Search This Blog

1.11.09

தமிழர் நிலை மாற பெரியாரின் ஆலோசனைகள்

தமிழர் நிலை மாறவேண்டும்


தமிழர்களான கவிஞர்கள், கட்டுரையாளர்கள், அறிவுப் பிரச்சாரம் செய்பவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் நடிப்புத் துறையில் உள்ளவர்கள், முதலில் யாவரும் தங்கள் கலைகளை மக்களுக்குப் பயன்படும் வகையில் அவற்றைக் கையாள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழர்கள் புரட்சிகரமான மாறுதலடைய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

தமிழர்களைக் கைதூக்கிவிட எந்தக் கலையும் எந்தக் கவிஞரும் இல்லை. உள்ளவர்கள் எல்லோரும் பத்தாம் பசலிக்காரர்கள் என்ற சொல்லும்படி, பழைமையைக் கண்டே தங்கள் கலைகளைப் பயன் படுத்துகிறார்கள்.

தமிழர்களைத் தாழ்த்தியதும் தலை தூக்க வொட்டாமல் அழுத்தியதும் தமிழறிஞர், கலைஞர், கவிஞர், புலவர் முதலியவர்கள் கையாண்ட சமய இலக்கியமும் முன்னோர்களைப் பின்பற்றி வந்த நடப்புகளும், தமிழர்களைக் குலைத்து உருவாக்கிய அரசியலுந்தான்.

தமிழன் வளர்ச்சிக்கு, அறிவிற்கு, கலைகளுக்கு, சமயத்திற்கு, அரசியலுக்கு - பார்ப்பான் காட்டிய வழியைத் தவிர, ஒரு தமிழன் காட்டிய வழி என்று சொல்ல இன்று என்ன இருக்கிறது? நமது கலைஞர்கள், கவிஞர்கள், புலவர்கள், அரசியல்வாதிகள் பார்ப்பானைக் குறை மட்டும் சொல்லிக் கொண்டு, அவன் கலாச்சாரத்தில் மூழ்கி, அவன் காட்டிய வழியில் நடந்து கொண்டு வாழ்கிறவர்களாகத்தான் இருந்து வந்தார்கள்; வருகிறார்கள் என்பதல்லாமல் தமிழர் நலனுக்கு, வளர்ச்சிக்கு, இழிவு நீக்கத்திற்கு என்று யாராவது எந்த அளவுக்காவது பாடுபட்டார்கள் என்று ஒரு விரலையாவது நீட்ட முடிகிறதா?

எல்லாத் தமிழ் உணர்ச்சியாளரும், எப்படிப் பட்ட பார்ப்பன வெறுப்பாளரும் சுயநலத்திற்கு வேண்டுமான அளவுதான் வெறுப்பைக் காட்டிக் கொள்கிறார்களே தவிர, தமிழ் நலத்திற்கு, தமிழர் சமுதாய நலத்திற்கு என்பதாகக்காட்டிக் கொண்டவர்கள் தமிழர்களில் மிகமிக அரிதாகவே இருந்து வருகிறார்கள்.

தமிழ்ப் பெரியோர்கள், கல்வியாளர்கள், மேதாவிகள், பெரும் பதவியாளர்கள் யாவரும் தமிழர்களின் கேட்டிற்கும், இழிவிற்குமே பார்ப்பனர்களால் கற்பனை செய்து உண்டாக்கப் பட்ட கதைகள், காவியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் இவைகளில் புகுத்தப்பட்ட கடவுள்கள் கந்தன், சிவன், விஷ்ணு, கணபதி, இராமன், கிருஷ்ணன் முதலியவற்றைக் கும்பிடுகிறவர்களாகவும் இவர்களது பெண்டு பிள்ளைகளையும் பின்பற்றி நடப்பவர்களாகவும் இருக்கிறார்களே தவிர அறிவைப் பற்றியோ, மானத்தைப் பற்றியோ, இன நலத்தைப் பற்றியோ சிந்தித்தவர்கள் என்று சொல்லி ஒருவரையும் குறிப்பிடமுடியவில்லையே!

எந்தப் பெரிய மனிதன் அறிஞர், கவிஞர், வித்துவான், மேதாவி என்பவர் யாரானாலும் அவர், திவசம், திதி முதலிய பார்ப்பனக் காரியங்களைச் செய்பவரும்; இவை சம்பந்தமான நெற்றியில் சாம்பல், செம்மண், சுண்ணாம்பு, பூச்சுப்பட்டை அடித்துக் கொள்பவர்களும்தான் இருக்கிறார்களே ஒழிய, இவை எதற்கு, இவற்றால் பலன் என்ன என்று சிந்தித்தவர்கள், சிந்திக்கிறவர்கள் ஒருவரையும் காண முடியவில்லையே!

இன்னும் தமிழன் சூத்திரனாக இருக்கிறான் என்றால் இருந்து கொண்டு திவசம், திதி செய்து கொண்டு, சாம்பல் மண்ணைநெற்றியில் அடித்துக் கொண்டு கோவில் குளங்களுக்குப் போய்க் கொண்டிருக்கிறான் என்றால் - தமிழன் எந்த வகையில் முன்னேறத்தக்கவன் என்பது புரியவில்லை. பார்ப்பானைக் கூப்பிட்டுத் திதி கொடுக்கிற தமிழன், எப்படித் தன்னைச் சூத்திரன் அல்லன் என்று சொல்லிக் கொள்ள முடியும்?

இன்னும் தமிழனுக்கு மானம், வெட்கம், பகுத்தறிவு வரவில்லையென்றால் மற்ற எந்த நூற்றாண்டில் வரமுடியும்? சமுதாயப் புரட்சிக்கு உண்மையாகவே இந்தச் சமயம் மிகவும் பொருத்தமான காலம் என்பது எனது கருத்து.

இன்று நமக்குப் பெரும் சனியாக அய்க்கோர்ட் ஒன்று இருக்கிறது. மற்ற ஸ்தாபனங்களும் பெரிதும் நமக்கு அனுகூலமாக இருக்கிறதென்றே சொல்லலாம். எனவே தமிழனுக்குப் புத்தி, மானம் இருக்க வேண்டும்; இருந்தால்தான் எளிதில் மாற்றம் உண்டாக்கிக் கொள்ள முடியும்.

கல்வி இலாகாவில் பகுத்தறிவு புத்தகங்களையும், பகுத்தறிவு ஆசிரியர்களையும் நல்ல வண்ணமாக ஆக்க வேண்டும்.

உத்தியோக இலாகாவில் பெரிதும் தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைப் புகுத்த வேண்டும், மேன்மேலும் கிராமக் கணக்கு, மணியம் பதவிகளை தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமாகப் பார்க்க வேண்டும்.

மற்றும் நிருவாகத் துறையில் அய்.ஏ.எஸ். ஒழித்துக் கட்டியாகவேண்டும். வெள்ளையன், தன் ஜாதியாரிடமே நீதித்துறை, நிருவாகத் துறை இருக்க வேண்டுமென்று செய்த சூழ்ச்சியேயாகும். ஆகவே இவை தமிழர்களைத் தலையெடுக்கவொட்டாமல் செய்து வரும் காரியங்களுக்காக இருந்து வருகின்றன.

இந்தக் காரியங்களை இன்றைய ஆட்சி செய்து விடுமானால், இந்த ஆட்சியை எவரும் அசைக்க முடியாது என்பதோடு, தமிழர் நிலை நல்ல அளவுக்கு முன்னேற்றமடையக் கூடும் என்பதுதான் எனது கருத்து.

---------------------தந்தை பெரியார்-"விடுதலை" தலையங்கம்: 7.10.1972

கடவுளுக்கே பூணூலா? ஏன்? எதற்கு?


பூணூல்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் சங்கர நாராயணப் பெருமாளுக்கு ஜெயேந்திரர் 3 அடி நீளமுள்ள 288 கிராம் எடையில் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கப் பூணூல் அணிவித்தாராம்.

இது இப்பொழுது மட்டுமல்ல, திருப்பதி ஏழுமலையானுக்கே 3 கிலோ தங்கத்தில் பூணூல் அணிவித்தார் (5.4.2002).

கடவுளுக்கே பூணூலா? ஆச்சரியமாக இருக்கிறதா!

இதன் பொருள் என்ன? பக்தியுள்ளவர்கள் கூட கொஞ்சம் புத்தியைச் செலுத்தினால் மிகமிக எளிதில் புரிந்துகொள்ளலாம்.

கடவுளும், பார்ப்பனர்களும் ஒரே ஜாதி; இன்னும் சொல்லப்போனால், கடவுளுக்கும்மேலே பிராமணர்கள் என்பதுதான் அவர்களின் நினைப்பும், ஏற்பாடுகளும் ஆகும்.

தமிழ்நாடு பார்ப்பனர்கள் சங்கம் வெளியிட்ட அந்தணர் ஆற்றிய அருந்தொண்டு என்னும் நூலினை வெளியிட்ட ஜெயேந்திர சரஸ்வதி கடவுளுக்கும்மேலே பிராமணர்கள் என்று சொன்னதை நினைவு கூர்ந்தால் இதன் உண்மை புரியும்.

இவர் மட்டுமல்ல, அவர்களின் வேதங்களும் அதனைத்தான் குறிப்பிடுகின்றன.

தேவாதீனம் ஜெகத்சர்வம்

மந்த்ரா தீனம் ததேவதா

தன் மந்த்ரம் பிரம்மாதீனம்

பிராமண மம தேவதா

(ரிக், 62 ஆவது பிரிவு 10 ஆம் சுலோகம்)

இதன் பொருள்:

உலகம் தேவர்களுக்குக் கட்டுப்பட்டது; தேவர்கள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். மந்திரம் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டது. பிராமணர்களே நமக்குக் கடவுள் ஆவர்.

இந்து மதத்தைப் பொருத்தவரை எல்லா ஏற்பாடுகளுமே பார்ப்பனர்களை முதன்மைப்படுத்துவதேயாகும்.

பூணூல் அணிவது அவர்கள் இரு பிறவியாளர்கள் என்பதற்கு அடையாளம். பிரம்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்று பறைசாற்றுவதாகும்.

சூத்திரர்கள் பூணூல் அணிவது மனுதர்மப்படி தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

சூத்திரன் பிராமண ஜாதிக்குறியை பூணூல் முதலியதைத் தரித்தால், அரசன் சூத்திரனின் அங்கங்களை வெட்டவேண்டும் (மனுதர்மம் அத்தி-யாயம் 9; சுலோகம் 224).

கடவுளுக்கும் பூணூல் போடுவதன் தாத்பர்யம் இப்பொழுது விளங்குகிறதா?

------------------- மயிலாடன் அவர்கள் 30-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

பிரதோஷம் என்றால் என்ன?


பிரதோஷம்

பிரதோஷம் பிரதோஷம் என்று ஆன்மிகத்தில் சொல்கிறார்களே, அது எத்தனைப் பக்தர்களுக்குத் தெரியும்?

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்களாம். (பால் கடல் எங்கிருக்கிறது புவியியல் படித்த மேதாவிகள் கொஞ்சம் சொல்லக்கூடாதா?).

பாற்கடலை எதைக் கொண்டு கடைந்தார்களாம். மந்தாரமலையைக் கொண்டாம். அதற்குப் பயன்படுத்திய கயிறு வாசுகி என்னும் பாம்பாம்.

சிவபெருமான் அனுமதி பெறாமல் கடைந்ததால் பாம்பு விஷம் கக்கிற்றாம். முப்பத்து முக்கோடி தேவர்களும், விஷ்ணு, பிரம்மா உள்பட அனைவரும் சிவனை சரண் அடைந்தார்களாம். நந்தி பகவானை அழைத்து அந்த நஞ்சைக் கொண்டு வருமாறு சிவன் கட்டளையிட்டானாம்.

கொண்டு வரப்பட்ட அந்த நஞ்சை சிவன் லபக்கென்று விழுங்கினானாம். பார்வதி தேவியாகிய சிவனின் பாரியாள், விஷம் கீழே இறங்காமல் இருக்க தொண்டையை லபக்கென்று பிடித்தாளாம். விஷம் இறங்கியதால் சிவன் நீலகண்டன் என்று பெயர் பெற்றானாம்.

விஷம் அருந்திய சிவன் மூர்ச்சையானானாம். (சிவன் சக்தி இவ்வளவுதானா?) அப்பொழுது நந்தீஸ்வரன் (காளை) சிவனைத் தொழுது மூர்ச்சை தெளிய வைத்தானாம்.

சிவன் விழித்த இந்தக் காலம்தான் பிரதோஷ காலமாம். அமாவாசை மற்றும் பவுர்ணமிக்குப் பிறகு வரும் 13 ஆம் நாள்தான் பிரதோஷமாம். மாலை 4.30 மணிமுதல் 7.30 மணிவரை உள்ள அந்த நேரத்தில் சிவனைத் தொழுதால் கடன், வறுமை, துர்மரணம், செய்த பாவங்கள் எல்லாம் பறந்தோடி விடுமாம். சிவனுக்கு உதவி புரிந்த நந்திக்கும் அபிஷேகம் செய்யவேண்டுமாம்.

இந்த விரதத்தை சித்திரை, வைகாசி, அய்ப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் சனிக்கிழமையன்று பிரதோஷ வேளையில் ஆரம்பிப்பது மிகச் சிறப்பாம்.

சிவதரிசனம் செய்த பிறகு உணவு உண்ணவேண்டும். தொடர்ந்து 12 ஆண்டுகள் (300 தடவை) இந்தப் பூஜை செய்தால், ராஜாங்க சிம்மாசனப் பதவி கிடைக்குமாம். (அமைச்சர்கள் ஆக விரும்புபவர்கள் கவனிக்க).

இந்தக் கதை கடுகத்தனை அளவாவது அறிவுக்குப் பொருந்துகிறதா? சிவன் அனுமதி பெறாததால்தான் நஞ்சு வந்தது என்பதை, விஷ்ணு உள்ளிட்டோர் சிவனை வேண்டிக்கொண்டனர் என்பதையும் வைஷ்ணவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

எந்தப் பாவமும் நீங்குமாம். தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு சிவன் மோட்சம் கொடுத்தானாம். (திருவிளையாடல் புராணம் _ மாபாதகம் தீர்த்த படலம்).

இந்தக் கேடுகெட்ட அருவருப்பான பக்தித் துர்நாற்றத்தை என்னென்று தான் சொல்லுவதோ! திருநீறு அணிந்தால் தாயைப் புணர்ந்த பாவமும் போகும் என்று சொல்லுவோரை லாடம் கட்டி அடிக்கவேண்டாமா? சிந்திப்பீர்!

----------------- மயிலாடன் அவர்கள் 31-10-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை

ஆரியம் இல்லை என்றால் பூணூல் அணிவதன் நோக்கம் என்ன?


ஆரிய - திராவிடக் கலப்பு - உண்மையா?

அண்மையில் திருச்சியில் நடந்த ஒரு வரலாற்றுக் கருத்தரங்கில் பேசிய அய்ராவதம் மகாதேவன் (அய்யர்) அவர்கள் சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்றும், சிந்து வெளியில் வாழ்ந்த (திராவிடர்) மக்கள் நலிந்து, சிதறுண்டு, வலுவான தலைமை இழந்த நிலையில், அதாவது சிந்துவெளி நாகரிகம் அழிந்த பிறகே ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் குடியேறினர் என்றும், சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் வலிமை குன்றியிருந்த காரணத்தால் ஆரியர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்த போதிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள முடிந்தது என்றும், காலப் போக்கில் ஆரிய _ திராவிடக் கலப்பு ஏற்பட்டு ஒரு புதிய சமுதாயம் உருவானது என்றும், வேளிர்குடியினர் கொங்கணத்திலிருந்து தமிழகத்தில் குடியேறியவர் என்றும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திராவிட மொழியையும் ஆரிய மொழியையும் பேசிய மக்கள் ஒருங்கிணைந்து ஒரு கலப்புச் சமுதாயமாக உருவாகிவிட்டனர் என்றும் எனவே இன்றைய நிலையில் ஆரியம், திராவிடம் என்ற சொற்கள், மொழிகளை மட்டுமே குறிக்கின்றன, இனங்களை அல்ல என்றும் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். (தினமணி _ 11.10.09)

மேலோட்டமாகப் பார்க்கும் போது...

மேலோட்டமாகப் பார்க்கும்போது அய்ராவதம் மகாதேவன் எவ்வளவு பெரிய உண்மையைக் கண்டுபிடித்து வெளிப்படுத் தியிருக்கிறார் என்று எண்ணத்தோன்றும். இளம் ஆய்வாளர்களுக்குப் பெரும் வியப்பாகவே இக்கருத்து, தோற்றமளிக்கும். ஆனால் உண்மை நிலை என்ன?

சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்பதனை இருநூறு ஆண்டுகளுக்குமுன்பே (கி.பி. 1800) தொல்லியல் ஆய்வு மூலம் நிறுவிய அறிஞர்கள் சர் ஜான் மார்சல், ஈராஸ் பாதிரியார், மார்ட்டிமர் வீலர், வில் டுராண்ட், முதலியோராவர். இவர்களும் இவர்களையொத்த பிற அய்ரோப்பிய வரலாற்று ஆய்வாளர்களும் நிறுவிய கருத்தினையே இன்றுவரை ஆய்வாளர்கள் திரும்பத் திரும்பத் தம் சொந்தக் கண்டுபிடிப்புகளைப் போலக் கூறிவருகின்றனர். எனவே சிந்து வெளி நாகரிகம் திராவிட நாகரிகமே என்னும் கருத்து அய்ராவதம் மகாதேவன் கண்டுபிடித்த கருத்தல்ல. அய்ரோப்பிய ஆய்வாளர்களுக்கே அப் பெருமை உரியதாகும். ஆதலின் அய்ராவதத்தின் கருத்து ஒன்றும் புதுமையானதல்ல!

இரண்டாவதாக, சிந்து வெளியில் வாழ்ந்த மக்கள் நலிந்து சிதறுண்டு வலுவான தலைமை இழந்த நிலையில், அதாவது சிந்து வெளி நாகரிகம் அழிந்த பிறகே ஆரியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தில் குடியேறினர்; இவ்வாறு சிந்துவெளி மக்கள் வலிமை குன்றியிருந்த காரணத்தால் ஆரியர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தபோதிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள முடிந்தது, என்கிறார் அய்ராவதம். இக்கருத்தும் ஏற்புடையதில்லை.

திராவிட மன்னரும் மக்களும் வலிமை குன்றிப் போனமைக்கு ஆரியர்களே காரணம் என்னும் வரலாற்றுண்மையை அய்ராவதம் மறைப்பதால் இனி என்ன பயன் விளையப்போகிறது? இமயம் வரை சென்று ஆரிய அரசர்களை வணக்கிய சேரன் செங்குட்டுவன், இறுதியில் மாடலமறையோன் என்னும் வேதியனின் கால்களில் விழுந்து இனி நீ சொல்கிறபடியே நடப்பேன் என்று கோழையானான். பார்ப்பனரைத் தவிர வேறு எவருக்கும் நீ பணியாதவனாயிற்றே என்று ஒரு சேரனைப்பற்றிப் பதிற்றுப்பத்து கூறுகிறது. வேள்வியறியாத் தமிழ் அரசர்களை வேள்வி செய்ய வைத்து இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்றும், பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதி என்றும் பட்டங்கள் கொடுத்து வெஞ்சின வேந்தர்களை வேள்வித்தீமுன் மண்டியிடச் செய்தவர்கள் ஆரியர்கள்!

சேர்ந்தமங்கலம், சத்தியமங்கலம், கண்ணாடி மானியம் முதலான இத்தொடர்களின் பொருள்களை விரித்து எழுதினால் ஆரிய இனத்தின் ஒழுக்கம் பற்றி ஊர் சிரிக்குமே!

வெள்ளை உடம்பு காட்டி வெறும் வாக்கு நயம் காட்டி

கள்ளங்கள் செய்தாரடி! _ சகியே

கள்ளங்கள் செய்தாரடி!

என்று புரட்சிக் கவிஞர் ஆரியர் இயல்பைப் படம் பிடிப்பார்.

ஆதலின் திராவிடர் வலிமை குன்றிப் போனமைக்கு ஆரியரே காரணமாவர். திராவிடர் வலிமை குன்றிய பிறகு ஆரியர் வந்தனர் என்பது பொய். திராவிடர் வலிமையோடு இருந்த காலத்திலேயே சிந்து வெளிக்குள் ஆரியர் நுழைந்து விட்டனர் என்பதுதான் உண்மை.

நேரு எழுதியது

அய்ராவதம் ஓர் உண்மையை ஒப்புக் கொள்கிறார். ஆரியர் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்களாகவே இந்தியத் துணைக் கண்டத்திற்குள் நுழைந்தனர்; ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொண்டனர்! அதன் பின்னர் அவர்கள் அலை அலையாய் இங்குவந்து குடியேறினர் என்று நேரு தமது இந்திய வரலாற்றுப் புத்தகத்தில் எழுதியுள்ளார். திராவிடரின் போர் முறை நேருக்கு நேர் நின்று மோதுவது! அடுத்துக் கெடுப்பது ஆரியரின் போர் முறை !

அறிஞர் அண்ணா குறிப்பிடுவதைப்போல ஆரியர்கள் அரச போகத்திற்கு ஆசைப்படுவதில்லை! ஏனென்றால் ஆரியம் விதைக்காது விளையும் கழனி, வெட்டாது ஊற்றெடுக்கும் தடாகம். (அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவுக் களஞ்சியம்)

ஆரியரின் போர்முறை மரத்தின்பின் மறைந்து தாக்குவது! ஆரியக் கூட்டம் ஒரு சிறு கும்பல்தான். மிகச்சிறு கும்பல்! ஆனால் நீர் மூழ்கிக் கப்பல்போல் (சப்மெரைன் போல்) மறைந்திருந்து தாக்கும் இயல்பு விடவாயு போல் பரவினதும் மாய்க்கும் கொடிய சக்தி; வெடிகுண்டுபோல் வீசப்பட்டதும் அரண்களைப் பிளந்தெறியும் வலிமை பெற்றது. இல்லையேல் சிறுகும்பல் பெரியதோர் கூட்டத்தை எங்ஙனம் எதிர்க்கத் துணியும்? (அறிஞர் அண்ணா; தமிழரின் மறு மலர்ச்சி)

மூன்றாவதாக வேளிர்கள் வடக்கிலிருந்துவந்து தமிழகத்தில் குடியேறினார்கள் என்னும் கருத்தைப் போகிற போக்கில் வீசி விட்டுப் போகிறார் அய்ராவதம்! இதன் உட்பொருள் தமிழர்களும் வடபுலத்திலிருந்து தெற்கு நோக்கிவந்து குடியேறியவர்கள் என்பதாகும். வேளிர் என்ற சொல் வேளாண்தொழிலை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும். வேள்_ வேளாண் _ வேளாண்மாந்தர் _ வேளாண்மை _ வேளாளர் _ வேளிர் என்பன உழுதொழிலை மய்யமாகக் கொண்டு எழுந்தவை. தொல்பழங்காலந் தொட்டு இம் மண்ணின் மைந்தர்களாக விளங்கிவரும் வேளாண் மக்களை (திராவிடரை) வடபுலத்திலிருந்து வந்தேறிகள் எனக் கூறுவது தமிழ் இனவரலாறு தெரியாதோர் கூற்றெனக் கொள்ள வேண்டும்.

பறம்புமலையரசன் வேள்பாரியும், இருங்கோவேளும் அவன் மரபினரும், அயற்புலத்திலிருந்து வந்தவர்கள் என்பது வரலாற்றுப் பிழையாகும்.

கலப்பு சமுதாயமா?

நான்காவதாகக், காலப்போக்கில் ஆரிய _ திராவிடக் கலப்பு ஏற்பட்டு ஒரு புதிய சமுதாயம் உருவானது என்றும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திராவிட மொழியையும் ஆரிய மொழியையும் பேசிய மக்கள் ஒருங்கிணைந்து ஒரு கலப்புச் சமூதாயமாக உருவாகி விட்டனர்என்றும் அய்ராவதம் குறிப்பிடுகிறார்.

ஆரியரும் திராவிடரும் ஒன்றாகக் கலந்து ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கினர் என்றால் அந்தப் புதிய சமுதாயத்தின் பெயர் என்ன என்பதை அய்ராவதம் ஏன் குறிப்பிடவில்லை!

ஆரியமாவது திராவிடமாவது எல்லாம் கலந்து ஒன்றாகி விட்டன என்று பார்ப்பனர் தொடர்ந்து இந்தப் பொய்யைப் பரப்பி வருகின்றனர். ஒன்றாகி விட்டன என்றால் அந்த ஒன்றின் பெயர் என்ன? இன்றுவரை ஆரியம் வேறாகவும், திராவிடம் வேறாகவும்தான் இருந்து வருகின்றன. ஆரியம் இல்லை என்றால் பூணூல் அணிவதன் நோக்கம் என்ன? பேச்சு வழக்கில் இல்லாத செத்துப் போன மொழியான சமற் கிருதத்தை தேவ பாஷை என்றும் திராவிட மொழிகளை நீச பாஷைகள் என்றும் சங்கராச்சாரிகள் கூறி வருவதன் பொருள் என்ன? திராவிடர் நிறத்தாலும் பழக்க வழக்கங்களாலும் பேசும் மொழியாலும் ஆரியரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். திராவிடர் பேசும் மொழிகளில் சிற்சில வேறுபாடுகள் இருப்பினும் இவர்கள் ஓரினத்தவர் என்பதை எளிதில் அடையாளம் காண முடியும் ஆனால் இன்றுவரை ஆரியர்கள், திராவிடத் தொல்குடி மக்களிடமிருந்து வேறுபட்டே வாழ்ந்து வருகின்றனர். ஆரியர் தமிழைப் பேசினாலும் அந்தத் தமிழே தனியானது கணவனை, அண்ணா என்றழைக்கும் கொடுமை உலகில் எந்த இனத்திலும் கிடையாது, ஆரிய இனத்தைத் தவிர ! அபிஷ்டு, அம்பி, அத்திம்பேர், அம்மாமி, அவாள், இவாள், இதராள் முதலான சொற்களைக் கொண்டே இவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆரியர் வேறு- திராவிடர் வேறு

ஆரியரின் வாழ்வியல் முறையும் திராவிடமிருந்து வேறுபட்டதாகும். அவர்கள் உடுத்தும் உடை எப்படி? தலையில் குடுமி, மார்பில் பூணூல், வேட்டியை வேஷ்டியாக்கி அதை அருவருப்பான முறையில் உடுத்துவது. இவற்றைப் போன்ற எண்ணற்ற வேறுபாடுகளை நாம் எடுத்துக் காட்டலாம். ஆரியர் ஒருபோதும் தாங்கள் குடியேறிய நாட்டு மக்களோடு ஒன்று சேர்ந்து கலந்து வாழ்ந்தது கிடையாது. மக்களோடு கலந்து வாழாமல் தங்களுக் கென்று தனிக் குடியிருப்புகளை அவர்கள் அமைத்துக் கொண்டனர். இன்றுவரை அவர்கள் தனித்தே வாழ்ந்து வருகின்றனர்.

தமிழரின் பண்பாட்டையும் மொழி, கலை முதலான செல்வங்களையும் அழித்தொழிப்பதற்கு இன்றுவரை ஆரியர்கள் இடைவிடாது முயன்று வருகின்றனர். அறிஞர் அண்ணா இது பற்றிக் கூறுவதை அப்படியே தருகின்றோம்.

"கூவுங்கள் ஆரியர்களே! கொக்கரியுங்கள்! தமிழ் மீது மோதிக் கொள்ளுங்கள்; தமிழரின் முயற்சிக்கெல்லாம் தடை செய்யுங்கள்! தமிழ் மொழியைத் தழைக்க விடாதீர்கள்; தமிழிலே வடமொழியை ஆங்கிலத்தை, இந்தியைக் கலக்கிக் குழப்புங்கள்; தமிழன் தன்னைத் தமிழன் என்றுரைத்தால் சீறுங்கள். தமிழ்மொழியில் இசை இருக்கட்டும் என்றால் எதிர்த்துப்பேசுங்கள். கலைச் சொற்களுக்கு வடமொழியே இருக்க வேண்டும் என்று வாதாடுங்கள்; தமிழனைத் தாழ்ந்த சாதி என்று சொல்லுங்கள். கூட இருக்கக் கூடாது என்று கட்டளை-யிடுங்கள். கோயிலிலும் குளத்திலும் இழிவு படுத்துங்கள். சாப்பாட்டு விடுதி-களிலும் சாக்கடை இடத்தையே தமிழருக்குத் தாருங்கள். உம் ஆணவச் செயலைத், திமிர்வாதத்தை, ஆரியத்தை நாம் வரவேற்கிறோம். ஆம்! உம் எதிர்ப்பு வளர வளரத்தான் தமிழனின் உள்ளத்தில் வேதனை பிறக்கும். வேதனை வளர்ந்தால் அவன் வேல்பட்ட புலிபோலச் சீறுவான்! "(தமிழரின் மறுமலர்ச்சி)

அண்ணா தரும் பட்டியல்

ஆரியர்கள் தமிழையும் தமிழரையும் அழித்து ஒழிப்பதற்கு என்னென்ன செய்துவருகிறார்கள் என்பதை அறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இவ்வளவு கொடுமைகளைச் செய்து கொண்டே ஆரியமும் திராவிடமும் ஒன்று கலந்து உருமாறிப் போய்விட்டன என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

மாநிலங்களவையில் அண்ணா தன் உரையைத் தொடங்கும்போது, “I belong to the Dravidian stock; I am proud to call myself a Dravidian” என்று கம்பீரமாகத்தான் ஒரு திராவிடன் என்பதை டெல்லியில் வெளிப்படுத்தினார்கள். அண்ணாவின் உரையை முழுமையாகக் கேட்டுவிட்டு வெளியில் வந்த பாதுகாப்பு அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் அண்ணாவை மனந்திருந்து பாராட்டிவிட்டு நீங்கள் அடிக்கடி இந்த அவையில் இவ்வாறு பேச வேண்டும், என்று கைகுலுக்கிவிட்டுப் போனார். ஆதலின் திராவிடர் என்ற இனம் ஆரிய இனத்தோடு ஒரு போதும் ஒன்று சேர வாய்ப்பில்லை. கடைசிப் பூணூல் இருக்கும்வரை அய்ராவதம் மகாதேவனின் ஆசை நிறைவேறாது.

இனி ஆரியம், திராவிடம் என்ற சொற்கள் மொழிகளை மட்டுமே குறிக்கின்றன; இனங்களை அல்ல என்கிறார் அய்ராவதம் இவை அப்படியே மொழிகளை மட்டுமே குறிக்கின்றன என்று வாதத்திற்காக எடுத்துக் கொண்டாலும் திராவிட மொழியைப் பேசுபவன் யார்? ஆஸ்திரேலியனா இல்லை ஆங்கிலேயனா? திராவிட மொழியைப் பேசுபவன் திராவிடன் தானே! ஆரிய மொழியைப் பேசுபவன் ஆரியன்தானே! இஃது இயற்கை அறிவு படைத்த எவருக்கும் எளிதில் விளங்கும்.

வெவ்வேறு இனமே!

ஆதலின், ஆரியரும் திராவிடரும் வெவ்வேறு இன மரபுகளைச் சேர்ந்தவர்கள். வெவ்வேறு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். ஆரியர் வாழ்வியல் முறை வேறு; திராவிடர் வாழ்வியல் முறை வேறு; ஆரியக் கலாச்சாரம் வேறு; திராவிடப் பண்பாடு வேறு; இவை இரண்டும் எதிர் எதிர் நிலையில் நிற்பவை. எக்காலத்தும் இவை இரண்டும் ஒன்று கலப்பதற்கு வாய்ப்பே இல்லை!

-------------டாக்டர் ப.காளிமுத்து அவர்கள் 31-10-2009 "விடுதலை" ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை

கும்பகோணத்தில் குதித்தாடும் குடுமிகள்



இப்பொழுது ஒரு கதையைக் கட்டி அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்கிருஷ்ண பரமாத்மா உலகம் பூராவும் பரவி விட்டார். கிருஷ்ண பக்தர்கள் உலகெங்கும் தோன்றி விட்டார்கள் - ஹரே கிருஷ்ணா இயக்கம் உலகளாவிய இயக்கம் என்ற பரப்புரைதான் அது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், கேரள மாநில முதல் அமைச்சருமான ஈ.கே.நயினார் போப்பை சந்தித்தபோது கீதையைத் தானே கொண்டு போய்க் கொடுத்தார்? போதும் போதாததற்கு ஊடகங்கள் பார்ப்பனர்களின் கைகளில்தானே இருக்கின்றன.

அள்ளிவிட அளவு வேண்டாமா? ஊதிவிட ஊரார்தான் வேண்டுமா?

தந்தை பெரியார்தான் நறுக்கென்று சொன்னார் - முட்டாள்கள் என்ன இந்தியாவுக்குத் தான் சொந்தமா? உலகம் பூராவும் இருக்கத்தான் செய்வார்கள் என்றார். அந்தப் பட்டியலைச் சேர்ந்த சில கிறுக்கர்கள் கும்பகோணம் வந்துள்ளார்களாம்!

கோயில் நகரம் கும்பகோணம் என்று கேள்விப்பட்டு வந்திருக்கிறார்களாம்! குடந்தையில் பரதம் வேறு கற்றுக்கொள்ளப் போகிறார்களாம்! கோயில், குளம் என்று இந்த அய்ந்து பேரும் பரதம் ஆடுகிறார்களாம், பஜனை பாடுகிறார்களாம்!

வேடிக்கை பார்க்க கேட்கவும் வேண் டுமா? அதிசயமாக இந்தப் பஞ்ச பாண் டவர்களை மக்கள் பார்க்கின்றனராம்.

கும்பகோணம் கவரத் தெருவில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண் டிருக்கிறார்களாம். சொந்தமாகவே சமைத்துக் கொள்கிறார்களாம்.

கிருஷ்ண பக்தர்கள் அல்லவா? கோயில், குளங்கள் என்று சுற்றித் திரிகிறார்களாம்.

இதே கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சி -இது 1936-ஆம் ஆண்டு நடந்த ஒன்றாகும். தினமணி (6.9.1995) அதை வெளியிட்டிருந்தது.

5.9.1936 சனிக்கிழமை குடந்தை ஆலயத்தில் பஜனைக் கோஷ்டி ஹரி சனங்களா? உள்ளே பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

(நமது செய்தியாளர்)

கும்பகோணம், செப்.4. நேற்று இரவு இந்நகர் ஸ்ரீ சாரங்கபாணி ஸ்வாமி கோயிலில் சுமார் 15 பேர் பஜனை செய்து கொண்டு மேலண்டை கோபுர வாசல் வழியாய் உள்ளே வந்தார்கள். இவர்களைக் கண்டவுடன், அங்கிருந்த வைதீக இந்துக்கள் பயந்து, அவர்களை அணுகி, நீங்கள் யாரென்று கேட்கவே, தாங்கள் நீலகிரி வாசியென்றும், ஆலயப் பிரவேச உரிமை உள்ள ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான் என்றும் சொல்ல, நிச்சயமாய் அவர்கள் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று ஒருவரும் இந்நகரில் தெரிந்து கொள்ள முடியாததால் உள்ளே போக அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு மேல் அவர்கள் வெளியேறிவிட்டார்கள். ஸ்ரீகும்பேசுவரர் ஆலயத்திலும் இப்படியே தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

1936 இல் தடை. 2009 இல் அனுமதி என்றால் இதற்குக் காரணம் என்ன? 73 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் என்ன நடந்தது என்று எல்லோருக்கும் தெரியும்.

இந்த நேரத்தில் இன்னொன்றைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது.

வியாசர் விருந்து என்று பாரதம் குறித்தும் சக்ரவர்த்தித் திருமகன் என்ற தலைப்பில் இராமாயணத்தைப்பற்றியும் நூல் வெளியிட்ட சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் கிருஷ்ணனைப் பற்றிபல விதமாகப் பேசும் பாகவதம் பற்றி ஏன் நூல் எழுதவில்லை என்ற கேள்வி நியாயமானதாகும்.

அதற்கான காரணத்தை ஆச்சாரியாரே கூறியிருந்தார் அதனைக் கல்கி இதழே கூட வெளியிட்டுள்ளது.

வியாசர் விருந்து என்ற தலைப் பிலும், சக்ரவர்த்தித் திருமகன் என்ற தலைப்பிலும் மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் கல்கியில் தொட ராக ராஜாஜி எழுதி வந்தது அன்பர் களுக்குத் தெரியும். அதன் பின்னர் பாகவதத்தை எளிய தமிழில் எழுத லாமே என்று சதாசிவம் தமது யோசனையைக் கூட ராஜாஜியிடம் வெளியிட்டார். அதற்கு ராஜாஜி கூறிய பதில் சிந்திக்க வைப்பதாகும். சதாசிவம்! எனக்கு பாகவதத்தை எழுதுவதில் நாட்டமில்லை. அதில் பகவானின் லீலை களும், அற்புதங்களும் மிகுதியாக உள்ளன. ராமாயணம், மகாபாரதம் போன்று தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையில் நடைபெறும் போராட்டங் களாக அமையவில்லை. மனிதனுக்கு தார்மீக நெறிகளில் ஆர்வத்தையும், நம்பிக்கையையும் இந்த இதிகாசங்கள் ஊட்டுவது போல பாகவதத்தில் நான் காணவில்லை. (கல்கி4.10.2009.பக்.72)

ராஜாஜியாலும் பகவான் கிருஷ்ணனின் லீலைகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்குக் காமரசம் ததும்பும் கதாநாயகனாக கிருஷ்ணன் உருவாக்கப்பட்டிருந்தான்.

இராமாயணத்தைப் பற்றியும், பாரதத்தைப் பற்றியும் ஆச்சாரியார் கூறிய கருத்துகளை பகுத்தறி-வாளர்கள் ஏற்கவில்லை என்பது வேறு விஷயம். ஆச்சாரியாராலேயே கிருஷ்ணனைக் கடவுளாக ஏற்க முடியவில்லை என்பதுதான் நமக்கு முக்கியமானது.

ஒரு பக்கத்தில் ஹரே கிருஷ்ணா இயக்கம் உலகம் முழுவதும் கிளை பரப்பிப் பரவியிருக்கிறது என்று பார்ப்பனர்களில் ஒரு சாரார் துள்ளிக் குதித்தாலும், அதனை ஜீயர் போன்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்பதும் முக்கியமானது.

இந்தத் தகவலையும் கல்கி (11.4.1982) ஏடுதான் பேட்டி கண்டு வெளியிட்டது.

கேள்வி: ஹரே கிருஷ்ணா என்று ஓர் இயக்கம் அமெரிக்காவில் தோன்றி உலகெங்கும் பரவி வரு கிறதே. இந்தியாவில் கூட இவ்வியக் கத்தினர் சுற்றுகிறார்களே....

ஜீயர் பதில்: நாமம் போட்டுக் கொண்டு, குடுமி வைத்துக் கொண்டு, காவி உடுத்தி இங்கேயும் ஒருத்தன் வந்தான். வாயெல்லாம் மந்திரங்கள். பெருமாள் பெயரையே சொல்லிக் கொண்டு இருக்கான். பூணூல் போட்டிருக்கான். உட்காரச் சொல்லி சாப்பாடு போட்டேன். உபசரித்து அனுப்பினேன். அவ்வளவுதான். பூணூல் போட்டதனால் மட்டும் ஒருவன் பிராமணனாக ஆகிவிடமாட்டான். அவனவன் பிறப்பால் எதுவோ அதுவே சாஸ்வதம். நல்ல காரியங்கள் செய்து பகவான் பெயரைத் தியானிக்கிறதனாலே அவனது ஜாதிக்குள் உயர்ந்தவனாகிறான். என்றார் ஜீயர்.

கும்பகோணத்தில் குதியாட்டம் போடும் இந்த கிருஷ்ண பக்தர்கள் குடுமி வைத்துக் கொண்டிருந்தாலும், நாமம் தரித்துக் கொண்டாலும் ஏன், பூணூலை போட்டுக் கொண்டாலும் கூட பிறப்பால் அவர்கள் எதுவோ, அதுவேதான் இந்த அர்த்தமுள்ள இந்து மதத்தில்.

--------------------மின்சாரம் அவர்கள் 31-10-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை