Search This Blog

13.7.09

உலக நாடுகள் தூரப்பார்வை -நேபாளம்-நெதர்லாண்டு-நியூஜிலாந்து-நிகராகுவா-நைஜர்


நேபாளம்

புத்தர் பிறந்த மண் நேபாளம். காத்மண்டு இதன் தலைநகர். காத்மண்டு பள்ளத்தாக்கில்தான் மக்கள் குடியேற்றம் நடந்தது. காரணம் அங்கேதான் வளமாக இருந்ததால் வேளாண்மை சிறக்க வாய்ப்பு இருந்தது.

1200 முதல் 1769 வரை மல்லா அரச வமிசம் ஆண்டு கொண்டிருந்தது. பிரித்வி நாராயண் ஷா எனும் அரசர் காலத்தில் சிதறிக்கிடந்த எல்லாப் பகுதிகளையும் இணைத்து ஒரே நாடாக்கி ஆண்டார். இது நடந்தது 1768 இல். இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷார், இமயமலை நாடான நேபாளத்தின் சுதந்திரத்தை 1923 இல் அங்கீகரித்தது.

1846 முதல் 1951 வரை, ராஜபுத்திர ஜாதியினரான ராணா வமிசத்தினர் பிரதம அமைச்சர்களாக இருந்து நாட்டை ஆண்டு வந்தனர். 1951_இல் நேபாள மன்னர் எல்லா அதிகாரங்களையும் தன் கைக்குள் கொண்டு வந்து தானே அதிபராகவும் ஆட்சித் தலைவராகவும் குடிக்கோனாட்சி முறையில் ஆட்சி புரிந்தார். இம்மன்னர் இந்து மதக் கடவுள்களில் ஒன்றான விஷ்ணுவின் வழித்தோன்றல் என்ற செய்தியைப் பரப்பி, அதன் பாதுகாப்பில் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

2001ஆம் ஆண்டில், மன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளின் விளைவாக இளவரசர் ஒருவர் அரச குடும்பத்தின் அனைத்து உறுப்பினர் களையும் சுட்டுக் கொன்றுவிட்டார். இறந்த மன்னரின் தம்பிகளில் ஒருவர் மன்னராகப் பதவி ஏற்றார். 2002 அக்டோபரில், பிரதமரைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டார் புதியஅரசர். நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படிச் செய்த பிரதமர் மீளவும் தேர்தலை நடத்திட இயலாத நிலையில் இருந்ததாலும் நாட்டில் ஏற்பட்டிருந்த அமைதி இன்மையின் காரணமாகவும் அமைச்சரவை கலைக்கப்பட்டது.

புதிதாக நாடாளுமன்றம் அமைத்திடும் முயற்சிகளுக்குப் பதிலாக, கடைசியாகப் பதவி வகித்த பிரதமரை ஆட்சி அமைக்க அரசர் ஆணையிட்டார்.அவரும் நான்கு கட்சிகளின் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தினார். மாவோயிஸ்ட் களின் போராட்டத்தை அடக்கிட, புதிய அமைச்சரவையினால் முடியாமல் போன நிலையில் ஆட்சியை அரசர் கலைத்துவிட்டார். 2005 பிப்ரவரி மாதத்தில் இதைச் செய்த அரசர், நெருக்கடி நிலையை நாட்டில் அமலாக்-கினார். அரசியல் தலைவர்களைச் சிறையில் அடைத்தார். எல்லா அதிகாரங்களையும் தானே வைத்துக் கொண்டார். ராணுவத்தைப் பக்கத்தில் வைத்துக் கொண்டார்.

மாவோயிஸ்ட்களின் போராட்டம் தீவிரமாகியது. அவர்களை அடக்கும்படி ராணுவத்திற்கு ஆணையிட்டபோது ராணுவத் தளபதியின் ஆணையை ஏற்க படைவீரர்கள் தயங்கி மறுத்தனர். மாவோயிஸ்ட்களும் போர்ப்படை வீரர்களும் பொது மக்களும் இணைந்து கொண்ட நிலையில் ஏற்பட்ட ஜனநாயகப் போராட்டம் வென்றது.

மன்னர் கைதியாக்கப்பட்டார். மக்களாட்சிக் கான சம்-மதத்தை மன்னர் அறிவிக்க வேண்டியதாயிற்று. அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளின் மேற்-பார்வையில் தேர்தல் நடந்தது. மக்களாட்சி நடைபெறுகிறது. அதிபரும் பிரதமரும் நாடாளுமன்ற உறுப்-பினர்களால் தேர்ந்து எடுக்கப் பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட இமயமலைப் பகுதியில் உள்ள நேபாள நாட்டின் பரப்பு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 800 சதுர கி.மீ. ஆகும். இந்நாட்டின் மக்கள் தொகை 2 கோடியே83 லட்சம். இந்துக்கள் 81 விழுக்காடு. பவுத்தர்கள் 11 விழுக்காடு. முசுலிம்கள் 4 விழுக்காடு. இந்து மதச் சார்பான ஒரே நாடாக உலகில் இருந்த நாடு நேபாள நாடு. தற்போது மதச்-சார்பற்ற நாடு.

90 விழுக்காடு மக்கள் பேசும் நேபாளி மொழி ஆட்சி மொழி. மக்களில் 49 விழுக்காடு மட்டுமே கல்வி அறிவு பெற்றவர்கள். 31 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 42 விழுக்காட்டினர் வேலை கிட்டாமல் உள்ளனர். இந்த நாட்டில் 59 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே இருப்புப் பாதை போடப் பட்டுள்ளது.

நெதர்லாண்டு

ஹாலந்து என்றும் அழைக்கப்படும் நெதர்லாண்டு சார்லமாக்ன அரச வமிசத்தின் ஆட்சியின் கீழ் 8, 9 ஆம் நூற்றாண்டுகளில் இருந்தது. அதன் பின்னர் பர்கண்டிப் பேரரசு, ஹாப்ஸ்பர்க் அரச வமிசம் ஆகியவற்றின் கீழ் இருந்த இந்நாடு 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டின் ஆட்சியின் கீழ் வந்தது. 1568 ஆம் ஆண்டில் ஆரஞ்ச்சைச் சேர்ந்த வில்லியம் எனும் அரச குடும்பத்தவரின் தலைமையில் புரட்சி ஒன்று ஏற்பட்டது. 1579இல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி, நெதர்-லாண்டின் வடக்குப் பகுதி மாகாணங்கள் ஒன்றிணைந்து நெதர்லாண்டு அய்க்கிய மாகாணங்கள் என்றாகின. அதன்பிறகு ஸ்பெயின் நாடு நெதர்லாண்டு நாட்டுக்கு விடுதலை அளிப்பதை ஏற்றுக் கொண்டது, 17ஆம் நூற்றாண்டில்.

1602இல் டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி அமைக்கப்-பட்டது. நெதர்லாண்டு நாட்டுக்காரர்களை டச்சுக்காரர்கள் என அழைப்பது உண்டு. இதன் வாயிலாக குடியேற்ற நாடுகளைக் கொண்டிருந்த அய்ரோப்பிய வல்லரசு நாடுகளில் ஒன்றாக நெதர்லாண்டும் அமைந்தது. அய்ரோப்பாவில் நடந்த 30 ஆண்டுப் போர் (என வரலாறு கூறும் போர்) முடிவிற்குப் பின் நெதர்லாண்டு சுதந்திர நாடு என அங்கீகரிக்கப்பட்டது. 1688 இல் ஆரஞ்சு வில்லியம் இளவரசரையும் அவரின் மனைவிமேரி ஸ்டூவர்டையும் இங்கிலாந்தின் அரசராக வில்லியம் மிமிமி என்றும் மேரி மிமி என்றும் பெயர்களில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிட வேண்டும் என்று இங்கிலாந்து பாராளுமன்றம் கேட்டுக் கொண்டது.

1939இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய போது நெதர்லாண்டு நடுநிலை வகித்தது. ஆனாலும் 1940இல் ஜெர்மனி இந்நாட்டின் மீது படையெடுத்தது. டச்சு கிழக்கிந்திய நாட்டை ஜப்பான் கைப்பற்றிக் கொண்டது. ஜெர்மனியின் படையெடுப்பின் விளைவாக டச்சு அரசக் குடும்பம் இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டது.1945 இல் இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஜெர்மனியர்கள் விரட்டப்பட்டனர்.

1949இல் டச்சுக் கிழக்கிந்திய நாடுகள் என அழைக்-கப்பட்ட நாடுகள் விடுதலை அளிக்கப்பட்டு இந்தோனேஷியா என்று அழைக்கப் பட்டன. 1963 இல் டச்சுக்காரர்கள் மீதமாக வைத்துக் கொண்டிருந்த நியூகினியாவையும் இந்தோனேஷியா விடம் ஒப்புக் கொடுத்துவிட்டது.

நாட்டோ அமைப்பை உருவாக்கிய உறுப்பு நாடான நெதர்லாண்டு அய்ரோப்பிய ஒன்றியத்திலும் உறுப்பு நாடாக உள்ளது.

குடிக்கோனாட்சி முறையில் இங்கிலாந்தைப் போல ஆட்சி அமைத்துள்ள நாடு. இதன் பரப்பளவு 41 ஆயிரத்து 526 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை ஒரு கோடியே 65 லட்சம்.

உலகின் மற்ற நாடுகளிலிருந்து ஹாலந்து எனும் நெதர்லாண்டுமாறுபட்ட நாடாகும். எல்லா நாடுகளும் கடல் மட்டத்திற்கு மேலே உயர்ந்து இருக்கும். ஹாலந்து நாடு மட்டும் கடல் மட்டத்திற்குக் கீழ் தாழ்வாக அமைந்துள்ள நாடாகும். கடல் நீர் நிலத்திற்குள் புகுந்து-விடாமல் தடுப்பதற்காக சுவர்கள் அமைக்கப்-பட்டுள்ளன.

ரோமன் கத்தோலிக்கர்கள் 31 விழுக்காடு, புரொடஸ்டன்ட் 21 விழுக்காடு, முசுலிம் 4 விழுக்காடு உள்ளனர். எம்மதத்தையும் சாராதவர்கள் 40 விழுக்காடு உள்ளனர்.

டச்சு மொழியும் ஃபிரிசியன் மொழியும் ஆட்சி மொழிகளாக உள்ளன. மக்களில் 99 விழுக்காடு கல்வி அறிவு பெற்றவர்கள். நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்-டாம். பெரிய துறைமுகம் ரோட்டர்டாம். இந்நாட்டின் பெருநகரான தி ஹேக் இல் அனைத்துலக நாடுகள் நீதிமன்றம் உள்ளது. நாட்டின் தலைவர் மன்னர். ஆட்சியின் தலைவர் பிரதமர்.

இங்கே 7 விழுக்காடு மக்கள் வேலை கிட்டாதோர்

-------------------"விடுதலை" 11-7-2009

****************************************************************************************

நியூஜிலாந்து

புதிய நாடுகளைக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர் அய்ரோப்பியர்கள். அவர்களில் பிரிட்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் குக் எனும் கப்பல் தலைவர் கண்டுபிடித்த நிலப்பகுதி நியூஜிலாந்து என இன்று அழைக்கப்படும் நாடாகும். 1769இல் நாடு கண்டுபிடிக்கப்பட்டது. 1840இல் பிரிட்டனின் குடியேற்ற நாடாக நியூஜிலாந்தை அறிவித்துக் கொண்டது பிரிட்டன்.

நியூஜிலாந்து நாட்டின் ஆதி குடிகளான மாவோரி இன மக்களோடு வைட்டாங்கி எனும் கடலோர நகரில் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டனர் இங்கிலாந்து நாட்டுக்காரர்கள். பிரிட்டிஷ்காரரின் ஆதிக்கத்தையும் ஆட்சியையும் மாவோரி இனமக்கள் ஒப்புக் கொண்டால், நாட்டின் மீது அவர்களுக்குரிய உரிமையை பிரிட்டிஷார் அங்கீகரிப்பார்கள் என்று ஒப்பந்தம். நாடு மாவோரி மக்களுடையது. வந்தேறிகள் நிபந்தனை விதிக்கிறார்கள். அப்படியொரு ஒப்பந்தத்தின் மூலம் இன்னமும் பிரிட்டிஷார் ஆண்டு கொண்டிருக்கின்றனர்.

1893ஆம் ஆண்டில் நியூஜிலாந்து நாட்டில் உலகிலேயே முதல் முதலாகப் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. 1907இல் டொமினியன் தகுதி எனும்தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது. குடிக்கோனாட்சி முறையிலான ஆட்சியில் இங்கிலாந்து அரசி அதிபராக உள்ளார். அவரின் பதிலியாக கவர்னர் ஜெனரல் உள்ளார். நாடாளு மன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் உள்ளார்.

தென் பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்குத் தென்மேற்கே அமைந்துள்ள இரு தீவுகள் கொண்ட நாடு. வட தீவு, தென் தீவு என்று இரு பெரும் தீவுகளாக இருந்தாலும் நாட்டின் தலைநகர் வெல்லிங்டன் வடதீவின் தென்கோடியிலும் நாட்டின் பெரிய துறைமுக நகரான ஆக்லாந்து வடதீவின் மத்தியப் பகுதியிலும் அமைந்துள்ளன.

இரு தீவுகளைத் தவிர, ஆன்டிபோட் தீவுகள், ஆக்லாந்து தீவுகள், பவுன்டி தீவுகள், காம்ப்பெல் தீவு, சாதாம் தீவுகள் மற்றும் செர்மாடெக் தீவுகள் ஆகியவை இந்நாட்டில் அடங்கியவை. இவற்றின் மொத்த பரப்பு 2 லட்சத்து 68 ஆயிரத்து 680 சதுர கி.மீ. மக்கள் தொகை 41 லட்சம் ஆகும்.

கிறித்துவ மதத்தில் உள்ள எல்லா பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் இந்நாட்டில் உண்டு. மதம் இல்லாதவர்கள் 26 விழுக்காட்டினரும் உள்ளனர். எந்த மதம் எனக் குறிப்பிடாதவர்களும் 17 விழுக்காடு உள்ளனர்.

இங்கிலீஷ் மொழியும் மாவோரி மொழியும் ஆட்சி மொழியாகவும், பேச்சு மொழியாகவும் உள்ளன. 99 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள். 4 விழுக்காட்டினர் வேலை கிட்டாதவர்கள் (மாவோரி இனத்தவர்).

நிகராகுவா

ஸ்பெயின் நாட்டினால் அடிமைப்படுத்தப் பட்டுக் குடியேற்ற நாடாக இருந்த மத்திய அமெரிக்க நாடு நிகராகுவா. ஆனாலும் காலனியக் கொடுமை களிலிருந்து முதலில் விழித்துக் கொண்ட தென், மத்திய அமெரிக்கப் பகுதி நாடுகளில் ஒன்றான நிகராகுவா 1821ஆம் ஆண்டிலேயே ஸ்பெயின் நாட்டில் இருந்து விடுதலை பெற்றுவிட்டது.

விடுதலை பெற்ற நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் விடுதலையைப் பேணுபவர்களாக இல்லாத கொடுமை இங்கேயும் நிகழ்ந்து, 1936 முதல் சர்வாதிகாரி கொமாகோ வமிசம் ஆண்டது. அந்த ஆட்சி 1979 வரை நீண்டது. அதன் பின்னர் சாந்தினிஸ்-டாவினர் அதிகாரத்திற்கு வந்தனர். அவர்களுக்கு எதிரா-கக் கலவரம் செய்யுமாறு அமெரிக்கா கான்ட்ரா இனத்தவரைத் தூண்டி விட்டு ஆதரவு தந்து வந்தது.

உலக நாடுகள் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தன. அமெரிக்கா அடங்கியது.

கரிபியன் கடலும் வட பசிபிக் பெருங்கடலும் இரு பக்க எல்லைகளாகவும், ஹோண்டுராஸ் நாடும் கோஸ்டாரிகா நாடும் அண்டை நாடுகளாகவும் கொண்டு மத்திய அமெரிக்கப் பகுதியில் உள்ள இந்நாட்டின் பரப்பளவு ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 494 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை 56 லட்சம்.

ரோமன் கத்தோலிக்க மதத்தினர் 73 விழுக்காடு. இவாங்கலிகல் பிரிவு கிறித்துவத்தினர் 15 விழுக்காடு உள்ளனர். மதம் அற்றவர்கள் 9 விழுக்காடு உள்ளனர்.

ஸ்பானிஷ் மொழி ஆட்சி மொழியாகவும் பேச்சு மொழியாகவும் உள்ளது. பழங்குடியினரின் மொழியும் பேசப்படுகிறது. 15-.9.-1821இல் குடியரசு நாளைக் கொண்டாடும் இந்நாட்டின் அதிபராகவும் ஆட்சித் தலைவ-ராகவும் குடியரசுத் தலைவர் உள்ளார்.

மக்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்-கள் பாதி அளவு உள்ளனர். 7 விழுக்காட்டினர் வேலை கிட்டாதவர்கள்.

நைஜர் (Niger)

ஆப்ரிக்க கண்டத்தில் பிரான்சு நாட்டின் குடியேற்ற நாடான நைஜர் முன்பு பிரெஞ்ச் மேற்கு ஆப்ரிக்கா என அழைக்கப்பட்ட நாட்டின் பகுதியாகும். 1958இல் தன்னாட்சி பெற்ற பிரெஞ்ச் நாடாக அறிவிக்கப்பட்டது. 1960இல் முழு விடுதலை பெற்ற நாடாகியது. நாள் 3.-8.-1960.

அல்ஜீரியாவுக்கு தென்கிழக்கே மத்திய ஆப்ரிக்காவில் அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பு 12 லட்சத்து 67 ஆயிரம் சதுர கி.மீ. மக்கள் தொகை 1 கோடி 2 லட்சம் ஆகும். முசுலிம்கள் 80 விழுக்க-டும் மீதிப்பேர் பழங்குடியினப் பழக்கங்களைக் கொண்டும் உள்ளனர். பிரெஞ்ச் மொழி ஆட்சி மொழி. ஆப்ரிக்க மொழிகளான ஹவுகா, ஜெர்மா ஆகியவை பேசப் படுகின்றன.

மக்களில் 17 விழுக்காட்டினர் மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். நாட்டின் அதிபராகவும் ஆட்சித் தலைவராகவும் குடியரசுத் தலைவர் உள்ளார். 63 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளனர்.

நாட்டின் பெரும்பகுதி பாலைநிலம். இருப்புப் பாதையே கிடையாது.

--------------"விடுதலை" 12-7-2009

0 comments: