Search This Blog

19.6.22

இதிகாசங்களும், ஒழுக்கமும்! - பெரியார்

 

இதிகாசங்களும், ஒழுக்கமும்!

 


இதிகாசங்களில் சிறந்தவையாக இராமாயணமும், பாரதமும் விளக்கப்படுகின்றன.

 

இவை பக்தியை அடிப்படையாய்க் கொண்டவையா? அல்லது மனிதன் நடந்து கொள்ள வேண்டிய நடத்தைகளை, ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டவையா? என்று சொல்ல முடியாத தன்மையில் - இரண்டிற்கும் பயன்படாத தன்மையில் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன.

 

இவ்விரண்டு நூல்களில் எது முந்தியது? எது பிந்தியது? என்பது விவாதத்திற்குரியதாகவே இருந்து வருகிறது. (Evolution Theory) எவாலுஷன் தியரி என்னும் வளர்ச்சிக் கொள்கைப்படி பார்ப்போமானால், பாரதக் கதை முந்தியதாகவும், இராமாயணக் கதை பிந்தியதாகவும் தான் சொல்லி ஆக வேண்டும்.

 

ஆனால் எந்தக் காரணத்தாலோ இராமாயணக் கதை முந்திய நடத்தையாகவும், பாரதக் கதை பிந்திய நடத்தையாகவும் புனையப்பட்டு விட்டது.

 

இந்தக் கட்டுரையில் அதைப்பற்றிய விவாதத்தை ஒதுக்கி வைத்து விட்டு, அந்தக் கதைகளால் ஏற்படும் பயன் என்ன என்பதைப் பற்றி ஆராயலாம் என்றே கருதி இதை எழுதுகிறேன்.

 

இதை வலியுறுத்த விஷ்ணுவுக்கு - விஷ்ணு மனிதனாகப் பிறப்பதற்குப்  பல சாபங்கள் பல சம்பவங்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன; அச்சம்பவங்கள் யாவும் ஒழுக்கம் அற்றவையாகவோ கற்பிக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால் விஷ்ணுவுக்குக் கடவுள் தன்மையோ, இராமனுக்கு மனிதத் தன்மையோ இராமாயணத்தில் கற்பிக்கப்படவில்லை என்று உறுதியாய்க் கூறலாம். எப்படியெனில் விஷ்ணு மனிதனாகப் பிறப்பதற்கு புராணங்களில் பல காரணங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.

 

அவைகளில்,

 

ஒன்று: விஷ்ணு ஒரு கற்புள்ள அசுரப் பெண்ணைக் கற்பழித்து விட்டதால் அந்தப் பெண்ணின் சாபத்தால் மனிதாகப் பிறந்தான். (இது கந்தபுராணம் தக்க காண்டத்தில் உள்ளது)

 

மற்றொன்று: விஷ்ணு தன் மனைவியுடன் ஒரு பிரதோஷ வேளையில் சுகித்துக் கொண்டிருக்கும் போது (புணர்ந்து கொண்டிருக்கும் போது) அற்புதர்க்கன் என்னும் சிவகணங்களின் தலைவன் அங்கு சென்று, என்ன நீ இப்படி செய்கிறாய் என்று கேட்டான். அதற்கு விஷ்ணு, நீ யாரடா இப்படிக் கேட்பதற்கு? என்றான். இதை அந்த சிவகணத்தலைவன் நந்தியிடம் தெரிவித்தான். நந்தி உடனே விஷ்ணுவுக்கு, பூமியில் பிறந்து மனைவியைப் பிரிந்து தவிக்கும்படி சாபம் கொடுத்தான் (இது 'சிவ ரகசிய'த்தில் இருக்கிறது)

 

மற்றொன்று: இதுபோலவே மாலை நேரத்தில் விஷ்ணு தன் மனைவியைப் புணர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த பிருகு முனிவர் மேலும் சென்ற போதும் விஷ்ணு நீங்காமலும், முனிவரை வரவேற்காமலும் இருந்ததால் பிருகு முனிவர் சாபமிட்டார். (இதுவும் 'சிவ ரகசிய'த்தில் இருக்கிறது)

 

மற்றொன்று: ஒரு முனிவன் மனைவியை விஷ்ணு கொன்று விட்டான். அதனால் அந்த முனிவன் விஷ்ணுவுக்கு (ராமன்) தன் மனைவியை இழந்து வருந்தும்படி சாபமிட்டான். (இது இராமாயணம் உத்தரகாண்டத்திலும், ஸ்கந்த புராணம் உபதேசகாண்டத்திலும் இருக்கிறது) இந்த சாபங்கள் பலவிதமாகும். தேவர்களுக்காக அதைப் பயன்படுத்திக் கொண்டு மனிதனாகப் பிறந்தார் என்பது இராமாவதாரக் கருத்து.

 

இந்தப் பிறப்பு "தசரதனுக்குப் பிள்ளை" என்னும் பெயரில் "யாகப் புரோகிதப் பார்ப்பனருக்குத் தன் தாய் கர்ப்பமடையப் பிறந்தான்." அப்படிப் பிறப்பதிலும், பல இழிதன்மை நடப்புக்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. உலக ஷேமத்திற்காக இராமனாக விஷ்ணு வந்தான் என்றால் இப்படி ஒழுக்கக்கேடும், இழிவும், அவமானகரமானதும், அசாத்தியமானதுமான நடத்தைகள் ஏன் ஏற்பட்டிருக்க வேண்டும்?

 

இந்த மாதிரி நூல்களால் (அவதாரங்களால்) மக்களுக்கு என்ன நன்மை ஏற்படும்? மற்றும் இராமன், யாகக் கொலையைத் தடுத்த தாடகையைக் கொல்லுவது எதற்காக? இதனால் மக்களுக்கு ஏற்படும் படிப்பினை என்ன? மற்றும் இராமன் எதற்காக நாடு கடத்தப்பட்டு காட்டுக்கு போனான்? அவன் நாடு கடத்தப்பட்டதற்குக் காரணம் இராமனின் துரோகமும், இழிதன்மையுமான காரியம் தானே இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதாவது அயோத்திய அரசு தசரதனுக்குப் பின் தனக்கு இல்லை என்பதும், அது பரதனுக்கு உரித்தாக்கப்பட்டது என்பதும் இராமனுக்குத் தெரியும். அப்படி இருக்க அயோத்தியின் ஆட்சியை இவன் (இராமன்) இச்சிக்கலாமா?

 

தகப்பன் அயோக்கியத்தனமாய் நடந்து கொண்டாலும் அவதார புருஷனாகிய இவன் (இராமன்) தகப்பனுக்குப் புத்தி சொல்லித் திருத்த வேண்டாமா?

 

இவன் எப்படி ஆசைப்படலாம்? இந்த ஆசையில் மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன? மற்றும் அரசு கிடைக்காமல் போய்விட்டதே என்றும் விசனப்படலாமா? அதற்காக உரியவனாகிய தம்பியையும், தம்பியின் தாயையும் குறைக் கூறலாமா? வசவு மொழி கூறலாமா? இந்தச் செய்கையால் மக்களுக்கு என்ன படிப்பினை கிடைக்கும்?

 

காட்டில் வசிக்கையில் "முனிவர்களுக்கு - பிராமணர்களுக்கு எதிரானவர்களைக் கொல்லத்தான் நான் காட்டுக்கு வந்தேன்" என்று சொல்லுகிறானே, இதனால் மக்களுக்கு என்ன படிப்பினை உண்டாகும்?

 

வாலியை முதுகுப்புறம், அவனுக்குத் தெரியாமல் நின்று, அவன் வேறு ஒருவனிடம் போராடிக் கொண்டிருக்கும் போது அம்பை எய்திக் கொன்றானே, இதனால் மக்களுக்கு என்ன படிப்பினை – ஒழுக்கம் - வீரம் ஏற்படக்கூடும்?

 

தன் ஆட்சிக்கு உள்ள குடிமகன் ஒருவன் (சம்பூகன்) "பார்ப்பானைக் கடவுளாக வணங்காமல் கடவுளை நேரில் வணங்கிப் பயன்பெற முயற்சித்தான்" என்று அவனைத் துண்டு துண்டாக வெட்டிச் சித்தரவதை செய்தானே, இதனால் மக்களுக்கு என்ன படிப்பினை ஏற்படக்கூடும்?

 

இராமனால் கொல்லப்பட்ட ஒரு மனிதனின் தாயாரை, அவள் "தன்னைப் புணரும்படிக் கேட்டாள் - பலாத்தாரத்தில் பிரவேசித்தாள்" என்று ஒரு இராஜஸ்திரீயை மூக்கும், முலையும், காதும் அறுக்கச் செய்தானே, அதனால் மக்களுக்கு என்ன படிப்பினை ஏற்படக்கூடும்?

 

வால்மீகி இராமாயணக் கதையின் உட்கருத்துப்படி இராமன் மனைவி சீதை தானாக இராவணன் பின் சென்றிருக்க, அதை இராமனும் தெரிந்திருக்க வேண்டியவனாக இருக்க, இராவணன் மீது குற்றம் சுமத்திக் கொன்றதன் பயனாய் மக்களுக்கு என்ன ஒழுக்கம், படிப்பினை ஏற்பட முடியும்?

 

இராவணனோடு சீதை பத்து மாதம் அவன் அரண்மனையில் அந்தப்புரத்தில் இருந்தும், அவனுக்கு சீதை கர்ப்பமாகி இருந்தது தெரிந்ததும் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து பிறகு அவளைக் கண்ணைக்கட்டி ஆளில்லாத காட்டில் கொண்டு போய் விட்டுவரச் செய்ததால் மக்களுக்கு ஏற்படும் படிப்பினை என்ன?

 

கடைசியாக, இராமன் எல்லா மக்களைப் போலவே ஆற்றில் இறங்கி செத்து மேல் உலகம் போனான் என்பதனால் மக்களுக்கு ஏற்படும் படிப்பினை என்ன?

 

இவ்வளவு பயனற்றதும் கேடானதுமான கருத்தை வைத்து ஒரு கதையை அதுவும் மற்றொரு (கந்தப்புராண) கதையிலிருந்து எடுத்துக் கொண்ட கதையை கடவுளுடன் சம்பந்தப்படுத்தி, மத நூலாக்கி, இலக்கியமாக்கி, கடவுள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி உலக மக்களையே மடையர்களாக்கிவிட்டு அதை வேதசாரம் என்று கூறி "பக்திக்காக" – ஒழுக்கத்திற்காக மக்கள் படிக்க வேண்டுமென்றால் இது எவ்வளவு பெரிய மோசடியான காரியம் என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

 

மேலும் இராமன் மனிதனாகப் பிறந்தான், சீதை மனுஷியாகப் பிறந்தாள், இராமன் தம்பிமார் மனிதராகப் பிறந்தார்கள் என்று எழுதிவிட்டு, இவர்கள் 1000-வருஷம், 10.000-வருஷம் வாழ்ந்தார்கள், அரசு செலுத்தினார்கள் என்று அதில் - இராமாயணத்தில் எழுதி இருப்பது எப்படி பொருத்தமானதும் உண்மையானதுமாக இருக்க முடியும்? அறிவாளிகள் சிந்திக்க வேண்டும்.

 

               ------------------------------- 22.06.1972- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்

7.3.22

நமக்குப் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பெயர் இழிவை கொடுக்கிறது - பெரியார்

 

திராவிட மக்களின் இழிவு நீக்கமும் முன்னேற்றமும் நமது குறிக்கோள்!



சாதாரண மக்களுக்குத் தேசீயகழகம் என்றால் என்ன என்று உணர தெரியாவிட்டாலும் படித்த மக்களுக்கு வித்தியாகமாகத் தெரியும். அந்த வார்த்தை ஒரு நாட்டிற்காகச் சொல்லப்படுவதல்ல. தப்பாக மக்கள் கருதுகிறார்கள், அது ஒரு நாட்டு அரசியலுக்குச் சொல்லப்படுவது என்று. அது தவறு. தேசீயம் என்று சொன்னால் அது - அந்த வார்த்தை இனத்திற்கு பிறவிக்கு ஜாதிக்கு சொல்வதே ஒழிய, தேசத்துக்கு சொல்வதல்ல. நேஷன் என்றால் ஜாதியம் என்று பொருள். இந்தியாவில் பல இனம் உண்டு. இந்தியா ஒரு தேசம் அல்ல அல்லது அது நேஷன் (ஜாதியும்) அல்ல. இந்தியா எப்பொழுதும் ஒரே நாடாக இருந்ததில்லை. ஒரே சமுதாயமாகவும் இருந்ததில்லை.

 

உலக மக்களில் 250 கோடி மக்களில் எத்தனையோ பிரிவுகள், எத்தனையோ ஜாதிகள் இருக்கின்றன. அவைகளில் உடற்கூற்று வல்லுநர்கள் 4, 5 இனங்களாக மக்களைப் பிரித்து இருக்கிறார்கள். அந்தந்த தட்பவெட்ப, சீதோஷண ஸ்திதி நிலைமைக்கு ஏற்றவாறும், பழக்க வழக்கம் நடை உடை பாவனைகட்கும், உணவு, நாகரிகம் முதலிய தன்மைகட்கும் ஏற்றவாறு பிறவி இந்திரிய உறுப்புகளுக்கு ஏற்றவாறு மக்களை இனப்படுத்தி இன வாரியாகப் பிரிக்கப்பட்ட இனமாகிய ஒன்றுதான் நாமாகிய திராவிட இனம் என்பதும் மற்றவை ஆரியர் என்றும் மங்கோலியர் என்றும் நீக்கிரோவர் என்றும் காக்கேசியர் என்றும் பல வகை உண்டு. இந்நாட்டுப் பெரும்பான்மை மக்களாகிய திராவிடர்கள் இன்று இந்த நாட்டிலேயே அந்நியர்களால் சமுதாயத் துறையில் மிக்க இழிவாக நடத்தப்படுவதுடன் சாத்திரத்தில், சட்டத்தில் நாலாவது அய்ந்தாவது ஜாதிகளாக அதாவது கீழ் மக்களாகக் கருதப்படுகிறோம். இன்றும் நம்மவரில் பழங்குடி மக்களாக இருப்பவர்களை பஞ்சமர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் கருதி ஒதுக்கிவைத்து இருக்கிறார்கள். இந்த நிலை நம்மவர்கட்கு மாற வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் முக்கியத் தொண்டு. அதற்காகவே அது இருந்து வருகிறது. பல ஆண்டுகளாகப் பாடுபட்டு வந்திருக்கிறது.

 

இதற்கு முன் நம் இயக்கம் வேறு பெயரால் இருந்து வந்தது. அதாவது ஜஸ்டிஸ் கட்சி (நீதிக்கட்சி) என்றும் பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும் அழைக்கப்பட்டு வந்தது. திராவிடர்களுக்கு உத்தியோகங்கள் வாங்கிக் கொடுப்பதிலும், பதவிகள் பெறுவதிலும், விகிதாச்சாரப்படி அந்தந்த துறையில் பார்ப்பனரல்லாதார் முன்னுக்கு வரவேண்டும் என்பதிலும்தான் பெரிதும் அது தன் கவனத்தைச் செலுத்திப் பாடுபட்டு வந்தது. ஒருவிதத்தில் அந்தக் காரியத்தில் யாருக்காகப் பாடுபட்டார்களோ அந்த மக்கள் அந்த நலனை உணரக் கூடிய தன்மையில் அந்தப் பெயர் அமையாததுதான் காரணம்.

 

மக்கள் தங்களை இன்னார் என்று உணரும் சக்தி இல்லாதவர்களாய் இருந்தார்கள். பார்ப்பனரல்லாதார் என்னும் பேதங்களை ஒரு அந்நியரைப் போலவே பார்ப்பனர்களுக்கு அடிமைகளைப் போலவே கருதி வந்தார்கள். அந்தப் பெயர் இந்தச் சமுதாயத்திற்கு மான உணர்ச்சியை கொடுக்கவில்லை. ஒற்றுமை உணர்ச்சியை கொடுக்கவில்லை. அதன் காரணமாகத்தான் பெயரை மாற்ற வேண்டியதாயிற்று. ஒரு பெயரைச் சொன்னால் மக்களுக்கு உணர்ச்சி ஏற்படும் வித்ததிலும், அவர்கள் ஒன்று சேரும் வண்ணத்தை ஊட்டும் விதத்திலும் இருக்க வேண்டும். அதற்கு ஆகவே நாம் உண்மையிலே நமக்கு என்று இருந்த வந்த சரித்திர காலம் தொட்டும் ஆராய்ச்சி காலம் தொட்டும் வழங்கிய 'திராவிடர்' என்ற பெயரைச் சொன்னோம். அதோடு மாத்திரமல்லாமல் நாம் இந்த நாட்டு பழங்குடி மக்கள், இந்த நாட்டை ஆண்டவர்கள், இந்த நாட்டுச் சொந்தக்காரர்கள், உரிமையாளர்கள் அப்படிப்பட்ட நமக்கு என்று ஒரு பெயர் இல்லாமல் இந்த நாட்டிற்குப் பிழைக்க வந்த கூட்டத்தினரை மேன்மைப்படுத்தி அவர்களால் இழிவு படுத்தப்பட நாம் அவர்கள் அல்லாதவர்கள் என்று அதாவது 'பார்ப்பனர் அல்லாதவர்கள்' என்று அதாவது பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் என்று நம்மைச் சொல்லிக் கொண்டால் நமக்கு மானம் இருக்கிறதா? அறிவு இருக்கிறதா? என்பதை தயவு செய்து சிந்தித்துப் பாருங்கள்.

 

நமக்குப் பார்ப்பனரல்லாதார் என்கின்ற பெயர் இழிவை கொடுக்கிறது நம் அறிவுக்கு அது பொருத்தமற்றதாய் இருக்கிறது என்று கருதிதான், சொன்னமாத்திரத்திலேயே நாம் ஒன்று என்ற எண்ணம் தோன்றவும், நாம் இந்த நாட்டு அரச பரமபரையினர் என்ற கருத்து வரும்படியான ஒரு பெயரை 'திராவிடர்' என்று சொல்லிக் கொள்கிறோம். அந்த மக்கள் நலத்திற்குப் பாடுபடுவோர் ஸ்தாபனத்திற்கு 'திராவிடர் கழகம்' என்று அழைக்கிறோம்.

 

 இதைத் தவிர எங்களுக்கு ஒருவரிடத்திலும் வெறுப்புக் கிடையாது. பார்ப்பனர்களை அடியோடு வெறுக்க வேண்டும் என்பதோ அல்லது அவர்களை இந்த நாட்டை விட்டு விரட்டி விடுவது என்பதோ எங்கள் கருத்தல்ல. மக்கள் சரியானபடி புரிந்து கொள்ளாததனால் எதிரிகள் எங்களைப் பற்றித் தப்பான முறையில் பிரசாரம் செய்வதனால் எங்களுடைய உண்மையான நோக்கங்களை நீங்கள் உணர முடியாமல் போய்விடுகிறது.

 

சமுதாயத்தில் கீழ் ஜாதி மக்களாகவும், கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகியவைகளில் அறிவும் ஆற்றலும் கருதியும் சரி உரிமையும் இடமும் இல்லாத மக்களாகவும் இருந்து வருகிறோம். தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் அடிமையும் உடல் உழைப்பாளியும் அக்காரணத்தினால் சமுகத்தில் தாழ்ந்தவனாகவும் இழிமகனாகவும் இருந்து கொண்டு வருகிறோம். நம் உழைப்பின் பலன் நமது ஜீவனத்துக்கு மாத்திரமே போதும் போதாததாக அனுபவிக்க உரிமை உடையவர்களாக இருந்து வரவுமான நிலையில் சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பெயராலும் இருக்கின்றோம். அதாவது இருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையிலும், தன்மையிலும் உள்ள மக்களாகிய நாம் எண்ணிக்கையில் அதிகமாய் இருந்துவருவதோடு, சரித்திர ஆதாரங்களின்படி திராவிடர் ஆகிய நாமே இந்த நாட்டிற்கு உரிய பழக்குடி மக்களாகவும், இந்த நாட்டை ஆண்டு அரசு செலுத்தி வந்த மக்கள் சந்ததியார்களாகவும் இருந்து வந்திருக்கிறோம்.

 

இப்படிப்பட்ட நாம் இன்றைய இந்த நிலையில் இருப்பதற்கக் காரணம் என்ன? நாம் அன்னியரால் அடிமைப்படுத்தப்பட்டவர்களாகவும் நாம் ஜெயிக்கப்பட்டவர்களாகவும், ஆகிவிட்ட மக்களானதனால்தான்.

 

யாரால் எப்படி இந்த இழிவு என்று சிந்திக்க வேண்டியது அவசியமாகும். அப்படி சிந்தித்துப் பார்த்தோமேயானால் அன்னியர்கள் இந்த நாட்டு தலைவர்களான இந்த நிலை நமக்கு ஏற்பட்டது. இந்த நாடு என்பது வடக்கே இமயமலை, தெற்கே கன்னியாகுமரி, கிழக்கிலும், மேற்கிலும் பெரும் அளவுக்குக் காடும் மலையும் உள்ள பிரதேச எல்லைக்குள் இருக்கும் நாடாகும். இதில் அந்நியர்கள் என்பது இப்பிரதேச எல்லைக்கு வெளியில் இருப்பவர்கள், இருந்தவர்கள் ஆவார்கள். அது மாத்திரமேயல்லாமல் பிறவி உணர்ச்சி, பழக்க வழக்கம், கலை, நாகரிகம் முதலிய வகைகளிலும் வேறுபட்டவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்ட அந்நியர்கள் நம் இனமல்லாதவர்களுமாவார்கள். வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆரியர்கள் என்று சொல்லப்படுவார்கள்.

 

ஆரியர்கள் இந்த நாட்டில் பிரவேசித்து, இந்த நாட்டு மக்களை ஏய்த்து, தந்திரமாக ஏமாற்றி, தங்களுக்கு மேன்மையாகும்படியான கலாச்சாரத்தைப் புகுத்தி நம் மீது ஆரியக் கருத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் மேன்மக்களாகவும் நாம் கீழ் மக்களாகவும், அவர்கள் உயர் பிறவிகளாகவும் நாம் இழி பிறவிகளாகவும், நாம் கீழ் மக்களாகவும் அவர்கள் பாடுபடாமல் சுகவாசிகளாக வாழ வேண்டியவர்களாகவும், நாம் பாடுபட்டு அவர்களுக்கு அடிமையாய்ப் பணியாற்றி அரை வயிற்றுக் கஞ்சிக்கும் திண்டாட வேண்டியவர்களாகவும், அவர்கள் நல் வாழ்வுக்கு ஆகவே நாம் பாட்டாளி, சூத்திரமக்களாக இருந்து வர வேண்டியதாகிப் பரம்பரையாக இருக்க சாஸ்திர பூர்வமாக, சட்ட பூர்வமாகச் செய்து கொண்டார்கள். அவர்களுக்குச் சாஸ்திரம், ஸ்மிருதி, மனுதர்மம், கடவுள், மோட்சம், நரகம், பண்டிகை, விரதம், விசேஷ நாள், புண்ணிய நாள் முதலியவைகளை ஆக்கி அவற்றை நம்மை ஏற்கச் செய்து அதன் மூலம் நம்மை இந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். நமது இழிவும் தாழ்மையும் பிற்பட்டவர்களாக ஆக்கின தன்மையும் நாலாவது, அய்ந்தாவது ஜாதியாக அதாவது சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்ற தன்மையும், மதத்திலும் கடவுள் தன்மையிலும் பட்டுவிட்டதாலும், வாழ்வில் அந்நியர்களான அவர்களே சகலத்துறையிலும் ஆதிக்கத்தில் இருப்பதாலும், நம் இழிவை முன்னேற்றத் தடையை மாற்றிக் கொள்ள நீக்கிக்  கொள்ள நமக்கு வசதியும் சாத்தியமும் இல்லாமல் போய்விட்டன. அதனாலேயேதான் இந்தக் குறைபாடும் கொடுமையும் நீங்க யாரும் இதுவரை பாடுபட்டு இருப்பதாகத் தெரியவில்லை.

 

ஏராளமான அவதாரங்கள், தெய்வீகர்கள், சுவாமிகள், ஆழ்வார்கள், ஆச்சார்ய சுவாமிகள், நாயன்மார்கள் தோன்றி இருந்தாலும் அவர்கள் யாவரும இந்த இழிவை நிலை நிறுத்த இருந்தார்களே ஒழிய, ஒருவராவது இந்தக் கொடுமை நீக்குவதற்குச் சாதனமாகச் செயல்படவே இல்லை.

 

ஆகவே திராவிடர் கழகம் ஒன்றுதான் இந்த 25 ஆண்டுகளாப் பாடுபட்டு வருகிறது.

 

நம் முன்னோர்கள் சிலர் பாடுபட்டு இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அசுரர்கள் என்றும் இராட்சதர்கள் என்றும் கூறி, கடவுள்கள், அவதாரங்கள் தோன்றி அழித்ததாகத்தான் புராணங்கள் கூறுகின்றன. அதோடு மாத்திரமல்லாமல் எவனாவது பாடுபட்டால் அவன் வம்சத்திலேயே ஒருவனை பிடித்து அவனை ஒழிக்க முயற்சி செய்வார்கள். இராவணனை ஒழிக்க அவன் தம்பியையும், சூரனை ஒழிக்க அவன் தம்பியையும் இரணியனை ஒழிக்க அவன் மகனையும் பிடித்து எதிரிகளாய் உண்டாக்கினார்கள். அந்த மாதிரி பாடுபட்டவர்களை எல்லாம் ஒழித்து மக்களிடத்திலும் செல்வாக்கு அற்றவர்களாகவும் ஆக்கப்பட்டு விட்டார்கள். இந்த மாதிரிதான் நம் மன்னர்களில் பலர் ஆளாயினர்.

 

நம் அரசர்கள் என்று சொல்லப்படுகிற மூவேந்தர்கள் இந்த இழிவுக்கு ஆக்கம் தந்ததனால் தான் அவர்கள் மன்னர்களாகப் பெருமை பெற்றவர்களாக இன்று நம்மிடம் சொல்லப்படும்படியான அளவுக்கு இருந்து வருகிறது. அவர்களும் இந்த இழிவு ஒழிப்புக்குப் பாடுபட்டு இருந்தால் குலத்தோடு தொலைந்து இருப்பார்கள். அவர்களால்தான் ஆரிய ஆதிக்கம் வேருன்றி விட்டது நமது நாட்டில் என்பேன். இன்று தமிழ்நாட்டிலுள்ள பெரும் பெரும் கோயில்கள் எல்லாம் அவர்கள் காலத்தில் ஏற்பட்டவைகள் தான். ஏராளமான சத்திரங்களும், சாவடிகளும், தரும நிலையங்களும், கடவுள்களுக்கு மானியங்களும், கோபுரங்களும் மண்டபங்களும் ஏராளமாக ஏற்படுத்தப்பட்டன. பார்ப்பனருக்கு அவர்கள் காலத்தில் மிகுந்த செல்வாக்கு இருந்து வந்து அவர்களுக்குப் பயந்து அவர்கள் கொள்கைகளுக்கு ஏற்ப அரசு புரிந்து நம் சந்ததியார்களை என்றென்றும் அவர்கள் அடிமைகளாக இருக்கும்படியான வசதிகளை எல்லாம் செய்துவிட்டார்கள் அதனால்தான் அவர்கள் பெயர் நாட்டில் நடமாடுகிறது.

 

பாரதம், இராமயணம், கந்தபுராணம், திருவிளையாடற் புராணம் இவைகள் எல்லாம் ஒவ்வொன்றும் ஒவ்வொருவனைக் கொல்ல அவதாரம் எடுத்த நூல்கள்தாம்.

 

இராமன் கடவுள்; அவனை இராவணை எதிர்த்தான் தொலைந்தான். அதேபோல் இரணிய அரசன் விஷ்ணுவை வணங்கமாட்டேன் என்றான்; அவனும் தொலைந்தான். சூரன் சுப்பிரமணியனை வெறுத்தான் அவனும் தொலைந்தான். இப்படியாக ஆரியத்தை கண்டிக்கும் எவனும் தொலைவான் என்பதற்காக எழுதப்பட்டவை தான் மேற் சொன்ன புராண நூல்கள் அனைத்தும். வேதனைப்படுவதா? இது எவ்வளவு மானக்கேடான சங்கதி! சிந்தித்துப் பாருங்கள்.

 

ஆரியர்கள் போர்  செய்து திராவிடர்களை வென்றுவிடவில்லை - வெல்லவும் முடியாது. ஆனால் ஆரியக் கலாச்சாரத்தை நம் மக்களிடையே புகுத்தியே வெற்றி பெற்றனர். அதிலிருந்து முளைத்ததுதான் இந்தக் கீழ் சாதி - மேல் சாதியாகும். மதத்திலே, கடவுள் தன்மையிலே, தத்துவத்திலே நம்மை வென்றுவிட்டனர். அதிலிருந்துதான் இப்போது நாம் மீட்சியடைய வேண்டியிருக்கிறது. பார்ப்பனீயத்தை அடியோடு நாம் அழித்தாக வேண்டும்.

 

கோயிலுக்குப் போவதைக் கண்டிப்பாய் விட்டுவிட வேண்டும். நெற்றிக்குறியிடுவதையும் விட வேண்டும். ஆரியப் பண்பாட்டின் அறிகுறி எதுவும் தெரியாதபடி ஆரியப் பெயர்களையும் ஒழித்துகட்ட வேண்டும்.

 

                               ---------------------------    12.03.1950 செங்கல்பட்டு திராவிடர் கழக மாபெரும் பொதுக் கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. ”விடுதலை”, 15.03.1950

19.12.21

மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்

 

கடவுள்!

மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்.

 


மனிதனுக்குள் கடவுளைப் புகுத்துவது மனிதனை முட்டாளாக்கும் டானிக்(வைட்டமின் சத்து) ஆகும். இதை இன்று பார்ப்பனர்கள், சங்கராச்சாரிகள் கடவுள் பிரசாரம் செய்வதில் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.

 

கடவுள் மனித நலத்துக்காகக் கண்டு பிடித்த சாதனம் அல்ல. மனிதனை முட்டாளாக்குவதற்குப் பயன்படுத்தும் சாதனமேயாகும். சூரியனை, சந்திரனை நெருப்பை, நீரை, காற்றை, கல்லை, மண்ணை எந்த மனிதனும் கண்டுப்பிடிக்கவில்லை. அவற்றின் பெயர்களைத்தான் மனிதன் தெரிந்து கொண்டான்.

 

இவற்றிற்கு விளக்கம் தேவை இல்லை. காரண காரியங்கள் தேவையில்லை. மனிதன் என்றால் இவைகளை அறிந்தே ஆகவேண்டும்; இவற்றின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

 

ஆனால், கடவுள் அப்படி அல்ல; ஒருவன் சொல்லி அதுவும் சொல்லுவது மாத்திரமல்ல; நம்பும்படி செய்து, நம்பும்படி செய்வது மாத்திரமல்ல; நம்பும்படி கட்டாயப்படுத்தி மனித மூளைக்குள் புகுத்தியாக வேண்டும்.

 

இந்தக் கதி சர்வ சக்தியுள்ள "கடவுளுக்கு" ஏற்பட்டது பரிதாபம்! மகா பரிதாபம்!

 

கடவுள் கதை ஒரு முட்டாளுக்குத் தோன்றிய தோற்றம். இது உலக அறிவையே பாழாக்கிவிட்டது. அதாவது சிறு குழந்தை கையில் கிடைத்த நெருப்புப்பந்தம் வீட்டையே, ஊரையே எரித்து சாம்பலாக்கியது என்பது போல் கடவுள் எண்ணம் அறிவையே கொன்று விட்டது என்று சொல்லலாம்.

 

கடவுள் என்பது "பிடிக்குப்பிடி நமசிவாயம், (நமசிவாயம் என்றால், இங்கு ஓன்றும் இல்லை; சூனியம் என்றுதான் பொருள்)

 

அது "கடவுள்" என்றால் ஒரு "சக்தி," "சக்தி கூட அல்ல;" "ஒரு காரணம்" "காரணப் பொருள்கூட அல்ல" அப்படி நினைப்பது, நினைத்துக் கொள்வது மனிதனுக்கு ஒரு "சாந்தி" என்பதாக கா.சு.வும் (M.L .பிள்ளை), திரு.வி.க.வும் சொன்ன விளக்கம் - இதை பழைய "குடிஅரசு" இதழில் காணலாம். ஆனாலும் இவர்கள் விக்கிரக பூசையும், பட (உருவ) பூசையும் செய்து வந்தார்கள். கடைசியாக மாற்றிக் கொண்டார்கள்.

 

மனிதனுக்கு எதற்காக கடவுள் தேவைப்பட்டது என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லை. அதிலும், கடவுளை நம்பும் எவனும் அதன் சர்வ சக்தியில் நம்பிக்கை வைப்பதே இல்லை. எவனும் சம்பிரதாயத்திற்காக "கடவுள் செயல்" என்கிறானே தவிர, காரியத்தில் மனிதன் செயல் என்றும், இயற்கை என்றும், அகஸ்மாத், தற்சம்பவம், ஆக்சிடெண்ட் என்றும் தான் முடிவு செய்து கொண்டவனாகிறான்.

 

சர்வம் கடவுள் செயல் என்று சொல்லுகின்ற எவனும் சர்வத்திற்கும் தற்காப்பு செய்து கொள்ளாமல் இருப்பதில்லை. சர்வம் கடவுள் செயலாயிருக்கும் போது நாஸ்திகன் - கடவுள் இல்லை என்பவன் எப்படித் தோன்றினான் என்பது பற்றிச் சிந்திப்பதில்லை.

 

மற்றும் சர்வத்திலும் வியாபகமாக இருக்கிற கடவுள் மக்களுக்கு ஏன் தான் இருப்பதாக, தன்னைத் தானாகத் தெரிந்து கொள்ளச் செய்ய முடியவில்லை என்பதை சிந்திக்கவே மாட்டேன் என்கிறான்.

 

கிருஸ்து பாதிரி இந்தக் கேள்விக்குப் பதிலாக "கடவுள் மனிதனுக்கு அறிவைக் கொடுத்துவிட்டான்; அந்த அறிவைக் கொண்டு கடவுளைத் தெரிந்து கொள்ள வேண்டியது மனிதன் கடமை" என்று சொல்லிவிட்டார்.

 

உன் அறிவுக்கு எட்டிய கடவுள் ஏன் என் அறிவுக்கு எட்டவில்லை? என்று கேட்டதற்கு, "பாபஜன்மங்களுக்கு எட்டாது" என்று சொல்லிவிட்டார்.

 

அந்த பாபஜன்மங்களை யார் படைத்தது? படைத்தது கடவுளானால், பாபஜன்மங்களை ஏன் படைத்தார்? கடவுள் பாபஜன்மங்களைப் படைக்கவில்லையானால், பாபஜன்மங்களைப் படைத்தது யார்? என்று கேட்டேன்.

 

'சாத்தான் படைத்தான்' என்றும், மற்றும் அவருக்கே புரியாத எதை எதையோ யோசித்துப் பேசினார்.

 

இஸ்லாத்தின் கதியும் இப்படித்தான். இந்துவின் கதியே மும்மூர்த்திகள், ஓங்காளி, மாரி, காத்தவராயன், மதுரை வீரன், கருப்பண்ணன், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சமாதி, கல்லுகள், படங்கள், பட்சிகள், மிருகங்கள், மரங்கள், சாணி (மூட்டை உருவ), உருண்டைகள், செத்துப்போன மனிதர்கள் முதலிய எத்தனையோ பண்டங்கள் கடவுள்களாக வணங்கத் தக்கவைகளாகவும் இருந்து வருகின்றன.

 

இவைகளை ஏன் சொல்லுகிறேன் என்றால், ஒரு சர்வ சக்தியுள்ள கடவுளுக்குத் தன்னைப்பற்றித் தெரிவித்துக் கொள்ள – தன் உருவத்தை விளக்க சக்தியில்லை என்பதைக் காட்டத்தான்.

 

பிறகு – முன்ஜென்மம் - பின் ஜென்மம், கருமம், விதி, நரகம், சொர்க்கம், வைகுண்டம், கைலாயம் இப்படி இன்னும் பல பைத்தியக்காரனுக்குக் கள் ஊற்றினது போல் உளறல் மேல் உளறல்கள்.

 

மனிதனுக்குப் பிறகு முதல் சாவுவரை எதத்னையோ துன்பமும், தொல்லையும், இருக்க இந்தக் கடவுள், கருமம், மோட்ச – நரகத் தொல்லைகள் ஒருபுறம் மனிதனைச் சித்திரவதை செய்கிறது. மனிதன் (ஜீவ கோடிகள்) பிறப்புக்கும், வாழ்க்கைக்கும், சாவுக்கும் இடையில் அனுபவிக்கும் இன்பம், துன்பம், கவலை, தொல்லை முதலிய காரியங்களுக்கு அவசியம் என்ன? காரணம் என்ன? என்பதை எவனாலும் இதுவரை தெரிந்து கொள்ள முடியவில்லையே! இத்தனைக்கும் மனிதன் கழுதை, குதிரை, நாய், நரி, எருமை, யானை, புலி, சிங்கம், ஈ, எறும்பு முதலான எண்ணிறந்த ஜீவராசிகளைவிட அதிகமான அறிவு (பகுத்தறிவு) படைத்தவனாவான்.

 

இந்தப் பகுத்தறிவின் பயனால்தான் மற்ற ஜீவப்பிராணிகளுக்கு இல்லாத தொல்லையை மனிதன் அனுபவிக்கிறான். காரணம், இந்தப் பாழாய்ப்போன கடவுளால் தான் அதிகத் தொல்லை என்பேன்.

 

"உள்ளத்தைப் பங்கிட்டு உண்பது," "உழைப்பைப் பங்கிட்டுச் செய்வது" என்ற நிலை ஏற்பட்டால் கடவுளுக்கு, வேலையோ, அவசியமோ இருக்காது.

 

இப்போது கையில் வலுத்தவன் காரியமாகவும், அயோக்கியன் ஆதிக்கமாகவும் இருப்பதால், மனிதன் அறிவு இருந்தும் தொல்லைக்கும் துன்பத்திற்கும் ஆளாகிறான் - அடிமையாக வாழ்கிறான்.

 

இனி ஒரு அய்ம்பது ஆண்டுக்குள் மனிதனுக்கு சராசரி வயது 100–ஆகப் போகிறது. இது உறுதி. இப்பொழுதே பல நாடுகளில் சராசரி மனித வயது

67-முதல் 74-வரை இருந்து வருகிறது. நமது நாட்டில் 1950–ல் சராசரி வயது 32- ஆக இருந்தது. இன்று 50-ஆக ஆகிவிட்டது! இதற்குக் காரணம், 1940–ல் படித்த மக்கள் நம்நாட்டில் 100–க்கு 9–பேராக இருந்தவர்கள் காமராசர் முயற்சியால் 100–க்கு 50–பேராக ஆனதுதான். அதோடு கூடவே, "கடவுளும்," "கடவுள் செயலும்" வெகுதூரம் குறைந்து மறைந்து வருவதும் தான் என்று சொல்லுவேன்.

 

கடவுள் மறைய மறைய மனிதனுக்கு அறிவு வளரும்; சுதந்திரம் அதிகமாகும். நமது பெண்களுக்குப் பூணர சுதந்திரம் இருக்குமானால் - வாழ்வில் சுயேச்சையும், சமத்துவமும் ஏற்படுமானால், மனிதன் அறிவும், ஆயுளும் எல்லை இல்லாமல் வளர்ந்து கொண்டே போகும்.

 

முதலில் கடவுள் எண்ணம் மறையட்டும். இன்னும் நம்நாட்டு ஆட்சியாளர்களுக்கு (உண்மையான) தி.மு.க. காரருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அவர்கள் (தி.மு.க.காரர்) இனியும் இரண்டு லட்சம் மெம்பர்களைச் சேர்க்க வேண்டும். பிறகு இவர்களை அசைக்க எந்த மாஜிகளாலும் முடியாது.

 

இது தான் கடவுள் இரகசியம்.

 

               -------------------- 03.11.1970- "விடுதலை" நாளிதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம்