Search This Blog
23.7.09
ஜாதி ஆதாரங்கள் அடியோடு ஒழிக்கப்பட வேண்டும்!.
நமது அரசாங்கத்தின் செய்தி விளம்பரத் துறையின் 25 ஆண்டுக்காலப் பணி நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட இருக்கும் வெள்ளி விழா மலருக்குத் `தமிழ்நாட்டில் அறிவியல் வளர்ச்சி என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அனுப்பப் பட வேண்டுமென மலர்க்குழுவினர் விரும்பியதற்கு இணங்க இக்கட்டுரை எழுத வேண்டியவனானேன்.
தமிழ்நாட்டில் பழைமைவாதிகள் ஆதிக்கமும், அதற்கு ஆதரவாக இருந்த கடவுள், மதம், மத ஆதிக்கங்கள் என்பவை இருந்து வந்த தன்மை மேலோங்கி இருந்த காலத்தில், தமிழ்நாடு சுத்தக் காட்டுமிராண்டிக் காலத்து நாடாகவும், மக்கள் அறிவு சுத்தக் காட்டுமிராண்டித்தனத்தில் தலைசிறந்த தாகவும் இருந்து வந்தது. சுமார் 80, 90 ஆண்டுகளுக்குமுன் நான் படித்த பள்ளியில், அருணாசல புராணம், மதுரை வீரன் அம்மானை, தேசிங்கு ராஜன் கதை, பாட்டு கள் ஆகியவைதான் பாடப் புத்தகங்களா கவும், இலக்கியங்களாகவும் இருந்து வந்தது எனக்குத் தெரியும். அக்கால ஆசிரியர்கள் யோக்கியதையும், அரசாங்கத்திற்குக் கல்வி விசயமாய் இருந்த கவலையும், நடப்பும் எனக்குத் தெரியும். அதுபோலவே, அப்போது நமது சமுதாயத்திற்கு இருந்து வந்த மதிப்பும், நாம் இருந்து வந்த நிலையும் எனக்குத் தெரியும்.
எனக்கு இன்று 92 வயது முடிந்து 93 வயது தொடங்குகிறது.
மற்றும் மக்களின் அக்கால அறிவு நிலை, ஜோசியம், சகுனம், கனவு, சாமியார்களிடம் வாக்குக் கேட்டல் முதலிய காரியங்களில் நம்பிக்கையும், ஈடுபாடும் இல்லாதவர்களைக் காணவே முடியாத நிலையாகும். அக்காலத்தில் இன்று போலவே, கடவுள் நம்பிக்கை, அதாவது கடவுளின் சர்வ சக்தியில் நம்பிக்கைக் கொண்டவன் ஒருவன் கூட இருந்ததில்லை, என்றாலும், எல்லாருமே ``கடவுள் நம்பிக்கைக் காரர்களாகவே இருந்து வந்தவர்களே ஆவார்கள். ஆங்கில ஆட்சி நம் நாட்டுக்கு ஏற்பட்ட ஒரு நல்ல வாய்ப்பினாலேயே ஒரு சிலராவது மனிதராகக் காணப்பட்டார்கள் என்றாலும், பொதுவில் சர்வமும் காட்டு மிராண்டித்தன்மைக்கு உள்ளானதாகவே இருந்தது.
இன்றைக்கும் அறிவுத் துறையில் நாம், நம் நாட்டவர்கள் ஏதாவது வளர்ச்சி பெற்றிருக் கிறோமா என்றால், யாரும் துணிந்து ``வெற்றி பெற்றிருக்கிறோம் என்று சொல்ல முடியா தென்றே சொல்லுவேன். அது மாத்திரமல்ல, கடவுள், மதம், சாஸ்திர, புராணம், ஜாதி, கோவில் முதலியவை இந்த நாட்டில் உள்ள வரையில் அறிவியல் துறையில் எந்தவிதத் திலும் நாடு முன்னேற்றமடைந்து விட்டது என்று சொல்லவே முடியவே முடியாது.
அதுமாத்திரமல்ல, நம் நாட்டவர்களுக்கு நம் முன்னோர்கள் நம்மைவிடப் புத்திசாலி என்றும், நம் எதிர்கால வாழ்வுக்கு முன்னோர் கூறியவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற நம்பிக்கை உள்ளவரை அறிவியல் துறையில் நாம் சிறிதும் முன்னேற்றம் அடைய முடியவே முடியாது.
பொதுவாக நம் தமிழ்நாட்டில் அறிவியல் துறையில் ஏதாவது முன்னேற்றத்துக்கு ஏற்ற அறிகுறி இருக்கிறது என்றால், முதலாவது நமக்கு ஏற்பட்டிருக்கும் இன்றைய ஆட்சியை ஒரு சாதனமாகக் கொள்ளலாம். அதிலும், நமது ஆட்சிக்கு இரண்டாவது முறையும் பதவிக்கு வரும்படியான வாய்ப்பு ஏற்பட்டதை ஓரளவுக்குக் கூறலாம். அதாவது சுயமரியாதைத் திருமணச் சட்டம் எதிர்ப்பே இல்லாமல் ஏகமனதாய் நிறைவேற்றப் பட்டிருப்பதும், கடவுள்களை யார் வேண்டு மானாலும், எந்த ஜாதியானாலும் அர்ச்சகராகிப் பூசை செய்யலாம் என்பதும் மனிதன் அறிவியல் பாதையில் செல்கிறான் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள் ஆகும்.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், சுமார் 40, 45 ஆண்டுகளுக்கு முன்னால் மதத்தின் பேரால், கடவுளர்கள் பேரால், விபசாரத்தனத்திற்கு ஒரு சமுதாயத்தையே இருக்கும் படிச் செய்வது என்பதை ஒழிக்க முற்பட்ட தைத் தேச பக்திக்காரர்கள் எதிர்த்ததும், ஒரு வயது, அய்ந்து வயது, 10 வயதுப் பெண் களுக்குத் திருமணமும், சாந்தி முகூர்த்தமும் செய்யக் கூடாது என்பதைத் தேச பக்தர்களும், உயர்ஜாதிக்காரர்களும் எதிர்த்தார்கள் என்பதும், நமது நாடும், நம் சமுதாயமும் எவ்வளவு மடைமையிலும், மனிதத் தன்மை அற்றதாகவும் இருக்கிறது என்பதற்குக் கல்லுப் போன்ற சான்றுகளாகும்.
இந்த நிலை இன்று ஓரளவுக்கு மாற்றமடைந்திருப்பதற்குக் காரணம் மக்கள் அறிவயில் துறையில் முன்னேறி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. மற்றறென்னவென்றால், ஒரு சாக்காக எடுத்துக் காட்டி வந்த கடவுள், மத ஆதாரங்கள், ஜாதி ஆதாரங்கள் என்பவற்றை அடியோடு ஒழிந்து போகாவிட்டாலும், ஆட்டம் கொடுத்து விட்டதாலும், இவற்றை அழிக்கத் தோன்றியவர்கள் உயிருக்குத் துணிந்து தொண்டாற்றி வந்தாலும், வருவதாலுமே என்று சொல்லலாம். இன்றைக்கும் சொல்லுவேன்; கடவுள், மதம், மத ஆதாரங்கள்; ஜாதி அமைப்பு அவற்றின் ஆதாரங்கள் அடியோடு ஒழிக்கப்படும் வரையிலும் குறிப்பாக, தமிழ்நாடு, இந்தியா என்கின்ற ஒரு காட்டுமிராண்டி மக்களை அதிகமாகக் கொண்ட ஒரு அரசமைப்பில் இருந்து சர்வ சுதந்திரமாய் விலகாமல் இருக்கும்வரை தமிழ்நாடு அறித் துறையில் தேவையான அளவுக்கு வெற்றிப் பெற, முன்னேற முடியவே முடியாது என்பது எனது துணிவு. ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால், நாடாளுமன்றத்தில் இருக்கிற ஒரு ``பஞ்சமன் என்பவர் கூட இன்று நாடாளு மன்றத்தில் எழுந்து நின்று ஜாதியை, ஜாதிப் பிரிவுகளை ஒழிக்கவேண்டும் என்று சொல்ல முடியாத நிலையில் தானிருக்கிறோம்.
மற்றும் ஜாதிக்கும், ஜாதி இழிவுக்கும், மனித சமுதாய இழிவுக்கும், காட்டுமிராண்டித் தனத்திற்கும் உலகினோர் எள்ளி நகையாடி நம்மை இழி மக்களாய்க் கருதும் விதத்திற்கும் ஏதுவான மதம் ஒழியவேண்டும் என்று சொல்ல யோக்கியதை இல்லாதவர்களாகத் தான் இருக்கிறோம்.
இந்திய ஆட்சியில் நாம் பிரஜைகளாய் இருந்துகொண்டு, இந்துக்கள் என்ற பெயரை ஏற்றுக் கொண்டு வாழ்கிறோம் என்பது மாத்திரமல்லாமல், அதை ஒழிக்கவேண்டும், மாற்றவேண்டும் என்று சொல்வதற்குக் கூடத் தகுதியும், உரிமையும் இல்லாமல் இருக்கிறோம் என்றால், நாமோ, நமது திராவிட நாடோ அறிவியல் துறையில் எந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறோம் என்று சொல்ல முடியுமா? நாடாளுமன்றத்தில் அங்கத்தினராயிருக்கிற பஞ்சமனாகவும், சூத்திரனாகவும், அரசியல் சட்டப்படி இந்துச் சட்டப்படி ஆக்கப்பட்டிருக்கிற ஒருவன், மதம் ஒழிக்கப்பட வேண்டும், ஜாதி ஒழிக்கப்பட வேண்டும், முடியாவிட்டால் இந்திய ஆட்சியில் இருந்து திராவிட நாடு விலக்கப்பட வேண்டும் என்றால், எவராலுமே முடியாது என்றால், தமிழ்நாட்டில் தமிழர்கள் அறிவியல் துறையில் தன்மானத் துறையில் முன்னேறி இருக்கிறார்கள்; மாற்றமடைந்து இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா, என்றுதான் என்னையே நான் கேட்டுக் கொள்ள வேண்டியவனாக இருக்கிறேன்.
-------------------- தந்தைபெரியார் -"உண்மை", 14.1.1972
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment