Search This Blog
20.7.09
தெய்வீகத் தன்மைக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது!
தெய்வீகத் தன்மை!
தெய்வீகத் தன்மைக்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது. அறிவுக்கு சம்பந்தம் கிடையாது என்பது மாத்திரமல்ல, திறமைக்கும் சம்பந்தம் கிடையாது. தெய்வீகத் தன்மை என்பதே அறிவுக்கும், ஆற்றலுக்கும் எட்டாத தன்மை என்பது மாத்திரமல்லாமல், அறிவினால் சிந்தித்து அறியக்கூடிய, அறிவினால் ஆற்றல் பெற்று செய்யக் கூடிய காரியங்களுக்கு மேற்பட்டதும், காரண காரியங்கள், சாத்திய அசாத்தியம் என்ற சொல் முறைகள் காண முடியாததுமானவற்றிற்குத்தான் சொல்லப்படும் குறிச்சொல்லாக தெய்வீகம் இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட தெய்வீகம் எதுவானாலும் அது அறிவுக்கு சம்பந்தப்படுத்தி அறிந்து கொள்ள முடியாததாகும்.
அதே காரணம்தான் தெய்வீக சம்பந்தம் ஏற்பட்ட இடத்தில் எல்லாம் அறிவை பயன்படுத்தாமல் வெறும் நம்பிக்கையையே கொண்டு கண்மூடித்தனமாக ஒப்புக் கொண்டு ஏற்கவும் ஆதரிக்கவும் வேண்டியதாகி விடுகிறது.
இந்தப்படியான தெய்வீகம் ஆஸ்திகத்துக்கும், அதைவிட அதிகமாக மதத்துக்கும் நீங்காத தள்ளாத சம்பந்தமுடையதாக இருக்கிறது. பொதுவாக சொல்ல வேண்டுமானால் தெய்வீகமானது மனிதனுடைய பகுத்தறிவுக்கு ஒரு பெரிய அடைக்கும் தாள் முட்டுக்கட்டையாகும் என்று சொல்லலாம். அதனால்தான் கடவுளும், மதமும் பகுத்தறிவைக் கண்டால் ஓட்டம் பிடிக்க வேண்டியதாய் விடுகிறது.
அதாவது கடவுளையும் மதத்தையும் பகுத்தறிவைக் கொண்டு பாராதே விவரிக்காதே என்று பெரியோர்களால் சொல்ல வேண்டியதாயிற்று.
தெய்வீகம் என்பதாக ஒரு கண்மூடி நம்பிக்கை இல்லாவிட்டால் தேவர்கள் ஏது?
அவர்கள் சம்பந்தப்பட்ட புராணங்கள் ஏது?, அவதாரங்கள் ஏது?, ஆழ்வார்கள் ஏது?, நாயன்மார்கள் ஏது?, அடியார்கள் ஏது?
பக்தர்கள் ஏது?, தெய்வீக புருஷர்கள், ரிஷிகள், முனிவர்கள், மகாத்மாக்கள்; ஆகியவர்கள் ஏது?, இவைகள் ஒன்றுமே இருக்க முடியாதவைகள் ஆகும். அறிவுக்கு எல்லை உண்டு; தெய்வீகத்துக்கு எல்லை கிடையாது.
அறிவுக்குப் பரீட்சைக் கருவீ, அளவுக் கருவி உண்டு. தெய்வீகத்துக்கு அளவுக் கருவி கிடையாது - பரீட்சைக் கருவியும் கிடையாது.
யார் எதைச் செய்ததாகச் சொன்னாலும், எங்கு என்ன நடந்ததாகச் சொன்னாலும், தெய்வீகம் என்னும் தலைப்பின்கீழ் சொல்லப்பட்டுவிட்டால் தெய்வீகத்தில் நம்பிக்கை உள்ளவன், சரி என்று மேலொப்பம் போடவேண்டியதைத் தவிர சிறிது சிந்தித்தாலும் பாவி ஆகிவிடுவான். அதாவது ஒரு ஹைகோர்ட் ஜட்ஜியினால் தூக்குத் தண்டனை இடப்பட்ட குற்றவாளியானவன் மந்திரி ஆனதன் பயனாய், தேசிய தண்டனையாக மாற்றப்பட்டு விட்ட பிறகு, அந்தத் தண்டனை அடைந்தவனே சட்ட மந்திரியாக வந்து விட்டால், தண்டித்த ஹைகோர்ட் ஜட்ஜியே அந்தக் கோர்ட்டில் சீப்ஜட்ஜு வேலை காலியாகிவிட்டால் அந்தப் பதவிக்கு தன்னை நியமிக்கச் சிபார்சு செய்யும்படி எப்படி தன்னால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கொலைக் குற்றவாளியாகிய அந்த மந்திரியிடம் சென்று தயவு கேட்க வேண்டுமோ, அப்போது எப்படி சிறிதுகூட தான் தண்டித்தது பற்றியும், கொலைகார மந்திரியின் நடத்தைபற்றியும் சிந்திக்கக் கூடாதோ அதுபோல், ஏன் அதைவிட அதிகமான சக்தி உள்ளதாகும் தெய்வீகம் என்பது.
ஆதலால் தெய்வீகம் என்று சொல்லிவிட்டால் அதைப்பற்றி அறிவைக் கொண்டு சிறிதுகூட சிந்திக்கக்கூடாது என்பதாகும்.
ஒரு கல் தச்சன் தன் காலின்கீழ் போட்டு மிதித்துக் கொண்டுதானே வெட்டிக் கொத்தி செய்த ஒரு பொம்மையை அது விக்கிரமாகிக் கடவுள் என்று பெயருடையதாக ஆகிவிட்டால், எப்படி அந்த தச்சனே அதைத் தொடக்கூடாத கீழ்மகனாக தன்னைக் கருதிக் கொண்டு எப்படி எட்டி நின்று விழுந்து கும்பிடவேண்டியதாகி விடுகிறதோ, அதுபோல் அறிவை முன்னால் வைத்து சதா ஆராய்ச்சிக் காரியத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எப்படிப் பட்ட விஞ்ஞான வாதி - தர்க்கவாதியும் தெய்வீகம் என்று ஒரு காரியத்தைச் சொல்லிவிட்டால் பேசாமல் தொட்டால்வாடி என்னும் செடிபோல் சோர்ந்து அறிவை அடக்கி விட்டு ஒப்புக் கொள்ள வேண்டியது கண்டிப்பாகும்! உதாரணம், நம்ம பிரின்ஸ்பால், உப அத்யட்சகர்கள், டாக்டர் ஆப் சைன்ஸ் ஆகியவர்களைப் பார்த்தாலே போதும்.
உலகத்தில் தெய்வீகத்துக்கு இருக்கும் சக்தி வேறு ஒன்றுக்குமே கிடையாது. காரியத்தில் அல்ல, பிரத்தியட்சத்தில் அல்ல, கருத்தில் நினைத்துக் கொள்ள வேண்டியதில் அதற்கு ஈடாக வேறு எதையும் நினைக்க முடியாது.
அதனால்தான் தெய்வீகத்தை ஒப்புக் கொள்ளாதவன் கடவுளை ஒப்புக் கொள்ளா-தவனாகிறான். அதாவது நாஸ்திகனாகி விடுகிறான்.
ஆனால், இதில் உள்ள அதிசயம் என்னவென்றால் இப்படிப்பட்ட இந்த தெய்வீக சக்தியையே ஆதாரமாக வைத்து, தெய்வத்துக்கு தெய்வமே பேதம், உயர்வு தாழ்வு, அதிக சக்தி, கொஞ்ச சக்தி என்பதும், தெய்வீக சக்தி உள்ளவர்கள் என்பவர்களிலேயே உயர்வு தாழ்வு, அதிக, கொஞ்ச சக்தி உள்ளவர்கள் என்பதும், தெய்வீக சக்தி உள்ள இடம் என்பதிலும் உயர்வு தாழ்வு என்பதும், தெய்வீக சக்தி என்பதை நம்பும் மனிதர்ளுக்குள்ளாகவே ஒருவர் சொல்லுவதை ஒருவர் வெறுப்பதும், மறுப்பதும், ஒரே மனிதன் ஒரு தெய்வீகத்தை ஒப்புக் கொண்டு மற்றொன்றை மறுப்பதும், அதே மனிதன் ஒரு சமயத்தில் ஒப்புக் கொண்ட ஒரு தெய்வீக சக்தியை மறு சமயத்தில் மற்றொரு காரியத்தில் மறுப்பதும் ஆன காரியங்கள் எல்லா தெய்வீக சக்தி நம்பிக்கைக்காரர்களிடமும் இருந்து வருவதேயாகும். எனவே, தெய்வீகம் என்பது மக்கள் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் தொல்லை விளைவிப்பதும் அடியோடு வேண்டாததுமாகும்.
--------------------- தந்தைபெரியார் "விடுதலை"- 10.1.1950
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment