Search This Blog
15.7.09
உலக நாடுகள் தூரப்பார்வை -பளாவ்-பனாமா-பாப்புவா நியூ கினியா
பளாவ் (PALAU)
பொது ஆண்டுக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே பளாவ் பகுதிக்கு மனிதர்கள் வந்து குடியேறத் தொடங்கினர் எனும் கருத்து உண்டு. 1543இல் ஸ்பெயின் நாட்டு ரூ லோபஸ்டி வில்லாலோபோஸ் என்பவர் இத்தீவுகளுக்கு வந்தார். அது தொடங்கி 300 ஆண்டுகளுக்கு 1899 முடிய இத்தீவுக் கூட்டம் ஸ்பெயின் நாட்டின் ஆளுகையில் இருந்தது. முதல் உலகப் போரின்போது ஜப்பான் நாடு இத் தீவுகளைக் கைப்பற்றிக் கொண்டது.
இரண்டாம் உலகப் போரில் இத் தீவுகள் ஜப்பான் நாட்டுக்கு முக்கிய களமாக இருந்தன. போரின் முடிவில் தீவுகள் அமெரிக்காவின் ஆதிக்கத்தில் போயின. 1992 இல் பளாவ் தீவுகள் அமெரிக்காவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டதன் அடிப்படையில் பளாவ் நாட்டுக்கு அமெரிக்கா பொருளாதார உதவி செய்திடவும் பதிலுக்கு அத் தீவுகளில் அமெரிக்க ராணுவ தளங்கள் அமைத்துக் கொள்ளவும் ஏற்பாடாகியது. 1994இல் பளாவ் தீவுகள் சுதந்திர நாடானது. 1-.10.-1994இல் விடுதலை நாள்.
வடபசிபிக் பெருங்கடலில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குத் தென்கிழக்கே அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பளவு 458 சதுர கி.மீ. மக்கள் தொகை 21 ஆயிரம். சுமார் 66 விழுக்காடு கிறித்துவர்களும் மீதிப் பேர் பழங்குடியின நம்பிக்கைகளும் கொண்டுள்ளனர். அதுவே ஆட்சிமொழி. 92 விழுக்காடு மக்கள் படிப்பறிவு பெற்றவர். நாட்டின் அதிபரே ஆட்சியின் தலைவர். நாட்டில் இருப்புப் பாதை கிடையாது. 61 கி.மீ. தூரத்திற்கு மட்டுமே சாலை வசதி உண்டு.
பனாமா
உலகின் பூர்வகுடிகள் வாழ்ந்த பனாமா பகுதியில் 1500ஆம் ஆண்டுகளில் ஸ்பெயின் நாட்டினர் வரத் தொடங்கினர். பனாமா நாடு ஸ்பெயின் வசமானது. இருப்பினும் 1821ஆம் ஆண்டில், ஸ்பெயின் நாட்டில் இருந்து விடுதலை அடைந்துவிட்டதாக பனாமா அறிவித்தது. பிறகு பெரு கொலம்பியா நாட்டுடன் கூட்டர-சாக ஆனது. 1903இல் கொலம்பியாவிலிருந்து பிரிந்தது. இதற்கு அமெரிக்கா தூண்டுகோல். பனாமா கால்வாய்ப் பகுதியை அமெரிக்காவுக்கு பனாமா விட்டுக் கொடுத்தது.
1968இல் பனாமா நாட்டின் செல்வாக்கு மிக்க தலைவரான தளபதி மானுவல் நொரீகா மீது போதைப் பொருள் வழக்கு போடப்பட்டு அமெரிக்க நீதிமன்றம் குற்றம் சாற்றியது. 1989இல் பனாமா நாடாளுமன்றம் அவரை ஆகப் பெரும் தலைவர் என வருணித்தது. அந்நிலையில், அமெரிக்காவுடனான போரை நொரீகா அறிவித்தார். ஆனால் அவ்வாண்டு டிசம்பர் மாதத்தில் பனாமா நாட்டின் தலைநகரை அமெரிக்கா கைப்பற்றியது. அடுத்த மாதத்தில் நொரீகா சரண் அடைந்தார்.
மத்திய அமெரிக்காவின் கொலம்பியாவுக்கும், கோஸ்டா ரீகாவுக்கும் இடைப்பட்ட பனாமா நாட்டின் பரப்பு 78 ஆயிரத்து 200 சதுர கி.மீ. மக்கள் தொகை 32 லட்சம். 85 விழுக்காட்டினர் கத்தோலிக்கக் கிறித்துவர்கள். மீதிப்பேர் புரொடஸ்டன்ட் மதத்தினர். 93 விழுக்காடு பேர் படிப்பறிவு உள்ளவர். ஸ்பானிஷ் மொழிதான் ஆட்சி மொழி. 14 விழுக்காடு மக்கள் இங்கிலீசு பேசுகின்றனர்.
28.-11.-1821இல் விடுதலை நாள் கொண்டாடும் இந் நாட்டின் அதிபராகவும் ஆட்சித் தலைவராகவும் குடியரசுத் தலைவர் இருக்கிறார். 37 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 9 விழுக்காட்டினருக்கு வேலை கிட்டவில்லை.
பாப்புவா நியூ கினியா
பிரிட்டிஷ் நியூகினியா எனப்பட்ட நாடு 1906 இல் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்து அதன் பகுதியான ஆஸ்திரேலியா நாட்டின் கட்டுப்பாட்டுக்கு மாற்றப் பட்டது. அதன் பிறகு, பிரிட்டிஷ் நியூகினியா எனும் பெயர் மாற்றப்பட்டது. 1945 இல் உலக நாடுகளின் பொறுப்பில் இந்நாடு ஏற்கப்பட்டு ஆஸ்திரேலியா வினால் நிருவாகம் செய்யப்பட்டது. பல்வேறு பிரதேசங்களும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு பாப்புவா நியூகினியா என்றழைக்கப்பட்டது.
1951இல் பகுதித் தன்னாட்சி வழங்கப்பட்டது. உள்நாட்டு விவகாரங்களில் தன்னிச்சையாகச் செயல் பட 1960இல் அனுமதிக்கப்பட்டது. 1975இல் முழு விடுதலை அளிக்கப்பட்டது. நாள் 16.-9.-1975. இங்கிலாந்தின் அரசியே நாட்டுத் தலைவர். அவர் சார்பாக கவர்னர் ஜெனரல் ஆள்கிறார். குடிக் கோனாட்சி முறையில் பிரதமர் உண்டு.
இந்தோனேஷியாவுக்கும் கிழக்கே அமைந்துள்ள இந்நாட்டின் பரப்பு 4 லட்சத்து 62 ஆயிரத்து 840 சதுர கி.மீ. ஆகும். மக்கள் தொகை 57 லட்சம். கிறித்துவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களாக 66 விழுக்காட்-டினர் உள்ளனர். மீதிப் பேர் பழங்குடியின நம்பிக்கைகள் கொண்டோர். சுமார் 780 மொழிகளை மக்கள் பேசுகின்ற-னர். 66 விழுக்காடு மட்டுமே படிப்பறிவு பெற்றவர்கள். 37 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். நாட்டில் இருப்புப் பாதை கிடையாது.
--------------நன்றி:-"விடுதலை" 15-7-2009
Labels:
உலக நாடுகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment