Search This Blog
16.7.09
பெரியார் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்த மறைமலை அடிகளார்
மறைமலையடிகள்
இன்று(ஜூலை-15) மறைமலை அடிகளாரின் பிறந்த நாள் (1876). ஆம், இதே நாள்தான் பச்சைத் தமிழர் காமராசரின் பிறந்த நாள் (1903).
இந்த இருவருமே பார்ப்பனர்களால் வெறுக்கப் பட்டவர்கள்தாம். இந்தக் காரணத்தாலேயே தமிழர்களால் மதிக்கப்படவேண்டியவர்களாகவும் ஆகிவிட்டனர் .
இந்தி எதிர்ப்புக் களத்தில் தந்தை பெரியார் அவர்களுக்கு உற்ற துணையாக இருந்தவர் மறைமலை அடிகளார். அவரின் தனித்தமிழ்ப் பற்றுக்கும், இன நலனுக்கும், உறுதிக்கும் ஒரே ஒரு எடுத்துக்காட்டைச் சொன்னாலே போதுமானது.
சென்னை பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் 1933 டிசம்பர் 23, 24 ஆகிய இரு நாள்களில் தமிழ் அன்பர் மாநாடு நடைபெற்றது.
சென்னை புத்தகாலயப் பிரச்சார சங்கத்தினர் இந்த மகாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அதன் தலைவர் கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர், பொக்கிஷதார் எஸ். ராமஸ்வாமி அய்யர், வரவேற்புச் சபைத்தலைவர் உ.வே. சாமி நாதய்யர் மற்றும் பொறுப்பாளர்கள் எல்லாம் பெரும்பாலும் பார்ப்பனர்களே. அம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மறைமலை அடிகளாருக்கு கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் 22.12.1933 அன்று தந்தி கொடுத்தார்.
அதற்கு மறைமலை அடிகளார் எழுதிய பதில் தான் மிக முக்கியமானது:
கடிதங்கள், அழைப்புகள், தந்தி ஆகியவற்றிற்கெல்லாம் உங்களுக்கும், டாக்டர் உ.வே. சாமிநாதய்யரவர்கட்கும் நன்றி தெரிவிப்பதோடு தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடம் தரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பண்பட்ட பழைய மொழிகள் எல்லாவற்றினும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்றும் தன் பண்டை நலஞ்சார்ந்த புகழோடு வாழ்கின்றது. பிற மொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்கு மென்றும், அதன் வளர்ச்சியினைக் குன்றச் செய்யும் என்றும் யாம் உறுதியாக நம்புகிறோம். ஆதலால் எமது தனித்தமிழ்க் கொள் கையினைக் கடைப்பிடிக்காத உங்களுடைய மகா நாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக் கொள்வீர்களாக.
---------------மறைமலை அடிகள்
தமிழ் அன்பர் மகாநாடு என்ற பெயரில் பார்ப்பனர்கள் நடத்தும் மாநாடு தனித்தமிழுக்கு எதிரானது என்று அறிந்த தன்மையிலும், அது பார்ப்பனர்களால் நடத்தப்படுவதை உணர்ந்த நிலையிலும், தம்மை அழைக்கின்றவர்கள் விளம்பரம் பெற்ற பெரிய மனிதர்களாயிற்றே என்பதைப் பற்றியெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல், தன் கொள்கையில் உறுதியாக நின்று கொள்கை ரீதியான பதிலையும் கூர்மையாக வெளிப்படுத்திய சான்றோர்தான் நம் மறை மலைஅடிகள் ஆவார்கள்.
தமிழன் வீட்டுப் பிள்ளைக்கு ரமேஷ் என்றும், சுரேஷ் என்றும், கணேஷ் என்றும், லாவண்யா என்றும், அர்ச்சனா என்றும், கிரிஜா என்றும் வெட்கமில்லாமல் பெயர் சூட்டும் தமிழர்களுக்கு மறைமலை அடிகளார் அவர்கள் சூட்டுக்கோல் போன்றவர் அன்றோ!
------------ மயிலாடன் அவர்கள் 15-7-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment