
பிழைப்பு
கடவுள் ஒருவர் தான் உருவமற்றவர் (அரூபி) எங்கும் நிறைந்தவர்; சர்வசக்தி வாய்ந்தவர்; அன்பே உருவானவர் என்றெல்லாம் கூறுவதில் மட்டும் குறைச்சல் இல்லை.
ஆனால், நடப்பில் காண்பது என்ன? மக்கள் தொகையைவிட கடவுள்கள் எண்ணிக்கைப் பெருக்கம்; ஒவ்வொரு கடவுளுக்கும் மனைவி, கூத்திகள், பிள்ளைகள் என்று மனித சமூகத்தின் பிரதிபலிப்பைத்தானே மதக் கடவுள் விவகாரங்களில் காண முடிகிறது.
கடவுள் அரூபி என்று கூறி அதோடு நிறுத்திவிட்டால், மத வியாபாரிகளுக்குப் பிழைப்பு என்னாவது? கோயில், குளம், பூஜை, பண்டிகை, விரதம், பரிகாரம், இத்தியாதி... இத்தியாதிப் பட்டியல்கள் இருந்தால்தானே அவாளின் வயிற்றுப் பிழைப்பு ஆண்டு முழுவதும் நடக்கும்.
ஆண்களை அசத்த சில நிரல்கள் என்றால், பெண்களை பித்துப் பிடிக்க வைக்க வேறொரு பட்டியல் சிவராத்திரி, நவராத்திரி என்று போட்டா போட்டி.
நாளை வரலட்சுமி விரதமாம். இந்த நாளில் பெண்கள் வரம் இருந்தால் தீராத நோய்கள் எல்லாம் தீருமாம்; உண்மையில் பக்தர்கள் இதனை நம்புகிறார்களா? பத்திரிகைகளில் பத்திப் பத்தியாகச் செய்தி வெளியிடுபவர்கள்தான் நம்புகிறார்களா?
வீணாக மருத்துவமனைக்குச் செல்லாதீர்கள். பொழுதும், பொருளும் வீணாகும். வரலட்சுமி விரதம் நடக்கட்டும். நோய்கள் நொடிப்பொழுதில் ஓடிவிடும் என்று அடித்துக் கூற ஜீயர்கள் தயாரா?
வரலட்சுமி விரதம் இருந்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் கல்யாணம் நடக்குமாம். நாட்டில் இலட்சாதி லட்சம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளாத நிலை இருக்கிறது. அரசே பல சலுகைகளை அளிக்கிறது; கூட்டுத் திருமணங்களை நடத்துகிறது இவை எல்லாம் வீண் வேலைகள். விரதம் ஒன்றால் கைகூடும் என்று கண்டிப்பாக உத்தரவாதம் கொடுக்கத் தயாரா? கடவுள் என்ன கல்யாண புரோக்கரா?
சரி, இன்னொன்று; தலையெழுத்துப்படிதானே நடக்கும்? அப்படியிருக்கும்பொழுது விரதம் இருந்தால் அந்தத் தலையெழுத்து எப்படி மாறும்?
விதி பெரிதா? விரதம் பெரிதா? இல்லை, இல்லை விதியை மாற்றத்தான் விரதங்கள், பூஜைகள், பரிகாரங்கள் என்பது, வியாபார ரீதியாக மக்களின் பணத்தைக் களவாடும் ஒருவகையான திட்டமிட்ட ஏற்பாடுதானே!
வரலட்சுமி விரதத்தில் இதை இதையெல்லாம் வைத்துப் படைக்கவேண்டும்; கோயிலுக்குச் செல்லவேண்டும், சிலவற்றைக் கொட்டி அழவேண்டும் என்பது எல்லாம் புரோகிதன் தொப்பையை நிரப்பத்தானே?
உள்ளமே கோயில், உண்மையே நெய்வேத்தியம் என்பதெல்லாம் பகட்டுப் பேச்சுத்தானா?
பிழைப்பு ஸ்தாபனமே கோயிலும், குளங்களும், பரிகாரப் பூஜைகளும் என்பதில் இன்னுமா சந்தேகம்?
------------------மயிலாடன் அவர்கள் 30-7-2009 "விடுதலை"யில் எழுதிய கட்டுரை
0 comments:
Post a Comment