Search This Blog
7.7.09
உலக நாடுகள் - தூரப்பார்வை - மார்ஷல் தீவுகள்-மாரிடானியா-மோரிஷஸ்
மார்ஷல் தீவுகள்
பசிபிக் பெருங்கடலின் வடபகுதியில், ஆஸ்திரேலியாவுக்கு வடக்கே அமைந்துள்ள சிறு, சிறு தீவுக் கூட்டங்களை ஸ்பெயின் நாட்டுக்காரர்கள்தான் 16ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்தனர். பிரிட்டிஷ் கப்பல் படைத் தளபதி கேப்டன் மார்ஷல் பெயர் அந்தத் தீவுக் கூட்டத்திற்கு 1788 இல் சூட்டப்பட்டது.
அய்.நா. மன்றத்தின் கட்டுப்பாட்டில் மார்ஷல் தீவுகளும் மரியானா, கரோலின் தீவுகளும் 1947இல் கொண்டு வரப்பட்டன. இந்தப் பகுதியைச் சேர்ந்த பிகினி மற்றும் எனவெடக் தீவுகளில் 1946 முதல் 1958 வரை அணு ஆயுதச் சோதனைகள் நடத்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட மாசுகளுக்கு இழப்பீட்டுத் தொகையாக ஓர் ஆயிரத்து 837 லட்சம் டாலர் தொகையை இத்தீவுகளுக்கு அய்.நா. மன்றம் தந்தது. பிகினி தீவிலிருந்து இடம் பெயரச் செய்விக்கப்பட்ட குடிகளுக்கான இழப்பீடாக 38 லட்சம் டாலர் தொகையும் அய்.நா. மன்றம் வழங்கியது.
1986இல் மார்ஷல் தீவுகளுக்கு சுய ஆட்சி உரிமை வழங்கப்பட்டது.
இத்தீவுகளின் பரப்பளவு 181.3 சதுர கி.மீ. மட்டுமே. இத் தீவுகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை 61 ஆயிரம் மட்டுமே. மார்ஷலிஸ் எனும் தனி மொழியை 98 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்கள் பேசுகின்றனர். இம்மொழியுடன் இங்கிலீசும் ஆட்சி மொழியாக உள்ளன.
94 விழுக்காடு மக்களுக்கு மேல் கல்வியறிவு பெற்றவர்கள். அதிபராக கொப்ஸாய் ஹேசா நோட் என்பவர் 2004 முதல் இருந்து வருகிறார். இவரே ஆட்சியின் தலைவரும் கூட.
மாரிடானியா
15ஆம் நூற்றாண்டில் இந்த ஆப்ரிக்க நாட்டில் குடியேறிய மக்கள் சஹாரா பாலை நிலப் பகுதியில் இருந்து வந்தவர்களும் பெர்பெர் இனத்தவருமே. பின்னர் அரபியர்கள் இந்நாட்டுக்கு ஒட்டகப் பாதை வழியாக வந்து இந்த நாட்டுக்கும் மொராக்கோவுக்கும் தொடர்பு ஏற்படுத்தினர். இதனால் அரேபியக் கலாச்சாரக் கலப்பு ஏற்பட வாய்ப்பு உண்டானது.
1904இல் மாரிடானியா, பிரான்சு நாட்டின் குடியேற்ற நாடாகியது. 1920இல் பிரெஞ்ச் மேற்கு ஆப்ரிக்கா எனும் நாட்டின் பகுதியாகக் கருதப்பட்டது. செனகல் நாட்டில் இருந்தவாறு, ஆதிக்கவாதிகள் ஆட்சி செலுத்தினர். 1960இல் மாரிடானியா விடுதலை அடைந்தது.
வடஆப்ரிகாவில் வட அட்லாண்டிக் பெருங்கடல் கரையில் செனகல் நாட்டுக்கும் சஹாராப் பாலைவனத்தின் மேற்குப் பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள நாடு மாரிடானியா. இதன் பரப்பளவு 10 லட்சத்து 30 ஆயிரத்து 700 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கள்தொகை 32 லட்சம். நூற்றுக்கு நூறு இசுலாமியர்கள்.
அரபி மொழியின் ஹஸ்ஸானியா பிரிவு ஆட்சி மொழி நாடாக உள்ளது. வோலோப் எனும் இனக் குழு மொழியும் ஆட்சி மொழி. பிரெஞ்ச் மொழியும் பேசப்படுகிறது. 42 விழுக்காடு மக்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றவர்கள். இசுலாமிய ஷரியத் சட்ட முறை-களும் பிரெஞ்ச் சட்ட முறைகளும் கடைப் பிடிக்கப்படு-கின்றன. குடியரசுத் தலைவரும் பிரதமரும் உள்ளனர்.
40 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டிற்கும் கீழ் இருப்பவர்கள். 20 விழுக்காட்டுக்கு மேல் வேலை கிட்டாதோர் உள்ளனர்.
மோரிஷஸ்
ஆப்ரிக்காவின் தென்முனையைக் கண்டு அதற்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயர் வைத்து விட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்த வாஸ்கோடகாமா தற்செயலாகக் கண்டுபிடித்த தீவுதான் மோரிஷஸ். மனித நடமாட்டமே இல்லாத இந்தத் தீவுக்கு டச்சு நாட்டினர் சொந்தம் கொண்டாடினர். அவர்கள் நாட்டின் மன்னரான ஆரஞ்சு இளவரசரின் பெயரான மோரிஸ் என்ற பெயரால் இத்தீவை அழைக்கத் தொடங்கினர்.
1715இல் பிரான்சு நாட்டின் கிழக்கு இந்தியக் கம்பெனி இத்தீவுக்கு உரிமை கொண்டாடியது. 1720 முதல் இத்தீவில் குடியேறத் தொடங்கினர். லூயி துறைமுகத்தை அமைத்தனர். அங்கிருந்து இந்தியாவில் உள்ள பிரிட்டிஷாரைத் தாக்கத் திட்டம். மாற்றாக, ஆவணங்கள் மூலம் ஒப்பந்தம் செய்து கொண்டு வேலை வாங்கும் வேலை செய்யும் முறையைக் கொண்டு வந்தனர். இதனால் இந்தியாவில் இருந்து ஒப்பந்தத் தொழிலா-ளர்களாக ஆயிரக் கணக்கானோர் இறக்குமதி செய்யப்-படும் நிலை ஏற்பட்டது.
1926இல் மோரிஷசில் குடியேறி வாழ்ந்த இந்தியர்கள் அரசு மன்றங்களுக்குத் தேர்ந்து எடுக்கப் பட்டனர். 1957இல் உள்நாட்டு மக்களைக் கொண்டு நடத்தப்பெறும் சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப் பட்டது. கடைசியில் 1968 மார்ச் மாதம் 12 ஆம் நாள் மோரிஷஸ் தீவுக்கு விடுதலை வழங்கப்பட்டது.
மடகாஸ்கருக்குக் கிழக்கே இந்தியமாக்கடலில் இருக்கும் தீவு நாடான இதன் பரப்பளவு 2 ஆயிரத்து 40 சதுர கி.மீ. மட்டுமே. அகலேகா தீவுகள், கார்கடோஸ் கராஜோஸ் மணல் மேடுகள் ஆகியவற்றின் பரப்பும் இதில் அடக்கம். மக்கள் தொகை 12 லட்சத்து 41 ஆயிரம்.
இந்து மதத்தினர் 48 விழுக்காடு. ரோமன் கத்தோக்கர் 27 விழுக்காடு. கிறித்துவ பிற பிரிவினர் 9 விழுக்-காடு. இசுலாமியர் 16 விழுக்காட்டினர் உள்ளனர்.
கிரியோல் எனும் மொழி பேசுவோர் 80 விழுக்காடு. போஜ்புரி மொழி பேசுவோர் 12 விழுக்காடு. இங்கிலீஷ்-தான் ஆட்சி மொழி. 86 விழுக்காடு மக்கள் கல்வி-யறிவு பெற்றவர்கள். இந்நாட்டில் தமிழர்களும் உள்ளனர். தமிழ் பேசுவர்; ஆனால் எழுதப் படிக்கத் தெரியாது. இவர்களுக்குத் தமிழ் மொழி கற்பிக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
அதிபரும் பிரதமரும் தேர்தலில் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். 10 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். பத்து விழுக்காட்டுக்கு மேற்பட்டோர் வேலை கிட்டாதவர்கள்.
-------------------"விடுதலை" 7-7-2009
Labels:
உலக நாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment