Search This Blog
23.7.09
இந்திய சிலை உடைப்புக்காரர் (Indian iconoclast) பெரியார்
வெறுக்கத்தக்கவனே வெற்றி பெறுவான்
29.2.1972இல் சென்னையில் டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றமைக்காக, பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பாராட்டுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. தந்தை பெரியாரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நான், அமைச்சர்கள் எஸ்.மாதவன், அன்பில் தர்மலிங்கம், பல்கலைக்கழக துணைவேந்தர் நெ.து.சுந்தர வடிவேலு, எ.என்.சட்டநாதன், பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி.டி.நடராசன் ஆகியோர் பாராட்டுரையும், அமைச்சர் நாவலர் அவர்கள் ஏற்புரையும் வழங்கினார்கள்.
பாராட்டு விழாவில் நான் வரவேற்புரை ஆற்றினேன். அய்யா அவர்கள் குறிப்பிடுகையில் நாவலர் தலைசிறந்த பகுத்தறிவு வாதிகளில் ஒருவர். இப்போது தான் அவர் பகுத்தறிவாளர் என்பதில்லை, மாணவப் பருவம் முதற் கொண்டே நாவலர் பகுத்தறிவாளராகச் சிறந்து விளங்கினார் என்று கூறினார்கள்.
ஏதோ சில பிரபுக்களின் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டும் வேண்டுமானால், இதற்கு விதிவிலக்காக இருந்தார்கள் எனலாம். அவர்கள் சும்மா பெருமைக்காகப் படித் தார்கள்; மற்றவர்கள் அனைவரும் உத்தியோகத்திற்காகவே கல்வி கற்றார்கள். ஆனால் நமது நாவலர் மிகவும் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை பெரிய வருமானம் தரும் பெரிய பதவி எதிலும் இருக்க வில்லை, என்றாலும் நாவலர் தமது கல்வியை முடித்துக் கொண்டதும் நேராக என்னிடம் வந்தார்.
நான் இன்றைக்கு இருப்பதுபோல அன்றைக்கும் இருக்கவில்லை. இன்றைக்குப் பெரிய பெரிய பதவிகளில் இருப்பவர்கள் எல்லாம் கூட என்னிடம் வந்து அய்யா எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் அன்றைக்கு நான் அப்படிப்பட்ட நிலையில் இருக்கவில்லை.
நான் தங்களுடன் இருந்து தொண்டு செய்கிறேன். எனக்கு சோறு மட்டும் போட்டால் போதும், வேறு சம்பளம் எதுவும் தரவேண்டாம் என்றார். எம்.ஏ., படித்தவர் இப்படிச் சொன்னார். இன்றைக்கு இருப்பது போல எம்.ஏ., படிப்பு அவ்வளவு சல்லிசானதாக அப்போது இருக்கவில்லை.
நாவலரும், நாவலர் போன்று என்னிடம் வந்து வேலைக்கு என்று சேர்ந்தவர்களும் என்னிடம் வேலை எதுவும் பழகவில்லை. எனக்கே கற்றுத்தரும் அளவுக்கு அவர்கள் இருந்தார்கள். எனக்கே பாடம் கற்றத்தரும் அளவு தகுதி படைத்தவர்களாக இருந்தார்கள். அப்போ எல்லாம் பகுத்தறிவுப் பிரச்சாரம் என்பது நாத்திகப் பிரச்சாரம் என்று அழைக்கப்பட்டது. இப்போதுதான் அனைவருமே பகுத்தறிவுப் பிரச்சாரம் என்கிறார்கள். அப்போது இருந்து இப்போதுவரை நல்ல பகுத்தறிவாளராக இருந்து வருகிறார்.
எனவே நமது அமைச்சரவையில் முதல் பகுத்தறிவுவாதி நாவலர் எனலாம். எத்தனையோ பேருக்கு பாராட்டுக் கூட்டங்களைப் பகுத்தறிவாளர் கழகம் நடத்தியிருக்கலாம். ஆனால், நூற்றுக்கு நூறு பகுத்தறிவாளர் ஒருவரைப் பாராட்டுவது இப்போதுதான் என்றும், இன்னும் நாவலர் பல பெருமைகளைப் பெறவேண்டும் என வாழ்த்தினார்கள்.
நாவலர் அவர்கள் நிகழ்ச்சியின் பாராட்டுரையில் ஏற்புரை நிகழ்த்துகையில், எனக்கு அளிக்கப் படும் பாராட்டையும் டாக்டர் பட்டம் மூலம் நான் பெறும் புகழையும், நான் தந்தை பெரியார் அவர்களின் காலடியில், அறிஞர் அண்ணா அவர்களின் காலடியிலும் சமர்ப்பிக்கிறேன்.
அன்றெல்லாம் எங்களுக்கு பிறரின் மதிப்போ, பாராட்டோ கிடைக்காது. இவ்வளவு அறிவு எங்களுக்கு இருந்த மாதிரி கூட பிறர் கருத மாட்டார்கள். மற்றவர்கள் நம்மை மதிக்கவில்லையே என்று கவலை கொள்ளாமல் நாங்கள் இருந்ததெல்லாம் பெரியார் அவர்களைப் பின்பற்றியதால்தான்!
அந்த அடிப்படையில் நாங்கள் தொண்டாற்றியதால்தான் எங்களுக்கு இன்று மக்கள் சமூகம் மதிப்பளிக்கிறது. வெறுக்கத்தக்கவனே வெற்றி பெறுவான் என்று தந்தை பெரியார் அவர்கள் கூறுவார். சமூகத்தினை வெறுத்துப் பணியாற்றியதால்தான் எங்களுக்கு வெற்றி கிட்டியது. இவ்வாறு நாவலர் உரையாற்றுகையில் இடையில் அய்யா தந்தை பெரியார் அவர்கள், திடீர் என்று ஒரு பொன்னாடையை நாவலருக்குப் போர்த்தினார்கள்.
தமது நன்றியைக் காட்ட இந்த பொன்னாடையைத் தாம் போர்த்துவதாகவும், நான் சிக்கனக்காரன் என்று கூறப்பட்டதையும், பொய் என்று நிரூபிக்கவும் இந்தப் பொன்னாடையே பயன்படும் என்று கூறப்பட்டதும் அவையில் பலத்த சிரிப்பும், மகிழ்ச்சி ஆரவாரமும் கரவொலியும் பொங்கின!. இந்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன் இரட்டிப்பாக இருந்த பகுத்தறிவாளர்கள், கழகத் தோழர்களுடன் விடைபெற்றுச் சென்றோம்.
11,12-03-1972இல் ஆகிய தேதிகளில் திருச்சியில் மாபெரும் திராவிட கழக மாநாடுகள் நடை பெற்றன. இதில் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் புத்தூரில் பெரியார் மாளிகையில், பெண்கள் விடுதலை தினம், திராவிடர் மாணவர் கழக மாநாடு - இன விடுதலை மாநாடு - மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு என்று நிகழ்ச்சிகள் திட்டமிட்டு நடத்த மாவட்டக் கழகத் தோழர்கள் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அதே நேரத்தில் அய்யா அவர்கள், இரண்டு நாள் மாநாடு நடைபெறும் என விடுதலையில் அறிக்கை வெளியிட்டார்கள். தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் மாநாடு நடைபெறும் என அறி வித்தும் பின்வரும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அதில் நான் (கி.வீரமணி), திருவாளர்கள் சிந்தனைச் சிற்பி சிற்றரசு (மேலவைத் தலைவர்), எம்.எஸ்.வெங்கடாசலம் எம்.ஏ., பி.எல்., ஜி.பராங்குசம் எம்.எல்.சி., பேராசிரியர் கருப்பையா எம்.ஏ., இறையன் பி.ஏ.பி.டி., தோழர்களான பிரபாவதி, சக்திகோதண்டம், வெற்றிச்செல்வி ஆகியோர் மற்றும் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு உயிர் நீத்த கழகத்தோழர்களின் குடும்பத்திற்கு மாண்புமிகு அமைச்சர்கள் அன்பில் தர்மலிங்கம் அவர்கள் விருதுகள் வழங்கவும், 11-ந்தேதி இரவு பெரியார் நாடக மன்றத்தினர் அளிக்கும், இராமநாதபுரம் மாவட்ட தி.க.பொருளாளர் ஆர். சுப்பிரமணியம் அவர்கள் குழுவினர் நடிக்கும் தீ பரவட்டும் நாடகம் நடத்தவும், இரு தினங்களில் இடைவேளையில் திரு.வி.க. பத்திரன் அவர்கள், மந்திரமில்லை! தந்திரம்!! என்ற நிகழ்ச்சிகளை செய்தும் 12 ந்தேதி காலை மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் நடைபெறும். அதில் தீட்சட்டி, அலகு குத்துதல் மற்றும்பல வீர விளையாட்டுகளும் நடைபெற திருச்சி மாவட்டத்தின் திராவிடர் கழகம் முடிவு செய்து விழாவினை மிகவும் சிறப்பாக நடத்திட ஆவன செய்யப்பட்டது.
திருச்சி மாநாட்டில் அலைகடல் என திரண்டுவருமாறு விடுலையில் அழைபிதழ் வெளியிடப்பட்டது. அனைத்து மாவட்டங் களிலிருந்து, மாநிலம் முழுவதும் ஏராளமான கழகத் தோழர்கள குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
எனவே மாநாடு ஆரம்பமாக, திராவிட மாணவர்கள் கழக அமைப்பாளரும், தந்தை பெரியார் அவர்களும், கோவை ஜி.டி.நாயுடு, மற்றும் ஏராளமான தோழர், தோழியர்கள் உள்ளிட்ட அனைவரும் காலை முதலே வந்திருந்தனர்.
மாநாட்டு ஊர்வலம் திருச்சி பென்ஷனர் வீதியில் இருந்து புறப்பட்டு, அலங்கரிக்கப் பட்ட ரதத்தில் தந்தை பெரியார் அவர்களும், நானும் அமர்ந்திருந்து ஊர்வலத்தை நடத்திக் சென்றோம்.
ஊர்வலம் பென்ஷனர் வீதி, காந்தி மார்க்கெட் பெரிய கடைத்தெரு, மலைக் கோட்டை, மெயின் கார்டு கேட், தென்னூர் வழியாக பெரியார் மாளிகையை அடைந்தது ஊர்வலத்தில் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கருஞ்சட்டை வீரர்கள், குடும்பத்துடன் ஊர்வலம் புறப்பட்டது. பெண்கள் தீச்சட்டி எடுத்தது, சிலம்பாட்டம், மல்யுத்தம் போன்ற காட்சி களுடன், அந்த அய்ந்து மைல் தூரம் ஊர்வலம். தந்தை பெரியார் அவர்கள் மிகவும் உற்சாகமாக இருந்து மூடநம்பிக்கை ஒழிப்பு, ஜாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு முழக்கங்களும் தந்தை பெரியார் வாழ்க என்ற முழக்கங்களும் விண்ணைப் பிளந்தன. சாலையின் இரு மருங்கிலும் கூடியிருந்த பொதுமக்கள் வணக்கமும், வாழ்த்துகளும் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சிகள் கடும் வெயிலினைப் பொருத்தாமல் மிகவும் சிறப்பாக நடைபெற்றக் கொண்டிருந்தன.
மாநாட்டின் ஊர்வலம் வந்துகொண்டிருக்கும் போது பார்வையாளர் மத்தியில் நின்ற பார்ப்பனர் ஒருவர் செருப்பைக் கழற்றி ஊர்வலத்தை நோக்கிக் காட்டி வீச முயன்றதைத் தொடர்ந்து பார்வையாளர்கள் மற்றும் ஊர்வலத்தின் மத்தியில் பரபரப்பு நிலவியது.
இந்த பார்ப்பனரின் இந்தச் செய்கையைக் கண்டு ஆத்திரம் அடைந்த தோழர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டதால் அவர்களை அமைதிப்படுத்தி ஊர்வலம் தொடர்ந்து நடத்த பெரும்பாடாக ஆகிவிட்டது. பின்னர் ஊர்வலம் வெற்றிகரமாக நடைபெற்று பெரியார் மாளிகையை அடைந்தது.
மாநாட்டில், பெரியார் அவர்கள், நமது நாட்டில் நமது மானத்தின் உயிர் மாணவர்களின் கையில்தான் உள்ளது. அவர்களை நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். நன்றாகப் படிக்கவும், படிப்பை விட்டு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தாதீர்கள், படித்து முடித்து போதிய காலம், வரும் வரை காரியத்தில் இறங்க தயாராகுங்கள். உங்களுக்கு வேண்டியதெல்லாம் இனவுணர்வும், அளவிற்கதிகமான பகுத்தறிவு உணர்ச்சியும் ஆகும். இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது நன்மையும், சமுதாயத்தினாலே உங்களுக்கு நன்மையும், விளையவேண்டுமானால் உங்கள் கலியாணத்தை தள்ளிப்போடுங்கள். முடிந்தால் புறக்கணி யுங்கள் என்று பேசினார்கள்.
மனிதனுக்குத் தேவையானது பகுத்தறிவு. அது எவனுக்கு இல்லையோ அவன் அடிமை -கீழ்மகனேயாவான். அடுத்து நமது வேலை அரசியல் அடிமையை அழிப்பது! இன்றைய அர சியல் வடநாட்டாருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது அதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
இன்றைய தினம் இந்த ஆட்சி கவிழுமானால் அடுத்து, அந்த இடத்திற்கு வருபவன் யார்? அவன் யோக்கியதை என்ன? அது காமராஜர் ஆகட்டும், சுப்பிரமணியம் ஆகட்டும், பக்தவச் சலம் ஆகட்டும், இவர்கள் எல்லாம் யார்? - பூணூல் இல்லாத பார்ப்பனர்கள்தானே! காம ராஜரை நம்பினோம், அவரும் கடைசியில் பார்ப்பானிடம்தானே போனார்?
இன்றைய ஆட்சி நமது உயிர், இது தீர்ந்தால் நாம் செத்தோம். இதை மாணவர்கள் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டும். எந்தக் காரணத்தைப் பொறுத்தும் மாணவர்கள் இந்தக் கட்சிக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது.
இந்த ஆட்சி இருக்கும்போது கல்வி, உத்தியோகத் துறையில் நாம் எப்படியாவது முன்னேறவேண்டும். உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டும். பார்ப்பன ஆட்சியை நாங்கள் ஒழித்துக்கட்டினால்தான், உங்களுக்கு இன்றைக்கு இந்த இடம் கிடைத்திருக்கிறது என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். நாம் எல்லாரும் வேதனைப்பட வேண்டும். நமது இன இழிவை ஒழித்துக்கட்ட வேண்டும், நமது இன இழிவை ஒழித்துக்கட்டாமலேயே சாகப்போகிறோமோ, என்று ஒவ்வொருவரும் வேதனைப்படவேண்டும் என்று மிகுந்த வேதனை மிக்க பழைய சம்பவங்களை இப்படி மேற்கோள் காட்டி எடுத்து விளக்கினார்கள்.
மாநாட்டில் நான் தலைமை உரையாற் றுகையில், இந்த மாநாடு நமது இயக்க வரலாற்றில் புதிய பொன்னேட்டை இணைக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடு 2000 ஆண்டுகளுக்கு முன்பு மூடநம்பிக்கையை முறியடிக்க அறிவின் அடிப்படையாலேயே போராடிய புத்தருக்குப் பிறகு தந்தை பெரியார் அவர்கள்தான் அந்தப் பணிக்காக தங்களை அர்பணித்துக் கொண்டார்கள்.
அவர்கள் விதைத்த விதைகள் எல்லாம் இன்றைய தினம் பூத்துக் கனியாகக் குலுங்குகின்றன. அந்தக் கனிகள் மாற்றாமல், பறிக்கப்படாமல் என்றென்றைக்கும் பாது காப்புடன் இருக்கச் சிறந்த திட்டங்கள் தீட்டப்படவேண்டி இருக்கின்றன.
இந்தியாவிலேயே மூடநம்பிக்கையை ஒழிக்கப் பாடுபடும் ஒரே பகுத்தறிவுவாதி தந்தை பெரியார் என்று குறிப்பிடுகிறது. அந்த அளவிற்கு அய்யாவின் கருத்துகள் இன்றைக்கு எங்கும் ஊடுருவிக் கிடக்கின்றன.
நூறாண்டு முதிர்ந்திருக்கின்ற லண்டன் பகுத்தறிவாளர் கழகத்தின் டிசம்பர் வெளியீடான த ஹுமனிஸ்ட் (The Humanist) என்ற பத்திரிகையில் அய்யாவைப் பற்றி அரிய ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி இருக்கிறது. அந்தக் கட்டுரைக்கு அவர்கள் கொடுத்திருக்கும் தலைப்பு. (Indian iconoclast) என்பதாகும். அதன் பொருள் இந்திய சிலை உடைப்புக்காரர் என்பதாகும். அந்த அளவிற்கு அய்யாவின் அரிய புகழ் இன்றைக்கு உலகெங்கும் பரவிக் கிடக்கிறது.
---------------------நினைவுகள் நீளும்...
-----------கி.வீரமணி அவர்கள் எழுதிவரும் "அய்யாவின் அச்சுவட்டில்" இரண்டாம் பாகம் 23 - "உண்மை" ஜூலை 16-31_2009
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment