Search This Blog

20.4.13

சாய்பாபா ஜாலம் - பி.சி. சர்க்கார் அம்பலப்படுத்தினார்!


(புட்டபர்த்தி (கருநாடகம்) சாய்பா பாவை நேரில் கண்ட பின், அவரது தந்திரங்களை அம்பலமாக் கியுள்ளார் புகழ்பெற்ற மாயச் செயல்வீரரான பி.சி.சர்க்கார். இம்பிரிண்ட் என்ற ஆங்கிலத் திங்களேட்டில் கடந்த திங்கள் (சூன்83) அவரெழுதிய கட்டுரை இங்குத் தமிழில் வழங்கப் படுகிறது.)

மனித இயற்கை விந்தையானது ஒவ்வொரு நாளிரவும் நூற்றுக்கணக்கான மக்கள் என் மாயச் செயற் கண் காட்சியைப் பார்க்கிறார்கள். ஒரு பெண்ணை இரண்டாக துண்டிப்பதையும், ஒரு யானை காற்றில் மறைந்து போவதையும், ஒன்றுமில்லாததிலிருந்து விரும்பும் பொருளைக் கொண்டு வருவதையும் அவர்கள் பார்க் கிறார்கள். ஆனாலும், என்னிடம் தெய்வ ஆற்றல் உறைந் திருப்பதாக எவரும் நம்புவதில்லை. ஆனால் அம்மக்களே, கடவுட் பிறப்பு எனக் கூறப்படும் மனிதனைப் பார்க்கும் போது, அவர் ஒரு சில மாயச் செயல்களைச் செய்து காட்டும் போது மட்டும் அதில் தெய்வத்தன்மை உள்ளதெனக் கண் ணை மூடிக்கொண்டு நம்புகிறார்கள். என்னே! அறியாமை.
எடுத்துக்காட்டாகப் புட்டபர்த்தி சத்திய சாய்பாபாவை நோக்குவோம். அவர் செய்யும் மாயங்களை எங்களைப் போன்ற மாயக்காரர்கள் செய்து காட்ட முடியும். எனவே தான், அந்தப் பாபா, அவரது தெய்வீக விந்தைகளை எங்கள் முன் செய்துகாட்ட விரும்புவதில்லை.

நான் சாய்பாபா வாழ்விடஞ் சென்று அவரை நேரே கண்டு உரையாடப் பன்முறை முயன்றிருக்கிறேன். என்னை ஒவ்வொரு முறையும் காண்பதற்கு மறுத்தே வந்துள்ளார்.

இறுதியாக நான் மாற்றுருவில் சென்று அவரைக் காண்பதென்று முடிவு செய்து கொண்டேன். என்னை ஒரு பெயர் பெற்ற பணக்கார அசாம் வணிகரென்றும், எனக்கு காச நோயிருப்பதால் சாய் பாபாவிடம் திருநீறு பெற்று நலம்பெற விரும்புகிறேனென்றும் சொல்லிக் கொண்டு அவர் வாழ்விடத்துள் புகுந்தேன்.

உள்ளே நுழைந்த அய்ந்து மணித்துளிகளில் அங்கு யாதோவொரு மாயச் செயல் வஞ்சகமாக நடக்கிறதென உணர்ந்தேன். என்னைப் போல வந்துள்ளவர்களை ஒவ்வொருவராகக் கண்டு வணங்குவதற்கு ஒப்புக் கொண்டார். ஒரு நேரத்தில் ஓரடியார்தான் சாய்பாபாவைக் காணமுடியும். அப்படித்தான் அங்கு நடைபெறல் வழக்கம். அவரைச் சுற்றி அவருடைய சில மாணாக்கர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து வரக்கூடி யவர்கள்; அல்லது சாய்பாபாவின் குழுவை சார்ந்தவர் களென்பது மெதுவாக விளங்குகிறது. பொதுவாக இது எல்லா மாயக்காரர்களும் செய்யும் தந்திரமே.  சில நேரங் களில் கூட்டத்திலிருந்து சிலரை நாங்கள் மேடைக்கு அழைப் போம். எங்கள் ஆட்கள் சிலரையே பொதுமக்களோடு (காண வந்திருப்போர்களோடு) சேர்ந்து உட்கார வைப்போம்.

கூட்டத்திலிருந்து மேடைக்கு வரும் உண்மையான மனிதர்களைச் சுற்றி எங்கள் ஆட்களும் சேர்ந்து கொள் வார்கள். இதனால் மேடைக்கு வந்த பார்வையாளரை நாங் கள் செய்யும் மாயங்கள் உண்மையானவையே என்று நம்பச் செய்து விடும். இது வழக்கமாக நாங்கள் செய்யும் தந்திரம்.
சாய்பாபாவும் இத்தந்திரத்தையே கையாள்கிறார். எனவேதான் தம்மைச் சுற்றி தம் குழுவைச் சேர்ந்தவர் களையே எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறார். நான் சாய்பாபாவைப் பார்க்க அவர் இருப்பிடத்திற்கு சென்றவுடன் என்னை மொய்த்து நின்றவர்களுக்கெல்லாம் அவர் ஆட்களே என்பதை உடனே விளங்கிக் கொண்டு விட்டேன். எனவே எனக்கு அய்யப்பாடு வலுத்து விட்டது. பாபா என்னைப் பேசச் சொன்னார். என்னுடைய மொழி மட்டும் எனக்கு தெரியுமெனச் சொல்லி அசாம் மொழியிலும், இந்தி மொழியிலும்  கலந்து பேசுவார். சாய் பாபாவால் அம்மொழி களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. தம்மால் புரிந்து கொள்ள முடியவில்லையெனத் தலையை அசைத்து உணர்த் தினார். உடனே அவர் தம் மாணாக்கர்கள் மொழி பெயர்ப் பாளரைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். எனக்கு பெரு வியப்பாயிருந்தது. கடவுளுக்கும் மொழிச் சிக்கல் உண்டு போலும் எனக் கருதினேன். ஆயினும் அமைதியாகவே இருந்தேன்.

ஒரு மொழி பெயர்ப்பாளர் வந்த பிறகு எங்கள் உரையாடல் தொடங்கியது. உங்கட்கு என்ன சிக்கல் என்று சாய்பாபா என்னைக் கேட்டார். எனக்கு காசநோய்; அதை நீக்கிக் கொள்ளவே இங்கு வந்தேன் என்று கூறினேன்.
பாபா, மெதுவாகவும் அமைதியாகவும் நீங்கள் என்னைப் பார்க்க வந்து விட்டீர்கள். இனி உங்கட்கு நலமாகி விடும் என்றார்.

எனக்கு ஏதேனும் மந்திர மருந்து தருவீர்களா? என்று கேட்டேன்.
தேவையில்லை என்றார் அவர். கையை அசைத்துத் திருநீறு கொண்டு வருவீர்களே? அதனைத் தரமாட்டீர்களா? என்று கேட்டேன் உடனே அவர் முகம் மாறி விட்டது. ஒன்றும் மறுமொழி கூறமுடியாத நிலையில் தடுமாறினார். என்ன நடந்துள்ளது என்பது எனக்குத் தெரிந்து விட்டது.
கையை அசைப்பதனால் திருநீறு வரவழைப்பது மிகப் பழங்காலத் தந்திரம். திருநீற்றினை ஒரு சிறிய பைக்குள் நிரப்பிக் கையிடுக்கில் வைத்துக் கொண்டு, ஒரு சிறுநெடுங்குழலைக் கைகளில் வைத்துக் கோடல்தான் இத்தந்திரம். மறைவாயுள்ள குழலை அழுத்தினால் திருநீறு கொட்டும். இதனில் குறிப்பிடத்தக்க சுவையான செய்தி, அரைக்கை சட்டை அணிந்துள்ள போதெல்லாம் திருநீற்றை வரவழைப்பதில்லை. முழுக்கைச் சட்டை அணிந்திருந்தால் தானே மறைத்து வைத்ததற்கு வாய்ப்பாக இருக்கும்.

அன்று பாபாவை கண்டுணர்ந்த கடைசி பார்வையாளன் நான்தான். முன்னரே பையில் நிரப்பப் பெற்றிருந்த நீறு முற்றும் செலவாகி விட்டமையால் எனக்கு வழங்க முடியவில்லை. அதனை வரவழைக்கத் தக்க வேறு வழியும் இல்லை. அவர் திகைத்தார். உடனே நான் சுற்றிலும் என்ன நடக்கிறதென்பதை நுணுக்கமாக நோக்கினேன். பாபாவினால் பயிற்றப் பெற்ற ஒருவர் அவரருகிலிருந்த பலகாரத் தட்டுகளை வேறிடத்தில் மாற்றி வைத்ததனை ஓரக்கண்ணால் நோக்கியிருந்தேன். அம்மாணாக்கர் கையசைப்பில் ஒன்றை வர வழைக்கப் போகிறார் என நான் நுணித்துணர்ந் தேன். திருநீறு வரவழைக்க முடியா நிலையில் வேறு யாதொன்றோ கொடுத்து என்னைச் சரிகட்ட முயல்வது அப்பட்டமாகப் தெரிந்து விட்டது.

பின்னர் பாபாவிடம் நான் மீண்டும் எனக்கு திருநீறு தந்து ஆசி வழங்குமாறு கேட்டுக் கொண்டேன். நான் நினைத்தது உண்மையாயிற்று. பிற மாயக்காரர்களைப் போலவே அவரும் சூ மந்திரக்காளி போட்டார். சந்தனம் வரவழைத்துக் கொடுத்ர். இது எல்லா மாயக்காரர்களும் செய்யக் கூடிய வித்தைதான். பலகாரத் தட்டை எடுத்துச் சென்ற அவர் பணியாள், அதில் சந்தனத்தைப் போட்டுச் சாய்பாபா அருகில் வைத்ததும், அதிலிருந்து கைத் தந்திரத்தால் சந்தனத்தை வரவழைத்தார். இதுதான் உண்மையில் நடந்தது.

எங்கள் எல்லாருக்கும் நடுவில் ஓர் இன்சுவை பண்டம் இருந்தது. சாய்பாபா செய்த அதே தந்திரத்தை நானும் செய்து கையசைப்பில் அந்த இனிய பண்டம் வரைவழைத்து அவரிடமே கொடுத்தேன். உடனே அங்குள்ள அனை வருக்கும் அதிர்ச்சி குழப்பம் உண்டாயிற்று.

பாபா தென்னாட்டு மொழி ஒன்றில் பெருங்குரலால் அஞ்சுமாறு கூச்சலிட்டார். அவரைச் சேர்ந்தவர்கள் கூட்டமாக ஓடிவந்து என்னை வளைத்துக் கொண்டார்கள். நான்மிகவும் அமைதியாக நான்தான் பி.சி.சர்க்கார். நான் நன்றாக இப்போது உணர்ந்து கொண்டேன். பாபா அவர்களே! நீங்கள் ஓர் இயல்பான மாயம் வல்லவர்தான். அவர் எதுவும் கூறவில்லை. பக்கம் இருந்த ஒரு வாயிலில்  புகுந்து உள்ளே போய்விட்டார். ஏனையோர் என்னைப் பார்த்துக் கூச்சலிட்டார்கள். அவ்விடத்தை விட்டு என்னை அப்புறப்படுத்தினார்கள். இந்த பக்கம் மீண்டும் வராதே என்று எச்சரித்தார்கள்.

இச்செய்தி மறுநாள் வந்த நாளேடுகளில்பெரும் பரபரப்பாக வெளியாயிற்று. கைத் தந்திரங்களால் நடத்தப்படும் மாயச்செயல்களே என விளக்கிப் பல நேர்காணல்களை நடத்தினேன். காற்றிலிருந்து கைக் கடிகாரம் வரவழைத்தலும், தொப்பியிலிருந்து முயலை வரவழைத்தலும் ஒரே வகையான தந்திரம்தான். இவையனைத்தையும் ஒரு மாயமந்திரக்காரரால் செய்து காட்ட முடியுமென உறுதியாகக் கூறுகிறேன்.

------------------------------------------நன்றி: தமிழில் குறளியம், 1.9.1983 இதழ்

19.4.13

பழைய திருமண முறையின் அடிப்படை என்ன? - தந்தை பெரியார்

பழைய திருமண முறையின் அடிப்படை என்ன? - தந்தை பெரியார்

தாய்மார்களே! பெரியோர்களே! முதலாவது உங்களுக்குச் சொல்கிறேன். மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் எல்லாம் செய்தாலும்கூட இந்த வாழ்த்துக் கூறுதல் என்ற மூட நம்பிக்கையைப் போக்க முடியவில்லை. மற்ற சடங்குகளை எல்லாம் நிறுத்தி விட்டேன். இதை நிறுத்த முடியவில்லை. கொஞ்சம் நாளாகும். மக்களுக்கெல்லாம் நல்ல அறிவு வர வேண்டும். அப்போது இதுவும் தானாக மாறி விடும். என்னைப் பொறுத்தவரையில் இந்த வாழ்த்துக் கூறுவது என்பதில் எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. வாழ்த்துக் கூறுவதை நம்பினால் வசையையும் நம்பத்தானே வேண்டும். அதற்கு என்ன பலனோ, அதே பலன்தானே இதற்கும் உண்டு!

சாதாரணமாக நடைபெறுவது போலல்லாமல் இது கொஞ்சம் மாறுதலாக நடைபெறுகிறது. நல்ல அறிஞர்கள், பெரியவர்கள் எல்லாம் இம்முறையைக் கையாண்டு வருகிறார்கள். 40 ஆண்டு காலமாகப் பொதுமக்களிடையேயும் இந் நிகழ்ச்சி பரவலாக நடைபெற்று வருகிறது. இதுதான் - இந்த முறைதான் தொடர்ந்து நடைபெற வேண்டுமென்பதில்லை. இந்த முறையை 1967-ஆம் வருட மாடல் என்று தான் சொல்லுவேன். இந்த முறை நமது இயக்கத்திற்கோ, கொள்கைக்கோ முடிவான முறையுமல்ல. தேவைக்கும், அவசியத்திற்கும் ஏற்ப மாற்றிக் கொண்டு செல்ல வேண்டியது தான்.

நான் நினைக்கிறபடி நடக்க வேண்டுமானால் திருமணம் என்பதே சட்ட விரோதமான செய்கையாகும். இந்த மாற்றத்திற்குக் காரணமெல்லாம் பழமையை மாற்ற வேண்டுமென்பதோ நமக்கென்று ஒரு முறை வேண்டுமென்பதாலோ அல்ல! இதுவரை பெரும்பாலான மக்களால் நடத்தப்பட்டு வரும் முறையைப் பற்றிய விளக்கம் கிடையாது. சரித்திரம் கிடையாது. நடைபெறும் நிகழ்ச்சிக்குத் தமிழில் ஒரு சொல்லே கிடையாது. முதலில் நடைபெற்ற இந்திப் போராட்டத்திற்குப் பின்தான் திருமணம் என்ற சொல்லே வந்தது.

அதற்கு முன் கல்யாணம், - விவாகம், - தாரா முகூர்த்தம் -_ கன்னிகாதானம் என்கின்ற வடமொழிச் சொற்கள்தான் வழங்கி வந்தன. தமிழர்களுக்குக் கல்யாணமே கிடையாதா? அவர்கள் குடும்பமாக வாழவில்லையா? என்று கேட்கலாம். இம்முறை எதற்காகப் பயன்படுகிறது என்று பார்ப்போமானால் சட்டப்படி _- மதப்படி _- சாஸ்திரப்படி _- சம்பிரதாயப்படி _- ஆஸ்திகர்கள் கருத்துப்படி தனது வாழ்க்கைக்கு ஓர் ஆண், ஒரு  பெண்ணை அடிமை கொள்கிற நாள்தான் திருமணம் என்பதோடு,  பகுத்தறிவு உள்ள மனிதனின் அறிவை நாசமாக்கி மூட நம்பிக்கையை, முட்டாள்தனத்தை அவன் இரத்தத்தில் புகுத்தி, அவனை மடையனாக்கவும், மூன்றாவதாக ஜாதியைக் காப்பாற்றவுமேயாகும்.

அதாவது, பார்ப்பான் பார்ப்பானாகவே சமுதாயத்தில் எந்தவித உழைப்பும் இன்றி வாழவும், பறையன் பறையனாக, சக்கிலி சக்கிலியாக இப்படி அவனவனும் தங்கள் ஜாதிப்படி இருக்க வேண்டும், ஒன்று சேரக் கூடாது என்கின்ற தன்மையில் ஜாதி காப்பாற்றப்படுகிறது. முன்னெல்லாம் சொல்வார்கள், குலத்திலே குரங்கைக் கொள் என்று. குரங்கு போல இருந்தாலும் பரவாயில்லை. அது ஜாதியிலிருந்தால் கட்டிக் கொள்ளலாம் என்று சொல்வார்கள். அவ்வளவு ஜாதி வெறி இருந்தது.

இவற்றைப் பார்க்கும் போது மூன்று காரியங்களை அடிப்படையாகக் கொண்டு தான் பழைய முறை அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒன்று, பெண்ணை அடிமையாக்குவது, இரண்டு, மக்களைப் பகுத்தறிவற்ற முட்டாள்களாக்குவது, மூன்றாவதாக, மனிதனை ஒன்று சேர விடாமல் ஜாதி காரணமாகப் பிரித்து நிற்கச் செய்வது ஆகியவைகளேயாகும்.

மணமக்களுக்கு வேண்டியதெல்லாம் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். பதினாறும் பெற்று என்று சொல்வது குழந்தைகளைப் பெறுவதற்காகச் சொல்வதல்ல. 16 பேறுகளைப் பெற்று என்று சொல்வதற்காகச் சொல்வதாகும். ஆடம்பர மில்லாமல் மற்றவர்கள் நம்மைப் பார்த்து பொறாமைப்படாத வகையில் வாழ வேண்டும். கூடுமானவரை ஆடம்பரத்தைக் குறைத்துக் கொண்டு, எளிய வாழ்வு வாழ வேண்டும். அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதால் எப்படி ஒழுக்கம் குறைகிறதோ, அதுபோலத்தான் வரும்படிக்கு  மேல் செலவிட்டாலும் ஒழுக்கம் குறையும். பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதையும், சிங்காரித்துக் கொள்வதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். எல்லா மக்களும் பெண்களை நல்லவண்ணம் படிக்க வைக்க வேண்டும். பெண்கள் படிக்க ஆரம்பித்தால், அவர்களே தங்களின் வாழ்க்கையை நல்ல முறையில் அமைத்துக் கொள்வார்கள்.

பெண்கள் தாங்களாகவே தங்கள் வாழ்க்கைக்குத் துணைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

வயதாகி விட்டதே - கஞ்சி யார் ஊற்றுவார்கள் என்று கவலைப்பட வேண்டாம் என்று வயதானவர்களுக்கு மாதம் இவ்வளவு என்று அரசாங்கம் பென்ஷன் கொடுக்கிறது. அதுபோல வகையில்லாமல் விதவையாகி விட்டால் விதவை பென்ஷன் கொடுக்க வேண்டும். இதையெல்லாம் இந்தச் சர்க்கார் பார்க்கவில்லை என்றால் வேறு சர்க்காரைக் கூப்பிடுகிறோம். மக்களுக்காகத் தான் சர்க்காரே ஒழிய, சர்க்காருக்காக மக்கள் அல்லவே! இதை இந்தச் சர்க்கார் செய்யாவிட்டால் வேறு எந்தச் சர்க்கார் செய்கிறதோ, அதைக் கூப்பிட்டு நடத்தச் சொல்கிறோம். அது பாகிஸ்தானாக இருந்தாலென்ன? ரஷ்யாவாக இருந்தால் நமக்கென்ன? யார் செய்கிறார்களோ, அவர்கள் வந்து ஆளட்டும். நமக்கு வேண்டியதெல்லாம் மக்கள் வளர்ச்சியடைய வேண்டும். மற்ற மேல்நாட்டு மக்களைப் போல் வாழ வேண்டுமென்பதுதான். 

----------------------------------------26.8.1967 அன்று சென்னையில் நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இல்லத் திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரையிலிருந்து..  - விடுதலை 27.8.1967.

அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் கல்யாணம்!சாந்தி முகூர்த்தம் நடந்ததா?


கடவுள் நம்பிக்கை மனிதனை எந்த அளவுக்குப் பயித்தியக்காரன் ஆக்கி இருக் கிறது என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவையில்லை.
திருச்சிராப்பள்ளி, சேரன் தெருவில் (விமான நிலையம்) வெட்டுடைய காளியம்மன் எனும் ஒரு கோயில் இருக் கிறது. அந்தக் கோயில் வளா கத்துக்குள் அரசு, வேம்பு மரங்கள் இருக்கின்றன. அந்த இரு மரங்களுக்கும் திருக்கல்யாணமாம் அதற்காக திருக்கல்யாண சுபமு கூர்ந்த பத்திரிக்கை அடித்து பக்தர்களுக்கெல்லாம் அழைப்பு கொடுக்கப்பட் டுள்ளது.
ஸ்ரீ வெட்டுடைய காளி யம்மன் ஆலயத்தில் ஸ்தல விருட்ச்சமாக விளங்குகின்ற (பார்வதி, பரமேஸ்வரன்) அரசு - வேம்பு ஆகிய தெய்வங்களுக்கு குருவருளாலும், திருவருளாலும் பக்த கோடிகள் வேண்டுதலுக்கு இணங்க பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளின் ஆசீர்வாதத்துடன் முப்பத்து முக்கோடி தேவர்களின் அனுக்கிரஹத்தாலும், நாளது மங்களகரமான விஜய வருஷம், சித்திரை மாதம் 1ஆம் தேதி (14.4.2013) ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதியும், மிருக சிரிஷம் நட்சத் திரமும், சித்த யோகமும் கூடிய சுப யோக சுபதினத் தில் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் அரசு - வேம்பு விவாஹ சுபமுகூர்த்தம் நடை பெறுவதால் பக்த கோடிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தெய்வங்களின் அருளையும், அருட்பிரசா தத்தையும் பெற்றுச் செல்ல வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் என்று அழைப்பிதழ் அச்சிட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது.
கற்காலம் போய், உலோக காலம் பிறந்தது, அணுயுகத்தில் - கணினி யுகத்தில்  நானோ தொழில் நுட்பத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கும் கால கட்டத்தில், கடவுள் பக்தி என்னும் போதைக்கு ஆட்பட்டு மரத்துக்கும், மரத்துக்கும் கல் யாணம் கட்டி வைக்கிறார்கள் என்றால் - காட்டு மிராண்டிகள் என்று தந்தை பெரியார் சொன்னதில் என்ன குற்றம்?
வறுமையின் பிடிக்குள் சிக்கி, வாலிப வசந்தத்தைப் பறி கொடுத்துத் திருமணம் செய்து கொள்ள முடியாதி ருக்கும் ஏழை எளியவர் களின் பக்கம் இந்த பக்த கே()டிகளின் கவனம் திரும்பக் கூடாதா?
மரத்துக்கும், மரத்துக்கும் கல்யாணம் செய்து வைத் தாலும், புரோகிதப் பார்ப்பான் வந்து விடுகிறான். - தம் புரோகிதச் சுரண்டலை நடத்திட!
கூடுதல் கேள்வி: (Tail Piece) அரச மரத்துக்கும், வேப்ப மரத்துக்கும் கல் யாணம் கட்டி வைத்தார்களே, சாந்தி முகூர்த்தம் நடந்ததா? இன்னும் பத்தே மாதத்தில் பிள்ளைக் குட்டிப் பிறக்குமா?
அறிந்தவர்கள் தெரிவித் தால் புண்ணியமாக இருக்கும்.
--------------------------- மயிலாடன் அவர்கள்  18-4-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

18.4.13

பெரியார் திடலில் புத்தகச் சங்கமம் நூல்கள் பற்றிய சிந்தனை


எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லண்டன் தோழர்கள் கேட்டபோது எந்த விடுதி நூலகத் திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டாராம்
                               ------------------------------- டாக்டர் அம்பேத்கர்


தான், தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம்
                            ------------------------------------------------ பகத்சிங்

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போது, வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம்
                                  ------------------------------------- சார்லி சாப்ளின்

எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப் படுகின்றனவோ, அங்கே விரை வில் நல்ல மனிதர்களும் எரிக்கப் படுவார்கள்.              
                              ------------------------------------- சேகுவாரா
ஒரு புத்தகத்தை திறக்கும்போது உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம்.
                         ------------------------------- தோழர் சிங்காரவேலர்

வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தைத் தேடும் மனிதனுக்கும், சோர்வில் கண் அயரப் புத்தக வாசிப்பை நாடும் மனிதனுக்கும் வேறுபாடு உண்டு.
                              -------------------------------------- சி.கே.செஸ்டர்டன்
புத்தகங்கள் மிகவும் ஆபத் தானவை. அவற்றின் மேல் கவனம், இது உங்கள் வாழ்வை மாற்றி விடக்கூடும் என எச்சரிக்கை வாசகம் பொறிப்பது நல்லது.
                                              ---------------------------------- எலன்எக்ஸ்லே
உங்களது தலைசிறந்த புத்தகங் களைத் திருடிச்செல்பவர்கள், உங்களது தலைசிறந்த நண்பர்களாகவே இருக்க முடியும்.

                                           ---------------------------------------- வால்டேர்
ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தாராம்.

-                                 ----------------------------------------------- காந்தியார்

தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கப்பட்ட போது புத்தகங்களு டன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தார்
                                               ----------------------------------------------- நேரு

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்று

                                          ------------------------------------ பெட்ரண்ட்ரஸல்  

மனிதனின் மிகப் பெரிய கண்டு பிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் எனப்பதிலளித் தார்.           
                                        ---------------------------- - ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன்

கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம்.

                                            --------------------------------- தந்தை பெரியார்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம்.

                                      -------------------------- நெல்சன் மண்டேலா
பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என நாடு கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிடக் குவிந்த புத்தகங் கள் பல லட்சம்.              
                         -------------------------------------- வரலாறு
குடும்பத்தை விட்டு வெளியேறுங்கள் என்று தூக்கியெறியப்பட்டபோது பேரறிஞர் இங்கர்சால் சென்ற இடம் நூலகம்.                         
                                         -------------------------------- வரலாறு
பதப்படுத்தப்பட்ட மனங்களின் வெளித்தோற்றத்தைப் புத்தகம் என்று அழைக்கின்றோம்.                 

                            ------------------------------------------------------- போவீ
புதிய புத்தகத்தை வாசிக்கும்போது புதிய நண்பன் ஒருவனைச் சந்திக் கிறோம் அதை மீண்டும் வாசிக்கும் போதோ நீண்ட கால நண்பனைச் சந்திக்கிறோம்.      -                        ---------------------------------------சீனப் பழமொழி

நீங்கள் ஒரு புத்தகத்தை விற்கும் போது நீங்கள் காகிதமும் கோந்தும் மையும் விற்கவில்லை ஒரு புதிய வாழ்வையே அவருக்கு விற்கிறீர்கள்

                                      --------------------------------- கிறிஸ்டோபர் மார்லே

ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள், அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள்.

                                              --------------------------------------- அரேபியப் பழமொழி

உலகிலுள்ள அனைத்துவகைத் துயரங்களின் விடுதலை ஒரு புத்தகத்தில் உள்ளது

                                                   --------------------------------------- கூகிவா திவாங்கோ

போரில் கலந்து கொள்வதைவிட, கூடுதல் தைரியம் ஒரு சில புத்தகங் களை வாசிக்கத் தேவைப்படுகிறது.

                                                                      -----------------------  எல்பர்ட்கிரிக்ஸ்

புத்தகங்கள் இருந்தால் போதும் சிறைக் கம்பிகளும், கொட்டடிகளும் ஒருவரை அடைத்து வைக்க முடியாது.

                                                         ------------------------------------------ மாவீரன் பகத்சிங்

ஒரு புத்தகத்தின் பயன் அதன் உள்ளே தேடப்படுவதைவிட வெளியே 
ஏற்படுத்திய தாக்கத்தை வைத்தே இருக்கிறது. - பிரடெரிக் எங்கெல்ஸ்
காலக்கடலில் நமக்கு வழி காட்ட, அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கு புத்தகம்          
                           -------------------------------------------------- எட்வின் பி.விப்பிள்

ஒரு நாட்டின் வருங்காலச் சந்த தியினர் தேடித்தேடி அடைய வேண் டிய அற்புதப் புதையல்கள் புத்த கங்களே.          

                                                          ---------------------------------- ஹென்றிதொறோ

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம் தான் என்றார்.

                                       ---------------------------- வின்ஸ்டன் சர்ச்சில்
பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை எனக்கேட்கப் பட்டபோது புத்ககங்கள் தான் என்றாராம்.

                                              ------------------------------------ மார்டின் லூதர்கிங்

புத்தகம் என்பது பையில் சுமந்து செல்ல முடிந்த ஒரு பூந்தோட்டம்.

                                     --------------------------------------------------- சீனப் பழமொழி

ஒரு நல்ல புத்தகம் வாசித்து முடிக்கப் படுவதே இல்லை.

                                              --------------------------------------- ஆர்.டி.கம்மிஸ்

ஒரு புத்தகத்தைவிடப் பொறுமையான ஆசிரியரை நான் பார்த்தது இல்லை.

                                         ---------------------------------- சார்லஸ் இலியட்

விமானத்தில் போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன்? என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது! எனப் பதிலளித்தாராம்.

                                                ---------------------------------- அறிஞர் அண்ணா

ஒரு மிகச்சிறந்த புத்தககத்தை நீங்கள் படிக்க விரும்புகிறீர்கள் ஆனால் அது இன்னும் யாராலும் எழுதப்படவில்லை என்கிற நிலை இருந்தால் அதற்கு ஒரே தீர்வு அதை நீங்கள் எழுத வேண்டியது தான்.

                                                               -------------------------------- டோனி மாரிஸன்
ஒரு நல்ல புத்தகம் முடிவில்லாதது. அது பல வாழ்க்கைகளைப் பற்றி உங்களை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

                                                          ------------------------------------ ஆர்.டி.கம்மிங்

ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்காத வன், அந்த புத்தகத்தை படிக்கத் தெரியாதவனைவிட எந்த விதத் திலும் உயர்ந்தவன் அல்லன் 
                                             ------------------- மார்க் ட்வைன்.       - ஜேம்ஸ்ரஸல்

உன் மூளைக்குள் இருக்கும் சிந் தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள் தான் புத்தகங்கள்.
                                                ----------------------------------------- ஜேம்ஸ்ரஸல்

நம்மால் வேறு எப்படியும் பயணிக்க முடியாத உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் ஒரு மந்திரக் கம்பளம் புத்தகம்.
                                             ----------------------------------------- கரோலின் கோர்டன்

ஒரு நல்ல வாசகனைக் கொண்டே ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காணப்படுகிறது
                                      -------------------------------------- ஜார்ஜ் பெர்னாட்ஷா

தொகுப்பு: முனைவர் கடவூர் மணிமாறன், குளித்தலை, கரூர் மாவட்டம்.
நன்றி: விடுதலை - ஞாயிறு மலர், சனி: 11.08.2012

தமிழ்நாட்டு மாணவர்கள், பட்டதாரிகள், செக் குமாடாக இருக்க வேண்டாம், பந்தயக் குதிரையாக இருக்க வேண்டும்.

சிந்தனைதான் அறிவை வளர்க்கும்: அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்.
படிப்பு என்பது இந்நாட்டில் வயிறு வளர்ப்ப தற்காகவே பயன்படுத்தப்படுகிறது. படிப்பின் பயனெல்லாம் அறிவு பெறுவதற்காகவே இருக்க வேண்டும்.
கல்வியானது அறிவு வளர்ச்சிக்கும், புலமைக்குமே தவிர, மதப் பிரச்சாரத்துக்கு அல்ல என்பது கல்வியின் அடிப்படை தத்துவமாக இருக்க வேண்டும்.

பகுத்தறிவு மாறானதும், மூடநம்பிக்கையை வளர்ப்பதுமான எந்தச் செய்தியும் கல்வியில் பாடமாகக் கற்பிக்கக்கூடாது.
                                 ------------------------------------- தந்தை பெரியார்


உரமிடாத பயிரும், படித்து கூர்மையாக்கப்படாத அறிவும் வளர்ச்சி குன்றியவையே.

புத்தகங்களைப் படிப்பதை விட மனிதர்களை படிப்பது மிகமிக முக்கியம்.
மூளைக்கும் உணவு தேவைதானே? சிந்தனையைக் கூர்மைப்படுத்த சாணை தீட்ட, அறிவுள்ள நூல்களே தக்க உணவுகள் அதற்கு.

நூலைப் படித்து தகவல்களைப் பெற்று, ஆய்வு செய்து அறிவைப் பெருக்கினால் ஆயுள் வளரும், இயங்கினால் தான் மூளை, இன்றேல் அது வெறும் ஈளை


எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்பவனே சிறந்த மனிதன்.

- கி.வீரமணி
                         -------------------------------”விடுதலை” 18-4-2013

பொருளாதாரம் பற்றி பெரியார்

பொருளாதாரம்

சகோதரர்களே!

பொருளாதார மென்னும் விஷயத்தைப்பற்றி என்னைப் பேசும்படி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். பணம் சம்பாதிப்பதிலும், வரும்படி அடைவ திலும் நம்நாட்டு மக்கள் எந்தநிலைமையிலிருக்கிறார்கள்? அவர்களுக்கு அந்த வருவாயென்ன பலனளிக்கின்றது? அவர்களுக்கதிக வருவாய் கிட்டவுமது தக்க பயனளிக்கவும் வழியென்ன? என்பவைகள் போன்றது தான் பொருளாதாரமென்பது பற்றி நான் பேசப்போகும் விஷயத்தில் முக்கிய கவனிப்பாகும். ஆகவே இவ்விஷயங்களில் நமது நாட்டிற்கும் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்குமுள்ள வித்தியாசங்கள் முதலில் கவனிக்கப்பட வேண்டும். பொருளாதாரத்தில் மேல் நாட்டார் சராசரியாக ஒவ்வொரு நபரும் தினம் 2 ரூபாய் வீதம் சம்பாதிக்கின்றார்கள். நம் நாட்டார்களோ சராசரியாக ஒவ்வொரு வரும் தினம் 2 அணா வீதமே சம்பாதிக்கின்றார்களென்பது யாவருமறிந்த விஷயம். அன்றியும் இதுவே நம் நாட்டுப் பொருளாதாரப் பிரச்சினைக்கு முக்கிய பல்லவியுமாகும். இது உண்மையாகவே யிருக்கலாம். ஏனெனில் மேல் நாட்டில் பல லக்ஷ ரூபாய் சம்பாதிப்பவனிலிருந்து தினம் கால் அணா சம்பாதிப்பவன் வரையில் சகலரையும் ஒட்டு மொத்தம் கணக்கு சேர்த்துப் பிரித்து வகுத்துப்பார்த்தால் ஆளொன்றுக்கு வருமானம் ரூ 2-0-0 ஆகும். அதைப்போலவே இந்திய நாட்டின் பெரிய ஜமீன்தாரனிலிருந்து மகாராஜாக்களிலிருந்து மடாதிபதி களிலிருந்து தினம் ஒரு காசு பிச்சை எடுப்பவன் வரையில் ஒட்டு மொத்தம் கணக்குப் பார்த்து ஆள் ஒன்றுக்கு வருமானமென்னவாகுமென்று பிரித்து ஈவு பார்த்தால் ஆள் ஒன்றுக்கு 2 அணா வீதமே வரும்.

இவ்விதம் மேல்நாட்டில் வருமான மதிகமாவதற்கும் அதாவது சராசரிரூ.2-0-0 வருமானமாவதற்கும் நமது நாட்டில் வருமானம் குறைவ தற்கும் அதாவது ஆள் ஒன்றுக்கு சராசரி0-2-0 அணாவே கிடைப்பதற்கும் காரணமென்ன வென்பதைக் கண்டு பிடிப்பதுதான் பொருளாதாரப் பிரச் சினையில் முக்கியமானதாயிருக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன். மேல் நாட்டான் பணம் சம்பாதிக்க வென்று உழைக்கிறான். நாமுமது போல வே தானுழைக்கிறோம். ஆனால் தினம் 0-2-0 அணா சம்பாதிப்பதற்கு நமது மக்கள் படுகின்ற கஷ்டத்தினளவு மேல் நாட்டில் தினம் ரூ. 2-0-0 சம்பாதிக்கின்ற ஆட்கள் கஷ்டப்படுவதில்லை. சம்பாதனை விஷயத்தில் நமது கஷ்டமும் சரீரப்பிரயாசையும் சிறிதும் குறைந்த பாடில்லை. ஆனால் நாட்டு வளப்பத்தில் நம் நாட்டை விட மேல் நாடு சிறந்ததென்று யாருமிது வரை சொல்ல வரவில்லை. அப்படியிருக்க அதாவது வளமுள்ள நாட்டிலிருப்பவன் தினம் இரண்டணாவும் வளமில்லா தேசத்திலிருப்பவன் தினமிரண்டு ரூபாயும் சம்பாதிக்கக் காரணமென்ன என்பதில் தான் பொருளாதாரப் பிரச்சினையின் சாவி இருக்கின்றது. மலைவளம், நீர்வளம், நிலவளம், செழிப்பு வர்த்தக மூலப்பொருள்கள் பல தானியங்கள் விளை வுக்கு வேண்டிய சௌகரியங்களாகியவை மற்ற நாடுகளைவிட நமது நாட்டிலதிக முண்டல்லவா? இத்தகைய வளம் கொழுத்த நமது நாட்டில், செல்வத்திற்காக வென்று ஒரு தனி கடவுளையும் ஏற்படுத்திக் கொண்டு, அதற்காக பூஜைநைவேத்தியம் உற்சவம் பிரார்த்தனை முதலியவைகளும் செய்து வரும் நமது நாட்டில் “தரித்திரம் தலைவிரித்தாடக்” காரணமென்ன? மக்கள் சுகமாயிருக்க வீடில்லாமல் கட்டத்துணியில்லாமல் உண்ண உண வில்லாமல் வாடுகிறார்கள் வதங்குகிறார்களென்று சொல்லப்படக் காரண மென்ன? வென்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தக் காரணத் தினுண் மையைக்கண்டு பிடித்து விட்டால் பொருளாதார பிரச்சினை வெகு சுலபமாகத் தீர்ந்துவிடும்.

பொருளாதார சீர்திருத்த நிபுணர்களுக்கு இந்த விடத்தில் தானாதிக வேலையிருக்கிறது. இதைக்கண்டுபிடித்து நேர் செய்யாமல் “நமது செல்வம் கொள்ளை போகின்றது! கொள்ளை போகின்றதே! தென்று பேசுவதால் - தலையிலும், வாயிலும், வயிற்றிலுமடித்துக் கொள்வதாலொருபயனுமே யுண்டாகாதென்பது எனது அபிப்பிராயம்.

உண்மையைப் பேசத்துணிந்தோமேயானால் 1. இந்த நாட்டில் பொருளாதாரக் கஷ்டமிருக்கின்றதா? 2. இருந்தால் யாருக்கிருக்கின்றது? 3. அது ஏனிருக்கின்றது? 4 யாராலிருக்கின்றது? என்பவைகளாகிய விஷயங்களில் கவனம் செலுத்திப்பார்த்து ஒரு முடிவுக்கு வந்தோமானால் அந்த முடிவின் அபிப்பிராயங்கள் இந்த நாட்டுப் பெரியோர்கள் தலைவர் கள் என்பவர்களது அபிப்பிராயங்களுக்கு விறோதமாகவே இருக்கும். இருந்தபோதிலும் இவ்விஷயங்களில் எனக்குத்தோன்றிய உண்மையை உங்கள் முன் பேசுகின்றேன்.

சகோதரர்களே! இன்று பொருளாதாரக் கஷ்டமென எங்காவது உண்மையிலிருக்கின்றதா? விவசாயங்கள் நடைபெறுகின்றன. தொழில்கள் நடைபெறுகின்றன. சில இலட்சம் பிறவிப் பிச்சைக்காரர்கள் தவிர, சில கோடி பிறவிச் சோம்பேறிகள் தவிர மற்ற மக்களெல்லோரும் வேலை செய்கின்றார்கள். 1,000, 10,000, 1,00,000, 10,00,000, 100 00 000, 1,00000000 ரூபாய் களென்பதான சொத்துக்கள் கொண்ட செல்வவான்கள் நமது நாட்டிலில்லையா? 100, 1,000, 10,000, 1,00,000, 10,00,000 பல 10,00,000 ரூபாய்களென்பதான வருஷ வரும்படியைக் கொண்ட வரும்படிக்காரர்கள் நமது நாட்டிலில்லையா? மாதம் ஒன்றுக்கு 10, 100, 1000, 10,000 ரூபாய்கள் வீதம் சம்பளமும், சம்பாதனையுமானவரும் படியுள்ள உத்தியோகஸ்தர்கள் வக்கீல்கள், வைத்தியர்கள் முதலிய மக்கள் நமது நாட்டிலில்லையா? ஒவ்வொரு வீடுகளில் 1000, 10,000, 1,00,000 ரூபாய் பெறும்படியான நகைகளும், 1000, 10,000, 1,00,000, 2,00,000 பெறுமான கட்டடங்களும், கோட்டை கொத்தளம் போன்ற வீடுடையவர்களும் நமது நாட்டி லில்லையா? வென்று யோசித்துப்பாருங்கள். பூமி விஷயத்திலும் ஆள் ஒன்றுக்கு 5, 10, 100, 1,000, 10000, 20,000, 50,000 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட பூமியையும், வயல்களையும், தோட்டங்களையும், மலைகளையும், சோலைகளையும் அவற்றுள் அழகிய நீரோடைகளையும் கொண்ட மக்கள் நமது நாட்டிலில்லையா? பெரிய பெரிய நதிகள், வாய்க்கால்கள், ஓடைகள், ஏரிகள் நமது நாட்டிலில்லையா? என்று யோசனை செய்து பாருங்கள். ஆகவே இந்த நாட்டில் செல்வமில்லை என்று எப்படி, எந்த ஆதாரத்தைக் கொண்டு சொல்லக்கூடும்? என்பதை சற்று நடு நிலைமையிலிருந்து சிந்தித்துப் பாருங்கள். எனவே, சகோதரர்களே!இவ்வளவு செல்வமிருக்கும் போது இந்த நாட்டைப் பொருளாதாரக் கஷ்டமிருக்கின்ற நாடாக எப்படி சொல்ல முடியும்? அப்படித்தானெங்காவதிருப்பதாக சொல்லுவதானால், யாருக்குப் பொருளாதாரக் கஷ்டமிருக்கின்றது? பாடுபடுகின்றவர்களாய், பாமர மக்களாயிருக்கின்ற - சாது ஜனங்களாக இருக்கின்றவர்களுக்கும், எந்தக் காலத்திலும் எந்த விதத்திலும் பொருளற்றவர்களாகவே இருந்து தீரவேண்டுமென்று நிர்பந்தப்படுத்தப்பட்டிருக்கின்றவர்களுக்குமேயல் லாது, மற்ற யாருக்குப் பொருளாதார கஷ்டமிருக்கின்றது? என்று உங்களை நான் கேட்கின்றேன்.

தங்களை யுயர்ந்த ஜாதியரென்றும், மேல்வருணத்தவரென்றும், பாடு படுவதற்கு உரிமையில்லாதவர்களென்று மேற்பாடு செய்துகொண்ட கூட்டத் திற்கெங்காவது பொருளாதாரக் கஷ்டமிருக்கின்றதா? என்று பார்த்தீர்களா னால் இந்தக் கூட்டத்தாருக்கு எங்காவது சிறிதாவது பொருளாதாரக் கஷ்டமிருப்பதாகவோ, ஜீவனத்திற்குக் கஷ்டப்பட வேண்டியிருப்ப தாகவோ, அதனால் பசியுடன் வாடிக்கொண்டோ, கல்வி கற்க மார்க்க மில்லாமலோ இருப்பதாக நீங்கள் சொல்ல முடியுமா? என்பது உங்களுக்கு விளங்கும். ஆகவே, இந்தக் கூட்டத்தவர்களல்லாமல் மற்றவர்களுக்குப் பொருளாதாரக் கஷ்டமென்பதிந் நாட்டிலேனிருக்கின்றது? யாராலிருக் கின்றது? என்பதை இப்போது யோசித்துப்பாருங்கள். அப்போதுதான் நாட்டி லுள்ள செல்வங்களை சகல மக்களும் சரியாய் அனுபவிக்க முடியாம லிருக்கும்படிக்கும், பாடுபடுகின்றவன் பட்டினியாகவும், சோம்பேறி யாயிருப்பவன் நன்றாகத் தாராளமாய் சாதாரண அளவுக்கெத்தனையோ மடங்கதிக மாயனுபவித்துக்கொண்டு வாழும்படியாகவுமிருப்பதும் அதற்கு ஆதாரமாக நமது சமூகவாழ்க்கைக் கிரமத்திலதற்கேற்ற திட்டங்களேற் படுத்தி வைத்திருக்கும் சூக்ஷியும், பித்தலாட்டமும், ஏமாற்றமும் நன்றாய் உங்களுக்கு விளங்குவதோடு இதைத்தவிர மற்றபடி வேறொன்றும் ‘பொரு ளாதாரக் கஷ்டத்திற்கு’ காரணமில்லை யென்பதை நன்றாயுணருவீர்கள்.

சகோதரர்களே!இந்தப்படியாய்த் திட்டம் செய்வதற்கு மூலகாரண ஸ்தர்களாகயிருப்பவர்கள் மேல்ஜாதியார், மேல்வருணத்தாரென்கின்ற சூஷிக்கார சோம்பேறி வாழ்க்கைக் கூட்டத்தார்களா? இல்லையா? வென்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, இப்படிப்பட்ட நிலைமையில், இந் நாட்டி லிருப்பதாய் சொல்லப்படும் பொருளாதாரக்கஷ்டத்தை எப்படி யொழிப் பது தென்பதுதான் இனி முக்கியப்பிரச்சினையாக யோசிக்கப்படவேண்டும்.

சகோதரர்களே!இந்த இடத்திலுங்களது நியாயமான புத்தியையும், நடு நிலைமையான கவனத்தையும் செலுத்திப் பாருங்கள். பொருளாதாரக் கஷ்டத்தின் தத்துவங்கள் சுலபமாக உங்களுக்கு விளங்குவதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்லுகின்றேன். இன்றையத்தினம் ரூ. 1-க்கு பட்டணம் படியினால் 6 படி அரிசி விற்கும்படியான நிலைமை நம் நாட்டில் இருந்தும் (அதாவது ஒரு தம்படிக்கு ஒரு பெரிய இட்டலி விற்கக்கூடிய அளவு மலிவாக இருந்திருந்தும்) இன்று ஒரு மனிதன் ஒரு இட்டலி 6 தம்படி கொடுத்து வாங்குவதும் அதே இட்டலியை வேறு ஒருவன் ஒரு தம் படிக்கோ அல்லது இரண்டு தம்படிக்கோ விற்றால்கூட அவனிடம் வாங்காம லதிகவிலை கொடுத்து வாங்கி, நஷ்டமடைந்து வயிறார இட்டலி வாங்கி சாப்பிடக்கூட சௌகரியமில்லாமல் கஷ்டப்படுவதும், அதிக விலைக்கு விற்பவன் பெண்டு பிள்ளைகள் கெம்பு வைரக்கம்மலும், அட்டிகையும், ஜப்பான் சில்க் கும், பிராந்தி, விஸ்கிக்குடியுமாகியவைகளான போக போக்கியங்களை அனுபவித்துக் கொண்டு அவன் பிள்ளைகள் பி.ஏ.பி.எல்., படிக்கின்றார்கள் என்றால் இது இந்நாட்டுப்பொருளாதாரக் கஷ்டத்தின் பயனா? அல்லது சிலருக்கெப்போதும் பொருளாதாரக்கஷ்டம் சதா இருக்கும்படியாகச் செய்யப்பட்டிருக்கும் சமூகவாழ்வு ஏற்பாடா? என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, இந்தப்படியான, அதாவது செல்வத்தையும், பொருளையும் மக்கள் சமமாயனுபவிக்க முடியாதபடி வெகுகாலத்திற்கு முன்பிருந்தே செய்யப்பட்டிருக்கு மேற்பாட்டை-கட்டுப் பாட்டையுடைத் தெரிந்தீர்களானால் இங்குப் பொருளாதாரக் கஷ்டமேற்பட மார்க்கமிருக்குமா? என்று கேட்கின்றேன்.

மேல் நாட்டில் சக்கிலிமகன் பிரதம மந்திரியாகின்றான். குயவன் மகன் லார்டு (டுடிசன) ‘பிரபு’ சபையில் அங்கம் வகிக்கின்றான். கப்பலில் சட்டி பானைகளைக் கழுவி சுத்தம் செய்கின்றவன் குப்பைக் கூழங்களைக் கூட்டு கின்றவன் மகன் இராஜப் பிரதிநிதியாகின்றான். வண்ணான் மகன் கவர்ன ராகின்றான் என்பதை நாம் பார்க்கின்றோம். ஆனால் நமது நாட்டில் சக்கிலி கள் வீதிகளிலும் நடக்கக்கூடாது.

பறையன் சுடுகாட்டிலிருந்துகொண்டு, பிணங்களுக்குக் கட்டியத் துணியைக்கிழித்துக் கட்டிக்கொள்ள வேண்டுமென்றும், பிணங்களுக்கு வாயில் போடும் வாய்க்கரிசியைப் பொறுக்கியெடுத்துக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கவேண்டுமென்றும் திட்டங்களிருந்தாலெப்படிப் பொருளாதாரத் திட்டம் பெருவாரியான பாடுபடும் மக்களுக்கு திருப்திதரக்கூடியதாக விருக்குமென்று யோசித்துப்பாருங்கள்.

இந்த நாட்டில் மேல் ஜாதிக்காரனென்பவன் எவனாவது சரீரத்தால் பாடுபடுகின்றானா? வென்று கவனித்துப்பாருங்கள்.

இந்தநாட்டில்மக்களை பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன் பஞ்சமனென்று பிரித்து, இதில் அவர்களுக்கு அந்தஸ்தும், வேலையும் பிரித்து, அதாவது பிராமணன் படிப்பதற்கும்- படிப்பு சொல்லிக் கொடுப்பதற்கு மருகனென்றும், க்ஷத்திரியன் அரசு செலுத்தி - உத்தியோகங் கள் பார்க்க அருகனென்றும், வைசியன் வியாபாரியாய் வியாபாரம் செய்து ஜமீன்தாரனாய் விவசாயக்குடித்தனம் செய்விக்கச்செய்து, பணம் சம்பாதிக்க அருகனென்றும், சூத்திரன் சரீரப்பிரயாசைப்பட்டு, உயிர்வாழுமளவுக்கு மாத்திரம் ஊதியம் பெற, கூலிபெற அருகனென்றும், பஞ்சமனென்பவன் இந்த சூத்திரன் அதிகாரம் செய்யவும், அவனுக்கு வெட்டி வேலை செய்ய வும் அவன் உண்டுகழித்த கஞ்சியையும், உடுத்திக்கிழித்த கந்தையையும் பெற்று, உண்டு உடுத்தி இழிபட்ட மிருகங்களிலும் கேவலமாயிருக்க அருகனென்றும் யேற்பாடுகள் செய்ததிட்டமே - வருணாச்சிரம தர்மமே தான் - இன்று இந்த நாட்டில் பாடுபடுபவர்கள் பொருளாதாரத்தில் நல்ல நிலையையடைய முடியாமல் இருக்கின்றதேயொழிய, வேறுகாரணமில்ல வேயில்லை. இந்தக்கூட்டம் அதாவது பாடுபடுகின்றவர்கள் எண்ணிக்கை யில் மற்றவர்களைவிட அதிகமாயிருப்பதால் நாடு ஏழையாகவும், தரித்திர மாகவுமிருப்பதாக தெரிகின்றது. இவர்களது இந்த நிலைமையை மேல் ஜாதிக்காரர்கள் மற்றவர்களுக்கு - வெளியாருக்கு எடுத்துக்காட்டி, ‘இந்தியா ஏழைநாடு, தரித்திரநாடு, பொருளாதாரத்தில் கீழான நாடு’ என்பதாக ஒப்பாரிவைத்து அதாவது ஒரு பிச்சைக்காரி பிச்சைப்பெறவேண்டுமானால் யாரிடத்திலாவதுள்ள ஒரு மொண்டிக் குழந்தையையோ, குருட்டுப்பிள்ளை யையோ வாடகைக்குப் பெற்றுவந்து, தனது குழந்தை ‘குருடு’ என்றும், ‘மொண்டி’ என்றும் சொல்லி, தெரியாதவர்களுக்குக்காட்டி, காசு, பணம் சம்பாதித்துக்கொண்டு பிறகு குழந்தைகளைப் பெற்றோர்களிட மொப்பு வித்து விடுவதுபோல் இந்தியாவின் கீழ்பட்ட மக்களென்பவர்களின் நிலைமையை கைமுதலாக வைத்து மேல் நிலைமையில் மிக்க சௌகரிய மாக இருப்பவர் தாங்கள் மிகவும் பரிதாபப்படுவதாக வேஷம்போட்டு அரசாங்கத்தில் சுயநலத்திற்கு அனுகூலமான லாபத்தை மேலும் மேலும் அடைவதற்குச் செய்யும் சூக்ஷியேதான் இன்றையப் பொருளாதாரக் கஷ்டமேயொழிய வேறில்லை.

இந்தியப் பொருளாதார நிலைமை சிறிது உயரவேண்டுமானாலும் இந்திய ஜனத்தொகையில் 100க்கு 75 பாகத்திற்கு மேலான இந்த சமூகங்கள் பொருளாதாரத் துறையில் மேல் வருவதற்கு சமூகத்துறையில் உள்ள கட்டுப்பாடுகளை உடைக்கச்செய்தால் ஒழிய வேறு வழியில் இந்திய மக்கள் பொருளாதாரத்துறை சீர்படுத்தப்படுமென்பது சிறிதும் முடியாத காரியமே யாகும். ஆகவே இதைத்தவிர மற்ற வழியில் பொருளாதாரத் துறையைப் பற்றி பேசுபவைகளவ்வளவும் புரட்டும், ஏமாற்றமுமேயல்லாமல், அதில் சிறிதும் அறிவுடைமையோ, நாணயமோ உண்மையோ யில்லையென்றே சொல்லுவேன். ஆதலால் நமது நாட்டுப் பொருளாதாரக் கஷ்டமென்பது இம்மாதிரியான ஒரு பெருமிந்திய சமூகத்திற்கிருந்து வருவதற்குக் காரணமே இந்தமாதிரியான வருணாச்சிரம முறையேயல்லாமல் வேறல்ல யென்பதே எனது அபிப்பிராயம். இந்திய நாட்டிலெவ்வளவு பஞ்சமிருப்ப தாக சொல்லப்பட்டாலும், எவ்வளவு தரித்திரமிருப்பதாக சொல்லப்பட்டா லும், எந்தக் காலத்திலும், எந்தக் காரணத்தைக்கொண்டும் மேற்கண்ட உயர்ந்த ஜாதிக்கூட்டமானது ஒரு நாளாவது, ஒரு நிமிஷமாவது, கஷ்டப்படு வதாகவோ பட்டினிக்கிடப்பதாகவோ சொல்ல முடியவே முடியாதென்பதை நீங்கள் கூர்மையாய் யோசித்துப்பார்த்தீர்களானால், உங்களுக்கு விளங்கா மல் போகாது.

மற்றுமின்னுமொரு விஷயத்திலும் நமது பொருளாதார நிலைமைக் கஷ்டமாகக் காணப்படுவதற்குக் காரணம் சொல்லவேண்டியிருக்கின்றது. அதாவது நமது பொருளாதார வருவாய்களும் செல்வர்களுடைய செல்வத் தின் பயன்களும் நாட்டு நலனுக்கும், பெரும்பான்மையான ஏழை மக்கள் பாடுபடுகின்றவர்கள் என்கின்ற கூட்டத்திற்கும் அவர்களது முன்னேற்றத் திற்கும் போக முடியாமல் சாமி பேராலும் மதத்தின் பேராலும் சடங்குகளின் பேராலும் நாசமாகும் ஒரு பெரிய மோசமான துறையேயாகும்.

இந்தநாட்டுச் செல்வவான்களெல்லோரும் பணம் சம்பாதித்து செல்வ வான்களானதற்குக் காரணமிந்த நாட்டுப்பெரும்பான்மையான மக்கள் சரீரப்பிரயாசையின் பயனாலேற்பட்ட தென்பதை சிறிதும் உணராது ‘கடவுள் தங்களுக்குக்கொடுத்தா’ரென்பதாக யெண்ணிக்கொண்டு, அந்தக் கடவுளுக்கு நன்றி செலுத்தும் முறையிலும், இன்னும் மேன் மேலும் செல்வம் பெருக வேண்டுமென்பதற்காக விண்ணப்பம் போட்டு, லஞ்சம் செலுத்தும் முறையிலும் செல்வத்தைப் பாழாக்குகின்றார்கள். இதன் பயனா கவே இந்த நாட்டில் வருஷமொன்றுக்கு பல கோடி ரூபாய்கள் பாழாவதைப் பார்க்கலாம். நமது தமிழ்நாட்டில் மாத்திரம் வருஷமொன்றுக்கு இரண்டு கோடி அல்லது மூன்றுகோடி ரூபாய்கள் வரும்படி வரத்தக்க மூலத்துகை கள், சொத்துக்கள் கோவிலின் பேரால் மதத்தின் பேரால் முடங்கிக் கிடக் கின்றன. மற்றும் மூன்றுகோடி, நான்குகோடி ரூபாய் வருஷம் ஒன்றுக்குப் பொதுமக்களின் வருவாயும், சிலவிடங்களின் கைமுதலும் பாழாகும் வண்ணம் கிராமதேவதைகள் முதல் உயர்தரக் கடவுள்கள் வரையுள்ள இலட்சக் கணக்கான கடவுள்களுக்குப் பூசை, நைவேத்தியம், உற்சவம், காணிக்கை முதலிய செலவுகளும், கோவில் திருப்பணி கும்பாபிஷேகம் முதலிய செலவுகளும், மற்றும் இரதம், தேர், வாகனம், பாத்திரம், பணம், துணிமணி, நகை முதலிய செலவுகளும் தேசத்தின் பொருளாதார நிலைமை யைப் பாழாக்குகின்றன. தமிழ்நாட்டில் மாத்திரம் இவ்வளவென்றால் இந்தியா மொத்தமு மெப்படியிருக்குமென்று நினையுங்கள். இந்த உண்மையை மக்களுக்கு எடுத்துக்காட்டி இந்த நாசமாய்ப்போகும் பொருளாதாரத்தைக் காப்பாற்றி அச்செல்வங்கள் இந்திய மக்களுக்குப் பயன்படுத்தச் செய்யா மல் இத்துறையில் சிறிது முயற்சியுமில்லாமல் ‘நமது செல்வம் அன்னிய நாட்டுக்குப் போகின்ற’ தென்கின்ற ஜாலமந்திரத்தைப் பிரயோகித்து முட்டாள்களை ஏமாற்றி உண்மை அறியாமலிருக்கும்படி பொதுநலத்தின் பேரால் அரசியலின் பேரால் சூக்ஷிகள் செய்யப்பட்டு வருகின்றதை நமது மக்கள் உணரும்படி செய்யவேண்டும்.

இந்த நாட்டுச் செல்வம் வெளியில் போகின்றதென்பதை அடியோடு நிறுத்தப்பட்டுப் போவதுடன் வெளிநாட்டுச் செல்வங்கள் எல்லாம் நமது நாட்டுக்கே வருவதாக வைத்துக்கொண்டாலும், இன்றைய வருணாச்சிரம முறையும், மத சம்பந்தமான கடவுள் சடங்குகளின் முறையுமிப்படியே இருக்கும் வரை மேற்கண்ட, அதாவது பாடுபடாமல் சோம்பேறியாய் வாழ உரிமையுள்ளவனும், பணக்காரனாக உரிமையுள்ளவனும், உத்தியோகம் பார்க்க உரிமையுள்ளவனும், பொதுஜனப்பிரதிநிதியாக உரிமையுள்ளவனும் தான் இப்போதையைவிட இன்னுமதிகமாகக் கொள்ளையடிக்கவும், போக போக்கியங்களனுபவிக்கவும், கஷ்டப்படுபவர்களை பட்டினி கிடப்ப வர்களை இன்னும் அதிகமாய் கொடுமை செய்யவும் அருகதையுடையவர் களாவார்களே தவிர, ஒரு நாளும் இந்தியாவிலின்று பொருளாதாரத்தால் கஷ்டப்படும் ஏழைமக்கள், பட்டினிக் கிடப்பவர்க ளென்கின்றவர்கள் ஒரு நாளும் யாதொரு விதத்திலும் சீர்பட முடியவே முடியாதென்பதை உணருங்கள்.

மேலும் இந்தியப் பொருளாதாரத் துறை என்பதை சீர்படுத்த மற்றொரு துறையில் பாடு படவேண்டியிருக்கின்றது.

அஃதென்னவெனில் மனிதன் தனது வாழ்வுக்கும், தாழ்வுக்கும் கடவுளே காரணமென்று எண்ணிக்கொண்டு கடவுள் மீதே சகல பொறுப்பும் போட்டுவிட்டு மாடுபோல் உழைப்பதை மாத்திரம் தன் கடமையாய்க் கொண்டிருக்கும் கடவுள் உணர்ச்சியை ஒழிக்க வேண்டுமென்பதாகும்.

நம் நாட்டில் பாடுபட்டு ஏழையாய் பட்டினியாய் இழிவாய் இருந்து கஷ்டப்படுபவன் மாத்திரம் தான் கடவுள் உணர்ச்சி கொண்டு நசமாய்ப் போகின்றானேயொழிய செல்வமுடையவனும், பணமுடையவனும், சோம்பேறியாய் வாழ்பவனும் ஒருநாளும் உணர்ச்சிகொண்டு கடவுளுக்குப் பயந்து நடப்பது என்கின்ற கொள்கையில் ஈடுபடுவதே இல்லை.

மேலும் எவ்வளவு அக்கிரமமும் மோசமும் செய்தாலும் அந்தக் குணங்களால் சம்பாதித்த பொருளில் ஒரு பாகத்தை கடவுளுக்குக் கொடுத்து மன்னிப்பு பெற்று விடலாம் என்றும் மேலும் மேலும் செல்வம் பெறுவதற்குக் கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கலாம் என்றுமே கருதுகின்றான்.

ஆகவே கடவுளுணர்ச்சியானது பாடுபடுபவன் கஷ்டப்படவும் பித்தலாட்டக்காரன் சோம்பேறி ஆகியவர்கள் செல்வம் பெற்று சுகப்படவும் தான் உதவுவதாயிருப்பதால் அதை ஒழிக்க வேண்டிய விஷயத்திலும் பாடு பட வேண்டியது அவசியமாகும்.

கடைசியாக பொருளாதாரத் திட்டத்திற்கு மற்றொரு துறையிலும் பாடுபட வேண்டியது அவசியமாகும். அதாவது மனிதன் பொருள் அடை வதற்காக செய்யும் தொழில்கள் எல்லாம் பழைய முறைப்படி 1000, 2000, வருஷங்களுக்கு முன்னால் செய்து வந்த முறைப்படி செய்து வர வேண்டும் என்கின்ற மூடநம்பிக்கையையும் மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழித்து புதிய மாதிரியில் அதாவது யந்திரம் முதலியவற்றில் பாடுபடும் பொருள் சம்பாதிக்கு முறையில் பாடுபட ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். இதைப்பற்றி வேறு பல சமயங்களில் விசேஷமாகப் பேசி இருப்பதால் அவற்றைக் கவனித்தால் தெரியவரும்.

ஆகவே இவ்விஷயங்களை எல்லாம் நீங்கள் தக்கப்படி கவனித்து உங்களுக்கு பட்டபடி நடவுங்கள்.

------------------------சென்னிமலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தந்தைபெரியார் அவர்கள் ஆற்றிய உரை.”குடி அரசு” - சொற்பொழிவு - 05.07.1931