Search This Blog

16.7.09

மூட நம்பிக்கையை ஒழிக்க இப்பொழுது கடவுள் பிரச்சாரம் தேவையா?


குடிபோதை பொழுது விடிந்தால் தீரும் பக்தி போதை ஈரோட்டு மருந்தால் மட்டுமே போகும்! தஞ்சை: விடுதலை பவளவிழாவில் தமிழர் தலைவர் விளக்கம்
குடிபோதை பொழுது விடிந்தால் தீரும்; பக்தி போதை ஈரோட்டு மருந்தால் மட்டுமே நீக்க முடியும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

தஞ்சையில் 27.6.2009 அன்று நடைபெற்ற விடுதலை பவள விழா பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

அய்ந்தாவது, கடன் தொல்லை தீர; ஆறாவது, குழந்தைகள் நன்றாகப் படித்து, மதிப்பெண் பெறுவதற்காக; ஏழாவது தாலி பாக்கியம் நீடிப்பதற்காக இந்த ஏழு காரணங்களைச் சொல்லி கடவுள் இவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை அல்லது பேராசை என்ற இதன் காரணமாக மூடநம்பிக்கைக்கு ஆட்படுகிறார்கள்.

இந்தச் செய்தியைப் படித்தவுடன் நான் சிறிதுநேரத்தில் நினைத்தேன், உடனடியாக நாம் நம் பிரச்சாரத்தை இன்னும் தீவிரமாக பகுத்தறிவு பிரச்சாரத்தின் மூலமாக கடவுள் பக்திப் பிரச்சாரத்தை தீவிரமாகச் செய்து, மக்களை இந்த நோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கின்ற நேரத்தில் கொஞ்சம் சுலபமாகச் செய்யலாம் என்று நினைத்தேன். காரணம் என்ன? அது பழக்கம். பொடி போடுவதைப் போல சிகரெட் புகைப்பதைப் போல, அது ஒரு போதை பழக்கம். பக்தி என்பது போதை; அவ்வளவுதான். தீவிரப் பிரச்சாரத்தில் இயங்க வேண்டும். என்றெல்லாம் நினைத்த நேரத்திலே இன்னொரு செய்தி ரொம்ப மிக முக்கியமானது.

குடிப்பவர்களால் அரசுக்கு வருமானம் ரூ. 7335 கோடி

இந்தச் செய்தியை நீங்கள் கவனிக்க வேண்டும். 1983_84இல் தமிழ்நாட்டில் குடிகாரர்கள் மூலமாக அரசுக்கு வந்த வருமானம் ரூ.139 கோடியே 41 லட்சம்.

2005_2006 இல் இந்த வருமானம், குடி மக்களுடைய வருமானம் மது குடித்தவர்களால் அரசுக்கு வந்த வருமானம். ரூ. 139 கோடியே 41 இலட்சத்திலிருந்து திடீரென்று 2005_06இல் ஏழாயிரத்து முன்னூற்று முப்பத்தைந்து கோடியாக ஆயிற்று. எண்ணிப்பாருங்கள்.

முதலில் ரூ. 139 கோடி, பிறகு ரூ. 7,335 கோடி. ஒரே ஏட்டிலே இப்படி செய்திகள் ஒரு பக்கம் பக்தி செய்தி, இன்னொரு பக்கம் குடி செய்தி. இப்படிப்பட்ட செய்திகள் வெளியிட்டமைக்காக நன்றி செலுத்த வேண்டும்.

குடிப்பவர்களின் எண்ணிக்கை 53.85 சதவிகிதம்

இதை ஒப்பிடும் பொழுது 1983 ம் 2006 ம் ஒப்பிடும்பொழுது குடிகாரர்களின் எண்ணிக்கை 53.85 சதவிகிதம் அதிகமாகியிருக்கிறது. பக்தர்கள் எண்ணிக்கை 35 மடங்கு அதிகமாகியிருக்கிறது. குடிகாரர்களின் எண்ணிக்கை 54 சதவிகிதம் அதிகமாகியிருக்கிறது. இரண்டுக்கும் அதிக வித்தியாசம் கிடையாது. இது பக்தி போதை, அது மது போதை. இது பொழுது விடிந்தால் தீரும். பக்தி போதைக்கு ஈரோட்டு மருந்தைக் கொடுத்தால் ஒழிய அவ்வளவு சுலபமாகத் தீராது என்று சொல்லக்கூடிய நிலை.

டாஸ்மாக் மூலம் தற்பொழுது ரூ.10,500 கோடி

2006, 2007இல் இந்த ரூ. 7 ஆயிரம்கோடி வளர்ந்து ரூ. 8,900 கோடிக்கு பிராந்தி, விஸ்கி, பீர் விற்பனை. 2007_2008இல் ரூ.10,500 கோடிக்கு மது குடித்துள்ளார்கள்.
அது மட்டுமல்ல, இது எந்தெந்த ஊர் என்று கணக்கெல்லாம் இருக்கிறது. அது இப்பொழுது தேவையில்லை.

ஆனால், நிச்சயமாக ஒரு ஆறுதல் உங்களுக்கு உண்டு. முதலிடம் சென்னை, இரண்டாவது இடம் வேலூர். நிச்சயமாகத் தஞ்சை இல்லை. தஞ்சை பெரியார் நாடு. காரணம் தஞ்சை கழகத்தின் நஞ்சை. எங்கெல்லாம் பகுத்தறிவு பரவியிருக்கிறதோ அங்கு போதை இல்லை. காரணம் பாதை தெரிகிறது அவர்களுக்கு.

கூட்டம் எதற்காக வருகிறது?

சிலர் நினைத்துக் கொள்ளலாம். சிலர் எங்களைப் பார்த்தே கேட்பார்கள். நீங்கள் எல்லாம் இப்படி பிரச்சாரம் செய்யச் செய்யத் தான் நிறைய கோவில் பெருகுகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக வருகிறது என்று சொல்லுகிறார்கள். கூட்டம் எதற்காக வருகிறது? அவர்களுக்கு இது போன்ற ஒரு பேராசை. இது போல ஒரு மூட நம்பிக்கை.

கோயில், சர்ச் உண்டியல் திருட்டு

உண்மையில் கடவுளை நம்பக் கூடியவன் ஒருவன் கூட கிடையாது. அது மட்டுமல்ல; கோயில் உண்டியல் திருட்டுப் போகிறது என்று செய்தி வந்தவுடன் அடுத்து சர்ச் உண்டியலையும் சேர்த்து எடுத்துப்போகிறான்.

எனவே, கொள்ளையர்களாலே எல்லா கடவுளுக்கும் சமநீதி வழங்கப்படுகிறது. ஆகவே அதிலே பிரச்சினை இல்லை. எனவே, மூடநம்பிக்கையை எதிர்த்து ஓர் அறிவியல் பிரச்சாரம் மக்களிடையே ஒரு தீவிரமான பிரச்சாரத்தை செய்தாக வேண்டும். ஏன் என்று சொன்னால், அதன் மூலம்தான் மக்களுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

என்னால் முடியும்....!

கடவுள் பக்தர்களை சங்கடப்படுத்துவதற்காக நாங்கள் இதை சொல்லவில்லை. தன்னம்பிக்கை யாருக்கு இருக்கும் என்று சொன்னால், எவன் எல்லாம் என்னால் முடியும் என்று நினைக்கின்றானோ அவனுக்குத்தான் தன்னம்பிக்கை இருக்க முடியும்.
எதுவுமே என்னுடைய கையிலே இல்லை என்று நினைக்கின்றவனாலே தன்னம்பிக்கைக்காரனாக இருக்க முடியாது.

கடவுள் நம்பிக்கை ஒரு மனிதனுடைய தன்னம்பிக்கையைத் தூக்கி எறிந்துவிடுகிறது. விடுதலையின் பகுத்தறிவுப் பிரச்சாரம் மூடநம்பிக்கையை முன்னாலே கொண்டு வந்து நிறுத்துகிறது. எனவே, விடுதலையினுடைய பெரும் பகுதி பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு, அறிவியலைப் பரப்பக்கூடிய பிரச்சாரத்திற்கு தீவிரமாக இறங்குகிறோம். ஏனென்றால் அது அடிப்படைப் பிரச்சாரம் அந்த அடிப்படைப் பிரச்சாரம் நடந்தால் நிச்சயமாக மக்கள் வளர்ச்சி பெறுவார்கள். ஒரு சின்ன உதாரணம் கூறி முடிக்க விரும்புகிறேன்.

ஆச்சாரியார் கேட்டபோது பெரியார் சொன்னார்

இந்த மூட நம்பிக்கையை ஒழிக்க இப்பொழுது கடவுள் பிரச்சாரம் தேவையா? இவர்கள் செய்தால் வெற்றி பெறுவார்களா? என்று நினைக்காதீர்கள்.

ஆச்சாரியார் கேட்ட போது பெரியார் சொன்னார். நண்பர் நாயக்கர் அவர்களே! நீங்கள் போய் இந்த மலையோடு முட்டிக்கொள்ளலாமா? என்று கேட்டார்கள்.

உடனே தந்தை பெரியார் சொன்னார். நண்பர் ராஜாஜி அவர்களே! அது மலையாக இருக்கலாம். எனக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. மயிரைக் கட்டி மலையை இழுக்கிறேன். வந்தால் மலை; போனால் பரவாயில்லை என்று தெளிவாகச் சொன்னார்கள். தன்னந்தனியராக தந்தை பெரியார்அவர்கள் துவங்கிய பணிதான் இன்றைக்கு கடவுள் மறுப்பைத் தாங்கியிருக்கின்ற சிலைகள் தந்தை பெரியார் பீடத்தில் இருக்கிறதென்றால் இந்தியாவினுடைய எந்த மாநிலத்திலும் இந்தப் பக்குவம் வந்தது கிடையாது.

உண்மையிலேயே கடவுளை நம்புகிறார்களா?


ஆகவே, வளர்ந்து கொண்டிருக்கக் கூடிய சூழல் வந்திருக்கிறது. ஆனால், இன்றைக்கு உண்மையிலேயே எவரும் கடவுளை நம்புகிறவராக இல்லை. அது ஒரு சடங்கு பழக்கம். பொடி போடுவதைப் போல சிகரெட் பிடிப்பதைப் போல. எனவே ஒரு கூட்டம்.
முன்னால் இருந்த மக்கள் தொகை எவ்வளவு? 30 கோடி. பாகிஸ்தானையும் சேர்த்து. இன்றைக்குப் பாகிஸ்தானை-யும் நீக்கி, பங்களாதேஷையும் நீக்கி, தனியாகப் பார்த்தால் மக்கள் தொகை 115 கோடி. எனவே, அதனுடைய விகிதாச்சாரத்தைக் கணக்குப் போட்டுப் பார்க்கும் பொழுது quantitative, qvalitative என்று இரண்டைப் பார்க்கின்ற நேரத்திலே நம்பிக்கை என்று வரும்பொழுது எவனும் கடவுளை உண்மையாக நம்புகிறவன் அல்லன்.

கடவுள் நம்பிக்கை இருந்தால் எதற்குப் பூட்டு?

யாரெல்லாம் வீட்டைப் பூட்டுகிறானோ, யாரெல்லாம் கோவிலைப் பூட்டுகிறானோ அவர்கள் எல்லாம் கடவுள் சர்வசக்தியை நம்பாதவர்கள் என்று அர்த்தம். எனவே இது ஒரு பழக்கம், பிறகு அது வழக்கம். அதைச் சொல்லி நாம் விட்டு விட முடியாது.

எப்படி மது போதையை எதிர்த்து நாம் பேச வேண்டும் என்று நினைக்கின்றோமோ அது போல இந்த பக்தி போதையை எதிர்த்து அதிகமாகச் செய்ய வேண்டும். பொழுது விடிந்தால் மயக்கம் தீரும். குடிகாரன் பேச்சு பொழுது விடிந்தால் போச்சு என்பது பழமொழி. ஆனால் பக்தருடைய நிலை அப்படி அல்ல. மண்டலில் நாம் பெற்ற வெற்றி
எனவே, விடுதலை மூடநம்பிக்கையை எதிர்த்துப் போராடும். சமூக நீதிக்காக எப்படி மண்டல் கமிஷன் அறிக்கையை மத்திய அரசு ஏற்கும்படியாகச் செய்து இன்றைக்கு மிகப் பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கின்றோமோ அது போன்ற பணிகளை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்க வேண்டும்.

இங்கே சொன்னார்கள். இது ஒரு மக்கள் இயக்கம். தந்தை பெரியார் சொன்னது தான். கடவுளை மற என்று சொன்ன தந்தை பெரியார், மனிதனை நினை என்று சொன்னார்.

இரட்டைக் குழல் துப்பாக்கிகள் ஒலிக்கும்

எனவே, அப்படிப்பட்ட இந்த ஏட்டை, இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்கின்ற கருஞ்சட்டைத் தோழர்களே, விடுதலை வாசகர்களான பெருமக்களே, திராவிடர் கழகமும். திராவிட முன்னேற்றக் கழகமும், இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்று அண்ணா சொன்னார்கள். அது போலவே ஒலிக்கும். அரசியலிலே அவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கென்று சில கோடுகள் உண்டு.

ஆனால், எங்களுக்கு என்று சில வரைமுறைகள் கிடையாது. ஆகவே சேப்பர்ஸ் அண்டு மைனர்ஸ் படை என்று சொல்லுவதைப் போல இராணுவத்திற்கு தூசிப்-படையாக நாங்கள் முன்னாலே சென்று கொண்டிருப்போம். பின்னாலே கலைஞருடைய ஆட்சி தொடரும்.

இந்த ஆட்சியை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது


இந்த ஆட்சியை எந்தக் கொம்பனாலும் அசைத்து விட முடியாது. இன்னும் கேட்டால், வருகிற தேர்தலிலே நிச்சயமாக எழுதி வைத்துக்கொள்ளுங்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தனித்தே நின்றால் கூட அக்கட்சி 200 இடங்களை பெற்றே தீரும் என்கிற அளவுக்கு சாதனைகள் முன்னாலே நிற்கின்றன.

எல்லோருக்கும் நன்றி

போதை இல்லாத மக்களை நாங்கள் பார்ப்போம்; உருவாக்குவோம். அதன் காரணமாகத்தான் ஈரோட்டுப் பாதை தெளிவாகத் தெரியுமென்று சொல்ல, இவ்வளவு நீண்ட நேரம் இருந்த உங்களுக்கு நன்றி கூறி, சிறப்பாகச் செய்த தஞ்சை தோழர்களுக்கு நன்றி கூறி, விடுதலை பவள விழா மலரை இவ்வளவு தொழில் நுட்பத்தோடு செய்த மலர் குழுவினருக்கும் எல்லோருக்கும் நன்றி தெரிவித்து நன்றி நன்றி, நன்றி, என்று கூறி முடிக்கிறேன்.
விடுதலை தமிழனின் மூச்சுக்காற்று, எனவே, மூச்சுத் திணறும் பொழுது வராதீர்கள், எப்பொதும் மூச்சுப் பயிற்சியை செய்யுங்கள். விடுதலையை வாங்கிப் படியுங்கள், தாங்கிப் பிடியுங்கள்; என்று கேட்டு முடிக்கிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

3 comments:

Thamizhan said...

ஒரு அறிவாளி கேட்டார்.
தினம் தினம் கல்லாப்பெட்டியைத் திறந்து யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று எண்ணுபவர் கடவுளாக இருக்க முடியுமா?
கடவுள் நம்பிக்கை என்ற பெயரிலே கோவில்களில்,இன்று இன்னும் அதைவிட முன்னேறி இணையத்திலேயே பணம் அனுப்பி ஆசி வாங்கிவிடலாம்,லஞ்சம் தரும் படித்த அறிவாளி(அறிவிலி)களுக்குத் தங்கள் உடன் பிறப்புக்கள்,உற்றார்,உறவினர்,நண்பர் மற்றும் வாடும் மனித இனம் கண் முன்னே தெரியாமல் போவது ஏன்?

குறைந்த அளவிலே "ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் காணக்கூட"
இவர்கள் அறிவு பயன் படவில்லையே.
இது மிகப் பெரிய போதை தான்.

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி