
பராகுவே
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பராகுவே 1776 இல் ஸ்பெயின் நாட்டினால் அதிகார மாற்றம் செய்யப்பட்டது. ஸ்பெயின் குடியேற்ற நாடான பராகுவேவை, பெரு நாட்டின் வைஸ்ராய் ஆண்டு கொண்டிருந்தார். அதனை மாற்றி லாப்ளாடா நாட்டின் வைஸ்ராய் ஆளுமாறும் அர்ஜென்-டினாவின் தலைநகரான போனஸ் அயர்சில் இருந்து ஆளுமாறும் ஏற்பாடு செய்யப்பட்டது.
1811 இல் பராகுவே விடுதலை பெற்றது. ஆனாலும் ஆண்டவர்கள் மூவருமே
சர்வாதிகாரிகளாகவே இருந்தனர். சர்வாதிகார ஆட்சி 50 ஆண்டுக் காலம் நடந்தது. மூன்றாவதாக ஆட்சி செய்த பிரான்சிஸ்கோ கொலானோ லோபஸ் என்பாரின் காலத்தில் ஏற்பட்ட கலவரங்கள், கிளர்ச்சிகள் லத்தீன் அமெரிக்க நாடுகளின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரத்தம் கொட்டியதாக அமைந்துவிட்டது. பராகுவே போர் எனவும் மூன்று கூட்டுகளின் போர் எனவும் வருணிக்-கப்படும் இப்போரில் பராகுவே நாடு அர்ஜென்டினா, பிரேசில், உருகுவே ஆகிய மூன்று நாடுகளின் படைகளை எதிர்க்கும் நிலை ஏற்பட்டது. போரின் முடிவில் பராகுவே நாட்டின் பகுதிகள் பறிபோனதோடு, கணக்கில் அடங்காத அளவு மனித உயிர்களும் சேதம் அடைந்தன. மீண்டும் பராகுவே 1932 முதல் 1935 வரை போரில் ஈடுபட வேண்டியதாயிற்று. சாக்கோ போர் என அழைக்கப் படும் இந்தப் போரின் முடிவில் பொலிவியா நாட்டின் வசம் இருந்த முக்கியமான வணிகப் பகுதிகளைப் பராகுவே கைப்பற்றிக் கொண்டது.
4 லட்சத்து 6 ஆயிரத்து 750 சதுர. கி.மீ. பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 66 லட்சம் ஆகும். 90 விழுக்காடு மக்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தினர். ஸ்பானிஷ் மொழியும் குவாரானி மொழியும் ஆட்சி மொழிகள். மக்களில் 94 விழுக்காடு படிப்பறிவு பெற்றவர்கள்.
குடியரசு நாடான பராகுவேயின் குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவராகவும் உள்ளார். நாட்டின் நாணயத்தின் பெயர், நாட்டு மக்களின் மொழியான குவாரானி என்றே அழைக்கப்படுகிறது.
32 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழ் உள்ளனர். 16 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர். நாட்டின் இருப்புப் பாதையின் நீளம் 441 கி.மீ.
பெரு
12 ஆம் நூற்றாண்டின் புகழ் வாய்ந்த இங்க்கா பேரரசின் தலைநகராக பெரு நாட்டில் உள்ள குஸ்கா நகரம் விளங்கியதென்றால் பெருவின் சிறப்பை விளங்கிக் கொள்ளலாம். இங்க்கா ஆட்சி தன்னிறைவு பெற்று தனிச்சிறப்புடன் செழிப்பாக இருந்த காலத்தில், 1539 ஆம் ஆண்டில் ஸ்பெயின் நாடு பெருவைக் கைப்பற்றியது. அந்தக் கால கட்டத்தில் பெருவில் உள்நாட்டுப் போர்களும் நடந்த நேரம். இங்க்கா பேரரசு வீழ்ந்தது. அதன் ராஜ்யங்கள் பெரு வைஸ்ராயின் ஆளுகைக்குள்பட்டதாகியது. லிமாவைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி நடந்தது. அதே நகரம்தான் இன்றளவும் பெருவின் தலைநகர்.
1780 இல் டுபாக் அமாரு என்பார் கிளர்ச்சியில் ஈடுபட்டார். இவர் இங்க்கா அரச வமிசத்தைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொண்டார். இந்தக் கலவரத்தை ஸ்பெயின் அரசு அடக்கிவிட்டது. 1821 இல் ஸ்பெயின் அரசு பெருவுக்கு விடுதலை அளித்தது.
விடுதலை பெற்ற நாட்டில் 1945 முதல் 1980 வரை கலவரங்களும் கொரில்லா சண்டைகளும் நடந்தன. ஒளிரும் வழி அல்லது சென்டெரோ லுமினோசோ எனப்படும் இயக்கம் இத்தகைய கலவரங்களில் ஈடுபட்டு சுமார் 30 ஆயிரம் மக்களைக் கொன்று குவிக்கக் காரணமாகியது. பெரு நாட்டின் பொருளாதார நிலை மிகவும் சீர்கேடு அடைந்தது.
சிலி நாட்டுக்கும் ஈக்வடாருக்கும் இடைப்பட்ட நாடான பெரு தென் அமெரிக்காவின் மேற்குக் கரை நாடாகும். 12 லட்சத்து 85 ஆயிரத்து 220 சதுர கி.மீ. பரப்புள்ள நாட்டின் மக்கள் தொகை 2 கோடியே 84 லட்சம் ஆகும். 81 விழுக்காடு மக்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தினர். மதம் அற்றவர்கள் 16 விழுக்காட்டுக்கு மேல் உள்ளனர். மக்களில் 88 விழுக்காடு படிப்பறிவு பெற்றவர்கள்.
குடியரசுத் தலைவரே ஆட்சித் தலைவராகவும் உள்ளார். 54 விழுக்காடு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். 9 விழுக்காட்டினர் வேலை கிட்டாதோர் தலைநகரான லிமா நகரிலேயே உள்ளனர்.
---------------நன்றி:-"விடுதலை" 16-7-2009
0 comments:
Post a Comment