Search This Blog
14.7.09
அறிவாசானின் அறிவாயுதம் - விடுதலை
ஒரு துளி மையினாலே அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க மாபெரும் சமுதாயப் புரட்சியை செய்தவர் முதல்வர் கலைஞர்
தஞ்சை: விடுதலை பவள விழாவில் தமிழர் தலைவர் பாராட்டு
ஒரு சொட்டு மை துளியினாலே அனைத்து ஜாதியினர் அர்ச்சகராக ஒரு மாபெரும் சமுதாயப் புரட்சியை செய்தவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.
தஞ்சையில் 27.6.2009 அன்று நடைபெற்ற விடுதலை பவள விழா பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
அறிவாசானின் அறிவாயுதம்
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும், தஞ்சை திராவிடர் இயக்கத்தின் நஞ்சை என்ற பெருமையை நிலைநாட்டி நமக்கெல்லாம் மானமும், அறிவும் வரும்படியாக தன்னுடைய இறுதி மூச்சு அடங்குகிற வரையிலே 95 ஆம் ஆண்டு வரையிலே களங்களில் நின்று அயராது பாடுபட்ட நம்முடைய அய்யா அவர்களாலே அறிவாயுதமாகத் தமிழ் மக்களுக்கு, திராவிட இனத்தவர்களுக்கு, பகுத்தறிவாளர்களுக்கு மனித நேயர்களுக்கு அறிவியல் விரும்பிகளுக்குத் தந்த அந்த விடுதலை ஏட்டினுடைய பவள விழாவின் தொடக்கம் இந்தத் தஞ்சை மண்ணிலேயிருந்து மிகச் சிறப்பாகத் தொடங்கியிருக்கிறது.
இந்த சிறப்பான நிகழ்ச்சியிலே கலந்து கொண்ட சுயமரியாதை வீரர் கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி.மணி அவர்கள், அது போல மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிறந்த பகுத்தறிவாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்கள், அது போலவே இலக்கியச் செல்வரும் மிகுந்த மரியாதைக்குரிய வருமான தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் எஸ்.என்.எம் உபயதுல்லா ஆகிய அமைச்சர் பெருமக்களே!
நமது இயக்கத்தில் மூத்த செயல்வீரர்களிலே ஒருவரான கழகத்தின் மத்திய செயலவைத் தலைவர் அய்யா ராசகிரி கோ.தங்கராசு அவர்களே! அது போல நமது இயக்கத்தின் பொதுச்செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்களே!
பெரியோர்களே! தாய்மார்களே! உங்கள் எல்லோருக்கும் என் அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விடுதலை துவங்கிய காலத்திலிருந்து தமிழர்களை அடையாளம் காட்டுகின்ற பணியை செய்துகொண்டிருக்கிறது.
பட்டுக்கோட்டை மாமுண்டியார்
மூத்த பெரியவர் சுயமரியாதை வீரர் பட்டுக்கோட்டை வட்டாரத்திலே அவரை மாமுண்டி என்று சொன்னால்தான் தெரிந்து கொள்வார்கள். அப்படிப்பட்ட பட்டுக்கோட்டை இராமாமிர்தம் அவர்கள் 97 வயதை நெருங்கிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் அவர் இங்கே இருக்கிறார். அவர் கடவுள் மறுப்பாளர். பச்சை நாத்திகர் எனவே வாழ்வதற்கும், ஆயுளுக்கும், கடவுளுக்கும் சம்பந்தமில்லை என்று காட்டுவதற்காகவே அவருக்கு விருது. கொள்கைக்காக வாழ்கிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு விருது என்ற பெருமை பெற்ற நம்முடைய ராமாமிர்தம் அவர்கள்.
அது போலவே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களாக இருக்கக் கூடிய, சாக்கோட்டை சகோதரர் அன்பழகன் அவர்கள், பூர்வீகமான சுயமரியாதைக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர் அரசியல் ரீதியாக திராவிட முன்னேற்றக் கழகத்திலே இருந்தாலும், இரட்டைக் குழல் துப்பாக்கியாக இருக்கக் கூடிய இந்த இயக்கங்களிலே இருக்கிறவர் இவர்.
மனிதநேயர் எஸ்.எஸ்.ராஜ்குமார்
அதே போல மனிதநேயர் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கக்கூடிய நம்முடைய பெருமைக்குரிய நாத்திகர், பகுத்தறிவாளர், மனதில் பட்டதை பளிச்சென்று யாருக்காகவும் தயங்காமல் சொல்லக்கூடியவர் அன்புச் சகோதரர் எஸ்.எஸ்.ராஜ்குமார் அவர்கள்.
அது போல சிறந்த ஆற்றலாளர் மருத்துவத்தை தமிழிலே தர முடியும், தமிழிலே நூல்களை எழுத முடியும் என்று காட்டக்கூடிய தமிழ் நாட்டிலே ஒரு தலை சிறந்த வித்தகர் இருக்கிறார் என்றால் அவர்கள்தான் டாக்டர் நரேந்திரன் என்ற பெருமைக்குரியவர், அறுவை சிகிச்சை நிபுணர். அது போலவே எங்கு சென்றாலும் நல்ல நாத்திகராக இருப்பது மட்டுமல்ல, விடுதலையினுடைய பெருமைகளை எடுத்துச் சொல்லி, இயக்க நூல்களை பரப்புவதிலே தனித் தொண்டராகவே அதனை செய்து கொண்டிருக்கக்கூடிய தன்னுடைய குடும்பம் முழுவ-தையும் பச்சை நாத்திகக் குடும்பமாக ஆக்கி, நாங்கள் வாழ்கிறோம். கடவுளை மற! மனிதனை நினை! என்ற தத்துவம் இதோ எப்படி வெற்றிகரமான தத்துவமாக இருக்கிறது என்பதை தன்னுடைய வாழ்க்கையின் மூலமாக எடுத்துக்காட்டக்கூடிய அருமைப் பொறியாளர், தொழில்துறை வல்லுநர் பன்னீர்செல்வம் அவர்கள்.
அது போல நம்முடைய பட்டுக்கோட்டை இளவரி அவர்களுடைய குடும்பத்தைச் சார்ந்த _ அந்த வகையிலே உறவு மிக்க ஓர் இளம் சிங்கம் பல பேர் சிங்கம் என்று பொதுவாகச் சொல்வார்கள்.
பல பேருக்குத் தெரியாத செய்தி. ஆண் சிங்கம் எப்பொழுதுமே சோம்பேறி. பெண் சிங்கம் தான் எப்பொழுதும் வேட்டைக்குச் செல்லுகின்ற வரலாறு. சிங்கத்தைப் பற்றி பல பேருக்குத் தெரிந்தவர்களுக்குத் தான் தெரியும்.
ஆகவே, அந்த வகையிலே ஓர் இளம் வீராங்கனையாக உலகம் முழுவதும் சுற்றி, எளிய குடும்பத்தில் பிறந்து எந்தவிதமான ஒரு பெரிய விளம்பர ஆதரவு அல்லது மிட்டா, மிராசு, மேட்டுக்குடியினர் ஆதரவெல்லாம் இல்லாமல் ஓர் எளிய திராவிடர் இயக்க சுயமரியாதை இயக்கத்திலே பிறந்து இன்றைக்கு வளர்ந்திருக்கின்ற பள்ளத்தூர் ஆதி உதயம் அவர்கள்.
ஆகவே, பட்டுக்கோட்டை, தஞ்சை மாவட்டம் இரண்டு பகுதிகளைச் சார்ந்த நிலையிலே கொண்டாடப்படுகின்ற பவளவிழாவிற்கு சிறப்பாக பெருமை சேர்க்கக் கூடிய வகையிலே விடுதலை பவள விழா விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
பலரும் ஒற்றுமையாகச் செயல்பட்டால் பல புதிய கருத்துகளை எல்லாம் எப்படி உருவாக்கலாம் என் இந்த மின் அணு யுகத்திலே நாம் சிந்திக்கின்றோம்.
மக்கள் விழாவாக
விடுதலை ஏடு ஒரு நாளேடு. அந்த நாளேட்டிற்கு ஒரு பவள விழா என்பது மக்கள் விழாவாக நடத்தப்படுவது என்பது இந்திய துணைக் கண்ட வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாக மக்கள் விழாவாக நடத்தப்படுகிறது.
ஆகவே, தஞ்சை மண் அதை அங்கீகரித்திருக்கிறது. இங்கே பேசிய நம்முடைய மத்திய அமைச்சர் அவர்கள் இந்தத் தொகுதியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் உடனடியாகச் சொன்னார்கள். 200 விடுதலைகள் எங்கே போய்ச் சேர வேண்டுமோ அங்கே சந்தாக்களாகச் சேரும். முடிதிருத்தகங்கள், சலவையகங்கள் இங்கெல்லாம் செல்லுகின்றவர்கள் சொன்னார்கள். ஆம், விடுதலை என்று சொன்னால் முடித்திருத்தகம் என்று சொன்னால் விடுதலை திருத்தியிருக்கின்ற முடிகள் ஏராளம்.
ராஜராஜனுக்கு இல்லாத துணிவு!
பல முடிகள் கோளாறாகப் போன நேரத்தில் எல்லாம் முடியைத் திருத்துகின்ற பணியை விடுதலைதான் தொடர்ந்து அதிலே வெற்றி பெற்றிருக்கிறது. முடி என்று சொல்லும் பொழுது ஆட்சியை நினைத்துப் பார்க்க வேண்டும். எனவே தான் முடியுடைய மூவேந்தர்கள் எல்லாம் இருந்தார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் இல்லாத ஒரு துணிவு ஏன் இந்த ஊரில் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜனுக்கு இல்லாத துணிவு அய்ந்தாவது முறையாக தந்தை பெரியார் அவர்களுடைய ஈரோட்டு குருகுலத்திலே படித்து அதிலே சிறப்பான மாணவராகத் திகழ்ந்து, அய்ந்தாவது முறையாக பொற்கால ஆட்சியைத் தமிழ்நாட்டிலே தந்து கொண்டிருக்கின்ற நம்முடைய கலைஞர் அவர்கள் மிகப் பெரிய சாதனையைச் செய்தார்கள்.
இதே மேடையிலே அன்றைக்குக் கூடச் சொன்னோம். விடுதலையின் பவள விழா வரலாற்றுச் சுவடு என்ற காரணத்தினாலே நினைத்துப் பார்க்கிறோம்.
மன்னன் வெளியே நிற்கிறான்
இங்கே ராஜராஜன் வெளியிலே நின்று கொண்டிருக்கின்றான். இந்தப் பகுதியை ஆண்ட ராஜராஜன் கோயிலை கட்டிய ராஜன் சிலையாக நின்று கொண்டிருக்கின்றான். கோயிலுக்குள்ளே செல்ல முடியவில்லை; வெளியிலே தான் நிறுத்தப்பட்டிருக்கின்றான்.
எப்படி விடுதலை அறிவாயுதமாக நின்று போராடிக் கொண்டிருக்கிறதோ, அது போல ஜாதி ஒழிய வேண்டும் என்று பாடுபட்ட தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளான ஜாதி ஒழிப்பு அதாவது, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க மிகப் பெரிய ஒரு சமூகப் புரட்சியை கலைஞர் அவர்கள் ஒரு சொட்டு மை துளியினாலே செய்திருக்கிறார் நம்முடைய கலைஞர் என்று சொன்னால், அவர் எங்கள் ஈரோட்டு குரு குலத்திலே இந்த பத்திரிகை குடும்பத்திற்கு முதலில் உறவினர்.
குடிஅரசு இதழ் அதற்குப் பின்னாலே வந்தது விடுதலை. அந்த குடிஅரசு இதழிலே கலைஞர் அவர்கள் துணை ஆசிரியராக இருந்தவர். பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் விடுதலையினுடைய பெருமைமிக்க ஆசிரியர். ஒரு பாரம்பரியத்தையே வரிசையாகச் சொன்னார்.
பாரம்பரிய மிக்க பத்திரிகை
விடுதலையின் ஆசிரியர் மறைந்த குத்தூசி குருசாமி அவர்கள் எனக்கு முன்னாலே விடுதலை ஆசிரியர் என்ற பாரம்பரியமான அந்தப் பொறுப்பை ஏற்றவர்கள். அதற்கு முன்னாலே பூவாளூர் பொன்னம்பலனார். அதற்கு முன்னாலே டி.ஏ.வி நாதன், பொன்னம்பலனார் மட்டுமல்ல, பண்டித முத்துசாமிப் பிள்ளை; நீதிக்கட்சிக் காலத்திலே திராவிடன் பத்திரிகை நடத்தியவர்கள் சாமி. சிதம்பரனார். இந்த மாவட்டத்திலே இலக்குவனார் போன்றவர்களுக்கே அவர் ஆசிரியர்.
அப்படிப்பட்ட பெருமை மிக்க பாரம்பரிய மிக்க ஒரு பத்திரிகை அந்த பத்திரிகையிலே என்னைப் போன்ற எளியவர்களுக்கும் வாய்ப்பை அளித்த பெருமை எம்பெருமான் தந்தை பெரியார் அவர்களுக்கு அடிபணிந்து என் நன்றியை காணிக்கையாகக் கொடுக்கிறேன்.
எந்த நம்பிக்கையைத் தந்தை பெரியார் அவர்கள் என் மீது வைத்தார்களோ அந்த நம்பிக்கைக்காக உழைத்துக்கொண்டிருக்கின்றோம்.
இன்னமும் எங்களுடைய உழைப்பு முழு வெற்றியைத் தரவில்லை. அந்த ஆதங்கம் எங்களுக்கு இருக்கிறது. எனவே, அந்த வெற்றியை நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கின்றோம் என்று சொல்லலாமே தவிர, வெற்றியை அடைந்துவிட்டோம் என்று சொல்லமாட்டோம். 47 ஆண்டுகள் தொடர்பு வெற்றியை அடைவது உங்களுடைய பணி. அய்யா அவர்கள் அழைத்துச் சொன்ன நேரத்திலே எல்லாவற்றையுமே கட்டளையாக ஏற்று பழக்கப்பட்ட எனக்கு இந்த அளவிற்கு 47 ஆண்டுகள் விடுதலையோடு தொடர்பு படுத்தி அதனை ஒவ்வொரு கால கட்டத்திலும் கொண்டு வந்திருக்கிறோம் என்றால், அது நம்முடைய தோழர்களுடைய கூட்டு முயற்சி.
இயக்கத் தோழர்கள் ஒத்துழைத்த காரணத்தாலே, இயக்கம் ஒரு குடும்பம் என்கிற காரணத்தினாலே, உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இன உணர்வாளர்கள் தங்களுடைய பேராதரவினைத் தருகிற காரணத்தினாலே தவிர, தனிப்பட்ட எங்களைப் போன்றவர்களுடைய பெரு முயற்சி என்று நான் சொல்ல மாட்டேன். இன்னமும் செல்ல வேண்டிய தூரம் இருக்கிறது.
இந்த நாள் எப்படிப்பட்ட நாள்?
இந்த நாள் மூவலூர் ராமாமிர்தம் அவர்கள் மறைந்த நாள். அதே நேரத்திலே இன்னொரு வரலாற்றுக்குறிப்பு இந்த நாளுக்கு என்னவென்று சொன்னால் தந்தை பெரியார் அவர்களுக்கு யுனெஸ்கோ விருது கொடுத்த நாள் இந்த நாள் தான் என்பதையும் வரலாற்றிலே மறந்து-விடக்கூடாது. எனவே அதிக நேரம் உங்களை காக்க வைக்க விரும்பவில்லை.
-------------------தொடரும் ...."விடுதலை" 14-7-2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment