Search This Blog

23.7.09

மீண்டும் ர(த்)த யாத்திரையா?




ரத யாத்திரை புகழ் எல்.கே. அத்வானி மீண்டும் ரத யாத்திரை செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மாபெரும் தோல்வியைச் சந்தித்த பா.ஜ.க.வுக்கு எப்படியாவது தான் உயிரோடு இருப்பதாகக் காட்டிக் கொள்ளவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ராஜ்நாத்சிங்குக்குப் பிறகு பா.ஜ.க.வுக்கு யார் தலைவர் என்பதிலே உள்நாட்டுக் குழப்பம் உச்சக்கட்டத்தில் உள்ளது. ஜஸ்வந்த்சிங், யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி போன்ற முன்னணியினர் அத்வானி, ராஜ்நாத்சிங் வகையறாக்களுக்கு வெளிப்படையான எதிரிகளாக களத்தில் இறங்கியுள்ளனர்.

பொதுமக்களோ பா.ஜ.க.வை ஒரு மதவாதக் கட்சியாகத்தான் பார்க்கின்றனர். ஆட்சியில் மீண்டும் அதனை அமர வைக்கக் கூடாது என்பதிலே உறுதியாக இருக்கின்றனர். ஏற்கெனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்த மாநிலங்களில் கடும் சிதைவு ஏற்பட்டுவிட்டது.

இந்த நிலையில், கட்சிக்குள் நிலவும் குடுமிபிடிச் சண்டையிலிருந்தும், தேர்தல் தோல்வி காரணமாக பா.ஜ.க. அடைந்திருக்கும் வீழ்ச்சியிலிருந்தும் திசை திருப்பிட எதைத் தின்றால் பித்தம் தெளியும்? என்ற பதைபதைப்பில், துருப்பிடித்த ஆயுதமான அந்தப் பழைய ரத யாத்திரையை மீண்டும் நடத்திட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1991 செப்டம்பரில் 25 இல் சோம்நாத்தில் அத்வானி ஒரு ரத யாத்திரையை மேற்கொண்டார். பத்தாயிரம் கிலோ மீட்டர் பயணம் அப்போது மேற்கொள்ளப்பட்டது. வழிநெடுக பல்வேறு பரிசுகளை அத்வானிக்கு வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அம்புகள், வில்கள், திரிசூலங்கள், கத்திகள், வாள்கள் என்று வன்முறைக் குறியீடுகளான இந்த ஆயுதங்கள்தான் அத்வானியிடத்திலே வழங்கப்பட்டன.

ஜோத்பூரில் 101 பஜ்ரங்தள் என்ற குரங்குப் பட்டா-ளத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் ரத்தத்தை ஒரு குடத்தில் பிடித்து, விகாஷ் புருஷ் (இரும்பு மனிதர் என்று பொருளாம்) அத்வானியிடம் கொடுத்து, தங்களின் இந்துத்துவா காட்டுவிலங்காண்டி உணர்வைக் கூர்தீட்டி வெளிப்படுத்திக் கொண்டனர்.

செப்டம்பர் தொடங்கி நவம்பர் 20 ஆம் தேதிக்கும் இடையில் அத்வானியால் நடத்தப்பட்ட ர(த்)த யாத்திரையில் பல இடங்களிலும் கலவரங்கள் நடந்தன; உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆந்திரப் பிரதேசத்தில் 27, அசாமில் 7, பிகாரில் 19, புதுடில்லியில் 8, குஜராத்தில் 99, கருநாடகாவில் 88, கேரளாவில் 3, மத்தியப் பிரதேசத்தில் 21, மராட்டியத்தில் 4, ராஜஸ்தானில் 52, உத்தரப்பிரதேசம் 224, மேற்கு வங்கம் 6 என்று மனித உயிர்கள் பறிக்கப்பட்டன.

ரத யாத்திரையைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிக்கப்பட்டது (1992 டிசம்பர் 6) அந்தக் காலத்தில் நாடெங்கும் இரண்டாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

மும்பையிலோ பெரும் கலவரம் மூண்டு அங்கு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 900; அதில் சிறுபான்மையினரான முசுலிம்கள் 575 பேர்கள். கிறித்துவர்கள் 275 பேர்கள். இதில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 356 பேர்கள்.

மும்பைக் கலவரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டு விட்டனர். அந்தக் கலவரத்துக்கு மூல ஊற்றான பாபர் மசூதியை இடித்தவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

மும்பைக் கலவரம் குறித்து நீதிபதி சிறீ கிருஷ்ணா தந்த அறிக்கையின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

சங் பரிவார்க் கும்பல் வன்முறை ஊற்றுக் கண்ணிலேயே பிறந்து, வளர்ந்து வரும் ஒரு பாசிச அமைப்பாகும். அதன் அரசியல் முகம்தான் பா.ஜ.க. அது தலையெடுத்த பிறகுதான் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் பிறப்பெடுக்க ஆரம்பித்தன.

இந்நிலையில், அத்வானி மீண்டும் ரத யாத்திரை என்பது ஓர் ஆபத்தான அறிவிப்பாகும்.
மதக் கலவரம் ஏற்படுத்தி, இந்து வாக்குகளைத் தன்வசம் ஈர்க்கும் சதி இதன் பின்னணியில் இருக்கிறது என்பதை மத்திய அரசு கணிக்கத் தவறிடக்கூடாது.

-----------------------"விடுதலை" தலையங்கம் 22-7-2009

0 comments: