Search This Blog
28.7.09
இட ஒதுக்கீட்டில் முட்டுக்கட்டை எங்கே?
மத்திய அரசுத் துறைகளில், கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு என்ற சட்டம் சொன்னாலும், அதனைச் செயல்படுத்துவதில் ஆயிரம் ஆயிரம் முட்டுக்கட்டைகள் தலைதூக்கி நிற்கின்றன.
அமைச்சர்களையே திசை திருப்பக்கூடிய அதிகாரவர்க்கம் என்பது மத்திய அரசுத் துறைகளில் பார்ப்பனர்களின் கையடக்கத்துக்குள் முடங்கிக் கிடக்கிறது.
மத்திய பணியாளர் தேர்வாணையம் என்கிற சட்ட ரீதியான அமைப்பேகூட சட்ட விரோதச் செயல்களில் துணிந்து இறங்கிச் செயல்படுகிறது.
அய்.ஏ.எஸ். தேர்வில் திறந்தபோட்டியில் வெற்றி பெற்ற பிற்படுத்தப்பட்டவர்களை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்குக் கொண்டுவந்து, திறந்த போட்டி என்றால் அது முழுக்க முழுக்க உயர் ஜாதிப் பார்ப்பனர்களுக்கே உரித்தானது என்பதுபோல, சட்ட விரோதமாக ஆக்கப்பட்டுவிட்டது. இந்தச் சட்ட விரோத செயலுக்குக் காலதாமதத் தீர்ப்புகள்மூலம் நீதிமன்றமும் தன் பங்குக்குத் துணை போவது பெரிதும் வருந்தத்தக்கதாகும்.
இந்த ஆண்டு அய்.அய்.டி.,யில் 6000க்கும் மேற்பட்ட இடங்களில் அகில இந்திய நுழைவுத் தேர்வில் 1398 பிற்படுத்தப்பட்டோர் திறந்த போட்டியில் தக்க மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றுள்ளனர் என்பது மகிழத்தக்க தகவல் ஆகும்.
ஆனால், என்ன நடந்திருக்கிறது? திறந்தபோட்டியில் இடம்பெறவேண்டிய 1398 இடங்களை, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்குக் கொண்டு சென்றதால், ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இடம்பெற்ற 1398 பேர்கள் வெளியேறும்படி ஆகிவிட்டது. அதாவது 1398 பிற்படுத்தப்பட்டோர்களுக்கான இடங்கள் சட்ட விரோதமாகப் பறிபோய் விட்டன.
இந்தக் கொலை பாதகச் செயலை யார் கேட்பது? பாதிக்கப்பட்டோர் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வாதாடுவது இயலக்கூடியதுதானா? அப்படியே வழக்கைத் தொடுத்தாலும், அரசு தரப்பில் பெரிய புகழ்பெற்ற வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து வாதாடுகிறார்கள் அவர்களுக்கு அரசு செலவு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கோ சொந்த செலவு!
சட்ட விரோதமான காரியங்கள் அரசு முறையில், அரசு செலவில் ஓகோ என்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதற்கு என்னதான் தீர்வு? பிற்படுத்தப்பட்டோருக்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப்படுவதும், அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அளிப்பதுமேயாகும்.
அரசமைப்புச் சட்டத்தின்படி அதிகாரப் பலத்தோடு இவை செயல்படும்போது, சட்ட விரோதமாகச் செயல்படும் அமைப்புகளைத் தட்டிக் கேட்க முடியும்; ஏன், தண்டிக்கவும் முடியும்.
இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் தவறு செய்யும் அதிகாரிகளுக்கு மூன்றாண்டுத் தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்து என்று நாடாளுமன்ற நிலைக்குழு (தலைவர் திரு. சுதர்சன நாச்சியப்பன்) பரிந்துரை செய்திருக்கிறது. ஆனால், நாடாளுமன்றத்தில் அதற்கான மசோதாவை வைக்கும்பொழுது மிகவும் விழிப்பாக இருந்து அந்த சரத்துகளை அகற்றிவிட்டனர்.
சமூகநீதிக்கு எதிராக இருக்கக் கூடியவர்கள் மிகவும் திட்டமிட்டு, நயவஞ்சகமாகச் செயல்பட்டு முதுகில் குத்தி வீழ்த்தி விடுகிறார்கள்.
மக்கள் தொகையில் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும், சிறுபான்மையினரும் 80 விழுக்காட்டுக்கு மேலிருந்தும், அவர்களின் உரிமைகள் மீது இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கக் கூடிய சக்திகள் விளையாடிப் பார்க்கின்றன.
தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், அவர் கண்ட இயக்கமும் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வைத்துள்ளதால் ஆதிக்க சக்திகள் வாலைச் சுருட்டி வளையில் வைத்துள்ளன.
இத்தகைய விழிப்புணர்வு வட மாநிலங்களிலும் பரவினால்தான் சமூகநீதி உறுதிப்படுத்தப்படும்.
ஆம், தந்தை பெரியார் எல்லைகளைக் கடந்து தேவைப்படுகிறார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் 300 க்கும் மேல் இருக்கின்றனர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் இந்தப் பிரதிநிதிகள் கடமை உணர்வுடன் கூர்மையாகச் செயல்பட்டால் ஒரு நொடிக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்குமே!
------------------"விடுதலை" தலையங்கம் 27-7-2009
Labels:
அரசியல்-சமூகம்-இடஒதுக்கீடு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment