Search This Blog
27.7.09
சீதை பிடித்து வைத்த மணல் லிங்கத்தை சிதைத்த அனுமான் வால் அறுந்து விட்டதாம்!
வால்
ராமன் ராவணனை வதம் செய்து சீதையுடன் திரும்பும்போது இராமேசுவரம் வந்தான். ஸ்ரீராமன் சிவபக்தன். தன்னைப் பீடித்திருந்த பிரம்ஹத்திதோஷம் நீங்கிட காசி சென்று சிவலிங்கம் கொண்டு வருமாறு அனுமனைப் பணித்தான். அக்கணமே அனுமனும் பறந்தான். ஆனால் சிவலிங்கத்துடன் திரும்பி வர அனுமனுக்குத் தாமதம் ஏற்பட்டது. நல்ல நேரத்துக்குள் சிவபூஜை செய்ய வேண்டுமாம்; இராமன் தவித்தான்.
அதனைப் புரிந்து கொண்ட சீதா பிராட்டியாரோ, கடல் மணலில் சிவலிங்கத்தைப் பிடித்துக் கொடுத்தாள். ராமன் மகிழ்ந்து பூஜையை முடித்தான்.
காலந் தாழ்ந்து வந்த அனுமனுக்கோ அடங்காக் கோபம்! சீதை பிடித்து வைத்த மணல் லிங்கத்தை தனது வாலால் பலம் கொண்டு சிதைத்தான். மணல் லிங்கம் அசையவில்லை _ மாறாக அனுமன் வால் மட்டும் அறுந்து தூரப் போய் விழுந்தது. அந்த இடம்தான் இன்று வரை அனுமன் தீர்த்தமாம்.
ஆன்மீகச் செய்திகளை அள்ளி வீசுவதில் நமது ஏடுகளுக்கும், ஊடகங்களுக்கும் கொஞ்சம்கூட வெட்கம் கிடையாது. போட்டி போட்டுக் கொண்டு அருவருக்கத்தக்க, அறிவுக்குப் பொருத்தமற்ற இத்தகு குப்பைகளால் ஏடுகளை நிரப்பிக் கொண்டிருக்கின்றனர். அரசியலைப்பற்றி அவர்கள் எழுத வேண்டுமே, அடேயப்பா! அணுவைத் துளைத்து ஆகாசயத்தை வளைத்து, அது எப்படி இது எப்படி? நடக்க முடியுமா? என்றெல்லாம் ஆர்ப்பாட்டம் செய்து எழுதுவார்கள். நேரில் பார்த்தது போல கிசுகிசு எழுதுவார்கள்! எதிர் வினா வைப்பார்கள். அங்கெல்லாம் அவர்களின் பகுத்தறிவு சுறுசுறுப்பாக வேலை செய்யும்.
ஆனால், ஆன்மீகச் சமாச்சாரம் என்றதும் வாலையெல்லாம் சுருட்டி வைத்துக் கொண்டு விடுவார்கள்.
ஒரு வார்த்தையைக் கண்டுபிடித்து வைத்துள்ளனர்.
.... என்பது நம்பிக்கை;
........ என்பது அய்தீகம்
என்று சொல்லி அந்த ஓட்டை வழியாகத் தப்பித்துக் கொள்ளப் பார்ப்பார்கள்.
வெட்கம் இல்லை! இது யாருக்கும் வெட்கம் இல்லை!! என்ற பாடல் வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன.
மணலால் செய்த லிங்கத்தை ஓடுகிற வேகத்தில் நாய்கூட எத்தித் தள்ளி விடுமே அனுமானின் பலம் என்றால் சாதாரணமானதா? அவன் வாலே அறுந்து விட்டதாம்!
என்னதான் துள்ளிக் குதித்தாலும் அனுமான்கள் வாலாகத்தான் இருக்க முடியுமே தவிர, தலையாக இருக்க முடியாதே! அனுமான்கள் சூத்திரர்கள்தானே!
-------------மயிலாடன் அவர்கள் 27-7-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment