Search This Blog

22.7.09

உலக நாடுகள் -தூரப்பார்வை - ரஷியா -2


ரஷியா (தொடர்ச்சி)

1962இல் ஏற்பட்ட மோதல் வலுவாக வளர்ந்து அணு ஆயுதப் போர் அமெரிக்க சோவியத் நாடுகளுக் கிடையே ஏற்படும் அபாய நிலை உருவானது. கியூபா கம்யூனிஸ்ட் நாடு, அமெரிக்காவுக்கு மிக அருகில் உள்ளது. கம்யூனிசக் கொள்கைகளைச் சகித்துக் கொள்ளும் மனம் இல்லாதவர்கள் மூலம் அரசுக்குப் பல்வேறு தொந்தரவுகளையும் தாக்குதல்களையும் கியூபாவுக்கு அமெரிக்கா தந்தது. கியூபாவின் ஆதரவுக்கு சோவியத் நாடு வந்தது. கியூபா நாட்டின் பகுதிகளில் சோவியத் ஏவு கணை ஆயுதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. இது அமெரிக்காவின் கோபத்தைத் தூண்டியதாம்.

அணு ஏவு கணைகள் கொண்ட ஆயுதக் கப்பலை சோவியத் பிரதமர் நிகிடா குருஷ்சேவ் கியூபாவுக்கு அனுப்பி, அமெரிக்கத் தாக்குதலை எதிர்ப்போம் என்று அறிவித்தார். இதனை அறிந்து கொண்ட அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடையை விதித்தது. சோவியத் உதவியை நாடியதற்கான தண்டனை பெரும் சேதத்தை விளைவிக்கக்கூடிய அணுஆயுதப் போரை நிறுத்திக் கொள்ளப்போவதாக சோவியத் நாடு அமெரிக்காவுக்குத் தெரிவித்தது. அமெரிக்கா தன் பங்குக்கு இனி என்றைக்குமே கியூபா மீது படையெடுக்க மாட்டோம் என்ற உறுதிமொழியைத் தந்தது. சோவியத்தைத் தாக்குவதற்காகத் துருக்கியில் கமுக்கமாகப் பதுக்கி வைத்திருந்த தனது அணு ஏவுகணைகளை அமெரிக்கா திரும்ப எடுத்துக் கொண்டு போனது.

கொஞ்ச காலம் இரு நாடுகளுக்குமிடையே நிலவிய அமைதி, 1979 டிசம்பர் மாதத்தில் குலைந்தது. ஆப்கானிஸ்தான் நாட்டில் சோவியத் நாட்டின் உதவியுடன் அமைக்கப்பட்டிருந்த அரசை மதவெறிச் சக்திகள் எதிர்த்தன. பாப்ரக் கர்மல் என்பாரின் தலைமையிலான அரசைக் காப்பாற்றிட சோவியத் நாடு தன் படைகளை அனுப்பியது. மதவெறிச் சக்திகளுக்கு அமெரிக்கா பணமும் நவீன ஆயுதங்களும் தந்து உதவி சோவியத் படைகளுக்கு எதிராகப் போரிடும்படித் தூண்டியது. 1988இல் அமெரிக்கா, சோவியத் நாடு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. 1989இல் சோவியத் படைகள் ஆப்கன் நாட்டிலிருந்து முழுமையுமாக வெளியேறின.

1990இல் சோவியத் ஒன்றிப்பு உடையக் காரணமான, மிக்கெயில் கோர்பசேவ் என்பவர் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக 1985இல் வந்தார். ஆண்ட்ரே குரோமிகோ அதிபராக வந்தார். பொது உடைமைக் கொள்கைகளுக்குப் புதிய சித்தாந்த விளக்கம் கூறுகிறேன் எனக்கூறி, கிளாஸ்நால்ட் என்றும் மறு கூட்டமைப்பு எனும் பெயரில் பெரஸ்த்ரோய்கா என்றும் கோர்பசேவ் எதையோ தெரிவித்தார். பின்னர் 1988இல் கோர்பசேவ் சோவியத்தின் அதிபராகவே ஆகிவிட்டார்.

ஜார்ஜியா குடியரசில் ஏற்பட்ட தேசிய இன எழுச்சிக் கிளர்ச்சியை 1989இல் சோவியத் படைகள் அடக்கி ஒடுக்கின. சோவியத் ஒன்றிப்பில் இணைந்த குடியரசு நாடு ஜார்ஜியா. இருப்பினும் ஒடுக்கப்பட்டது. அதே ஆண்டில் சோவியத் ஒன்றிப்பில் இணைந்த லிதுவேனியா சுதந்திரப் பிரகடனம் செய்து சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகியது. பிரிந்து போகும் உரிமையுடன் ஒன்றிணைந்த குடியரசு நாடுகளின் ஒன்றிப்புதான் சோவியத் ஒன்றிப்பு. எனவே லிதுவேனியா பிரிந்தது சட்ட விரோதமல்ல. மற்றொரு குடியரசான அஜர்பெய்ஜானில், இன வேறுபாட்டால் பல இனக் குழுக்களுக்குள் கலவரம் ஏற்பட்டுப் பலர் கொல்லப் படும் நிலைக்குச் சென்றுவிட்டது. தேசிய இனங்களின் தனித்தன்மையையும் விடுதலையையும் லெனின் ஆதரித்து எழுதியிருந்த நிலையிலும் இந்நிலை.

புதிய பொது உடைமைக் கொள்கையைப் போதித்த கோர்பசேவ், பால்டிக் நாடுகளின் விடுதலை உணர்வுகளை எதிர்த்தார். லிதுவேனியாவுக்கு எதிராகக் கட்டுப்பாடுகளை விதித்தார். அந்த நிலையில் போரிஸ் எல்ஸ்டின் என்பவர் ரஷிய சோவியத் சோஷலிசக் கூட்டாட்சிக் குடியரசின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி ஏற்றவுடன் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தன் நாட்டைத் துண்டித்துக் கொண்டார்.

இந்நிலையில், சோவியத் ஒன்றிப்பின்அதிபராக கோர்பசேவ் கிரீமியாவில் உள்ள விடுமுறை மாளிகையில் தங்கியிருந்தபோது காவலில் வைக்கப்பட்டார். அந் நடவடிக்கையை எடுத்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள். ராணுவப் புரட்சியில் ஈடுபட்ட தலைவர்களே, ராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையே உருவாகிவிட்டது. தொடர்ந்து பல நிகழ்வுகள், கலவரங்கள், போராட்டங்கள் நடந்தன. எதற்கும் வழிகாட்டும் தலைமை அமையாத நிலையில் நாடெங்கும் குழப்பம். சோவியத் ஒன்றியம் உடைந்தது. 1917 புரட்சிக்குப் பின் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் தலைமை தாங்கிய சமதர்மநாடு 1990 இல் உடைந்து போனது.

ரஷிய நாட்டில், கம்யூனிஸ்ட் கட்சியே தடை செய்யப்பட்டது. அதன் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. பால்டிக் நாடுகளின் விடுதலையை ரஷியா அங்கீகரித்தது. உக்ரைன் நாடு தனது விடுதலையை அறிவித்ததைத் தொடர்ந்து பல குடியரசுகளும் தத்தம் சுதந்திரத்தை அறிவித்தன. சோவியத் ஒன்றிப்பு கலகலத்துப் போனது. அதிகாரப் பூர்வமாக மக்களின் பிரதிநிதிகள் சபை கூடி சோவியத் ஒன்றியம் கலைக்கப்படுகிறது எனும் முடிவை நிறைவேற்றினார்கள். இத்தனைக்கும் காரணமான மிக்கெய்ல் கோர்பசேவ் பதவியை விட்டு விலகினார்.

ரஷியக் குடியரசின் அதிபராக இருந்த போரிஸ் எல்ட்சின் உடல் நலக்குறைவால் 1999 இல் பதவியை விட்டு விலகினார். பிரதமராக இருந்த புடின் என்பவரைத் தற்காலிக அதிபராக ஆக்கினார். பின்னர் நடந்த தேர்தலில் புடின் அதிபராகத் தேர்ந்து எடுக்கப் பட்டார். தற்போது வெட்வடேவ் அதிபராகவும் புடின் பிரதமராகவும் உள்ளனர்.

சோவியத் ஒன்றிப்பின் மிகப் பெரும் நாடான ரஷியா ஒரு கோடியே 70 லட்சத்து 75 ஆயிரத்து 200 சதுர கி.மீ. பரப்புள்ளது. சைபீரியா பகுதி மிகப் பெரும் அடர்ந்த காடுகளையும் பனிப் பிரதேசங்களையும் கொண்டது. எண்ணெய் வளமும், எரிவாயு வளமும் நிறைந்த நாடு. இதன் மக்கள் தொகை 14 கோடியே 29 லட்சம் ஆகும். ரஷியன் ஆர்த்தடாக்ஸ் எனும் பழைமை வாதக் கிறித்துவப் பிரிவினர் பெரும் பான்மையர். சிறுபன்மையராக முசுலிம்கள் உள்ளனர்.

ரஷியமொழி வழங்கும் நாடு. மக்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள். மக்களில் 18 விழுக்காட்டினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 8 விழுக்காடு மக்கள்வேலை கிட்டாமல் உள்ளனர்.

-------------------"விடுதலை" 22-7-2009

0 comments: