Search This Blog

21.7.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - ரஷியா


ரஷியா

வைகிங் (ஒரு வகை அரசப் பட்டம்) ரூரிக் என்பவர் 862 ஆம் ஆண்டில் ரஷியப் பகுதியில் தன் ராஜ்யத்தை அமைத்தார் எனத் தெரிகிறது. இதுவே முதல் ரஷிய அரச வமிசம் எனப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளையும் பிரிவினரையும் 10, 11ஆம் நூற்றாண்டுகளில் ஒருங்கிணைந்து ஒரே அரசாக அமைக்கப்பட்டது.

நான்காம் இவான் என்று அழைக்கப்பட்டு மிகப் பயங்கரமானவன் எனும் அடைமொழியால் (Ivan - The Terrible) அடையாளப்படுத்தப்படும் மன்னன் 1552லிருந்து 1556 வரை போரிட்டு டார்டார் முசுலிம் ராஜ்யங்களையும் அஸ்ட்ராகான் நாட்டுப் பகுதியையும் கைப்பற்றி ஆண்டான். இதன் மூலம், வோல்கா நதியின் கீழ்ப் பகுதிகளிலும் ரஷிய சாம்ராஜ்யம் நிலை பெற்றது. 1547இல் இவான் தன்னை ரஷ்யச் சக்ரவர்த்தி ஜார் என்று அழைத்துக் கொண்டான்.
அவன் ஆட்சியில் ரஷிய நாட்டின் ஆட்சி நிருவாகம் மய்யப் பகுதியிலிருந்து வலுவாக நடைபெறும் நிலையும் ஒரு மகாசாம்ராஜ்யம் அமைந்து ஸ்லாவ் இன மக்கள் அல்லாதவர்களையும் கொண்ட அரசாகவும் ரஷியா விளங்கியது. மன்னர்கள் வழி வழியாகப் பெருந்தன்மைக்கு எடுத்துக் காட்டானவர்கள் எனும் நடைமுறைக்கு எதிராக இவன் மிகப் பயங்கரமான ஆட்சியை நடத்தி வந்தான்.

1580இல் கஸ்ஸாக் இனத்தவர் சைபீரியா மீது படையெடுத்தனர். 1613இல் தேசிய கவுன்சில் கூடி மைக்கேல் ரொமனோவ் என்பவரை ஜார் மன்னராகத் தேர்ந்தெடுத்தனர். அதன் பிறகு ரொமனோவ் வமிசம் ரஷியாவை ஆளத் தொடங்கியது. 1917இல் சோவியத் புரட்சி நடைபெறும்வரை இவ்வமிச ஆட்சியே நடந்தது. மைக்கேல் ரொமனோவின் பேரன் பீட்டர் (மகாபீட்டர் என வரலாறு கூறும்) அரசு நிருவாகத்தைச் சீர்திருத்தினார். நாட்டுக்கென ஒரு நிலையான போர்ப்படையையும் கப்பல் படையையும் உருவாக்கினார். ரஷிய மதத் தலைமை மன்னருக்கு அடுத்துதான் என்று ஆக்கினார். மன்னர்கள் மீது மதக் குருக்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை மாற்றப்பட்டது.

1798லிருந்து 1814 முடிய பிரான்சில் நெப்போலியனுக்கு எதிரான போர்களில் ரஷியா ஈடுபட்டது. 1812இல் ரஷியாவுடனான போரில் நெப்போலியன் பெற்ற தோல்வி அவனது ஆட்சி இழப்புக்குத் தொடக்கமாகிவிட்டது. அடுத்து கிரீமியப் போர். ரஷியாவுக்கு எதிராக பிரிட்டன், பிரான்சு, ஒட்டோமான் துருக்கி ஆகிய நாடுகள் 1853லிருந்து 1856 வரை போர் செய்தன. 1856ஆம் ஆண்டிலிருந்து எட்டு ஆண்டுகள் நடை-பெற்ற காகாசியப் போரின் முடிவில் வடகாகாசியாவை ரஷியா தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டது. தற்போதைய மத்திய ஆசியக் குடியரசு நாட்டுப் பகுதி 1864இல் ரஷியாவுடன் சேர்ந்து கொண்டது.
1897இல் ரஷியாவில் ஒரு கட்சி தொடங்கப் பட்டது. சமூக ஜனநாயகக் கட்சி எனப் பொருள்படும் கட்சி 1903இல் இரண்டாகப் பிரிந்தது. ஒன்றுக்குப் பெயர் போல்ஷ்விக். மற்றொன்றின் பெயர் மென்ஷ்விக். 1904இல் மஞ்சூரியப் பகுதிகளில் ரஷியா தன் எல்லையை விஸ்தரித்தது. இதன் காரணமாக ஜப்பான் ரஷியாவுடன் போரிட்டது. போரில் ஏற்பட்ட தோல்வியின் விளைவாக ஏற்பட்ட குழப்ப நிலையைப் பயன்படுத்திக் கொண்டு 1905இல் நாட்டில் புரட்சி ஏற்பட்டது. அதன் விளைவாக இரண்டாம் நிக்கோலஸ் எனும் ஜார் மன்னன் நாட்டிற்குப் புதிய அரசமைப்புச் சட்டம் ஏற்படுத்திடவும் பொது வாக்கெடுப்பில் தேர்ந்து எடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றம் ஏற்படுத்திடவும் ஒப்புக் கொள்ளுமாறு நிலை ஏற்பட்டது. நாடாளுமன்றத்திற்கு டூமா என்று பெயர்.
பெட்ரோகிராட் (தற்போது பீட்டர்ஸ்பர்க்) நகரில் மக்களுக்கு உணவு கிடைக்காத பஞ்சநிலை 1917ஆம் ஆண்டில் நிலவியது. அது தொடர்பாக ஏற்பட்ட கிளர்ச்சி வலுப்பெற்று போல்ஷ்விக்குகளால் புரட்சியாக வளர்த்தெடுக்கப்பட்டு சோவியத் புரட்சி என வரலாற்றில் இடம் பெற்றது. புரட்சியின் விளைவாக 300 ஆண்டுக்கால ஜார் ரொமொனோவ் வமிச ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. ஜார் நிக்கோலஸ் பதவி துறக்க நேரிட்டது. போல்ஷ்விக்குகள் ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தப் பட்டனர். அந்த ஆட்சியின் முதல் தலைவர் லெனின்.

ரஷியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் விளாடிமிர் இலிச் உல்யனோவ்தான் ஆட்சியின் தலைவராக அமர்த்தப்பட்டார். லெனினின் இயற்பெயர் இதுதான். வி.அய். லெனின் என்பது விளாடிமிர் இலிச் லெனின் எனப்படும் பெயரின் சுருக்கம்தான்.

லெனின் சோவியத் அதிபராக 1924 வரையில்தான் பதவி வகித்தார். அவரின் எதிர்பாராத இறப்பு அவரின் பதவிக்காலத்தைச் சுருக்கிவிட்டது. அவரது மறைவுக்குப் பின் கட்சியின், ஆட்சியின் தலைமைப் பதவி குறித்து கட்சிக்குள் கருத்து வேற்றுமை நிலவியது. ஜோசப் ஸ்டாலினுக்கும் லியோன் டிராட்ஸ்கிக்கும் பதவிச் சண்டை. டிராட்ஸ்கி அப்போது போர்ப்படைத் தளபதியாக இருந்தார். ஜோசப் ஸ்டாலின் ரஷியாவின் அதிபரானார். அதன் பின் டிராட்ஸ்கி தளபதிப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். 1929இல் அவர் தலை மறைவானார். 11 ஆண்டுகளுக்குப் பின் 1940 இல் மெக்சிகோ நகரில் அவர் கொல்லப்பட்டதாகச் செய்தி வெளிவந்தது.

மாற்றுக் கருத்து கொண்டோரையும் தன்னை எதிர்த்தோரையும் ஸ்டாலின் நீக்கினார். கட்சியி-லிருந்தும், உலகினின்றும்! 1941இல் முழு சர்வாதிகாரியானார். இரண்டாம் உலகப் போரில் சோவியத் நாட்டை ஈடுபடுத்தி வெற்றி பெறச் செய்தார் மார்ஷல் ஸ்டாலின். நேச நாடுகளான பிரிட்டன், அமெரிக்காவுடன் இணைந்து சோவியத் போரில் ஈடுபட்டது.

சோவியத் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு (7-.11.-1917) சோவியத் சோஷலிசக் குடியரசு நாடுகள்) ஒன்றிப்பு 30.-12.-1922இல் அமைக்கப்பட்டது. அப்போது உலகின் மிகப் பெரிய நாடாக அதுவே விளங்கியது. உலகின் இரு பெரும் வலுவுள்ள நாடுகளில் ஒன்றாக இருந்தது. அந்நாட்டின் பரப்பு 2 கோடியே 24 லட்சம் சதுர கி.மீ. ஆகும். இந்தியாவின் பரப்பைப் போல் 7 மடங்கு. அமெரிக்காவின் பரப்பளவைப் போல் இரு மடங்குக்கும் மேலே! உலகின் பரப்பில் ஆறில் ஒரு பங்கை சோவியத் நாடு உள்ளடக்கியிருந்தது. உலகின் மிக நீளமான கடற்கரை சோவியத்தினுடையது. எந்த நாட்டின் எல்லையையும் விட நீண்ட எல்லைப் பரப்புடைய நாடாக சோவியத் யூனியன் விளங்கியது.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் சோவியத் அரசியல் பொருளாதார செல்வாக்கும் வலுவும் உள்ள நாடாகத் திகழ்ந்தது. சமதர்மம் சிறப்புடன் இலங்கிய பூமி அது. உற்பத்தி, விநியோகம், பண்டமாற்று போன்ற சகல துறைகளிலும் சமதர்மமே. திட்டம் தீட்டிச் செயல்படுத்தப்பட்ட அய்ந்தாண்டுத் திட்டங்கள் நாட்டின் உற்பத்தியையும் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கண்காணித்தது. சோவியத்தின் அய்ந்தாண்டுத் திட்டங்கள் பண்டித ஜவஹர்லால் நேருவைக் கவர்ந்ததன் விளைவாக அவை நேருவால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப் பட்டு இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.

அறிவியல் ஆராய்ச்சித் துறையில் சமதர்ம நாடான சோவியத் முன்னணியில் விளங்கியது. 1949இல் முதல் அணுக் கருவியை வெடிக்கச் செய்தது. தொடர்ந்து ஹைட்ரஜன் குண்டு கண்டுபிடிக்கப்பட்டு 1953இல் வெடிக்கச் செய்யப்பட்டது.

உலகின் முதல் செயற்கைக் கோளான ஸ்புட்னிக் 1957இல் சோவியத் நாட்டால்தான் முதன் முதலில் விண்வெளியில் ஏவப்பட்டது. செயற்கைக் கோளைக் குறிக்கும் ரஷிய மொழிச் சொல்லான ஸ்புட்னிக் என்பது இன்றளவும் இங்கிலீஷில் அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மனிதன் பயணித்த விண்வெளிப் பயணம் உலகில் முதன் முதலாக சோவியத் நாட்டால்தான் நடத்தப்பட்டது. பயணம் செய்த முதல் மனிதன் யூரி காகரின். விண்வெளியில் சுற்றி விட்டுத் தரையில் இறங்கிய யூரி காகரினிடம் கேட்கப் பட்ட கேள்வி இதுதான்: பரமண்டலம் போய் வந்த நீங்கள் பரமபிதாவைப் பார்த்தீர்களா? அதற்கு யூரி காகரின் அளித்த பதில்: சுற்றிச் சுற்றிப் பார்த்தும் கர்த்தரைக் காணோம் என்பதுதான்! அந்தளவுக்கு நாத்திக நாடு!

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான சோவியத்தும் அமெரிக்காவும் வலுப்போட்டியில் இறங்கி பனிப் போரில் ஈடுபட்டன. வெளிப்படையான போரில் ஈடுபடாமல் மறைமுகமாக ஒன்றையொன்று எதிர்க்கும் போர் நடந்தது. கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை ஏற்றுச் செயல்படும் உறுதி பெற்ற நாடுகள் சோவியத் கம்யூனிஸ்ட்களின் உதவியால் கிழக்கு அய்ரோப்பா நாடுகளில் ஏற்பட்டன. வார்சா ஒப்பந்தம் இதற்கெல்லாம் வழி கோலியது. சீனா, கியூபா, வடகொரியா போன்ற பல நாடுகளிலும் பொது உடைமை அரசுகள் ஏற்படுத்தப்பட்டன.

சோவியத்துக்கும் அமெரிக்காவுக்குமான பனிப் போர் 1948இல் இருந்து 1953 வரை மிகவும் கடுமையாக இருந்தது. ஜோசப் ஸ்டாலின் 1953இல் மறைந்தார். கடுமை குறைந்தது. ஆனாலும் 1960 வரை அதன் தாக்கம் நீடித்து வந்தது.

--------------தொடரும்...."விடுதலை" 20,21-7-2009

0 comments: