
ஈழத் தமிழர்கள் இன்று சந்தித்து வரும் துயரங்கள் அனைத்திற்கும் கருணாவே காரணம் என்று அவரின் மனைவி வித்தியாவதி குற்றம் சாற்றியுள்ளார்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கியத் தளபதியாகவும், புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு நம்பிக்கை உள்ளவராகவும் விளங்கிய கருணா என்ற விநாயக மூர்த்தி ஒரு காலகட்டத்தில் புலிகளுக்கு எதிராக குரல் கொடுத்து அந்த அமைப்பில் பிளவை ஏற்படுத்தினார். பின்னர் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் அமைப்பை அழிப்பதற்காக பல்வேறு சதி வேலைகளில் கருணா ஈடுபட்டார். புலிகள் தொடர்பான பல்வேறு ரகசியங்களை அறிந்திருந்த கருணா, இலங்கை அரசிடம் அவைகளை எல்லாம் பகிர்ந்து கொண்டார். அதற்கு விலையாக கருணாவுக்கு இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துறை அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்காட்லாந்தில் உள்ள கருணாவின் மனைவி வித்தியாவதி நேற்று முன் தினம் லண்டன் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :
"தேசிய நல்லிணக்கத்துறை அமைச்சரும் எனது கணவருமான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தமிழின தலைவராக தமது கடமைகளை மறந்து செயல்படுகிறார். 6 ஆயிரம் போராளிகளுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து உயரிய நோக்கத்திற்காக விலகி வந்தோம். எனினும் தற்போது கருணா அவரது சுயநலத்திற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து கொண்டு அமைச்சராக வலம் வருகிறார்.
ஈழத்தில் இன்று தமிழ் மக்கள் சந்திக்கும் அனைத்து வகை துயரங்களுக்கும் கருணாவே பொறுப்பேற்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பிளவடைந்த போது மிகத் தெளிவான ஒரு குறிக்கோளுடன் காணப்பட்டார். ஆனால் தற்போது அதனை மறந்து செயல்படுகிறார். கருணா தனது சுயலாப நோக்கங்களுக்காக அரசாங்கத்தின் கைப்பொம்மையாக செயல்பட்டு வருகிறார். அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவர்தான் கருணாவை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார். தற்போது அவரது பேச்சைத்தான் முக்கிய உத்தரவாக எண்ணிச் செயல்பட்டு வருகிறார். என் கணவர் திருந்துவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குகிறேன். அவ்வாறு திருந்த மறுத்தால் அவரது அனைத்து ஊழல்களையும் மக்களுக்கு அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன்". இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்காட்லாந்தில் 3 குழந்தைகளுடன் வசித்து வரும் அமைச்சர் கருணா என்ற முரளிதரனின் மனைவியான வித்தியாவதி, தமிழீழ விடுதலைப்புலிகளின் பெண்கள் பிரிவில் முக்கிய உறுப்பினராக நிரோ என்ற பெயரில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
--------------------நன்றி:- "விடுதலை" 24-7-2009
0 comments:
Post a Comment