Search This Blog

27.7.09

கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால்...


பிறருக்காக, சமுதாயத்திற்காக எவர் தொண்டாற்றுகிறாரோ அவர்தான் உண்மையானமனிதர்! புதுச்சேரியில் தமிழர் தலைவர் விளக்கவுரை

பிறருக்காக, சமுதாயத்திற்காக எவர் தொண்டாற்றுகிறாரோ அவர்தான் உண்மையான மனிதன் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்கமளித்தார்.

புதுச்சேரியில் 7.7.2009 அன்று நடைபெற்ற காஸ்மாஸ் ரோட்டரி சங்க நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் தொடர்ச்சி

என்னை நீங்கள் அறிமுகப்படுத்தும் பொழுது தந்தை பெரியார் அவர்களுடைய தொண்டன் என்று சொன்னீர்கள். அதுதான் உண்மை. தந்தை பெரியார் அவர்களுடைய இயக்கம் ஓர் அரசியல் கட்சி அல்ல.

மாறாக அது ஒரு சமுதாயப் புரட்சி இயக்கம். சமுதாயத்திலே மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற கொள்கை உறுதி கொண்ட இயக்கம் இந்த இயக்கம்.

நான் பல ரோட்டரி சங்க நிகழ்ச்சிகளிலே பேசியிருக்கின்றேன். இது அய்ந்தாவது, ஆறாவது அல்லது ஏழாவது அமைப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அந்த வகையிலே இந்த வாய்ப்பைக் கொடுத்தமைக்காக நன்றி செலுத்துகின்ற அதே வேளையிலே திராவிடர் கழகத்திற்கும், இந்த ரோட்டரி அமைப்புக்கும் ரொம்ப நெருக்கமுண்டு.

இதன் கொள்கை என்ன?

நாங்கள் நேரடியாக உங்களிடத்திலே உறுப்பினர்கள் இல்லையென்றாலும், நீங்கள் எங்களுடைய அமைப்பிலே உறுப்பினராக இல்லை என்று சொன்னாலும், சிவ.வீரமணி போன்றவர்கள் இணைப்புப் பாலமாக இருக்கிறார் என்பது உண்மையாக இருந்தாலும், உலகம் முழுவதும் இந்த ரோட்டரி அமைப்பைப் பார்க்கும்பொழுது, இந்த ரோட்டரியினுடைய தனிச்சிறப்பு என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், நான்கு தேர்வு அமைப்புகளை நீங்கள் வைத்திருக்கின்றீர்கள்.

ரொட்டேரியனாக வரவேண்டும் என்று எண்ணுகின்றபொழுது, இதனுடைய கொள்கைகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதிலே மிக முக்கியமானதென்ன?

நாம் எதைப்பற்றி எண்ணினாலும், எதைப் பற்றி பேசினாலும், எதைச் செய்தாலும், எண்ணுதல், பேசுதல் ஆக இந்த நிலையிலே இருக்கின்ற பொழுது, அதற்கு எதை அளவுகோலாகக் கொள்ள வேண்டும்? மிக ஆழமான சிந்தனை தேவை.

பாண்டிச்சேரியிலே இருக்கின்ற காஸ்மாசும், இதைத்தான் சொல்லும். சிகாகோவிலே எங்கோ ஒரு மூலையிலே இருக்கின்ற இன்னொரு அமைப்பும் இதைத்தான் சொல்லும்.

உண்மையானதா?

இதில் முதல் அளவு கோலென்ன? இது உண்மையானதுதானா? இரண்டாவது நாம் சிந்திப்பதற்கு பேசுவதற்கு என்ன அளவுகோல்? எல்லோருக்கும் அது ஏற்புடையதா? அது நியாயமானதுதானா? என்று பார்க்க வேண்டும்.

தமிழிலே மொழிபெயர்த்திருக்கின்றார்கள். இது உண்மைதானா? இரண்டாவது தொடர்புடைய எல்லோருக்கும் நியாயமானதா? மூன்றாவது இந்த சிந்தனை இந்த செயலாக்கம் என்ன செய்யும்? நல்லெண்ணமும், சிறந்த நட்புறவும் விளையச் செய்யுமா? இதை நாம் யோசிக்க வேண்டும்.

தொடர்புடைய எல்லோருக்கும் இதனாலே பயன் கிடைக்குமா? பயன் விளையுமா? இந்த நான்கும் தான் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கக் கொள்கையின் அடிப்படை என்பதை இந்த நேரத்திலே மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஒருவருக்கு ஒரு நீதி


ஏனென்றால் எல்லா மக்களுக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். கிடைக்கும் பொழுது அது உடன்பாடானதாக இருக்க வேண்டும். நியாயமானதாக இருக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு நீதி இன்னொருவருக்கு இன்னொரு நீதி என்பது ஜாதி அடிப்படையிலே, மத அடிப்படையிலே, கட்சி அடைப்படையிலே அல்லது வேறுபாடுகள் அடிப்படையிலே இருக்கக்கூடாது.

மனித குலத்தின் சமூகநீதி என்று சொல்லுவது நியாயமாக எல்லோருக்கும் இந்த அடிப்படையிலே இருக்க வேண்டும். எனவே, உண்மையானதுதானா? இந்த உண்மையைச் சொல்லும்பொழுதுதான் சங்கடம். பொய் சொல்லும் பொழுது முரண்பாடுவரும். உண்மையைச் சொல்லும் பொழுது முரண்பாடே வராது.

பொய்சொல்லும் பொழுது கற்பனையும் சேர்ந்து

ஏனென்றால் பொய் சொல்லும் பொழுது, கற்பனையாகச் சொல்லும்பொழுது ஒரே மாதிரியாகச் சொல்ல முடியாது. ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு வகையாகச் சொல்ல வேண்டியிருக்கும்.

ஆனால், நம்முடைய நாட்டிலே உண்மையைப் பேச, சிறிய வயதிலிருந்தே நாம் சொல்லிக் கொடுக்கின்றோம். வேறு இடங்களில் உண்மை பரவவேண்டுமோ இல்லையோ என்பது அது வேறு. ஆனால் நீதிமன்றங்களை எடுத்துக்கொண்டால் என்ன நிலை? நீதிமன்றத்திலே வழக்கு

நீதிமன்றத்திலே ஒரு கொலை வழக்கு நடைபெறுகின்றது. அந்தக் கொலை வழக்கு நடைபெறும் பொழுது அதிலே சாட்சியங்களை கூண்டிலே ஏற்றுகிறபொழுது இரண்டு வகையான சாட்சியங்கள் வருவார்கள். உங்களுக்குத் தெரியும். ஒன்று, வழக்கை பதிவு செய்த போலிஸ் தரப்பு சாட்சியங்கள். மற்றொன்று, அதை மறுக்கக் கூடிய சாட்சியங்கள். இந்த இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஏறுவார்கள்.

நமது நீதிமன்றங்களில் பைபிள் மீது சத்தியம் செய்து சொல்லுவர்கள். இன்னும் சில பேர் குரான் மீது சத்தியம் செய்பவர்கள் இருப்பார்கள். இன்னும் சில பேர் கீதை மீது சத்தியம் சொல்கிறவர்கள் இருப்பார்கள்.

அல்லது எங்களைப் போன்றவர்கள் நீதிமன்றத்திற்குப் போனால் இவைகளின் மீது சத்தியம் செய்ய மாட்டோம். உண்மையைச் சொல்லுகிறோம் என்று சொல்லுவோம்.

சத்தியமாகச் சொல்லுகிறேன்

நீதிமன்றத்தில் குமாஸ்தா என்று சொல்லக்கூடிய எழுத்தர் இருக்கிறார் பாருங்கள் அவரே பக்கத்தில் வந்து நின்று அடி எடுத்துக்கொடுப்பார்.

சத்தியமாகச் சொல்-றேன். கடவுள் பெயரால் சொல்கிறேன். உண்மையைச் சொல்கிறேன் என்று சொல்வார்.

அதாவது முழு உண்மை, அப்பட்டமான உண்மை, உண்மையைத் தவிற வேறில்லை என்று சொல்வார்கள். இப்படி சொல்லும்பொழுது முதலில் கடவுள் பெயரை சொல்லிவிட்டுத்தான் சொல்கின்றார்கள்.

அருள்கூர்ந்து எண்ணிப்பாருங்கள். நீதிபதி மேலே அமர்ந்திருக்கின்றார். சாட்சியம் முதலில் சத்தியப் பிரமாணம் செய்துவிட்டுத்தான் ஆரம்பிக்கின்றார்கள். பிராசிகியூசன் விட்னஸ் அவரும் சத்தியமாகத்தான் சொல்கிறார்.

கடவுள் பெயரால்தான் சொல்கிறார். உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லை.

ஆனால், டிஃபன்ஸ் விட்னஸ் இருக்கிறார் பாருங்கள். இந்தக் கொலை நடந்ததேயில்லை என்று வாதிடுவார். கொலை நடந்தது என்று சொல்பவரும் வாதிடுகிறார்.

இரண்டு பேருமே நீதிமன்றத்தில் கடவுள் பெயரால் சத்யம் செய்கிறார்கள். இரண்டு பேருமே உண்மையைத் தவிர வேறு எதுவும் சொல்லவில்லை என்று சொல்கின்றார்.

அந்த உண்மையை இவர்கள் படுத்துகிறபாடு இருக்கிறதே அது சாதாரணமா? அருள்கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும்.

உண்மையை மட்டும் படுத்தவில்லை. கடவுளையும் சேர்த்து அவர்கள் படுத்துகிறார்கள்.

கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால்...

கடவுள் என்று ஒருவர் இருந்தால், என்னப்பா என்னுடைய பெயரை இவ்வளவு கெடுத்துக் கொண்டிருக்கின்றீர்களே என்று சுலபமாகக் கேட்டிருப்பார்.

உண்மையானதா? என்று பார்க்கும்பொழுது உண்மை அருகிக்கொண்டு வருகின்ற இந்த சமுதாயத்திலே நம்முடைய அணுகுமுறை எப்படி இருக்க வேண்டுமானால் உண்மையானது தானா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பேச்சு, செயல், சிந்தனை இந்த மூன்றிலும் உண்மை இருக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறை இருக்குமேயானால் இந்த உலகத்திற்குச் சட்டங்கள் தேவையில்லை, காவல்துறை தேவையில்லை, நீதித்துறை தனியாகத் தண்டிப்பதற்குத் தேவையில்லை. அப்படிப்பட்ட ஒரு தொண்டறத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

எனவே, அந்தப்பணியை அழகாகச் செய்யக்கூடிய அற்புதமானவர்கள். அது சிறு குடும்பங்களாக இருக்கலாம். அதோடு இன்னொரு சிறப்பு என்று சொன்னால், நம்முடைய செல்வநாதன் அவர்கள் பேசும்பொழுது, ஒன்றைத் சொன்னார்கள்.

ஆண் - பெண் சமம்


அவருடைய வாழ்க்கைத் துணைவியரை நான் கேட்டு அவர்களுடைய ஒப்புதலோடு செய்வேன் என்று அவர்கள் சொன்னார்கள். ரொம்ப மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

ஏனென்றால், ஆண்கள், பெண்கள் சமம் என்று சொல்லக்கூடிய அந்தத் தத்துவத்தை தந்தை பெரியார் அவர்கள் தந்தார்கள். ஒரு காலத்திலே அவர்கள் என்று சொன்னால் எஜமானர்கள் நம்மவர்கள் என்று சொன்னால் அடிமைகள் என்ற எண்ணம் மாறி இன்றைக்குக் குடும்பம் மாதிரி இந்த அமைப்புகளில் வந்து கலந்து கொள்கிறார்கள். பாராட்டப்படுகிறார்கள். அவர்களுடைய தொண்டை அங்கீகரிக்கிறார்கள் என்று சொன்னால், அதைவிட சிறப்பு வேறு இருக்க முடியாது.

ஆகவே, உங்களுடைய அந்த சிறப்பான தொண்டுக்கு பாராட்டுகிற நேரத்திலே அந்தத் தொண்டினுடைய அமைப்பு எப்படியிருக்க வேண்டும் என்று சொன்னால் மனிதனுக்குச் சிறந்த ஆற்றல் இருக்கிறது.

ஆறறிவு படைத்த மனிதன், அவனுடைய ஆறாவது அறிவை வைத்து எதை வைத்து மகிழ்ச்சி அடைவது என்று சொன்னால், இன்னொருவருக்கு உதவி செய்வதன் மூலம்தான் பிறருக்கு உதவி செய்வதற்குத்தான் அறிவு தேவை. அறிவுக்கு அறிவு தேவையில்லை. செயலுக்கு அறிவு தேவை. நாம் சமுதாயத்திற்கு என்ன செய்தோம்? சமுதாயம் நமக்குப் பாடுபட்டிருக்கிறது. நாம் உருவாக சமுதாயம் மறைமுகமாக உதவியிருக்கிறது.

நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்

ஆகவே, அந்தச் சமுதாயத்தை வளர்ப்பதற்கு, முன்னுக்குக் கொண்டு வருவதற்கு நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும்.

எல்லோரும் செல்வத்தை சம்பாதிக்கிறோம். ஆனால், தன் பெண்டு, தன் பிள்ளை, தன் வாழ்வு என்றிருக்கக் கூடாது.

குருவி கூடு கட்டுகிறது; அது தனக்கு மட்டும்தான் கூடு கட்டுகிறது. ஆனால், மனிதன் வீடு கட்டுகிறான். அவன் பிறருக்கு வீடு கட்டுகிறான் என்று சொல்லும்பொழுது மனிதனுடைய ஆறாவது அறிவு என்பது மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டும் தொண்டுசெய்ய வேண்டும் என்பதுதான் அதன் அடிப்படை.

அந்த மனிதர்கள் வாழ்வதில்லை

தனக்காக மட்டும் வாழுகிற மனிதர்கள் என்று சொன்னால் அவர்கள் வாழ்வதில்லை. நீங்கள் ஒவ்வொரு வகையிலும் ஊக்கப்படுத்துகின்ற நேரத்திலே இந்த அழைப்பிதழில்கூட சிறப்பாக அச்சடித்து எல்லோரையும் பாராட்டியிருக்கின்றீர்கள்.

இரத்தம், கண், மற்றும் உடல்தானம் செய்வீர்கள் என்று எழுதியிருக்கின்றீர்கள். அதுபோல விழிக்கொடை கொடுத்தவரை அழைத்து நீங்கள் பாராட்டினீர்கள். அது எவ்வளவு பேருக்குப் பயன்படக்கூடிய உறுப்புக் கொடை!

இந்தச் செய்திகள் எல்லாம் மிக அற்புதமானவர்கள். இப்பொழுது மனித நேயத்தோடு எல்லோரும் வளருகிறார்கள்.

மனித நேயம்


மனித நேயம், ஆழ்ந்த பற்று இவைகள் எல்லாம் இருந்தால் மனிதர்களை சமமாக நடத்த வாய்ப்பிருக்கும் பொழுதெல்லாம் மற்றவர்களுக்கு உதவுங்கள். ஈதல், இசைபட வாழ்தல், அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்று தெளிவாகச் சொன்னார்.

--------------------தொடரும் ...."விடுதலை" 27-7-2009

0 comments: