Search This Blog

27.7.09

உலக நாடுகள் -தூரப்பார்வை -செர்பியா


செர்பியா

அய்ரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில், மாசிடோனியாவுக்கும் ஹங்கேரிக்கும் இடையில் அமைந்துள்ள செர்பியாவில் மன்னராட்சி 1918இல் தான் ஏற்பட்டது. செர்பியர்கள், குரோட்கள், ஸ்லோவின்கள் என மூன்று இனத்தவரும் சேர்ந்த நாடு. 1929இல் நாட்டின் பெயர் யூகோஸ்லேவியா என மாற்றம் பெற்றது.

1941இல் நாட்டின் மீது ஜெர்மனி படையெடுத்தது. நாட்டில் இருந்த பகுதி ராணுவப் படையினர் தாக்குதலை எதிர்த்தனர். இந்தப் பகுதி ராணுவப் படையினர் அதுகாறும் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு இருந்தவர்கள். அந்நியப் படையெடுப்பு ஏற்பட்டவுடன், தங்களுடனே சண்டை போட்டுக் கொண்டே படையெடுப்பையும் எதிர்த்தனர். 1945இல் ஜெர்மனி தோற்கடிக்கப்பட்ட நிலையில் யுகேஸ்லேவியாவின் முழு கட்டுப்-பாட்டையும் ஜோசப் டிட்டோ கைப்பற்றினார்.

டிட்டோ ஒரு கம்யூனிஸ்ட். அவரது ஆட்சியும், 1980க்குப் பிறகு அவர் மறைந்த பிறகு தொடர்ந்த அவரது கட்சி ஆட்சியும் வார்ஸா ஒப்பந்த நாடுகள் எனப்படும் கம்யூனிச நாடுகளுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையில் சுமுகமான முறையில் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது. அணி சேரா நாடுகள் என்ற வகையில் இந்தியாவின் நேரு, எகிப்தின் நாசர், யுகோஸ்லேவியாவின் மார்ஷல் டிட்டோ ஆகியோர் உருவாக்கிய கொள்கை, இரண்டு பெரும் வல்லரசுகளான அமெரிக்கா, சோவியத் இடையே நடுவுநிலை வகித்து வந்தன. 45 ஆண்டுகள் இப்படி சீராக ஆட்சி நடந்தது.

1990இல் சோவியத் கலகலத்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக இனக்குழு உணர்வும் விடுதலை உணர்வும் மக்களிடையே எழுந்தன. விளை-வாக, ஸ்லோவேனியா, குரோஷியா, மாசிடோனியா, போஸ்னியா ஆகிய தனித்தனி நாடுகள் 1992இல் உருவாகின. செர்பியாவும் மாண்டெ நெக்ரோவும் புதிய நாடாக யுகோஸ்லேவியக் குடியரசுக் கூட்டாட்சி என்ற பெயரில் ஏப்ரல் 1991இல் ஆனது. அந்நாட்டின் அதிபர், அண்டை நாடுகளில் உள்ள செர்ப் இன மக்களை ஒன்று திரட்டி அகண்ட செர்பியாவை அமைத்திடும் முயற்சிகளில் ஈடுபட்டார். இதன் காரணமாக உலக நாடுகள் மன்றத்தில் இருந்து அந்நாடு 1992இல் நீக்கப்-பட்டது.

1998இல் இந்நாட்டுப் படைகளுக்கும் கொசோவோ நாட்டில் உள்ள அல்பேனிய இனத்தவர்க்கும் நடை-பெற்ற மோதல் போர் உலக நாடுகளின் எதிர்ப்பைப் பெற்றது.

நாட்டோ அமைப்பு யுயோஸ்லேவியத் தலைநகரான பெல்கிரேடில் குண்டு வீசித் தாக்கியது. கொசோவோ நாட்டில் உலக நாடுகளின் போர்ப் படைகள் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டன.

2001இல் வோஜிஸ்லாவ் கோஸ்டுனிகா என்பவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், உலக நாடுகள் மன்றத்தில் மீண்டும் யுகோஸ்லேவியக் குடியரசுக் கூட்டாட்சி நாடு சேர்த்துக் கொள்ளப்பட்டது. கொசோவோ பகுதி உலக நாடுகள் மன்றத்தால் நிருவகிக்கப்பட்டது. அப்பகுதியின் எதிர் காலம் பற்றிய முடிவு வருங்காலங்களில் எடுக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

2002இல் இந்நாடுகள் தங்களுக்குள் பேசிச் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, செர்பியா, மாண்டெநெக்ரோ என்கிற இரண்டு குடியரசுகளாக இயங்குவது என்றும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பொது வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்து கொள்வது என்றும் முடிவாயிற்று. அதன்படி 2006இல் நடைபெற்ற வாக்கெடுப்பில் மான்டநெக்ரோ தனித்த நாடாகப் பிரிவது என்ற முடிவுக்கு ஜூன் 5ஆம் தேதி வாக்களித்தது. ஜுன் 5ஆம் தேதி செர்பியாவும் மான்டநெக்ராவும் இணைந்த கூட்டரசுக்கு செர்பியா எனப் பெயரிடப்பட்டது.

செர்பிய நாட்டின் பரப்பு 88 ஆயிரத்து 361 சதுர கி.மீ. மக்கள் தொகை 94 லட்சம். செர்பிய பழமை வாதக் கிறித்துவம், ரோமன் கத்தோலிகம், புரொடஸ்டன்ட் கிறித்துவம், இசுலாம் ஆகிய மதப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள். 97 விழுக்காடு படிப்பறிவு பெற்ற மக்கள்.

5.-6.-2006இல் விடுதலை நாளைக் கொண்டாடும் இக்குடியரசில் குடியரசுத் தலைவரும், பிரதமரும் உள்ளனர். மக்களில் 30 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 32 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர்.

--------------------"விடுதலை" 27-7-2009

0 comments: