Search This Blog
14.7.09
அர்ச்சகர் உரிமை பெண்களுக்கு தேவையா?
அர்ச்சகர் உரிமை பெண்களுக்கும் தேவையே!
இந்து அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்மீது நேற்று சட்டப்பேரவையில் பேசிய அத்துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஆர். பெரியகருப்பன் அவர்கள் ஒரு முற்போக்கான தகவலைத் தெரிவித்தார். பெண்களுக்கும் அர்ச்சகர் உரிமை பற்றிய கருத்து அதுவாகும். அதுபற்றி கலந்தாய்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற சட்டம் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்டு அது செயல்படுத்தப்படும் ஒரு காலகட்டத்தில் (நீதிமன்ற தடங்கலால் தாமதம் ஆனாலும், விரைவில் செயல் வடிவம் பெறும்) அடுத்தகட்ட உரிமை முழக்கமாக இது வெளிவருவதை யாரும் தடுக்க முடியாது. அது ஒரு இயல்பான பரிணாமச் சிந்தனையேயாகும்.
வழக்கம்போல இந்துத்துவா வாதிகள் பல காரணங்களைக் கொண்டுவந்து குறுக்கே போடுவார்கள். ஆகமங்களைக் காட்டுவார்கள், பெண்கள் உடற்கூறுபற்றி எல்லாம் கதையளப்பார்கள். இவையெல்லாம் எதிர்ப்பார்க்கப்பட வேண்டியவைதானே.
பெண்களுக்கு உடற்கூறு ஒரு வகையிருந்தால், ஆண்களுக்கு இன்னொரு வகையில் இருக்கத்தானே செய்கிறது.
அனைத்து ஜாதி ஆண்களுக்கும் அந்த உரிமை என்ற கோரிக்கைக்கே ஆடாத ஆட்டமெல்லாம் ஆடினார்கள் என்கிறபோது, பெண்களுக்கும் அந்த உரிமை என்றால், பூமிக்கும், விண்ணுக்குமாகத் தாவிக் குதிப்பார்கள்தான். வழக்கம்போல அந்த எதிர்ப்புகளைச் சந்தித்து வெற்றி பெறவேண்டியது மனித உரிமையின் பாற்பட்டதே!
எல்லா மதங்களிலும் இத்தகு இடர்ப்பாடுகள் உண்டு என்றாலும், கிறித்துவ மதத்தில் சில பிரிவுகளில் நடைமுறைக்கு வந்துள்ளன.
நாட்டுக்குத் தாய்நாடு என்றும், மொழிக்குத் தாய்மொழி என்றும், தண்ணீருக்குக் கங்காதேவி என்றும் கூறப்படும் ஒரு நாட்டில், பெண்கள் அர்ச்சகராவதில் என்ன தவறு இருக்க முடியும்?
மேல்மருவத்தூரில் அய்யாவையே அம்மா என்றுதானே அழைக்கிறார்கள். கோயிலுக்குள்ளும் அம்மன் சன்னதி விசேஷமுடையதுதானே!
சக்தி, கல்வி, செல்வம் அனைத்துக்கும் முத்தேவிகள் என்று ஏற்பாடு செய்து வைத்திருக்கும் இந்து மதத்தில், பெண்கள் அர்ச்சகராவதை எப்படி எதிர்க்க முடியும்?
நவராத்திரி பூஜை என்பதும் மூன்று பெண் கடவுள்களுக்குத்தானே.
சிவபெருமான் தலையிலேயே ஒரு பெண்ணும், இடுப்பிலே ஒரு பெண்ணும் இருக்கும்போது, கோயில் கருவறைக்குள் சென்று பெண்கள் பூஜை செய்வது குற்றம் என்று எப்படி கூற முடியும்?
ஆண் கடவுளுக்கு ஆண் அர்ச்சகரும், பெண் கடவுளுக்குப் பெண் அர்ச்சகரும் இருந்துவிட்டுப் போகட்டுமே அதுதான் நாகரிகமும்கூட!
பெண்களுக்கு எத்தகைய உரிமைகள் வேண்டும் என்று தந்தை பெரியாரைக் கேட்டபோது, ஆண்களுக்குரிய அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் கட்டாயம் வந்தாகவேண்டும் என்றார்.
எந்த வகையிலும் ஆண்களுக்கு நிகர் பெண்கள் என்ற நிலை நிலைநாட்டப்படவேண்டும் என்றால், ஆண்களுக்குள்ள அத்தனை வாய்ப்புகளும் கண்டிப்பாகப் பெண்களுக்கு வந்தே தீரவேண்டும்.
தானாக வந்துவிடாது ஆண்களாகப் பார்த்து கொடுக்கவும் மாட்டார்கள். உரிமை என்பது பிச்சை போடுவதல்ல.
நீண்ட காலமாகவே அர்ச்சகர் உரிமை பெண்களுக்கும் தேவை என்ற குரலை கழகம் உயர்த்திக் கூவியதுண்டு. அண்மையில் ஊற்றங்கரையில் நடந்த (11.8.2007) திராவிடர் கழக மகளிர் மாநாட்டில்கூட இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுண்டு.
பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுக்கும் அத்தனை அமைப்புகளும் இப்பிரச்சினையில் ஒன்றிணைந்து போராடவேண்டும். அதற்குத் திராவிடர் கழகம் உறுதுணையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறோம்.
------------------நன்றி:-"விடுதலை"தலையங்கம் 14-7-2009
Labels:
பெரியார்-பெண்ணியம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment