Search This Blog

20.7.09

பெரியார்-அண்ணா-கலைஞர்-வீரமணி -3





அரசியல் சீர்திருத்தம் பெரிதல்ல - சமூக சீர்திருத்தம் செய்கின்ற துணிவு - தொலை நோக்கு பார்வை கலைஞர் அவர்களுக்கு மட்டுமே உண்டு!

கலைஞர் பிறந்த நாள் கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்


அரசியலில் சீர்திருத்தம் செய்வதற்கெல்லாம் பெரிய துணிச்சல் தேவையில்லை. சமூக சீர்திருத்தம் செய்வதற்கு பெரும் துணிச்சல் வேண்டும். தொலை நோக்கு பார்வை வேண்டும். அப்படிப்பட்ட துணிவு கொண்டவர் தான் கலைஞர் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டி புகழாரம் சூட்டினார்.

குற்றாலத்திற்கு அருகிலுள்ள செங்கோட்டை-யில் 19-6-2009 அன்று கலைஞரின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.-வீரமணி அவர்கள் கலந்துகொண்டு ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என மக்களுக்குக் கிடைக்கச் செய்தார். இதை எதிர்க்கட்சிக்காரர்கள்கூட பார்த்து தேர்தல் அறிக்கையாக ஆக்கினால்தான் வெற்றி பெறுவோம் என்றுசொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது என்று சொன்னால் இதைவிடப் பெரிய பொருளாதாரத் தத்துவம் ஏழை மக்களுக்குச் செய்யக்கூடியது வேறு என்ன?

ஏன் நம்முடைய நாட்டிலே கம்யூனிஸ்ட் கட்சிகள் வளரவில்லை? ஏன் ஏழைகளின் துயரத்தைச் சொல்லக்கூடிய கட்சிகள் வளர முடியவில்லை? என்று சொன்னால் கலைஞருடைய சாதனை இருக்கிற வரையிலே மற்றவர்களுக்கு மூலதனம் கிடையாது. ஆகவே மற்றவர்கள் எதைக் கையிலே வைத்திருந்தார்களோ, அதை எல்லாம் எடுத்து அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றார்கள்.

நம்பிக்கையில் கைவைக்கக் கூடிய துணிச்சல்

வீடு இல்லாதவர்களுக்கு வீடு, நிலமில்லாதவர்களுக்கு நிலம். அதுபோல அரசு ஊழியர்கள் என்று சொன்னால், அவர்களுக்குத் தேவையான வசதி வாய்ப்புகள் இவைகளை எல்லாம் கலைஞர் அவர்கள் செய்து கொடுக்கின்றார்கள்.

மற்றவர்களுடைய காலத்தில் எல்லாம் எலிக்கறி சாப்பிட்டார்கள். அது மட்டுமல்ல, பல கொடுமைகள் நடந்தன. இத்தனையையும் மாற்றி அதே நேரத்திலே பண்போடு நடந்துகொள்-ளக்கூடிய அந்தக் காரியத்தையும் அவர்கள் செய்கிறார்கள்.

இவைகள் எல்லாம் ஓர் ஆட்சியிலே, கல்வித்துறை மற்றத் துறைகள் என்று நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அதைவிட முக்கியமென்ன? எந்த ஆட்சியாளருக்கும் பள்ளிக்கூடம் வைப்பதற்கு வாய்ப்பு வரலாம். பாலம் கட்டுவதற்கு வாய்ப்பு வரலாம்.

அதுமாதிரி சில திட்டங்களைக் கொண்டு வருவதற்கு வாய்ப்பு வரலாம். ஆனால் நீண்ட-காலமாக இருக்கின்ற நம்பிக்கை நீண்டகாலமாக இருக்கின்ற சமுதாய அமைப்புகள் இருக்கிறது பாருங்கள் அதிலே கை வைக்கக்கூடிய துணிச்சல் யாருக்கும் வராது.

தந்தை பெரியாரிடத்திலே கலைஞர் அவர்கள் பயின்ற காரணத்தால்தான் தெளிவாகச் சொன்னார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதை ஆட்சிக்கு வந்தவுடன் அதைத்தான் முதலில் நிறைவேற்றுவேன் என்று சொன்னார்.

ஏன் கலைஞர் அவர்களுக்கு எதிர்ப்பு? எதிர்ப்பிலேயே ஏன் நீந்திக் கொண்டிருக்கிறார்? கோயில் கருவறைக்குள்ளே பார்ப்பனர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்ற நிலையை மாற்றி, அனைத்து ஜாதியிலிருந்தும் பார்ப்பன மாணவர்கள் உள்பட வந்து இன்றைக்கு ஆகமங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்து பயிற்சி பெற்றுத் தயாராக இருக்கின்றார்கள்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் தனது 95ஆம் வயது வரையிலே களத்தில் நின்றார் பெரியார்.

கலைஞர் நிறைவேற்றினார்!

இப்படி ஒரு சட்டம் தேவை என்று சொன்னார். சட்டத்தைக் கொண்டு வந்தார்; கலைஞர் நிறைவேற்றினார். உச்சநீதி மன்றத்திலே அதை முடமாக ஆக்கக்கூடிய அளவிற்கு வைத்திருந்தார்கள். செயல்படாமல் வைத்திருந்தார்கள். ஆனால், அதைச் செயல்பட வைத்து இன்றைக்கு வேகமாக ஒரு சட்டமாக்கி அந்தச் சட்டத்தின்படி 200-பேருக்குமேல் அய்ந்து இடங்களிலிருந்து பயிற்சிப் பள்ளிகள் நடைபெற்றன. சைவமாக இருந்தாலும், வைணவமாக இருந்தாலும் இரண்டு மதங்களுக்கும் அந்தந்தப் பயிற்சிகளைக் கொடுத்து, இப்பொழுது அர்ச்சகர் பதவிக்குச் செல்லத் தயாராக இருக்கிறார்கள்.

பல பேருக்கு ஆத்திரம். காலம் காலமாக இருந்த இந்த விஷயத்தில் கை வைக்கலாமா? என்பது. இதுதான் மற்றவர்களுக்குக் கோபம்.

ஆனால், கலைஞர் அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. பெரியாருக்கு நான் அரசு மரியாதை கொடுத்து அடக்கம் செய்தேன். ஆனால் அதே நேரத்திலே, அவர் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றவில்லை. அந்த முள்ளை நான் அகற்ற வேண்டுமானால் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கினால்தான் அகற்ற முடியும் என்று சொல்லி அந்த முள்ளை அகற்றுவதற்கு, சட்டத்தின் மூலமாக அதைச் செய்வதற்கு இன்றைக்குத் தயாராக இருக்கின்றார். இது மிகப்பெரியதொரு புரட்சி. வேறு நாடுகளில் எல்லாம் இரத்த ஆறு ஓடிய பிற்பாடுதான் புரட்சிவரும். சாதாரணமாகப் பார்க்கிறோமே, மேற்கு வங்கத்திலே சில கிராமங்களுக்குள் சென்றால்கூட இப்பொழுது அங்கே தகராறு.

தமிழ்நாட்டில் அமைதிப் புரட்சி

அங்கே இரத்த ஆறு ஓடுகிறது. ஆனால் அதுமாதிரி எல்லாம் இல்லாமல் இங்கே அமைதிப் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. இங்கே அறிவுப் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. காரணம் என்னவென்றால், இங்கே ஒரு பகுத்தறிவு இயக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாகத்தான் எதையும் சுலபமாக மாற்றக்கூடிய அளவிற்கு ஆக்கி வைத்ததனுடைய விளைவாக, இரத்தம் சிந்தி நடத்த வேண்டிய காரியங்களை எல்லாம் ஒரு துளி இரத்தம் சிந்தாமல் கலைஞருடைய பேனாவின் இரண்டு துளி மை சிந்தியதால் அந்தச் சாதனை நடந்தது என்று சொல்லக்கூடிய அளவிற்கு அவருக்கு அவ்வளவு துணிவு, தெளிவு இருக்கிறது.

நேற்றுகூட நம்முடைய பேச்சிமுத்து அவர்கள் எனக்கு ஒரு புத்தகம் கொடுத்தார். அது அம்பேத்கர் அவர்கள் எழுதிய ரேனடே காந்தி சித்தா என்று ஒரு நூல். மாலைக்குப் பதிலாக இந்த நூலைக் கொடுத்தார். வழக்கமாக என்னைச் சந்திக்கக் கூடியவர்.

மாமனிதர் யார்?

அம்பேத்கர் சொல்கிறார்: மாமனிதர் என்று ஒரு மனிதரைக் குறிக்க வேண்டுமானால் அதற்கு என்ன அடையாளம்? என்ன அளவுகோல்? என்று ஒரு கேள்வி கேட்கின்றார். அதற்கு விளக்கம் சொல்லிக் கொண்டே வரும்பொழுது சொல்கின்றார்.

சீர்திருத்தம் செய்வதில் பெரிய துணிச்சல்

அரசியல் சீர்திருத்தம் செய்வதற்கெல்லாம் பெரிய துணிச்சல் தேவையில்லை. சமூக சீர்திருத்தத்தை செய்துவிட்டு, அரசியல் சீர்திருத்தத்திற்கு வந்தால்தான் அரசியலே பண்படும். அந்தச் சமூகச் சீர்திருத்தங்களைச் செய்வதற்குத் துணிவு வேண்டும் தொலைநோக்கு வேண்டும்.

துணிவு, தொலைநோக்கு யாருக்கு இருக்கிறதோ அவர்கள்தான் மாமனிதர் என்று அம்பேத்கர் சொல்கிறார்.

இதைப்படிக்கும் பொழுது என் மனதிலே வந்தது. அப்படிப்பட்ட ஒரு தொலைநோக்கும், துணிவும் வந்தது யாருக்கு என்றால் நம்முடைய முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்குத்தான் என்பது மிகத் தெளிவாகத் தெரியும். அவருக்கு எதை, எப்பொழுது, எப்படிச் சந்திப்பது என்பது தெளிவாகத் தெரியும். ஆகவே அதனுடைய விளைவாகத்தான் இன்றைக்கு மிகஅருமையாகச் செய்தார். எண்ணிப் பாருங்கள். ஜாதியை வெளியிலிருந்து விரட்டலாம். ஆனால், அடுத்து ஓராண்டுக்குள் பாருங்கள்.

நெல்லையப்பர் கோயிலுக்குள் கருப்பு உருவம்

இன்னும் இரண்டு ஆண்டுக்குள் பாருங்கள். நெல்லையப்பர் கோயிலுக்குள் பார்த்தீர்களே-யானால் கருப்பாக ஓர் உருவம் தெரியும். இதுவரையிலே வெள்ளையாக இருந்த உருவம் இனிமேல் கருப்பாகத் தெரியப் போகிறது. அப்படி கருப்பாக இருக்கக்கூடியவர்கள் யார்?

நம்முடைய முத்தன் மகன் முனியன். அவன் அர்ச்சகர் பயிற்சிப் படித்துக் கொண்டான். சாதாரணமாகச் சட்டம் படிப்பவர்கள் எப்படி பி.எல். படித்தார்களோ மருத்துவம் படித்தவர்கள் எப்பொழுது எம்.பி.பி.எஸ்.க்கு வந்திருக்கிறார்களோ அந்த மாதிரி அதற்கென்று படிப்பை வைத்து ஓராண்டு எல்லாவற்றையும் சொல்லிக்கொடுத்து, அதற்குரியவர்களை வைத்து நீ என்ன வேண்டுமானாலும் கற்றுக்கொள். முறையாகச் செய் என்று சொல்லி இப்பொழுது எல்லாக் கோயில்களுக்கும் புதிய அர்ச்சகர்களைக் கலைஞர் அவர்கள் அனுப்பப் போகின்றார்.

இதற்கிடையிலே உச்சநீதி மன்றத்திற்குச் சென்று ஏதாவது தடைகளை வாங்கலாமா என்று பார்த்தார்கள்; முடியவில்லை. இப்பொழுது நம்மாள்கள்-அர்ச்சகர்களாக கோயிலுக்குச் செல்லப் போகிறார்கள். இதுவரை நடக்காத ஒன்று நடக்கப் போகிறது.

நந்தன் சிதம்பரத்திற்குப் போனான் என்று கதையில் படிக்கின்றோம். நந்தன் சிதம்பரம் நடராஜரை சந்திக்க வேண்டும் என்று நினைக்கின்றான். ஆனால், நடராஜரைக் கும்பிடுவதற்காக எத்தனையோ நிபந்தனைகள் போடுகிறார்கள்.

நந்தனை தீக்குளிக்கச் சொன்னார்கள். கடைசியில் கடவுளைக் காண நந்தனை தீக்குளிக்கச் சொல்கிறார்கள். தீயில் விழுந்திருந்தால் இவன் திரும்பி வருவானா? என்பது நமக்கே தெரியும்.

ஆனாலும் கதை எழுதுகிறான். தீயில் வந்து குளித்து அதற்குப் பிறகு நந்தனுக்குப் பூணூல் போட்டு அவனை உயர்ந்த ஜாதிக்காரனாக ஆக்கினான்.

நந்தன் தீக்குளித்து நடராஜரைத் தரிசிக்கச் சென்ற அப்பொழுதும்கூட கருவறைக்குள் கூப்பிடவில்லை. நந்தியே சற்று விலகியிரும் என்று நடராஜர் சொன்னாராம். நந்தன் வெளியே இருந்துதான் நடராஜப் பெருமானை சேவித்தான். நந்தி சற்று விலகி நின்றது. இது பழைய கதை.

ஆனால், கலைஞர் என்ன சொன்னார்? நந்தியை விலகச் சொல்லவில்லை.

இது ஒரு சமூகப் புரட்சி

நந்தனே உள்ள வா! நந்தன் பரம்பரையே உள்ளே வா!! நந்தனே கோயில் கருவறைக்குள் வந்து மணியாட்டு என்று சொல்லக்கூடிய துணிச்சல் உண்டென்றால் அது வரலாற்றில் கலைஞரைத் தவிர வேறு எவராலும் செய்திருக்க முடியாத ஒரு சமூகப் புரட்சி. இன்றைக்கு அது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், வருங்காலத்திலே இதைத்தான் எழுதப் போகின்றார்கள்.

அதே போல சிதம்பரம் நடராஜர் கோயிலை 150 ஆண்டுகாலமாக ஒரு ஜாதியினரான தீட்சிதர்கள் இது எங்களுக்குச் சொந்தம் என்று சொன்னார்கள். இல்லை நமது அரசர்கள் உருவாக்கியது. அதற்கு வரலாறு உண்டு. என்றெல்லாம் சொல்லி எடுத்து வைத்து 150 ஆண்டுகாலமாக நடந்த வழக்குக்கு ஒரு தீர்ப்பு வாங்கி, தீப்பு வந்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாக அங்கே ஓர் ஆதிதிராவிட சகோதரியையே நிருவாக அதிகாரியாக உள்ளே அனுப்பி அங்கு உட்கார வைத்த பெருமை கலைஞரைச் சார்ந்தது.

காரணம் அவரே சொன்னார். சட்டமன்றத்திலே ஒருமுறை உறுப்பினர் ஒருவர், இது Third Grade Governmentஇது மூன்றாந்தர ஆட்சி என்று சொன்னார்.

இது நான்காந்தர அரசு

உடனே கலைஞர் சொன்னார். இது மூன்றாந்தர ஆட்சி அல்ல, இது நாலாந்தர மக்களாகிய சூத்திர மக்களுக்காக இருக்கிற சூத்திர ஆட்சிதான் எங்களுடைய ஆட்சி என்று தெளிவாகச் சொல்லி ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் முன்னேற இதை எல்லாம் சொன்னார்கள்.

எனவே, அப்படி ஒரு சமுதாயப் புரட்சியை அவர்கள் உள்ளடக்கிய காரணத்தால்தான் சரித்திரத்திலே அவருடைய ஆட்சி நிற்கப் போகிறது. மற்ற சாதனைகள் எல்லாம் பின்னால் போகும். ஆனால், சரித்திரத்தில் நிற்கக்கூடிய சாதனை சாதாரணமல்ல.

அனைவர்க்கும் அனைத்தும்

அதுபோல பெண்களுக்கு முதல் முறையாக சொத்துரிமை, முதலமைச்சர் அவர்கள் தனக்கிருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொடுத்தார்கள். இடஒதுக்கீடு கொண்டு வந்தார்கள். இன்னொன்று என்னவென்றால் அனைவருக்கும் அனைத்தும் என்ற சொல்லும்-பொழுது ஏழைத் தாய்மார்கள், விதவைத் தாய்மார்கள் 50 ஆண்டுகளாகித் திருமணம் ஆகாமல் ஒதுங்கியிருந்தவர்களுக்கெல்லாம் உதவி என்று சொல்லி மனித நேயத்தை எங்கெல்லாம் பாய்ச்ச வேண்டுமோ அங்கெல்லாம் அவர்கள் காட்டியிருக்கின்றார்கள் என்று சொன்னால், இதைவிட மனித நேயத்திற்கு சிறந்ததொரு ஆட்சியை, அதைப்பற்றி சிந்திக்கக்கூடிய ஒரு தலைவரைக் காண முடியாது.

எனவே, எழுத்துத் துறையாக இருந்தாலும், ஆட்சித் துறையாக இருந்தாலும் இப்படி எந்தத் துறையாக இருந்தாலும், அவர்களுடைய கவனம் என்பது மக்கள் மீதுதான் இருந்தது இருக்கின்றது.

அதுவும் ஏழை எளிய மக்கள் மீதுதான். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மீதுதான். இஸ்லாமிய சிறுபான்மைச் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு கொடுக்க முடியுமா? என்று இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் மற்ற இடங்களிலே. என்னால் கொடுக்க முடியும். என்னால் அதைச் செய்ய முடியும் என்று சட்டமாக்கிய பெருமை கலைஞர் அவர்களையே சார்ந்தது. அதுபோல அருந்ததியர்கள். அதிலே பார்த்தீர்களேயானால் நம்மை கிரேடு வாரியாகப் பிரித்திருக்கின்றார்கள். -

--------------------தொடரும் ..."விடுதலை" 20-7-2009

0 comments: