக்கட்சியின்மீது அடிப்படைப் புரிதலின்றிச் சேற்றைவாரி இரைப்பது என்பதை ஒரு பெரிய கண்டு பிடிப்பு போலக் கூறுவதை வழமையாகக் கொண்டுள்ளனர்.
“நீதிக் கட்சி பிராமணர் அல்லாத உயர் ஜாதிக்காக அவர்களால் நடத்தப்படுகிற, அவர்களது கட்சியாகவே பிறப்பெடுத்தது. அரசியல் அதிகாரத்தையும் உத்தியோக செல்வாக்கையும் தங்களுக்காக வென்றெடுப் பதே அவர்களது குறிக்கோள்.
இப்படி ஒரு குறுகிய நோக்கத்துடன் துவக்கப்பட்டிருந்த தால் இவர்கள் இயல்பாகவே ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கு அனுசரணையாகவே நடந்து கொண்டார்கள். தங்கள் கையில் அரசியல் அதிகாரம் வரும்வரை தேசத்தின் சுதந்திர லட்சியத்தையே ஒத்திப் போடலாம் என்றார்கள்” என்று குற்றஞ் சாட்டப்பட் டுள்ளது.
வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் வெளியிட்ட (1916 டிசம்பர் 20) ‘பார்ப்பனரல் லாதார் கொள்கை’ அறிக்கையை ஆழ்ந்து படித்தால் நீதிக் கட்சியின் தோற்றம், நோக்கம் இவற்றின் அருமை புரியும்.
பொத்தாம் பொதுவில் ஏதோ சொல்லுவது யாருக்கும் எளிது; இதைவிட மேலான தரத்தில் தீக்கதிரிலிருந்து எதிர்பார்த்து ஏமாந்தோம்.
நீதிக்கட்சி ஏன் தோற்றம் பெற்றது? நாம் சொல்லுவதைவிட ‘தினமணி’யின் பழுத்த ஆசிரியரும் - பார்ப்பனருமான திரு. ஏ.என். சிவராமன் என்ன எழுதுகிறார்?
“சென்னை சம்பந்தப்பட்ட மட்டில் மாநில மட்டத்தில் காங்கிரசுக்கு எதிரான கிளர்ச்சி, ஒரு புதிய வடிவில், புதிய உணர்ச்சியுடன் புதிய முடிவுகளுடன் உருவாயிற்று.
இப்போது நமது வரலாற்றுக் கண் ணோட்டத்தை (டெலஸ்கோப் கருவியை) 1920-க்கு முன்னர் இருந்த அய்ந்து ஆண்டு களுக்கு முன் திருப்புவோம்.
1914-1918இல் உலக யுத்தத்தின்போது - காங்கிரஸ் ஸ்தாபனம் இந்தியாவுக்கு டொமினி யன் ஆட்சி (ஆஸ்திரேலியா, கனடா போன்ற சுயாட்சி) வேண்டுமென்று கோரியது. அப் போது காங்கிரஸ் தலைமை பெரும்பாலும் படித்தவர்களிடமே இருந்தது.
அந்தக் காலத் தில் தென்னாட்டில் படித்து உத்தியோகங் களில் அமர்ந்தவர்களின் தொகை, மற்ற இனத்தாரைவிட பிராமணர்கள் தொகை அதிகம் இருந்தது. ஆகையால் காங்கிரசிலும் பெரும்பாலான தலைவர்கள் பிராமணர் களாக இருந்தனர்.
அந்தக் கட்டத்தில் பிரிட்டிஷார் தம்மிடமிருந்த அதிகாரத்தை இந்தியர் கைக்கு மாற்றினால், தென்னாடு சம்பந்தப்பட்ட மட்டில் இது பிராமணர் ஆதிக்கமாகவே இருக்குமென்று பிராமணர் அல்லாதவர்களில் படித்தவர்களும், பணக்காரர்களும் அஞ்சினர் அல்லது அச்சத்தைக் கிளப்பினர்.
இவர்கள் ‘தென்னிந்திய லிபரல் பெடரேஷன்” என்ற சங்கத்தை அமைத்தனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். “அஞ்சினர் அல்லது அச்சத்தைக் கிளப்பினர்!” என்று ஏ.என். சிவராமன் கூறுகிற அஞ்சலில்தான் நீதிக்கட்சியின் தோற்றமே அடங்கி இருக்கிறது.
(நீதிக்கட்சி வரலாறு - தொகுதி - 1 -
க. திருநாவுக்கரசு பக்கம் 209-210).
பார்ப்பனரான பிரபல தினமணி ஆசிரியர் ஒருவராலேயே நீதிக்கட்சி தோற்றுவிக்கப் பட்டதன் நியாயத்தை மறுக்க முடியவில்லை. ஆனால், இடதுசாரி கட்சி ஒன்று அதன் பிறப்பிற்கு மாசு கற்பிப்பது என்பது ஒரு கெட்டவாய்ப்பேயாகும்.
இப்படிக் குற்றம் கண்டுபிடிக்கும் ‘தீக்கதிராலேயே’ ஓர் அடிப்படையான உண்மையை மறுக்க முடியவில்லை.
நீதிக்கட்சி முன் வைத்த வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கையில் ஒரு ஜனநாயகத் தன்மை இருந்தது என்று ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த வகுப்புவாரி உரிமையால் ஏற்படும் பலன் பார்ப்பனர் அல்லாதாரில் உயர் ஜாதியாருக்குத்தான் என்று சாதிக்கப் போகிறார்களா என்று தெரியவில்லை.
மதுரை சொக்கன், பேராசிரியர் அருணன் அவர்களின் “காலந்தோறும் பிராமணீயம்” எனும் தொகுப்புகளை ஒரு முறை படித்தால் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தின் தோற்றத்தின் அருமையை உணர முடியும்.
நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைப் பட்டியலை அளிக்கத் தயார் - அவற்றைப் படித்துப் பார்த்து விட்டு, அதில் எங்கு பார்ப்பனர் அல்லாதாரில் உயர் ஜாதியினரின் நங்கூரம் பதிந்து இருக்கிறது என்று கண்டு பிடித்துச் சொல்லட்டும் எடுத்துக்காட்டுக்காக ஒரு சில இங்கே:
- பொதுத் துறையில் தாழ்த்தப்பட் டோர் உட்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள் வழங்கப்பட்டன.
- துப்புரவு வகுப்பினர், தோடர்கள், கோடர்கள், படுகர்கள் ஆகியவர்களுக்காகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டன.
- தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள் செய்யப் பட்டன.
- தாழ்த்தப்பட்டோர்க்கு வீட்டு மனைகள், குடியிருப்புகள் அமைத்துத் தரப்பட்டன. சாலைகள் போடப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குப் பள்ளிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
- தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் கருதி, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர், தனி அலுவலர் என்பதை லேபர் கமிஷனர் என்று மாற்றினர்.
- தாழ்த்தப்பட்ட வகுப்பாரில் என் னென்ன சாதிகள் உள்ளன என்பதைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
- குறவர்களை எல்லா வகையிலும் சீர் திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன.
- கோவை மாவட்டத்திலுள்ள வலை யர், குறவர் ஆகியோரைக் குற்றப் பரம் பரையிலிருந்து மீட்க அவர்களின் குழந்தை களுக்கு ரூ.25 - நிதி உதவிகள் (ஸ்காலர் ஷிப்புகள்) அளிக்கப்பட்டன.
- ஆதிதிராவிடர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு அதனைப் பயன்படுத்த மூலதனம், பிற சாதியினரிடமிருந்து பாதுகாப்பு - அடமானம் வைக்காமல் இருக்க அறிவுரை இன்னும் பிற தொல்லைகளிலிருந்து மீட்பு என உதவிகள் செய்யப்பட்டன.
- தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீட்டு மனை வாங்குவதற்குக் கடன் வசதி செய்து தரப்பட்டது.
- ஆதிதிராவிடர்களுக்கு விவசாயத் திற்காக நிலங்களை ஒதுக்குகிறபோது மரங் களின் மதிப்பு நில அளவைக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தனர்.
- அருப்புக்கோட்டையில் குறவர் பையன்களுக்குப் படுக்கை வசதி கொண்ட மன்றம் கட்டித்தர அளிக்கப்பட்ட தொகையை உயர்த்தித் தர உத்தரவு இடப்பட்டது.
- மீனவர் நலன் காப்பதற்காக லேபர் கமிஷனர் நியமிக்கப்பட்டார்.
- கள்ளர் சமுதாய முன்னேற்றத்திற் காகப் புதிதாக லேபர் கமிஷனர் நியமிக்கப் பட்டு, அவர் சில வழிமுறைகளை உருவாக்கித் தர ஏற்பாடு செய்தனர்.
- நிலத்தில் கட்டடத்தைக் கட்டிக் கொண்டு நில வாடகை செலுத்துவோர்க்கு வாடகைதாரர் குடியிருப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டப்படி நில உரிமை யாளர்களால் அப்புறப்படுத்தப்படுவோம் எனும் பயம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீங்கியது.
- பி. அண்டு சி வேலை நிறுத்தத்தின் விளைவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் செய்யப்பட்டன.
- தஞ்சை கள்ளர் மகா சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, அய்ந்து பள்ளிகளைத் தஞ்சை வட்டாரத்தில் திறக்க உத்தரவிடப் பட்டது.
- ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத் திற்காகப் பொது மக்களின் உதவியையும், உறவையும் பலப்படுத்த அரசு வேண்டுகோள் களை அரசு ஆணையாகப் பிறப்பித்தது.
- குடிப்பழக்கம் உள்ளவர்களின் பழக் கத்தை மாற்ற மக்களை நெறிப்படுத்த ஆணை வெளியிடுதல்.
- ஆதி ஆந்திரர்களுக்கு சந்தை விலை யில் நிலங்களை அளித்தல்.
- தஞ்சாவூர் கள்ளர் பள்ளிகளின் நடைமுறை செலவுகளை ஏற்றல்; சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், கடன் வசதிக்கு ஏற்பாடு செய்தல்.
- மலபார் மாவட்டத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன.
- சென்னை நடுக்குப்பத்தில் மீனவப் பிள்ளைகளுக்குப் பள்ளிக்கூடம் திறக்கப் பட்டது.
- கிழக்குக் கடற்கரை ஊர்களில் ஆறு இரவுப் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மூன்று தொடக்கப் பள்ளிகள் நிறுவப்பட்டன.
- உள்ளாட்சி மன்றங்களில் தகுதியான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கிடைக்கும்போது அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என உத்தரவு இடப்பட்டு இருந்தது.
- மருத்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உதவி நிதி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.
- அரசுப் பள்ளிகளில் வகுப்புரிமை நிலைநாட்டப்பட ஆண்டுதோறும் அறிக் கைகள் வெளியிடப்பட பொதுத்துறை கேட்டுக் கொள்ளப்பட்டது.
- தாழ்த்தப்பட்ட மாணவர்கள், கல்வி கற்பதற்கு கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்வதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட் டன. தடைகள் ஏதாவது செய்யப்படுமானால் உடன் மாற்று ஏற்பாடு செய்யவும் உத்தர விடப்பட்டு இருந்தது.
- சென்னை மாகாணத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட மாணவர்கள் எஸ்.எஸ். எல்.சி. தேர்வுக்குப் பணம் கட்டத் தேவையில்லை என ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
- கல்லூரிகளிலும், உயர்நிலைப் பள்ளி களிலும் படிக்கும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்டினால் போதும் எனச் சலுகை வழங்கப்பட்டு இருந்தது.
- தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர் களின் எண்ணிக்கையை உயர்த்தியும் கூடுதல் நிதி அளித்தும் சலுகைகள் வழங்கப்பட்டன.
அரசு ஆணைகளின் தொகுப்பு:
1. பெண்களுக்கு வாக்குரிமை அரசாணை எண். 108 நாள்: 10-05-1921.
2. பஞ்சமர் என்ற சொல் நீக்கப் பெறல் - ஆதிதிராவிடர் என அழைக்கப் பெறல். அரசாணை எண். 817 நாள் 25-3-1922
3. கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் அமைத்தல். அரசாணை எண். 536 நாள் 20-5-1922.
4. கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப் பனரல்லாத பிள்ளைகள் தொடக்கப் பள்ளி களில் சேர்க்கப்பட வேண்டும் அரசாணை எண். 849 நாள் 21-6-1923.
5. தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாக சேர்க்க வேண்டும். அரசாணை எண். (அ) 205 நாள்: 11-2-1924; (ஆ) 1825 நாள்: 24-9-1924.
6. இந்து சமய அறநிலையச் சட்டம் அரசாணை எண். 29 நாள். 27-01-1925.
7. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப்பனர் அல்லாத மாணவர்களைச் சேர்ப்பது குறித்த ஆணை அரசாணை எண். (அ) 636 நாள்: 2-5-1922. (ஆ) 1880 நாள் 15-9-1928.
8.வகுப்புரிமைக்காகப் பிறப்பிக்கப்பட்ட ஆணை அரசாணை எண்.744 நாள் 13.9.1928.
9. சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கல் அரசாணை எண். 484 நாள் 18-10-1929.
மேலும் தேவதாசி ஒழிப்புச் சட்டம் (1930)
பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீதிக்கட்சியில் அலை அலையாக நன்மைகள் நடந்தேறியிருக்க, நீதிக்கட்சியால் பார்ப்பனர் அல்லாத உயர் ஜாதியினர் பலன் அடைந்தனர் - தாழ்த்தப்பட்டோருக்கு ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லலாமா தீக்கதிர்?
நீதிக்கட்சியின் இரண்டாவது அமைச்சர வையின் காலம் (1923-1926). இந்தக் கால கட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம் அதுதான் ஒரு ஒளி முத்து!
ஒன்று அறநிலையப் பாதுகாப்பு சட்டம் ஆகும்.
ஆண்டாண்டுக் காலமாகப் பார்ப்பனர் களின் அடுப்பங்கரையாக கோயில்கள் இருந்தன. கோயில் அர்ச்சகர்களைக் கோயில் பூனைகள் என்று கூறி ஒரு நூலையே எழுதியுள்ளார் கோவை கிழார். (1945).
கோயில் கொள்ளையைக் கட்டுப்படுத்தக் கொண்டு வரப்பட்டதுதான் இந்தச் சட்டம்.
பார்ப்பனர்கள் தலையில் அல்லவா கை வைத்து விட்டனர்! விடுவார்களா? அதற்கு மேல் வாயை அகலப்படுத்த முடியாத அளவுக்கு அலறினார்கள்.
“நீதிக்கட்சியினர் பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்கவில்லை. கடவுளையும் எதிர்க்கக் கிளம்பி விட்டார்கள். மதத்தை அழிக்க முனைந்து விட்டார்கள். ஆண்டவனையே சட்டம் போட்டுக் கட்டுப்படுத்தும் அடாத செயலை எவரும் ஆதரிக்க மாட்டார்கள். மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இம்மசோதாவை ஜாதி, மத வித்தியாசமின்றி, கட்சிப் பாகுபாடின்றி ஒருமனதாக எதிர்க்க வேண்டும்”
இப்படி பேசியவர் யார் தெரியுமா? பார்ப்பனர் குலத் திலகம் வாயாடி சத்திய மூர்த்தி அய்யர்வாள்தான்.
சட்டசபையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டபோது ஒவ்வொரு பார்ப்பன மெம்பரும் தொண்டை கிழிய கத்தினர் - நா வறண்டு போகும் அளவிற்குப் பேசித் தீர்த்தனர். சிலர் சாபமிடவும், சபிக்கவும் செய்தனர்.
சத்தியமூர்த்தி அய்யர் இட்ட கூச்சல் ஒரே காட்டுக் கூச்சல்தான். ஆங்கிலத்தில் பேசியும், கத்தியும் போதாது என்று சமஸ்கிருதத்திலும் பேசினார் -கத்தினார்!
சமஸ்கிருதத்தில் பேசியதும், கதறியதும், பலன் அளிக்கவில்லை என்று சமஸ்கிருதத் திலேயே பாடவும் செய்தனர்.
(கே. குமாரசாமி எழுதிய “திராவிடர் தலைவர் டாக்டர் நடேசனார் வாழ்வும் தொண்டும்” பக்கம் 73).
நாம் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத காலத்திலேயே இந்தியாவின் தென் கோடியில் இவ்வளவு சாதனைகள் நடந்துள்ளனவே என்பதற்காகத் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த மதுரை சொக்கன்கள் தலை நிமிர்ந்து மகிழ வேண்டும்.
எடுத்த எடுப்பிலேயே காங்கிரஸ்கூட இந்தியாவுக்கான சுதந்திரம் கேட்டு விடவில்லை; ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட் டிலும் இங்கிலாந்து மன்னர் ஆட்சிக்குத் துதி பாடி அந்த ஆட்சியே நிலைக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்தித்தது உண்டு.
பார்ப்பனர் ஆதிக்கத்தைவிட வெள்ளைக் காரர் மேல் என்ற எண்ணம் நீதிக்கட்சியின ருக்கு இருந்ததுண்டு. அதே நீதிக்கட்சி முழு சுதந்திரம் என்ற நிலைப் பாட்டை பிற்காலத்தில் எடுத்ததை யெல்லாம் ஏன் வசதியாக மறைக்க வேண்டும்?
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை நீதிக்கட்சி ஆதரித்ததால் மக்களிடம் செல்வாக்கை அடுத்தடுத்த தேர்தல்களில் தோல்விப் பள்ளத்தாக்கை நோக்கிப் பயணம் செய்ததாம். கண்டுபிடித்து விட்டது ‘தீக்கதிர்’
13.2.2015 அன்று நடந்து முடிந்த தேர்தலில் (சிறீரங்கம் சட்டமன்ற இடைத் தேர்தல்) சி.பி.எம். கட்டிய பணத்தைக்கூடத் திருப்பிப் பெற முடியவில்லையே (பெற்ற வாக்குகள் 1552) அதற்கும், இது போன்ற காரணங்கள்தானா? தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்குமா என்ற அசசத்திலும் அய்யத்திலும் இருப்பவர்கள் எல்லாம் இப்படி எழுதக் கூடாது.
நீதிக்கட்சியின் காலத்தில் நிகழ்ந்த பல்வேறு சமூகச் சீர்திருத்த சமூக நீதி நடவடிக்கைகளை கம்யூனிஸ்டுகள் அங்கீகரிக்கின்றனர் என்று இன்னொரு இடத்தில் எழுதுகிறது தீக்கதிர்.
‘பீம்சிங்’ இது என்ன குழப்பம்?’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய வசனம் தான் - இந்த இடத்தில் நினைவிற்கு வருகிறது.
வேலைத் திட்டம் ஒன்றை நீதிக்கட்சிக்கு அனுப்பி வைத்து அதை அவர்கள் ஏற்ற பிறகுதான். அந்தக் கட்சியின் தலைவரானார் பெரியார் என்றும் ஒப்புக் கொண்டுள்ளார் தோழர் சொக்கன்.
அப்படிச் சொன்னால் போதுமா? இந்த வேலைத் திட்டத்தில் சொல்லப்பட்டவைகளை ஏற்றுக் கொண்டதன் மூலம் நீதிக் கட்சியின் பரிமாணத்தைப் புரிந்து கொள்ளலாமே!
வேலைத் திட்டமாவது
1. அரசாங்க உத்தியோக சம்பளங்கள் மக்களின் பரிசுத்த தன்மையைக் கெடுக்க கூடியதாகவும், பேராசையை உண்டாக்கக் கூடியதாகவும், இந்தியப் பொருளாதார நிலைமைக்கு மிக மிக தாங்க முடியாததாகவும் இருப்பதால் அவைகளைக் குறைத்து உத்தியோகஸ்தர்களுடைய வாழ்க்கையின் அவசிய அளவுக்கு ஏற்றதாகவும், மீத்துப் பெருக்கி வைப்பதற்கு லாயக்கில்லாததாகவும் இருக்கும்படி செய்ய வேண்டும்.
2. பொதுஜன தேவைக்கும், சௌகரியத் துக்கும் நன்மைக்கும் அவசியமென்று உற்பத்தி செய்யப்படும் சாமான்களின் தொழிற் சாலைகள், இயந்திரசாலைகள், போக்குவரத்து சாதனங்கள் முதலியவை அரசாங்கத்தாலேயே நடைபெறும்படி செய்ய வேண்டும்.
3. ஆகார சாமான்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும், அவற்றை வாங்கி உபயோகிக்கும் பொது ஜனங்களுக்கும் மத்தியில் தரகர்கள், லேவாதேவிக்காரர்கள் இல்லாதபடி கூட்டுறவு ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி, அதன் மூலம் விவசாயிகளின் கஷ்டத்தையும் சாமான் வாங்குபவர்களின் நஷ்டத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
4. விவசாயிகளுக்கு இன்று உள்ள கடன்களை ஏதாவது ஒரு வழியில் தீர்ப் பதுடன், இனிமேல் அவர்களுக்குக் கடன் தொல்லைகள் ஏற்படாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
5. குறிப்பிட்ட ஒரு காலத்திற்குள் குறிப்பிட்ட ஒரு அளவு கல்வியாவது எல்லா மக்களுக்கும் ஏற்படும்படியாகவும், ஒரு அளவுக்காவது மதுபானத்தின் கெடுதி ஒழி யும்படியாகவும், ஒரு அளவுக்கு உத்தியோ கங்கள் எல்லா ஜாதி, மதக்காரர்களுக்கும், சரிசமமாக இருக்கும்படிக்கும் உடனே ஏற் பாடுகள் செய்வதுடன், இவை நடந்து வரு கின்றதா என்பதையும் அடிக்கடி கவனித்து தக்கது செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
6. மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படி செய் வதுடன், அரசியலில், அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும், குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். ஜாதிக்கென்றோ மதத்திற்கென்றோ எவ்வித சலுகையோ உயர்வு தாழ்வு அந்தஸ்தோ அவற்றிற்காக அரசாங் கத்திலிருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாளுவதோ ஏதாவது பொருள் செல விடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.
7. கூடியவரை ஒரு குறிப்பிட்ட ரொக்க வரும்படிக்காரருக்கோ, அல்லது தானே விவசாயம் செய்யும் விவசாயிக்கோ வரிப் பளுவே இல்லாமலும் மனித வாழ்க்கைக்குச் சராசரி தேவையான அளவுக்கு மேல் வரும்படி உள்ளவர்களுக்கும், அன்னியரால் விவசாயம் செய்யப்படுவதன் மூலம் பயனடைபவர்களுக் கும் வருமான வரி முறைபோல் நிலவரி விகிதங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
8. லோக்கல் போர்டு, முனிசிபாலிட்டி, கோவாப்ரேட்டிவ் இலாகா ஆகியவைகளுக்கு இன்னமும் அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு, இவற்றின் மூலம் மேலே குறிப்பிட்ட பல காரியங்கள் நிர்வாகம் செய்ய வசதிகள் செய்து தக்க பொறுப்பும், நாணயமும் உள்ள சம்பள அதிகாரிகளைக் கொண்டு அவைகளை நிர்வாகம் செய்யச் செய்ய வேண்டும்.
9. விவகாரங்களையும், சட்ட சிக்கல் களையும் குறைப்பதுடன் சாவு வரி விதிக்கப்பட வேண்டும்.
10. மேலே கண்ட இந்தக் காரியங்கள் நடைபெறச் செய்வதில் நாமே சட்டங்கள் செய்து அச்சட்டங்களினால் அமுலில் கொண்டு வரக் கூடியவைகளை சட்ட சபைகள் மூலமும், அந்தப்படி சட்டங்கள் செய்து கொள்ள அதிகாரங்கள் இல்லாதவைகளை, கிளர்ச்சி செய்து அதிகாரங்கள் பெறவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
(‘பகுத்தறிவு’ 23.9.1934)
நீதிக்கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் (14.11.1935 - சென்னை) இந்த வேலைத் திட் டங்களை விளக்கிப் பேசுமாறு பெரியாரை முன்மொழிந்து கேட்டுக் கொண்டவர் யார் தெரியுமா? பொப்பிலி ராஜா! தலைமை வகித்தவர் யார் தெரியுமா? திவான்பகதூர் அப்பாதுரை பிள்ளை;
இந்தக் கூட்டத்தில் செல்வந்தர்கள் உண்டு, மிட்டா மிராசுகள் உண்டு. அப்படிப்பட்ட கூட்டத்தில் தான் இத்தகைய பொதுவுடைமைக் கோட் பாடுகளை உள்ளடக்கிய வேலைத் திட்டங்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு 80 ஆண்டுகளுக்குமுன் இது நடந்திருக்கிறது என்பதையும் கவனிக்கத் தவறக் கூடாது.
பெரும் பணக்காரர்கள் இருந்ததாலேயே அவர்களுக்காகத் தான் அந்தக் கட்சி உண்டாக்கப்பட்டது என்று வாய் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று பேசக் கூடாது.
கம்யூனிஸ்டுக் கட்சியில் மோகன் குமார மங்கலங்கள் இருந்தார்கள் என்பதற்காக, ஜோதிபாசுவின் மகன் தொழில் அதிபர் என்பதாலேயே கம்யூனிஸ்டுக் கட்சிமீது வேறு வகையான முத்திரையைக் குத்தலாமா?
தந்தை பெரியார் அவர்கள் நீதிக்கட்சித் தலைவர்கள் பொதுத் தொண்டில் தங்கள் சொத்துக்களை அழித்திருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். எதையும் நிதானத்துடன் பேசுவதும் - எழுதுவும் நன்மை பயக்கும்.
கடவுள் நம்பிக்கையைப் பற்றியும் சிலாகித் துள்ளது ‘தீக்கதிர்’.
கம்யூனிஸ்ட்க் கட்சி மதம், கடவுள் நம்பிக்கை போன்ற விசயங்களில் திராவிடர் கழகத்தின் அணுகுமுறையல்ல மார்க்சிய அணுகுமுறை; மதம் ஒரு அபின் என்று கூறிய மார்க்ஸ் அது இதயமில்லாத உலகத்தில் இதயமாக இருக்கிறது என்றும் ஒடுக்கப்பட்ட வர்களின் பெரு மூச்சாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர் கட்சியில் சேரத் தடையில்லை. ஆனால் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தைக் கற்றறியும் போது கடவுள் காணாமல் போய் விடுவார். இயங்கியல் அடிப்படையிலான அணுகுமுறைதான் மார்க்சிய நாத்திகம் அது உறுதியானது என்று “டயலிட்டிக் மெட்டீரி யலிசம்” பேசுகிறது தீக்கதிர் - சபாஷ், வரவேற்கிறோம்.
கடல் வற்றி மீன் கருவாடு ஆகும் போது கொத்தலாம் என்று காத்திருக்குமாம் கொக்கு.. அதுபோன்றதே இவர்களின் வாதம்.
கட்சியில் உள்ளவர்கள் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தை எப்பொழுது கற்று (எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ!) எப்பொழுது கடவுளைக் காணாமற் போகச் செய்வார்களாம்?
கேரள முதல் அமைச்சர் ஈ.கே. நாயனாரும் மூத்த பொதுவுடைமை வாதி சோம்நாத் சட்டர்ஜியும் (பேரனுக்குப் பூணூல் கல்யாணம் நடத்தியவர்) செத்துப் போன கோயில் குரங்குக்குச் செவ்வாடை போர்த்தி புரட்சி வணக்கம் செய்த கேரளத்தைச் சேர்ந்த சி.பி.எம். அமைச்சர்களும்கூட இன்னும் பொருள் முதல் வாதத்தைக் கற்கவில்லையா?
திருவனந்தபுரத்தில் சிருங்கேரி சங்கராச் சாரியார் அளித்த பேட்டி ஒன்றில் (3.1.1980) ஏராளமான கம்யூனிஸ்டுகள் என்னுடைய சீடர்களாக இருக்கிறார்கள். பூஜைகளை செய்து மந்திரங்களை ஓதுகிறார்கள் (‘விடுதலை’ 4.1.1980) என்று சொன்னாரே!
திராவிடர் கழகத்தின் அணுகுமுறை கம்யூனிஸ்டுகளுக்குக் கிடையாதாம். திராவிடர் கழகத்தின் அணுகுமுறையை ஏற்ற கருஞ் சட்டைக்காரன் ஒவ்வொருவனும் கடவுள் மறுப்பாளன்தான்; மத மறுப்பாளன் தான். கம்யூனிஸ்டு அணுகுமுறையைப் பின்பற்றுபவர்களை அவ்வாறு கூற முடியவில்லையே - ஏன்?
இதிலிருந்தே தெரிந்து கொள்ள முடிய வில்லையா - எந்த அணுகுமுறை வெற்றி பெற்ற ஒன்று என்று?
சாதாரண தொண்டர்கள் ஒரு புறம் இருக்கட்டும்; தீபாவளிக்குச் சிறப்பு மலர் வெளியிடும் தீக்கதிர்கூட பொருள் முதல் வாதத்தைக் கற்றுத் தேறவில்லையா?
இதில் என்ன விலா நோகும் வெடிச் சிரிப்பு நகைச்சுவை தெரியுமா? அப்படி மலர் போட்டதற்கு வக்காலத்து வாங்கியதுதான்!
“ஆதி மனிதன் இருள் பயத்திலிருந்து விடுதலை பெறவும் உணவை சமைக்க உதவும் ஆதார சக்தியாக விளங்கிய இயற்கை சக்தியாம் தீயைப் போற்றும் விழாவே தீப விழாவாக நடைபெற்று வருகிறது.”
(‘தீக்கதிர்’ 20.11.2010 பக்.7).
எப்படி இருக்கிறது - சங்கராச்சாரியார் கூட இப்படியொரு வெண்டைக்காய், விளக்கெண் ணெய் விளக்கத்தைக் கூறவில்லை.
தீபாவளி என்பது இந்து மதத்தின் மூடக் கதை; அதற்கென்று புராணம் உண்டு. புராணத்திற்குப் புனுகு பூசும் வேலைதான் ஒரு மார்க்ஸிட் நாளேட்டின் வேலையா? இதைவிட மார்க்சைக் கொச்சைப்படுத்தும் பாங்கு வேறு உண்டா?
பார்ப்பனீயத்துக்கு ‘கில்ட்டு’ அடிப்பது மார்க்சியமா?
பிரபல நாவலாசிரியரும், கம்யூனிஸ்டு மான அகேலே என்பவரால் எழுதப்பட்ட நூல் “போயாபேட் பபூல்கா” என்பதாகும். பபூல் என்பது காய்க்காத முள்ளு மரமாகும். காய்க்காத முள்ளு மரத்தைக் காய்க்கும் என்று நட்டு வளர்ப்பது போன்றதுதான் மூட நம்பிக்கை என்பது அந்த நாவலின் சாராம்சம். அது இந்து மதத்தை விமர்சிக்கிறது என்று காரணம் காட்டி பிகார் மாநில அரசு தடை செய்தது என்றால் அதனைப் புரிந்து கொள்ள முடியும்!
ஜோதிபாசு தலைமையிலான மேற்கு வங்க கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சிக்கு என்ன வந்ததாம்? அதுவும் அல்லவா தடை செய்தது; தடை செய்ததோடு மட்டுமல்ல; நூல் ஆசிரியரைக் கட்சியிலிருந்தும், நீக்கிப் பெரும் ‘புரட்சி’ செய்து விட்டதே!
(ஆதாரம்: பிரபல பகுத்தறிவாளரான ஜோசப் எடமருகு எழுதிய ரணரேகை -1.3.1984)
இன்றைக்கு அதிமுக ஒரு பஜனை மடமாகவே மாற்றப்பட்டு விட்டது. பூஜை புனஷ்காரங்கள் தூள் பறக்கின்றன. கோவில் வழியாக கோட்டை நோக்கி செல்வதே நோக்கம் என்றாகி விட்டது. இந்தத் தவறுக்கு கருப்பு மெழுகு வர்த்திகள் வருத்தப்படு வார்களா? அல்லது மாட்டார்களா என்று தெரியவில்லை என்று குறைபட்டு எழுதுவது ‘தீக்கதிர்’.
வருத்தம் என்ன? கண்டிக்கவே செய் கிறோம். அண்ணா பெயரால் கட்சி எதற்கு? கட்சிக் கொடியில் அண்ணா எதற்கு? என்று கேட்டதைவிட வேறு என்ன அதிகமாக எழுத முடியும் - கேட்கவும் தான் முடியும்?
அதே நேரத்தில் அதிமுகவைப் பற்றி சி.பி.எம்.மின் நிலைப்பாடு என்ன?
“வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் சாத்தியம் பிரகாசமாக உள்ளது. தேசிய அரசியலில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு எழுச்சிகரமான எதிர்காலம் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
தேசிய அரசியலில் அவரது பங்கு மகத்தானதாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.” (மாலை முரசு 2.1.2014) என்று கூறியவர் சாதாரண மானவர் அல்லர்; சி.பி.எம்.மின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்.
தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் அவர்கள் “நமக்கு நாமே” - சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதுபற்றி ‘தீக்கதிர்’ என்ன எழுதுகிறது?
அந்தக் காலத்தில் ராஜசூய யாகத்திற்கு முன்பு வலம் வரும் அசுவமேத யாகக் குதிரையைப் போல சட்டமன்ற தேர்தலை எதிர் நோக்கி ‘நமக்கு நாமே பயணம் மேற்கொண்டுள்ள தளபதி பற்றியும் கேலி செய்துள்ளது தீக்கதிர்.
ஓர் அரசியல்வாதி மக்களை நேர்முக மாகச் சந்திப்பது என்பதுகூட மார்க்சிய பார்வையில் குற்றம் என்பதை முதன் முத லாக இப்பொழுதுதான் கேள்விப்படுகிறோம்.
மக்களுக்குத் தொடர்பு இல்லாத காரணத் தால்தானோ என்னவோ சில கட்சிகள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுப் போகின்றன.
தி.மு.க. பொருளாளரின் பயணம் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது என்பதை - இது போன்றவர்களின் வயிற்றெரிச்சல் விமர்சனங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.
ரசம் போன கண்ணாடி என்று நம்மைக் கேலி செய்கிறது ‘தீக்கதிர்’; ரசம் போன கண்ணாடியில் முகம் பார்க்க முடியாமல் இருக்கலாம்! தேவைப்பட்டால் அது ஆயுதமாகக் கூடப் பயன்படுமே! அதே நேரத்தில் ரசம் உள்ள கண்ணாடியை, ‘விடுதலை’யின் விமர்சனம் வழி ஒரு முறை ‘தீக்கதிர்’ தனக்குத்தானே தன் முகத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது!
வணக்கம் காம்ரேட்!
-------------------------கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் 1-11-2015 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை